இலங்கையை ஆளும் ஆட்சிகள், பெருந் தேசிய சிங்கள இனவாதத்தால் நிறுவனப்படுத்தப் பட்டுள்ளது. இந்த இனவாத அமைப்பில் எந்தக் கட்சி பாராளுமன்ற ஜனநாயக சூதாட்டத்தில் தெரிவானாலும், அதன் அடிப்படை கட்டமைப்பு இதற்குள் தான் நிறுவப்பட்டுள்ளது என்பதை, தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருட அமைதி மீண்டும் மீண்டும் நிறுவுகின்றது. இந்த இனவாத அமைப்பு தமிழ் மக்களின் தேசியத்தை மட்டுமல்ல, சிங்கள மக்களின் தேசியத்தைக் கூட அழித்தொழிப்பதில், இனவாதக் கட்டமைப்பை சிறப்பாக நிலைநிறுத்துகின்றது. இந்த இனவாத அமைப்பு உலகமயமாதலை நீடித்து பாதுகாக்கும் வகையில், இலங்கையில் ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை செய்கின்றது.


நாட்டையும், மக்களின் அன்றாட உணவையும் கொள்ளையிட முயலும் ஏகாதிபத்தியங்கள் பாரிய முதலீடுகளை செய்கின்றன. ஜப்பான் விவசாயம் மற்றும் கடற்தொழில் சார்ந்து, வடக்கு-கிழக்கில் பத்துத் தொழிற் சாலைகளை அமைக்கவுள்ளதாக 2004 மார்ச் மாதம் அறிவித்துள்ளது. இவை விவசாயத்துறையில் பழங்ளைப் பதனிட்டு பொதி செய்தும், கடல் வளம் சார்ந்து மீன், இறால், நண்டு போன்றவற்றை பதனிட்டுப் பொதிசெய்தும் ஏற்றுமதி செய்யவே இத் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஏற்றுமதிகளை விரைவாக மேற்கொள்ள வசதியாக காங்கேசன்துறைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவும் ஜப்பான் முடிவு செய்துள்ளது. மக்கள் உண்டு பிழைக்கும் உணவைச் சூறையாடவும், அந்த வளத்தை உறுஞ்சவும் பின் நிற்காத ஏகாதிபத்தியங்கள், அதை மூடிமறைக்க சில உதவித் திட்டங்களைப் போர்வையாகப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட அதே காலத்தில், ஜப்பான் 38 லட்சம் ரூபாவை 2500 ரூபா வருமானத்துக்கு குறைந்தவர்களுக்கு என கொடுத்துள்ளது. அதே நேரம் கொழும்பில் உள்ள ஏழைகளுக்கு என 50 லட்சம் ரூபாவை வழங்கியது. பொருளாதார முன்னேற்றத்துக்கு என 135 கோடி ரூபாவை கடனாக வழங்கியுள்ளது.


நாட்டின் எல்லைக்குள் ஊடுருவிச் செல்வதும், மறுகாலனியாதிக்கத்தை நிறுவவும் என்றுமில்லாத அளவில் ஏகாதிபத்திய நடவடிக்கைள் அன்றாடம் தொடருகின்றன. ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், யாழ். மாவட்ட அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பாவனைக்கென 67,50,000 ரூபா பெறுமதியுடைய பால் பதனிடும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. தாய்வான் யுத்தக் கப்பல் இலங்கை வந்ததுடன், 1.6 லட்சம் ரூபா பெறுமதியான உணவுப்பொருட்களை வழங்கியது. 2004 மார்ச் மாதம் சார்ஸ் நோயைக் கண்டறியும் அறிவியலுக்கு என, ஆசியா அபிவிருத்தி வங்கி 1.8 கோடி ரூபாவை வழங்கியது. தேர்தலுக்கு என அமெரிக்கா, ஜரோப்பா, ஜப்பான் முதல் பல நாடுகள் நிதி வழங்கின. இலங்கையின் தேவை அனைத்தும், நேரடியாக ஏகாதிபத்தியங்களின் தலையீட்டுடன் வழங்கப்படுவதை அன்றாடச் செய்திப் பத்திரிக்கையில் நாம் காணமுடியும். ஏகாதிபத்திய நாடுகளில் ஏழைகளின் நிலை கவனிப்பாரற்று கிடக்கின்றது. எலும்பும் தோலுமாக உள்ள ஆப்பிரிக்கா மக்களின் அவலத்தை இந்த ஏகாதிபத்தியங்கள் கண்டு கொள்வதில்லை. அங்கு வளங்கள் முழுக்க சூறையாடி முடிந்த நிலையில், மூலதனத்துக்கு என்னதான் அக்கறை கிடக்கின்றது? இலங்கையின் வளங்கள் ஏகாதிபத்தியத்துக்கு பொன் கொழிக்கும் பூமியாகின்றது. இதனால்தான் அதிகமான கரிசனையுடன் களமிறங்கி நிற்கின்றனர்.