12062022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

ரஜாக்கர் குண்டர்களின் குழு அமைத்தல் கிராமங்களின் மீதான தாக்குதல்கள்

நிஜாம் நவாபின் ஆட்சியும் சுரண்டலும், கிராமங்களிலுள்ள நிலப்பிரபுத்துவத்தின் அடிப்படையில் அமைந்தவையே. ஆனால் உணர்வுகளை அடைந்த மக்கள், இடி போன்ற தாக்குதல்களை தொடுத்து கிராம மட்டங்களில் எங்கும் நிலப்பிரபுத்துவத்தை அழிக்க ஆரம்பித்தனர். வளரும் மக்கள் இயக்கத்தை அடக்குவதன் பொருட்டும், சுரண்டலைப் பாதுகாப்பதன் பொருட்டும் நிஜாம் நவாப் முசுலிம் மக்களிடையே வகுப்புவாதக் கொள்கையை வேகமாகப் பரப்பினான். காஸிம் ராஸ்வியின் தலைமையின் கீழ் முசுலிம் குண்டர்களை ஆயுதம் தரிக்கச் செய்து கிராமங்களைத் தாக்க அனுப்பினான்.


இந்த ரஜாக்கர் குண்டர்கள் கிராமங்கள் முழுவதையும் எரித்தனர்; சூறையாடினர்; கிராமங்களிலுள்ள எல்லாவற்றையும் அழிக்கவும் செய்தனர். இவர்கள் நிஜாம் நவாப்பின் கூலி ஆட்களே. இந்த குண்டர்கள் கத்தி, கொடுவாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமல்லாது, நவீன துப்பாக்கிகளையும் (Rifles)  வைத்துக் கொண்டு கிராமங்களை சூறையாடினர்.


மக்கள் தங்களுடைய கிராமங்களை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு தாங்களாகவே மிகப் பெரும் அளவில் திரண்டனர். ரஜாக்கர் குண்டர்கள் தாக்க வருகின்றார்கள் என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு ஒவ்வொரு கிராமத்திலும் "நகரா' என்ற சாதனம் உபயோகிக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் காவல் படை (Sentries) நிறுவப்பட்டது. ரஜாக்கர்களின் வருகையை, இக்காவல் படை அறிந்தவுடனேயே "நகரா'வின் உதவி கொண்டு கிராமம் முழுவதையும் எச்சரிப்பதை வழக்கமாகக் கொண்டனர். உடனே கிராமம் முழுவதும் தற்காப்புக்காகத் திரளும். நகராவின் ஒலி கேட்டதும் சுற்றிலுமுள்ள கிராம மக்கள், தாக்கப்படும் கிராமத்தைப் பாதுகாப்பதற்கு ஓடிச் செல்வர். அவர்கள் "ஆந்திர மகாசபை வாழ்க!'' என்ற போர் முழக்கத்துடன், "வாதெசலா' (Vadasala)  வினால் ரஜாக்கர் குண்டர்களின் மேல் கற்களை எறிந்தனர். ரஜாக்கர் குண்டர்களை கிராமங்களின் அருகில் நெருங்குவதற்கு விடுவதில்லை. நவீன ஆயுதங்கள் வைத்துக் கொண்டிருந்தாலும் ரஜாக்கர்கள் கிராமங்களிலிருந்து ஓட வேண்டியதாயிற்று. பைத்தியம் பிடித்தவர்கள் போல ரஜாக்கர்கள் மக்களைச் சுடுவர்; இம்மாதிரியான தாக்குதலினால் ஒன்றுமறியாத பல மக்கள், ரஜாக்கர் குண்டர்களினால் கொல்லப்பட்டனர்.


அரசாங்க இராணுவம் மற்றும் ஆயுதமேந்திய ரஜாக்கர் குண்டர்கள் கிராமங்களைத் திரும்பத் திரும்பச் சூறையாடி, மக்கள் பலரை சித்திரவதை செய்தனர். இச்செயல்கள் அரசாங்கத்தின் மீதும், ரஜாக்கர்களின் மீதும் மக்களின் வெறுப்பை எல்லை கடக்கச் செய்தது. ரஜாக்கர் குண்டர்களின் மையங்களை அழிப்பதற்கான உடனடித் தேவைக்காக மக்கள் தீவிரமாகக் குரல் கொடுத்தனர்.