இனங்களுக்கு இடையிலான மோதல் சமூக அவலத்தில் இருந்து திட்டமிடப்பட்டது. அதைப் பூசி மொழுக குறுந்தேசிய உணர்வு இனம் கடந்து உருவாக்கியதன் மூலம் இனயுத்தம் வித்திடப்பட்டது. அன்று இந்தச் சமூக அவலத்தின் அடிப்படை என்ன? 1971-இல் வேலை செய்யக் கூடியவர்களில் வேலை இன்மை 19 சதவீதமாக இருந்தது. இது 1974-இல் 24 சதவீதமாக உயர்ந்தது. இதில் இருந்து மீள யுத்தம், யுத்தப் பொருளாதார, பாசிசச் சட்டங்கள் ஒன்று இணைந்து அவை ஜனநாயமாகி இந்த அமைப்பின் நீடிப்புக்கு கைகொடுத்தது. இந்த யுத்தப் பொருளாதாரம் ஊடாக ஏகாதிபத்திய ஊடுருவல் என்றும் இல்லாத அளவுக்கு இலங்கையில் கால் உன்றியதுடன் அது மேலும் ஆழமாகவே வேகம் பெறுகின்றது. தேசிய அடிப்படைகள், தேசிய பொருளாதாரங்கள் அனைத்தும் ஈவிரக்கமின்றி கற்பழிக்கப்படுகின்றது.


இந்தக் கற்பழிப்பு புதிய சமூகப் பண்பாட்டை அராஜக வழிகளில் கவர்ச்சி காட்டி திணிக்கின்றது. கற்பழிப்பை ஏற்க மறுப்பது, அதை எதிர்த்து நிற்பது ஜனநாயக விரோமானதாக விளக்கம் பெற்று உள்ளது. ஒட்டுமொத்த சமூகத்துக்கு எதிராக நடக்கும் இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியாத ஒரு சமூக நெருக்கடி உருவாகிவிட்டது. உயர்வாழ்க்கைத் தரம் கொண்ட ஒரு திடீர் பணக்காரக் கும்பலும், அடிபாதாளத்தில் எதற்கும் வழியற்ற பரந்துபட்ட மக்கள் என்ற ஒரு கட்டமைப்பு ஆழமான ஏற்றத் தாழ்வான சமூகப் பிளவை உருவாக்கிவிட்டது. இது ஒரு சமூக அரசியல் வழியால் தீர்க்கப்பட முடியாத சூழல் உள்ள நிலையில், அராஜகமும், தற்கொலையும் பல்வேறு சமூக வக்கிரங்களும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் இயல்பான அன்றாட நடத்தையாகி விட்டது.


வறுமை தேசிய கொள்கையாகின்றது. நாட்டில் அடிப்படை உணவான நெல் உற்பத்தி பெருகிய போதும், மக்கள் அதை நுகரமுடியவில்லை. 2002 இல் பெரும் போக நெல் உற்பத்தி 17 லட்சம் மெற்றிக் தொனனாக (மெட்ரிக் டன்) இருந்தது. இது 2003 இல் 19.3 லட்சம் மெற்றிக் தொன்னாக மாறியது. அமைதிக்குப் பின்பான நெற் செய்கை நிலம் 20 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. 6.6 லட்சம் வயல்கள் புதிதாக உற்பத்தி செய்தன. ஆனால் வறுமை அதிகரித்துச் செல்லுகின்றது. எங்கும் மக்களின் வாழ்வியல் சுமை, உற்பத்தி அதிகரிப்பால் தீர்க்க முடியாததாகியுள்ளது. அவை அன்னியனுக்கு மிகக் குறைந்த விலையில் ஏற்றுமதியாகின்றது.


இதை மூடிமறைக்க, அந்த உணவில் ஒரு பகுதியை உதவி என்ற பெயரில் சர்வதேச நிறுவனங்கள் திட்டமிட்ட அரசியல் நோக்குடன் களமிறக்குகின்றன. ஐ.நாவுக்கான சர்வதேச உணவு நிறுவனம் தனது அறிக்கை ஒன்றில், வடக்கு கிழக்கில் 20 சதவீதமான குழந்தைகள் பாடசாலையில் பசியுடன் கல்வி கற்க முடியாத நிலையில் உள்ளனர் என அறிவித்துள்ளது. இதனடிப்படையில் யுத்தப் பிரதேசத்தில் 33,000 குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகின்றது. மேலும் அவ் அறிக்கையில் 100000 குழந்தைகள் வறுமை காரணமாகக் கல்வியைக் கைவிட்டுள்ளதை அறிவிக்கின்றது. வறுமை நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகின்றது. வடக்கு கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் உலக உணவுத் திட்டத்தின் கீழ், நடைமுறையில் உள்ள உணவு கொடுத்தல் செயல்திட்டம் விரிவாக்கப்பட்டு வருகின்றது. 2004-ஆம் ஆண்டு இரண்டாம் தவணையாக 1,07,363 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் புதிய திட்டம் அமுலுக்கு வரவுள்ளது. மலையகத்தை எடுத்தால் 18 வயதுக்கு குறைந்த 3.4 லட்சம் குழந்தைகளில் 15 ஆயிரம் பேர் அங்கவீனர். 64 ஆயிரம் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்கள். 80 ஆயிரம் பேர் 5 வயதுக்குக் குறைந்தவர்களாக உள்ள அந்தச் சமூகத்தின் எதிர்காலம் என்பது சூனியமாகவே உள்ளது. சமூகத்தின் பல படித்தான வடிவங்களில் வெட்டு முகத் தோற்றங்கள் இவை. அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கையில் 80 சதவீதமான பெண்கள் மிக மோசமான கூலியைப் பெறுவதை கண்டறிந்து அதை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ஆணாதிக்க அமைப்பை ஏகாதிபத்திய நலனுக்கு இசைவாகப் பயன்படுத்துவதையும், வறுமையை இதனூடாக நிறுவனமயப்படுத்துவதையும் இது காட்டுகின்றது. இன்று இலங்கையில் 45 சதவீதமான உழைப்பாளிகளின் நாள் வருமானம் 200 ரூபாவுக்கு குறைவாக உள்ளது. இந்த உழைப்பாளியின் வருமானத்தைக் கொண்டு ஒரு குடும்பத்தையே வாழக் கோரும் நிலையில், இதன் சமூக வெடிப்பு அகலமானது. ஓய்வூதியமோ மாதம் 4500 ரூபாவாக உள்ளது. எங்கும் வறுமை விரிவாகியுள்ளது. வடக்கு கிழக்கில் 80 ஆயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக அரசு அறிக்கையே உறுதி செய்கின்றது. கொழும்பையும் கொழும்பைச் சுற்றி வாழும் மக்களில், 40 சதவீதமானவர்கள் சேரிகளில் வாழ்வதுடன் பரம ஏழைகளாக இருப்பதை அரசு புள்ளிவிபரங்களே உறுதி செய்கின்றது. திருகோணமலையில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். இந்த திருகோணமலையில் வறுமையில் வாழப் போராடும் மீனவர்களிடம், மாதம் புலிகள் 1000 ரூபா வரியை அறவிடுகின்றனர். இதுதான், மக்கள் பற்றி அக்கறை கொண்ட தமிழ்த் தேசியம். இலங்கை முழுக்க வாழ்க்கையின் அவலம் நிரந்தரமான விதியாகிவிட்டது. ஒருபுறம் இந்தச் சமூக அவலம் அடிபாதாளத்தில் சிக்கிவிட, மறுதளத்தில் நுகர்வு வெறி உச்சத்தில் தலைவிரித்தாடுகின்றது.


வக்கிரமான சமூக நுகர்வை பூர்த்தி செய்ய, ஏழைகளின் உணவை ஏற்றுமதி செய்வது அவசியமாகின்றது. அதாவது வறுமையும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கையும் பெருகிவரும் நிலையில், 2003 இல் இலங்கை ஒரு லட்சம் தொன் அரிசியை ஏற்றுமதி செய்தது. கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களின் அடிப்படையாக கிடைத்த இறுதி உணவாக எஞ்சியிருந்த 26,000 மெற்றிக் தொன் பழங்கள், மரக்கரிகளையும் கூட ஏற்றுமதி செய்தனர். இதன் மூலம் கிடைத்த 318 கோடி ரூபாவை பணக்காரர்களின் அற்ப நுகர்வுக்கும், வட்டி கொடுக்கவும் பயன்படுத்தினர்.


இதை விரிவாகப் பார்த்தால் 2003 ஆண்டு இலங்கை ஏற்றுமதி 10 சதவீதத்தால் அதிகரித்தது. இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்கும் ஒரு அங்கமாக இலங்கை இந்தியாவிற்கு இடையில் நடக்கும் பேரங்கள, பொருளாதாரத் தளத்தில் பாரிய விளைவுகளை உருவாக்கின்றது. இலங்கை இந்திய சுதந்திரவர்த்தக ஒப்பந்தத்தின் பின் இலங்கையின் ஏற்றுமதி 142 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 2800 பொருட்களுக்கு வரிச் சலுகையை வழங்குகின்றது. 2002 இல் 16 கோடி டொலர் (அண்ணளவாக 1600 கோடி ரூபா) ஏற்றுமதியை இலங்கை செய்தது. சீனாவுக்கும் ஹாங்காங்கிற்குமான இலங்கை ஏற்றுமதி 2002 இல் 2001 உடன் ஒப்பிடும் போது 27.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதாவது 130 கோடி ரூபா அதிகரித்துள்ளது. இலங்கை இறக்குமதி 2002-இல் 730 கோடி ரூபாவாக இருந்தது.


இலங்கை வைர மற்றும் தங்க ஏற்றுமதி 2002-இல் 202 கோடி டொலராக (அண்ணளவாக 20200 கோடி ரூபாவாகும்.) இருந்தது. 2002-இல் இலங்கையின் மொத்த தொழில்துறை ஏற்றுமதித் தொகை 242 கோடி டொலராகும் (அண்ணளவாக 24200 கோடி ரூபாவாகும்.) இது வெளிநாட்டு ஏற்றுமதி வரவில் 53 சதவீதமாகும். இதில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கான ஏற்றுமதி மட்டும் 195.2 கோடி டொலராக (அண்ணளவாக 19520 கோடி ரூபா) இருந்தது. இதில் கடைசி ஆறு மாதத்தில் 109.5 கோடி டொலராக (அண்ணளவாக 10950 கோடி ரூபா) இருந்தது. 2003 முதல் மூன்று மாதத்தில் தொழில்துறை ஏற்றுமதி 141 கோடி டொலராக (அண்ணளவாக 14100 கோடி ரூபா) அதிகரித்துள்ளது.


ஏற்றுமதி என்பது தேசிய இலட்சியமாகிவிட்டது. அனைத்தையும் ஏற்றுமதி செய்வது என்ற கொள்கை தேசியப் பொருளாதாரக் கொள்கையாகிவிட்டது. மக்களின் சமூகத் தேவையை மறுப்பது அரசியலாகிவிட்டது. ஏற்றுமதியின் அடிப்படையான நோக்கம் என்ன? ஏகாதிபத்திய பொருளாதார நலனுக்கு நேரடியாக சேவை செய்வதே. ஏற்றுமதி பொருளாதாரத்தால் தேசத்தில் வாழும் மக்களுக்கு எந்த நலனும் கிடைப்பதில்லை. ஏற்றுமதி மூலம் கிடைக்கும் செல்வம் கடனின் ஒரு பகுதியை மீளக் கொடுக்கவும், வட்டியைக் கட்டவும் பயன்படுகின்றது. அதாவது அது இன்னுமொரு விதத்தில், அப்பணமே புதிய கடனாக மீள வழங்கப்படுகின்றது. இதற்கு வெளியில் ஏற்றுமதி பொருளாதாரம் ஏகாதிபத்தியம் உற்பத்தி செய்யும் கவர்ச்சிகரமான ஆடம்பர இன்ப நுகர்ச்சிப் பொருட்களை அதிக விலையில் இறக்குமதி செய்யப் பயன்படுகின்றது. இதில் முக்கியமான மற்றொரு உண்மை ஒன்று உண்டு. அதாவது கடனாக வருபவை கூட ஏகாதிபத்திய உற்பத்தித் துறைக்கும் அதன் நலனுக்கும் இசைவாக முதலிடக் கோரும் நிபந்தனையின் அடிப்படையில் தரப்படுகின்றது. கடன்கள் ஏகாதிபத்திய தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தித் துறைக்குள் திருப்பி விடப்படுகின்றது. இவற்றை எல்லாம் மூடிமறைக்க மக்கள் நலத் திட்டங்களை அரசும், தன்னார்வக் குழுக்கள் ஊடாகவும் செய்கின்றனர். அதாவது அதையும் ஏகாதிபத்தியம் தனக்குச் சார்பான சிந்தனையை உருவாக்கும் தளத்தில் மட்டுமே செலவு செய்ய நிர்ப்பந்திக்கின்றது. ஏற்றுமதிப் பொருளாதாரம் கடனைத் தலைகால் தெரியாத எல்லைக்குள் பெருக்கிச் செல்லுகின்றது.


மொத்த தேசிய வருவாயை விட கடன் 2001 இல் 103 சதவீதமாகியுள்ளது. இன்று அதிகரித்து செல்லும் கடனைத் தேசிய வருவாயில் 100 சதவீதமாக உள்ளதாக பொய்யான புள்ளி விபரம் ஒன்றின் மூலம் அரசு அண்மையில் மக்களின் காதுக்குப் ப+ வைக்க முனைந்தது. 2002 இல் இலங்கைப் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் 77 ஆயிரம் ரூபா கடனே இருந்தது. இது 2003 இல் 99 ஆயிரம் ரூபாவாகியுள்ளது. கடனின் தொகை பெருகிச் செல்லுகின்றது. நாட்டை விற்றாலும் கடனைக் கட்டமுடியாது. "சுதந்திர" கொத்தடிமைகளாகவே வாழ முடியும்.