நாம் ஏன் இவர்களை காடையர்கள் என்கின்றோம்? மக்களின் சமூக பொருளாதார உறவுகளுடன், எந்த சமூக உறவுமற்றவர்கள் நடத்துவது காடைத்தனம் தான். இதை யாரும் தேசியம் என்று கூறமுடியாது. தமது அரசியல் என்ன, தமது நோக்கமென்ன என எதுவும் கூறத் தெரியாதவர்கள், மக்களின் பெயரில் நடத்தும் அனைத்தும் சமூகவிரோதத் தன்மை கொண்டவையே. இவை காடைத்தனமாகவே எப்போதும் சமூக உள்ளரங்கில் அரங்கேற்றப்படுகின்றது.


இந்த நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பெயரில் அரங்கேறும் வன்முறைகளும், படுகொலைகளும் மிகவும் இழிந்துபோன ஒரு சமூக பாத்திரத்தையே வகிக்கின்றன. மக்களின் பெயரில் நடத்தப்படும் தீயிடல், மனித கழுத்தை அறுத்தல் முதல் கிளைமோர் தாக்குதல் வரை அனைத்தும், காடைத்தனத்துக்கென பயிற்றப்பட்ட புலிகளால் தான் செய்யப்படுகின்றது. ஆனால் இதை புலிகள் மறுப்பதும், விதண்டாவாதமாக அறிக்கைகள் விடுவதும் அன்றாடச் செய்திகளாகின்றன. சமூகத்தையே பொய்களால் கற்பழிக்கின்றனர். சரி, ஏன் இந்த நடவடிக்கை எதையும் புலிகள் கண்டிப்பதில்லை. கருணாவுக்கு எதிராக படையெடுத்துச் சென்றவர்கள், ஆனால் இவர்களை ஒழிக்க 'ஏகபிரதிநிதிகள்' முற்படவேயில்லை. இப்படி அம்பலமாகின்றது புலியின் அரசியல். இந்த நிலையில் உண்மையில் இதை மக்கள் தான் செய்கின்றனர் என்பதை, உலகில் யாரும் நம்புவது கிடையாது. புலிகள் கூட அதை நம்புவது கிடையாது. அப்படியானால் யாரை நம்பவைக்க முனைகின்றனர். இங்கு அரசியல் சூனியம் நிலவுகின்றது.


சர்வதேச சமூகம், இலங்கை அரசு, ஏன் தமிழ் மக்கள் கூட இதை மக்கள் செய்வதாக நம்புவது கிடையாது. யாருமே நம்பாத ஒரு செய்தியை சொல்லி, இந்த வன்முறைகளை நடைமுறைப்படுத்துகின்றனர் புலிகள். செய்திப் பத்திரிகை பொய்களால் நிறைந்து விற்பனையாகின்றது. முழுச்செய்தி அமைப்பைபும் பொய்களால் புணருகின்றனர். பொய், பித்தலாட்டம், மோசடி, முடிச்சுமாற்றி என, மனித குலத்தில் இழிந்து போன சமூக வடிவங்கள் மூலம் இவை அனைத்தும் நியாயப்படுத்தப்படுகின்றது. இது எடுத்துக் காட்டுவது, அரசியல் ரீதியான தொடர்ச்சியான புலியின் வங்குரோத்தைத்தான். இன்று மக்கள் தான் இதனைச் செய்கின்றனர் என்று யாரும் நம்பாத போது, இது ஒரு ஆய்வுக்குரிய விடயமில்லைதான். எம்முன் இங்கு ஆய்வுக்குரிய விடயமாக இருப்பது, இதை மக்கள் போராட்டம் என்பது தான். இதன் மூலம் மக்கள் போராட்டம் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கேடுகெட்ட மனிதவிரோத வன்முறைகளின் அரசியல் பண்பைத்தான்.


தாமே வலிந்து உருவாக்கிய தமது சொந்த அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது, வக்கற்றுப் போன குறுகிய புத்தி கொண்ட தலைவர்கள், மக்களின் பெயரிலான நேர்மையற்ற வகையில் ஒரு அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். தாம் வலிந்து உருவாக்கிய குறுகிய நலன்கள் சார்ந்த அரசியல் நலன்கள் நெருக்கடியில் சிக்கிவிடவே, மக்களை அதற்குள் மக்களின் பெயரில் பலியிட முனைகின்றனர். நயவஞ்சகத்தின் ஒரு எடுத்துக்காட்டாக மாறி, மனிதத்துவத்தை புதைகுழியாக்குகின்றனர். மக்கள் எந்தளவுக்கு இழிநிலைக்கு தாழ்த்தப்படு கின்றார்களோ, எந்தளவுக்கு அடிமைப்படுத்தப்படுகின்றார்களோ, அந்தளவுக்கு அவர்களின் பெயரால் எதையும் செய்துவிடுகின்றனர். ஒரு அராஜக சூழல் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்படுகின்றது. தமிழ்த் தலைவர்களின் சின்னத்தனங்களை, வக்கிரமாகவே சமூகத்தின் மீது புகுத்துகின்றனர்.


மக்கள் போராட்டம் என்ற பெயரில் வெளியில் இருந்து வரும் ஒரு சிறுகுழுவால், சிலவேளைகளில் 25, 50 பேர் கொண்ட குழுவால் முழு சமூகத்தையுமே அதிரவைக்கும் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடுகின்றனர். கொலைவெறி கொண்டதும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயல்பாடுகளை, மக்கள் போராட்டம் என்ற பெயரில் நடத்துகின்றனர். இந்த அராஜகத்தின் போது ஒருவர் கொல்லப்படும் போது, மக்கள் பெறுவது என்ன? மக்கள் தமக்குத் தானே விலங்கை பூட்டிக் கொள்வது தான். இது தான் மக்கள் போராட்டத்தின் முடிவாகின்றது.


வடக்குகிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்கள் நடவடிக்கை என்ற பெயரில், சிறுகும்பல் மக்களின் உள்ளார்ந்த சமூக நடவடிக்கைக்குள் பதுங்கிக் கொள்கின்றது. பின் அதற்குள் இருந்து அராஜகத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர். எதிரியால் சூழப்பட்டதும் மிகவும் நெருக்கமான அவர்களின் கால்களில் மிதிபடாமால் வாழும் மக்கள், தாமுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்கின்றனர். இதைத்தான் இன்றைய தமிழ் தேசிய தலைவர்கள் என்று கருதப்படும் ஆயுதமேந்திய ஏகப்பிரதிநிதிகள், இதை மட்டும் தான் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேச தமிழ் மக்களுக்கு விட்டு வைத்துள்ளனர். மக்கள் அவர்கள் சம்பந்தப்படாத இந்தப் போராட்டங்களில் இருந்து, அன்னியமாகி ஊமைகளாக நடைப்பிணமாக வாழ்கின்றனர். புலிகள் மக்களை கண்டு அஞ்சுவதால், அவர்களுக்கு வாய்ப்ப+ட்டு போட்டு துப்பாக்கியால் தமிழ் மக்களை வேட்டையாடியும் கண்காணிக்கின்றனர்.


உண்மையில் மக்கள் புலிகளையும், புலிப் போராட்டங்களையும் வெறுக்கின்றனர். அந்தளவுக்கு மக்கள் நலனை முன்னெடுக்காத இப்போராட்டம், அவர்களின் வாழ்வை நாசமாக்கி வருகின்றது. யுத்த சூழலிலும், யுத்தமற்ற சூழலிலும் கூட, மக்களின் அன்றாட வாழ்வு அச்சத்துடனும், பீதியுடனும் மற்றவர்களைக் கண்டு அஞ்சி பயந்து வாழவேண்டிய அவலமான ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. கடவுளுக்கு பயந்து கையெடுத்து இரந்துவேண்டி காணிக்கையிட்டு கும்பிடுவது போன்று, ஆயுதம் ஏந்திய 'ஏகபிரதிநிதி' புலிகளை இரந்து கையெடுத்துக் கும்பிடுவதுடன், அவர்கள் கேட்கும் காணிக்கைகளை கொடுக்க வேண்டிய ஒரு நிலையில் தமது வாழ்வையே அவர்களுக்காக அழித்து வருகின்றனர்.


மக்களின் உழைப்பை பிடுங்குவதன் மூலம், சமூகத்தின் ஒரு பகுதி உழையாது வன்முறை கொண்ட கும்பலாகவே வாழத் தொடங்கியுள்ளது. இது இன்று மக்களுக்குள் புகுந்துகொண்டு கட்டவிழ்த்துவிடும் அராஜகத்தையே, மக்கள் போராட்டம் என்கின்றனர். உண்மையில் இந்த அராஜகம் மக்கள் மேல் தான் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. சிறிலங்கா இராணுவம் மீதான தாக்குதல் என்ற போர்வையில், மக்கள் மேலான அராஜகமாகவே இது திட்டமிட்டு நடத்தப்படுகின்றது. பொதுவாக இத்தாக்குதல்கள் சிறிலங்கா இராணுவத்தின் மீதாக காட்டப்பட்ட போதும், உண்மையில் பரந்துபட்ட மக்களின் மேல்தான் இந்த அராஜகம் கொடிய விலங்கிட்டுள்ளது. அராஜகம் சுற்றுவழிப் பாதையைக் கொண்டது. மக்களின் வாழ்வுடன் சம்பந்தப்படாத ஒரு சிறு கும்பல் நடத்தும் கண்மூடித்தனமான வன்முறையினால், மக்களின் துன்பம் என்றுமில்லாத வகையில் பெருக்கெடுக்கின்றது. மனிதத்துவம் சிதிலமடைகின்றது.


மக்களின் துன்பம் தான் புலிப் போராட்டத்தின் ஆன்மா என்பதே பிரபானிச சித்தாந்தமாகும். இதனால் மக்களை துன்பப்படுத்தும் வகையில், புலிகள் திட்டமிட்ட செயல்பாடுகளை எப்போதும் அமைத்துக் கொள்கின்றனர். இதற்கு ஈவிரக்கமற்ற எந்தவிதமான இழிந்துபோன காட்டுமிராண்டித்தனத்தையும் கூட செய்துவிடுகின்றனர். எதிரியிடம் மக்கள் துன்பப்பட்டால் தான், அவர்களுக்கு தேசிய போராட்ட உணர்வு வரும் என்பது பிரபானிச சித்தாந்தமாகும். மக்களை வதைத்து துன்பப்படுத்தும் வகையில், நடவடிக்கையை திட்டமிடுவதே புலியின் அன்றாட வழிமுறையாகும். பின் தயாரிக்கப்பட்டு தயாராக வைத்துள்ள சரக்கை காட்டி, பார் எதிரியை என்று கூறுவது அன்றாடச் செய்திகளாகின்றன. இதை ஆய்வு செய்து நியாயப்படுத்துபவர்கள் தமிழ் தேசிய ஆய்வாளராகின்றனர். மாமனிதனுக்குரிய தகுதியையும், தேசப்பற்றாளர் என்ற தகுதியையும் பொறுக்கித்தின்றே பெறுகின்றனர். இதன் மூலம் மக்களிடம் அன்னியமாகிய தமது குண்டர் படைச் செயல்பாட்டுக்குரிய ஆட்கள் கிடைப்பார்கள் என்ற தேசிய சித்தாந்தம், மக்களுக்கு கொடுப்பது துன்பத்தையும் அடிமைத்தனத்தையும் தான்.


உண்மையில் மக்களின் வாழ்வுடன் சாராத இந்த வன்முறையை யார், எப்படி நடத்துகின்றனர்? காடையர்களுக்கே உரிய உதிரி கும்பல்கள் நடத்தும் ஒரு காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை மூலம், சூழலை வன்முறைக்குள்ளாக்குகின்றனர். வன்முறையைத் தொடங்கும் போது, விடுப்பு பார்க்கும் பார்வையாளர் கூட்டம் கும்பலாக கூடுகின்றது. அதை மக்கள் என்று காட்டியபடி, கும்பலில் இருந்தே கல் எறிந்து வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இதற்கென தயராக உள்ள விரல்விட்டு எண்ணக் கூடிய சிலர், குறித்த அந்தச் சூழலில் கொலைவரை செய்து விடுகின்றனர்.


பொதுவாக பாடசாலைகளில் புகுந்து கொள்ளும் இந்த பயிற்றப்பட்ட வன்முறை கும்பல், மாணவர்களின் பெயரில் அனைத்தையும் செய்துவிடுகின்றனர். அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட அதிபர் இராசதுரையின் படுகொலையை இந்தப் பின்னனியில் வைத்து பார்க்க வேண்டியுள்ளது. அதிபர் இராசதுரையின் கொலைக்கு எந்தக் காரணத்தையும் கொலையாளிகளும் சரி, அவர்களின் பினாமிகளும் கூட முன்வைக்க முடியாது போயுள்ளது. இந்த நிலையில் கொலைக்கான காரணம் என்ன என்று பார்த்தால், இன்றைய வன்முறையுடன் தொடர்புபடுத்தியே இதைக் காணமுடியும்.


அதிக உயர்தர மாணவர்களைக் கொண்ட, மிக முக்கியமான மையத்தில் உள்ள ஒரு பிரதான பாடசாலையினுள், வன்முறைக் குண்டர்களை இணைத்துக் கொள்வதற்கு அவர் அனுமதிக்கவில்லை என்பது மிக முக்கியமான காரணமாகும். மாணவர்கள் பெயரில் வன்முறைக் குண்டர்களை பதிவுசெய்ய மறுத்ததும், வன்முறையாளர்கள் பாடசாலையை மாணவர் உடையில் பயன்படுத்த மறுத்தமையும், இக் கொலைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மக்கள்படை என்ற பெயரில் செயல்படும் காடையர்களை, மக்களுடன் கலந்துவிட மறுக்கும் அனைத்தையும், சமூக விரோதமாக கருதிக் கொன்று விடுவதும் நிகழ்கின்றது. இதற்கு உரிமைகோராத மரணதண்டனைகள் விதிக்கப்படுகின்றன. பின் அதற்கு கடிவாளம் ப+ட்டி, பினாமிகள் மூலம் தூற்றப்படுவது நிகழ்கின்றது. கொலையாளிகள் தாம் ஏன் சுட்டோம் என்று, எந்த சுயவிளக்கத்தையும் கூறுவது கிடையாது. இதன் பின்னால் நக்கித் திரியும் லும்பன் வாழ்வு கொண்ட கும்பல் தான், நக்கியதுக்கு ஏற்ப தாம் விரும்பிய விளக்கங்களைத் தருகின்றனர்.


பேரினவாதம் தமிழ் மக்களின் பிரச்சனையையே, வெறும் புலிப் பிரச்சனையாக்குவதில் வெற்றி பெற்றுவிட்டது. இதை இனி தமிழ் மக்களின் பிரச்சனையாக, புலிகள் உள்ளவரை கொண்டுவரவே முடியாது. இந்த நிலையில் மக்களின் பெயரில் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள், வெறும் புலிப்பிரச்சினையாக இருப்பதையும், மீண்டும் உலகை நம்பவைக்கும் மற்றொரு எடுத்துக்காட்டாக மாறிவருகின்றது. உண்மையில் இன்று இது ஒரு புலிப்பிரச்சினையாக மட்டும் இருப்பதைத் தான், அவர்களின் சொந்த நடவடிக்கைகள் எடுத்தக் காட்டுகின்றது. புலி நடத்தைகள், பேச்சுவார்த்தை நிபந்தனைகள் என அனைத்தும் இதற்குள் மீண்டும் மீண்டும் புணரப்படுகின்றது.


மக்களின் பெயரில் புலிகள் நடத்தும் அராஜக வன்முறை நடத்தைகள், அரசியல் நேர்மையீனத்தில் இருந்தே எழுகின்றது. எதிரியை நேர்மையாக எதிர் கொண்டு, அதை மக்களுக்கு விளங்கப்படுத்தி, அவனை எதிர்க்க வக்கற்ற கோழைத்தனத்தின் விளைவே இவை. எப்போதும் எங்கும் பொய்யும் புரட்டும் அரசியலாகிவிடுகின்றது. உங்கள் மனச்சாட்சியிலேயே இதுவே எதிரொலிக்கின்ற போது, இதை உண்மையென்று உலகில் யாரும் நம்புவது கிடையாது. எந்தச் செய்தியும் பலத்த சந்தேகத்துக்கு உள்ளாகின்றது. கொலையை செய்துவிட்டு, அதற்கு தமது பக்க நியாயத்தைக் கூட கூறுவது கிடையாது. மாறாக கொல்லப்பட்டவன் தரப்பே கொன்றதாக கூறும் அத்திவாரமேயற்ற பொய் மூட்டைகளில் ஏறி நின்று, தமிழ் தேசியத்தை யாராலும் பாதுகாக்க முடியாது.


இவர்கள் செய்ததைக் கூட நியாயப்படுத்த முடியாத வகையில், அரசியல் வங்குரோத்து காணப்படுகின்றது. எங்கும் எதிலும் நேர்மையீனம் காணப்படுகின்றது. இன்று நடக்கும் பரஸ்பர எதிர் நடவடிக்கையில் மக்களுக்கு எதிராக எதிரி எதைச் செய்கின்றான் என்பதை கூட, கண்டறிய முடியாத நிலையை அடைந்துள்ளது. இதனால் எதிரி லாபம் அடைகின்றான். நடக்கும் கொலை யாரால் ஏன் என்ற கேள்வியும், காணமல் போவோர் யாரால் ஏன் என்ற சந்தேகமும் சமூகத்தில் ஏற்பட்டுவிட்டது. இரத்தக் கறைபடிந்த பினாமிகளும், அதையே கறந்து குடிக்கும் செய்தி ஊடகங்களும் பொய்யை ஆயிரம்தரம் மீண்டும் மீண்டும் சொன்னாலும், அதை நம்பவதற்கு என்று யாரும் கிடையாது. இதை பினாமிகளும், விசுவாசிகளும் கூட விதண்டாவாதத்துக்கு வம்பளப்பதே ஒழிய, இதை உண்மையாக அவர்கள் கூட நம்புவது கிடையாது.


அண்மையில் புங்குடுதீவில் நடந்த தர்சினி படுகொலை கூட, ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த உதிரிக் கும்பல் நடவடிக்கைக்கு உள்ளாகியது. 18.12.2005 இது அன்றாடச் செய்தியில் (17.12.2005 அல்லது 16.12.2005 அன்று சம்பவம் நடந்தது.) வெளியாகிய போதே, ஆச்சரியப்படத்தக்க வகையில் கற்பழிக்கப்பட்டதாகவும், அதன் பின் கொலை செய்து இராணுவம் வீசியதாகவும் அவசர அவசரமாக புலிகள் செய்தியாக்கினர். அவர்கள் சார்பு இணையமான நிதர்சனம் கொம் ஞாயிற்றுக்கிழமை, 18 டிசெம்பர் 2005 "ராஜபக்ச பதவிக்கு வந்து 1 மாதத்தில் முதலாவது தமிழ் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார்." என்று எழுதியது. மீண்டும் புதன்கிழமை, 21 டிசெம்பர் 2005 "ஸ்ரீலங்கா கடற்படையினரின் வெறியாட்டத்தில் உயிரிழந்த தர்சினி இளையதம்பியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா காவற்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப் பட்டமை மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது." என்ற செய்தி வெளியாகியது. இந்த அடிப்படையில் தான் தமிழ் ஊடகவியல் செய்திகள் கட்டமைக்கப்பட்டதும், வன்முறைகள் சிலரால் நடத்தப்பட்டதும், அறிக்கைள் கண்டனங்கள் என அனைத்தும் விடப்பட்டன.


இதில் பலத்த சந்தேகம், நம்பகத் தன்மை ஊகங்கள் என பலவுண்டு.


· மருத்துவ அறிக்கை வரமுன்னமே கற்பழிப்பு நடந்ததாக கூறியது எப்படி?


· இரண்டாவது இராணுவம் மற்றும் கடற்படை மட்டும் தான் இதைச் செய்தது என எப்படி கூற முடியும்?


· ஏன் தனிப்பட்ட பழிவாங்கலாக, இப்படி நடக்கமுடியாது?


· வன்முறையைத் தூண்ட மக்கள் படை இதை ஏன் செய்திருக்க முடியாது?


இராணுவம் முதல் மக்கள் படை வரை இது போன்ற காடைத்தனங்களில் ஈடுபடும், ஆணாதிக்க மக்கள் விரோதத் தன்மை கொண்டவை தான். இங்கு இராணுவ கற்பழிப்புகள் ஒருபுறம் நிகழ்கின்றது என்றால், மறுபுறம் இது போன்றவை புலிகளாலும் செய்யப்பட்டுள்ளன. இன்று வன்முறையைத் தூண்டக் கூடிய வகையில், இது போன்ற நடவடிக்கைகளை திட்டமிட்டு செய்யக் கூடியவர்கள் யார் என்ற கேள்வியில், விடை அனைவருக்கும் தெரிந்ததுதான். வன்முறையைத் தூண்டக் கூடிய வகையில், இது போன்ற காடைத்தனங்களை திட்டமிட்டு தேசியத்தின் பெயரில் செய்யக் கூடியவர்கள் தான். இந்த விடயத்தில் பல தளத்தில் கேள்விகள் உள்ளன. அடிப்படையில் நேர்மையற்ற நடவடிக்கைகள் பெருகும் போது, அதுவே அரசியலாகின்ற போது, இது போன்றவற்றில் சந்தேகங்களை பல தளத்தில் விட்டுச் செல்லுகின்றது.


சடலமாக மீட்கப்பட்ட படங்களில் கொலை செய்யப்பட்ட தர்சினியின் உடலில் உடுப்புகள் நேர்த்தியாக இருக்கின்றன. இது எப்படி சாத்தியம்? பின்தங்கிய ஒரு கிராமம் ஒன்றில் கிணற்றில் இருந்து எடுக்கும் உடலைக் கூட படமெடுத்து, அதுவே புலியின் சொந்த அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது! ஆச்சரியப்படத்தக்கவகையில் இது திட்டமிடப்பட்டதா என்ற கேள்வியை இவைகள் விட்டுச் செல்லுகின்றது.


இந்த தர்சினியின் பின் வேறு பல அபிப்பிராயங்கள் புலிகள் அல்லாத தளத்தில் வெளியாகின்றன. அதில் கடற்படை ஒருவரிடம் நட்பு கொண்டிருந்ததாகவும் கூட செய்திகள் உள்ளன. அதுபோல் கடற்படையினருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் கூட செய்திகள் வெளியாகின்றன. அவர்கள் வழமை போல் தேசத்தின் பெயரில் மக்களின் பெயரில் கொல்லும் நபர்கள், இதை ஏன் செய்திருக்கமுடியாது? அண்மையில் யாழ்பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 'விபச்சாரி' யின் கதையை இது ஒத்தது. விடைதெரியாத கேள்விகள், சந்தேகங்கள் பல உண்டு.


உண்மைக்கும் நேர்மைக்கும் அருகதையற்ற நிலையில் எமது சமூகம் உள்ளது. எனக்கு நடந்த ஒரு உதாரணத்தை நான் இங்கு கூறமுடியும். நான் 1987ம் ஆண்டு உரிமை கோராத ஒரு நிலையில் கடத்தப்பட்டு, புலிகளின் வதைமுகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தேன். காணாமல் போன என் விடயத்தில், புலிகள் தாம் சம்பந்தப்படவில்லை என்று பல்கலைக்கழகத்தில் கூட அறிவித்தனர். இந்த நிலையில் காணாமல் போன என்னை, நான் சென்றுவரும் ஒரு வீட்டுக்கு அவர்கள் கொண்டு செல்ல வேண்டிய நிலையேற்பட்டது. புலிகள் தான் தாம், என்று உரிமைகோர முடியாத இவர்கள் என்ன செய்தார்கள். கை,கால், கண், வாய் என அனைத்தையும் கட்டி இரவு 12 மணிக்கு என்னை எடுத்துச் சென்றனர். தம்மை இனம் காணாத வகையில் மூகமூடிகளை, பொய்த் தலைமுடிகளை போட்டுக் கொண்டனர். அத்துடன் கறள் பிடித்த வாள் கத்தியுடன், இடுப்பில் ஆயுதத்தை மறைத்து வைத்தபடி என்னைக் கொண்டு சென்றனர். 10 மைல் தூரம் பிரயாணம் செய்த அவர்கள் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர். அங்கு அன்று அகதிகளாக பல பத்து மக்கள் தங்கியிருந்தனர். அங்கு அவர்கள் தம்மை எனது இயக்கத்தின் பெயரில் அறிமுகப்படுத்தியதுடன், இயக்கத்தை நான் மோசடி செய்ததாக கூறி அனைத்தையும் நடத்தி முடித்தனர்.


அடுத்த நாள் அச்சுற்றுவட்டாரத்தில் இச் செய்தி கதையாக பரவியது. மக்கள் மத்தியில் நான் காணாமால் போனதற்காக எனது இயக்கமே காரணம் என்று புனையப்பட்டது. இதை மறுத்தவர்களுக்கு அவர்களே பதில் கூறினர். புலிகள் நவீன ஆயுதத்துடன் தான் வருவார்கள், வாள் கத்தியுடன் முகமூடியுடன் வரமாட்டார்கள் என்றனர். அத்துடன் இப்படி வரக் கூடியவர்கள் எமது இயக்கமே என்றனர். என்ன வக்கிரம். இப்படித்தான் அன்று முதல் இன்றுவரை நிகழ்கின்றது. நான் தப்பும் வரை இதுவே புலிப் பினாமியத்தின் செய்தியாகவும், நம்பகமான ஒன்றாகவும் கூட காட்டப்பட்டு இருந்தது. (இவைகளை உள்ளடக்கிய வகையில், வதைமுகாமில் எனக்கு என்ன நடந்தது என்பதை 300 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக "வதை முகாமில் இருந்து தப்பிய தூக்கு மேடைக் கைதியின் நினைவுகள் அழிவதில்லை" என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். இன்றைய நிலையில் இந்த நூல் எனது மரணத்தின் பின் வெளிவரும் வகையில் பாதுகாத்து வைத்துள்ளேன்.) இப்படி புலிகளின் செயல்கள் எல்லாவகையான இழிவான மனித விரோதத் தன்மை கொண்டவை. எதையும் எப்படியும் செய்யக் கூடியவர்கள். இதற்கு ஒரு எடுத்துக் காட்டுத் தான் இது. இதற்கு அண்மையில் நடந்த மற்றொரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம்.


இது அவர்களின் நேர்மையீனத்தையும், செய்திவெளியிடும் வக்கிரத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. புலியின் மக்கள்படையைச் சேர்ந்த பொங்கு தமிழ் பினாமி பேராசிரியர் கணேசலிங்கம் 13 வயது குழந்தையை தொடர்ச்சியாக கற்பழித்த போது, இதே புலி நிதர்சனம் கொம் முதல் செய்தியை தந்தது. பின் தமது குண்டர் படையாள் என்று தெரிந்தவுடன் குத்துக்கரணம் அடித்து என்ன சொன்னது என்று பாருங்கள். "தமிழ் ஊடகங்களுடன் சேர்ந்து நிதர்சனம் விட்ட தவறுக்கு மனம் வருந்துகின்றது. "வெள்ளிக்கிழமை, 9 செப்ரெம்பர் 2005 இல் சிறுமி தற்கொலை முயற்சி பல்கலைக்கழக விரிவுரையாளர் கைது என்று எமது செய்தித் தளத்தில் வெளியான செய்தி தொடர்பாக மனம் வருந்துகின்றோம். திட்டமிட்ட முறையில் முதல் தடவையாக யாழ் மாவட்டத்தில் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் வெளிநாட்டு உளவுச் சக்திகளினால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாகப் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ள போதும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் சில நகர்வுகள் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக அவதானிப்போரின் நலன்கருதியும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதும், ஒரு சில விடயங்கள் ஊடாக ஏனையவர்களுக்கும் ஒரு அவசர விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விரும்புகின்றோம். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி ஏற்கனவே 3 ஆண்களுடன் நீண்டகால பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்று ஆரம்பகட்ட மருத்துவரின் தகவல்கள் தெரிவிக்கின்றது."


நீண்ட கால உறவு என்றால் கணேசலிங்கம் தானே தொடர்ச்சியாக கற்பழித்து வந்தவன். 'வெளிநாட்டு உளவுச் சக்தி' சதி, பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் சில நகர்வுகள் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக அவதானிப்போரின் நலன்கருதியும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பலவாக கூறும் நேர்மையற்ற வக்கிரம் வெளிப்படுகின்றது. இப்படி உண்மையை மூடிமறைத்து பொய்களால் புணர்ந்த போது, இந்த செய்தியின் உண்மைத் தன்மை என்ன. முன்பு மூன்று ஆணுடன் தொடர்பு கொண்டவர் என்று புலிகள் ரோச்சடித்து தொழில் செய்தவர்கள் போல் கூறுகின்றனர். இங்கு தர்சினி கற்பழிப்பு பற்றியும் ரோச்சடித்து நின்ற வகையில்தான் கருத்துக் கூறுகின்றனர்.


ஒரு 13 வயது சிறுமியைப்பற்றி எழுதும் இந்த சமூக விரோத ஆணாதிக்க காடையர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. பல வருடமாக அந்த வீட்டில் வேலைக்காரியாக மட்டுமின்றி, பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானவர் அக் குழந்தை. 13 வயதை அடைந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற அக் குழந்தை, சிறு வயதிலேயே அந்த வீட்டில் அடிமையாக்கப்பட்டவர். கல்வி மறுக்கப்பட்டு அந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டவர். அந்த சிறு குழந்தையைத் தான் புலிகள் மறுபடியும் தமது சொந்த வக்கிரத்தால் புணர்ந்தனர். புலிகளா மற்றைய மூன்று ஆண் தொடர்பாளர்கள்? செய்தியை புணர்ந்த விதம் இப்படித் தான் இதைக் காட்டுகின்றது. இது தான் புங்குடுதீவு தர்சினிக்கும் நிகழ்ந்தது. ஏன் அந்தக் குழந்தை தற்கொலை செய்ய முயன்றது. ஆண்கள் பலர் கிடைக்காமையாலா! அந்தக் குழந்தை கற்பழிக்கப்பட்டவுடன், பூதக்கண்ணாடி கொண்டு தேடிய புலிகள், மூன்று ஆண்களுடன் தொடர்பு என்று எழுதுகின்றது. அந்த மருத்துவ அறிக்கை எங்கே? என்ன வக்கிரம். இப்படித் தான் அனைத்து செய்திகளும். கற்பழிக்கப்பட்ட தர்சினிக்காக புலம்பும் இதே செய்தி ஊடகம் தான், இதையும் செய்தியாக வெளியிட்டு தமிழ் மக்களையே புணர்ந்தது.


சரி சிறு குழந்தையை வீட்டில் வேலைக்கு வைத்திருப்பது எப்படி சரியாகும். தமிழீழத்தில் பிரபாகரனின் ஆட்சியில் ஏழைக் குழந்தைகளை வீட்டு வேலைக்காக வைத்திருப்பீர்கள். கற்பழித்துவிட்டு முன்னமே ஆண்களுடன் தொடர்பு என்று சொல்லுவீர்களோ! இப்படித் தான் புலிச் சட்டம் உள்ளது. உங்கள் தமிழீழத்தில் குழந்தைகளை பாலியல் பண்டமாக பயன்படுத்துவீர்கள். சரி நீங்கள் கூறுவது போல் அந்த குழந்தை மூன்று ஆண்களுடன் உறவு கொண்டது என்று வைத்துக் கொள்வோம், அப்படியாயின் தமிழ் தேசிய உணர்வாளர்கள் இப்படியான பெண்களுடன் உறவு கொள்ளலாமோ! அதைத்தான் பிரபாகரனின் பிரபானிசம் வழிகாட்டுகின்றது. அதனால் தான் புலிப் பினாமித் தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தம் வெட்கத்தை விட்டு, கோவணத்துடன் நீதிமன்றத்தில் படியேறி நின்று வழக்குரைத்தனர்.


இப்படி புணர்ந்து செய்திகளையும், தேசியத்தையும் வக்கிரப்படுத்தியவர்கள், நியாயப்படுத்தியவர்கள், அதையே வழக்காடியவர்கள், தர்சினியின் விடையத்தில் எப்படி நேர்மையாக செயல்படமுடியும். எல்லாவிதமான சந்தேகத்தையும் விட்டுச் செல்வதை, இது எந்தவித்திலும் தடுத்துவிடவில்லை. இதுபோன்றே மக்களின் பெயரில் நடத்தும் காடைத்தனங்கள் அனைத்தும், சிலர் மட்டுமே செய்கின்றனர். காடைத்தனத்தை செய்வதற்கு என பயிற்றப்பட்ட புலிகள், மக்களின் பெயரில் ஒரு காடையர் கும்பல் போல் மக்களுக்குள் நின்று வக்கரிக்கின்றனர். உண்மை, நீதி, நியாயம் என எதுவுமற்ற வகையில், மக்களின் வாழ்வை நாசமாக்குகின்றனர்.


எதிரியின் அரசியல் ஆளுமைக்கு முன்னால், தலைகுனிந்து மண்டியிட்டு செல்லும் அராஜகம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. எதிரியின் போலியான நயவஞ்சகமான அரசியலை எதிர்த்து, சரியான அரசியலை முன்வைத்து நேர்மையாக அவன் மண்கவ்வும் வண்ணம் போராடமுடியும். சமூக அறிவும் கல்வி அறிவுமற்ற ஒரு குறுகிய புத்திகொண்ட போராட்ட தலைமையினால் இதைச் செய்யமுடியாது. மக்களை மிக இழிவான வகையில், முரட்டுத்தனமாகவும், பலாத்காரமாகவும் தமக்கு பயன்படுத்தும் வகையில் அராஜக சூழலுக்குள் தள்ளிச் செல்லுகின்றனர். இது அல்லாத வகையில் ஒரு போராட்ட சூழலை ஏற்படுத்த முடியாத ஒரு அரசியல் வறுமை கொண்ட தலைமை, இப்படித் தான் எம்மை வழிகாட்டுகின்றது.
ஒரு கட்டத்தில் மக்கள் படை என்ற பெயரிலான அறிவிப்பில், நாங்கள் 250 பேர் எதற்கும் தயாராக இருப்பதாக கூறியது. மக்கள் போராட்டம் என்ற பெயரில் யாழ்குடாவையே ஆட்டிப்படைப்பவர்கள் 250 மக்கள் மட்டும் தான் என்பதை ஒத்துக் கொண்டனர். இந்த 250 குண்டர்களும், அராஜக வழியில் மக்களுக்குள் நின்று நடத்தும் வன்முறைக்கு தான் புலிகள் மக்கள் படை என்கின்றனர். இப்படித் தான் தாங்களே தமக்குள் பல பத்து படைகள். மக்களை அச்சுறுத்தவும், பீதியில் மக்களை உறையவைக்கவும் இந்த குண்டர் படைகள் தேவைப்படுகின்றது.


உண்மையில் புலிகள் என்ன செய்ய நினைக்கின்றனர். மக்களின் இயல்பான வாழ்வை முடக்க விரும்புகின்றனர். கடந்த பத்துவருடமாக யாழ்குடாவில் இராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நிலவிய இணக்கமாக இணங்கி வாழும் சூழலை தகர்க்க விரும்புகின்றனர். இராணுவத்தை சீண்டுவதன் மூலம், இராணுவத்துக்கே உரிய மிருக வெறியை வன்முறையாக்கி, அதை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட விரும்புகின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை என்றால், இராணுவ வன்முறைதான் என்று கூற காரணங்களை தேடி வன்முறையை தூண்டுகின்றனர். இதில் சமாதானம், அமைதி ஒப்பந்தம் வேறு. அதற்கு தாம் விசுவாசமாக இருப்பதாக விளக்கம் வேறு வழங்குகின்றனர்.


இப்படிச் சொன்னபடி இராணுவ கெடுபிடியை உருவாக்கும் வகையில், வன்முறையைத் தூண்டும் அராஜகத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இந்த நேர்மையீனமே சமாதான காலம் முழுக்க இருந்தது. ஆரம்பம் முதலே சில நூறு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டடனர். இதை என்றும் எங்கும் யுத்த நிறுத்த மீறலாக புலிகள் கூறுவது கிடையாது. மனிதவுயிர்கள் கொல்லப்பட்ட வரலாற்றில், கடத்தல் கைது என்று வன்முறை எகிறிக் குதித்தது. இராணுவம் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தது. இராணுவ புலனாய்வாளர்கள் சில பத்து பேர் கொல்லப்பட்டனர். புலிகள் கொலைகளை மாபியாத்தனத்தில் செய்து வந்தனர். இந்த பேரினவாத சிங்கள இராணுவம், வன்முறையற்ற ஒரு பொது சூழலை தக்கவைத்தது. மக்கள் புலியைத் தான், தமது சொந்த இயல்பு வாழ்வுக்கு தடையானதாக எதார்த்தம் சார்ந்து கருதத் தொடங்கினார். புலிகள் தொடர்ச்சியாகவே கொலைகளைச் செய்து வந்தனர்.


இதன் பின்பாக புலியில் ஏற்பட்ட கருணா பிளவே, புலியின் மீதான எதிர்தாக்குதலை உருவாக்கியது. இதுவே கொலைகளை பரஸ்பரமாக்கியது. அது வரை (அமைதி சமாதானத்தின் பின்பாக) புலிகள் மட்டுமே கொலைகளை ஒருதலைப்பட்சமாக செய்து வந்தனர். அதுவரை எந்த புலி உறுப்பினரோ அல்லாத ஆதரவாளரோ கொல்லப்பட்டனரா எனின், இல்லையென்று சொல்லுமளவுக்கு நிலைமை இருந்தது. புலிகள் மீதான கைதுகள் முதல் அனைத்தும் சமாதான ஒப்பந்த விதிக்கு புறம்பாக ஆயுதங்களுடன் நடமாடிய போதே நிகழ்ந்தது. தாமே செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு புறம்பாக, கடல் மூலம் கப்பல்களில் ஆயுதம் கடத்திய போதே நிகழ்ந்தது. நிலைமை பொதுவாக இப்படித்தான் இருந்தன. இராணுவம் செய்த அனைத்தும் மக்களுக்கு பகிரங்கமாக தெரியக் கூடியதாக இருந்தது. புலிகள் செய்த அனைத்தும் இனம் தெரியாத நபர்களின் செயலாக கூறப்பட்டது. அவை அனைத்தும் புலிகளே செய்தமையால் தான், அவை அனைத்தும் இனம் தெரியாத நடவடிக்கையாகின. பின்னால் புலிகள் மீதான தாக்குதலை கருணா தரப்பு தொடங்கிய போது, புலிகள் அதை இனம் தெரியாத நடவடிக்கையாக கூறவில்லை. மாறாக ஒட்டுபடையின் நடவடிக்கையாக அதைக் கூறத் தொடங்கியது. உண்மையில் இனம் தெரியாதவை அனேகமாக அனைத்தும் புலிகள் செய்தவையே. மற்றவை புலியில் இருந்து பிரிந்த அதே அமைப்பைச் சேர்ந்த கருணா தரப்பு செய்தது. மிகப் பிந்தியவை (பெரும்பாலும் 2005 நவம்பர் டிசம்பரில் செய்தவை) இராணுவ தரப்பும், புலிகளும் போட்டிபோட்டு செய்கின்றன. பெரும்பாலானவை கொலைகள் பற்றிய அபிப்பிராயம் மற்றும் எதிர்வினை யார் செய்தது என்பதை தெளிவாக்குகின்றது. ஏன் கொலைக்கு எதிர்வினையாற்றிய வடிவம் கூட அதை பிரதிபலிக்கின்றது. இன்று தாம் செய்ததை எதிரி செய்ததாக காட்டுவது கூட நிகழ்கின்றது. பொதுவாக யுத்த நிறுத்த மீறல் என்று புகாரிட்ட போதும் கூட, யார் கொலையாளி என்பது உறுதி செய்தது. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூறும் புலிகள், தொடர்ச்சியான தம் தரப்பல்லாத கொலைகளை யுத்தநிறுத்த மீறலாகவோ, அதை கண்டிக்கவோ முன்வரவில்லை. கொலையை ஆதாரித்தே நின்றனர் என்றால், உண்மையில் அதை அவர்களே செய்தனர். இதுவே இன்று மக்கள் படை என்ற பெயரிலும், ஊர்பெயர் தெரியாத அனாதைப் படைகளின் பெயரிலும் புலிகள் தான் செயல்படுகின்றனர்.


அமைதி சமாதானம் என்ற ஒன்றைத் தாமே தெரிந்தெடுத்து கையெழுத்திட்டுவிட்டு, தொடர்ச்சியாக கொலைகளை செய்து வந்தனர். கடத்திச் சென்றனர். சித்திரவதைகளைச் செய்தனர். அச்சுறுத்தல்கள் பலவற்றை செய்தனர். இவை யுத்தநிறுத்த மீறலாக இருந்த போதும் கூட, புலிகள் அதைச் செய்தனர். இந்த யுத்த நிறுத்தத்தை பதிவு செய்வதை தொழிலாக கொண்ட கண்காணிப்புக் குழுவிடம், இதைக் கூட பதிவு செய்ய முடியாத வகையில் பதிவிடங்களில் புலிகள் தமது சொந்த ஆட்களையே நிறுத்தியிருந்தனர். பின்னால் இதையும் கண்காணிப்பு குழு புரிந்து கொண்ட நிலையில், சில ஆயிரம் சம்பவங்கள் யுத்தநிறுத்த மீறலாக பதிவாகின. இவை பெருமளவில் (சில ஆயிரம்) புலிகளால் மீறப்பட்டவை. இதையும் தமிழ் மக்கள் தான் துணிச்சலுடன் முறையிட்டனர். ஆனால் எவையும் முழுமையாக (பல பத்தாயிரம்) பதிவாகவில்லை. பல நூறு கொலைகளில் குற்றவாளிகள் புலிகள் என்ற பதிவாகவில்லை. இப்படி மனிதவிரோத குற்றங்கள் அரங்கேறின. அமைதி சமாதானம் என்ற பெயரில், மக்களின் இயல்பு வாழ்வை நாசமாக்கிய யுத்த நிறுத்த மீறல்களை புலிகளே பெருமளவில் செய்தனர். நடந்த யுத்தநிறுத்த மீறல்களில் இனம்காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவைகளில், 90 சதவிகிதத்துக்கு மேலானவை புலிகளால் மீறப்பட்டவையே. மக்களின் இயல்புவாழ்வை இதுவே நாசமாக்கியது. இதைக் கண்காணிப்பு குழு அறிக்கைகள் உறுதி செய்கின்றன. இந்த அறிக்கையை தமிழ் மீடியாக்கள் வெளியிடுவதில்லை. உறுதிப்படுத்தப்படாத யுத்த நிறுத்த மீறல்களில் 99 சதவீதமானவை புலிகளால் செய்யப்பட்டவை. இதில் 300 மேற்பட்ட கொலைகளும் அடங்கும். கடத்தல் சித்திரவதைகள் என்று நீளமான பட்டியல் உண்டு. இதைவிட பயத்தின் காரணமாக புகார் இடப்படாத யுத்த நிறுத்த மீறல்களில், 100 சதவீதம் புலிகளால் செய்யப்பட்டது. இது பல பத்தாயிரத்தைத் தாண்டும்.

 

புலிகளில் ஏற்பட்ட கருணா பிளவு, நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. புலிகள் மேலான தாக்குதல் என்ற புதிய நிலை உருவாகியது. இதையே புலிகள் அரசு செய்ததாக, முதன்முதலாக குற்றம் சாட்டியது. இப்படி புலிக்குள் ஏற்பட்ட பிளவு நிலைமையை மாற்றியமைத்தது. மட்டக்களப்பு கருணா அணி மீது, புலிகள் இராணுவத் தாக்குதலை நடத்தியிருக்காவிட்டால், புலி மீதான வன்முறையும் நடந்து இருக்காது. இதில் வேடிக்கை என்னவென்றால் கருணா அணி மீது புலிகள் தாக்குதலை நடத்த, சிறிலங்கா இராணுவத்தின் உதவியை புலிகள் பெற்றுக் கொண்டது என்பதும் உண்மை. ஆனால் கருணா அணியின் மீதான அழித்தொழிக்கும் இராணுவ ரீதியான நடவடிக்கையில், சிறிலங்கா இராணுவத்தின் ஒத்துழைப்பு இருந்தபோதும் கூட புலிகள் அதில் வெற்றி பெறமுடியவில்லை. இது எதிர்தாக்குதலை புலிக்கு மேலானதாக உருவாக்கியது. புலிகளின் வலிந்த தாக்குதல் தான், தம் மீதான எதிர் தாக்குதலாக மாறியது. புலிகள் ஒரு தலைப்பட்டசமாக கொன்று வந்ததன் விளைவு, எதிர் தாக்குதலாக மாறியது. புலியில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள், கருணா குழுவால் தான் கொல்லப்பட்டனர். அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்தேறியது. கருணா அணிக்கு என்று சுயாதீனமான செயல்பாட்டு வடிவம் காணப்படுகின்றது. கருணா தரப்பை இராணுவம் கைது செய்த சம்பவங்கள், சுட்டுக் கொன்ற சம்பவங்கள் கூட நடந்துள்ளன. ஏன் இன்று புலிகளால் தேடி அழிக்கப்படும் கருணா தரப்பைச் சேர்ந்தோர் பலர், சாதாரணமாக வீடுகளில் சொந்த உழைப்பில் இருக்கும் போது நிகழ்ந்து வருவது இதற்கொரு சான்றாகும்.


மறுபக்கம் இராணுவம் மீது புலிகள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்த நிலையில், அரசியல் ரீதியாக புலிகள் அடிசறுக்கிய படி இருந்தனர். புலிகள் இராணுவ நோக்கில் அனைத்தையும் எதிர்கொண்ட நிலையில், அரசியல் ரீதியாக பேரினவாதம் புலிகளை மண்கவ்வ வைத்தது. புலிகளின் ஒவ்வொரு யுத்தநிறுத்த மீறலையும், பேரினவாதம் தனது வெற்றியாக கருதியது. அதை நடைமுறையில் வென்று காட்டியது. புலிகள் குறுகிய சுயநலத் தீர்வுகளை மையப்படுத்தி, முட்டையில் மயிர் புடுங்கிக் கொண்டிருந்த போது, எதிரி அரசியல் ரீதியாக பலமடைந்த வண்ணம் இருந்தான். உண்மையில் தமிழ் மக்களையும், சிறுபான்மை இனங்களையும் குறிப்பாக முஸ்லீம் மக்களையும் அரசியல் ரீதியாக பேரினவாதம் வெற்றி கொண்டுள்ளது. ஆட்சியேறிய தீவிர பேரினவாதம் முஸ்லீம் மற்றும் மலையக மக்களையும் கூட வெற்றி கொள்ளத் தொடங்கியுள்ளது. இதனால் தான் மக்களை திண்டு ஏப்பமிட்டு வந்த மலையகத் தலைமைகள், புலியின் வால்களை நக்கத் தொடங்கியுள்ளனர். முஸ்லீம் தலைமைகள் செய்வதறியாது அரசியல் அனாதையாகின்றனர்.


பேரினவாதம் அரசியல் சூழச்சியால் முன்பைவிட பலமடைகின்றது. புலிகளின் குறுகிய இராணுவ பொருளாதார நலன்களுக்கு இடையில் பேரம் பேசுவதன் மூலம், தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையை பேரினவாதம் தட்டிக்கழிக்கின்றது. உண்மையில் மொத்த நிலைமையிலும் மக்கள் சார்பான நிலையை எடுப்பதன் மூலம் மட்டுமே, நிலமையை மாற்றி அமைக்கமுடியும். ஆனால் இந்த நிலையில் புலிகள், அனைத்தையும் தமது இராணுவ சப்பாத்துகளால் மிதிக்கின்றனர். குறுகிய இராணுவ குதர்க்க வாதத்தில் சமூகத்தையே சிதைத்து, அதில் தீர்வைக் காணமுடியும் என்பது பகற்கனவாகிக் கொண்டிருக்கின்றது. நேர்மையாக யுத்தத்தைக் கூட தொடங்க முடியாது வக்கற்றுப் போன அரசியல் சூனியத்தில் நின்று, கொக்கரிக்க முனைகின்றனர். அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலம், யுத்தத்தை இராணுவம் தொடங்கும் என்று பகற்கனவே காண்கின்றனர்.


உண்மையில் பேரினவாத அரசு இதையும் அரசியல் ரீதியாக எதிர்கொண்டு புலியை வெற்றி கொள்கின்றது. கண்காணிப்பு குழு கூறிய படி "இவர்கள் கிரிமினல்கள், இவர்களை பொலீசார் கைதுசெய்ய வேண்டும்" என்ற அடிப்படையில் இது தனிமைப்படுத்தப்படுகின்றது. கண்காணிப்புக் குழு நடக்கும் கண்ணிவெடித் தாக்குதலை "ஒரு கோழைத்தனமான செயல்" என்றும், பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை 'ஒரு சாத்வீகமான 'போராட்டம்' என கருதப்படமுடியாது எனவும், இதன்போது அரச படைகள் மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டது" என்று குற்றம் சாட்டினர். இந்த காடையர்கள் தமக்கு குண்டெறிந்த நிலையைக் கூட கண்காணிப்புக் குழு சுட்டிக் காட்டியது. இவை எல்லாம் மக்களுக்கு எதிராக மாறிவிடுகின்றது. தமிழ் தேசியம் சிதைக்கபட்டுவிடுவதற்கு இட்டுச் செல்லுகின்றது. இதன் விளைவு என்ன? இது வெறும் கும்பல் நடவடிக்கை தான் என்பதை ஏகாதிபத்தியம் புரிந்துள்ளதுடன், இதை ஒடுக்க கோருகின்றது. இந்த நடவடிக்கைகள் மக்கள் விரோத நடவடிக்கைகள் என்பதால், இலகுவாக ஒடுக்க ஏகாதிபத்தியம் உத்தரவிடுகின்றது. இதன் மூலம் புலிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இவை இனம் காணப்பட்ட சில உதிரி நடவடிக்கை என்பதால், இலகுவாக பேரினவாதம் கட்டுப்படுத்திவிடுவார்கள். கைது, துப்பாக்கிச் சூடுகள் மற்றும் காணாமல் போதல் மூலம் இதை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார்கள். இங்கு காணாமல் போதல் என்பது அனேகமாக வெளித்தெரிவதில்லை. சமூகத்துடன் நேரடியாக உறவின்மையால், அவர்கள் எப்போது எங்கு காணாமல் போனார்கள் என்பதே மர்மமாகிவிடுகின்றது. புலிகள் காணாமல் போன தனது உறுப்பினரை தேடி உறவினரை அனுப்பும் வரை இது நிகழ்கின்றது. அண்மையில் யாழ் கோட்டை அருகில் கொல்லப்பட்ட 5 புலி உறுப்பினர்களின் பிணம் கூட அனாதையாகவே கிடந்த நிலையில், மக்கள் அதை தகனம் செய்யவில்லை. இந்த உதிரிக்குழுக்கள் தான், அதை பொறுப்பேற்க வேண்டி ஏற்பட்டது. நிலைமை தெளிவாக புலிக்கு எதிராக மாறி வருகின்றது.
இந்த நிலையில் புலிகளின் விருப்புக்கு மாறாகவே, இராணுவ நடவடிக்கையின் மூலம் கட்டுப்படுத்திவிடுவார்கள். இதன் மூலம் புலிகளை மீண்டும் புதிய அரசியல் நெருக்கடிக்கு பேரினவாதம் இட்டுச் செல்லும். சண்டையை தொடங்க முடியாத நிலை மீண்டும் உருவாகும். உண்மையில் மக்களிடம் அன்னியமான உதிரியான மக்கள் படை இப்படிச் சிதைந்து போவார்கள். உதிரியான குண்டுகளை வெடிக்கவைக்கவே முடியும். கைது, காணாமல் போதல், துப்பாக்கிச் சூடுகள் இதையே உறுதி செய்கின்றன.


பேரினவாதம் அரசியல் ரீதியாகவே இதை அணுகி வெல்லுகின்றது. புலிகள் மீண்டும் புதைகுழியில் வீழ்கின்றனர். இந்த இடத்தில் மக்கள் பொங்கியெழுவதை தம்மால் கட்டுப்படுத்த முடியாது என்று தமிழ்ச்செல்வன் கருத்துரைப்பது நிகழ்கின்றது. மக்களின் துன்பம் பற்றி மீண்டும் மூக்கால் சிணுங்கி அழுகின்றனர். இயல்பு வாழ்வு சிதைந்து போனதாக மீண்டும் புலம்புகின்றனர். இயல்பு வாழ்வை சிதைத்தவர்கள் (இயல்பு வாழ்வை சிதைத்த யுத்த நிறுத்த மீறல் எண்ணிக்கை ஒரு உதாரணம்), அதை மேலும் ஆழமாக சிதைக்க எடுத்த முன்முயற்சி இப்படித்தான் ஆகும். யுத்த சூழலையும் உருவாக்கி கெடுபிடியை எதார்த்தமாக்கி பின், இதை இயல்பு வாழ்வுக்கு பாதகமானதாக காட்டுவதே நிகழ்கின்றது. உண்மையில் அரசியல் செய்ய என்று வந்தவர்கள், அராஜகத்தை உருவாக்கியபின் பின்வாங்கினர். பின் சில உதிரிகளைக் கொண்டு காடைத்தனத்தை கட்டவிழ்த்துவிட்டனர். முடிவாக அந்த காடைத்தனம் ஒழிக்கப்படும் போது, மீண்டும் நிகழப் போவது அரசியல் சூனியம் தான்.


இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் அரசியல் செய்ய சென்றவர்கள் என்ன அரசியலை செய்தார்கள். யாருக்காவது தெரியுமா! அராஜகமான சூழலை உருவாக்கி நிர்ப்பந்தம் கொடுத்து பணம் வசூலித்தவர்கள், மக்களை கண்காணித்ததும், தண்டித்ததுக்கும் அப்பால் எதையும் அரசியல் ரீதியாக செய்யவில்லை. இதன் போது ஒரு சில உதிரிகளை தமது அராஜக செயலுக்கு இணைத்துக் கொண்டதற்கு அப்பால், மக்களை எதிர்நிலைக்கு இட்டுச் சென்றனர். பத்து வருடமாக இராணுவத்துக்குள் வாழ்ந்த மக்களின் மனநிலையை விட, புலிகளின் மூன்று அல்லது நான்கு வருட கால 'புலி அரசியல்' நடவடிக்கையில் வாழ்ந்த மக்களின் மனநிலை சார்ந்த அனுபவம் மிகவும் துயரமானது. இது எதிரி சார்பாக மாற்றப்பட்டுவிட்டது. புலிகள் இதைத்தான் அரசியல் என்கின்றனர். மக்களை துன்புறுத்துவது தான் அரசியல் என்கின்றனர். இராணுவத்தை வலிந்து சீண்டுவதன் மூலம், மக்கள் மேல் பேரினவாத இராணுவத்தை பாய்ந்து குதறவைப்பதன் மூலம், மக்களை மீண்டும் தம்பக்கம் வென்றெடுக்கும் உத்தி வெற்றிபெற முடியாத முட்டுச் சந்திக்கு வந்துவிட்டது.


கடந்த இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களின் ஆதரவுடன் பேசி இணக்கம் காணப்பட்ட சகல ஒப்பந்தங்களையும் கிழித்தெறிந்தது பேரினவாதம் தான். அதே போல் புலிகளுடன் கடந்த வரலாற்றில் நடத்த பேச்சுவார்த்தை அனைத்தையும் முதலில் முறித்தவர்கள் புலிகள் தான். இம்முறையும் அதை நோக்கியே முன்னேறுகின்றனர். எதிரியை எதிர்கொள்ள முடியாத தமது சிறுபிள்ளைத்தனமாக குறுகிய அரசியலால் தான் இந்த நிலை ஏற்படுகின்றது. எதிரி பேரினவாதியாக இருக்கும் வரை, அவனை பேச்சுவாhத்தையில் அரசியல் ரீதியாக வெற்றி கொள்வது இலகுவானது. ஆனால் பேரினவாதி ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒவ்வொரு விடையத்திலும் வெற்றி கொள்கின்றான். தமிழ் மக்களின் பாதுகாவலனாக கூறி வேஷம் போட முடிகின்றது. போராட்டம் மக்கள் விரோதத் தன்மை பெற்று அதுவே கூர்மையாகும் போது, எதிரி அதில் குளிர்காய்கின்றான்.


இந்த நிலையில் புலிகள் தாமே வலிந்து உருவாக்கிய நெருக்கடியில் இருந்து மீள, யுத்தத்தை வலிந்து திணிக்கின்றனர். இந்த வகையில் புலிகள் மிகப் பெரிய இராணுவத் தாக்குதலை நடத்திய போது கூட, இராணுவம் வரையறுத்த எதிர் வன்முறைக்கு அப்பால் நகரவில்லை. ஏன் புலிகள் கூறுவது போல், இராணுவ கட்டுப்பாட்டு பிரதேச சட்ட ஒழுங்கை, இராணுவம் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட முனைகின்றது. இராணுவத்தை கொல்லும் போது, படுகொலைகளை நடத்தும் போது சட்ட எல்லைக்குள் இராணுவம் சுட்டுக் கொல்லும் உரிமையை இயல்பாக புலிகள் அங்கீகரித்துவிடுகின்றனர். கொலைகளுடன் தம்மை தொடர்பு படுத்துவதை மறுக்கும் புலிகள், அதை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தின் சட்ட ஒழுங்கு பிரச்சினையாக கூறுவது இதைத் தான். ஆயுத வன்முறையின் போது, மக்கள் ஓடி விடுகின்றனர். இராணுவம் சுலபமாகவே இன்று வேட்டையாடுகின்றனர்.
இராணுவம் ஆயுதம் ஏந்தியவர்களை (புலிகளை) மட்டுமல்ல, அப்பாவி மக்களையும் ஆயுதம் ஏந்தியவராக (புலிகளாக) காட்டி கொல்வது நிகழ்கின்றது. புலிகள் பாணியில் இராணுவமும் அரசியல் செய்கின்றது. புலிகள் பாணியில், புலிக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தாக்குதலை தொடங்கியுள்ளது. இனம் தெரியாத கொலைகள் இரண்டு பகுதியாலும் செய்வது இன்று அன்றாட நிகழ்வாகிவிட்டது. கொல்லப்படுவது சரியான அரசியலால் வழிநடத்தப்படாத அப்பாவி தமிழ் மக்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. பல அரசியல் குழுக்கள் மீதான புலிகளின் வலிந்த படுகொலைகள், படிப்படியாக எதிர் தாக்குதலாக மாறிவருகின்றது. தமிழ்பேசும் மக்களிடையே இருந்து குறுகிச் செல்லும் புலி அரசியல், தனக்கு எதிராக பல தளத்தில், பல களத்தில் எதிரியை உருவாக்கி வருகின்றது.


இன்று இராணுவம் தனது கட்டுப்பாட்டு பிரதேசத்தில், கொலையாளியை இனம் கண்டு குறிவைத்து தாக்கியழிப்பதில் வெற்றி பெற்று வருகின்றான். இராணுவம் தனது உத்தியை மாற்றிய போது, வேடிக்கை பார்ப்போர் யாரும் கூடுவதில்லை. இதனால் யார் அந்த மக்கள் படை என்பது தெளிவாக அம்பலமாகிவிடுகின்றது. அதனால் களத்தில் அல்லது படுகொலைகள் மூலம் மரணிக்கின்றனர். உண்மையில் அரசியல் ரீதியாக நியாயப்படுத்த முடியாத அனாதைகளாகவே அவர்கள் மரணிக்கின்றனர்.
மறுபக்கம் மக்கள் அனாதைகளாக்கப்பட்டு மிருகத்தனமாக அவர்களின் மவுனத்தின் மேல் புணரப்படுகின்றனர். பேரினவாத இராணுவமும், புலிகளும் இதை செய்வதில், தமக்கு இடையில் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டிவிடுகின்றனர். மக்களின் எதிர்காலம், தேசியத்தின் எதிர்காலம் அனைத்தும் புணரப்பட்டு சிதைக்கப்படுகின்றது.


06.01.2006