பெ ண்களின் சுவடுகளில்..." என்ற சாந்தி சச்சிதானந்தம் எழுதிய நூல் பல மானிடவியல் ஆய்வாளர்களின் ஆய்வுகளை உள்ளடக்கி உள்ளது. தமிழில் வந்துள்ள பெண்ணியம் சார்ந்த நூல்களில் மிகவும் முக்கியமான பெண்ணின் வரலாறு பற்றிய நூலாகும்.


ஆனால் இந்நூல் வர்க்கக் கண்ணோட்டத்தில் இயற்கை சார்ந்த ஆய்வைக் கையாளாமையாலும், முதலாளித்துவ மானிடவியலாளர்களின் வரலாற்றுத் திரிபுகளைத் தமது வர்க்க அமைப்பை நிலைநாட்டுவதற்கு முன்வைத்ததை, இயற்கை சார்ந்த இயங்கியல் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு இன்றியும் தொகுக்கப்பட்ட போது, தவறுகளையே இந்நூல் அடிப்படையாகக் கொண்டுள்ளது.


ஆண் எதிர்ப்பு மிகையாக வெளிப்படுத்தி எழுதப்பட்ட இந்நூல் ஆதாரமின்றியே அறிவியலுக்குப் புறம்பாகவும், பெண்ணைச் சமூகத்துக்கு மேலாகவும் சித்தரிக்கின்றது. அத்துடன் கிடைத்த பல்வேறு சிறப்பான ஆதாரமான தரவுகளைப் பயன்படுத்தும் போது (இத்தரவுகள் அண்மைய மனித வரலாற்றிலும், ஏடறிந்த வரலாற்றுக்கு உட்பட்டது என்பதையும் காணத் தவறி மனித வரலாற்றுக்குப் பொதுமைபடுத்திய ஆய்வு முதலாளித்துவ ஆய்வாகும்.), வரலாற்றின் கடந்தகாலத் தொடர்ச்சியைப் பொதுமைப்படுத்தி, இன்றைய ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் இருந்து ஆண் எதிர்ப்புடன் முன்வைக்கின்ற போது, இயற்கை மற்றும் வரலாறு பற்றிய திரிபு இயற்கையாகின்றது.


மார்க்சியத்தை வரலாற்று ஆய்வு மீது பொருத்தாதவரை, மனித வரலாற்றை இயற்கை வரலாறாகக் காண்பதும், மனித வரலாற்றை இன்றைய பூர்சுவா தனிச்சொத்துடைமை வரலாறாகக் காண்பதும் விளக்குவதும் தவிர்க்கமுடியாதது. இயற்கை மற்றும் மனித வரலாற்றை மார்க்சியம் மட்டுமே பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகுகின்றது. இதைக் கைவிட்டு மௌனம் சாதித்தபடி, இன்றைய ஆணாதிக்கம் மீது முன்வைக்க முடியாத ஆய்வுகள், அடிப்படையில் வரலாற்றைத் திரிவுபடுத்துகின்றது.


கண்டுபிடிப்புகளின் ஆதாரங்கள் மற்றும் யாரால் இவை நிறுவப்பட்டது போன்ற தரவுகளையும், எந்த நூல்களில் இருந்து இவை பெறப்பட்டன போன்றனவற்றை இந்நூல் முழுமையாகக் கொண்டிருக்கவில்லை என்ற குறைபாடும் இதில் உள்ளது. அத்துடன் ஏங்கெல்சின் ஆய்வுகளை மறைமுகமாக மறுக்கும் இந்த நூல், அது எப்படி என்று மட்டும் நிறுவி விடவில்லை. ஏங்கெல்சின் ஆய்வு பற்றிய மௌனம் இதை மேலும் அம்பலப்படுத்துகின்றது. இந்த நூலை விமர்சிக்கும் போது இன்னுமொரு நூலாகிவிடும் என்பதால், குறிப்பானதும் முக்கியமானதுமான ஒருசில விமர்சனங்களை மட்டும் பார்ப்போம்.


"ஆதிவாசி மத்தியில் தகாதப்புணர்ச்சிக்கு எதிரான தடையானது தன்னினம் உண்ணும் வழக்கத்தின் அபாயங்களைத் தவிர்க்கவே ஏற்படுத்தப்பட்டது"50 என்ற வாதம் வரலாற்றையே திரித்து தவறாக்குகின்றது.


இரத்த உறவுக் குடும்பமே மனித இனத்தின் முதல் குடும்பமாகும். அதாவது இருந்து வந்த வரைமுறையற்ற, புணர்ச்சியைத் தடுத்து தலைமுறை குடும்பங்கள் தோன்றின. அதாவது பூட்டன் - பூட்டி, தாய் - தந்தை, மகள் - மகன், பேரன்கள் - பேத்திகள் என்ற தலைமுறைகளுக்கிடையிலான தடைதான் குடும்பத்தின் முதல் தோற்றமாகும். இருந்து வந்த தலைமுறை கடந்த புணர்ச்சிக்குப் பதிலாக, சகல பூட்டன் - பூட்டியும் பரஸ்பரம் தமக்கிடையில் கணவன் மனைவியாகவும், சகல தாய் - தந்தையும் பரஸ்பரம் தமக்கிடையில் கணவன் மனைவியாகவும் இது போன்று சகல மகள் - மகன் பரஸ்பரம் தமக்கிடையில் கணவன் - மனைவியாகவும், சகல பேத்தி - பேரன் பரஸ்பரம் தமக்கிடையில் கணவன் - மனைவியாகவும் உறவு கொள்ள வரையறுத்த குடும்பமே முதல் குடும்பமாகும்.


இவை தமக்கிடையில் தன்னினம் உண்ணியாக இருக்கவில்லை. எப்படி இருக்கமுடியும்? தன்னினம் உண்ணி (சொந்தக் குழுவுக்குள்) மனிதச் சமுதாயம் வளர்ச்சிபெற தடையானது அல்லவா. எப்படி வரைமுறையற்ற பாலியல், கூட்டு மனித வளர்ச்சிக்கு நிபந்தனையாக இருந்ததோ, அந்தளவுக்குத் தன்னினம் உண்ணியாக இருப்பது கூட்டுமனிதவளர்ச்சிக்குத் தடையாக இருந்தது. இவை ஒன்றுக்கு ஒன்று நேர் எதிரான இயங்கியலில் மட்டுமே உயிர் வாழ்கின்றது.


மனித இனத்தின் தோற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் தன்னினம் உண்ணியாக இருப்பது முற்றாக முரணானது. தன்னினம் உண்ணி என்பது சொந்தக் குழுவைத் தாண்டியே இருந்தது. சொந்தக் குழுவில் மிகமோசமான உணவுத் தட்டுப்பாட்டின் போதே, வயது போனவர்களைக் கொன்று உண்ணும் மரபு இருந்துள்ளது. இங்கு உழைப்பின் ஆற்றல் மட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டது. பிற்காலத்தில் டார்வினின் ஆய்வுகளின் போது, இவைகளைக் கண்டறிந்ததுடன் உழைக்க கூடிய நாயைக் கொல்வதைவிட, வயது போன உழைக்க முடியாத மனிதனை உணவுத் தட்டுப்பாட்டின் போது கொல்லப்பட்டதையும், உண்டதையும் உறுதி செய்கின்றார். ஆரம்பக் காட்டுமிராண்டி சமுதாயத்தில் மிருகங்கள் மனிதனைக் கொல்லும் போது மனித உடலைக் கைப்பற்றி, உணவு இன்றி இருக்கும் போதே இறந்தவரை உண்பது நடந்திருக்கின்றது.


தகாதப்புணர்ச்சி எப்படி தன்னினம் உண்ணியின் ஊக்கியாக இருக்கும்? சொந்தக் குழுவுக்குள்ளான வரைமுறையற்ற புணர்ச்சி தன்னினம் உண்ணியைத் தயார் செய்திடவில்லை. முதலில் மனிதன் தகாதப்புணர்ச்சியைத் தடுக்க முன்னேறி சிந்தித்து மற்ற குழுவுடன் உறவை ஏற்படுத்தினான் எனின், ஏன் தகாதப் புணர்ச்சியைத் தடை செய்யவேண்டும்.


முதலிலேயே முன்னேற்றம் கொண்ட சமூகத்துக்கு இந்த நிபந்தனை அவசியமில்லை, நிபந்தனையில்லை. அத்துடன் இப்படி உருவாக்க உலகம்முழுக்க பல்வேறு குழுக்கள் அக்கம்பக்கமாக இருந்தன என்பது கற்பனையானது. மனிதன் அக்கம்பக்கமாக வாழ்ந்ததில்லை. அத்துடன் தொடர்பு மொழி இதை விடக் கடினமானதாக இருந்தது. குழுமணங்கள் கூட பிந்திய காலத்தில் திருமண விலக்கு பெற்ற நீண்ட கால இடைவெளியில், வளர்ச்சியில் வாழ்ந்து வந்த அடையாளம் கண்ட பிரிவுகளுக்கிடையில்தான் (இதன் தலைமுறை கடந்து பார்ப்பின் ஒரே குழுவில் இருந்து பிரிந்தவையே) திருமணம் முதலில் நிகழும் சாத்தியம் மற்றும் சூழல் இருந்தது.


இன்று கூட இனம், மதம், சாதி, நிறம், பரம்பரை... கடந்த திருமணம் எந்தளவுக்குக் கடினமானது என்பது சொல்லாமலே விளங்கும். காதலில் கூட இவைச் செயல்படும் சூழல் மற்றும் காலத்தில் மட்டும்தான் முற்போக்காக இருப்பதைக் குறிப்பாகக் காண்கின்றோம். குழுவில் இருந்த உட்தடைகள் மூலம் வளர்ச்சி பெற்ற குடும்பம் மேலும் மேலும் வளர்ச்சி பெற்ற போதும், அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் தான் திருமணத்தின் விரிந்த வடிவம் வளர்ச்சி பெற்றது. குழுவை அடையாளம் கண்ட பரம்பரை வழியாகத்தான் குழுமணங்கள் நகர்ந்து சென்றது. அத்துடன் அவைகளுக்கிடையில் தன்னினம் உண்ணியாகவும் இருப்பதில்லை. குழுக்களின் தலைமுறை குழுத் தாய் வயிற்றுக் குழந்தைகளில் இருந்து உருவானது என்பது தன்னினம் உண்ணியாக இருப்பதைத் தடுக்கின்றது அல்லவா.


தலைமுறைக் குடும்பம் நிச்சயமாகத் தன்னினம் உண்ணி என்பதால் உருவாகிவிடவில்லை. இதுபோல் சகோதர - சகோதரி இடையிலான புணர்ச்சி விலக்கு, தன்னினம் உண்ணியாக இருந்ததால் விலக்கப்படவில்லை. மாறாகச் சமுதாயத்தின் வளர்ச்சியில் இவை உருவாக்கப்பட்டது. பூட்டன் - பூட்டிக்கும், பேரனுக்கும் - பேத்திக்கும் இடையிலான உறவு எந்தளவுக்குச் சமுதாயத்தால் விலக்கப்பட்டதோ, அதுவே சகோதர - சகோதரிகளுக்கிடையிலான இரண்டாவது புணர்ச்சியையும் விலக்கியது. இது பூனலுவா குடும்பமாகியது. குடும்பம் இந்த வகையில் தான் உருவாகி வளர்ச்சி பெற்றது. இது சமுதாயத்தின் வளர்ச்சியாக இருந்ததே இதன் சிறப்பான மூல அம்சமாகும். இதனால் மட்டுமேதான் புணர்ச்சியில் விலக்குகள் உருவாக்கப்பட்டன. தன்னினம் உண்ணியாகத் தொடர்வதைத் தடுக்கவே "ஆதிவாசி மத்தியில் தகாதப் புணர்ச்சிக்கு எதிரான தடையானது தன்னினம் உண்ணும் வழக்கத்தின் அபாயங்களைத் தவிர்க்கவே ஏற்படுத்தப்பட்டது"50 என்பது சரியானது அல்ல.


தன்னினம் உண்ணியாகத் தொடர்வதைத் தடுக்க, திருமணம் மற்றும் பந்தங்கள் நிகழ்ந்ததா எனின், அவை மிகவும் பிற்பட்ட கால நிகழ்ச்சிகளாகவே இருந்தன. ஆனால் எல்லாக் குடும்பங்களின் குழு மணங்களும் இதற்காக மட்டும் நடந்து விடவில்லை. சொந்தக் குழுக்களில் ஏற்படுத்தப்பட்ட திருமணத்தடையானது புதிய குழுக்களை உருவாக்கியது. மேலும் அவைகளுக்கிடையிலான திருமணத்தை, சொந்தக் குழுக்களில் இருந்த திருமண விலக்கே பொதுவாக நிபந்தனையாக்கியது.
பொதுவாகக் குழுவைத் தாண்டிய திருமணங்களை, குழுவில் விலக்கப்பட்ட திருமணத் தடைதான் நிபந்தனையாக்கியது. ஒரு தடை இன்னொரு தடையை உருவாக்குகிறது. பின்பு இரு தடைகள் இணைந்து புதிய இணைப்பு உருவாகின்றது. தன்னினம் உண்ணிக்கு எதிரான தடையாக, திருமணம் என்பது விதிவிலக்கான வளர்ச்சி பெற்ற கட்டத்தில் நிகழ்ந்தவை மாத்திரமே. இவை பல்வேறு வடிவங்களில் ஒன்றாக மட்டுமே இருந்தன. இதைக் காணத் தவறி, இந்த நூலில் முன்வைத்த போது வரலாற்று இயற்கை இயங்கியலை பற்றிய ஆழமான பார்வையின்றி, தகவல்களைத் தகவலாக மட்டும் சொந்த வர்க்க ஆய்வின்றி கையாண்டதைக் காட்டுகின்றது. இது பலவிதமான வரலாற்றுத் தவறுகளை உள்ளடக்கி பெண்ணுக்கு எதிராகவே மாறிவிடுகின்றது.


"எவ்வாறு தாம் உண்பதற்குரிய உணவினைப் பெறுகின்றனர் என்பதனையும், எந்த முறைகளுக்கு மையக் கூடிக் குழந்தைகள் பெறுகின்றனர் என்பதனையும், சார்ந்தே அச்சமூகத்திற்கே உரித்தான வேறுபட்ட பண்பாடு தோன்றுகின்றது" என்பது அடிப்படையில் பண்பாட்டின் அடிக்கட்டுமான கூறுகளை நேரடியாக ஆனால் மறைமுக வழிகளில் மறுக்கின்றது.


உணவைப் பெறும் உழைப்பு எந்த வகையைச் சார்ந்து, எதன் வழியில் உழைப்பு நடைபெறுகின்றது என்பதைப் பொறுத்தே, உணவைப் பெறுவது மட்டுமின்றி பாலியல் உறவையும் தீர்மானிக்கின்றது. இந்த உழைப்புதான் பண்பாட்டைத் திட்டவட்டமாக உருவாக்குகின்றது. உழைப்பு வடிவம் மாறுகின்ற போதும், உழைப்பின் மூலம் மாறுகின்ற போதும் பண்பாடும் மாறுகின்றது. குழந்தையைப் பெறும் வடிவம், உணவைப் பெறும் வடிவம் இந்த உழைப்பின் தன்மைக்குள் மட்டுமே மாற்றம் காண்கின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த இயற்கை மற்றும் வரலாற்று இயங்கியல் மறுப்பை ஒன்றைப் பார்ப்போம்.


"குரங்கிற்கும் மனிதனுக்குமுள்ள உயிரியல் ரீதியான முக்கிய வேறுபாடு மாமிசம் உண்ணும் வழக்கமாகும். மனிதக் குரங்குகளாக இருக்கும் போது தாவரஉண்ணிகளாகத் திரிந்தவர்கள் மனிதர்களாக மாறும் வளர்ச்சியின் ஏதோவொரு இடை நிலைப்படியில் மாமிச உண்ணிகளாக - நரமாமிசம் சாப்பிடுபவர்களாக இருந்திருக்கின்றனர்...."50


குரங்கிற்கும், மனிதனுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன? இங்குதான் இயற்கை சார்ந்த மார்க்சியவாதிகளுக்கும், அதை மறுக்கின்ற முதலாளித்துவ ஆய்வாளர்களுக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு ஏற்படுகின்றது. இதில் இருந்து உலகைப் புரிந்து கொள்வதில் வேறுபாடுகள் அகன்று செல்கின்றன. மாமிசம் உண்பது தான் உயிரியல் ரீதியில் முக்கிய வேறுபாடு என்றால், இந்த ஆய்வின் எல்லை பல்வேறு மனித விரோத வக்கிரங்களை வெளிப்படுத்துகின்ற இன்றைய ஆய்வுகளில் குரங்கு இனங்கள் சில மாமிசம் உண்பதை எப்படி இதில் இருந்து விளக்கமுடியும்? மனிதனுக்கும், மனிதக்குரங்கும் உள்ள அடிப்படையான உயிரியல் வேறுபாடு, இயற்கை மீதான உழைப்பு என்பதை மறுப்பதன் நோக்கம், திட்டவட்டமாக மனிதவிரோதத் தன்மை கொண்டவை. உழைப்பு இல்லை என்றால் மனிதன் இல்லை. இதுதான் குரங்கில் இருந்து மனிதனைப் பிரித்தது. அந்தளவுக்கு இயற்கை மீது உழைப்பைப் பயன்படுத்தி வாழத் தொடங்கிய போதே, குரங்கில் இருந்து திட்டவட்டமாக மனிதக் குரங்கு பிரிந்து சென்றது.


இதே விசயத்தில் அடுத்து மற்றொரு முக்கியமான திரிபினைப் பார்ப்போம். குரங்கில் இருந்து மனிதன் நேரடியாகத் தோன்றினான் என்ற கருத்தானது குரங்கில் இருந்து மனிதன் என்ற மாற்றத்துக்கு இடையில் மனிதக் குரங்கு என்ற ஓர் இடைநிலை உயிர் இனம் நீண்ட காலம் உழைப்பின் வளர்ச்சியுடன் மனிதனாகப் பரிணாமித்தான் என்பதை மறைமுகமாக மறுக்கிறது. இது ஏன்? இந்த இடைநிலை உழைப்பின் வளர்ச்சியை மறுப்பதன் மூலம் அல்லது மறைமுகமாகக் காணத்தவறுவதன் மூலம் குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாமத் தத்துவத்தை அடிப்படையில் வீரியம் இழக்கச் செய்து, கருத்துமுதல்வாதக் கோட்பாட்டுக்கு மாற்றிச் செல்வதாகும்.


மரத்தில் இருந்த குரங்கு, குரங்கு மனிதனாக நிலத்தில் வாழ இறங்கிய பரிணாமத்தில், குரங்குக்கே இருக்க கூடிய கைகளைக் கொண்டு நடமாடும் (நடக்கும்) முறை மாறி, கால்களைக் கொண்டு நடப்பதற்கு உபயோகிக்கவும், நிமிர்ந்து நிற்கவும் தொடங்கினான். மரத்தில் வாழ்ந்த போது தாவரம் சார்ந்த உண்ணியாக இருந்தான். மரத்தில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையை போக்கவே நிலத்தை வந்தடைகின்றான். இங்கு நிலத்தைக் கிண்டி (தோண்டி) கிழங்குகளைப் பெறுவது போன்ற கடமைகளில் உழைப்பைக் கையாளத் தொடங்கும் போது, உழைப்புக் கருவியையும் உழைப்பையும் இடம்மாற்ற வேண்டிய வரலாற்று கடமையில் நிமிர்ந்து நிற்பது என்பது நீண்ட பரிணாமத்தில் ஏற்பட்டது.

 
நிலத்துக்கு வந்த போது உணவுச் சங்கிலியில் எதிரியைத் தவிர்க்கமுடியாமல் நேருக்குநேர் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்ற விலங்குகள் நிலத்தில் வைத்து மனிதக் குரங்கை இலகுவாக அழிக்க கூடியதாக இருந்தது. சொந்தத் தற்காப்பை இயற்கையாக மரத்தில் வாழ்ந்ததன் மூலம் பெற்ற குரங்கு, பின்னால் மனிதக் குரங்காகி, நிலத்தில் சொந்தத் தற்காப்பைச் சாதிக்க உழைப்புக் கருவியையே எதிரிக்கு (விலங்குக்கு) எதிராகக் கையாள தொடங்குகின்றான்.


இந்தப் போராட்டத்தில் அழிவுகளும் அதன் மீதான வெற்றிகளும் உயிரியல் ரீதியாக மேலும் மாற்றத்தைக் கோரியது. பல்வேறு அழிவுகளில் இருந்து கிடைக்கின்ற வெற்றிகளின் போது, வென்று கொன்ற உயிரை உண்பதன் மூலம் தனது வெற்றியை வெளிப்படுத்தினான் அல்லது பழி தீர்த்துக் கொண்டான். மற்ற மிருகங்கள் தான் கொல்லுகின்ற மிருகங்களை உண்பதைக் கண்ணுற்ற மனிதக் குரங்குக்கும் (மனிதனுக்கும்) தான் வென்ற மிருகங்களை உண்ணும் பழக்கத்தை இது ஊக்குவித்தது.


உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, தனது சொந்த அணியில் ஏற்பட்ட இழப்பைக் கைப்பற்றுவதன் மூலம் அதையும் உணவாக்கினான். இங்கு தன்னினம் உண்ணி என்பது சொந்தக் குழுவில் உள்ளவர்களைக் கொன்று தின்பதல்ல. அப்படி தின்பது என்பது மனித இருப்புக்கே தடையான பக்கமாகும். பாலியலில் வரைமுறையற்ற புணர்ச்சி மனித இருப்புக்கு எப்படி அடிப்படையானதோ, அந்தளவுக்குத் தன்னின உண்ணியாக இல்லாமல் இருப்பது அடிப்படையாகும்.


மூலதனச் சுரண்டல்தான் இதற்கு நேர் எதிராக உள்ளதை மறுக்கவே, தன்னினம் உண்ணி என்பதை மனிதக் குரங்கு மற்றும் மனிதனின் இயல்பு என புனைகின்றது. அதேநேரம் மற்ற குழுக்கள் (மனிதன் மற்றும் மிருகங்கள்) உடன் ஏற்பட்ட உணவுப் போட்டியில் கொல்லப்பட்ட மனிதனையும், மற்ற குழுக்களையும் வேறு ஒரு போட்டி மிருகமாகக் கருதி கொன்ற நிகழ்ச்சியிலேயே, மனிதன் தன்னினம் உண்ணியாக இருந்தான். இந்த இடத்தில் மிருகத்தின் தன்மையில்தான் தன்னினம் உண்ணியாகச் செயல்பட்டான். இங்கு தன்னினம் உண்ணி என்ற அர்த்தம், இன்றைய நாகரிக நிலையில் மட்டும் புரிந்து கொள்ளக் கூடியனவே ஒழிய, அன்றைய வரலாற்றில் அன்றைய மனித நிலையில் அல்ல. அன்று பல்வேறு குழுக்களை, மற்ற மனிதப் பிரிவுகளை வேறு ஒரு விலங்காகவே கருதினர். இதற்குப் பலவிதமான ஆதாரங்களை வரலாறும் மற்றும் இந்த நூலிலும் பல இடங்களிலும் காணப்படுகின்றது.


நாகரிக மனிதனுக்குத் தன்னினம் உண்ணி என்பது, இன்றைய அறிவியலுக்கு உட்பட்டே புரிந்து கொள்கிறான். ஆனால் உண்மையில் அன்று தன் குழு தவிர்ந்த மற்ற மனிதப் பிரிவுகளை வேறு ஒரு மிருகமாகவே கருதினான். ஏன் இன்று அடிமைப்படுத்திய மக்கள் இனங்களை, சுரண்டும் வர்க்கமும், சுரண்டும் சிந்தனைகளும், சுரண்டும் கோட்பாடுகளும் மிருகமாகக் கருதி பட்டினி போட்டு கொன்று குவிக்கும் போது, எப்படியான உணர்வு காணப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால், அன்றைய மனிதனைக் கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாது.


இறைச்சியை ஆண் பெண் வேறுபாடின்றியே (இதில் ஆண் - பெண்ணுக்கு இடையில் முந்திய - பிந்திய என்ற வேறுபாடு என்பது கற்பனை.) உண்ணத் தொடங்கிய போது தீவிரமான மாற்றத்தை உடல் சந்தித்தது. கிடைத்த இறைச்சி மேலதிகமான ஊட்டச்சத்து வழங்கியதுடன், உழைப்புக் கருவிகளை இலகுவாகக் கையாள்வதை இலகுவாக்கியது. குரங்கில் இருந்து மனிதக் குரங்கு பின்னால் மனிதனாக மாறிய காலத்தில் ஏற்பட்ட தீவிரமான உடல் மாற்றத்தைப் புதிதாகக் கிடைத்த இறைச்சியே உடல் உழைப்பின் மீது சாதித்தது. அந்தவகையில் மாமிசம் உடல் பரிணாமத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியதே ஒழிய, இது உயிரியல் ரீதியான வேறுபாட்டை வழங்கி விடவில்லை. உயிரியல் வேறுபாட்டை வழங்கியது உழைப்பு மட்டும்தான். இந்த உழைப்புத்தான் இறைச்சியைப் பெறுவதற்கான நெம்புகோலாக வேறு இருந்தது.


காட்டுமிராண்டி சமுதாயத்தில் வாழ்ந்த மனிதன் மற்ற குழுக்களைப் பார்த்து அவை தம்மையொத்த அல்லது வேறுபட்ட புதிய மிருகமாகவே கருதினான். இது அவனுக்கு முன், தான் விலங்குகளில் ஒரு விலங்குதான் என்ற படிமானம் இருந்தது. உழைப்பைக் கையாளக் கூடிய விலங்கில் இருந்த வேறுபட்ட மனித இனம் என்பதைப் புரிந்ததில்லை. இன்று நாகரிகமான கல்வி பெற்ற மனிதனின் சிந்தனையில் இருந்து, இதை விளங்கிக் கொள்ள முடியாது.


இயற்கை பற்றிய அறிவையும், அதன் பின்நோக்கிய ஆய்விலும் புரிதலிலும் தான், இதன் சரியான ஆய்வைக் காணமுடியும். இருந்தபோதும் இன்று வெளிவரும் பல்வேறு சினிமாக்கள், புத்தகங்களில் வேற்று கிரகவாசி தொடர்பான கற்பனை படிமானங்களில், அவை மக்களைக் கொல்லும் பலவிதமான தோற்றங்களைக் கொண்ட விலங்குகளாக உருவாக்கிக் காட்டும் போது, மனித அறிவு காட்டுமிராண்டித்தனத்தின் வடிவில் இருந்ததல்ல, சுரண்டலை அடிப்படையாகக் கொண்டு, சூறையாடும் விலங்குக் கண்ணோட்டத்தில் இருந்தே வெளிவருகின்றது. அன்று மற்ற மனிதனை மிருகமாகக் கருதி கொன்று உண்ட போது, அவனின் அறியாமை மற்றும் விலங்கான தன்மை தான் ஊக்கியாக இருந்தது. ஆனால் இன்று மனிதனைச் சூறையாடி பட்டினியில் கொன்று நாகரிகமாக உண்டு வாழும் மனித நடத்தையை என்ன என்பது? நிறம், சாதி, இனம், பால்.. போன்ற பல்வேறு காரணங்களால் மனிதனை வேறுபடுத்தி சூறையாடி அடக்கி ஆளும் போது, இந்த மிருகத்தன்மையை மனிதத் தன்மையாகக் காட்டுவது கேவலமானது அல்லவா?


அடுத்து "...வரைமுறை எதுவுமில்லாமல் யாருடனும் பால்உறவு வைத்துக் கொள்ளும் முறை எந்த நிலைத்த மனிதர் கூட்டத்திலும் காணப்பட்டது கிடையாது. ஆகையினால் இந்தக் கட்டுப்பாடுகள் உயிரியல் ரீதியான அடிப்படையில் அல்லாது பண்பாடு தந்த மனப்பாங்கிலேயே அமைந்திருந்தது என்பது தெளிவாகின்றது."50


- என்ற கூற்றில் நிலைத்த மனிதர் கூட்டத்தில் வரைமுறையற்ற புணர்ச்சி நடக்கவில்லை என்பதற்கு என்ன அடிப்படையை ஆதாரமாகக் கொண்டுள்ளது? மனிதக் கூட்டம் நிலையான ஒரு பிரதேசத்தைச் சார்ந்து வாழ்வது என்பது, அங்கு உணவு கிடைக்கும் எல்லைதான் தீர்மானித்தது. உணவு கிடைத்த நிலைகளில் தமது தற்காப்பின் பாதுகாப்பைச் சார்ந்து நிலைத்த பிரதேசத்தைத் தெரிவு செய்து கொண்டான். இங்கு தற்காப்பு மற்றும் உழைப்பு அத்தியாவசியமான, அடிப்படையான நிபந்தனையாக இருந்தது. இந்த நிலையில் இதைச் சாதிக்க வரைமுறையற்ற புணர்ச்சி நிபந்தனையாக இருந்தது. வரைமுறையற்ற புணர்ச்சி தகர்ந்திருப்பின், அங்கு தற்காப்பும், உணவு பெறமுடியாத நிலையே ஏற்பட்டிருக்கும். எனவே நிலைத்த வாழ்க்கை நீடித்த நீண்ட காலத்தில் வரைமுறையற்ற புணர்ச்சியே அடிப்படையானதாகவும் நிபந்தனையாகவும் இருந்தது.


அலைந்து திரிந்த குழுவிற்கு மட்டும் உரிய சிறப்பான புணர்ச்சி வடிவமல்ல வரைமுறையற்ற புணர்ச்சி. வரைமுறையற்ற புணர்ச்சி என்பது மனித உயிர் வாழ்தலின் போராடும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு நீடித்தது. உணவைப் பெறவும், பாதுகாப்பைப் பெறவும் தேவையான உழைப்பைப் பெறவும், வரைமுறையற்ற புணர்ச்சியே மனிதனுக்குரிய வடிவமாக இருந்தது. இது அலைந்து திரிந்த முதல் நிலைத்த வாழ்க்கை என்ற வரை நீண்ட காலக்கட்டம் நீடித்தது. இங்கு மேலதிக உணவின் பூர்த்தி மற்றும் பாதுகாப்பு பலப்பட்ட போது புணர்ச்சியில் சில விலக்குகள் அனுமதிக்கப்ட்டன.


இது உயிரியல் ரீதியில் அல்ல, பண்பாட்டு ரீதியில் என்கின்றபோது அடுத்த திரிபு ஏற்படுகின்றது. உயிரியல் ரீதியில் அல்லாது பண்பாட்டு ரீதியில் என்கின்றபோது, ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரிக்கும்போது, இயங்கியலின் வளர்ச்சி விதியை மறுக்கின்றது. உயிரியல் காரணங்கள் நிலையானவையாகக் கருதும் இயங்கியல் மறுப்பு இதன் அடிப்படையாகின்றது. குரங்கின் உயிரியல் தன்மையும் சரி, குரங்குக்கு முந்திய உயிரியல் தன்மையும் சரி, ஒரு கால விலங்கின் உயிரியல் தன்மையும் சரி, மனிதக் குரங்கின் உயிரியல் தன்மையும் சரி, மனிதனின் உயிரியல் தன்மையும் சரி, நாகரிக மனிதனின் உயிரியல் தன்மையும் சரி அனைத்துமே ஒன்றில் இருந்து ஒன்று வேறுபட்ட தொடர்ச்சியைக் கொண்டு வேறுபட்டன. இது இயற்கை, சூழல், உழைப்பு என்று பல்வேறு காரணங்களால் ஏற்பட்டது. நிலையான உயிரியல் தன்மை என்று எதுவும், என்றென்றைக்கும் கிடையாது. மனிதனின் வளர்ச்சியில் உழைப்புக்கு ஏற்ப தீவிரமான உயிரியல் தன்மை மாற்றம் காண்கின்றது. இதை விலக்கிய சுதந்திரமான உயிரியல் தன்மை என்பது கற்பனையானது.


அடுத்து பண்பாடு என்பது உழைப்பின் விளைவே ஒழிய சுயேட்சையான உயிரியலில் இருந்து உருவான கற்பனையல்ல. குடும்பத்தின் தோற்றம் என்பது உழைப்பினுடைய சாதனையின் விளைவாகும். இது வளர்ச்சியின் படிக்கற்களாகும். இது படிப்படியாகக் காட்டுமிராண்டித்தனத்தை ஒழித்துக் கட்டியது. ஆனால் கூட்டு மனித இயக்கத்தை மறுத்து தனிச் சொத்துரிமையை ஏற்படுத்திய போது, காட்டுமிராண்டித்தனம் வேறுவழியில் புகுந்தது. அப்போது ஆணாதிக்கம் அதன் விளைவாகியது. பண்பாட்டு ரீதியில் ஏற்பட்ட மாற்றமே புணர்ச்சி மீதான மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது அடிப்படையான திரிபாகின்றது. உழைப்பின் மாற்றங்கள்தான் குடும்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. உழைப்பு என்ற அடிக்கட்டுமானம் மீது செயற்படும் பண்பாடு இதை மாற்றிவிடவில்லை. பண்பாடு உழைப்பின் விளைவுகளை ஒட்டி வெளிப்படுவதுதானே ஒழிய சுயேட்சையாக அல்ல. மாற்றம் உழைப்பின் வடிவில்தான் ஏற்படுகின்றது.


"நவீன உலகில், எந்தவித சமூகக்கட்டுப்பாடுகளையும் விட தகாதப்புணர்ச்சிக்கெதிரான கட்டுப்பாடுகள்தான் அதிதீவிரமானவை எனலாம். இவை எந்தக் குறிப்பிட்ட சித்தாந்தத்தினையும் சார்ந்து நிற்காது உலகளாவிய முறையில் தனித்துவமாக நிற்பவை"50 என்கின்ற வாதம் தவறானது. தகாதப்புணர்ச்சிக்கு எதிரான விளக்கங்கள் பல எல்லைக்கு உட்பட்டவை. சொந்தத் தாயுடன் மகன் புணர்வது அல்லது மகனுடன் தாய் புணர்வது அல்லது பிறர் மனைவியைப் புணர்வது அல்லது பிறர் கணவனைப் புணர்வது போன்ற நடத்தைகளைச் சமூகம் மறுக்கின்ற போது, அதற்குப் பின்னால் குறித்த சித்தாந்தத்தின் ஆதிக்கம் உண்டு. இது போல் மனிதனை மனிதன் உண்பதற்கு எதிரான கண்ணோட்டத்திலும் சித்தாந்தம் உண்டு. இது சுயேட்சையான, கற்பனையான இயற்கையல்ல.


ஒவ்வொரு விலகலும் விலக்கப்பட்டு மொத்தச் சமூகத்தின் இயல்பான தன்மையாக மாறும் போது, அது சுயேட்சையான கட்டுப்பாடற்ற வடிவில் இருப்பதாகத் தோன்றும். கம்ய+னிசச் சமூகத்தில் சுரண்டல் பற்றிய கருத்துகளும் இப்படித்தான் இருக்கும். இது அதிதீவிரமான சமூகக் கட்டுப்பாடாகக் காலம் கடந்து இருப்பதில்லை. மனிதனின் இயல்பான இயக்கமாகவே, வளர்ச்சியாகவே இருக்கின்றது. மக்கள் பரஸ்பரம் புரிந்து, மனித வளர்ச்சிக்கு உன்னதமாகக் கருதும் விடயங்கள், மனிதர்களுக்கிடையிலான முரண்பாட்டை இழந்து போகச் செய்கின்றது. ஆனால் இன்றைய யதார்த்தத்தில் தனது சொந்தக் காட்டுமிராண்டித்தனத்தால் திரிந்த வடிவில், சித்தாந்தத்தின் பிறழ்சியில் நீடிப்பது காணமுடிகின்றது. அதுதான் அவை எந்தச் சித்தாந்தத்தில் இருந்து அன்னியப்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது.


வரலாற்றின் காலத்தைக் கடந்து அதை இன்றைய காலத்தின் எல்லையில் பொருத்தி ஆய்வு செய்யும் போது, கடந்த காலச் சித்தாந்தத்தின் செல்வாக்கை மறுப்பது தவிர்க்க முடியாத விளைவாகின்றது. அத்துடன் சமூகத்துக்குச் சமூகம் தகாதப் புணர்ச்சி வரையறை மாறி மாறிக் காணப்படுகின்றது. சகோதரியின் மகளைச் சகோதரியின் தம்பி அல்லது தம்பி மகன் திருமணம் செய்யும் முறை சில சமுதாயத்தில் தடை செய்யப்பட்டவையாக இருக்கின்றது. இது சமுதாயம் கடந்து வந்த பல்வேறு கூறுகளுடன் தொடர்புடைய வளர்ச்சியில் விலக்கிய வேறுபாடுகளில் இருந்த ஏற்படுகின்றது.


"...தகாதப்புணர்ச்சி வருங்காலச் சந்ததியினருக்குத் தீங்கு விளைவிக்கும் என்னும் கோட்பாடு ஆய்வுக்கூடத்தில் தகர்க்கப்பட்டுவிட்டது. ...இங்கிலாந்தில் அதி சிறந்த பந்தயக்குதிரைகள் உலகிலேயே ஆகக் கூடியளவு உட்புணர்ச்சியினால் ஒரு விலங்கிலுள்ள நல்ல குணாம்சங்கள் பன்மடங்காக வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என டார்வின் கூறுகின்றார்" என்ற கருத்தில் டார்வின் கூற்று பொதுப்படையாகத் திரிக்கப்படுகின்றது. நல்ல குணாம்சம் மட்டுமல்ல, தீய குணாம்சமும் பன்மடங்கு வளர்கின்றது. ஆய்வுக் கூடத்தில் பயன்படுத்தியபோது நிறுவியபோது, மனித வரலாற்றில் தோற்கடிக்கப்பட்டதையே கருத்து காட்டுகின்றது. ஆரியஇனம் என்ற இனத்துக்குள்ளான உட்புணர்ச்சி இனப் பாசிசம், வரலாற்றில் தோற்கடிக்கப்பட்டது. அதுபோல் பற்பல. வெற்றி தோல்விகளைச் சமூக இயக்கத்திலும் சரி, வளர்ச்சி விதியிலும் சரி பொதுமைப்படுத்தமுடியாது.


ஒலிம்பிக் போட்டியில் முன்னணி வீரர்கள் உட்புணர்ச்சி முறையில் தோன்றியவர்களா? இல்லை அல்லவா. உட்புணர்ச்சி முறையை மிக குறுகிய எல்லைக்குள் பேணிய சமூகப் பிரிவுகள் அல்லவா நிறைய வெற்றிகளைச் சந்தித்திருக்க வேண்டும். சில இனங்கள் கூட அழிந்து போன வரலாற்றையும் காண்கின்றோம். அத்துடன் பொதுவான சராசரி ஆணின் திறமையைவிட அதிக திறமை கொண்ட ஒலிம்பிக் பெண் வீராங்கனைகளின் திறமையை, பொதுவான பெண்களின் திறமையோடு பொருத்துவது எப்படி அபத்தமாகுமோ, அதுபோல்தான் உட்புணர்ச்சியின் விளைவுகளும்...


உட்புணர்ச்சி என்பது குறித்த ஒரு பிரிவில் உயர்ந்த வளர்ச்சியை ஈடுசெய்கின்றது. தனிச்சொத்துரிமை வடிவில் உலகமயமாதல் சொத்துக் குவிப்பு எதை அடிப்படையாகக் கொள்கின்றதோ, அதை ஒத்த உட்புணர்ச்சிக் கோட்பாடு நவீன உயிரியல் திரிபாகும். டார்வின் உட்புணர்ச்சி வடிவத்தின் மீதான பூர்சுவா கருத்தியலின் பிலிஸ்டைன் ஒழுக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கவே அந்த உதாரணத்தைக் கையாண்டார். மனிதன் உட்புணர்ச்சியைப் படிமுறையாக நீக்கிய போது, அவை அநாகரிகமாக இருந்ததைக் கண்டதன் மூலம் நீக்கினான். இவையல்லாது, இன்று குரங்கில் காணப்படும் ஆணின் பொறாமை என்ற கண்ணோட்டத்தில் இருந்து குழுவின் சிதைவைத் தடுக்கும் அடிப்படையில் அல்ல. பொறாமை என்பது பிந்திய காலத் தனிச்சொத்துரிமை உணர்ச்சி மட்டுமேயாகும்.


இந்த நூலில் குறிப்பிட்டது போல், பெண்ணின் புணர்ச்சி வேட்கை ஏற்பட்டவுடன், ஆணின் தொடர்ச்சியான வருடம் முழுமைக்குமான புணர்ச்சி வேட்கையின் இச்சையில் இருந்து எழும், ஆண்களின் வேட்கை மோதலைத் தவிர்க்கவே உட்புணர்ச்சி தடுக்கப்பட்டது என்ற வாதம் தவறானது. இந்த வாதம் ஆணின் ஆணாதிக்க மேலாண்மையை மறைமுகமாகப் பாதுகாக்கின்றது. இயற்கையின் பரிணாமத் தேர்வு புணர்ச்சியில் சமநிலையையே எப்போதும் பேணியது. வளர்ச்சியின் இயங்கியல் விதி ஆணையும், பெண்ணையும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்க முடியாத வகையில் பிரதிபலித்தது. பெண்ணின் புணர்ச்சி வேட்கையும் சரி, ஆணின் புணர்ச்சி வேட்கையும் சரி ஒரு சீராகவே இருந்ததே ஒழிய, ஆணில் அதிகரித்த தன்மையை ஏற்படுத்தவில்லை. மனிதன் இன்றைய நிலையை எடுத்து, ஆணின் ஆணாதிக்கம் சார்பாக நியாயப்படுத்த, இன்றைய குரங்கைப் பொதுமைப்படுத்தும் போது, இயற்கையின் இயங்கியலை மறுக்கின்றது.


பொறாமை என்ற உணர்ச்சி உயர்ந்த இன மந்தையிடம் இருப்பதில்லை. குரங்கிடம் தொற்றிக் கொண்டது என்பது அதுவும் இயங்கியல் தன்மையாகின்றது. இதனால் ஆணைவிட அதிக பெண் குரங்குகளை இயற்கை உருவாக்குகின்றது. (அண்மைய உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். எத்தியோப்பிய வறுமை உலகத்தைப் பிடித்தாட்டுமளவுக்குக் கோரமானது. ஏகாதிபத்தியச் சூறையாடல் அந்த மக்களைச் சிதைத்துள்ளது. இன்று சராசரி ஆயுள் 49 வயதாக இருக்க, 1000 பேருக்கான மரணவிகிதம் 109 பேராக மாறியுள்ளதுடன், உலகத்தில் முதலிடம் வகிக்கின்றது. மரணவிகிதம் அதிகரிக்க பிறப்பு விகிதம் அதிகரித்துச் செல்லுகின்றது. ஜனத்தொகையில் 46 சதவிகிதம் 14 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க, ஜனத்தொகை கி.பி. 1984-1985-யைப் போல் இரண்டு மடங்காகியுள்ளது. வறுமை இனவிருத்தியை அதிகரிக்க வைக்கின்றது. வரைமுறையற்ற புணர்ச்சி மனித இருப்பில், அதன் பாதுகாப்பில் அடிப்படையான உள்ளடக்கமாக இருந்ததை இது காட்டுகின்றது.) மனிதன் அதிக பெண்களை அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு, தனிச்சொத்துரிமையின் குணாம்சமே ஒழிய இயற்கையான தன்மை கிடையாது. பெண்ணின் தலைமையில் சமுதாயம் இருந்த போது அங்கு ஆண் அதிக பெண்களை அனுபவிக்கும் சண்டை என்பது கற்பனையானது. இங்கு பெண் தலைமை தாங்கினாள் என்பதால், ஆண் பாலியலில் அதிகாரம் செலுத்தும் வடிவமே கற்பனையாகின்றது. இதை மறுத்து இந்த நூல் விளக்கும் போது, பெண்ணின் இயற்கையே பெண்ணின் அடிமைத்தனத்தை அனுசரித்ததாக விளக்கம் தருகின்றது. பெண் - ஆண் இருவரும் தமது புணர்ச்சியைச் சுயமாகத் தெரிந்தெடுத்தே ஈடுபட்டனர். காட்டுமிராண்டித்தனமான மனிதனில் இது அச்சமுதாயத்துக்கே உரிய வகையில் நீடித்தது. பரஸ்பர தெரிவு இன்றி, அங்கீகாரம் இன்றி ஆண் - பெண் புணர்ச்சி மனிதனில் இருந்தது என்ற விளக்கம், பெண்ணின் அடிமைத்தனத்தைத் தனியுடைமைச் சமுதாயத்துக்கு முந்தியதாகக் காட்டி, அதை இயற்கையின் கொடையாக்குவதன் மூலம், ஆணாதிக்கத்தைத் தொன்றுதொட்ட நடத்தையாக நிறுவும் முயற்சியாகும். இது ஆணாதிக்கத்தை வரலாற்றுத் திரிபுஊடாக நிறுவும் மீள் முயற்சியாகும்.


பெண்கள் மீது ஆணின் புணர்ச்சி ஆதிக்கம் என்பது, சில மிருக இனத்தின் தன்மையே ஒழிய மனித இனத்தின் தன்மையல்ல. இதில் இருந்தே திட்டவட்டமாக மனிதன் பிரிந்து வருகின்றான். அத்துடன் மனித இனத்தில் இது நிகழ்வது என்பது மனித வளர்ச்சிக்கு எதிரானது. கடந்த 3000 வருட வரலாறுகளில்தான் பெண்கள் மீதான ஆணின் பாலியல் ஆதிக்கத்தை ஏற்படுத்தினர் என்பதை மறுத்து, இதை ஆதியில் மிருகத் தொடர்ச்சியாகக் காட்டுவது என்பது ஆணாதிக்கத்தைச் சுரண்டல் அமைப்பு மீது தொடர்ச்சியாகப் பாதுகாப்பதுதான்.


ஆணினதும் பெண்ணினதும் தேர்வுக்கு உட்பட்ட உட்புணர்ச்சி தான் பரஸ்பரம் மனிதக் குரங்கில் இருந்து மனிதனாக மாறிய காலத்தில் இருந்தது. பெண்ணின் விருப்பம் இன்றி ஆண் உடல் உறவு கொள்ள முடியாத நிலை நீடித்த போது, ஆண்கள் சண்டையிடத் தேவையற்றதாகவே இருந்தது. ஆண் போட்டி மற்றும் சண்டையூடாகப் பெண்ணை அடையும் உட்புணர்ச்சியில் இவை தடுக்கப்பட்டது எனின், ஆணாதிக்கச் சமூகமே மனித வரலாற்றின் இயற்கை மூலம் என்ற கோட்பாட்டை, இந்த இயற்கை வரலாற்றுத் திரிபு நிறுவுகின்றது.


இந்த இயற்கை வரலாற்றில் பெண்ணின் உடலுறவு அனுமதி மட்டும் தான் (இங்கு பெண்ணின் தெரிவு மறுக்கப்படுகின்றது.) பெண்ணின் உரிமையாக இருந்தது என்பது ஆணாதிக்கக் கொச்சைத்தனமாகும். பெண் சொந்தத்தில் ஆணைத் தெரிந்தெடுக்கும், பெண்ணின் உரிமை கொண்ட சமூகத்தைப் பெண் தலைமை தாங்கிய வரலாற்றை இது மறுக்கின்றது. இயற்கையாகவே ஆண் மேலாண்மையைப் பெண்ணின் அனுமதியுடன் பெண்ணின் தெரிவு இன்றி உட்புணர்ச்சியில் அனுபவித்தது என்றால், இது ஆணாதிக்கத்தின் மீள அமைப்பதற்கான மோசடி பக்கமாகும். உலகமயமாதல் பெண்ணியம் நடத்தையுடன் கூடிய ஒழுக்கத்தை இதையே அமுலுக்குக் கொண்டு வருகின்றது. பாட்டாளி வர்க்கம் இதை மறுத்துதான் பெண்ணின் தெரிவையும் முன்நிறுத்துகின்றது. இந்தத் தெரிவு வர்க்கச் சமுதாயத்தில் இருக்கின்றது என்றால், அது ஆணாதிக்கச் சமூகக் கண்ணோட்டத்தில் கொண்டவையாகும்.


அடுத்து இந்தத் திரிபின் அடுத்த கட்ட விளக்கத்தைப் பார்ப்போம். "ஒரே சமயத்தில் அதிகஅளவு பெண்களையடைவதே ஒவ்வொரு ஆணினதும் குறிக்கோள். இந்தச் சண்டைகளில் பெருத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன.... இதன் விளைவாகவே குழூஉக்குறி அமைப்பின்கீழ் ஒரு குழுவைச் சார்ந்தவர்களுக்கு உட்புணர்ச்சி தடை செய்யப்பட்டதென நாம் அனுமானிக்கலாம்."50


இது முரண்பாட்டுடன் முன்பு சொன்ன தன்னின உண்ணியாகத் தொடர்வதைத் தடுக்க தடையாக உருவானது என்பதை மறுத்தபடி, இரத்த உறவுக் குடும்பம், பூனலூவா குடும்பம்... என ஆரம்பக் குடும்ப வடிவங்களையே மறுக்கின்றது. அத்துடன் தகாதப்புணர்ச்சி தடை குறித்து, அது குறிப்பிட்ட சித்தாந்தத்தினையும் சார்ந்து நிற்காது, உலகளாவிய முறையில் தனித்துவமாக நிற்பது என்ற முந்திய வாதத்தையும் முரண்பாட்டுடன் மறுக்கின்றது. வாதத்தில் குறிப்பிட்டது போல் உயிர்ச் சேதத்தைக் குறைக்க, தன்னினம் உண்ணியாக இருப்பதைத் தடுக்க உருவானது என்று முரண்பாட்டுடன் கூடிய வாதம் ஒரு சித்தாந்தத்தின் ஆளுமைக்கு உட்பட்டது அல்லவா. மொத்தத்தில் இதன் மூலம் ஏங்கெல்ஸ்சின் ஆய்வை மறுக்கின்றது.


ஏங்கெல்ஸ் இந்த ஆயுவுகளைச் செய்த போது நாகரிக மனிதன் எதை எதிர்த்துப் பாதுகாக்க முன் நின்றானோ, அதையே இது மீள முன் நிறுத்துகின்றது பின்பக்கப் பாதைமூலம். உயிர்ச் சேதத்தை விளைவித்தமையால் உட்புணர்ச்சி தடுக்கப்பட்டது எனின், இந்த வாதம் எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்பது தெளிவாகும்.


முதல் உட்புணர்ச்சி தடை சந்ததிக்கிடையில் மட்டுமே ஏற்பட்டதே ஒழிய, குழுவின் மொத்த ஆண்களுக்கும் மொத்தப் பெண்களுக்கும் இடையில் இத்தடை ஏற்படவில்லை. (இது இன்று வரை தமிழர் திருமணத்திலும் சரி, தென் அமெரிக்கச் சமுதாயத் திருமணத்திலும் சரி பல்வேறு பழங்குடிகளில் இரத்த உறவுத் திருமணங்கள் அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் காணப்படுகின்றது.) அதாவது புணர்ச்சி தலைமுறைக்குள் மட்டும் ஏற்கப்பட்டது. அடுத்தக்கட்டக் குடும்ப வளர்ச்சி சகோதர - சகோதரிகளுக்கிடையில் புணர்ச்சி தடை ஏற்பட்டது. இப்படியேதான் குடும்பம் முன்னேறியது. இங்கு தந்தைமார் அதிக பெண்களை அடையும் புணர்ச்சி சண்டையால் பேத்தி, மகள், தாய், பூட்டியுடனான புணர்ச்சி தடை செய்யப்படவில்லை. இதுபோல் சகோதரர்களின் சண்டையால் சகோதரிகளுடனான புணர்ச்சி தடை செய்யப்படவில்லை. மாறாக மனித வளர்ச்சியில் இவை அநாகரிகமாகக் கண்டதன் மூலம் படிப்படியாக மனித வளர்ச்சியில் தடைசெய்யப்பட்டது.


அடுத்து இந்த வாதப்படி குடும்பத்தின் முதல்படியில் உட்புணர்ச்சி மொத்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தடை செய்யப்பட்டால், எங்கிருந்து தமது புணர்ச்சிக்கான ஆண்களையும் - பெண்களையும் பெற்றனர். சுற்றுவட்டாரம் என்பது நீண்ட மனிதன் அற்ற பிரதேசங்கள்தான். அத்துடன் மனிதன் தென்பட்டாலும் அவன் ஒரு மிருகமாகவே கருதும் காட்டுமிராண்டித்தனமும், தன்னினம் உண்ணி (இங்கு தன் குழு அல்லாத மனிதனை மிருகமாகக் கருதியதால்) போன்ற நிலைமைகளில் எப்படி புணர்ச்சி வளர்ச்சி பெற்றிருக்கும். குழுவைத் தாண்டிய புணர்ச்சியை வந்தடையும் முன் மனிதன் பல கட்டங்களை வந்தடைய வேண்டியிருந்தது. முதல் குடும்ப அலகுகள் உள்ளார்ந்த வடிவத்துக்குள்தான் உருவானது. இதில் தான் படிப்படியாக வளர்ச்சி பெற்றது.


இன்று தமிழர் உட்பட தென் அமெரிக்கச் சமூகங்கள் வரை காணப்படும் இரத்த உறவு குடும்பத்தில் இருக்கும் ஒரே மாதிரியான உறவுமுறைகள், இதை மிகத் துல்லியமாக நிறுவுவதுடன், திருமணம் அதற்குள் அனுமதிக்கப்பட்ட வடிவங்களும் இதை மேலும் துல்லியமாகத் தெளிவாக்குகின்றன. குழுவுக்கு வெளியில் திருமணம் செய்யும் முறை பிந்திய காலத்தில் ஏற்பட்டமை அடுத்த கட்ட வளர்ச்சியாகும்.. இது நிச்சயமாக அதிக பெண்களை அனுபவிக்கும் ஆண்களின் சண்டையினால் ஏற்படவில்லை. மாறாகச் சமுதாய வளர்ச்சியில் ஏற்பட்டவையாகவே இது இருந்தது. இது குழுவுக்குள் இருந்து பிரிக்கப்பட்டு புணர்ச்சிக்கு அனுமதிக்கப்படாத பிரிவுகளைக் கொண்டு, பல தலைமுறைகளைக் கடந்து பிரிந்து உருவான வேறு குழுக்களுடனான உறவாக மாறியது. இப்படியே இவை படிமுறையாகவே வளர்ச்சி பெற்றது.


புணர்ச்சியில் சண்டை, அதிக பெண்களை அனுபவிக்கத் துடிக்கும் போக்கு போன்றன கடந்த 3000 வருடங்களாகத் தொடரும் இன்றைய சமுதாயக் கண்ணோட்டத்தின் பொதுத்தன்மையாகும். இது ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையின் விளைவாகும்.


"மார்க்ஸ் கூறியபடி, அவர்கள் பூர்வீகக் கூட்டு வாழ்க்கையின் தொப்பூழ்க் கொடியுடன் பிணைக்கப்பட்டிருந்தார்கள். இந்தப் பூர்வீகக் கூட்டு வாழ்க்கையின் பலத்தை உடைக்க வேண்டியிருந்தது. அது உடைக்கப்பட்டது. ஆனால் அதை உடைத்த செல்வாக்குடைய சக்திகள் பண்டைக்காலக் குலச் சமுதாயத்தின் எளிமையான, தார்மீக மேன்மையிலிருந்து இழிநிலையாகவும் வீழ்ச்சியாகவும் நமக்குத் தொடக்கத்திலிருந்தே தோன்றுகின்றன. கீழ்த்தரமான பேராசை, மிருகத்தனமான காமவெறி, பொருளாசை, பொதுச் சொத்துக்களைச் சுயநலத்துக்காகக் கொள்ளையடித்தல் ஆகிய இழிந்த நலன்களே புதிய நாகரிகச் சமுதாயத்தை, வர்க்கச் சமுதாயத்தை வரவேற்கின்றது"51 என்றார் ஏங்கெல்ஸ்.


இதைப் பற்றிய ஆய்வு இன்றி இதை ஆதி மனிதனுக்குப் பொருத்திக் காட்டுவதன் மூலம், இயல்பாக ஏற்க வைக்கும் கண்ணோட்டம் ஆணாதிக்கத்தை, தொன்று தொட்ட இயற்கையாக நிறுவுவதன் மூலம், பெண்ணியத்தைத் தனிச் சொத்துரிமைக்கு எதிரான போராட்டத்தில் சுரண்டும் வர்க்கம் சார்ந்து பிளப்பதாகும்.
அடுத்து ஆதி பொதுவுடைமைச் சமூகத்தை மறுக்கும் வரலாற்றுத் திரிபைப் பார்ப்போம். "மந்தைகளாகத் திரியும் நரிகளும் காட்டுநாய்களும் கூட இதற்கு விதிவிலக்கில்லை. ஓர் இரையை வேட்டையாடுவதற்கு எல்லாம் ஒற்றுமையாக நடவடிக்கையில் இறங்கியிருந்தாலும் கூட அதை உண்ண முயலும்போது அவை தமக்குள் பலத்த சண்டை போட்டுக் கொள்கின்றன. இந்தச் சண்டையில் பலம் பொருந்தியவை பலவீனமானவற்றைக் கொன்று உண்டு விடுகின்றன. தாவர உண்ணிகளான யானை, மான் போன்றவை மட்டும் ஓரளவுக்குத் தம்முள் பூசல்களைத் தவிர்த்து வாழ்கின்றன. ...பாலூட்டிகளில் உயர்ந்த நிலையிலுள்ள குரங்குகள் கூட பகிர்ந்து உண்பதில்லை. ஆளுமை வகிக்கும் குரங்குகள் தம் குழுவில் பலவீனமானவற்றைப் பயமுறுத்தி வேண்டிய உணவைப் பெற்றுக் கொள்கின்றன. ...இவ்விதிக்கு ஒரேயொரு விலக்கு பெண்விலங்குகளும் அவற்றின் கருவில் உதித்த இளம் வாரிசுகளுமாகும்.... தாய்க்கும் பிள்ளைக்குமிடையே நீடித்த உறவு ஒரே தாயின் பிள்ளைகளுக்கிடையேயும், இப்பிள்ளைக்கும் மற்ற அங்கத்தினர்களுக்கிடையேயும் ஒத்துணர்வினை (யாருடன்? இங்கு ஆணும் பெண்ணையும் கடந்தா?) ஏற்படுத்த ஏதுவாகின்றது. விலங்கினங்களிடையே ஆணின் நடத்தைகள் இதற்கு நேரெதிரானது. ... ஒரே நோக்கங்கொண்டு பல ஆண்கள் செயலில் இறங்குவதால் (இது பெண்களுக்கு மறுப்பது ஏன்? பெண்கள் ஒரே நோக்கில் போராடக் கூடாது என்பதாலா?) அவற்றுக்கிடையே பெருத்த போட்டிகளும் பூசல்களும் மலிகின்றன. ...தனிமனித வாதத்திற்கு எதிர்முரணாகவிருக்கும் தாய்மை என்னும் உணர்ச்சியே விலங்கினின்றும் ~மனிதன்| தோன்றிய முதல்படி எனக் கூறலாம். ஒருவருக்கொருவர் அனுசரணையாகக் கூட்டுவாழ்க்கை மேற்கொள்ளும் இயல்பு முதன்முதலில் தாயிடமிருந்து தோற்றம் பெற்றதன்றோ? ...மேற்கூறிய ஆதாரமாய் இன்னுமொரு விடயமுமுண்டு. மனிதக்குரங்கின் ஆணினம் மாமிச உண்ணிகளாக மாறி, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் மனிதக் குரங்கின் பெண்ணினம்


தாவர உண்ணிகளாகவே தொடர்ந்தனர். ...போட்டிச் சண்டையிடும் வழக்கமுடைய தன்மையினால் உரமான (பலமான) தாடைத் தசைகளும் கூரான பக்கவாட்டுப் பற்களும் விருத்தியடையப் பெற்ற ஆண்கள் இறைச்சியை இலகுவில் உட்கொண்டனர் என்பது ஒன்று. ஆண்கள் சமரில் தேர்ந்தவர்களாகையால் (இது எப்படி ஆணுக்கு மட்டும் சாத்தியமானதாக இருக்கமுடியும்?), பெருத்த உருவமும் நீண்ட நகங்களுடையவர்களாக இருந்தார்கள். இதன் காரணமாக வேட்டையினைத் தமக்கே சொந்தமாக்கி கொண்டனர் என்பது இன்னொன்று...."50


"விலங்கியல்புகளையும் தன்னின உண்ணி முறைகளையும் தகர்க்கவே தாய்வழிச் சமூகங்கள் தோன்றின" என்று மிருக வரலாற்றை மனித வரலாறாகக் காட்டும் போதே இன்றைய ஆணாதிக்க அமைப்பு மெச்சப்படுகின்றது. மிருகத்தை மனிதத் தோற்றத்தின் பின் ஒப்பிடுவதே அபத்தமாகும். இது மனிதனின் தோற்றத்தை மறுக்கின்றது. மிருக இயல்புகளை மறுத்து உருவாகியதுதான் மனித இனம். மனிதனுக்கும் குரங்குக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு உழைப்புக்கூடான கூட்டுச் சமூக அமைப்பாகும். இந்த வளர்ச்சி இன்றி, இன்றைய மனிதன் என்பது கற்பனையானது.


ஆண் விலங்குகள் உணவுக்காகப் போட்டி போட்டு, சண்டையிட்டு உண்ணும் எடுகோளே மாமிசம் உண்ணும் விலங்கு இனத்திலேயும் கூட தவறாகின்றது. மாமிசம் உண்ணும் பெண்ணினம் கூட போட்டி போட்டு சண்டையிட்டே உண்ணுகின்றது. ஓநாயை எடுத்தாலும் சரி, நரியை எடுத்தாலும் சரி அந்த இனத்துப் பெண் எங்கிருந்து மாமிச உணவைப் பெறுகின்றது. ஆணுக்கு வெளியில் அமைதியான சண்டையற்ற கற்பனையில் அல்ல.


உணவுச் சங்கிலிப் போராட்டத்தில் ஆண் - பெண் விலங்குகள் விதிவிலக்கின்றி ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. அத்துடன் இதில் ஆண் - பெண் விலங்குகளுக்கு இடையில் உடல் பலத்தைச் சார்ந்த வேறுபாடு என்பது கற்பனையானது. அத்துடன் இறைச்சியை உண்பதில் ஆண் - பெண் விலங்குகளின் உடல் வலிமை வேறுபாடு என்பதும் கற்பனையானது. ஆண் - பெண் விலங்குகளைப் போராட்டத்தில் இனம் காணமுடியாது. அதுபோல் பலத்திலும் காணமுடியாது. அதுபோல் உண்பதிலும் காணமுடியாது. பெண் விலங்கு பலம் குறைந்தது எனின் உயிர்வாழும் தகுதியை உணவுப் போராட்டத்தில் இழந்துவிடுமல்லவா? அத்துடன் ஆண் விலங்குகள் பலமானவை என்பது ஆணாதிக்கத்தின் கற்பனையான இயற்கை மீதான மீள் எடுகோளாகும். இனவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட உருவ வேறுபாடுகள் மட்டுமே, உணவுப் போராட்டத்தில் சிலவேளை உன்னிப்பாக அவதானித்தால் (கவனித்தால்) மட்டுமே தெரிந்து கொள்ளமுடியும்.


வேட்டையிலும் சரி, உணவை உண்பதிலும் சரி பொதுவாக மாமிசம் உண்ணும் விலங்குகள் ஆண் - பெண் விலங்குகள் வேறுபாட்டில் அமைதியைக் கடைப்பிடிப்பதில்லை. முட்டிமோதி உணவு உண்பதுதான் ஆணின் சிறப்பு குணம் என்ற எடுகோள் மூலம் மனித உருவாக்கத்தை விளக்க, அந்தச் சிறப்பு குணத்தை பெண் விலங்குக்கு விதிவிலக்காக்கி காட்டியது விலங்கினத்திலே தவறாகின்ற போது, விலங்கில் இருந்து எடுத்து வைக்கும் எடுகோள்கள் விலங்குகளுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் முற்றாகத் தவறாகின்றது.


சொந்தக் குழந்தையைத் தாய் பராமரிக்கும் இயல்பு இயற்கையின் நியதி. இது பெண்ணின் சிறப்பான தகுதியல்ல. ஆனால் ஆணாதிக்கச் சமூகத்தில் அது பெண்ணின் மெச்சத்தக்கத் தகுதியாகின்றது. ஏனெனில் ஆணாதிக்கம் கூட்டு அமைப்பை நிராகரித்து தனிமனித வாதத்தில் சீரழிந்த போது, பெண் மட்டும் தாய்மையில் கூட்டுக் கண்ணோட்டத்தைத் தொடர்வதால் அதன் சிறப்பு முன்வருகின்றது. ஆனால் இன்று நுகர்வுப் பண்பாடு பெண்ணிடமும் தனிமனித வாதத்தை ஏற்படுத்திய போது, இந்தக் கூட்டுக் கண்ணோட்டம் சிதைகின்றது.


இயற்கையின் நியதியான குழந்தை பராமரிப்பு எல்லா விலங்கு இனத்திலும், பறவை இனத்திலும் ஒரேமாதிரி இருப்பதில்லை. பாலூட்டிகளிடையே பெண் பாலூட்டுவதால், பொதுவாகப் பெண் சார்ந்து குட்டிகள் வளர்கின்றன. இங்கு ஆண் அனுசரணையாகப் பெண்ணின் உணவைக்கூட தேடிக் கொடுக்கின்றது. சில விலங்கினத்திலும், பறவை இனத்திலும் ஆண் விலங்குகள் குட்டியைப் பராமரிக்கின்றது.


(பேரரடைஸ் ஃபிஷ் என்ற மீன் இனத்தில் பெண் மீன் முட்டையிட்டுச் செல்ல, ஆண் மீன் அவைகளை ஒன்று சேர்த்து பாதுகாக்க, ஒரு பசை மூலம் ஒட்டி குஞ்சு பொரிக்கும் வரை பாதுகாக்கின்றது. பூனைமீன் என்ற இனத்தில் பெண் மீன் இடும் மூட்டையை, ஆண் மீன் தனது வாயில் வைத்து குஞ்சு பொரிக்கும் வரை பாதுகாக்கின்றது. கடற்குதிரை மீன் இனத்தில் பெண்மீன் இடும் முட்டையை ஆண் மீன் வாய் மூலம் விழுங்கி உட்பையில் பாதுகாத்து, பொரித்த பின் வாய் மூலம் வெளியில் அனுப்புகின்றது.) சிலவற்றில் ஆண் - பெண் சேர்ந்து பராமரிக்கின்றன. சிலவற்றில் பெண் மீன் மட்டும் பராமரிக்கின்றது. மனிதனில் பெண் மட்டும் பொதுவாகப் பராமரிக்கின்றாள்.


பெண் மட்டுமே உயிரினத்தில் குழந்தையைப் பராமரிக்கின்றாள் என்ற விதி தவறானது. ஆண் பராமரிக்கும் தன்மையும் உயிரினத்தில் உள்ளது. இயற்கையாகவே பெண்ணின் பாதுகாக்கும் உணர்வு வயிற்றில் சுமந்து பெற்று பால் கொடுப்பதன் மூலம் இயற்கை சார்ந்து கோருகின்றது. இந்தப் பரிணாமத்தின் வளர்ச்சிக்குரிய மாற்றத்தைச் சூழல் வளர்த்தெடுத்தது. இதில் ஆண் மட்டுமா? பெண் மட்டுமா? என்பதைப் பல்வேறு காரணக்காரியத்துடன் இயற்கை ஒழுங்கமைத்தது. இது ஆணாதிக்கம் உயிரியல் ரீதியில் பெண்ணிடம் திணித்தவையல்ல. உயிரினங்களில் பெண், குட்டிகளைப் பராமரிக்கும்போது அங்கு ஆணாதிக்கம் இருப்பதில்லை.


உயிரினத்தில் ஆண் - பெண் இடையிலான வேறுபாடுகள் இயற்கையாக உள்ளது. இது ஆணாதிக்கத்தால் அல்ல. ஆனால் அங்கு மனிதனில் இருந்து விதிவிலக்கு ஆண் - பெண்ணை அடிமைப்படுத்துவதில்லை. மனித இனத்தில் ஆண் பெண்ணை அடிமைப்படுத்துவதன் ஊடாக, குழந்தைகள் ஆணுக்கான வாரிசாகிய போது (நிரந்தரமான மன்னர் பரம்பரையில் ஆண் வாரிசுரிமை ஆட்சிகள் ஆணாதிக்கம் மற்றும் அரசு வடிவத்தைத் தெளிவாக்குகின்றது.), இங்கு ஆணின் வாரிசைப் பெற்றுக் கொடுப்பதும் வளர்ப்பதும் பெண்ணின் கடமையாகின்றது. பெண்கள் தலைமை தாங்கிய போது குழந்தை வளர்ப்பில் ஆண் தலையிடுவது பெண்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மனிதனின் உயர்ந்தகட்ட வளர்ச்சியே பெண்ணுடன் இணைந்த சமூகத்தின் பொறுப்பில் குழந்தை வளர்ப்பைக் கோருகின்றது. இதை நோக்கி மாறிக் கொண்டு இருக்கின்றது.


பெண்ணில் பொதுவாகக் காணப்படும் குழந்தை மீதான பரிவும், பாதுகாப்புணர்வும் "தனிமனித வாதத்திற்கு எதிர்முரணாகவிருக்கும் தாய்மைக்" கண்ணோட்டத்தில் பெண்ணிடம் உருவாகவில்லை. தனிமனித வாதம் என்பது பற்றிய கண்டுபிடிப்பு நகைப்புக்குரியது. இந்த வாதம் சுரண்டல் அமைப்பைப் பாதுகாக்கும் கோட்பாட்டைச் செழுமைப்படுத்துகின்றது. தனிமனிதவாதம் மனித உழைப்பைச் சுரண்டியதன் மூலம் மனித வரலாற்றில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டது. இதை ஆதி சமுதாயத்தின் விலங்கு உணர்ச்சியில் ஆணின் தன்மையாகக் காட்டுவதன் மூலம், உண்மையில் சுரண்டல் அமைப்பின் இயல்பை மென்மைப்படுத்துவதாகும்.

 
தனிமனித வாதம் இயற்கையின் தொடர்ச்சியல்ல. அத்துடன் மிருகத்தில் போட்டியான உணவுச் சண்டை தனிமனித வாதத்தின் இயல்புணர்ச்சிகள் அல்ல. மாறாக விலங்குகளுக்குக் கிடைக்கும் உணவு நெருக்கடியின் போட்டியே அதை ஏற்படுத்துகின்றது. இது இல்லாத எல்லா நிலையிலும் அவை போட்டியற்ற நிலையில் வாழ்கின்றன. உணவு தாராளமாகக் கிடைக்கும் எல்லா நிலையிலும் மிருகத்தினிடையே சச்சரவு குறைவாகக் காணப்படுகின்றது. அது பற்றாக்குறையாக இருக்கின்ற போது சண்டை அதிகமாவதும் சொந்த இனத்தைக் கொன்று உண்பதும் ஆண் - பெண் என்ற விதிவிலக்கின்றி பொதுவான தன்மையாகின்றது.


அத்துடன் குரங்கில் இருந்து மனிதக் குரங்காகவும் பின் மனிதனாகவும் தோற்றம் பெற்ற வரலாற்றில் மனித வளர்ச்சியில் விலங்குணர்ச்சி மற்றும் தன்னினம் உண்ணியாகத் தவிர்க்கவே தாய்வழிச் சமூகம் உருவானது என்ற கண்டுபிடிப்பும் அபத்தமாகும். குரங்கில் இருந்து உருவான மனிதக் குரங்கும் பின்னால் மனிதனும் தாவர உண்ணியாக இருந்துள்ளான். ஏனெனின் குரங்கின் உணவு தாவரம் சார்ந்து இருந்தது அல்லவா? பின்னால் இறைச்சியை உண்கின்ற போதே இங்கு ஆண் - பெண் வேறுபாடு இருந்ததில்லை. தன்னினத்தையும் மிருகமாகக் கருதியே உண்டான். தாவரம் சார்ந்த உணவுச் சங்கிலியில் உதித்த மனிதன் எப்படி இறைச்சிக்காகப் போராடியிருக்கமுடியும்? எப்படி? தன்னின உண்ணியாக இருந்திருக்கமுடியும்? எப்படி பாலியலுக்காக மோதியிருக்கமுடியும்? இதில் இருந்து மனிதனைப் பெண் உருவாக்கினாள் என்பது கற்பனைப் புரட்டாகும்.


அத்துடன் இவற்றில் இருந்து வெளிவர தாயுரிமை சமூகம் தோற்றம் பெற்றது என்பது தவறானதாகி விடுகின்றது. தாயுரிமைச் சமூகம் திட்டவட்டமாகப் பெண்ணின் தாய்மையை அடையாளப்படுத்தி உருவானது. தன்னின உண்ணியாக இல்லாமல் போனது என்பது, மற்றவனை மனிதனாகத் தன்னையொத்த இனமாகக் கண்டதன் விளைவு மட்டுமேதான். இன்றைய சுரண்டல் அமைப்பு இல்லாது போக வேண்டும் எனின், மற்றவனைச் சுரண்டுவது மனித இயல்பு இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளும், மற்றவன் தன்னைப் போல் ஒரு மனிதன் என்பதைத் தெரிந்து கொள்ளும் அறிவு அவசியம். இது போராட்டத்தில் அடிப்படையான உள்ளடக்கமாகும்.


அடுத்து குரங்கிலிருந்து மனிதன் தோன்ற தனிமனித வாதத்துக்கு எதிரான இந்தத் தாய்மையுணர்வே காரணம் என்ற கருத்துரை, மனிதன் தோன்ற காரணமாக இருந்த உழைப்பை மறுக்கின்றது. தாய்மை உணர்வு உழைப்பைத் தோற்றுவித்ததா? என்ற கேள்வி இங்கு அடிப்படையாகின்றது. இல்லை. அப்படியாயின் எல்லா விலங்கினத்திலும் இந்தத் தாய்மை உணர்வு ஏன் புதிய மனிதர்களை ஒத்த உயிரினத்தைத் தோற்றுவிக்கவில்லை? அத்துடன் இந்தத் தாய்மை உணர்வு குரங்கிலும், மனிதனிடத்திலும் வேறுபாடு இன்றி (மனித வளர்ச்சியை ஒட்டிய உழைப்பு சார்ந்து தாய்மை உணர்வு வேறுபாட்டை இது மறுக்கவில்லை.) பொதுத் தன்மையில் காணப்படுகின்றது. குரங்கில் தாய்மை உணர்வு இல்லை என்றால் இந்த வாதம் ஒரு எடுகோளாக எடுப்பதை அனுமதிக்க முடியும். ஆனால் தாய்மையை எடுகோளாக எடுப்பதுக்குக் கூட அருகதையற்ற வாதமாகின்றது.


தாய்மை இயற்கையானது. அது எல்லா உயிரினத்திலும் மாறுபட்ட வடிவில் இருக்கின்றது, நீடிக்கின்றது. இதைப் பரிணாமத்தின் குறிப்பான மாற்றத்துக்குப் பொருத்துவது தவறானது. தாய்மை உணர்வு மனிதனைத் தோற்றுவிக்கவில்லை. மாறாக உழைப்பின் ஆற்றல்தான் மனிதனை உருவாக்குகின்றதே ஒழிய இயற்கையான உணர்வுகள் அல்ல. குரங்கில் இருந்து வளர்ச்சிபெற்ற இனம், உணவைத் தேடி அலையும் போராட்டத்தில் உழைப்புக் கருவியை உபயோகிக்க தொடங்கிய உழைப்புதான், குரங்கில் இருந்து மூளை வளர்ச்சி பெற்றபோது மனித குரங்கு, மனிதனையும் தோற்றுவித்தது.


மாமிசம் உண்ணாத விலங்குகளிடையே மோதல் நிகழ்வதில்லை என்பது தாராளமாக உணவு கிடைப்பதால்தான். இதனால் அவை இயற்கையில் சுயேட்சையாக மோதலைத் தவிர்த்து உண்டு வாழ்கின்றன. இதனால் பாலியல் புணர்ச்சியில் மிக இலகுவான வரைமுறையற்ற புணர்ச்சியைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. உணவின் மீதான ஆதிக்கப் போராட்டம் இயல்பில் பாலியலிலும் கடுமையாகின்றது. இயற்கை சார்ந்த இலகுவான உணவு கிடைக்கின்ற போது இலகுவான புணர்ச்சி ஏற்படுகின்றது.


குரங்கில் மாமிசம் அல்லாத உணவு இயற்கை சார்ந்து கிடைத்த போது எப்போதும் உணவுச் சண்டை இருப்பதில்லை. இயல்பாகவே ஜோடி சேர்ந்து புணருகின்றன. குரங்கு தாவர உண்ணியாக இருந்த நிலைமையால் அங்கு மோதல் என்பது கற்பனையானது. சண்டையும் சச்சரவையும் தாண்டிய எதிர்க் கண்ணோட்டத்தில் வாழ்ந்த பெண் அதன் அடிப்படையில், மனித இனத்தைத் தோற்றுவித்தாள் என்பது தவறான எடுகோளில் தவிடுபொடியாகின்றது. மனிதனின் தோற்றத்துக்குப் பெண் குரங்கின் தாய்மைத் தன்மைதான் காரணம் என்ற எடுகோள் மேலும் தவிடுபொடியாகின்றது. இயற்கை சார்ந்த உணவில் குரங்குகளுக்கிடையில் போராட்டம் என்பது கிடையாது. தாவர உண்ணியான குரங்கில் எப்படி இது இருந்திருக்கும். இது இப்படி இருக்கும்போது எப்படி "தாய்மை என்னும் உணர்ச்சியே விலங்கினின்று ~மனிதன்| தோன்றிய முதல்படி எனக் கூறலாம்."


குரங்கிலேயே கூட்டுச் சமூக கண்ணோட்டம் நிலவியதே ஒழிய, பெண்ணின் தாய்மைக் கண்ணோட்டத்தில் உருவாகவில்லை. அத்துடன் மாமிசம் உண்ணத் தொடங்கிய மனிதன் தாவர உணவையும் கலந்தே உண்டான். இங்கு மனிதனாக இருப்பதால் உணவுக்கான போராட்டம் இருக்கவில்லை. தொடர்ச்சி மற்றும் உயர்ந்த மனித இனமாக வளர்ச்சி பெற்ற தன்மையே மிருகத்தனத்தை ஒழிப்பதை நிபந்தனையாக்கியது. இதனால் புணர்ச்சியில் மோதல் இருக்கவில்லை.


முந்திய வாதத்தில் அடுத்து திரிபு முன்வருகின்றது. "மனிதக்குரங்கின் ஆணினம் மாமிச உண்ணிகளாக மாறி, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் பெண்ணினம் தாவர உண்ணிகளாகவே தொடர்ந்தனர்"50 என்ற எடுகோள் ஆணாதிக்கம் முன்கூட்டியே இருந்ததாக நிறுவ முயல்வதாகும். ஆணாதிக்கத்தின் வரலாற்றுக் காரணத்தைத் திசை திருப்ப இது முன் வைக்கப்படுகின்றது. ஏன் பெண் மனிதக் குரங்கு மாமிசம் உண்ணவில்லை. ஆணின் உணவுக்கான போட்டி மற்றும் தாய்மைக் கண்ணோட்டம் என்கின்றார். பெண்விலங்குகள் மாமிசம் உண்ணாத கற்பனையான பிறவிகளா? ஒரு விலங்கினம் மாமிச உண்ணியாக இருந்தால் அதில் ஆண் - பெண் விலக்கு என்பதே கிடையாது. இப்படி முன்வைக்கும் உயிரியல் இயற்கை ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் உண்மையில் ஆணாதிக்கத்தின் பிம்பமாக வரலாற்றைத் திரித்தே எழுதினர், எழுதுகின்றனர்.


குரங்கில் இருந்து மனிதன் தோன்றிய போதும் சரி, மனிதக் குரங்கில் இருந்து மனிதன் தோன்றிய போதும் சரி ஆண் - பெண் தனித்து விடப்படவில்லை. உணவுக்கான போராட்டத்தில் சேர்ந்தே போராடினர். இதுமட்டும் தான் மனிதச் சமுதாயத்தின் அடிப்படையான இயங்கியலாகும். இந்தப் போராட்டத்தில் சொந்தக் குழந்தையைப் பாதுகாக்கும் போது ஆண் - பெண் என இருவரும் இணைந்தே நின்றனர். இது தாக்குதலின் போதும் சரி, தற்காப்பின் போதும் சரி இங்கு வேறுபாடு இருக்கவில்லை. இதில் கொன்ற விலங்கை உண்ணத் தொடங்கிய போது சேர்ந்தே உண்டனர். பெண் விலகிச் சென்று தாவர உணவை உண்ணவில்லை. இது அறிவியலுக்கு புறம்பான வாதம். எப்படி இது சாத்தியம்? அரியண்டம், விலக்கு, பாவம் போன்ற உணர்வுகள் பிந்திய கால உணர்வுகளாகும்.


சொந்தக் குழந்தை மீதான தற்காப்பு கருதி, உணவின் தேவை அபரீதமாகக் கிடைத்த போதே, பெண் தனித்து நின்று குழந்தையைப் பராமரிக்கும் முதல் வேலைப்பிரிவினை ஏற்பட்டது. இது மிகவும் பிற்பட்ட கால நிகழ்வாகும். இந்த முதல் வேலைப்பிரிவினையில் இருந்துதான் ஆண் பெண்ணுக்கிடையில் உணவுப் பழக்கத்தில் வேறுபாடுகள் தோற்றம் பெற்றது. அதுவரை உணவுப் பழக்கத்தில் ஆண் - பெண் வேறுபாடு என்பது இருக்கவில்லை. பொருளாதாரக் காரணத்தால் அதாவது, எந்த உழைப்பின் ஊடாக ஆண் - பெண் உணவைப் பெற்றனரோ அது பொதுவாக இருந்ததால் உணவும் ஒன்றாகவே இருந்தது.


குழந்தைப் பராமரிப்பு இங்கு பெண்ணை ஒதுக்கும் கண்ணோட்டத்தில் அல்ல, மாறாகக் குழந்தையின் பாதுகாப்பில் நடந்த வேலைப்பிரிவினையும், கிடைத்த உணவை அந்த இடத்திலேயே உண்ண நிர்ப்பந்தித்த தன்மையையும் அடிப்படையாகக் கொண்டு, உணவில் மாற்றம் காண்கின்றது. இதில் தனித்து நின்ற பெண் படிப்படியாகக் கண்டுபிடித்த தாவர உணவை உற்பத்தி செய்ததும், மிருக வளர்ப்பின் ஊடாகப் பால் போன்ற உணவைக் கண்டுபிடித்ததும் நிகழ்கின்ற போது, உணவுச் சங்கிலியிலும் பிளவு ஏற்படுகின்றது. இது உடல் வலுவை மாற்றியமைக்கின்றது. இறைச்சியை அதிகமாக உண்ட ஆண் வலிமை பெற்றவனாக மாறுகின்றான். இந்த உணவு மாற்றத்துக்கு முன் ஆண் பெண் இருவரின் வலுவும் ஒரே தன்மை கொண்டவையாகவே இருந்தது.


குரங்கில் இருந்து மனிதக் குரங்காகி மனிதனாகிய வடிவத்தில் நிமிர்ந்து நடக்கத் தொடங்கிய மாற்றத்தில், இறைச்சி ஆண் - பெண் விதிவிலக்கின்றி முக்கியமான பாத்திரத்தை ஆற்றியது. பெண் இறைச்சியைத் தவிர்த்து இருந்தால், மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். இறைச்சி மட்டும்தான் ஆண் - பெண் உடல் அமைப்பை முற்றாக மாற்றியமைக்கும் வலுவை வழங்கியது. பெண்ணின் தாய்மை மற்றும் தாவர உண்ணியாக இருந்ததால் மனிதன் தோன்றினான் என்பது கற்பனையான அறிவற்ற மூடத்தனமாகும். மனிதனின் தோற்றம் உழைப்பை அடிப்படையாகக் கொண்டது. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் விதிவிலக்கற்ற ஒரே நியதியான காரணத்தால் உருவானது. முதல் வேலைப் பிரிவினைதான் மாற்றத்தை ஆண் பெண்ணுக்கிடையில் இனவிருத்திக்கு அப்பால் வித்திட்டது. ஆனால் இது பெண்ணடிமைத்தனத்தைத் தோற்றுவித்துவிடவில்லை. அவசியம் கருதி, தேவை கருதி உருவான மனித வளர்ச்சியின் நியதிகளை எல்லாம் உள்வாங்கியபடிதான், அதற்கு எதிராகப் பெண்ணடிமைத்தனம் தனிச்சொத்துரிமையின் விளைவாகியது. மனித வளர்ச்சியில் உருவாகும் மனிதக் கண்டுபிடிப்பான விஞ்ஞானம், எப்படி மனித அழிவை வித்திடுகின்றதோ அதுபோல்தான் இதுவும்.


உணவுச் சங்கிலியில் சண்டையும் சச்சரவும் நிகழ்ந்ததால் அங்கு ஆண் பெண் விதிவிலக்கின்றியே நிகழ்கின்றது. பெண்ணின் தாய்மை சார்ந்த வாழ்க்கை இயற்கையின் தன்மையாகும். இது பெண்ணின் தனிமை வாதத்துக்கு எதிரான உணர்ச்சியல்ல. அத்துடன் இது மனித இனத்தைத் தோற்றுவிக்கும் மூலமாக இருந்ததில்லை. தனிமை வாதம் தனிச்சொத்துரிமையின் பிந்திய கால உணர்ச்சி மட்டுமே. சுரண்டல் அமைப்புதான் ஆணாதிக்கத்தை வித்திட்டது. தனிமை வாதத்தை முன்னிறுத்தியது.


அடுத்து, பெண் ஆணில் இருந்து விலகி தாவரம் உண்ணுவது போன்ற விளக்கங்கள் மறுதளத்தில் பெண் தனிமைவாதத்தின் பிரதிநிதியாக ஆக்கப்படுகின்றாள். ஆணாதிக்கம் தனிச் சொத்துரிமையில் தோற்றுவித்ததை முன்கூட்டியே பல்வேறு துறைகளில் பெண் பிரிந்து சென்றதனால் உருவானதாகக் காட்டுவது, இந்த ஆணாதிக்கச் சூறையாடும் அமைப்பைப் பூசி மெழுகி அதைப் பாதுகாப்பதாகும். இதனால் மறைமுகமாகப் பெண்ணைப் புகழ்வது போல் காட்டி சேறு வீசுவதாகும். அதாவது, பெண்ணை அழகின் பிம்பமாக்கி, அதன் பின் வேசையாக்கி இழிவாக்கும் ஆணாதிக்க வடிவத்தில் இது முன்வைக்கப்படுகின்றது.


இதையொத்த அடுத்த கருத்துரையைப் பார்ப்போம். "...எந்த வகைப் பாலூட்டிகளை எடுத்துக் கொண்டாலும், புணர்ச்சிக்குப் பின் பெண் விலங்குகள் தனித்தே தாமொரு கூட்டமாய் வாழ்வதைக் காணலாம்"50 என்ற வாதம் முற்றிலும் தவறானது. விலங்குக் கூட்டங்கள் ஆண் - பெண் பிளவுகளைக் கொண்டவையல்ல. இயற்கையாக விலங்குகள் வாழும் இடம் எங்கும் புணர்ச்சிக்கு முன் - பின, ஆண் - பெண் சேர்ந்தே வாழ்கின்றன. சில விலங்குகளில் ஒதுங்கிக் கொள்ளும் தன்மை குறித்த விசேட சிறப்பு தன்மையில் மட்டுமேதான். அடுத்த கணம் இயல்பாகச் சேர்ந்து வாழ்கின்றன. இது மனித இனத்தில் பொருத்துவது அபத்தமாகும். ஏனெனில் விலங்கு இனத்தில் இருந்து மனிதன் பிரிந்துவந்த இயங்கியல் வளர்ச்சிவிதியே இதற்கு எதிரானது. மனிதனை மிருகமாகக் கருதிய ஆய்வு குப்பைத் தொட்டியில் வீசுவதற்கே உதவும். இயங்கியல் வளர்ச்சி விதி மீதான மூடத்தனமான அறிவுள்ளவர்கள் மட்டுமே இப்படி எடுத்து வைப்பது சாத்தியம்.


பெண்கள் தனித்து தாமொரு கூட்டமாக வாழ்வது என்பது ஆணாதிக்கத்தை மறைமுகமாக ஏற்பதாகும். இதில் இருந்துதான் ஓரினச் சேர்க்கை போன்ற கோட்பாடுகள் இயற்கையை மறுத்து விளக்கம் பெறுகின்றன. ஆண் - பெண் பிளவை இயல்பான ஓர் இயற்கை நிகழ்ச்சியாக, மிருகத்தைக் கொண்டு புனைந்து காட்டுவது ஆணாதிக்கத்தை மறைமுகமாக நிலைநிறுத்துவதாகும்.


இதைச் செழுமைப்படுத்த வைக்கும் வாதத்தைப் பார்ப்போம். "... சமூகத்தின் ஆரம்பக் கட்டமானது பாலுறவின் அடிப்படையில் அமையாத - பொருளாதார ரீதியில் தொடர்பு கொண்ட சகோதரர்களும் - சகோதரிகளும் அன்னையரின் தலைமையின் கீழ் இயங்கிய அமைப்பாகும் என்பது புலனாகிறது. ஆண் இனத்தினையும் பெண் இனத்தையும் இரு வேறான பிரிவுகளாக்கி தம் கட்டுப்பாட்டினுள் வைத்திருந்ததாலேயே பெண்கள் சகோதரத்துவ அமைப்பைக் கட்டி எழுப்பினர். இதனை வகுக்கப்பட்ட உறவுமுறை என்று குறிப்பிடலாம். ஆண்களும் பெண்களும் தனித்தனியே குழுக்களாக வாழ்ந்து வந்த இக்காட்டுமிராண்டி நிலை..."50 எனத் தொடர்கின்ற ஆய்வுரைகள் அபத்தமானவை.


ஆரம்பக்கட்டத்தில் ஆண் பெண் உறவு பொருளாதார ரீதியானது என்பது வியக்கத்தக்க திரிபாகும். அத்துடன் ஆரம்பம் அல்லாத பிந்திய கால உறவு பாலியல் உறவு என்பது மறைமுகமாகக் குறிப்பிடப்படுகின்றது. இன்றைய சமுதாயத்தைப் பற்றிய மார்க்சிய ஆய்வுகளின் போது ஆண் - பெண் உறவைப் பொருளாதார உறவாகக் காண்கின்றது. அதே நேரம் ஆண் எதிர்ப்பு கொண்ட பெண்ணியம் இன்றைய சமுதாயத்தில் ஆண் - பெண் உறவைப் பாலியல் உறவாகச் சித்திரிக்கின்றது. இதுவே இன்றைய நிலையில் இருவேறுபட்ட அரசியல் நிலையாகும். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் துல்லியமான வேறுபாடாகும். இன்று ஆண் - பெண்ணின் அனைத்து வகையான உறவுகளுமே பொருளாதார ரீதியானவையாக இருக்க, அதைக் கடந்த காட்டுமிராண்டி நிலைக்கு எளிமைப்படுத்துவது ஏன்? இன்றைய மனித உறவுகளின் விபச்சாரத்தனத்தின் உட்கூறுகளை மூடிமறைத்து மந்தப்படுத்துவதற்கே. இன்றைய ஆண் பெண்ணின் உறவு பொருளாதாரம் சார்ந்து அமைவதைத் திரித்துக் காட்டி, பாலியல் உறவாகக் காட்ட, வரலாற்றுத் திரிபை ஆதி மனிதனுக்குக் கடத்தி செல்வது அவசியமாகின்றது.


பெண் தலைமையில் சமுதாயம் தோன்றியது என்பது குழந்தையின் வழியாகத்தான் என்பது மறுக்கப்படுகின்றது. உணவுக்கான உழைப்பு, மனித விருத்திக்கான தாய்மை, உழைப்பில் பெண்ணின் பாத்திரம் முன்னேறிய வகையில் மதிக்கப்பட்டது. இதனால் தாய்வழிச் சமுதாயத்தை அடையாளம் காண்பது நிகழ்கின்றது. தாய்மை மட்டுமே குழுவை வேறுபடுத்தியதால் தாய்மை குழுவின் ஆதாரமாகியது. இதனால் பெண் உயர்ந்த ஸ்தானத்தை (இடத்தைப்)பெற்றாள்.


காட்டுமிராண்டி கால ஆண் - பெண் உறவுகள் இயற்கை சார்ந்து சுதந்திரமான உணவுப் போராட்டத்தில் கூடிவாழும் வாழ்க்கையாகவே இருந்தன. இது சகோதர - சகோதரி உறவு என்று எதையும் கொண்டிருக்கவில்லை. ஏனெனின் அப்படி ஓர் உறவுமுறையே தெரிந்திராத காலமாகும். உறவு, அன்பு, ஆசை, காதல், பிரிவு, இணைவு, பரிவு, சகோதரத்துவம், தனிமைவாதம், கூட்டுவாதம் போன்ற உறவுகள் எல்லாம் அன்று கற்பனையானவை. இவை பிந்தியகால விளைவுகளாகும். கிடைப்பதைச் சேர்ந்து உண்ணும் ஆதி பொதுவுடைமை சமுதாயத்தில் வரைமுறையற்ற புணர்ச்சியே உணவுப் போராட்டத்தை எளிமைப்படுத்தியது. ஆண்கள் தனியாக, பெண்கள் தனியாக வாழ்ந்தனர் என்ற புனைவுகள் கற்பனையானவை. அப்படி வாழ ஆணின் சண்டை சச்சரவு கொண்ட உணவு உண்ணும் முறையும், புணர்ச்சி வேட்கையுமே காரணம் என்ற எடுகோள் முற்றாகத் தவறானது என்பதை மேலே பார்த்தோம்.


குரங்கு மாமிச உண்ணியாக இருக்காமையும், அத்துடன் ஒரு விலங்கு என்ன உணவை உண்கின்றதோ, அதை ஆண் - பெண் வேறுபாடு இன்றியே அதன் எல்லைக்குள் உண்டு வாழ்ந்தன. இதில் ஆண் - பெண் வேறுபாடு என்பது வரலாற்றுக் கற்பனையாகும். இதை மறுக்க இன்றைய சில மிருக இனத்தின் குறித்த நேர நடத்தைகள் எந்த விதத்திலும் மனிதனுக்கும் பொருந்தாது. அன்னையர் தலைமையில் சமூகம் இருந்தது என்றால், பெண்ணினுடைய தாய்மையின் அடிப்படையில் மட்டுமேயாகும். மனித இனவிருத்தி மட்டுமேதான் சந்ததியின் வாழ்வைப் பாதுகாத்ததுடன், தாய் வழிமட்டுமே சொந்த இனத்தை அடையாளம் காட்டும் ஊடகமாக இருந்தது.

 
இயற்கையின் அனைத்துச் செல்வங்கள் மீதும் மனிதன் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும், இயல்பாகத் தாயின் இயற்கையான குழந்தை உற்பத்தியைப் போற்ற வைத்தது. இதனால் பெண் சமூகத்தின் வழிகாட்டியானாள். பெண் சகோதர - சகோதரி என்ற அமைப்பை உருவாக்கி கண்காணித்த நீதியான அமைப்பு என்பது கற்பனையானது. அரசு வடிவங்கள், கண்காணிப்புகள் எல்லாம் கடந்த 3000 வருடத் தனிச்சொத்துரிமையின் கேவலமான கொடையாகும். அன்று ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே கூடி வாழ்ந்தனரே ஒழிய தனித்தனியான சமூகமாக வாழவில்லை. இது மிருகத்திற்கும் பொருந்தும். இனவிருத்தியின் போதும் சரி, பாலூட்டும் போதும் சரி தனித்து ஒதுங்கியிருப்பது இதில் இருந்து முற்றிலும் வேறுபட்ட நிகழ்ச்சியாகும். அத்துடன் ஆண் - பெண் குழுக்களாகப் பிரித்து வைத்த நிகழ்வு, வாழ்க்கை முறைகள் எல்லாம் பிந்திய கால நிகழ்ச்சிகளாகும்.


பெண், சமூகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிகார அமைப்பைக் கட்டமைத்து விடவில்லை. மாறாகப் பெண் இயற்கையாக, இயல்பாகத் தலைமை தாங்கினாள். இங்கு உத்தரவுகள் இருந்ததில்லை. தாய்மைக் கண்ணோட்டத்தில் அவளின் கருத்து மதிக்கப்பட்டது. இன்று இருப்பதுபோல் முரண்பாடுகள் அன்று இருந்ததில்லை. சமுதாயத் தொடர்ச்சியில் இயற்கை முரண்பாடுகள் மீதே மனித முரண்பாடுகள் இருந்தன. இயற்கை சார்ந்த வாழ்வில் இதைக் கடப்பது இயல்பாக இருந்தது. இதை மறுத்து பெண் கட்டுப்பாட்டை வைத்திருந்தாள் என்பதும், ஆண் - பெண் குழுக்களாகப் பிரித்து வைத்திருந்தாள் என்பதும், பொருளாதார ரீதியில் பாதுகாத்து வைத்திருந்தாள் என்பதும் வரலாற்றுத் திரிபாகும். இது இன்றைய ஆணாதிக்க அமைப்பை ஒத்த பெண்ணாதிக்க அமைப்பு நிலவியதாகக் காட்டுவதன் மூலம், இன்றைய ஆணாதிக்கம் நியாயப்படுத்தப்படுகின்றது. பெண்ணாதிக்கச் சமூகம் நிலவியதாகக் காட்டி, அதை ஆண் கைப்பற்றியதாகக் காட்டுவதன் நோக்கம், உண்மையில் ஆணாதிக்கம் தனிச் சொத்துரிமையில் தோற்றம் பெற்றது என்பதைக் கோட்பாட்டு ரீதியில் சிதைக்கத்தான். அத்துடன் இன்று பெண்ணாதிக்கக் கண்ணோட்டத்தில் ஆண் எதிர்ப்பு கொண்ட பெண்ணியத்தை நியாயப்படுத்த முயல்கின்றது. ஆண் எதிர்ப்பற்ற ஆணாதிக்க எதிர்ப்பு கொண்ட மார்க்சிய அரசியல் மார்க்கத்தைச் சிதைக்க வரலாற்றுத் திரிவு நிபந்தனையாகின்றது. இதன் மூலம் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்கும் வடிவம் ஏற்படுகின்றது. இந்த ஏகாதிபத்திய அமைப்பு ஆண் எதிர்ப்பின் ஊடாக வாழ்த்தப்படுகின்றது அல்லவா.


ஆண் - பெண் பிளவு, திட்டவட்டமாக ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையுடன் தொடர்புடையனவாக இருந்தது. தலைமுறைகளுக்கு இடையிலான புணர்ச்சியை விலக்கிய போதும் சரி, சகோதர - சகோதரிகளுக்கு இடையிலான புணர்ச்சியை விலக்கிய போதும் சரி இவை கடைப்பிடிக்கப்பட்ட வழிகளில் ஆண் - பெண் குழுக்களை உருவாக்கிவிடவில்லை. இவை அச்சமூகங்களில் உருவாக்கப்பட்ட போது நீண்ட நெகிழ்ச்சியான வழிகளில்தான் உருவானது. இங்கு யாரும் யாரையும் கட்டுப்படுத்தியதில்லை. அதுபோல் யாரும் யாருக்கும் அடங்கி நடந்ததில்லை.


சமூகத்தின் உயர்ந்தபட்ச இணக்கத்துடன் கூடிய வாழ்க்கை முறையின் பிரதிநிதிகள்தான், சமுதாய வளர்ச்சியின் அங்கமாகவே எல்லோரும் இணைந்து உருவாக்கியவைதான் இவைகள். சமூகத்தின் உயர்ந்தபட்ச ஒன்று இணைந்த இயக்கத்தில்தான் பொதுவாக இவை கட்டுப்பாடு நிறைந்த வடிவமாக இருந்தது. அத்துடன் இந்த விலக்கு சமுதாயத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்பதால், இதன் மேலான முரண்பாடு அற்றுச் சென்றது. பெண் தலைமை தாங்கிய சமூகத்தில் பாலியல் மேலாண்மை ஆணிடம் இருக்கவில்லை. பெண்ணிடமும் இருக்கவில்லை. இன்று உள்ளது போல் அன்று காட்டப்படும் புனைவுகளில், ஆணின் அடங்காத புணர்ச்சி வேட்கை என்பது கற்பனையானது மட்டுமின்றி, பெண் தலைமை தாங்கிய போது இது சாத்தியமென்பது அறிவற்ற புரட்டுமாகும். ஆணாதிக்கத்தில் மட்டுமே பிளவுகள் தோன்றி இறுகியது.


உழைப்பை அடிப்படையாகக் கொண்ட வௌவேறு பிரிவுகளின் சடங்குகள் உழைப்பை மேம்படுத்தும் வகையில் இருந்தன. இது மனிதனைப் பிளந்து விடவில்லை. ஆனால் தனிச் சொத்துரிமையின் பின்புதான் ஆணுக்குத் தனியான சடங்குகள், பெண்ணுக்குத் தனியான சடங்குகள் என பால்ரீதியில் பிளவு உருவானது. இது மனிதனைப் பிளந்தது. சமையல் முறைகள், படுக்கை அறைகள் என பல்வேறு வழிகளில் விலக்கி வைப்பது உருவாகியது. இது திட்டவட்டமாகப் பால்ரீதியில் விலக்கப்பட்ட நிகழ்ச்சியாகும். பெண்ணின் ஆரம்பக் காலங்களில் வேறுபட்ட சடங்குகள், இனவிருத்தி சார்ந்த செயற்பாடுகள், உழைப்பின் வேறுபாடுகள் மீது மட்டுமே நீடித்தன. ஆனால் ஆணாதிக்கம் கோலோச்சிய பின்புதான் பொருளாதார ரீதியான சடங்குகள், பழக்க வழக்கங்கள் பெண்ணை ஆணில் இருந்து திட்டவட்டமாகப் பிரித்தது.


அடுத்து நேரடியாக ஏங்கெல்சைத் திருத்தி மறுத்து எழுதும் வரிகளைப் பார்ப்போம். "உண்மையில் ஏங்கெல்ஸ் குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை தந்தையுடைமைச் சமுதாயம் நன்கு வேரூன்றிய பின்பே ஏற்பட்டது. அப்போதுதான் ஆண்கள் பெண்களை வலுக்கட்டாயமாக வீட்டில் இருத்தி வேற்று அடிமைகளைக் கொண்டு தமது வேலைகளைச் செய்வித்தனர்... வர்க்கரீதியான அடக்குமுறை ஏற்பட்ட அதே வீச்சில் பெண்களின் ஒடுக்குமுறையும் உருவாகியிருக்க வேண்டும்" என்று வரலாறு புரட்டிக் காட்டப்படுகின்றது. உழைப்புப் பிரிவினையின் தந்தை ஆதிக்கச் சமுதாயத்தின் விளைவா? அல்லது பெண் தலைமை தாங்கிய காலத்தின் விளைவா? என்ற கேள்வி இங்கு முன்வைக்கப்படுகின்றது.


கி.பி. 1846-ஆம் ஆண்டில் மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் எழுதிய கட்டுரையில் "குழந்தை பெறுவதற்கான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான வேலைப் பிரிவினைதான் முதல் வேலைப்பிரிவினை ஆகும்"51 என்றார். இதை மேலும் ஏங்கெல்ஸ் "வரலாற்றில் தோன்றிய முதல் வர்க்கப் பகைமை ஒருதார மணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பகைமை வளர்வதுடன் பொருந்துகிறது. முதல் வர்க்க ஒடுக்குமுறை பெண்பாலை ஆண்பால் ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையுடன் பொருந்துகின்றது. ஒருதார மணமுறை வரலாற்று ரீதியில் மகத்தான முன்னேற்றமாகும். ஆனால் அதே சமயத்தில், அது அடிமைமுறையுடனும் தனிச்சொத்துடனும் சேர்ந்தாற்போலவே இன்றளவும் நீடிக்கின்ற ஒரு யுகத்தைத் துவங்கியது"51 என்றார்.


தந்தையுடைமை சமூகம் விவசாயத்தை ஆதாரமாகக் கொண்ட உற்பத்திமுறையால் ஒருதாரத் தனியுடைமைக் குடும்பம் உருவானது. இதற்கு வெளியில் தந்தையுடைமை சமூகம் உருவாகி இருக்க முடியாது. தனிச் சொத்துரிமை மட்டும் தான் தந்தையுடைமைச் சமுதாயத்தின் ஆதாரமாக இருந்தது. இதனால் சொத்துடைமைக்கான வாரிசுரிமையைத் தந்தை பெற்றதன் மூலம், முடிவாகப் பெண் தலைமையிலான சமூகம் முடிவுக்கு வந்தது. விவசாயத்தைப் பெண்களிடம் இருந்து ஆண்கள் தமது கையில் எடுத்ததன் மூலமே உபரியைத் திரட்டமுடிந்தது.


பிரதான வேலையாக உணவு வேட்டை இருந்தபோதே குழந்தையின் பாதுகாப்பை முன்னிட்டு, குழந்தைக்குப் பாதுகாப்பாகத் தாய் நிலையான இடத்தில் தங்கி இருப்பது நடைமுறையாகியது. இதில் குழந்தைகளைக் கொண்ட தாய்மார் மட்டும் தனித்து நிற்க அல்லது அவர்களுக்குத் துணையாகப் போதுமான பாதுகாப்பு கொண்ட பிரிவு நிற்க, ஆண் - பெண் வேட்டை தொடர்ந்தது. தனித்து நின்ற பெண்கள், குழந்தைகள் விவசாயத்தை அனுபவ வாயிலாகக் கண்டுபிடிக்கின்றனர். கால் நடை வளர்ப்பு கண்டுபிடிக்கப்படுகின்றது. இந்த வேட்டையும், தங்கி நிற்றலும், அது சார்ந்த விவசாயமும், கால்நடை வளர்ப்பும் சமூகத்துக்குள்ளான வேலைப் பகிர்வாக இருந்தது. இதில் இருந்து கால்நடை வளர்ப்பு பிரித்துச் சென்றதே முதல் வேலைப் பிரிவினையாகும்.


சமூகத்தின் பொதுச் சொத்தாகவும், சொந்த உழைப்புக் கருவியாகவும் இருந்த கால்நடையைச் சமுதாய ரீதியில் பிரித்துச் சென்ற போது முதல் மாபெரும் உழைப்புப் பிரிவினையாகியது. இதை ஏங்கெல்ஸ் "அநாகரிகர்களின் பொதுவான கூட்டத்திலிருந்து கால்நடை வளர்க்கும் இனக்குழுக்கள் தனியே பிரிந்து சென்றன. இதுதான் சமுதாய ரீதியில் ஏற்பட்ட முதல் மாபெரும் உழைப்புப் பிரிவினை ஆகும்... ...முதல் மாபெரும் சமூக உழைப்புப் பிரிவினையிலிருந்து முதன்முதலாகச் சமுதாயத்தில் மாபெரும் வர்க்கப் பிரிவினை தோன்றியது."51


முதல் உழைப்புப் பிரிவினை பெண்ணுக்கும் ஆணுக்கும் தோன்றிய போது அது சமுதாயத்தைப் பிளந்து விடவில்லை. சமுதாயத்தின் அவசியம் கருதி உருவான பிளவு, பெண் சார்ந்த வீட்டு உற்பத்தி மூலம் பிளந்து விடவில்லை. மாறாக உற்பத்தி மற்றும் உழைப்பு வடிவம் ஐக்கியமாக்கியது. அங்கு பெண்தான் தொடர்ந்து தலைமை தாங்கினாள். ஆனால் கால்நடை வளர்ப்பு உழைப்புப் பிரிவினையாகி, அவை வீட்டுக்கு வெளியில் சென்ற போது, சமுதாயப் பிளவாகி பெண்ணின் தலைமை ஆணிடம் செல்வதை உறுதிப்படுத்தியது. உழைப்பின் வடிவம், இடம் ஆணின் தலைமையை இயல்பாக மாற்றியமைத்தது. இவை அநாகரிகக் காலத்திலேயே தோற்றம் பெற்றதே ஒழிய பிந்திய கால நிகழ்வுகள் அல்ல.


முன்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பிளவு சமுதாயப் பிளவாக இருக்கவில்லை. ஆனால் கால்நடை வளர்ப்பு பிளவாகிய போது அது சமுதாயத்தைப் பிளந்தது. உற்பத்தி வடிவம் தான் குடும்ப அமைப்பின் அடுத்தக் கட்டத்தைத் தீர்மானிக்கின்றது. அது ஒருதார மணத்தை உருவாக்குகின்றது. தனிச் சொத்துரிமை வடிவம் தான் ஒருதார மணத்தை உருவாக்கியதே ஒழிய, ஒருதாரமணம் தனிச்சொத்துரிமையை உருவாக்கி விடவில்லை. ஒருதாரமணம் தான் தனிச் சொத்துரிமையையும் வர்க்கப் பகையையும் உருவாக்கியது என்பது வரலாற்றுத் திரிபாகும். இது வர்க்கப் போராட்டத்தைப் பெண்ணியத்துக்குள் சிதைப்பதாகும்.


வர்க்கப் போராட்டமே பெண்ணை விடுவிக்கும் என்ற மார்க்சிய அடிப்படையை வரலாறு மற்றும் இயற்கைத் திரிபு ஊடாக மறுப்பதாகும். இதனால் தான் இப்படி கூறுகின்றனர். "உழைப்புப் பிரிவினை தந்தையுடைமைச் சமுதாயம் நன்கு வேரூன்றிய பின்பே ஏற்பட்டது. அப்போதுதான் ஆண்கள் பெண்களை வலுக்கட்டாயமாக வீட்டிலிருத்தி வேற்று அடிமைகளைக் கொண்டு தமது வேலைகளைச் செய்வித்தனர்" என்று வாதாட முனைகின்றனர். தந்தையுடைமை சமுதாயமே உழைப்புப் பிரிவினையை ஏற்படுத்தியது என்பது பொருளை மறுப்பதாகும். இது கருத்துமுதல் வாதமாகும. உழைப்புப் பிரிவினைதான் தந்தையுடைமை சமுதாயத்தை, உழைப்பை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் காரணத்தால் பிரிக்கின்றது.


அத்துடன் பெண்ணை வீட்டில் ஆண் இருத்தினான் என்பது அடுத்த வரலாற்றுத் திரிபாகின்றது. தந்தையுடைமை சமூகமே பெண்ணை வீட்டில் வலுக்கட்டாயமாக இருத்தியது என்பது, ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கை சார்ந்த குழந்தை வளர்ப்பில் பெண் தங்கி நின்றதை மறுக்கின்றது. தனியுடைமை சமுதாயம் பெண்ணை வீட்டில் அடைப்பதற்கு முன்பே பெண் வீட்டில் தங்கியிருந்தாள். ஒருதார மணம், கற்புரிமை போன்றவற்றைப் பெண் தனது தற்காப்பு சார்ந்து தெரிவு செய்த காரணத்தை மறுத்து, ஆணாதிக்கம் என்ன விளைவை ஏற்படுத்தியதோ, அதே போல்தான் பெண் தெரிவு செய்த, ஒரு நிலைத்த பிரதேசத்தில், குறித்த இடத்தில் வாழும் நிலைக்கும் ஏற்பட்டது. ஆனால் இன்றைய பெண்ணியல்வாதிகள் கற்புரிமை, ஒருதாரமணத் தெரிவு, வீட்டில் தங்கி வாழ்தல் போன்ற பெண்ணின் தெரிவை மறுத்துத் திரித்து காட்டுவதன் மூலம், பெண்ணின் இயற்கையான தெரிவை மறுப்பதன் மூலம், ஆணாதிக்கத்துக்குச் சேவை செய்கின்றனர்.


அநாகரிகக் காலக்கட்டத்தைத் தொடர்ந்து 3000 வருடங்களை அண்ணளவாகக் கொண்ட ஒருதார மணத்தை உருவாக்கிய தனிச் சொத்துரிமை அமைப்புக்கு முன்பே விவசாயம், கால்நடை வளர்ப்பு 10000 - 15000 வருடங்களுக்குள் தோன்றியதை வரலாற்று ஆய்வுகள் நிறுவுகின்றன. 4 இலட்சம் வருடங்களுக்கு முன் நெருப்பைக் கண்டுபிடித்தது முதல் 1.5 இலட்சம் வருடமாக நிலைத்த இடத்தில் தங்கி வாழ இருப்பிடங்களை உழைப்பின் மூலம் உருவாக்கத் தொடங்கினர். இதற்கு முன்பு இயற்கை சார்ந்த உணவு, இருப்பிடம், வேட்டை என மனிதன் அலைந்த வாழ்க்கை நீடித்தது. இதில் இருந்து மாறிய போதே முதல் வேலைப் பகிர்வுக்கான நிலைமை தொடங்கியிருந்தது.


நிலைத்த வாழ்க்கை என்பது அசாத்தியமான பல்வேறு கூறுகளுடன் எதற்காகத் தொடங்கியதோ, அதுவே பெண்ணின் குழந்தை பாதுகாப்பை நிர்ணயித்தது. இதற்கும் பிந்திய வரலாற்றில்தான் தனிச்சொத்துரிமை தோன்றி வளர்ந்தது. ஒருதார மணத்துக்கு முந்திய இணை மணங்கள் பெண்ணை அடிமைப்படுத்திவிடவில்லை என்பதுடன், பெண்ணே அவைகளைத் தேர்ந்தும் எடுத்தாள். இதுபோல் பெண் தலைமையிலான சமூகத்திலும், மாறிவந்த சமுதாயத்தின் பல்வேறு பெண் தெரிவுகளை ஆணாதிக்கம் உள்வாங்கி மறுவிளக்கம் கொடுத்து, பெண்ணை அடிமைப்படுத்திய வரலாற்றில் அதை மறுத்துத் திரிப்பது, இருக்கும் சுரண்டல் ஆணாதிக்கத்தைப் பாதுகாப்பதாகும்.


மொழியின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பணியைப் பெண்களே ஆற்றினர், ஆண்கள் அல்ல என்பது தவறான வாதமாகும். "...ஆண்களோ வேட்டையாடுதல், மீன்பிடித்தல் போன்ற தொழில்களிலேயே ஈடுபட்டதனால் முக்கியமாகத் தனிமையில்தான் செயற்பட்டார்கள். கூட்டாகச் செயற்பட்ட போது அமைதியாக இருக்கவே (ஏன்?) நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இவ்வாறாக மொழிவளர்ச்சிக்கான அஸ்திவாரங்களாகத் திகழ்ந்ததும் பெண்கள்தாம்"50 என்பது மனித வரலாற்றுச் சார்ந்த மொழி திரிபாகும்.


காட்டுமிராண்டி காலத்தில் ஆண் பெண் சமூகத்தில் உருவான உழைப்பின் அடிப்படை இயங்கியலில் இருந்தே தெரிந்த பொருட்களின் மீதான உழைப்பு விளக்க மொழி வளர்ச்சி பெற்றது. ஆண் பெண் வேலைப் பிரிவினையுடன் கூடிய மாறிய சமூகத் தன்மையில் ஆண்கள் அலைந்து திரிந்த நிலைமையால், மொழியின் பன்முகத் தன்மையின் விருத்தியில் பெண்களே பங்காற்றினர் என்ற வாதம் தவறானது. பெண்கள் சுற்றுப்புறத்தில் அதிக நேரம் கூடிப் பேசி வாழ்ந்ததால் மொழியின் ஆளுமை விரிவானதாகி, வளர்ச்சியில் பெண் தீர்க்கமாகப் பங்காற்றினாள் என்பது தர்க்க ரீதியில் தவறானது.


ஏனெனின் மொழியின் வளர்ச்சியில் புதிய சொற்கள் இணைவதை மட்டுப்படுத்தும் அளவுக்கு, பெண்களின் நடமாட்டம் தவிர்க்க முடியாது குறுகியதாக இருந்தது. ஆண்கள் அலைந்து திரிந்ததால் புதிய பொருட்களைக் கண்டறிவதன் மூலம், பொருட்களை மொழியுடன் இணைக்கும் போது சொற்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. பெண்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் நீண்டநேரம் இருந்தமையால், எந்நேரமும் கூடியிருப்பதால் மொழியின் இலக்கண - இலக்கியத் தன்மை சீர்படுத்துவதைப் பெண்களின் உழைப்புமுறை கோரியது. ஆண்களுக்கு உழைப்புமுறை அதற்கு எதிராக இருக்கவில்லை. ஆண்கள் மொழியின் சீரான ஒலியைப் (sound) பெண்கள் ஊடாகவே பெற்றனர்.


மொழியின் வளர்ச்சியில் ஆண் புதிய சொற்களைப் புகுத்த, பெண் அதை உள்வாங்கி மொழியின் சீரான ஒழுங்கமைப்பில் பங்கு கொண்டாள். ஆண்கள் வேட்டை மற்றும் மீன் பிடியில் தனிமையில் திரிந்ததால், மொழியைப் பெண்களின் தனிச் சிறப்பான பங்களிப்பு கொண்டவை என்ற வாதம் தவறானது. வேட்டை மற்றும் மீன் பிடியில் பொதுவாக ஈடுபட்ட ஆண்கள் தனித்து அல்ல, கூட்டமாகவே எப்போதும் செயல்பட்டனர். இதில் தனித்து இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்று கூறும் வாதம், விளக்கம் எதையும் தரவில்லை. ஏன் அப்படி இருக்கவேண்டும்.? அப்படியிருப்பது மனித இனத்தினது குணாம்சம் அல்ல.


மனித இனத்தில் கூட்டமாகச் சேர்ந்து வாழும் வகையிலான உழைப்பு மட்டுமே, உயிர்வாழும் நிபந்தனையாக புறநிலையாகவும் அகநிலையாகவும் இருந்தது. மொழியின் தேவை உழைப்பை அடிப்படையாகக் கொண்டு பொருட்களை விளக்க உருவான போதே, அதன் வரைமுறையற்ற வளர்ச்சியில் ஆண் - பெண்ணின் பங்களிப்பு நிபந்தனையானது. கூட்டாக வாழவும், கூட்டாகச் செயற்படவும், மொழியால் உரையாடல் நடத்தவும் எல்லா உழைப்புகளுக்கும் அடிப்படையாக இருந்தது. ஆண் தனித்து இருந்து இருப்பின் வேட்டையில் கூட வளர்ச்சி பெற்றிருக்க முடியாது.


இயற்கை சார்ந்த உணவுத் தேவையில் எழுந்த வேலைப் பிரிவினை ஆண் - பெண்ணைச் சமூக ரீதியாகப் பிளந்து விடவில்லை. சமூகத்தில் கூடிவாழ்வதே எப்போதும் முதன்மையானதாக இருந்தது. தனியுடைமை சமுதாயத்துக்கு முந்திய உழைப்புகளில் பொதுத் தன்மையே இதன் நிபந்தனையாகும். கால்நடை வளர்ப்பு குறிப்பாக விரிவான தொழிலாகி நடந்த முக்கியமான வேலைப் பிரிவினையாகிய போதும் கூட, கால்நடைகள் சமூகச் சொத்தாக இருந்ததால் அங்கு கால்நடை வளர்ப்புகூட கூட்டான உழைப்பாகவே இருந்தது.


மொழியின் வளர்ச்சியில் ஆண் பெண்ணின் பங்களிப்பு, அவர்களின் வேலைப்பிரிவினையுடன் வௌவேறு துறைகளில்தான் பங்களிப்பை நிபந்தனையாக்கியது. வேட்டை மற்றும் மீன் பிடிக்குச் செல்லுகின்ற காலக்கட்டத்தில் தனிமனிதச் சமுதாயம் தோன்றிவிடவில்லை. இன்றைய மற்றும் தனியுடைமை சமுதாயத்தைப் பொதுமைப்படுத்தி, வரலாறு முழுக்க பொருத்தும் வாதங்கள் இயல்பில் பெண்ணின் மீதான மிகை மதிப்பீட்டை ஆண் எதிர்ப்பில் ஏற்படுத்துகின்றது. அதாவது இயற்கை வரலாற்றை மனித வரலாறாகக் காட்டியது, பேசுவது போல் இது உள்ளது. அடிப்படையில் இவை ஆண் எதிர்ப்பை நிபந்தனையாக்குகின்றது.


வேட்டை மற்றும் மீன் பிடியில் ஆண்கள் புதிய மொழியைக் கண்டறியவும் (பொருளை அடையாளப்படுத்தவும், உழைப்பை விளக்கவும்), அதை விரிவாக்கவும் செய்த கண்டு பிடிப்புகளை மறுக்கின்றது. இயற்கை மற்றும் மனித வரலாற்றில் மனிதனுக்குள் வாழ்கின்ற வேறுபட்ட முரண்பட்ட பிரிவுகளின் பங்களிப்பைச் சரியாக மதிப்பிடவும், கண்டறியவும் தவறுகின்ற போக்கு, அடிப்படையில் இன்றைய ஆணாதிக்க வரலாற்றை நிறுவி பாதுகாக்க இத்திரிபுகள் மறைமுகமாக உதவுகின்றன.


இந்த நூலில் இது போன்ற விமர்சனங்கள் நிறையவே தொடர்ச்சியாக உள்ளன. அவை ஒரு தனி நூலுக்குரியவை. ஏங்கெல்சின் நூல் தொடர்ந்து இன்றும் இந்த நூல் திரிபுகளுக்கு எதிராகப் பலவிடயத்தில் பதில் அளிக்கின்றது. பல்வேறு தரவுகளையும் உள்ளடக்கியுள்ள இந்த நூல் அறிவியல் ரீதியாகத் தரவுகளைப் பல்வேறு துறைகளுக்குப் பயன்படுத்தக்கூடியது. இந்த நூல் தரவுகளை எடுக்கின்ற போது விமர்சனக் கண்கொண்டு பார்க்க தவறுகின்ற நிலையில், நாமும் தவறு இழைப்போம். மேலும் இந்நூல் அதிதீவிரமான ஆண் எதிர்ப்பு கொண்ட அராஜகவாதத்துக்குள் சென்று ஆணாதிக்கத்துக்கு மறைமுகமாகச் சேவை செய்வதை ஊக்குவிக்கின்றது. அத்துடன் நேரடியாக இயற்கை மற்றும் வரலாற்றுத் திரிபு நேரடியாக ஆணாதிக்கத்தைத் திருப்தி செய்வதன் மூலம் சுரண்டும் ஏகாதிபத்திய அமைப்பைப் பாதுகாக்கின்றது.