Language Selection

பி.இரயாகரன் 2004-2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எப்படி மொட்டை அடிப்பது என்பதில் முரண்பாடு. ஒருவரையொருவர் எதிரியாக காட்டி விமர்சிக்கினறனர். ஒருவரையொருவர் கழுத்து வெட்டிக் கொல்லுகின்றனர் அல்லது கொல்வதற்கான அரசியல் முன்முயற்சியை எடுக்கின்றனர்.

 மக்கள் என்ற வார்த்தை, தமது சொந்த அரசியல் விபச்சாரத்தை மூடிமறைக்கும் ஒரு அரசியல் தந்திரமாகும். மக்களின் உண்மையான விடுதலையை நோக்கி, அவர்கள் தாம் தமது கையில் எடுக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இவர்கள் யாரும் புலம்புவது கூட கிடையாது. இதைத்தான் புலிகளும் சரி, புலியெதிர்ப்பு கும்பலும் சரி செய்ய முனைகின்றது. மாவீரர் தின உரையை அங்குமிங்குமாக புணர்ந்து தமது சொந்த குறுகிய நலன் சார்ந்து இவர்கள் அனைவரும் வக்கரித்தனர். இதில் புலியும் கூட விதிவிலக்காகவில்லை.

 

"மேதகு" பிரபாகரனுக்கே பொழிப்புரை வழங்கிய "மதியுரைஞர்" பாலசிங்கம்

 

ஒற்றைப் பரிணாமமுள்ள ஒரு கதைக்கு ஒரு "மேதகு" தலைவர். அந்தக் கதையை மசலாவாக்கி சினிமாவாக்க ஒற்றைப் பரிணாமமுள்ள ஒரு "மதியுரைஞர்", ஒரு "தத்துவாசரியர்". அந்த சினிமாவை மக்களிடம் எடுத்துச் செல்லும் புல்லுருவிகள், ஒட்டுண்ணிகள், நக்கிப்பிழைக்கும் பினாமிகள் பெரும் பரபரப்பூட்டி வெளிவந்த கதை தான், "மேதகு" பிரபாகரனின் புகழ்பூத்த மாவீரர் உரை. இதைப் படமாக தயாரித்து வழங்கியவர் "தத்துவாசிரியர்". பாலசிங்கம்;. சப்பென்று இருந்த கதையை ஜனரஞ்சகமாக்க சண்டைக் காட்சியைப் புகுத்தியபடியே படம் தொடங்கியது. கதையில் வில்லனாக காட்ட சில "எட்டப்பர்கள்" பற்றி பாலியல் கலந்த வம்புத்தனம். தனது நண்பர்கள் பற்றியே பாலியல் கலந்த கிண்டல். இதன் மூலம் "மதியுரைஞர்" "தத்துவாசிரியர்" என்ற கதாநாயக வேடம். படத்தின் இடையில் பாலியல் வக்கிரம், இடையிடையே n;சந்தில் வகை பகிடிகள் என்று, எல்லாவகையிலும் இழிந்துபோன சினிமா மசாலாவையும் கலந்தே, பாலசிங்கம் பிரபாகரனின் கதைக்கு ஒரு பொழிப்புரை வழங்கினார். மாவீரர் தினம் என்ற சோகக் கதை, படத்தில் வெளிவரவேயில்லை. படம் முடிந்த பின்பும் சோக உணர்வு எதுவுமற்ற கலகலப்பு, இப்படியும் ஒரு படமா என்ற அங்கலாய்ப்பு எங்கும் பரபரப்பு.


அமைதி சமாதானம் தொடங்கிய போது பிரபாகரன் முதல்முதலாக பத்திரிகையாளரை சந்தித்த போது "மேதகு" தலைவர் பற்றி கொண்டிருந்த எதிர்பார்ப்புக்கள் தகாந்த போது ஏற்பட்ட அதே பரபரப்பு. அதே மனஉணர்வு பாலசிங்கத்தின் உரை ஏற்படுத்தியது. இப்படியா எமது தலைவர்கள் உள்ளனர் என்ற அங்கலாய்ப்பு. கற்பனைகள், விருப்பங்கள், மனக் கோட்டைகள் தகாந்து போகின்ற போது ஏற்படும் பதைபதைப்பு.

 

ஆனால் சினிமா பாணியில் அமைந்த மசாலா வகையான வக்கிரத்தின் போதெல்லாம், விசிலடியால் அரங்கமே அதிர்ந்துபோனது. மக்களின் வாழ்வியல் துயரங்களுக்கு எதிராக எங்கெல்லாம் விசில் சத்தம் கேட்கின்றதோ, தூசணத்தால் அருச்சனை கிடைக்கின்றதோ, அங்கெல்லாம் இந்தக் குரங்குக் கும்பல் குந்தியிருப்பதை நாம் காணமுடியும். தியாகம் பற்றி கிளிசரின் பூசியபடி கண்ணீர் விட்ட ஒப்பாரிகள், தியாகத்தின் பெயரில் தீபங்கள், அதைச் சுற்றி கவர்ச்சியான அலங்காரம் என்று, எடுப்பான வகையில் ஒரு அரசியல் நாடகம். மறுபுறம் உறவுகளை இழந்த கண்ணீர் காட்சிகள், வாழ்வை இழந்த மக்களின் நிஜமான முகங்கள். ஒரே அரங்கில் இவை பிரதிபலித்தன.

 

இந்தக் கதையைக் பற்றி ஊதிப்பெருக்கி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ஊரறிய விளம்பரம் செய்தவர்கள் ஊடகவியலாளர்கள் என்ற பெயரிலுள்ள மனிதவிரோத ஓட்டுண்ணிகள். பத்திரிகைகளும், ஒளி ஒலிச் சேவைகளும், இணையங்களும் எங்கும் இந்த வகை ஒட்டுண்ணிகளின், நக்கிப்பிழைக்கும் பினாமியம், தனது பிழைப்பு சார்ந்து மடியில் கனமில்லாத இல்லாத ஒன்றைப் பற்றி கற்பனையில் ஊதிப் பெருக்கிக் காட்டினர். இந்த விளம்பர சேவைக்கு பணம் வழங்கி, இதைப் பயன்படுத்தியவர்கள் வர்த்தகம் செய்ய விரும்பும் வர்த்தக சூதாடிகள். தமது சொந்தக் குழந்தையை இழந்து கதறும் உறவினர்களிடையே, ஒரு வர்த்தக விளம்பரத்தையே இவர்கள் நடத்தினர். தொலைக்காட்சி நிகழ்ச்சியின் அடியிலும், இடையிலும்; மிகப் பெரிய வர்த்தக விளம்பரங்கள். உண்மையில் ஒரு அருமையான ஒரு மாவீரர் தினம்.

 

மாவீரர்களை போற்றிப் புகழ விளம்பரம் தேவைப்படுகின்றது. இந்த விளம்பர சூதாடிகள் இல்லையென்றால் அவர்கள் மாவீரராக நினைப்பது கூட அற்றுவிடும் என்ற அவலநிலை. இந்த நிலையில் மாவீரரைப் போற்றவும், மெய்சிலிர்க்க பார்வையாளருக்கு சண்டைக்காட்சியும் செக்ஸ் வக்கிரமும், செந்தில் பாணி பகிடிகளும் தேவைப்படுகின்றது. இதுவும் இல்லை என்றால் மாவீரர் கதி என்வாகும்;. இந்த மாவீரரைப் புரிந்து கொள்ள ஒரு பொழிப்புரை தேவைப்படுகின்றது. இந்த பொழிப்புரையை வழங்க ஒரு "மதியுரைஞர்". சொந்த மாவீரர்களையே, இப்படி அவர்களால் மட்டும் தான் கேவலப்படுத்த முடியும். போராட்ட சீரழிவின் எல்லையை அவர்கள் தொட்டு நிற்கின்றனர்.

இது மட்டுமா! இல்லையே. பிரபாகரனின் ஆட்சேபனைகள் எதுவுமின்றி, மாவீரர் தினத்துக்கு முதல்நாள் கொண்டாடப்படும் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம். இதையும் கூட புலிகளால் மட்டும் தான் இப்படிச் செய்யமுடியும். அடுத்த நாள் செத்தவீட்டுக்கு தோரணம் கட்டியபடி, முதல் நாள் பிறந்த தினத்துக்கு கேக் அடிக்கின்றனர். உங்களால் இப்படிச் செய்ய முடியுமா? செய்ய முடியும் என்கின்றனர் புலிகள். செய்தும் காட்டுகின்றனர். தமிழ் பண்பாடு அனைத்தையும் கூட மாற்றிக் காட்டுகின்றனர் வீரத் தமிழர்கள்!


இப்படி இருக்கின்றது எமது தமிழ் தேசியம். இந்த குறுந் தமிழ்தேசியக் கூத்தில் எது உண்மையானது அல்லது இரண்டுமே போலியானதா? நீங்களே உங்களைக் கேட்டுப் பாருங்கள். நடிப்பே எமது வாழ்வாகிவிட்ட நிலையில், மக்களின் மந்தைத்தனத்தின் மீது சவாரிவிடுகின்றனர். மந்தையின் மேலேறி நின்று மொட்டை போடுகின்றனர். இந்த இரண்டு கொண்டாட்டங்களையிட்டு பூரித்துப் போவோரோ, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் புடுங்குவது பற்றி வியாக்கியானங்கள செய்கின்றனர். அதாவது முட்டையில் மயிர்புடுங்கிய கதையைச் சொல்லுகின்றனர். இந்த இரண்டு கொண்டாட்டத்துக்கும் ஒருங்கே விளம்பரங்கள், ஆர்ப்பாட்டங்கள், தயாரிப்புகள். ""மேலே எதுவுமற்று"" ரசிக்கும் மந்தைக் குணம் கொண்ட ரசிகப் பெருமக்கள். அவர்கள் வாழ்த்தையும், துயரத்தையும் ஒருங்கே ஊடகங்களில் தெரிவிக்கின்றனர்.

 

மாவீரர்களின் வீரத்தையும் துயரத்தைச் சொல்லி அழுது அழுது எழுதிய கவிதைகளை மூடி வைத்துவிட்டு, அழுத கண்ணீரை துடைத்தபடி பிறந்த தினக் கவிதைகளையும் வடிக்கின்றனர். கட்டுரைகளை எழுதுகின்றனர். இவை இணையங்கள், பத்திரிகைகள், ஒலி ஒளி ஊடகங்களில் இரண்டையும் ஒருங்கே தாங்கி வருகின்றன. இப்படிச் செய்ய உங்களால் முடியுமா? உங்கள் பண்பாட்டால் முடியுமா? ஆம் முடியும் என்று, அதை நடைமுறையில் செய்து காட்டுகின்றனர் புலிகள். இதையே இன்று மாவீரர் என்ற பெயரில் வர்த்தக பெருவிழாவாகவும் நடத்திக் காட்டுகின்றனர். இதை நாம் சீரழிவு என்று தானே கூறமுடியும்.

 

இந்தக் கூத்தை நியாயப்படுத்த "மதியுரைஞர்" அன்ரன் பாலசிங்கம் நினைப்பில் பலர், அரசியல் பொழிப்புரை வழங்க புலிப்பினாமிகள் பின்நிற்பதில்லை. என்ன அதிசயமான மனிதப்பிறவிகள்! அவர்கள் கூறுகின்றனர் மக்கள் "மேதகு"வின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனராம். புலிகள் செத்த வீட்டைக் கொண்டாடுகின்றனராம். இப்படி உங்களால் நியாயப்படுத்தி தர்க்கம் பண்ணமுடியுமா? இதுவே இதை நியாயப்படுத்த விரும்பும் புலிப்பினாமிகளின் இன்றைய புலம்பல். ஆனால் இந்த இரண்டு கொண்டாட்டத்தையும் கொண்டாடவென களத்தில இறங்கி தண்டல் வசூல் செய்யும் போது, ஒரே நபர்களே களத்தில் நின்று கப்பம் வசூலிக்கின்றனர். ரவுடிகளுக்கு ஒத்த அதே பண்பாடும், அதே கலாச்சாரம்;. இது அதுவல்லாது வேறு ஒன்றல்ல.

 

இந்த நிகழ்ச்சியின் வெட்டுமுகம் இதுவே. இது எமது கற்பனையல்ல. இது எமது கண்டுபிடிப்பல்ல. இதைத்தான் புலிகள் நடைமுறையில் செய்து காட்டியுள்ளனர். அன்று சுனாமி ஊர் ஊராக உயிர்களைச் சூறையாடிய போது, இடிபாடுகளிடையே பிணங்களையே விட்டுச் சென்றது. அதைக் காட்டியே பணம் வாங்கியவர்கள் அல்லவா இவர்கள்;. மீண்டும் ஒரு சுனாமியாக மட்டுமல்லாது, சூறாவளியாக சுனாமியோடு இணைந்தே சூறையாடியவர்கள் இவர்கள். அப்படிச் சூறையாடிச் சேர்த்த பல நூறு கோடி பணத்துக்கு என்ன நடந்தது என்று இதுவரைக்கும், யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால் அந்த மனித அவலம், அந்த பிணங்களின் மேலாக தொடருகின்றது. ஏன் நாற்றம் கூட எடுக்கின்றது. இது மட்டுமே உண்மை, இது மட்டுமே எதார்த்தம். இப்படிப் பிணத்தைக் காட்டி சூறையாடியவர்கள், தமது மாவீரர்களையே வர்த்தக விளம்பரம் செய்வது போல் செய்து அரசியல் நடத்துவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.

 

பாலசிங்கம் கூறியது போல் ""மேலே எதுவுமற்ற"" சிங்களப் பேரினவாதம் இதைச் செய்யவில்லை. மேலே எதோவுள்ளதாக கூறும் தமிழ் தேசியமே, இதைச் செய்தது, செய்கின்றது. பாலசிங்கம் ""மேலே எதுவுமற்ற""தாக கூறியது, தமிழ் மக்களாகிய எங்களைத் தான். எங்களின் அறிவீனத்தில் இருந்து எழும் கைதட்டுக்கும், விசிலடிக்கும் உள்ள அடிமைத்தனத்தைத் தான் அவர் சூசகமாக குறிப்பிடுகின்றார். தமிழ் மக்கள் தாம் தமது கால்களை பிணைத்;துள்ள அடிமை விலங்கை பாதுகாத்து போற்றவே, எதிரி மீது இதை சோடித்து காட்டியதே இங்கு நிகழ்ந்தது. இது ஒன்றும் நகைச்சுவையல்ல. பேரினவாதச் சிங்களவன் எமக்கு இதைத் திணித்தவனல்ல. நாங்களே எமக்கு தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒரு அடிமை விலங்காகும்.

 

பாலசிங்கமும் பெண்ணிலைவாதிகளும்

 

பாலசிங்கம் ஆபாசத்தை ஆணாதிக்க வடிவில் உளறிய போது, அது தற்செயலானவையல்ல. ஆனால் அதை பாலசிங்கத்தின் தனிப்பட்ட ஒன்றாகவே காட்டமுனைகின்றனர். தமிழ் பண்பாடு தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில், வடக்கில் செயல்படும் புலிப்பினாமிகளான "கலாச்சாரம் பேணும் குழு"வின் வேலையை புலியெதிhப்பு கும்பலும், பெண்ணியல்வாதிகளும் ஐரோப்பாவில் தற்காலிகமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டனர்.


அவர்கள் முதல் செய்தது பாலசிங்கத்தை தனிமைப்படுத்தி தூற்றுவது. புலிகள் இயக்கத்தில் இருந்த பாலசிங்கத்தைப் பிரித்து தூற்றிய ரிபிசி நிகழ்ச்சியில், தனிப்பட்ட முரண்பாடுகளை பழிவாங்கவும் பயன்படுத்திக் கொண்டனர். பாலசிங்கம் இப்படி கூறியது என்பது, தனிப்பட்ட பாலசிங்கத்தின் நிலைப்பாடல்ல. பாலசிங்கம் வழிகாட்டிய இயக்கம் ஆணாதிக்க இயக்கம் தான். நிலப்பிரபுத்துவ பெண் அடிமைத்தனத்தின் கட்டமைப்பை ஒழுக்கமாக கருதி உருவான ஒரு இயக்கம், பெண்ணை இப்படித் தான் பார்க்கின்றது. தனது எதிரியாக கருதும் அனைத்தையும், இப்படித்தான் கொச்சைப்படுத்தும். எமது இயக்க வரலாறு முழுக்க விதிவிலக்கின்றி இப்படித்தான் இருந்தது, இருக்கின்றது. பாலசிங்கத்தை விமர்சிப்பவர்கள் பலரும், இதற்கு விதிவிலக்கற்று இந்த சமூக அமைப்பை பாதுகாக்கும் வக்கிரத்துடன் தான் குதித்தெழுகின்றனர்.

 

பாலசிங்கம் எதைச் சொன்னாரோ, அது புலிகள் இயக்கத்தின் உயிருள்ளதும் அன்றாடம் அவர்கள் புணரும் ஒரு தேசிய மொழியுமாகும்;. இதை இப்படி மக்களிடம் கூறமுடியுமா என்பது தான், இன்று சர்;ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அதுவும் ஒரு தலைவர் என்று கருதப்படும் ஒருவர், இப்படிக் கூறலாமா என்ற சர்ச்சையே நிலவுகின்றது. 2000 ஆண்டு இதே மாதிரியாக பாலசிங்கம் ஆற்றிய உரையில் ""சின்ன சின்ன ஆசைகள் எனக்கு உண்டு"" என்று சந்திரிக்காவையே பாலியல் ரீதியாக இழுத்தவர். இதைப்பற்றி சமர் 28 இல் ""மாவீரர் தின உரைகளும் சமாதானப் பேச்சுகளும்"" என்ற தலையங்கத்தில் ஒரு கட்டுரையை அன்று நான் எழுதினேன். அதை இணையத்திலும் நீங்கள் பாhக்கமுடியும். இவாகளின் உரையென்பது ஆணாதிக்கம் சார்ந்து இருப்பது என்பது, இயக்கத்தின் உள்ளார்ந்த ஆணாதிக்க கூறாகும். இதை நாம் பிரித்து பாhக்க முடியாது. பிரித்துக் காட்டுவது, தூற்றவது ஆணாதிக்க சமூகக் கூறையே பாதுகாப்பதன் மூலம் குறுகிய உள்நோக்கம் கொண்ட அரசியலை முன்னிலைப்படுத்துவதே. புலிகள் ஒரு ஆணாதிக்க இயக்கம் என்பதும், அந்த ஆணாதிக்க இயக்கத்தின் மொழியாக இது இப்படி இருப்பதும் ஆச்சரியமானதல்ல.

 

வழக்கத்தில் இந்த ஆணாதிக்க மொழி வாழ்வின் எல்லா சமூகக் கூறுகளிலும் காணப்படுகின்றது. இதை மறுத்தபடி புலிகளின் பெண்கள் தாம் பெண் விடுதலைக்காக போராடுவதாக பீற்றுவதும், அதை தாம் அமுல் செய்வதாக கூறுவதும் கூட நகைப்புக்குரிய அரசியல் விடையமாகி விடுகின்றது. தலைவர் பெண்விடுதலையை தருவார் என்ற பொழிப்புரை கூறுவதும் கேலிக்குரியதாகிவிடுன்றது. "கற்பு", "கற்பழிப்பு" போன்ற சொற்களைக் கூட முதன் முதலில், புலிகள் தான் மாற்றி மாற்றுச் சொல்லை முன்வைத்தனர். தாம் பெண் விடுதலைக்காக போராடுவதாக காட்டவும், கற்பு என்ற ஆணாதிக மரப்பை மறுத்த புலிப்பெண்கள் போராடுவதாக சோடிக்கவும் இது அவசியமாகியது. இதையே புலியல்லாத பெண்களும், தீவிர பெண்ணிலைவாதியாக தம்மைக் காட்டிக் கொள்ள தமது நிலைக்கு பொருத்தமாக எடுத்து போர்த்திக் கொண்டனர். ஆச்சரியம் ஆனால் இதுவே உண்மை. இப்படி எங்கும் எதிலும் நடிப்பும் நாடகமும் ஆடிக் காட்டப்படுகின்றது.

 

பாலசிங்கத்துக்கு எதிராக ஐரோப்பாவில் கலாச்சாரம் பேணும் குழுவாக தற்காலிகமாக அவதாரம் எடுத்துள்ள புலியெதிர்ப்பு கும்பல் எதை எப்படிச் செய்கின்றதோ, அதை அப்படியே புலிகள் யாழ்குடாவில் அமுல் செய்கின்றனர். கலாச்சாரம் பேணும் குழு என்ற பெயரிலும், மகாவம்சகால மன்னர்களின் பெயரில் கொலைகாரக் கும்பலும் இது போன்ற ஆபாசங் களையும், நடத்தைகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுகின்றனர். மரண தண்டனை விதிக்கின்றனர். இவர்களின் ஆசான், குரு தான் இப்படி இங்கு பாலியல் ரீதியாக விபச்சாரம் செய்யும் போது இவருக்கு தண்டனை கிடைப்பதில்லை. இங்கு அந்த இழிந்து போன மக்கள் விரோதத் தொழிலை புலியெதிர்ப்பு கும்பல் எடுக்கின்றது. ஆணாதிக்கம் சமூகம் பாதிக்காத வண்ணம், நேர்த்தியாகவே மரண தண்டனையை வழங்குகின்றது. இங்கு மரண தண்டனை என்பது, பாலசிங்கத்தின் அரசியல் ஈடுபாட்டை இல்லாததாக்கும் வகையில் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்தல்ல. மண்ணில் கலாச்சாரம பேணுவது என்ற பெயரில், மக்களின் அடிமை விலங்கை இறுக்குவது தான் நிகழ்கின்றது. கலாச்சாரத்தின் பெயரில், சமூக ஒழுக்கத்தின் பெயரில் இதைச் செய்வது பாசிசத்தின் அடிப்படையான ஒரு சமூகக் கூறாகும்.

 

புலிகள் அல்லாதவர்கள் என்று தம்மைத் தாம் தீவிரவாத பெண்ணியல்வாதிகள் என்ற கூறிக் கொள்வோரும், பாலசிங்கத்தை கண்டிப்பதற்க்கு எந்த சமூக அருகதையும் அவர்களுக்கு கிடையாது. அவர்கள் கூறுவது வரம்பற்ற பாலியல் சுதந்திரத்தைத் தான். அதாவது நுகர்வை அடிப்படையாக கொண்ட உலகமயமாதல் என்ற பாலியல் சுதந்திரத்தைத் தான். அதாவது நுகர்வுவெறி என்ற ஆணாதிக்க எல்லைக்குள், பெண்ணைப் புணரும் ஆணாதிக்கத்தைத்தான் இந்த தீவிரவாத பெண் கோருகின்றாள். இதைத்தான் தனது வழியில் பாலசிங்கம் ஒப்புவிக்கின்றார். ஆனால் மக்களுக்கு முன்னால் தமிழ்பண்பாடு என்ற பெயரில் இறுக்கமான நிலப்பிரபுத்துவ அடிமைப் பெண்ணைத் தான்; கலாச்சாரத்தின் பெயரில் முன்னிறுத்துகின்றனர். மகாவம்சகால மன்னர்களின் பெயரிலும், கலாச்சார பேணும் காவலர்களின் பெயரிலும் விடும் எச்சரிக்கைகள், படுகொலைகள் இதற்குள் தான் அமைகின்றன.

 

"மதியுரைஞர்" பாலசிங்கமும் புலியெதிர்ப்பு கும்பலும்

 

பாலசிங்கம் மேடையில் எல்லாவிதமான சொந்தக் கவர்ச்சியையும் கடந்து அம்பலமான போது, அதை அழுங்குப் பிடியாக பிடித்துக் கொண்டு புலியெதிர்ப்பு கும்பல் ஒலமிடுகின்றது. பண்பாடு பற்றியும், கலாச்சாரம் பற்றியும், குனிந்ததலை நிமிர மறுத்த பெண்கள் பற்றியும் ஒப்பாரி வைக்கின்றனர். தாம் தம்மை மிகச் சிறந்த பண்பாட்டு கலாச்சார நாயகராக நிலைநிறுத்தி, பாலசிங்கத்தின் குறித்த பகுதியை மட்டும் எடுத்து வைத்து புணருகின்றனர். ஆனால் குறித்த பகுதியை பலதரம் ஒளிபரப்பிய போதும், தேனீ விழுந்தடித்துக் கொண்டு பாலசிங்கத்தின் உரையை இணையத்தில் வெளியிட்ட போதும் கவனமாக அதிலும் ஒரு திட்டமிட்ட தணிக்கையைச் செய்து கொண்டனர். அதாவது தமது சொந்த மக்கள் விரோதப் புத்தியைக் காட்டிக் கொண்டனர். பாலசிங்கம் கருணா ""பாலியல் இயக்கம்"" ஒன்றை ஆரம்பித்து இருந்தால், நாங்களும் அதில் சோந்திருக்கலாம் என்ற அடிப்படையில் கூறியதை மட்டும் மிகக் கவனமாக நீக்கியிருந்தனர்.

 

பாலசிங்கத்தின் பாலியல் மற்றும் வன்முறையை சார்ந்த கூறுகளை குறித்த நபர் சார்ந்து மட்டும் விமர்சிக்க புறப்பட்டவர்களின் சொந்தத் தணிக்கையின் பின் ஒரு அரசியல் உள்ளது. அது மக்கள் விரோத அரசியலாகும். கருணாவை பற்றி கூறியதை மட்டும் ஏன் தணிக்கை செய்கின்றனர். புலிகளின் அதே அரசியலைக் கொண்ட, கருணாவின் மக்கள் விரோத அரசியலை பாதுகாக்க முனைகின்றனர் அவ்வளவே. விவாதத்துக்கு எடுத்த உள்ளடகத்தில் கூட இவர்களின் நேர்மையீனத்தின் வக்கிரம் வெளிப்படுகின்றது.

 

நீங்கள் கூர்ந்து கவனித்தால், விவாதத்தை நடத்தியவர்கள் பாலசிங்கத்தை மட்டும் குறிவைத்து தாக்கிய வடிவம், அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டவை. இயக்கமே ஒரு ஆணாதிக்க இயக்கமாக இருப்பதை மறுத்து, ஏதோ தனிப்பட்ட பாலசிங்கம் என்பதன் மூலம் கையாளும் அரசியலே ஆணாதிக்கம் தான். ஆணாதிக்க அமைப்பில் கீறுவிழாமல் பாதுகாக்கும் அரசியல் உத்தி நயவஞ்சகமாக கையாளப்பட்டது. பாலசிங்கம் ஏன் இப்படி கதைக்கின்றார். இதற்கு சமூகத்துக்கும் உள்ள உறவு என்ன என்ற கேள்வி, இங்கு முன்வைக்கப்படவில்லை. ஆணாதிக்க அமைப்பின் எல்லா சமூகக் கூறுகளிலும் இது அடங்கி புளுத்துக் கிடக்கின்றது. தேனீயில் வெளிவரும் அநாமதேய எழுத்திலும், ரி.பி.சி யின் நிகழ்ச்சிகளிலும் இந்த ஆணாதிக்க கூறுகள் நிறைந்து காணப்படுகின்றது. இதில் இருந்து உருவான பாலசிங்கம் இதன் ஒரு பிரதிநிதி மட்டும் தான். இது எப்படி இருக்கின்றது என்றால், குஸ்புக்கு எதிராக சில சுயநலக் கட்சிகள் காட்டிய எதிர்ப்பும், குஷ்புக்கு சிலர் காட்டிய ஆதரவும் போன்றதே இது. உள் நோக்கம் கொண்டவை. சமூக நோக்கத்துக்கு அப்பாற்பட்டதாக இது காணப்படுகின்றது.

 

அரசியல் ரீதியாக இது உள்நோக்கம் கொண்டவை. பாலசிங்கத்தின் ஆணாதிக்கம் பற்றி ஜெயதேவன் கூறும் போது, அவர் பலவற்றை தன்னளவில் கூட மறந்து விடுகின்றார். தனிப்பட்ட தனது சொந்தப் பகையுணர்வை தீர்த்துக் கொள்ள முனைகின்றார். பாலசிங்கத்தை நேர்மையாக எதிர்க்க வேண்டும் என்றால், அதை சமூகத்தின் அனைத்து சமூகக் கூறுகளிலும் எதிர்க்க வேண்டும் என்ற நேர்மை அவரிடம் கிடையவே கிடையாது. இவரை புலிகள் கைதாக்கிய போது, இவரின் சகோதரர் எழுதிய கட்டுரையில் புலியின் செயல்பாட்டை அதன் அணியில் உள்ள பள்ளுப்பறைகளின் செயலாகத் தான் காட்டியவர். புலியின் அரசியலாக இதைக் காட்டவில்லை. இதே பாணியில் தான் புலியின் ஆணாதிக்கமாக அல்லாது, பாலசிங்கத்தின் செயலாக மட்டும் காட்டுகின்றார். ஆணாதிக்க அமைப்பில் கீறு விழுவதை கவனமாகவும் நேர்த்தியாகவும் தவிர்க்கின்றார்.

 

அவர் நிர்வாகத்தில் உள்ள கோயிலும், அது சார்ந்த இந்து மதமும் இதை விடக் கேவலமான ஆணாதிக்க பாலியலை உச்சரித்து அதை அடிப்படையாக கொண்டே செயல்படுகின்றது. வழிபாட்டின் உள்ளடக்கம், வழிபாட்டு மந்திரங்கள், கடவுள்களின் பிறப்புகள், வழிபாட்டு முறைகள், வழிபாடுகள் என எங்கும் இந்துமதம், ஆணாதிக்க வக்கிரத்தின் மேல் தான் இந்து மதம் பிறந்தது. இதை அங்கீகரித்து இதைத் தமிழ்பண்பாடு என்று போற்றியபடி, பாலசிங்கத்தை விமர்சிக்கும் எந்த தகுதியும் இவருக்கு கிடையாது. விமர்சிக்கும் தகுதி என்பது முரணற்ற வகையில், அனைத்து ஆணாதிக்கத்தையும் எதிர்ப்பவர்களுக்கே உள்ளது. இல்லையென்றால் இங்கு எந்த நேர்மையும் கிடையாது. உள்நோக்கம் கொண்ட பாலசிங்கத்தின் அதே ஆணாதிக்க அரசியலே இங்கும் உள்ளது.
ஏன் இவர் அங்கம் வகிக்கும் பிரிட்டிஸ் தொழிற்கட்சி ஈராக் பற்றி பொய்களையும் அவதூறுகளையும் கூறியே ஈராக்கை ஆக்கிரமித்தது. நேர்மையான ஒரு மனிதன் அக்கட்சியில் இருந்து, விலகியல்லவா இருக்கவேண்டும்.


இவர் அங்கம் வகிக்கும் கட்சியின் ஆட்சியில் தான் பிரிட்டிஸ்சில் படைகள், ஈராக்கில் பாலியல் வக்கிரங்களையும் படுகொலைகளையும் நடைமுறையில் நடத்துகின்றது. பாலசிங்கத்தின் உரைக்கு புடுங்;கும் இவர்கள், ஈராக்கில் பிரிட்டிஸ் நிலையை நியாயப்படுத்தும் அதே கட்சியின் உறுப்பினர் தான் இவர். (இவரின் அரசியலைப் பற்றி விரைவில் தனிக் கட்டுரை வெளியிட உள்ளேன். அதில் விரிவாக நாம் பாhக்கவுள்ளோம்.) இப்படி nஐயதேவன் ஒரு ஆணாதிக்க அமைப்பின் பாதுகாவலர். அவர் எப்படி பாலசிங்கத்தை விமர்சிக்கமுடியும். அதனால் தான் தனிப்பட்ட பாலசிங்கத்தை விமர்சிக்கின்றார். அதைத் தான் ரி.பி.சி யும் செய்யமுனைகின்றது. இங்கே நேர்மையென எதுவும் கிடையாது.

 

இந்த நேர்மையீனம் திட்டமிட்ட வகையில் ஆணாதிக்க பண்பாடு கலாச்சாரத்தின் பெயரில், தனிப்பட்ட பாலசிங்கத்தை குற்றவாளியாக காட்டியே ஆணாதிக்க அரசியல் கூத்தாடப்படுகின்றது. இதன் பின் உள்ள அரசியல், என்பது தெளிவாகவும் துல்லியமாகவும் ஏகாதிபத்திய ஆணாதிக்க ஆதரவு அரசியல் தான். ஐரோப்பிய பாராளுமன்றத்தில் முன்நின்று புலிகளைப் போல் புலம்பும் இவர்கள், ஐரோப்பாவின் சர்வதேச ஒழுக்கக்கேட்டைப் பற்றி பேசுவதில்லை. பாலியலடிப்படையில் நோக்கின் உலகில் உள்ள விபச்சார விடுதிகள் எல்லாம், ஐரோப்பிய உல்லாசத்துறையுடன் நேரடியாக தொடர்புடையவை. இந்த பாலியல் இல்லையென்றால், ஐரோப்பிய உல்லாசத்துறையே கிடையாது. ஏகாதிபத்திய அரசுகளை ஆதரித்துக் கொண்டு, அதன் ஒரு உறுப்பாக இருந்து கொண்டு, நேர்மையாக சமூக ஒழுக்கத்தைப் பற்றி பேசுவது எப்படி சாத்தியம். தனிப்பட்ட பாலசிங்கம் மீதான தாக்குதலாக இது மாறுகின்றது. பாலசிங்கத்தை புலிகள் என்ற ஆணாதிக்க இயக்கத்தின், ஏன் ஆணாதிக்க சமூதாயத்தின் ஒரு பிரதிநிதி என்ற வகையில் இவர்கள் அணுகமறுப்பது அரசியல் ரீதியாகவே தெளிவானது. ஏனென்றால் இவர்கள் புலிக்கு மாற்றாக முன்வைப்பதே அதே ஆணாதிக்க சமூகத்தைத் தான். அதே ஆணாதிக்க அரசியலைத் தான். ஜெயதேவன் சரி, ரி.பி.சி சரி புலிகளின் பினாமியாக விசுவாசமாக இருக்க அணுகிய போது, அவர்களின் புறக்கணிப்பால் மட்டும் புலியெதிர்ப்பு அரசியல் வேடம் தாங்கியவர்களே ஒழிய, அரசியல் ரீதியாக மக்கள் நலனை முன்வைத்து அவர்களுடன் முரண்பட்டவர்கள் அல்ல. அரசியல் ரீதியாக அதே புலி அரசியலைத் தான் சமூகத்தின் எல்லாக் கூறுகளின் மேலும் கொண்டுள்ளனர். உண்மையில் பாலசிங்கத்தின் ஆணாதிக்க உரை எவ்வளவு மோசமானதோ, அதே அளவுக்கு இவர்களுடையது அரசியலும் ஆணாதிக்கம் சார்ந்ததே.

 

இதில் லாபம் அடைவது சிங்கள பேரினவாதமும் ஏகாதிபத்தியமும் தான்.

 

இதையிட்டு பேரினவாதமே மகிழ்ச்சியடைகின்றது. ஏகாதிபத்தியமும் மகிழ்ச்சியடைகின்றது. மக்களையிட்டு அக்கறைப்படும் யாரும், இதைக் கண்டு, இந்த இழிவாடலைக் கண்டு கோபமடையாது இருக்கவே முடியாது. புலிகள் ஒரு சமூகத்தின் அடிப்படைக் கூறை ஆணாதிக்க மொழியில் புணர்ந்த போது, தியாகங்களையே சொந்த மக்களின் முன் கொச்சபை;படுத்தி இழிவாடிய போது ஒரு அதிர்வையே ஏற்படுத்தியுள்ளது.

 

அதை தூக்கிக் கொண்டு அதே ஆணாதிக்க எல்லைக்குள் நின்று குதிராட்டம் போட்ட புலியெதிர்ப்பு கும்பலின் அரசியல், தமிழ்பேசும் மக்களின் வாழ்வின் சகல கூறுகளையும் அடிமை நிலைக்கு இட்டுச் செல்லுகின்றது. மக்களை இந்த ஆணாதிக்க சமூக அமைப்பில் இருந்து மீட்டு அவர்களை வழிகாட்டும் வகையில் விமர்சிக்க முற்படாது, பேரினவாத நுகத்தடிக்குள்ளும் ஏகாதிபத்திய அடிமைத்தனத்துக்குள்ளும் இழுத்துச் செல்லமுனைகின்றனர். புலிகளின் ஒவ்வொரு அரசியல் தவறையும் அப்படி இழுத்துச் செல்லும் புலியெதிர்ப்புக் கும்பல், மக்கள் தமது சொந்த விடுதலையின் பால் சிந்திக்க தூண்டுவதைத் திட்டமிட்ட வகையில் தடுக்கின்றனர். புலிகள் எப்படி மக்களை தவறாக மக்களின் பெயரில் பயன்படுத்தி குறுகிய மக்கள் விரோத அரசிலை அரங்கேற்றுகின்றனரோ, அதே போன்று புலியெதிர்ப்புக் கும்பல் மக்களின் பெயரில் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யம் வகையில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரத்தைச் செய்கின்றனர். மக்கள் விடுதலையை அவர்கள் தமது கையில் எடுக்கும் வண்ணம், இந்த புலியெதிர்ப்புக் கும்பல் வழிகாட்டுவதாக யாரும் சுட்டிக்காட்டவே முடியாது.

 

இந்தப் புலியெதிர்ப்புக் கும்பல் புலிகளைப் போல் அதே அரசியலைக் கொண்டுள்ளனர். ஏகாதிபத்தியம் பற்றி புலிகளுக்கு முரணான அரசியலே எதுவும் கிடையாது. ஆணாதிக்கம், சாதியம் போன்ற பல்வேறு கூறுகளிலும் கூட இதே நிலைதான்;. பிரபாகரனின் மாவீரர் தின உரை, கருணாவின் ஏகாதிபத்திய ஆதரவு உரை, பேரினவாதத்தின் நிலை பற்றி மற்றொரு கட்டுரையில் தனியாக விரைவில் பார்ப்போம்.

10.12.2005