Language Selection

 இக் கட்டுரையின் பொதுப்பரப்பாகவிருக்கும் சமாதான வேடதாரிகளின் அரிதாரங்களை வெளிச்சம் பாய்ச்சி அம்பலப்படுத்தும் சரியான கண்ணோட்டத்தில் உடன்பாடு உண்டென்ற வகையில் இங்கு இக்கட்டுரை பிரசுரமாகின்றது. அதேவேளை போர் பற்றிய பார்வையில் மக்கள் நலனோடு பிணைக்கப்பட்ட மக்களால் முன்னெடுக்கப்படும் யுத்தம் தவிர்ந்த மற்றைய போர்கள் தீர்வுகளை மக்களுக்கு பெற்றுத்தருவதில்லை என்பது உணரப்பட வேண்டியதொன்று என்பது எமது விமர்சனமாகும்.

 

நேற்று போருக்கெதிரான கொஞ்சம் பேர் கூடி கொழும்பில் பாதநடை நடந்து கத்திக் கூச்சல் போட்டு கடைசியில் ஒரு கூட்டமும் போட்டார்கள். கூட்டத்தில் குளறுபடி ஏற்பட்டு நாலைந்து பிக்குமார் உதை வாங்கினார்கள். இனமேலாதிக்கவாதிகளே இனமேலாதிக்கவாதிகளுக்கு உதைத்த காட்சி.

இதனை பரபரப்பாக காட்டி ஊடகங்கள் காசுபண்ணிக்கொண்டன.

இந்த நடையில் பங்குபற்ற வருமாறு அன்பர் ஒருவரால் அழைக்கப்பட்டிருந்தேன். அவருக்கு கூட்டம் சேர்த்தாகவேண்டும். எரிச்சல் மிகுதியால் உடனடியாகவே மறுத்துவிட்டேன்.

அரசியல் தற்கொலை செய்துகொண்டுவிட்ட வாசுதேவ போன்றோரும், கொள்கைத்தெளிவில்லாத சிவப்புச்சட்டைக்காரர் விக்கிரமபாகுவும் அதில் கலந்துகொண்டிருந்தார்கள்.

வாக்குப்பொறுக்கி கட்சிகள், தமிழ் கூட்டமைப்பு, அரச சார்பற்ற நிறுவன (NGO) உதிரிகள் என்று ஏராளம் கூட்டம். கூடவே பிக்குமாரும்.

இந்த சமாதான கூத்து இங்கே நீண்டகால அசிங்கம்.

இன்று நேற்றல்ல, இவர்கள் மிக நீண்டகாலமாகவே இந்த கேவலங்கெட்ட பசப்பு சமாதான கலாசாரத்தை தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

யார் இந்த சமாதான விரும்பிகள்? யார் இந்த போருக்கெதிரானவர்கள்? இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது மக்களைப்பற்றி அக்கறைப்பட?

இந்த சமாதான நடை, சமாதான இசை, சமாதான கைகோர்ப்பு, சமாதான விளையாட்டுப்போட்டி எல்லாம் பார்த்துப்பார்த்து புழுத்துப்போய்விட்டது.

நீலமாய், பச்சையாய், சிவப்பாய் சமாதான தோரணங்களை பார்த்து புளித்துப்போய்விட்டது.

சமாதானம் இவர்களது இருப்புக்கான கருவி.
இது சமாதான பிரசாரம் அல்ல, சமாதான யாவாரம்.

எனக்கு நினைவிருக்கிறது. முந்தி படித்துக்கொண்டிருந்த காலத்தில் இந்த சமாதான யாவாரிகளின் கூட்டங்களுக்கு பாடசாலையிலிருந்து அழைத்துச்செல்லப்படுவோம்.

பெருஞ்செலவில் பெரும் பகட்டோடு கூட்டமும் நிகழ்ச்சிகளும் நடக்கும். குளிர்பானம் தருவார்கள், தொப்பிகள் தருவார்கள், டீ சேர்ட் கூட தருவார்கள்.

இவர்களது கூட்டங்களுக்கு மிக முக்கியமான அடையாளம், மும்மத தலைவர்கள். அசிங்கம்பிடித்த சடங்கு அது.
எங்கேயாவது இருந்து இரு மொழி பேசக்கூடிய பிக்கு, பள்ளித்தலைவர், பாதிரியார், அர்ச்சகர் என்று அழைத்துவருவார்கள். அவர்கள் சமாதானத்துக்கு ஆசி கொடுப்பார்கள். செருப்பைக்கழற்றி எறியவேண்டும் போல இருக்கும்.

இந்த மதம்சார் கழிசடைகளுக்கும் சமாதானத்துக்கும் என்ன சம்பந்தம்?

சமாதான பிரசாரகூட்டங்களிலெல்லாம் தாராளமாய் பணம் புரளும். பேச்சாளர்களுக்கு மாலைகளில் அல்கஹோல் உபசாரம் அமர்க்களமாயிருக்கும்.

எங்கிருந்து வருகிறது இந்த பணம்?

யாருக்கு தேவைப்படுகிறது சமாதானம்?நேற்றைய நடையில் தொண்டைகிழித்தவர்களில் கண்ணுக்குப்பட்டவர்களின் பட்டியலை பாருங்கள்.

கூட்டமைப்பின் ரவிராஜ், மஹேஸ்வரன் (மேர்வின் சில்வாவுடன் குலாவியபடி), வாசு, அஜித் ரூபசிங்க (NGO உதிரி), டிலான், மனோ கணேசன், கறுவாத்தோட்ட பெண்கள் அமைப்புக்கள், யாவாரிகள், ஊடக யாவாரிகள்.

ஒவ்வொரு கூட்டம் ஒன்றுக்கொன்று முரணாய் கத்திக்கொண்டு நடக்கின்றன.

இவர்களெல்லாம் பாதுகாப்பாக கொழும்பில் இருந்துகொண்டு, நல்ல கொழுத்த சம்பாத்தியத்துடன், சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, கொழும்பின் உயர்தர வீதிகளில் நடக்கிறாங்களாமைய்யா நடை. சமாதான நடை, போருக்கெதிரான நடை, பொல்லாத நடை.

பிரபாகரனுக்கு சமாதானத்தை புகட்ட கத்தும் ஒருகூட்டம் பின்தொடர, சிங்களத்துக்கு சமாதானத்தை புகட்டுமாறு சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் நடக்க, புலிப்பயங்கரவாதத்தை இன்னொரு கூட்டம் சிலாகிக்க, நடக்கிறது நடை.

புலிகேசியில் ஒரு வசனம் வரும். கரடியே காறித்துப்பின இவன் உன்னை காறித்துப்பிட்டானேடா என்று.
அப்படி ஒரு நிலையில் இருக்கும் ரவிராஜுக்கு இந்த கூட்டத்தோடு என்ன உடன் பாடு இருந்து நடக்க வந்தார்?

மனோகணேசன் மிகத்தெளிவாகவே மேடையில் முழங்குகிறார், சிங்கள தீவிரவாதத்துக்கும் புலித்தீவிரவாதத்துக்கும் இடையில் கஷ்டப்படுவது கொழும்புவாழ் அப்பாவித்தமிழர்களேயாம்.

அதாவது வீதித்தடைகள், சோதனை வந்துவிட்டது. மனோ கணேசனை சூழவுள்ள பாதாளக்கோஷ்டிக்கும் பிரச்சனை, கொள்ளைக்கார முதலாளிகளுக்கும் யாவாரம் படுத்துவிடும் அபாயம். நாட்டின் நாணயம் வேறு இறங்கிக்கொண்டிருக்கிறது. வடக்கு கிழக்கில் யார் உரிமை இழந்து வீதிக்கு வந்தாலும் பரவாயில்லை. தாம் சொகுசாக வாழ வேண்டும்.


இத்தனை முரண்பாடுகள் கொண்ட கூட்டங்களும் எந்த பொது உடன்பாட்டில் நடக்க வந்தன?

போரை நிறுத்தவேண்டும்.

அதுதான் பொது உடன்பாடு.

ஏன் போரை நிறுத்த வேண்டும்?

மக்கள் சாகிறார்கள்.

கொழும்பில் இருந்துகொண்டு, ஏகாதிபத்தியம் போடுவதையும், ஓட்டு அரசியல் பொறுக்கல்களையும் நக்கித்தின்னும் இந்த நாய்களுக்கு மக்கள் மீது என்ன கரிசனை?

ஒன்றுக்கும் உதவாத இந்த போலிச்சமாதானத்தை கூவி விற்பதில் இவர்களுக்கு நிறைய லாபம் உண்டு.

போர் எதிர்ப்பு என்பது வெறும் வாயளவில் மட்டும்தான்.

ஓர் உரிமைப்போராட்டத்தை நசுக்க மிகச்சிறந்த ஆயுதம் சமாதானமே அன்றி வேறிலை.

இவர்கள் தமது யாவாரத்தை இலாபகரமாக ஓட்டுவதற்கு போர் நிற்கவேண்டியிருக்கிறது. போர் இருந்தால் யாவாரம் அடி வாங்குகிறது. இதுதான் அடிப்படை.

இவர்கள் அத்தனை பேரும் பெரும் தனவந்த யாவாரிகள்.

NGO காரர்களுக்கு சமாதானத்தைப்பற்றி கத்த கத்த காசு வந்து குவியும். ஏகாதிபத்தியம் பிஸ்கட் துண்டுகளை எறியும்

தமது அலுவலகங்களில் தாமும் ஏதோ மகக்ள் போராட்டங்களை நடத்தி இயங்கிக்கொண்டிருப்பதுபோல் போட்டு க்களை காட்சிப்படுத்தி தமது இருப்பை பாதுகாத்துக்கொள்ளலாம்.

மற்றது போர் நிறுத்தத்தாலும் போலிச்சமாதானத்தாலும் தான் புலிகளையும், அதனூடாக தமிழர்களது போராட்டத்தையும் நலமடிக்க முடியும் என்ற சூட்சுமம் தெரிந்த சூழ்ச்சிக்காரர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

போர் நிறுத்தம், சமாதானம், உயிரின் பெறுமதி, குழந்தைகள் பாதுகாப்பு.

அமெரிக்காவின் கோஷங்களை, ஏகாதிபத்தியங்களின் கோஷங்களை தாமும் முழங்க்கிக்கொண்டிருந்தால் தலையும் தப்பும், வெளிநாட்டு ஊடகங்கள் முகத்தையும் காட்டும்.

நேபாள உதாரணம் பழசு. லெபனான் உதாரணத்தை பாருங்கள். சமாதானம் எவ்வளவு போலியானது, எத்தனை சுயநலம் மிக்கது என்று புரியும்.

குழந்தைகளை கொல்லும் இனவாதிகளை விட இந்த சமாதான யாவாரிகளே மிகப்பெரிய அச்சுறுத்தல்.

இவர்கள்தான் தமது இருப்புக்காக சூட்சுமமாக போராட்டத்தை நசுக்குபவர்கள்.

புலிகளுக்கு போர் தேவையாய் இருந்தது. அவர்கள் போரினை உருவாக்கி போரிடுகிறார்கள். பேச்சுப்பொறியினை இலாவகமாக உடைத்து வெளியேற எத்தனிக்கிறார்கள். இங்கே ரவிராஜ் இருதரப்பையும் யுத்தத்தை உடண்னே நிறுத்தும்படி கோருகிறார்.

புலிகள்போட்ட பிச்சைதான் இவரது அரசியல் இருப்பு. இப்போது புலிகளுக்கெதிராக பேசுகிறார்.

போர்கள் எப்போதும் தீர்வுகளை பெற்றுத்தருவதில்லை.
இப்போது இவர்கள் எல்லோரது வாயிலும் புரளும் வார்த்தை.

போர்கள் தான் தீர்வுகளை பெற்றுத்தருகின்றன.

இதுதான் உண்மை.

பேச்சுவார்ர்த்தை பொறியில் எம்மை அகப்படுத்தி, எம்மை கொன்றுவிட எத்தனிக்கும் ஒரு கூட்டத்தோடு கைகோர்த்து சமாதானம் செய்து பேச வரட்டாம்.
இந்த கோரிக்கை அப்பட்டமாக தமிழர் போராட்டத்துக்கு எதிரானது. ஏகாதிபத்தியத்துக்கும் இனவாதத்துக்கும் சார்பானது.

இந்த, தமிழருக்கெதிரான நடையையே இவர்கள் நடக்கிறார்கள். தமிழருக்கெதிரான கோஷங்களையே இவர்கள் முழங்குகிறார்கள். வேறெதனையும் அல்ல.

தயவு செய்து இவர்களது ஆர்ப்பாட்டங்களை கண்டு யாரும் ஏமாந்துவிடவேண்டாம்.
இவர்களது முகத்திரைகளை முடிந்தவரை கிழிக்க முன்வாருங்கள்.

இந்த போலிச்சமாதான கலாச்சாரத்தின் முகத்தை முடிந்தவரை மற்ற்வர்களுக்கு இனங்காட்டுங்கள்.

இந்தக்கூட்டத்தின் இருப்பை அழித்தாலே, இலங்கையில் பாதிப்பிரச்சனை தீரும்.


உண்மையாகவே , சாகும் மக்கள் பற்றி இவர்களுக்கு அக்கறை இருந்தால்,
உண்மையிலேயே இவர்கள் போருக்கெதிரானவர்களாக இருந்தால்,

போருக்கான கரணிகளை சரியாக இனங்கண்டு அவற்றை அகற்ற கோர வேண்டும்.

போர் வேண்டாம் தான். அது யாருக்கும் வேண்டாம். ஆனால் ஒரு விடுதலைப் போர் உயிருள்ளது.

தமிழ் மக்கள் விரும்பாத ராணுவத்தை அவர்கள் இருப்பிடங்களை விட்டு அகற்றுவது ஒன்று தான் போரை உடனடியாக நிறுத்தும் வழி.

துப்பாக்கிமுனையில் காலக்கெடு விதித்து இறுதித்தீர்வை முன்வைக்கும் படி அரசை ஆணையிடுவதுதான் போராடும் இனத்தின் ராணுவத்தை பேச்சு மேசைக்கு திருப்பும் வழி.

இந்த கோரிக்கைகள் பக்க சார்பானவையா?

ஆம் நிச்சயமாக.

உண்மையான சமாதானம் எப்போதும் பக்கசார்பானதே.

ஒடுக்கப்படுபவர்களுக்கு சார்பான சமாதானத்தை அழுத்தும் இந்த கோரிக்கைகளை முன்வைத்து போராடும் நாதி இந்த இழிபிழைப்பாளர்களுக்கிருக்குமானால், அதனை செய்யட்டும் பார்க்கலாம்.

மு.மயூரன்

mauran.blogspot.com