12062022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

முதன்மைத் தவறும் ஆயுதக் குழுக்களும்

ஆயுதப் போராட்டத்தை எப்போது, எங்கு, எவ்வாறு தொடங்குவது என்பதைத் தீர்மானிக்கும் இடம், பொருள், கால அடிப்படையிலான காரணிகள் எவையெவை என்று மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் வழிகாட்டுதல்களைக் கொண்டு புதிய ஜனநாயகம் அமைப்பினர் வகுத்து வரையறுத்துக் கொண்டிருக்கின்றனர்; அவை அகநிலை விருப்பங்களால் தீர்மானிக்கப்பட முடியாது; அகநிலை கூறுகளாலும் அமைப்பு பலம் மற்றும் மக்கள் ஆதரவு மற்றும் புறநிலைக் கூறுகளாலும் புரட்சிக்கு சாதகமான மற்றும் ஆளும் வர்க்கங்களுக்குப் பாதகமான அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளாலும் தீர்மானிக்கப்பட வேண்டும்.


ஆனால், மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரை, ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவது என்பது அகநிலை விருப்பங்களால் மட்டுமே தீர்மானிக்கக் கூடியது; இந்தியாவின் எந்த இடமாக இருந்தாலும் மூன்றாம் உலக நாடுகள் அனைத்திலும் எந்தவொரு சமயத்திலும் உடனடியாக ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலைகள் நிலவுவதாகவும், புரட்சிகரக் கட்சி என்ற பெயரில் நான்கைந்து பேர்கள் (அவர்கள் கூட புரட்சிக்குத் தலைமை தாங்கும் தகுதிகள் கொண்டவர்களா என்பது கூட முக்கியமில்லை) இருந்தால்போதும்; ஆயுதப் போராட்டத் தயாரிப்பில் ஈடுபட்டு, அதாவது ஆயுதங்தாங்கிய குழுக்களைக் கட்டி, ஆயுதப் போராட்டத்தில் குதித்து விடவேண்டியதுதான். இப்படிச் செய்யாதவர்கள் எல்லாம் வலது சந்தர்ப்பவாதிகள்தாம் என்கிறார்கள்.


இதற்காக மாவோ மேற்கோள்களைக் கேடாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். "ஆயுதப் போராட்டமே முதன்மை போராட்ட வடிவமாகவும், முதன்மையாக விவசாயிகளைக் கொண்ட படையே முதன்மை அமைப்பு வடிவமாகவும் உள்ளது. ஏனெனில், ஜனநாயகமும், தொழில்துறையும் இல்லாத அரைக்காலனிய, அரை நிலவுடைமை சீனா ஒரு பரந்த, ஒத்த தன்மையற்ற நாடாகும் என சீனப் புரட்சியில் கிராமப்புற புரட்சிகர யுத்தத்தின் தொடக்க காலத்தின் போதே தோழர் மாசேதுங் சரியாகச் சுட்டிக் காட்டினார்.''


இந்த மேற்கோளை எடுத்துக்காட்டி, உலகின் எல்லா காலனி, அரைக்காலனி, அரைநிலப்பிரபுத்துவ நாடுகளிலும், ஆரம்பத்திலிருந்து எப்போதும் ஆயுதப் போராட்டம் பிரதான போராட்ட வடிவமாகும், இராணுவமே முதன்மை அமைப்பு வடிவமாகும் என்று குருட்டுத்தனமாகவும் மாசேதுங் சிந்தனைக்கு விரோதமாகவும் திரித்துப் புரட்டுகிறார்கள், "மாவோயிஸ்டுகள்'' என்று தங்களை அழைத்துக் கொள்ளுபவர்கள்.


"தோழர் மாவோ கூறியதைப் போல, உள்நாட்டில் ஜனநாயகமில்லாத, வெளிநாட்டு ஏகாதிபத்தியங்களால் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு அரைக்காலனி அரைநிலவுடைமை நாடாகவே உள்ளது. எனவே இங்கு நீண்டகாலம் சட்டபூர்வமான ஆயுதப் போராட்டத்திற்கு மக்களைத் தயார் செய்வது சாத்தியமில்லாத (அது என்ன சட்டபூர்வமான ஆயுதப் போராட்டம் என்பது மாவோயிஸ்டுகளுக்கே வெளிச்சம்பு.ஜ.) இங்குள்ள நிலைமைகளுக்குப் பொருந்தாத வடிவமாகும். இங்கும் தொடக்கத்திலிருந்தே ஆயுதப் போராட்டத்தின் மூலம் மக்களை அணிதிரட்டி, புரட்சிகர யுத்தத்தை வளர்த்தெடுத்து, பகுதியளவில் அதிகாரத்தைக் கைப்பற்றி அதனை பரந்த பகுதிகளுக்கு விரிவுபடுத்தி, நகரங்களை சுற்றி வளைத்து நாடளவில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். ஆதலால் இங்கும், சீனத்தைப் போல யுத்தம் முதன்மை போராட்ட வடிவமாகவும், இராணுவம் முதன்மை அமைப்பு வடிவமாகவும் உள்ளது.'' ங்பக்.32 "வலது சந்தர்ப்பவாத கருத்துக்களை முறியடிப்போம், நீண்டகால மக்கள் யுத்தப் பாதையை உயர்த்திப் பிடிப்போம்'' என்ற பெயரில் இ.க.க. (மாவோயிஸ்ட்) மாநிலக் குழு, தமிழ்நாடு சார்பாக தேதி குறிப்பிடாமல் வெளியிடப்பட்ட உட்கட்சி ஆவணம்சி.


இதிலிருந்து தெரிவது என்னவென்றால், கோட்பாடு ரீதியாகவே, "தொடக்கத்திலிருந்தே ஆயுதப் போராட்டத்தின் மூலம் மக்களை அணிதிரட்ட வேண்டும்; இங்குள்ள நிலைமைகளுக்கு அதுதான் பொருத்தமான வடிவமாகும்'' என்பதுதான் மாவோயிஸ்டுகளின் கண்ணோட்டமாகும். மேலும், அடிக்கோடிட்ட வாசகத்தை மீண்டும் படியுங்கள். தொடக்கத்திலிருந்தே மக்களை அணிதிரட்டுவது ஆயுதப் போராட்டத்தின் மூலம்; மக்களை அணிதிரட்டத் தொடங்கும் போதே, புரட்சிகர யுத்தமும் தொடங்கி விடுகிறது என்கிறார்கள்; அதனால்தான் அடுத்த சொற்களில் "புரட்சிகர யுத்தத்தை வளர்த்தெடுப்பது'' என்று தொடர்கிறார்கள்.


இதுவே அவர்களின் கோட்பாடு ரீதியிலான புரிதலாக இருப்பதால்தான் நடைமுறையிலும் மக்களைத் திரட்டுவதற்கு முன்பே ஆயுதக் குழுக்களைக் கட்டுவதில் இருந்து புரட்சிகரப் பணிகளைத் தொடங்குகிறார்கள். இதைத்தான் ஆயுதப் போராட்டத்திற்கான தயாரிப்பு நடவடிக்கைகள் முயற்சிகள் என்கிறார்கள். ஆயுதங்தாங்கும் இந்தக் குழுக்களின் வேலைகள் என்ன?


போலீசு எதிரியின் கண்ணில் படாதவாறும், தாங்கள் கணிப்பின்படியான பாதுகாப்பானதாகவும் இருக்கும் சிறு கிராமங்களில் (கொட்டாய்களில்) ஒரு சில மக்களிடம் பாட்டுப்பாடி பிரச்சாரம் செய்வது, இல்லையானால் ஆயுதக் குழுக்களை விரிவடையச் செய்யும் நோக்கில் "குசுகுசு'' பிரச்சாரம் செய்வது; இதற்கு ஆயுதங்களைக் கவர்ச்சிக் கருவிகளாகப் பயன்படுத்துவது; போலி மோதல் படுகொலைகளுக்குப் பதிலடி கொடுக்கும் முகமாகவும் மக்களைப் பாதிக்கும் உள்ளூர் பொதுப் பிரச்சினைகளுக்காக மக்கள் பங்கேற்பின்றி ஆயுதக் குழுக்களாகவே செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் அரசு இலக்குகளைத் தாக்கி அழிப்பது; மற்ற சமயங்களில் ஆயுதப் பயிற்சியும், தங்களைத் தாங்களே பராமரித்துப் பாதுகாத்துக் கொள்ளவும் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு அலைந்து திரிவதும் ஆயுதந்தாங்கிய குழுக்களின் வேலைகள்.


ஆந்திராவில் ஜக்தியால், சிர்சில்லா தாலூக்காக்களில் நடத்தப்பட்ட போராட்டங்கள் அடக்குமுறைக்குள்ளானபோது வடதெலுங்கானாவின் மலைப்பகுதிகளுக்குத் தப்பியோடித் தஞ்சம் புகுந்த மக்கள் யுத்தக் குழுவின் அணிகள், முதன்முறையாகச் சில ஆயுதக்குழுக்களாகக் கட்டப்பட்டு மேற்கண்ட நடைமுறையை மேற்கொண்டனர்; அதற்கு முன்பிருந்தே இந்த அணுகுமுறையைப் பீகாரில் மாவோயிசக் கம்யூனிஸ்ட் மையத்தினர் நடைமுறைப்படுத்தி வந்தனர். பிறகு தண்டகாரண்யா, மகாராட்டிரம், ம.பி., ஒரிசா என்று தமது ஆயுதக் குழுச் செயல்பாடுகளை விரிவுபடுத்தினர்.


இத்தகைய நடைமுறை புவியியல், பலவீனமான அரசு இயந்திரம் போன்ற சில தனிச்சிறப்பான காரணங்களால் சட்டீஸ்கர், பீகார்,ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இன்னமும் தாக்குப் பிடித்திருக்க முடிகிறது. ஆனால், இந்த நடைமுறையை பொது விதியாக உயர்த்தி செயல்படுத்த முயன்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராட்டிரம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய பிற மாநிலங்களில் மட்டுமல்ல, ஆந்திராவிலேயே கூட இழப்புகளையும் பின்னடைவையும் தேக்கத்தையும்தான் சந்தித்திருக்கிறார்கள்.


இந்த அனுபவங்களில் இருந்து பாடங்கற்றுக் கொள்ள மறுப்பதோடு, ஆந்திராவில் தங்கள் இயக்கம் இன்னமும் மாபெரும் வெற்றிகளை ஈட்டி வருவதாகவும், அதேபோன்ற நடைமுறையை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் வறட்டுத்தனமாக வாதிட்டு வருகிறார்கள்.