"சமுதாய மாற்றம் என்பது பெண்விடுதலையில்லாமல் சாத்தியமில்லை"  என்று லெனின் பிரகடனம் செய்தார். மார்க்சியத்தின் உள்ளார்ந்த உயிர்மூச்சைக் கழுத்தைப் பிடித்தே நெரித்துக் கொல்ல முனையும் மார்க்சிய விரோதிகள் பல திரிபுகளையும், வரலாற்று இயங்கியல் புரட்டுகளையும் கையாளுகின்றனர்.


"அன்புள்ள டாக்டர் மார்க்சுக்கு.." என்ற தலைப்பில் மார்க்சின் அன்றைய காலக்கட்டத்தை ஒட்டிய வடிவில் இன்று ஷீலா ரௌபாத்தம் என்பவர் எழுதிய கடிதம், அன்றைய வரலாற்று நிலைமையை மறுத்தபடி, இன்றைய வரலாற்று நிலைமையுடன் எழும் மார்க்சிய எதிர்ப்பில் வெளியாகியுள்ளது.


அன்றைய காலக்கட்டத்தில் எந்தப் பெண்ணும் இதுபோன்ற ஆணாதிக்க அபத்தங்களை மார்க்சிடம் எழுப்பியதில்லை. மார்க்ஸை எதிர்ப்பதில் கவனம் செலுத்திய மொத்த அறிவுலகமும் சரி, எந்தப் பெண்ணியமும் சரி, எதிர்த்து எந்தக் கணத்திலும் இதுபோன்ற ஆணாதிக்க அபத்தங்களை முன்வைக்க முடியவில்லை. ஆனால் 150 வருடத்தின் பின்னால் வைக்கின்ற போது அன்றைய வரலாற்று இயங்கியலை மறுத்தபடிதான், மார்க்சியம் மீது சேறடிக்க முடிகின்றது.


இதை வர்க்க விசுவாசத்துடன் வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை போன்றோர் மொழி பெயர்த்துள்ளனர். அத்துடன் நீண்ட மார்க்சிய எதிர்ப்பு விளக்கத்தையும் தந்துள்ளனர். இவைகளை நாம் ஆராய்வதன் மூலம் பல்வேறு மார்க்சிய எதிர்ப்புப் பெண்ணியம் அம்பலமாவது நிச்சயமாகின்றது. இந்த மார்க்சிய எதிர்ப்புப் பெண்ணியம் பொதுவாக மார்க்சியத்துக்குத் திருத்தத்தை முன்மொழிகின்றது. அதை மார்க்சியம் கவனத்தில் கொள்ளவில்லை என்ற சொற்றொடர்களின் ஊடாக எப்போதும் தன்னை முன்நிறுத்தி, மார்க்சியத்தின் வர்க்க அடிப்படையைச் சிதைக்க கனவு காண்பதை ஆதாரமாகக் கொள்கின்றது. அதைப் பார்ப்போம்.


இந்த நூலை என்ன நோக்கில் வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை போன்றோர் மொழி பெயர்த்தனர்? என்பதை, அவர்களின் சில கருத்துகள் ஊடாகப் பார்ப்போம். "சோசலிசம் பற்றி எழுத முனையும் யாருமே அதன் பெயரில் செய்யப்பட்ட குற்றங்கள், அநீதிகள் ஆகியனவற்றின் நீண்ட நிழலில் நின்று கொண்டுதான் எழுதவேண்டும். அதுவும் பெண்ணிய நோக்கிலிருந்து எழுதுவதென்பது, மிகவும் சிக்கலானது... சோசலிச, கம்யூனிச அமைப்புகளில் இருந்து கொண்டு பெண்ணிய அரசியல் பேசுவோர், அத்தகைய அரசியலைச் செயல்படுத்த விளைவோர்கள் எல்லோரும் ஒன்று அவ்வமைப்புகளால் புறக்கணிக்கப்படுகின்றனர் அல்லது கட்சி அமைப்புத் தலைவர்களால் மெத்தனமாக நடத்தப்படுகின்றனர்...


மார்க்சின் வரையறைகள் சோசலிசத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்க வல்லவை என்று கொள்ளாது, பெண்ணியச் சிந்தனையும் போராட்டங்களும் கூட சோசலிசத்தின் தன்மையை வரையறுக்க தகுதியுடையவை... மனித உறவுகள், குழந்தை வளர்ப்பு, கூடி வாழ்தல் ஆகியன குறித்து ஏங்கெல்ஸ் தவிர வேறு எந்த சோசலிஸ்டும் திட்டவட்டமாக, கோட்பாடு ரீதியாகச் சிந்தித்தாக தெரியவில்லை...


மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் முக்கியத்துவத்தை அங்கீகரித்த அதே நேரத்தில், அவர்கள் முன்வைத்த தீர்வுகளை காலவழக்கொழிந்து விட்டவையாகக் கருதினார்கள்."46 என்று தமது வர்க்க நிலை மற்றும் மார்க்சிய எதிர்ப்பைக் கொட்டித் தீர்த்ததன் விளைவுதான் இந்த நூல்.


சோசலிசத்தின் பெயரில் ~குற்றங்கள், அநீதிகளை| மார்க்சியம் இழைத்தது என்ற அவதூறுகள் மீது எந்தவிதமான ஆய்வுகளையும் வைக்கமுடியாமல் போகின்ற போக்கில், மார்க்சிய எதிர்ப்பில் இருந்தே இவை முன்வைக்கப்படுகின்றன. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பதைக் கோட்பாட்டு ரீதியில் மார்க்சியத் தலைவர்கள் நிறுவுவதற்காகப் போராடிய போது, பாட்டாளி வர்க்க வன்முறையைக் கோட்பாட்டு ரீதியாக நிறுவவேண்டிய வரலாற்றுக் கடமை உள்ளதைக் காண்கின்றோம். இதன் மீதான தத்துவ விவாதத்தை நாம் பிறிதோர் நூல் மூலமாக சந்திப்போம். இருந்த போதும், ~குற்றங்கள், அநீதிகளை| இந்த முதலாளித்துவ அமைப்பின் கண்ணோட்டத்தில் விளக்குகின்ற போக்குகளே எப்போதும் காணப்படுகின்றன. இது ரொக்சியத்தில் (வுசழவளமலளைஅ) தொடங்கி ஏகாதிபத்தியம் ஈறாக ஒரே வடிவில் ஒரே விதமாக விளக்குவதுதான், விதிவிலக்கின்றி அதன் பொதுப் பண்பாக உள்ளது. மேலெழுந்த வாரியாக நுனிப்புல் மேயும் செம்மறிகள்தான் ~குற்றம், அநீதிகள்| என்று காணும் எந்த விடயம் மீதும், பாட்டாளி வர்க்க அரசியலைப் பிரயோகித்தது கிடையாது.


ஒரு ~குற்றம்| அல்லது ~அநீதி| என்றால் அது எப்படி, எதனால், எதற்காக, ஏன், யாருக்கு எதிராக நடத்தப்பட்டது என்பது பற்றியோ, என்ன காரணத்தைக் கூறி நடத்தப்பட்டதோ அவைகள் மீதான அரசியல் விமர்சனம் இன்றித்தான் இவை பற்றி சேறு வீசப்படுகின்றது. பொதுவில் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை நிராகரித்தபடி, வர்க்கப் போராட்டத்தை நிராகரித்த படி, புரட்சிக்குப் பிந்திய சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்தை ஏற்க மறுத்தபடிதான், திருத்தங்களை, பற்றாக்குறைகளை இணையுங்கள் என்று கூறியபடி, ~குற்றங்கள் அநீதிகள்| பற்றி பொதுவாகப் புலம்புகின்றனர். இதற்குப் பின்னால் இருப்பது அண்மைய நோக்கிலும், நீண்ட கால நோக்கிலும் ஏகாதிபத்திய நலன்கள் என்பது வெள்ளிடை மலை.


கம்யூனிஸ்டுக் கட்சியில் பெண்ணியம் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்றனர் அல்லது தலைவர்களால் மெத்தனமாக நடத்தப்படுகின்றனர் என்ற அவதூறு அரசியல் ரீதியில் ஆதாரமற்றது. இப்படி ஒரு நிலை இருக்கும் பட்சத்தில் அது கம்ய+னிஸ்ட் கட்சியே அல்ல. அது வர்க்கப் போராட்டத்தைப் பற்றிக் கவலைப்படாத உங்களைப் போன்ற ஒரு முதலாளித்துவ கட்சிதான் (இது எந்தக் கட்சியின் பெயரில் இருந்தாலும்) என்பது, எல்லாத் தத்துவவியலாளருக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் புரியும். ஆனால் எப்போதும் மார்க்சிய எதிர்ப்பைத் தமது தொழிலாகக் கொண்ட, திருத்தங்களை முன் மொழிகின்றவர்களுக்கு மட்டும் இது எப்போதும் தெரிவதில்லை. "பூனை கண் மூடியபடி பால் குடிக்கும்" கதைபோல், தெரிந்தபடிதான் சேறு வீசுகின்றனர் என்பதை நாம் அறிவோம்.


ஒரு வர்க்கக் கட்சியில் வர்க்க அரசியலை முன்னெடுக்கும் பெண்கள் புறக்கணிக்கப்பட்டால் அல்லது அது போல் சமுதாயப் பிரச்சினை புறக்கணிக்கப்பட்டால் அங்கு சுயவிமர்சனம், விமர்சனம், உட்கட்சி ஜனநாயகம் மூலம் கையாளப்படுகின்றது. இது மறுக்கப்படும் எல்லா நிலையிலும் கேள்விக்கிடமின்றி முதலாளித்துவக் கட்சியாகவே இருக்கின்றது. இது கம்யூனிஸ்டுக் கட்சி வரலாறு நெடுகவும் நீண்டு இருக்கின்றது.


ஏங்கெல்சைத் தவிர மார்க்சியம் பெண்களின் பிரச்சினையில் அக்கறைப்படவில்லை என்ற அவதூறு, ஏங்கெல்சின் நூலை மறுத்து எந்தப் பெண்ணியமும் வாலாட்ட முடியாது என்பதால்தான், அதைப் புகழ்ந்த படி மற்றவற்றை இகழ்வது சதியாக உள்ளது. சிலர் ஏங்கெல்சையும் திருத்துகின்றனர். அதை வேறு இடத்தில் இக்கட்டுரையிலேயே பார்ப்போம்.


சோவியத் அக்டோபர் புரட்சி, சீனப் புரட்சி பெண்களுக்கு வழங்கிய விடுதலையை உலகில் எந்த நாட்டுப் பெண்களும் பெற்றது கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும். இதை மறுத்து நிறுவ முடியாது. முதலாளித்துவப் பெண்ணியல்வாதிகளே விரும்பியும் விரும்பாமலும் ஏங்கெல்சின் நூலைப் போல் ஒப்புக் கொள்கின்றனர். மார்க்சியம் ஏங்கெல்சின் கோட்பாட்டை ஏற்கின்ற போது, அதை வளப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் போராடுகின்றது. வெறும் தத்துவவியல் எழுதுவதே புரட்சியாகக் கொண்ட முதலாளித்துவவாதிகளுக்கு, அப்படி எழுதவில்லை என்றால் எதுவுமில்லை என்ற அர்த்தமாகிவிடும். கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டது போல், "முதலாளியாய் இருப்பவர் தனது மனைவியை வெறும் உற்பத்திக் கருவியாகவே பாவிக்கின்றார்." இது போல்தான் தத்துவத்தையும் காண்கின்றனர். நடைமுறை என்பது அவர்களுக்கு அலர்ஜிக்கான (ஒவ்வாமைக்கான) விடயமல்லவா? மார்க்சியம் கோட்பாட்டுடன் கூடிய நடைமுறை சார்ந்தது. இது சமுதாயத் தொடர்ச்சியை ஆதாரமாகவே எப்போதும் கொள்கின்றது. அது இயற்கையை அடிப்படையாகக் கொள்கின்றது. இருக்கின்ற வாழ்வியல் மீது குறுகிய தீர்வுகளை, குறுகிய ஆய்வுகளை, குறுகிய தத்துவங்களைத் திட்டவட்டமாக மறுத்துப் போராடும் போது, ஏங்கெல்சின் ஆய்வு ஆதாரமாக உள்ளதால் அதை மீளவும் முன்வைக்க வேண்டிய அவசியமற்றுப் போகின்றது. மீண்டும் நாங்கள் மூலதனத்தை எழுதவேண்டியதில்லை அல்லவா? அதை மேலும் புதிய நிலைமைகளால் வளப்படுத்துவதை மட்டுமே மார்க்சியவாதிகள் கடமையாகக் கொள்கின்றனர். உங்களைப் போன்ற முதலாளித்துவ இசைவாக்க திருத்தங்களை முன்வைப்பவர்களை, நிராகரிப்பவர்கள் நாங்கள்.


இதன் தொடர்ச்சியில்தான் இந்த மார்க்சிய எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். மார்க்சின் வர்க்க வரையறையை மீறி, பெண்ணியச் சிந்தனைகள் மார்க்சியமாக இருக்க முடியும் என்கின்றனர். மார்க்சின் பெயரால் உருவான மார்க்சியம், மார்க்சின் அடிப்படைக் கோட்பாட்டுகளுக்கே உரிமையானது. இதை மறுத்த அனைத்துத் திருத்தங்களும் மார்க்சியமல்ல. திருத்தம், இணைப்பு எல்லாம் மார்க்சியத்தைத் திருத்தும் திருத்தல்வாதமாகும். மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை ஏற்று, அதை வளர்க்க முடியும். ஆனால் முதலாளித்துவப் பெண்ணியங்கள் இதை மறுக்கின்றன. அதனால்தான் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் வரையறைகள் காலத்தால் வழக்கொழிந்து விட்டதாகப் பிரகடனம் செய்கின்றனர். ஆனால் வழக்கொழிந்தது எப்படி? வழக்கொழிந்தது எது? என்று மட்டும் கூறுவதில்லை.


வழக்கொழிந்ததாகக் கூறி மார்க்சிய அடிப்படையைத் திருத்த முனையும் இந்த மார்க்சிய எதிர்ப்பாளர்களின் நோக்கம், திட்டவட்டமாக மார்க்சியத்தின் போர்க்குணாம்சத்தை நலிவுறச் செய்வதாகும. காலத்தால் மார்க்சியம் எப்படி வழக்கொழிந்து போனது என்று எந்த நாயும் விளக்குவதற்கு அறிவோ, அருகதையோ, நேர்மையோ கிடையாது. முத்திரைகுத்தி மரபாக்குவதற்கு அப்பால் எதையும் முன்நோக்கி நகர்த்துவதில்லை. மந்தமான மூடத்தனத்தில் சமுதாயத்தை மழுங்கடிக்கவும், பெண்கள் தமது சொந்த விடுதலையைத் தனிச் சொத்துரிமை அழிப்பின் ஊடாக நிறுவுவதைத் தடுக்க முனைவதன் மூலமும், ஏகாதிபத்திய அமைப்பை நீடிக்கவைக்க முனைகின்றனர்.


பெண்ணியத்தை மார்க்சியம் கவனிக்கவில்லை என்று கூறிய, அண்மைக் காலத்தில் இந்திய நக்சல்பாரி இயக்கத்தில் இருந்து தனிப்பட்ட அரசியல் மற்றும் நடைமுறை முரண்பாடுகளால் விலகியதாக அறிவிக்கும் சிலர், பின் இணைந்து வைத்த விவாதத்தைப் பார்ப்போம்.


இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா.லெ.) மாநில அமைப்புக் கமிட்டி (ளுழுஊ) யில் இருந்து தனித்தனியாகப் பிரிந்தவர்கள் தம்மை "விடிவெள்ளிக்குழு" என்ற பெயர் ஊடாக அறிவித்து, முன்னணி என்ற சிறு பிரசுரத்தை (இதற்கு முன் வெளியிட்டதாகக் கூறும் பிரசுரம் எதையும் பார்க்கமுடியவில்லை.) வெளியிட்டுள்ளனர். அதில் "மாநில அமைப்புக் கமிட்டியின் குறுங்குழுவியமும் இடது முனைப்பியமும் வலது வாய்ப்பியமும் கோட்பாடற்ற முரண்பாடுகளும்"47 என்ற கட்டுரையில் பல்வேறு விடயங்கள் மீதும், சம்பவங்கள் மீதும் கருத்துக்களைக் கூறியிருந்தனர்.


இது பற்றி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா.லெ.) மாநில அமைப்புக் கமிட்டியின் (ளுழுஊ) பதில்கள் எதையும் பார்க்கமுடியவில்லை. பல்வேறு விடயங்களை விட்டு, ஆணாதிக்கம் என்ற எல்லைக்குள்ளான கோட்பாட்டு திசைகளில் பெண்ணியம் பற்றிய கருத்தைப் பார்ப்போம்.


"நாங்கள் மாநில அமைப்புக் கமிட்டியில் இருந்து பிரிந்து வந்ததற்கு ~தேயியம் (தேசியம்), சாதி, பெண் விடுதலைச் சிக்கல்களுக்கான கோட்பாட்டு உருவாக்கக் கண்ணோட்டமே அவர்களிடம் இல்லை| என்கிற காரணியத்தை ஏற்கனவே அறிவித்துள்ளோம். இதைப் பற்றிய கண்ணோட்டமும், நிலைப்பாடுகளும் பிற மார்க்சிய-லெனினியக் குழுவினரிடமும் இல்லை என்பதையும் அறிந்தோம்"47 என்கின்றனர். அதே நேரம் தம்மிடம் கூட அப்படியான கோட்பாட்டு உருவாக்கம் கிடையாது என்று கூறுவதுடன், அதை நோக்கிப் போராடுவதாகக் குறிப்பிடுகின்றனர்.


கேள்வி எங்கே எழுகின்றது என்றால், எந்த மார்க்சிய-லெனினியக் குழுவிடமும் இல்லை என்று பிரகடனம் செய்பவர்கள், மௌனமாகக் கடந்த உலகளாவிய வர்க்கப் போராட்ட வரலாற்றின் மீது பதிலளிக்கவில்லை. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்ற மார்க்சியத் தலைவர்களின் வரலாற்றுப் போராட்டத்தில், இவை தீர்க்கப்படவில்லையா? அல்லது தீர்க்கப்பட்டது எனின் எப்படி? அங்கு பெண்கள் அலட்சியப்படுத்தப்பட்டு ஆணாதிக்கச் சோசலிசத்தையா நிறுவினர்? இல்லையெனின் எப்படி? இதில் இருந்துதானே கோட்பாட்டு உருவாக்கத்தை முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் எம்மிடம் இல்லை என்று மறைமுகமாக கூறுவது அபத்தமானவையல்லவா?.


மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோர் பெண்ணியல் கோட்பாட்டு உருவாக்கத்தை முன்வைக்கவில்லை என்பதால்தான், இவர்களால் முடியவில்லையா? அல்லது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் பெண்ணியல் கோட்பாட்டைக் கூறாமல் மௌனமாக மறுக்கின்றீர்களா? எனின், மறுக்கின்றனர் என்பதை இவர்களிடம் கோட்பாடு இல்லை என்கின்ற கூற்று தெளிவாக்குகின்றது.


மார்க்சியம் வர்க்கப் போராட்டம் ஊடாகவே இவைகளைத் தீர்க்க முடியும் என்று பிரகடனம் செய்கின்றது. அந்த வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் போது ஜனநாயகக் கோரிக்கை உள்ளிட்ட பகுதிக் கோரிக்கையூடாகவே வர்க்கப் புரட்சியை நோக்கி முன்னேறுகின்றது. வர்க்கப் போராட்டம் என்பது எப்போதும் பல்வேறு பகுதி போராட்டத்தின் ஊடாகவே அரசியல் மயமாகின்றது. ஜனநாயகக் கோரிக்கைகள் எப்போதும் சலுகைகளுக்குள் முடங்குகின்றது. ஜனநாயகக் கோரிக்கை முதலாளித்துவக் கோரிக்கையாக இருப்பதால், ஒரு வர்க்கத்தின் சலுகையாக இருக்கின்றது. சலுகை என்பதை ஆராயும் போது, பொருளாதாரக் கோரிக்கை எப்படி அரசியல் கோரிக்கையாக இருக்க முடியாமல், ஒரு சிறுபகுதியின் நலனை முன்னிறுத்துகின்றதோ, அதே போல்தான் ஜனநாயகக் கோரிக்கையும் உள்ளது. அதாவது, ஜனநாயகக் கோரிக்கை முழுப் பெண்களின் நலனை உள்ளடக்குவதில்லை. பகுதிப் பெண்களின் நலனை முதன்மைப்படுத்தி, தீர்க்கப்படும் போது, அது சலுகையாகி விடுகின்றது.


விடிவெள்ளி குழு குறிப்பிடும் போது, உட்கட்சி ஜனநாயகத்தையும், கருத்து முரண்பாட்டையும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிய-லெனினியம்), மாநில அமைப்புக் கமிட்டி (ளுழுஊ) ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்திய போதும், தலைமையின் அணுகுமுறை தவறாக உள்ளதால் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர். இதுதான் மார்க்சிய-லெனினிய அணுகுமுறையா? இல்லை அல்லவா! தலைமை மட்டத்தில் இருக்கும் அணுகுமுறை தவறு என்றால் அதற்கு எதிரான உட்கட்சிப் போராட்டம் தானே அரசியல் மார்க்கம் ஆகும். மார்க்சிய-லெனினியப் புரட்சிகரக் குழுவாக நீடிக்கும் வரை எங்கும் எல்லா நிலையிலும் உட்கட்சிப் போராட்டம் மட்டுமே மாற்று அரசியல் மார்க்சிய-லெனினிய வழியாகும்.


எல்லா கம்யூனிச எதிரிகளும் மார்க்சியம் "தேயியம் (தேசியம்), சாதி, பெண்விடுதலைச் சிக்கல்களுக்கான கோட்பாடு"களுக்குத் தீர்வு காணவில்லை என்று அல்லவா கூறுகின்றனர். தலித்தியம், பின்நவீனத்துவம் என்று எல்லை கடந்த அனைவரும் கூறும் போது நீங்களும் அதனுடன் உடன்படுவது ஏன்? கடந்த வர்க்கப் போராட்ட வரலாறுகள், புரட்சிகள் இவைகளைத் தீர்க்கவில்லையா? தீர்த்து இருந்தால், ஏன் தீர்க்கவில்லை என்று மீளக் கூறவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது? இதிலிருந்து ஒன்று மிகத் தெளிவாகத் தெரிகின்றது. மார்க்சியம் அல்லாத தீர்வை வைக்க கோட்பாட்டுத் தேடுதலைக் காட்டுகின்றது. குறுகிய கால நலன்களை உள்ளடக்கி இது தடுமாறுகின்றது. கடந்த கால மார்க்சியத் தலைவர்களின் கோட்பாடு பெண்ணியத்தைத் தீர்க்கவில்லை என்றால், எப்படி என விஞ்ஞானப்பூர்வமாக நிறுவாத வரை, இவர்கள் புதிதாகத் தேடுவது என்பது மார்க்சியத்துக்குப் புறம்பான தீர்வைத் திரித்து வைக்க முயல்வதையே பிரகடனம் செய்கின்றது.


மார்க்ஸ், ஏங்கெல்ஸ் நிறுவிய மார்க்சியம் போதாது, முழுமையற்றது, குறைபாடு கொண்டது என்ற கூற்றுகளின் ஊடாகத் திரித்து, புதிய கோட்பாடுகளைப் புகுத்திய வரலாறுகள் கடந்த பாட்டாளிவர்க்க வரலாற்றில் தொடர் கதையாகவே உள்ளது. இதை எப்படி லெனின் எதிர் கொண்டு போராடினர் எனப் பார்ப்போம்.


"மார்க்சின் போதனை, நாகரிக உலகெங்கிலும் அதிகாரத் தரப்பினதும், மிதவாதிகளினதும் ஆகிய இரு வகையான பூர்ஷ்வா விஞ்ஞானம் அனைத்திடமிருந்தும் அளவற்ற பகைமையையும் வெறுப்பையும் கிளப்பிவிடுகின்றது. மார்க்சியம் ஒரு வகையான ~நச்சுத்தன்மை கொண்ட குறுங்குழுவாதம்| ஆகுமென அவை கருதுகின்றன... இப்பொழுது இந்தப் போதனைகள் குறைபாடானவை என்றும் பழமைப்பட்டுவிட்டவை என்றும் பறைசாற்றும் குரல்கள் நாற்புறமிருந்தும் எழுப்பப்படுகின்றது..... இந்தத் தத்துவத்தைப் ~புதுப்பிப்பதாய்ப்| பலக்கக் கூறிக் கொள்கிறார்களே, இக்காலத்தில் பெருங் கூச்சல் எழுப்பி வருகின்றார்களே.... இவர்கள் புதிதாய் எதையேனும் இந்தத் தத்துவத்தில் புகுத்திருக்கிறார்களா? எதுவும் இல்லை. வளர்த்திடுமாறு மார்க்சும் ஏங்கெல்சும் நம்மைப் பணித்துச் சென்ற இந்த விஞ்ஞானத்தை ஓரடியுங்கூட இவர்கள் முன்னேறச் செய்து விடவில்லை. புதிய போராட்ட முறைகள் எவற்றையும் இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குக் கற்றுக் கொடுத்துவிடவில்லை. மாறாக, இவர்கள் பிற்பட்ட தத்துவங்களிலிருந்து சிறு கவளங்களைக் கடன்வாங்கி, பாட்டாளி வர்க்கத்துக்கு (போராட்டத் தத்துவத்தையல்ல) விட்டுக் கொடுத்துச் செல்லும் தத்துவத்தை -- பாட்டாளி வர்க்கத்தின் மிகக்கொடும் பகைவர்களுக்கு, சோஷலிஸ்டுகளை வருத்துவதற்காக அயராது புதிய வழிமுறைகளைத் தேடியலையும் அரசாங்கங்களுக்கும் முதலாளித்துவக் கட்சிகளுக்கும் விட்டுக்கொடுத்துச் செல்லும் தத்துவத்தை -- பிரச்சாரம் செய்து பின்வாங்கியே சென்றிருக்கிறார்கள்... .. சோஷலிஸ்டுக் கட்சியை ~மெய்யான பக்திமான்களது| திருச்சபையாய் ~சமயக் கோட்பாடுகளிருந்து| விலகிச் செல்லும் திரிபுகளுக்காகவும் சுயேட்சையான ஒவ்வொரு கருத்துக்காகவும் ~மறுப்பாளர்களைத்| தண்டிக்கும் அமைப்பாய் மாற்ற விரும்புகின்றோம் என்றும் மற்றும் பலவாறாகவும் கூச்சல்கள் எழுப்பப்படும், புதிய மோஸ்தராகிவிட்ட இந்தச் சுடுசொற் கணைகள் யாவும் நாம் அறிந்தவையே..."44 என்று அந்த நேரத்தில் மார்க்சியத்துக்கு எதிராக முன்வந்த கோட்பாடுகளைத் தெளிவாக லெனின் அம்பலம் செய்து
போராடினர்.

ஆனால் வரலாற்று இயங்கியல், ஒரேவிதமான கூச்சல்கள் ஊடாக மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவதும், முன்வைப்பதும் நின்றுவிடவில்லை. இதையே இன்று மார்க்சியத்துக்கு எதிராக திருத்தத்தை மொழிபவர்களும், சேர்ப்பை முன்மொழிபவர்களும், மார்க்சியத்தை விமர்சிப்பவர்களும் என, எல்லா வண்ணக் கோட்பாட்டாளர்களும் விதிவிலக்கின்றி மீளவும் முன்வைக்கின்றனர். இதற்கு எதிரான போராட்டத்தை லெனின் "குறிப்பிட்ட ஒரு நாட்டில் சோஷலிச இயக்கம் எந்த அளவுக்கு இளமையானதாய் இருக்கின்றதோ, அந்த அளவுக்கு மேலும் கடுமையாய் அது, சோஷலிசமல்லாத சித்தாந்தத்தை ஆதிக்கம் பெறச் செய்யும் எல்லா முயற்சிகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். ~உணர்வுப்பூர்வமான அம்சம் மிகைப்படுத்தப்படுவதை| எதிர்த்தும் இன்ன பிறவற்றை எதிர்த்தும் கூச்சலிடும் மோசமான ஆலோசகர்களுக்கு எதிராய் மேலும் வைராக்கியமான முறையில் தொழிலாளர்கள் எச்சரிக்கை செய்யப்பட வேண்டும்."44 இன்று நாம் எதிர் கொள்ளும் வர்க்கக் கோட்பாட்டு எதிரிகளையே லெனின் அன்று எதிர் கொண்ட பாதையும், அதில் அவர் போராடிய மார்க்கமும் விதிவிலக்கின்றி எம்முன் நீண்டு கிடக்கின்றது. இதில் இருந்து போராடக் கற்றுக் கொள்ளும் நாம், அதை ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்திப் போராட வேண்டியுள்ளது. மார்க்சியத்துக்கு எதிராக திருத்தத்தை, இணைப்பை, திரிபை முன்மொழிந்து புகுத்த முனையும் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய "அன்புள்ள டாக்டர் மார்க்சுக்கு" என்ற கடிதத்தைப் பார்ப்போம்.


கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை பெண்கள் மீதான பிரச்சினையை உள்ளடக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளடக்கிய அன்றைய வரலாற்றுக்குள் நின்றும், வரலாறு கடந்த இன்றைய நிலையிலும் மார்க்ஸ் எப்படி பதில் அளித்திருப்பாரோ, அப்படியே எம்மால் முடியாவிட்டாலும் மார்க்சிய இயங்கியல் நோக்கில் நின்று இப்பதில் (எம் பதில்) அமைகின்றது.


மார்க்சியத்தை நிறுவுகின்ற வர்க்கப் போராட்டத்தில் அவர்கள் அதிகமான கவனத்தைச் செலுத்திய அன்றைய நிலையில், இந்தமாதிரியான குற்றச்சாட்டுகள் அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதாகவே இருந்திருக்கும். ஆனால் மார்க்சியம் மீதான வரலாற்றுச் சேற்றை அள்ளி வீசத் தயாராக இருக்கும் வர்க்க விரோதிகளைக் கவனத்தில் கொண்டு இப்பதில் அவசியமாகின்றது.


கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையை எழுதிய போது, அவர்களுடைய கவனம் முழுக்க முழுக்க அடிக்கட்டுமான பொருளாதார அடிப்படை மீதான வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, அதன் எல்லாவிதமான மேல்கட்டுமான அவலங்களையும் ஒழித்துக்கட்ட தொழிலாளர் வர்க்கத்திற்கு வழிகாட்டினர். அடிக்கட்டுமான பொருளாதார அமைப்பின் மேலாக உருவாகும் மேல் கட்டுமானத்தின் பல்வேறுபட்ட நிகழ்ச்சிப் போக்குகள் குறித்த விரிவான ஆய்வுகள் அல்ல அவை. இருந்த போதும் ஆழமான அடிப்படையான உள்ளடக்கத்துடன் பல்வேறு விடயங்களைக் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் குறிப்பிடத் தவறவில்லை. அவைகளைப் பார்ப்போம்.


"குடும்பத்தை ஒழிப்பதாவது! கம்யூனிஸ்டுகளுடைய இந்தக் கேடுகெட்ட முன்மொழிவை எதிர்த்து அதிதீவிரவாதிகளுங்கூட கொதித்தெழுகிறார்கள்"48 என்று எழுதிய போதே, அங்கு பெண்ணின் நிலைமை பற்றி மார்க்சியம் போராடிய வரலாற்றைக் காட்டுகின்றது. குடும்பம் பற்றிய சரியான பக்கத்தை மார்க்சிய ஆய்வுகள் துல்லியமாக்கியதன் விளைவுதான், இது மாதிரியான குற்றச்சாட்டைச் சுமத்த முடிகின்றது. தொடர்ந்து இதற்குப் பதில் அளித்து மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதுவதைப் பார்ப்போம். "இக்காலத்துக் குடும்பத்துக்கு, முதலாளித்துவக் குடும்பத்துக்கு, அடிப்படையாய் அமைவது எது? மூலதனம்தான், தனியார் இலாபம் தான். இந்தக் குடும்பம் அதன் முழு வளர்ச்சியிலுமான வடிவில் முதலாளித்துவ வர்க்கத்தாரிடையே மட்டும்தான் இருந்து வருகின்றது. ஆனால் இந்நிலைமையின் உடன்நிகழ்வாய் குடும்பவாழ்வு பாட்டாளிகளிடத்தே அநேகமாய் அற்றுப் போயிருப்பதையும், பொது நிலையிலான விபச்சாரத்தையும் காண்கிறோம்.


முதலாளித்துவக் குடும்பத்தின் உடன் நிகழ்வு மறையும் போது கூடவே முதலாளித்துவக் குடும்பமும் இயல்பாகவே மறைந்து போகும், மூலதனம் மறையும் போது இரண்டும் மறைந்துவிடும்.


குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரால் சுரண்டப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்புகிறோம் என்று எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றீர்கள்? நாங்கள் இந்தக் குற்றத்தைப் புரிகிறவர்கள்தான், ஒப்புக் கொள்கிறோம்.


...குடும்பம் கல்வி என்றும், பெற்றோருக்கும் குழந்தைக்கும் உள்ள புனித உறவு என்றும் பேசப்படும் முதலாளித்துவப் பகட்டுப் பேச்சுகள், மேலும் மேலும் அருவருக்கத்தக்கனவாகி வருகின்றது. ஏனெனின், நவீனத் தொழில் துறையின் செயலால் பாட்டாளிகளிடையே குடும்பப் பந்தங்கள் மேலும் மேலும் துண்டிக்கப்பட்டு, பாட்டாளிகளது குழந்தைகள் சாதாரண வாணிபச் சரக்குகளாகவும், உழைப்புக் கருவிகளாகவும் மாற்றப்படுகிறார்கள்.


ஆனால் கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் பெண்களை எல்லார்க்கும் பொதுவாக்கிவிடுவீர்களே என்ற முதலாளித்துவ வர்க்கம் அனைத்துமாய்ச் சேர்ந்து கூக்குரலிடுகின்றது.
முதலாளியாய் இருப்பவர் தனது மனைவியை வெறும் உற்பத்திக் கருவியாகவே பாவிக்கிறார். உற்பத்திக் கருவிகள் எல்லார்க்கும் பொதுவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படப் போவதாய்க் கேள்விப்பட்டதும், உடன் அவர் எல்லார்க்கும் பொதுவாகிவிடும். இதே கதிதான் பெண்களுக்கும் ஏற்படப் போகிறதென்று இயற்கையாகவே முடிவு செய்து கொண்டுவிடுகிறார்.


பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகளின் நிலையில் இருத்தப்பட்டிருப்பதை ஒழிக்கவேண்டும். உண்மையில் இதுதான் நோக்கம் என்பது அவருக்குக் கனவிலும் கருத முடியாத ஒன்றாகும்.


இருப்பினும், பெண்களைக் கம்யூனிஸ்டுகள் பகிரங்கமாகவும், அதிகாரப் பூர்வமாகவும் எல்லாருக்கும் பொதுவாக்கப் போகிறார்களென நமது முதலாளிமார்கள் புரளி பண்ணி நல்லொழுக்கச் சீலர்களாய் சீற்றம் கொள்கிறார்களே, அதைக் காட்டிலும் நகைக்கத்தக்கது எதுவும் இருக்க முடியாது. பெண்களை எல்லார்க்கும் பொதுவாக்கும் கைங்கரியத்தைக் கம்யூனிஸ்டுகள் செய்யத் தேவையில்லை. நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே இது செய்யப்பட்டு வருகின்றது.


நமது முதலாளிமார்கள் சாதாரண விபச்சாரிகளிடம் செல்வதைச் சொல்லவே வேண்டாம், அத்தோடு அவர்கள் தமது பிடியிலுள்ள பாட்டாளிகளது மனைவியரும், பெண்டிரும் போதாமல் தமக்குள் ஒருவர் மனைவியை ஒருவர் வசப்படுத்திக் களவொழுக்கம் கொள்வதில் ஆகப் பெரிய இன்பம் காண்கிறார்கள்.


முதலாளித்துவத் திருமணமானது, உண்மையில் மனைவியரைப் பொதுவாக்கிக் கொள்ளும் ஒரு முறையே ஆகும். ஆகவே, கள்ளத்தனமாய்த் திரைமறைவில் பெண்களை எல்லார்க்கும் பொதுவாக்கி வைக்கும் முறைக்குப் பதில், ஒளிவுமறைவற்ற சட்டப்பூர்வ முறையைக் கொண்டுவர விரும்புகிறார்கள் கம்யூனிஸ்டுகள் என்று இவர்கள் கண்டிக்கலாமே தவிர, அதிகமாய் ஒன்றும் சொல்வதற்கில்லை. இன்றைய பொருளுற்பத்தி அமைப்பு ஒழிக்கப்படும் போது, இந்த அமைப்பிலிருந்து எழும் பொதுப் பெண்டிர் முறையும் - அதாவது பகிரங்கப் பொது விபச்சாரமும் இரகசியத் தனி விபச்சாரமும் - கூடவே ஒழிந்தே ஆக வேண்டும் என்பது தெளிவு."48


மேலும் அவர்கள் "பாட்டாளிக்குச் சொத்து ஏதும் இல்லை. மனைவி மக்களிடத்து அவனுக்குள்ள உறவுக்கும் முதலாளித்துவக் குடும்ப உறவுகளுக்கும் பொதுவானது இப்போது எதுவும் இல்லை. ...தனியாள் சுவீகரிப்பை, மனித உயிர் வாழ்வின் பராமரிப்புக்காகவும், புனர் உற்பத்திக்காகவும் வேண்டியதை மட்டும் அளித்து, ஏனையோரது உழைப்பின் மீது ஆண்மை செலுத்த, உபரியாய் எதையும் விட்டு வைக்காத இந்தச் சுவீகரிப்பை ஒழிக்க வேண்டுமென்ற விருப்பம் எங்களுக்குச் கிஞ்சித்தும் இல்லை."48


இவைகளை மார்க்ஸ் ஏங்கெல்ஸ் எடுத்து வைத்த போது, வரலாறு கடந்து மிகத் துல்லியமாக இன்றும் பொருந்துகின்றது. குடும்பம் மற்றும் பெண்ணின் நிலையை இதற்கு முன் யாரும் இந்தளவு நேர்த்தியாகக் குறிப்பிட்டதில்லை. இவர்களின் இடைவிடாத போராட்டம் மற்றும் ஆய்வுகளின் பிரதி விளைவுகள், சமூகத்தில் அறிவுஜீவிகளிடையே பெரும் தர்க்கத்தை ஏற்படுத்தியது. அந்தளவுக்கு எதிர்த் தர்க்கத்தையே இவ்வளவு சுருக்கமாகக் குறிப்பிட்ட போதே, இதன் விரிவான அர்த்தத்தை கம்யூனிஸ்ட் அல்லாத யாரும் புரிந்து வரலாற்றில் முன்வைத்துவிட முடியவில்லை.


முதலாளித்துவ வர்க்கம் மார்க்சை எதிர்த்த போது புரிந்த அளவுக்கு, இன்றைய பூர்சுவா பெண்ணியல்வாதிகள் புரிந்து கொள்ள முடியாத அறிவு சூனியங்களாக இருப்பது தற்செயலானவையல்ல. வர்க்கக் கண்ணோட்டத்தில் இருந்து அணுகும் பூர்சுவாத்தனம், அற்பக் கோரிக்கையைக் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை உள்ளடக்கவில்லை என்றே குற்றம் சாட்டமுடியும். கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை பாட்டாளி பெண்ணுக்கு வழிகாட்டுகின்றதே ஒழிய, பூர்சுவா பெண்ணுக்கு அல்ல என்பதால் எதிர்ப்பு இயல்பாக, இயற்கையாகத் தீவிரமாகின்றது. பல்வேறு மேற்கட்டுமான பிரச்சினைகள் மீது அறிக்கை கம்யூனிஸ்டுக்கு வழிகாட்டும் எல்லையில் தான் கருத்துக் கூறியுள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் அன்றாடப் போராட்டங்களின் கோரிக்கைகளைக் கூட அறிக்கை உள்ளடக்கவில்லை.


அவைகளை இப்படி சிறு நூலில் உள்ளடக்கிவிட முடியாது. அவைகளை அவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்ய அவர்களுக்கு இடையிலான வேலைப் பிரிவினையூடாக ஒழுங்கமைத்து பல்வேறு விடயங்களை ஆராய்ந்தனர். அறிக்கை அடிக்கட்டுமான பொருளாதார அமைப்பில் எழும் வர்க்கப் போராட்டத்தின் அரசியல் திசை வழியை வழிகாட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையாகும். இது சமூகத்தின் அனைத்து வர்க்க முரண்பாட்டின் மனித நடத்தைக்கும், ஒடுக்கு முறைக்கும் எதிராகப் பாட்டாளிவர்க்க அரசியல் வழியை வகுத்திடும் பணியில் அவர்கள் கவனம் முழுமையாக இருந்தது.


அடிக்கட்டுமான பொருளாதார அமைப்பில் மாற்றம் இன்றி, சமூகத்தின் மற்ற விடயங்களை ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் சார்பாக மாற்றிவிடமுடியாது. மனித வரலாற்றில் நிகழ்ந்த அனைத்து யுத்தங்களும் வர்க்க யுத்தமாக இருந்த போதும், அவை அடிக்கட்டுமானத்தில் மாற்றம் நிகழாமையால் (இங்கு தனிச்சொத்துரிமையை அனுசரித்தே மாற்றம் நிகழ்ந்தது.), தனிச் சொத்துரிமையிலான ஒடுக்குமுறை தொடர்ச்சியாக இறுகிய வடிவில் மட்டும் எப்போதும் நீடிக்கின்றது.


இதனால் அவர்கள் எப்போதும் அடிக்கட்டுமானம் மீதான ஆய்வையும், அதன் மீதான வர்க்கப் போராட்டம் ஊடான சமூகப் புரட்சியையும் கவனத்துக்குரிய முக்கிய பிரச்சினையாகக் கையில் எடுத்தனர். இதை மறுத்த, நிராகரித்த பல்வேறு கோட்பாடுகள் மீது அவர்கள் உறுதியாக ஈவிரக்கமற்ற வர்க்கப் போராட்டத்தைக் கோட்பாட்டிலும், நடைமுறையிலும் நடத்தினர். இங்கு எந்தவிதமான சலுகைகளையும் யாருக்கும் எந்தப் பிரிவுக்கும் வழங்கிவிட அவர்கள் தயாராக இருக்கவில்லை.


உங்கள் கடிதம் வர்க்கப் போராட்டத்தை மறுத்து எழுகின்ற போதே இதன் மீதான போராட்டம் மார்க்சின் வழியில் மிக தெளிவாகத் தொடர்வது தவிர்க்கமுடியாது. பெண்களின் ஜனநாயகக் கோரிக்கைகள் மீது எமக்கு அக்கறைக்கு உரிய அபிப்பிராயம் உண்டு. ஆனால், அவைகள் மீது எமது ஆதரவும் எதிர்ப்பும் வர்க்கக் கண்ணோட்டம் கொண்டவை. ஜனநாயகக் கோரிக்கைகள் அடிப்படையில் திசை விலகலைக் கொண்டவை. பெண்களின் காதல் சுதந்திரம், விவாகரத்துரிமை, வாக்குரிமை போன்றவற்றை எடுப்பின், பெண்ணின் சுயநிர்ணயத்தை மறுத்த காதல் மீது நாம் ஈவிரக்கமற்ற போராட்டத்தை நடத்துவதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதே நேரம் காதல் சுதந்திரம் என்பது விபச்சாரமாக மாறுகின்ற நிலைமைகளையும் நாம் காண்கின்றோம்.


காதல் சுதந்திரம் என்பது ஆணாதிக்கத்தின் அடிமைத்தனத்தைக் குறிப்பதாகும். விவாகரத்து பெண்ணுடைய வாழ்வின் அடிப்படை உரிமையாக இருக்கின்றது. ஆனால் அது ஆணிடம் இருந்து திருமணத்தில் இருந்து மட்டுமல்ல, ஆணிடம் பொருளாதார ரீதியாக இலாபம் அடையும் நோக்கிலும், விபச்சாரத்தைக் கோரி விவாகரத்துரிமையைப் பூர்சுவா வர்க்கம் விளக்கம் கொள்ளும் போது அதற்கு எதிராக நாம் போராடுகின்றோம்.


வாக்குரிமையில் ஆணைப் போல் அனைத்துப் பெண்களுக்கும் வாக்குரிமையை அளிக்கக் கோருவதில் எமது உறுதிக்கு யாரும் சவால் விடமுடியாது. ஆனால் இதைப் பெண்ணின் ஜனநாயகமாகவும், பெண்களை ஆணாதிக்கமாகவும் மாற்றி சீரழிக்கின்ற போது, நாம் இதன் கடும் எதிரிகளாக உள்ளோம்.


கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை வெளியாகி 155 வருடங்களுக்குப் பின்னால் இன்று பார்க்கின்ற போது, ஜனநாயகக் கோரிக்கைகளில், பாட்டாளி வர்க்க நிலையைவிட பூர்சுவா வர்க்கக் கோரிக்கைகளின் சீரழிவை யதார்த்தத்தில் காணமுடியும். பெண்களை ஆட்சி பீடத்தில் அமர்த்திய நாட்டிலும் சரி, அண்ணளவாக பெண் ஆட்சியாளர்களை ஆட்சியில் நிறுவிய நாடுகளிலும் (ஸ்காண்டிநேவிய நாடுகள்) சரி, ஆணாதிக்கம் முடிவுக்கு வந்துவிடவில்லை. மாறாகப் பெண்கள் ஆணாதிக்கவாதிகளாக மாறுவது நிகழ்கின்றது. இவை பெண்ணை விடுவித்து விடவில்லை.


விவாகரத்து என்பது பெண்ணின் சுயநிர்ணயத்துக்குப் பதிலாக இலாபகரமாக உழையாது, சொகுசாக வாழும் ஒரு உறுப்பாக மாறியுள்ளதை ஐரோப்பிய விவாதங்கள், சட்ட மாற்றங்கள் (பிரான்ஸ் நாட்டில் மாசி - 2000ஆவது ஆண்டில் நடந்த சட்ட மாற்றங்கள்) தெளிவாக்குகின்றன. இதுபோல், விவாகரத்து விபச்சாரத்தின் ஊடகமாகக் கட்டற்ற சுதந்திரத்தில் உதித்தெழுகின்றது. காதல் சுதந்திரத்தில் காதல் என்பது அர்த்தமற்ற வகையில் சிதைந்துள்ளது. விபச்சாரம் தான் காதலில் முடிவாகியது. அதாவது, காதல் சுதந்திரம் கட்டற்ற வகையில் பூர்சுவா விளக்கம் பெற்ற போது, அது விபச்சாரத்துக்கிடையிலான வேறுபாட்டை நகர்த்தியுள்ளது. இதுபோல், எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். இதை மார்க்சியவாதிகள் தீர்க்கத் தரிசனத்துடன் தமது வர்க்க ஆய்வுகளில் வெளிப்படுத்தி வந்ததை யாராலும் மறுக்கமுடியாது. எனவே நாங்கள் பெண்களுக்குரிய ஜனநாயகக் கோரிக்கைகளை வர்க்கப் போராட்ட நோக்கில் மட்டும் எடுக்கின்றோம். இதை விட்டு விலகிச் செல்லும் அனைத்து விலகல்களையும் எதிர்த்துப் போராடுகிறோம்.


150 வருடங்களுக்குப் பின்னால் எழுதப்பட்ட இக்கடிதம் எந்தவிதமான சூடுசுரணையற்ற விபச்சாரமாக இருக்கின்றது. ஏகாதிபத்தியச் சகாப்தத்தில் முன்னைய ஜனநாயகக் கோரிக்கைகள் இன்று பல நிறைவான யதார்த்தமாக இருப்பதையும், அதன் சீரழிவையும் பார்க்கின்ற போது கடந்த கால மார்க்சிய ஆய்வுகள் சரியாக இருப்பதையும் கண்டு கொள்ளமுடியும்.


கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் "சமயத் துறை சுதந்திரம், மனச்சாட்சி சுதந்திரம் ஆகிய கருத்துக்கள் கட்டற்ற சுதந்திரப் போட்டியின் ஆதிக்கத்தினது அறிவு பிரதிமைகளே ஆகும்"48 என்று மார்க்ஸ் ஏங்கெல்ஸ் விமர்சித்ததன் நோக்கம், சுதந்திரம் என்ற ஜனநாயகக் கோரிக்கை என்பது எவ்வளவு இழிவாக ஆதிக்க வர்க்கத்தின் ஊடகமாக இருக்கின்றது என்பதை எதிர்த்து அம்பலப்படுத்துவதற்காகத்தான். சுதந்திரம் என்பது, வர்க்கச் சமுதாயத்தில் சுதந்திரமாக இருக்கமுடியாது. சுதந்திரம் என்பது வர்க்கச் சமுதாயத்தின் கள்ளக் குழந்தையாகும். சுதந்திரம் பற்றிய மார்க்சிய ஆய்வுகள் எப்போதும் வர்க்க எல்லைக்கு உட்பட்டதாக இருக்கின்றது.


ஆனால் பெண்களின் பிரச்சினையைக் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை கொண்டிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு, மார்க்சியம் உருவான வரலாற்றுக் காலக்கட்டம் மற்றும் வர்க்க நோக்கை விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வு செய்வதைக் கைவிட்டு, சிறுமைப்படுத்தும் போக்கில் எழுகின்ற குற்றச்சாட்டாக இருப்பதைத் தெளிவாகக் காண்கின்றோம்.


சமுதாயத்தில் வர்க்கப் போராட்டம் என்பது மக்களின் பங்கு பற்றல் (பெறல்) ஊடாகவே அரங்குக்கு வருகின்றது. மார்க்சியத்தை நிறுவிய போது கற்பனை, அறிவாற்றலில் இருந்து உதித்து விடவில்லை. மாறாகத் தொழிலாளி வர்க்கம், வர்க்கமாக அணிதிரண்டு போராடும் வரலாற்றுக் காலக்கட்டத்தில், அவை தன்னியல்பு சார்ந்து கோட்பாடற்ற ஒழுங்கமைக்கப்படாத போராட்டங்கள் மீதான எமது ஆய்வுகள்தான் மார்க்சியமாகின்றது. சமுதாயத்தில் ஒடுக்குமுறை மீதான, விழிப்புறாத மக்கள் பிரிவுகள் மீதான ஆய்வுகள், போராட்டங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு உடனே வந்துவிடுவதில்லை. அதற்காக அவை ஒடுக்குமுறையற்ற விடயமாக இருப்பதில்லை. அதுவரை அவை உறங்கிக் கொண்டு இருக்கின்றன.


ஒடுக்குமுறை என்பது சகித்துக் கொண்டபடி வளர்ச்சி பெறும் போது, மக்களின் எதிர்ப்புகள் புகைந்து கொண்டு இருக்கின்றது. பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை உங்கள் பூர்சுவா வாதங்களைவிட மார்க்சியம் சிறப்பான வாதங்களைப் புரிந்துள்ளது. பெண் எப்படி அடிமையானாள் என்பது முதல் இந்த வரலாற்று இயங்கியலை மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் ஆய்வுக்குள்ளாக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்ததுடன், அப்பணியைப் பல்வேறு பணிகளுக்குள் செய்யவேண்டி இருந்ததை அவர்கள் நிராகரிக்கவில்லை. மார்க்ஸ் எழுதி வைத்திருந்த குறிப்பின் உதவியுடன் அவருடைய மரணத்தின் பின், ஏங்கெல்ஸ் எழுதிய ~குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்| பற்றிய ஆய்வு வரலாற்றில் பெண்ணியம் பற்றிய துல்லியமான மார்க்சிய ஆய்வாகும். இதற்கு முன்னோ, பின்போ இவ்வளவு சிறப்பாக யாரும் ஆய்வு செய்திடவில்லை.


கி.பி. 1860-ஆம் ஆண்டு வரையான காலம் வரை குடும்பம் பற்றிய இயற்கை ஆய்வு வெளிவந்திருக்காத நிலையில், அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இதன் பிறகு தீவிரமான கண்டுபிடிப்புகள்தான் பெண் பற்றிய துல்லியமான ஆய்வை வழங்கியது. இதை வர்க்கக் கண்ணோட்டத்தில் முன்வைப்பதில் மார்க்ஸ், ஏங்கெல்சின் முயற்சி தொடர்ச்சியானதாக இருந்தது. இதுபோல் சோவியத் புரட்சி, சீனப்புரட்சி பெண்ணுக்கு வழங்கிய நடைமுறைத் தீர்வுகள் மற்றும் விடுதலைகளை வரலாற்றில் எந்தப் புரட்சியும் செய்திடவில்லை, நடைமுறைப்படுத்திவிடவில்லை.


கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை என்பது பாட்டாளி வர்க்கத்தின் அன்றைய நடைமுறை வேலைத் திட்டத்தை உள்ளடக்கிய கோட்பாட்டு வழிகாட்டுதலை வழங்க உருவாக்கப்பட்டதேயாகும். இதை மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் "இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல் எங்கும், எக்காலத்திலும், அவ்வப்போது இருக்கக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும்"48 எனக் குறிப்பிட்ட போது இதைப் பலர் சரியாகப் புரிந்து கொள்வதைத் தவிர்த்து, வரலாறு கடந்த, வரலாற்று நிகழ்வுகளைக் கடந்த தாக்குதல் நடத்தும் போது, அது எப்போதும் பாட்டாளி வர்க்க எதிர்ப்பின் அபத்தமாகும்.


இந்தக் குறிப்பான வழிகாட்டுக் கோட்பாடு, சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் பொதுக் கோட்பாடாகவும், வழிகாட்டும் நடைமுறைத் தத்துவமாகவும் இருந்ததால், இது மேலும் முக்கியத்துவம் பெற்றது. பின்னால் கால ஓட்டத்தில் பல புதிய விடயங்கள் அரங்குக்கு வந்த போது, இதைத் திருத்துவதை அவர்கள் தவிர்த்ததை முன்னுரைகளில் குறிப்பிட்டுள்ளனர்... "கிடைத்த நடைமுறை அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின் இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங் கடந்ததாகி விடுகின்றது.... சோஷலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சனம் இன்றைய நிலவரத்துக்குப் பற்றாக்குறையானது என்பதைக் கூறத் தேவையில்லை, ஏனெனின், கி.பி. 1847-ஆம் ஆண்டு வரையிலான நிலவரம் மட்டும்தான் இந்த விமர்சனத்தில் இடம் பெறுகின்றது..... அரசியல் நிலைமை முற்றிலும் மாறியிருக்கின்றது.... இந்த அறிக்கை வரலாற்று ஆவணமாகிவிட்டது. இனி இதைத் திருத்த எங்களுக்கு உரிமை இல்லை"48 என்று குறிப்பிட்டதன் மூலம் எல்லாவிதமான மார்க்சிய எதிர்ப்புப் பிதற்றல்களுக்கும் பதிலளிக்கின்றது.


பெண்கள் பிரச்சினை என்பது பல்வேறு முரண்பட்ட சமூக நிகழ்வுகள் போல், ஒன்று என்பதில் சந்தேகமில்லை. தனிச்சொத்துரிமையும் அதன் ஆதிக்கமும் பெண்ணை அடிமையாக்கிய நிகழ்வுகளையிட்டு ஆழ்ந்த மனப்பாங்குடன் கூடிய எதிர்ப்பும், கோபமும் மார்க்சியவாதிகளுக்கு உண்டு. ஆனால் இவை தனிச் சொத்துரிமை அமைப்பின் விளைவுகள் என்பதில் இருந்தே ஆய்வுகள், முடிவுகள், நடத்தைகள், போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். இதில் நீங்கள் உடன்படாமல் இருந்து கொண்டே மார்க்சியவாதிகள் மீதான தாக்குதலை நடத்தியபடி, பெண்களின் பிரச்சினையில் அக்கறை அற்றவர்கள் என்று குற்றம் சாட்டுகின்றீர்கள். இந்த உடன்பாடின்மை அடிப்படையில் மார்க்சியமல்லாத சுரண்டும் வர்க்கக் கோட்பாடாக இருக்கின்றது.


கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் பெண்கள் பிரச்சினையை மட்டுமல்ல தேசிய ஒடுக்குமுறைகள், இனஒடுக்குமுறைகள், சாதி ஒடுக்குமுறைகள், நிற ஒடுக்குமுறைகள், காலனி ஆக்கிரமிப்புகள், கொத்தடிமை முறைகள், குழந்தை உழைப்பு, கலை இலக்கியச் சீரழிவுகள், தொழிலாளரின் அன்றாடக் கோரிக்கைகள், மத ஒடுக்குமுறைகள் போன்ற பல முன்னணிக்கு வந்த - வராத விடயங்கள் மீது, குறிப்பான எந்த ஆய்வையோ, இணைப்பையோ கொண்டிருக்கவில்லை. இவைகளில் சிலவற்றைக் கட்டுரையின் போக்கில் ஆழமான குறிப்புகள் ஊடாகக் கம்யூனிஸ்டுகளுக்குக் கோட்பாடு வழிகாட்டுவதையே செய்கின்றது. அதற்காக இவைகள் மீது அக்கறை கிடையாது அல்லது இவைகளை ஆதரிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுகள் திட்டமிட்ட கம்யூனிச எதிர்ப்பின் அபத்தங்களாகும். ஏனெனின், மார்க்சியவாதிகளின் நோக்கத்தைத் திரித்துப் பார்க்கின்ற எல்லா நிலையிலும் இப்படித்தான் புரிந்து விளக்கமுடியும்.


மார்க்சியத்தை நிறுவும் போராட்டத்தில், அதை வழிகாட்டும் நடைமுறையில், குறித்த வர்க்கத்தின் செயல் வடிவமான கோட்பாட்டுக்கு, நடைமுறைக்கு வழி காட்டினர். இதைவிட்டு யதார்த்தத்திற்குப் புறம்பாக வலிந்து திணிக்கின்ற அராஜகவாத அபத்தங்களைத் திணிப்பதில் அவர்களுக்கு அக்கறை கிடையாது. அவை எழுதி வைக்கவும், அழகு பார்க்கவும் குட்டிப்பூர்சுவா மனப்பாங்கில் விவாதம் செய்து காலத்தைக் கழிக்கவும், அராஜகவாதக் கற்பனையில் சீரழியவும் உதவும். சமுதாயத்தில் உள்ள பல்வேறு முரண்பாடுகள் மீதான ஆய்வுகளை வரலாற்றின் தேவையுடன் எப்போதும் செய்வதை இது தடுக்காது.


இந்த வரலாற்றுக் காலக்கட்டத்தின் தேவையை ஒட்டி அவர்களின் வேலைச் சுமை காரணமாக செய்யமுடியாத ஆய்வுகளை, மார்க்சியக் கோட்பாட்டின் தொடர்ச்சியைப் பூர்த்தி செய்வதே இயங்கியலாகும். இதை எல்லாம் புரிந்து கொள்வது என்பது உங்கள் அறிவற்ற பூர்சுவா கோட்பாட்டு வரையறை இடம் கொடுக்காது. அதற்கு இசைவாக மார்க்சியத்தைத் திருத்த முன்வைக்கும் சில பகுதிகனை ஆராய்வோம்.
மார்க்சியம் அக்கறை கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகளின் ஊடாகப் பெண்களின் பிரச்சினை என பட்டியலிட்டுள்ள விடயங்கள் தான், பொதுவாக எல்லா மார்க்சிய எதிர்ப்பின் அடிப்படைக் கோட்பாடாக அமைவதால், இவைகளுக்குத் துல்லியமாகப் பதிலளிப்பதை அவசியமாக்குகின்றது. ஆனால் மிக நீண்ட ஒரு தனிப்புத்தகமாக இவை மாறி விடும் என்பதால், சிலவற்றைக் குறிப்பாக ஆராய்வதன் மூலம் முழுமையை அதன் வழியில் புரிந்து கொள்ள உதவும்.


1. "பெண்களுக்குச் சரிசமமான குடிமை உரிமைகள். அரசியல் உரிமைகள்.தொழிலாளர் குழுக்களில் பெண்களுக்குச் சம பங்கேற்பு.


2. பெண்களுக்குச் சம ஊதியம். பெண்களுக்குக் குறைந்த ஊதியம் தரப்படும்பழக்கத்தை நிறுத்துதல். நீண்ட வேலை நேரத்தைக் குறைத்தல். சில தொழில்களைச் செய்வதிலிருந்து பெண்களை விலக்கி வைத்தலை நிறுத்துதல்.


3. வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்குத் தொழிற்கூடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தரப்படும் அதே விகிதத்தில் ஊதியம் வழங்குதல்.


4. வேலையில்லாத் திண்டாட்டம் உள்ள காலங்களில் வேலையைப் பகிர்ந்து கொள்ளுதல்.


5. விலைமாதர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.


6. வேலை செய்யும் இடங்கள் எல்லாவற்றிலும் உணவுவிடுதிகள், குழந்தைக் காப்பகங்கள்.


7. மருத்துவிச்சிகள் உட்பட அனைத்துப் பெண்களுக்கும் பயிற்சி மையங்கள்.


8. வீட்டு வேலை செய்யும் பணியாட்கள் சந்திக்கவும், ஒழுங்கமைத்துக் கொள்ளவும் மையங்கள் ஏற்படுத்துதல்.


9. பெண் தொழிலாளர்கள், ஆண் தொழிலாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து (தொழில் தொடங்க) மூலதனம் பெறுவதற்காகச் சங்கங்களை உருவாக்குதல்.


10. நல்ல வேலை நிலைமைகளை பெண்களுக்கு ஏற்படுத்தித் தருதல்.


11. கடினமான காலங்களில் உழைப்பைக் கொடுத்து, அதற்குப் பதிலாக உணவையும் பாதுகாப்பையும் பெறுவதற்கான வழிமுறைகளை இலக்கியம், கலை ஆகிய துறைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டும், கலைகளில் ஈடுபாட்டை வளர்க்கவும், கலை, இலக்கிய சங்கத்தை உருவாக்குதல். வேலையில்லாப் பெண்களுக்கும் கூட ஒரு சங்கத்தை உருவாக்குதல்.


12. குழந்தைகள் உள்ள குடும்பங்கள், குழந்தைகளோடு தனியாக வாழும் தாய்மார்கள் அல்லது தந்தைமார்கள் வாழ்வதற்கேற்ற தோட்டமுள்ள, பெரிய, காற்றோட்டமான, பொது சமையல் அறைகள் உள்ள வீடுகள்.


13. பொது உணவு விடுதிகள், குளியல் அறைகள், கூட்டம் கூடுவதற்கான பொது அறைகள், பொது நூலகங்கள், பொது குழந்தைக் காப்பகங்கள், பொழுதுபோக்குக்கான பொது இடங்கள்.


14. பெண் குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமான பொதுக் கல்வியும் பயிற்சியும்.


15. ஏழைக் கர்ப்பிணிப் பெண்கள் மரியாதையுடன் நடத்தும் ஒரு சமூக நலத்திட்டம்.


16. இலவசமான மருத்துவச் சேவை. மருத்துவிச்சிகளுக்கு அரசு ஊதியம் வழங்குதல்.


17. ஆண்களைச் சார்ந்துதான் பெண்கள் இருக்க வேண்டும் என்ற நிலைமையைப் போக்கும் வகையில் பெண்களுக்கு நிதியுதவி செய்கிற ஒரு சமூக நிதியம்.


18. விருப்பப்பட்டால் மட்டும் பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல்."46- இது போன்ற ஆயிரம் கோரிக்கைகள் தொழிலாளர் வர்க்கமும் முன்வைக்கின்றது. எல்லா சீர்திருத்தத் தொழிற்சங்கங்கள் முதல் புரட்சிகரத் தொழிற்சங்கங்கள் வரை வேறுபட்ட கோரிக்கைகளை உள்ளடக்கி போராடுகின்றன.


ஆனால் இவை எதுவும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கிடையாது. எனவே அறிக்கைக்கு அக்கறை இல்லை என்று கூறமுடியுமா?


இது போல் பல்வேறு மக்கள் கூட்டத்தின் கோரிக்கைகள் எண்ணில் அடங்காதவை. மேலே உள்ள பெண்கள் கோரிக்கைகளும் இது போன்றவையே. எண்:1 இன் படி இதை ஆராய்வோம். பெண்ணுக்கு மறுக்கப்படும் அரசியல் உரிமை, குடிமை உரிமைகளில் மார்க்சியவாதிகள் மறுத்த வரலாற்றைக் காட்டமுடியாது. மாறாகப் போராடிய வரலாற்றையே காட்டமுடியும்.


அதேநேரம் வர்க்க உணர்வு பெறாத சாதாரணச் சமூகச் சிந்தனைத் தளத்தில் வாழும் தொழிலாளர்களிடம் காணப்படும், மரபார்ந்த ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை எதிர்த்து அரசியல் மயப்படுத்துவதில் எப்போதும், நாம் அதை வர்க்கப் போராட்ட நடைமுறை வாழ்வாகக் காண்கின்றோம். அரசியல் மயப்படாத தொழிலாளி வர்க்கம் இயல்பாக ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் செயல்படுவதும், நடைமுறைகளைக் கோருவதும் யதார்த்தமானது. இதைக் காண மறுத்து அதை மார்க்சியம் மீது சுமத்தி கொச்சைப்படுத்த நினைப்பது அபத்தமாகும்.


ஆணைப் போல் பெண்ணின் வாழும் உரிமையை மறுக்கின்ற போது எமது விட்டுக் கொடுக்காத போராட்டம் உங்களை மீறியவை. ஆனால் ஆணைப் போல் வாழும் உரிமையின் பின் ஆணின் எல்லாவிதமான சீரழிவையும் பெண்ணும் அனுபவிக்கக் கோரும் போது, அதற்கு எதிராக நாம் போராடுவது தவிர்க்க முடியாதது. ஆணின் வாழ்வு என்பது மனிதனின் இயற்கையான வாழ்வல்ல. தனிச்சொத்துரிமை முதல் விபச்சாரம் ஈறாக ஆணின் மனித விரோதத் தன்மையை விமர்சனமின்றி பெண் பொதுமைப்படுத்தி கோரும் போது, எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் நீங்கள் திட்டவட்டமாக எம்முடன் முரண்பாடுவது இயற்கையானது.


உங்கள் வர்க்கத்தின் அடிப்படையான கோரிக்கைகள் ஆணாதிக்க மயமாவதில் இருந்து உதிக்கின்றது. இதனால் திட்டவட்டமாக இக்கோரிக்கைகளில் நாம் வேறு கோணத்தில் அணுகுவது தவிர்க்கமுடியாதது. அத்துடன் அரசியல் உரிமை, குடிமை உரிமையைப் பெற்ற பெண்கள், இதனால் தமது ஆணாதிக்கத்திடம் இருந்து விடுதலை பெற்ற வரலாற்றைக் காலத்தாலும், உங்களாலும், எவராலும் காட்டமுடியாது. பாட்டாளி வர்க்கம் இதைப் பெறுவதன் ஊடாக அதன் பொய்மையை அம்பலப்படுத்த உதவுகின்றது.


அடுத்து எண்:1இன் படி தொழிலாளர் குழுக்களில் சம பங்கேற்பு என்ற பூர்சுவா கோரிக்கையைத் திட்டவட்டமாக மறுக்கின்றோம். ஆச்சரியமாக இருக்கலாம். தொழிலாளர் குழுக்களில் பங்குகொள்வதை ஆதரிக்கும் நாம், குழுக்களில் ஆணைவிட அதிக எண்ணிக்கையில் (பெரும்பான்மையாகப் பெண்கள்) பெண்கள் இருந்தாலும் நாம் அதை உற்சாகத்துடன் ஆதரிப்போம். ஆனால் சமமான எண்ணிக்கையை விகிதாசார எண்ணிக்கை முறையில் உரிமையாகக் கோருகின்ற போது, இந்த அதீத ஜனநாயகச் சீரழிவை மறுக்கின்றோம்.


குழுக்களின் தலைமை என்பது போராட்டத்தின் ஊடாக உருவாகின்றது. இது அனுபவம், நடைமுறை, தியாகம், தத்துவார்த்த அரசியல் வழி போன்றவற்றால் நீண்ட விடாப்பிடியான போராட்டங்களால் உருவாகின்றது. இது தொழிற்சங்கத் தலைமைகள் முதல் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஈறாக உருக்குப் போன்ற உறுதியான நிரந்தரத் தலைமை உருவாகும் நிகழ்ச்சிப் போக்கை, வெறும் சம எண்ணிக்கை ஊடாகச் சீரழிக்க நினைப்பது திட்டவட்டமாகப் பூர்சுவா கண்ணோட்டமாகும். இது தலைமையை மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களைத் தெரிவில் கூட சம எண்ணிக்கைக்கு உட்பட்டதல்ல.


சாதாரணமான எல்லா நிலைமைகளிலும், உறுப்புகளிலும், தலைமைகளிலும் ஆண் பெண் வேறுபாடின்றி இணையவும் தலைமை தாங்கவும், எம் அமைப்புமுறைகள் தெளிவாகப் பெண்களின் ஜனநாயகத்தை அங்கீகரித்து நடைமுறைப்படுத்துகின்றது. இதை மறுக்கும் எல்லாக் கோட்பாட்டுகளையும், நடைமுறைகளையும் நாம் எப்போதும் எதிர்த்து உறுதிபட போராடி வந்துள்ளோம், வருகின்றோம். ஜனநாயகப் பூர்வமான செயலூக்கமுள்ள நடைமுறை அமைப்புகளில் விகிதாசார எண்ணிக்கை முறையை எதிர்த்து நாம் போராடுவது, வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகின்றது.


பெண்கள் மீது காலாகாலமாக இருந்து வரும் அடக்குமுறைகளால், ஏற்பட்ட பின்தங்கிய நிலையைக் கடந்து வர எல்லாவிதமான முயற்சியையும், ஒத்துழைப்பையும் வழங்குவதில் எமது அமைப்பு வடிவங்கள் உறுதியாகக் கடுமையாக உழைக்கின்றன. இதுகூட எமது வர்க்கப் போராட்ட வடிவங்களில் ஒன்றாகின்றன.


ஆனால் ஜனநாயகமற்ற அமைப்புகளில் பெண்கள் நடைமுறை ரீதியாக முன்னேற உள்ள இயல்பான இயற்கையான தடையை மீற, விகிதாசார முறையை ஆதரிக்கின்றோம். இது இயல்பில் ஜனநாயகத்தையோ, பெண்விடுதலையையோ வழங்கிவிடுவதில்லை. விகிதாசார முறையிலான கோரிக்கைகள் மற்றும் அங்கீகாரங்கள் கூட கோரிக்கையாகின்ற போது, அங்கீகாரமாகின்ற போது சாராம்சத்தில் பெண்களுக்கு ஜனநாயகத்தை மறுப்பதில் இருந்து நடைமுறைக்கு வருகின்றன. இது கிடைக்கின்ற போது பெண் அடிமைத்தனத்தைச் சட்டப்பூர்வமாக்குவதை ஏற்றுக் கொள்கின்றது.


இது பெண்களுக்குச் சலுகையாக, பிச்சையாக ஆணாதிக்கம் வழங்க முன்வருவதன் மூலம், புதியவகையில் ஆணாதிக்க அமைப்பைக் கெட்டிப்படுத்த முடிகின்றது. இங்கு இருக்கும் முரண்பாடு எப்போதும் பழமையான ஆணாதிக்கத்துக்கும், புதியவகையான ஆணாதிக்கத்துக்கும் இடையிலானதாக இருக்கின்றது. இது எப்போதும், கேட்கும் போதும் - கொடுக்கும் போதும் ஜனநாயக மறுப்பை அங்கீகரித்த படி உள்ளடக்கியே எழுகின்றது.


இவை பெண்களின் பிரச்சினை ஜனநாயகப் பூர்வமாகத் தீர்க்கப் போவதில்லை அத்துடன் பெண்களின் சமத்துவத்தை இது ஏற்படுத்துவதில்லை. மாறாகப் பெண் ஆணின் ஆணாதிக்கக் கடமையைப் பகிர்கின்றாள். பாட்டாளிவர்க்கம் ஆதரிப்பதன் நோக்கம் பெண்களை சமூக இயக்கத்தில் பெருமளவில் பங்கு கொள்ள இவை தூண்டுதலாக மாறுவதால், புரட்சிக்குச் சாதகமாக இது இருக்கும் என்பதால் மட்டும்தான். அத்துடன் ஜனநாயகமற்ற அமைப்பின் ஆணாதிக்கத் தன்மையை அம்பலப்படுத்த விகிதாசார முறையை வழங்குவதற்கு முன்பும், வழங்கிய பின்பும் அம்பலப்படுத்தி அரசியல் மயப்படுத்துவதற்காகவும் ஆதரிக்கின்றது. விகிதாசார முறையால் பெண் ஜனநாயகத்தைப் பெற்றுவிடுவாள் என்பதில் இருந்தல்ல.


சமபங்கு மற்றும் எல்லாவிதமான கோரிக்கைகளும் பூர்சுவா ஜனநாயகக் கோரிக்கைகளாக உள்ளது. பாட்டாளிவர்க்கம் இந்த ஜனநாயகக் கோரிக்கையை ஆதரிக்கும் போது பொதுமையான பூர்சுவா பெண்ணியத்தை விமர்சனம் செய்கின்றது. ஆணாதிக்கமற்ற ஜனநாயகப் பூர்வமான அமைப்புகளில் திறமை மற்றும் நடைமுறை முன்முயற்சியூடாக, வர்க்க அரசியல் மயமாகி அதைத் தியாகம், போராட்டம், நடைமுறையூடாக நிறுவி சொந்த அணிகள் மூலம் பெண்களின் பெரும்பான்மை அல்லது சிறுபான்மையை இயல்பான இயற்கையில் அடைவதைக் கோருகின்றது. ஜனநாயகமற்ற ஆணாதிக்கப் பொது சமூக இயக்கத்தில் பெண்ணின் விகிதாசார முறையை ஆதரிப்பது பெண்ணை அரசியல் ரீதியாக வர்க்கப்புரட்சிக்குத் தயார் செய்வதன் மூலம், ஆணாதிக்கத்தை ஒழித்துக்கட்ட பயன்படுத்துகின்றது. நீங்கள் இதில் இருந்து முரண்பட்டு விகிதாசார முறை என்பது பெண்ணின் விடுதலையாக, ஜனநாயக உரிமையாகக் காண்பதில் நாம் திட்டவட்டமாக முரண்படுகின்றோம்.


நீங்கள் இதன் மூலம் ஜனநாயகத்தைப் பெற்று ஆணாதிக்கத்தை ஒழித்துக் கட்டிவிட முடியும் என்ற உங்கள் கோட்பாட்டுக்குத் திட்டவட்டமாக நாங்கள் எதிரிகள். கம்யூனிஸ்ட் கட்சியிலும் இது போன்ற போராட்ட அமைப்புகளிலும் விகிதாசார முறையைக் கோருவதைத் திட்டவட்டமாக எதிர்க்கின்றோம். எம் அமைப்புகள் திட்டவட்டமாக ஆணாதிக்க எதிர்ப்பைக் கொண்டவையாகும். இங்கு போராட்டத்தின் ஊடாகக் கோட்பாட்டுத் தலைமைகள் மக்களால் நீண்ட, இடைவிடாத முயற்சியால் உருவாக்கப்படுகின்றன. இங்கு விகிதாசாரம் என்பது, சமபங்கு என்பது அடிப்படையில் வர்க்கப் போராட்டத்துக்கும், பெண்ணியத்துக்கும் எதிரானது.


அடுத்து, எண்:2இன் படி, ஆண்கள் செய்யும் அதே வேலையில் பெண்கள் ஈடுபடும் போது காட்டப்படும் அனைத்து வேறுபாடுகளையும் நாம் எதிர்ப்பதில் எப்போதும் உங்களைவிட நடைமுறை ரீதியாக முன்னிலையில் நிற்கின்றோம். இந்தவகையில் பிரச்சாரத்தை எமது அமைப்புகளில் முன்னெடுத்து செல்வதிலும் என்றும் நாம் முன்முயற்சியுடையவர்களாக உள்ளோம். இதை நாங்கள் செய்யவில்லை என்ற உங்கள் கண்டுபிடிப்புகள் நகைப்புக்குரியவை.


அடுத்து, எண்:2இன் படி, நீண்ட வேலை நேரத்துக்கு எதிரான எமது போராட்டங்கள் வரலாற்றில் எல்லையில்லாதவை. பெண்களைச் சில தொழில்களில் விலக்கி வைப்பதைப் பொறுத்த வரை உங்கள் முடிவுகளுடன் திட்டவட்டமாக மாறுபடுகின்றோம். தொழிற்கூடங்களில் வேலை நேரம் குறைக்கப்படுவதன் மூலம் ஆரோக்கியமான உணவும், சுகாதாரமும், ஓய்வும் கிடைக்கும் என்ற நிலையில் மட்டும்தான் உங்கள் கோரிக்கையுடன் உடன்படமுடியும். இது இல்லாதவரை பெண்ணை ஈவிரக்கமின்றி முதலாளிகள் சுரண்டிக் கொழுக்க, இக்கோரிக்கைகள் அங்கீகாரம் வழங்குகின்றன.


மார்க்ஸ் எழுதிய மூலதனத்தில் இருந்து எப்படி பெண்கள் சிதைக்கப்படுகின்றனர் என்பதை ஆராய்வோம். "இருபது வயதான தையற்காரப் பெண் மேரியின் அகால சாவு பற்றி.... முறிவின்றி சராசரியாக 26.5 மணி நேரம் - மும்முரக் காலத்தில் பலதடவை 30 மணி நேரம் வேலை செய்தாள். அயர்ந்து போன அவளது உழைப்புச் சக்தி அவ்வப்போது திராட்சை இரசம் அல்லது காப்பி மூலம் மீட்கப்பட்டது. சரியாக அப்போது மும்முரக் காலத்தின் உச்சக் கட்டம்.


புதிதாய் இறக்குமதியான வேல்ஸ் இளவரசியைக் கௌரவிக்கும் பொருட்டு நடன விருந்துக்கு அழைக்கப்பட்ட உயர்குடிச் சீமாட்டிகளுக்காகப் பகட்டான உடைகளைக் கண்சிமிட்டும் நேரத்தில் கொண்டு வந்து நிறுத்துவது அவசியமாக இருந்தது.


மேரிஆன் வாக்லி 60 பெண்களுடன் சேர்ந்து உழைத்தாள். ஒவ்வோர் அறையிலும் 30 பேர். அவர்களுக்கு வேண்டிய கனஅடிக் காற்றில் மூன்றில் ஒரு பங்குக்கு மட்டுமே அந்த அறையில் இடமிருந்தது. அங்கேதான் அவள் 26.5 மணி நேரம் இடைவேளை இல்லாமல் வேலை செய்தாள்.


படுக்கையறை பலகைகளைக் கொண்டு பொந்துகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இரவில் மூச்சுத் திணறச் செய்யும் இந்தப் பொந்துகள் ஒவ்வொன்றிலும் இரண்டு இரண்டு பேராகச் சேர்ந்து அவர்கள் உறங்கினர். இந்த இலட்சணத்தில், இது இலண்டனின் தலைசிறந்த தையல் நிறுவனங்களில் ஒன்று."4


தையல், பெண்களால் செய்யக் கூடிய ஒரு தொழிலாக அன்று இருந்த போதும், இதுதான் அவர்களின் அவல வாழ்க்கை. பூர்சுவா பெண்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத சுரண்டலினால் கடுமையாகிப் போன உழைப்புகளில் இருந்து, பெண்ணை விடுவிப்பது அவசியமாகின்றது.


ஏன் இது ஆணுக்கும் பொருந்தும் என்று நீங்கள் கூறக் கூடும். ஆம் உண்மைதான். ஆனால் ஆணாதிக்க வரலாற்று வழியாகப் பெண் வீட்டில் தனித்து நிற்க, ஆண் வேட்டையில் கிடைத்த உணவை மேலதிகமாக உடன் உணவாக்கியதன் விளைவாலும், பெண் பொதுவாகத் தாவரவகை உணவை மேலதிகமாக உணவாக்கியதாலும், இதில் ஏற்பட்ட உணவுச்சங்கிலியின் நீண்ட பரிணாம வளர்ச்சி ஆணின் உடல்வலிமையைப் பெண்ணைவிட அதிகமானதாக்கியது. ஆண் பலசாலி ஆனான். அத்துடன் இருக்கும் மரபான ஆணாதிக்கக் குடும்ப மரபு, ஆணுக்கு அதிக உணவையும் பெண்ணுக்குக் குறைந்த உணவையும் (உண்டிச் சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு) பெறுகின்ற நிலைமை, பெண்ணின் வலிமையை அற்றதாக்குகின்றது (குறைக்கின்றது).


அத்துடன் பெண்ணுக்கு வீட்டு வேலை மேலதிகமாகச் சுமையாகின்ற போது, அவளின் வாழ்வு நாசமாக்கப்படுகின்றது. இவைகள் கடக்கப்படுகின்ற போதுதான், பெண் ஆணைப் போல் அனைத்து வகை தொழிலும் ஈடுபடமுடியும். இல்லாது இந்த நிலைமைகளை மீறி வைக்கப்படும் கோஷங்கள் (முழக்கங்கள்) பூர்சுவா பெண்களின் சொந்த சொகுசு தளத்துக்குள்ளான குறுகிய நலன் கொண்டு, பாட்டாளி வர்க்கப் பெண்களிடம் ஒட்டச் சுரண்டுவதைக் கோருவதாகும்.


இரவு நேரவேலையில் பெண்ணை ஈடுபடுத்தத் துடிக்கும் சுதந்திரமாகச் சுரண்டும் முதலாளித்துவம், பெண் உரிமையின் பின்னால் பூர்சுவா பெண்ணியமும் கோரும் போது, பாட்டாளி வர்க்கம் எதிர்க்கின்றது. ஏனெனின் இந்த ஆணாதிக்கச் சுரண்டல் சமுதாயத்தில் இரவு வேலை, உழைப்புச் சுரண்டலுடன் பாலியல் சுரண்டலையும் ஒருங்கிணைத்து நலிவுறச் செய்யும் வக்கிர நோக்கத்தை அம்பலப்படுத்துகின்றது. மாறாக இரவு வேலையைப் பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் ஒழித்துக் கட்டக் கோருகின்றது. இது அத்தியாவசியத் துறைகளில் அதாவது மருத்துவம் போன்ற துறைகளை விதிவிலக்காக்குகின்றது.


பெண்ணை மரபாந்த வீட்டு உழைப்புக்கு வெளியில் உழைப்பில் ஈடுபடுத்தியது எந்தப் பெண்ணியமும் அல்ல. மாறாக மூலதனமே பெண்ணை உழைப்பில் ஈடுபடுத்தியது. அதுமட்டும்தான் உபரியை மேலதிகமாகப் பெற்றுக் கொள்ள பெண்ணை உழைப்பால் ஈடுபடுத்தியது. மூலதனம் பெண்ணை உழைப்பில் ஈடுபடுத்தியதன் மூலம் ஆணின் கூலி விகிதத்தைக் குறைத்தது. இதன் மூலம் பெண்ணின் கூலியை மேலும் குறைக்க முடிந்தது. மூலதனம் பெண்ணை உழைப்பில் ஈடுபடுத்திய போது, அங்கு பெண்ணின் எந்த விடுதலையையும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மூலதனத்தின் விடுதலையை மேலும் சுயேட்சையாக்கியது. பெண்ணின் உழைப்பை மேலும் ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்புக்குக் கீழ் தரம்தாழ்த்தியது.


சுரண்டுவது அதை அதி கூடிய உபரியாக்குவது என்பதற்கு அப்பால், அங்கு பெண் பற்றி எந்தக் கரிசனையையும், பெண்ணை உழைப்பில் பயன்படுத்திய போது மூலதனம் கொண்டிருக்கவில்லை. பெண் வீட்டுக்கு வெளியில் உழைப்பில் ஈடுபடுத்துவதற்கு இருந்த நிலப்பிரபுத்துவம் மற்றும் மத ஆணாதிக்கத் தடைகளை எதிர்த்து, விடுதலை பெற்ற முதலாளித்துவ மூலதனம் இரகசியமான வழியில் பெண்ணின் விடுதலையாகப் பிரகடனம் செய்தபடிதான் பெண்ணின் உழைப்பை இலகுபடுத்தி பெற முடிந்தது.


இது இயல்பான குடும்பத்தின் உறுப்பை மேலும் அழுக்காக்கியது. பெண்ணின் சுமை இரட்டிப்பாகியதன் மூலம், குழந்தைகள் வாழ்க்கை நாசமாகியது. ஆண்கள் கடுமையான முரட்டுக் குணம் கொண்ட வகையில் தம்மை மாற்றியமைக்க, உழைப்பின் கடுமை கோரியது. இதனால் பெண் மேலும் கூனிக்குறுகி வாழ வேண்டியிருந்தது. இதனால் ஆண் - பெண் உறவுகள் முன்பை விட நாசமாகியது.


ஆண் - பெண் - குழந்தை என அனைவரின் உழைப்பினாலான கூலி கஞ்சி குடித்து வாழ்வதற்கே போதாமல் பட்டினியில் குடும்பம் சிக்கிய போது, ஆணின் எதிர்ப்பு பலமானதாக விரிவடைந்தது. இது பெண்ணின் உழைப்பை மறுப்பதாக மாறியது. பெண்ணின் உழைப்புதான் முன்னைய வாழ்க்கையைக் கூட இழந்து போகக் காரணம் எனக் கண்டும், மொத்தக் குடும்பமே உழைப்பில் அழிவதைக் கண்டு சகிக்க முடியாத கோபத்துக்குள்ளானான். இது பெண்ணின் விடுதலை மீதானதாக அல்லாது, மூலதனத்தின் கோரப்பிடிக்கு எதிரானதாக இருந்தது.


வேலையை விட்டுப் பெண்ணை வீட்டில் தங்கி நிற்க கோருவதன் மூலம், தனது பழைய கூலியை மீளப் பெற முடியும் என்ற நம்பிக்கையும், பெண்ணின் சுமையை அரைவாசியாக்குவதன் (பாதியாக்குவதன்) மூலம் வீட்டில் நிலைமையை இயல்பானதாக்கவும் கனவு கண்டான். இதனால் எதிர்ப்பு பலமானதாக இருந்ததுடன், பல சந்தர்ப்பங்களில் பெண்கள் கடுமையாக ஒடுக்கி சுரண்டப்படுவதைச் சகிக்க முடியாது, அந்த உழைப்பில் ஈடுபடுத்துவதை எதிர்த்தனர். இந்த எதிர்ப்புகளின் பின்னால் அவர்கள் ஆணின் அடிமை என்ற காரணத்தில் இருந்து அல்ல, சுரண்டலின் கோரத்தில் இருந்தே எதிர்த்தனர். இதற்கு மரபாந்த ஆணாதிக்கக் குடும்பப் பண்பாடுகள் உதவின என்பது மிகச் சிறுபங்குதான்.


ஆனால் உங்களைப் போன்றவர்கள் மார்க்சியத்தை எதிர்ப்பதற்கு இதைக் கையாளுகின்ற போது (இருபதாம் நூற்றாண்டில்), யதார்த்த நிலைமையை, வரலாறு கடந்த யதார்த்தத்தில் திசை திருப்புகின்றீர்கள். மார்க்சியம் இந்த பழைய நிலைமை மீள வராது என்பதைத் தொழிலாளிக்குப் புரியவைத்ததன் மூலம், தன்னியல்பின் மேல் உள்ள தவறைத் திருத்தியது. மாறாக ஆட்சியைப் பாட்டாளி வர்க்கம் கைப்பற்றுவது மட்டுமே தீர்வாக, மாற்றாக முன்வைத்தது.


இங்கு பெண்ணின் கடுமையான உழைப்பை எதிர்த்த போது, ஆண் தனது தனிப்பட்ட நலனில் இருந்து எதிர்த்ததில்லை. பொதுவாகப் பெண்ணின் அவலத்தில் இருந்துதான் எதிர்த்தான். தனிப்பட்ட நலன்களில் பெண்ணின் உழைப்பும் அவள் பெறும் கூலியும் ஆணுக்குச் சார்பானதாக, ஆணுக்குரியதாக இருக்கும் போதே, இவ்வெதிர்ப்புகள் எழுந்த இந்தச் சமூகநலன் சார்ந்த கண்ணோட்டம் உயர்ந்தபட்ச நோக்காக இருந்தது. இதன் மீது குறைந்தபட்ச ஆணாதிக்கக் கூறுகள் தொழிற்பட்டன. (இருந்தன)


இது பொதுவாகத் தொழிலாளர் அமைப்புகளில் நிலவிய போது, அவர்கள் மீதான பாட்டாளி வர்க்க அரசியல் மயமாதலைப் பாட்டாளிவர்க்கம் கொண்டிருக்கவில்லை. பாட்டாளி வர்க்க அணிதிரட்டலைச் செய்த போது இவற்றைச் சரியான வகையில் அணுகி, உங்களிடமிருந்து வேறுபட்டுத் திருத்தினர்.
பெண்ணின் நிலைமையை, ஆண் தொழிலாளிகள் புரிந்த அளவுக்கு நீங்கள் என்றும் உணர்வு ப+ர்வமாகப் புரிந்து கொண்டதில்லை. இதை மறுத்த மூலதனத்துக்கு விசுவாசமாகச் சேவை செய்தீர்கள். மாறாக உங்கள் பூர்சுவா சுகபோக இன்றைய (இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கனவுகளில் இருந்தே) கனவுகளில்தான் அதைக் கொச்சைப்படுத்தினீர்கள்.


இருபதாம் நூற்றாண்டில் மேற்குநாடுகளில் எல்லாத் தொழில்களையும் பெண் செய்யக் கூடிய அளவுக்கு, தொழில் நுட்பம் மற்றும் உணவுப் பங்கீடும் வேலையை இலகுபடுத்தியுள்ளது. வரலாற்றின் இயங்கியலை மறுத்து இதை அன்று கோருவதும், குறிப்பிடுவதும் மக்கள் விரோதத் தன்மை கொண்டவை. ஏனெனின் பெண்ணை உழைப்பில் ஈடுபடுத்திய முதலாளிக்கு, ஆண் மட்டும் ஈடுபடும் கடின உழைப்பில் பெண்ணையும் ஈடுபடுத்த (குறைந்த கூலியில் அதிகம் சுரண்ட) இருந்த தடையை (ஆண்களின் எதிர்ப்பை) நீக்குவது அவசியமாக இருந்தது. இதைத் தனிப்பட ஆணுக்கு எதிராகவும் பெண்ணின் உரிமையாகவும் காட்டி கோருவதன் மூலம், மூலதனம் அப்பெண்ணியத்துக்கு நன்றிக்கடன் செலுத்த தயாராக இருந்தது என்ற தோற்றத்தை உருவாக்கினர். இதன் மூலம் மூலதனத் திரட்சி உபரி மூலம் அமோகமாக உருவாக்கும் கனவில் முதலாளிகள் திளைத்தனர்.


அன்றைய நிலையில் பெண்கள் தொழில் புரியும் இடங்களில் மிக மோசமாக, காடைத்தனமாக ஈவிரக்கமின்றி சுரண்டி, அவர்களின் வாழ்வை நாசமாக்கி கொன்று போடும் தொழில்களில் இருந்து விடுவிக்க மார்க்சியம் கோரியது சரியானது. ஆண்களே செய்ய முடியாத வேலைகளைப் பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் திணித்ததுடன் மட்டுமன்றி, மிகக்குறைந்த அற்பக் கூலியில் சுரண்டப்படுவதில் இருந்தும் விடுவிக்கப்பட வேண்டும். மாறாக அவர்கள் இலகுவான, அவர்களின் உடல் வலிமைக்கு ஏற்ப (இது அவர்களுக்குக் கிடைக்கும் உணவு, ஓய்வு போன்றவற்றுடன்) மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த இடத்தில் பெண்களால் முடியாது என்று ஆண்களுக்கு மட்டும் ஒதுக்கிய இலகுவான வேலைகளில் பெண்கள் ஈடுபடும் உரிமையைக் கோருகின்றோம்,


அடுத்து, எண்:3இன் படி, வீட்டு வேலையில் ஈடுபடும் பெண்களுக்கு, வெளியில் வேலை செய்யும் தொழிலாளர் கூலியை வழங்கக் கோரும் கோரிக்கை என்பது பெண்ணைத் தொடர்ந்து வீட்டுக் கடமையில் முடக்குவதாகும். யதார்த்தத்தில் இக்கோரிக்கை தவிர்க்க முடியாமல் பெண்களே எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுவர்.


கி.பி. 1990-களில் மூலதனத்தின் சமூக நெருக்கடியைத் தவிர்க்க, வேலையை விட்டு விலகி குழந்தை பராமரிப்பில் தாய்க்குச் சம்பளம் வழங்கிய போது, பெண்கள் வீட்டு வேலையில் மூழ்குவதையும், அவர்கள் இதன் மூலம் வேலை இழப்பதையும் மரபார்ந்த கடமைக்குள் பெண் மீள நகர்த்தப்படுவதையும் கண்டு, பெண்கள் இதை மீள எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.


பாட்டாளி வர்க்கம் எப்போதும் குழந்தை பராமரிப்பு நிலையங்களை முன்வைக்கின்றது. பெண்ணின் வீட்டு வேலையை ஒழித்துக்கட்டி சமூக மயமாக்கக் கோருகின்றது. பெண்ணின் உழைப்பை வீட்டுக்கு வெளியில் கோருகின்றது. வீட்டில் உழைப்புக்குக் கூலி என்பது மரபாந்த ஆணாதிக்கக் குடும்பத்தை நிலைநிறுத்துவதாகும். தேவைக்கு ஏற்ப எடுக்கவும், இயலுமான வரை உழைக்கவும் கோரும் சமூகத்தை நாம் கோருகின்றோம். இதுமட்டும்தான் முரணிலையற்ற தீர்வை வழங்குகின்றது.


இதுவரையான காலத்தில் குடும்பத்தைப் பராமரிக்க முடியாத போது, நாம் போராடிக் கூலியை உயர்த்தக் கோருவதுடன், பாட்டாளி வர்க்கச் சொந்த அரசை அமைக்கப் போராடக் கோருகின்றோம். அரசு வழங்கும் குடும்ப உதவிகள் (மேற்கு நாடுகளில்), சமூக நெருக்கடியைத் தவிர்க்க வழங்கிய போதும், இதை உயர்த்தக் கோருகின்றோம். ஆனால் இந்தப் பிச்சை தருவதை விட, (கஞ்சித் தொட்டிக்குப் பதில் நாகரிகமாகப் பணம் தரப்படுகின்றது.) எமது உழைப்பின் மதிப்பை உயர்த்தக் கோருவதும், எமது அதிகாரத்தை நிறுவுவதுமே எமது அரசியல் வழியாகும்.


பெண்ணின் உழைப்பைச் சமூக மயப்படுத்துவதும், வீட்டுக் கடமையைச் சமூக மயப்படுத்துவதும், பெண்ணுடைய உழைப்பின் மதிப்பைக் கோருவதுடன், உயர்த்த நிர்ப்பந்திப்பதுடன் ஊடாக, கஞ்சித் தொட்டி முறையின் (அது பணமாக இருந்தாலும்)அனைத்து முறைகளையும் ஒழிக்கக் கோருகின்றோம். அடிமை உடைமை ஒழிப்புக்குப் பின்னால் சுதந்திரக் கூலியாகிய போது எப்படி மனிதன் இயந்திரத்தின் பாகமானானோ, அதுவே இந்தக் கஞ்சித் தொட்டியின் இரகசியமாகும்.
இதை ஒட்டி மார்க்ஸ் எழுதிய மூலதனத்தில் தி டைம்ஸ் இதழில் அடிமையுடைமையாளர்களை ஆதரித்து எழுதிய பகுதியை, நிலைமையைச் சுட்டிக்காட்ட எடுத்தெழுதிய பகுதியைப் பார்ப்போம். "கட்டாயப்படுத்துவதற்குரிய சாதனம் என்ற முறையில் சவுக்கைச் சொடுக்குவதற்குப் பதில் பட்டினியென்னும் கசையைப் பயன்படுத்தி, நமது இளம் பெண்களை உயிர்போகும் படி வேலை வாங்கும் நமக்கு, எப்படியும் தங்கள் அடிமைகளுக்கு நன்றாக உணவளித்து அவர்களிடமிருந்து இலகுவாய் வேலை வாங்கும் பிறவி அடிமை உடைமையாளர் குடும்பங்களுக்கெதிராய் தீயையும் சாவையும் ஏவி வேட்டையாட உரிமையில்லை என்றே நம்மில் பலரும் நினைக்கின்றனர்."4


இது எப்படி சீர்திருத்தங்கள், மூலதனத்தை ஒழிக்காத விடுதலைகள் மேலும் மோசமாக மனிதக் குலத்தைச் சிதைக்கின்றது என்பதை அம்பலப்படுத்துகின்றது. பெண்ணின் உயர்ந்த பட்சக் கோரிக்கையைப் பாட்டாளி வர்க்கம் விடுதலையின் தத்துவமாக, தீர்வாக வைக்கின்றது. இதன் போது இடைப்பட்ட வர்க்கங்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை விமர்சித்தபடி ஏற்றுக்கொள்கின்றது. இப்போராட்டத்தில் கிடைக்கும் இடைப்பட்ட நலன்கள், மேலும் அடிமையாக்கும் வழியில் இருந்த போதும் கூட, ஜனநாயக எல்லைக்குள் ஏற்றுக் கொண்டு அதன் இயலாமையை அம்பலப்படுத்தி, அடுத்த கட்டத்தை முன்கூட்டியே முன்வைத்தபடி போராடத் தொடங்குகின்றது. இங்கு கிடைப்பவை முன்னேற்றத்துக்கான அடுத்த படிகள் அல்ல, மாறாக இவை மேலும் மேலும் ஜனநாயகக் கோரிக்கையின் ஜனநாயக மூகமூடியை அம்பலப்படுத்துகின்றது.


பெண்கள் பெற்ற சமக்கூலிகள், எல்லா வேலையும் செய்யும் உரிமை, வீட்டில் உழைக்கும் பெண்களுக்கான கூலி போன்றன 21-ஆம் நூற்றாண்டில் பெண்ணை விடுவித்து விடவில்லை. மாறாக மேலும் மேலும் மனிதக் குலத்தை அடிமைப்படுத்தியதை யதார்த்தத்தில் காணமுடியும். சமக்கூலி என்பது ஆணின் கூலி குறைப்பினூடாகவும், எல்லா வேலையும் செய்வதன் மூலம் மூலதனத் திரட்சி பலமடங்காக்கியதன் மூலமும், வீட்டு வேலைக்கான கூலி பெண்ணின் கடமையை மீளவும் ஆணாதிக்க வழியில் நிறுவவும், வேலை இழப்பைத் துரிதப்படுத்தவும், சுரண்டலை இலகுபடுத்தவும் வழிகாட்டுகின்றது. சலுகைகள், சீர்திருத்தங்கள் எல்லாம் மனித அடிமைத்தனத்தை மேலும் நுட்பமாக்குகின்றன. இது மனித அன்றாட நடத்தைகளில் விடுதலையாக, குறுகிய காலத்துக்கு இவை விடுதலை போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றது. இதை மார்க்சியம் அம்பலப்படுத்தியபடியேதான் இதற்காகவும் குரல் கொடுக்கின்றது. இவைகளைப் பெறுவதன் மூலம் அதன் போலித்தனத்தையும், அதன் அடிமை விலங்கையும் அம்பலப்படுத்துகின்றது.


அடுத்து, எண்:9இன் படி, பெண் தொழிலாளர்கள், ஆண் தொழிலாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து (தொழில் தொடங்க) மூலதனம் பெறுவதற்காகச் சங்கங்களை உருவாக்குதல் என்ற கோரிக்கை பூர்சுவா பெண்ணியத்தின் மூகமுடியைக் கிழிக்கின்றது. பாட்டாளி வர்க்கம் மூலதனத்தைச் சமூகச் சொத்தாகக் கோரும் போது, இருக்கும் சுரண்டல் அமைப்பைப் பாதுகாக்க ஆண் பெண் கூட்டான மூலதனத் திரட்சியைக் கோருவதன் மூலம், நகைப்புக்குரிய பெண் விடுதலையைப் பேசுகின்றது.


பெண்ணை அடிமைப்படுத்திய தனிச் சொத்துரிமையைப் பெண் மீளக் கோருவதன் மூலம், அதை விடுதலையின் தீர்வாக வைப்பதன் மூலம், அதில் பெண் பங்கு பெற்று சுரண்டுவதன் மூலம் தன்னைத்தான் ஆணாதிக்கவாதிகளாக மாற்றி விடத் துடிக்கின்றனர். இதன் மூலம் பாட்டாளி பெண்களை அடிமைப்படுத்தி சுரண்ட பின்நிற்காத கோரிக்கையை, பெண் விடுதலையின் பின் மார்க்சிடம் விண்ணப்பிப்பதும், மார்க்ஸ் அதைச் செய்யவில்லை என்று கூறுவதன் பின்னாலும் உள்ள வர்க்க நலன் வெட்டவெளிச்சமானது.


மூலதனத் திரட்சியில் பெண்கள் சார்ந்த இடங்களில் கூட (மேலாளர் பதவியில் பெண்) ஆணுக்கு நிகராகப் பெண், ஆணையும் பெண்ணையும் சுரண்டுவது நிர்வாணமாக உள்ளது. ஆண், பெண் பங்கிட்டுத் தொழில் தொடங்கி நடந்த வரலாறும், மூலதனத் திரட்சி உயிர் வாழ்ந்த வரலாறும் கிடையாது. ஆண்கள் - பெண்கள் மூலதனம் இட்டு உலகத்தை மாற்றிவிட முடியும் என்ற தத்துவங்கள் வரலாற்றின் குப்பைத் தொட்டியில்தான் சேர்ந்தன, சேருகின்றன. ஆனால் ஆணும் பெண்ணும் போடும் புள்ளடியில் (சண்டையில்) ஜனநாயக அமைப்பு நீடிக்கின்றது. அரசைத் தீர்மானிப்பவர்கள் மக்கள் என்ற நம்பிக்கைகள், ஆணும் பெண்ணும் மூலதனம் போட்டு பெண்ணை விடுவிக்க முடியும் என்ற பிதற்றல்கள் அம்பலமாகும் போது, புரட்சி தவிர்க்க முடியாதது.


இந்த முதலாளித்துவ அமைப்பு ஒவ்வொரு தனிமனிதனும் மூலதனம் போட்டு முதலாளியாக முடியும் என்ற பிரமையை, வாக்குப் புள்ளடியூடாகக் (சண்டைய+டாக) கட்டமைக்கின்றது. இதைப் பூர்சுவா பெண்ணியம் பெண்விடுதலையின் வழியாக முன்நிறுத்துகின்றது. ஆனால் மூலதனம் மிகவேகமாக நாலு கால் பாய்ச்சலில் எம்பிக் குதித்தபடி கண்மண் தெரியாது சிலரின் கையில் குவிக்கின்றது. இது ஜனநாயக வாக்குப் புள்ளடிடையும், (சண்டையும்) தனிச் சொத்துரிமையின் கனவுகளையும் மக்களிடம் தகர்த்து எறிந்து வருவது தவிர்க்கமுடியாது. யதார்த்தம் எப்போதும் உண்மையை மூடிமறைக்க முடியாதபடி வெட்டவெளிச்சமாக்குகின்றது. ஆனால் முதலாளித்துவமும், பூர்சுவா பெண்ணியமும் தாம் இன்னமும் தமது கோரிக்கைகளுடன் பாதுகாப்பாக இருப்பதாகப் பிரகடனம் செய்கின்றது. ஆனால் புகை தீயாகின்றது. இதைத் தடுக்க எந்தக் கோட்பாட்டாலும், வன்முறையாலும் முடியாது.


அடுத்து, எண்:18இன் படி, விருப்பப்பட்டால் மட்டும் பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல் என்ற கோரிக்கை, தனிப்பட்ட ஆண் எதிர்ப்பைக் கொண்டதே ஒழிய, ஆணாதிக்க எதிர்ப்பைக் கொண்டதல்ல. ஒரு விருப்பப்பட்ட ஆணுடன் உறவு என்பது சுயநிர்ணயத்தைத் தாண்டி சுதந்திரமான கோரிக்கையாகின்ற போது, விரும்பி தெரிகின்ற வேறுபட்ட ஆணுடன் தொடர்பு என்றளவுக்கு இக்கோரிக்கைகள் விபச்சாரத் தன்மை கொண்டவை.


பெண் விரும்பினால் உடல் உறவு என்பது நியாயமானது. பெண் தனது தெரிவை உள்ளடக்கிய வாழ்வைத் தீர்மானிக்கும் உரிமையை இது பெண்ணுக்குக் கொடுக்கின்றது. பெண் விரும்பி கொள்ளும் உறவில் ஆணின் ஈடுபாடும் இணைந்து இருப்பதால் அதன் விளைவுகள் மீது பெண் மட்டும் உரிமை கோரமுடியாது. ஆணாதிக்கச் சமூக அமைப்பில் புணர்ச்சி என்பது ஆண் சார்பாக இருக்கின்ற நிலைமையை எதிர்த்த போராட்டத்தில், அதைப் பெண் சார்பாக மாற்றக் கோருவது மீளவும் சுற்றிச் சுற்றி ஆணாதிக்க அமைப்பைப் பாதுகாப்பதுதான். ஒரு செயல்பாட்டில் சமூகத் தன்மை அவசியம். பெண் விரும்பிய நிலையில் ஆணின் விருப்பத்துடன் இணைந்து கொள்கின்ற போது, அதற்குள் கூட்டு சமுதாயக் கண்ணோட்டத்தை மறுப்பது தனிச்சொத்துரிமையின் எல்லையில் வாழும் சுதந்திரத்தின் பிதற்றலாகும். இதில் இருந்தே தனிப்பட்ட ஆண் எதிர்ப்பு எழுகின்றது.
இருவரும் விரும்பி இணைகின்ற போது இன்பம் மற்றும் அதன் விளைவான குழந்தைக்கு இருவருமே பொறுப்பாக வேண்டும். இதுதான் சமூகக் கண்ணோட்டம் கொண்ட மனிதச் சமூகச் சாரத்தால் வளர்ச்சிபெற்ற இயற்கையின் உயர்ந்த நிலையாகும். இதை மறுத்து ஆணாதிக்கச் சமூகம் வாரிசு உரிமை மற்றும் பாலியல் இன்பத்தில் தனக்குச் சார்பாக ஆணை மாற்றுவது அல்லது பயன்படுத்துவது எவ்வளவுக்குக் கீழ்த்தரமான மனிதவிரோதத் தன்மை கொண்டதோ, அதற்கு நிகராகப் பெண் எதிர்நிலையில் கோரின் அதுவும் மனித விரோதத் தன்மை கொண்டவைதான். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரான ஒரே நிகழ்ச்சியை ஆதிக்கத்தின் வடிவில் கோருகின்றனர்.


இயற்கையின் முரண்பாடு எதிர் - நேர் மின்னோட்டம், காந்த மண்டலம் போன்ற உலகின் எல்லா நிலைமைகளும் ஒன்றிணைந்துதான் வாழ்கின்றன. இது போல் மேடு - பள்ளம், கூட்டல் - கழித்தல்... என அனைத்தும். மேடும் பள்ளமமும் அற்ற நிலையில் சமதரையாகின்றது. தனித்த வாழ்வு என்பது அங்கு வெற்றிடமாகிவிடும். கூட்டுவாழ்வு என்பது அடிப்படையானது. இங்கு எந்தப் பிரிவுக்கும் முதன்மையான, தனிச் சிறப்பான சிறப்புச் சலுகை இருப்பதில்லை. ஒன்று அழிந்தால் எதிர்நிலையும் அழிந்து போகின்றது. இங்கு புதிதாக ஒன்று தோன்றுகின்றது. ஆணாதிக்கம் அழிக்கப்பட வேண்டும் எனின் பெண்ணாதிக்கம் மாற்றல்ல. பெண்ணாதிக்கம் மாற்று எனின், ஆணாதிக்க நீடிப்பைக் கோருவதாகும். இது பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கையல்ல. ஆனால் உங்களைப் போன்றவர்களின் கோரிக்கை இதற்குள்தான் உள்ளடங்குகின்றது. ஆணாதிக்கம் அழிக்கப்பட்டு புதிய ஆண் - பெண் சமூகம் சமத்துவத்தின் அடிப்படையில், எந்தப் பிரிவுக்குமான ஆதிக்கமின்றி கோரவேண்டும.
ஒரு குழந்தையைக் கர்ப்பப்பையில் தரிக்கும் தாய்மையின் உடல் சார்ந்த உரிமையைப் பெண் கோரும் போது, அதற்கு இயங்கியல் மறுப்பு அடிப்படையாகின்றது. இதையே அடிப்படையாகக் கொண்டு ஆண், இயற்கை மீது தனது சர்வாதிகாரம் மூலமான அமைப்பில் நீடிக்கின்றான். பெண்ணின் உடல் வெறும் வெற்றிடத்தில் வாழவில்லை. மாறாக பரஸ்பர உறவுகளால்தான் எல்லாவிதமான இயக்கங்களும் இயங்குகின்றன. ஆண் இன்றி பெண்ணோ, பெண் இன்றி ஆணோ உலகத்தில் இல்லை. பரஸ்பரம் ஒன்றிணைந்த இயங்கியல் விதிதான் மனித அடிப்படையின் இயற்கையாகும். இயற்கையை மறுக்கின்றபோது இயற்கை மீதான தனிமனித உரிமைகள் சர்வாதிகாரமாக மாறுகின்றது. சர்வாதிகாரம் என்பது சமூகம் மீதான தனிநபரின் உரிமையாகி, இது சுதந்திரமான ஜனநாயகமாக நீடிக்கின்றது.


ஒரு பெண்ணின் வயிற்றில் குழந்தை தரித்த பின்னால் அதை அழிக்கும் உரிமை தாயிடம் இருக்கமுடியாது. ஏனெனின் அது வேறு ஓர் உயிரின் வாழும் உரிமையாகின்றது. அது இயற்கையின் இயங்கியல் உரிமையாகின்றது. கருத்தரிப்புக்கு முன் அந்த உரிமை தாயிடமும், தந்தையிடமும் இருக்கின்றது. ஒரு பெண் கருவைச் சுமப்பதா? அல்லது விடுவதா? என்பது சுதந்திரமான வெற்றிடத்தின் முடிவுகளல்ல. மாறாக யதார்த்த உலகின் சமூகப் பொருளாதார நலனுக்கு உட்பட்டே இது இயங்குகின்றது.


அழிக்கும், சுமக்கும் உரிமையைக் கைக்கொள்ளும் நடத்தையின் முடிவுகளில் இருக்கும் சுதந்திரம், ஆணாதிக்கச் சமூக அமைப்பின் எல்லைக்குள் தான் வந்தடையப்படுகின்றன. இதை யாரும் மீறமுடியாது. ஆணாதிக்க அமைப்புக்கு வெளியில் யாரும் சுதந்திரமாக இருக்கவும் முடியாது, சுதந்திரமாகச் சிந்திக்கவும் முடியாது. அதன் உட்கூறில்தான், குறித்த சமூக எல்லைக்குள்தான் முடிவுகள் எல்லாம் எடுக்கப்படுகின்றன. எடுக்கும் முடிவைப் பெண் தனித்தெடுத்தாலும் ஆணாதிக்க அமைப்புக்குள்தான், அதற்குள் மட்டும்தான் விளைவு தீர்மானிக்கப்படுகின்றது. பெண் மட்டும் முடிவெடுத்தாலோ அந்தப் பெண் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை கண்ணோட்டத்தில் நின்று, அக்கோட்பாட்டின் செல்வாக்கில் எடுக்கும் முடிவாகின்றது.


ஆணாதிக்கம் சமூகத்தின் அவலத்தைக் கோரமாக்குகின்ற போது கரு அழிப்பு பூர்சுவா வர்க்கத்தின் ஊசலாடும் மலட்டுத்தனத்தில் இருந்து ஒப்பாரியாகின்றது. சமூக அவலத்தின் காரணத்தைச் சொந்தக் கருவின் மீது திணித்து அதை அழித்துக் கொள்(ல்)வதன் மூலம், சுதந்திரமாக விடுதலையடைவதாக எண்ணுகின்ற போதே, அந்த வர்க்கத்தின் ஜனநாயகக் கோரிக்கையாக உள்ளது. இதைப் பாட்டாளி வர்க்கம் விமர்சனத்துடன் ஆதரிக்கும் போது, இந்த உரிமையை விரும்பி கலவியில் ஈடுபட்ட ஆண் - பெண்ணின் பொது உரிமை மீது முன்வைக்கின்றது. ஆனால் பெண்ணின் உரிமையாகக் கோருகின்ற போது அதில் உள்ள தனிச் சொத்துரிமை கண்ணோட்டத்துடன் கூடிய சமூக மறுப்பை விமர்சிக்கின்றது.


இச்சமூகத்தில் ஆணாதிக்கத்துக்கு மாற்று பெண்ணாதிக்கமல்ல. பெண்ணாதிக்கம் இயல்பில் ஆணாதிக்கத்தை நிலைநிறுத்துகின்றது. கூட்டு வாழ்க்கைக்குப் பதில் தனிப்பட்ட மனித வாழ்க்கையை உரிமையாக்குவது மூலதனத்தின் எல்லைக்குள்ளான கோரிக்கையாகும். சமுதாயம் என்பது மறுக்கப்படுகின்ற போதும் தனிப்பட்ட ஆண், தனிப்பட்ட பெண் எதிரியாகக் காட்டப்படும் போதும், அங்கு அவை உரிமையாகவும் மாற்றம் காண்கின்றது.


தனிப்பட்ட மனிதச் சுதந்திரம் என்பது சமூகச் சுதந்திரத்தை மீறிக் கோருவது என்பது இன்று இருக்கும் சமூக அமைப்பாகும். தனிமனிதன் தனக்குள் தான் சிந்திக்கவோ, சுதந்திரமாகச் செயல்படவோ முடியாது.


சிந்தனை பருப்பொருளில் இருந்து தொடங்குகின்றதா? அல்லது சிந்தனையில் இருந்து பருப்பொருள் தோன்றுகின்றதா? என்ற கேள்வியை இதற்குள் எழுப்புகின்றது.


இயற்கை மனிதனுக்கு முன் சுயமாக இருந்ததா? அல்லது மனிதன் உருவாக்கியதா? என்ற அடிப்படையான கேள்விக்கு இட்டுச் செல்லுகின்றது.


இது பொருள்முதல்வாதமா? அல்லது கருத்துமுதல்வாதமா? என்ற கேள்விக்கு இட்டுச் செல்லுகின்றது.


இயற்கையை ஆதாரமாகக் கொள்ளாத கோரிக்கைகள், அதன் வளர்ச்சியை உந்தித் தள்ளாத வீக்கங்களை நாம் ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போராடுவோம்.


மனித அவலங்களைப் போக்க போராடும் போது, மனிதனின் இன்றைய பூர்சுவா நிலையில் இருந்து விடையைக் காண்பதை விடுத்து, இயற்கை அதன் சுயேட்சையான, சுதந்திரமான இயக்கத்தில் பரிணாமத்தை அடிப்படையாகக் கொண்டே மனிதனைப் பற்றிய ஆய்வையும் தீர்வையும் தேடுகின்றோம்.


மார்க்சிடம் வைக்கப்படுகின்ற கோரிக்கைகளில் சிலவற்றை மாதிரிக்கு எடுத்து ஆய்வு செய்கின்ற போதே, அதில் உள்ள பூர்சுவா கோரிக்கையைக் காணமுடிகின்றது. பாட்டாளி வர்க்கம் பூர்சுவா கோரிக்கையின் பின்னுள்ள ஜனநாயகக் கோரிக்கையை ஆதரிக்கும் போது, விமர்சனத்துடன் தான் அணுகி ஆதரிக்கின்றது. இதைத் தாண்டி பாட்டாளி வர்க்கம் தனது சொந்தக் கோரிக்கையை முன்நிறுத்துகின்றது. இது ஒட்டுமொத்த விடுதலையை ஆணாதிக்கத்திடம் நிபந்தனையின்றி கோருவது மட்டுமன்றி அதன் இறுதி முடிவையும் பிரகடனம் செய்கின்றது.


நாம் கடிதத்தின் உட்பகுதியில் பூர்சுவா அடிப்படைகள் சிலவற்றைப் பார்ப்போம். "கூட்டு வாழ்வு முறை இலட்சியத்தையே நீங்கள் (மார்க்ஸ்) மிகக் கடுமையாக நிராகரித்திருக்க வேண்டியதில்லை. ...ஒருவேளை ஒரு கூட்டுவாழ்வுக் குழாமில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் அவ்வுறுப்பினர்கள் பலதரப்பட்டவராகவும் இருந்தால், நமக்குப் பிரியமான பயன்தரக்கூடியவர்களின் நட்பை நாம் பெற வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்."46


நீங்கள் திரித்து காட்டுவதற்கு மாறாக, மார்க்ஸ் கூட்டுவாழ்வு முகாம்களை நிராகரித்தவரே ஒழிய, கூட்டாக மனிதர்கள் வாழ்வதை நிராகரிக்கவில்லை. கூட்டுவாழ்வுக்காக, அதைச் சமுதாய ரீதியாகப் படைப்பதற்காகவே, வாழ்க்கை பூராவும் போராடியவர். அன்று சமுதாய அவலங்களின் மீது அதிருப்தியுற்றோர் ஒன்று இணைந்து உருவாக்கிய கூட்டுவாழ்வு முகாம்கள் அதாவது கம்யூனிசக் குடியேற்றங்கள் மூலம், சமுதாயத்தை மாற்றிவிட கனவு கொண்டனர். கற்பனாவாதச் சோசலிச கனவுடன் உருவாகிய வகைவகையான செயல் வடிவங்களில் இதுவும் ஒன்று. இது போன்ற குடியேற்றங்கள் மூலதனம் மற்றும் தொழில்களை கூட நடத்தி உற்பத்தியைப் பங்கிட முயன்றன. ஆனால் இது ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்குத் தீர்வை வழங்கிவிடவில்லை.


சமுதாயத்தின் அவலத்தைப் போக்க வர்க்கப் போராட்டம் வன்முறையூடாக நடத்தப்பட வேண்டும் என்பதை விஞ்ஞானப் பூர்வமாகத் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தில் கண்டுபிடித்தவுடன், மார்க்ஸ் பழைய கற்பனாவாதச் சோசலிச வடிவங்களை விமர்சனப்பூர்வமாக நிராகரித்தார். நடைமுறையுடன் வழிகாட்ட மக்களைச் செயல் களத்தில் ஈடுபடுத்தும் புரட்சிகரமான பாதைக்கு முன்னால் கூட்டுவாழ்வு முகங்கள் சீரழிவான பாதையாக இருந்தன. மக்களின் செயலை, புரட்சிகர நடைமுறையை மறுக்கின்ற கூட்டுவாழ் முகாம்கள், அடிப்படையில் அராஜகவாதப் பிரிவின் கற்பனையான கம்யூனிசத்தைத் தீர்வாக்கியது. இந்தச் சமுதாயத்தில் இருந்தபடி கட்டமைக்கப்படும் கற்பனையான கம்யூனிச முகாம்கள், அடிப்படையில் தனக்குள் தான் சீரழிவதைத் தடுக்க முடியாது என்பதை மார்க்ஸ் ஏங்கெல்ஸ் அம்பலப்படுத்தினர்.


மனிதர்கள் கூட்டு வாழ்வில் இருப்பதை மார்க்ஸ் எப்போதும் தனிநபர் இருத்தலுக்கு எதிராக, தனித்தொருவராக ஏங்கெல்சுடன் இணைந்து போராடிய சரியான அரசியல் திசை வழியைத் திரித்து, கூட்டுவாழ்வு முகாம்களின் நடைமுறை மற்றும் கோட்பாட்டு மீதான விமர்சனத்தைப் புரட்டிக் காட்டுவதன் நோக்கம், மார்க்சிய எதிர்ப்பின் காழ்ப்புணர்வுதான். அத்துடன் வரலாறு கடந்து 15 வருடங்களின் பின்னால் இது போன்ற முகாம்கள் தோல்வி பெற்ற வரலாற்றை எந்த விதமான சுயவிமர்சனமும் இன்றி, மீள மார்க்சுக்கு எதிராக இன்று வைக்கும் போது, அராஜகவாதத்தின் கெக்கலிப்பே எஞ்சுகின்றது. மாபெரும் சோவியத், சீன புரட்சிகள் உள்ளிருந்த முதலாளித்துவ மீட்சியால் கற்றுத் தரும் பாடங்களை மீறி, சிலர் நடத்த எண்ணும் கூட்டு வாழ்வு முகாம்கள் இன்று எமக்குத் தீர்வைத் தருமா?


ஈழப் போராட்டத்தில் இருந்து சீரழிந்து போன நபர்கள் கனடா மற்றும் ஐரோப்பாவில் இது போன்ற பின்நவீனத்துவப் போதனைகளுடன் நடத்திய சில நடத்தைகள், பெண்களை விபச்சாரம் பண்ண வைக்கும் அளவுக்கு, இந்தக் கூட்டுக் கோட்பாடுகள் சுயநலம் கொண்டவையாக இருந்தன. பின்னால் இப்பெண்களையே தமது ஆணாதிக்கப் பாலியல் தேவைக்குப் பயன்படுத்திய மற்றும் ஊக்குவித்த நபர்கள், பின்னால் முரண்பாடுகளின் போது அப்பெண்களை "வேசை" எனத் தூற்றுவதாக எம் காதால் அறிகின்றோம்.


விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுகள், போராட்டங்கள் ஊடாகவே ஒவ்வொன்றையும் மார்க்சியம் அணுகின்றது, ஏற்றுக் கொள்கின்றது. இதை மறுத்து அந்தக் கடிதம், மேலும் கூறுவதைப் பார்ப்போம். "நீங்களும் (மார்க்சும்) பெண்களின் கருத்துக்களையும், பங்கேற்பையும் புறக்கணித்துள்ளீர்கள். பாட்டாளிகளின் இந்த அறிக்கையில் (கம்ய+னிஸ்ட் கட்சி அறிக்கையில்) பெண்களாகிய எங்களது சிந்தனை வளத்துக்கும் செறிவுக்கும் இடமளிக்கப்படவில்லை. போராட்டங்களிலும் எழுச்சிகளிலும் எங்களுக்கு இடம் இல்லை என்று உங்கள் பார்வை அமைந்திருப்பது போல் தோன்றுகின்றது. எங்களுக்குரிய பாதுகாப்பு என்று நீங்கள் நினைப்பதை எங்களுக்கு வழங்குகிறீர்கள். ஆனால் அதே சமயம் எங்கள் குரல்களை நீங்கள் மறுக்கிறீர்கள். வென்றெடுக்க ஓர் உலகம் எங்களுக்கு இல்லையா?"46 எனக் கேட்டு எழுதுகின்றார். ஆம் வென்று எடுக்க உங்களுக்கு ஓர் உலகம் இல்லைதான். இந்த அமைப்பில் அதற்குள் உங்களுக்கு (பெண்ணாதிக்கத்துக்கு) வென்றெடுக்க ஓர் உலகம் இருக்கமுடியாது. அதனால் தான் உங்கள் பூர்சுவா கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டியுள்ளது.


நான் மேல் விவாதித்த கோரிக்கைகள் மீதான விமர்சனமும், கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை மீதான கருத்தும் மார்க்ஸ் மீதான அவதூறுகளை நிராகரிக்கின்றது. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் நிலையைக் குறிக்கின்றதே ஒழிய பெண்கள், தொழிலாளர்கள், காலனி மக்கள், இன ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் மக்கள் என சமுதாயத்தில் பல்வேறு அவலங்களைச் சந்திக்கும், பல்வேறு மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் உள்ளடக்கியவை அல்ல. ஏனெனில் இவைகளெல்லாமும் பாட்டாளி வர்க்கத்துக்குள் அடக்கம் அல்லவா? அதேநேரம் பாட்டாளி வர்க்கம் பூர்சுவா கோரிக்கையை எழுப்பவேண்டிய தேவையும் அவசியமும் கிடையாது. உங்கள் கோரிக்கையில் பாட்டாளி வர்க்கக் கோரிக்கையை எழுப்பவில்லை என்பதன் ஊடாகப் பூர்சுவா வர்க்கத்தின் நோக்கத்தைத் தெளிவாக்குகின்றீர்கள். பாட்டாளி பெண்களின் கோரிக்கையைத் திட்டமிட்டு நிராகரித்ததன் மூலம் அதை மேலும் துல்லியமாக்குகின்றீர்கள். அது தனது சொந்த வர்க்கக் கோரிக்கையைத்தான் கோரும். வரலாற்றில் பெண்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மார்க்ஸ் மறுத்தார் என எந்த ஆதாரமும் எதுவும் முன்வைக்க முடியவில்லை. பெண்கள் தொடர்பான சிறந்த ஆய்வையும், நடைமுறைத் தீர்வையும் மார்க்சியம் முன்வைத்த வரலாற்றைக் கடந்து, மீள ஒப்பாரி வைப்பதன் நோக்கம் மார்க்சைக் கொச்சைப்படுத்தி ஆணாதிக்கத்தைப் பாதுகாக்க எடுத்த விடாப்பிடியான தீவிரமான முயற்சிதான் இக்கடிதம்.


இதற்காக வைக்கும் வாதத்தைப் பார்ப்போம். "...நீங்களோ மார்க்சோ அல்லது திருவாளர் ஏங்கெல்சோ பெண்களாகிய நாங்கள் எந்த வழிமுறைகளின் மூலம் எங்களுடைய இன்றைய சூழ்நிலைமைகளை மாற்ற முடியும் என்பதைப் பற்றி ஏதும் சொல்லவில்லை.. ~இன்றைய சமூக முறை ஒழிக்கப்படும்| வரை நாங்கள் காத்திருக்கத்தான் வேண்டுமா? அதுவரை நாங்கள் என்ன செய்வது?"46


இது நகைப்புக்குரிய வாதம். மார்க்சியத் தீர்வை எடுத்துக் காட்டி பின் நிராகரித்தபடி பெண் விடுதலைக்கு எதுவும் சொல்லவில்லை என்று புலம்புவது பூர்சுவாத்தனத்தின் அற்ப பிழைப்புத்தனமாகும். சமூகம் ஒழிக்கும் வரை காத்திருக்க முடியாது என புலம்பும் நீங்கள், இன்று இந்தக் கடிதம் எழுதிய போது, எதைக் காத்திருக்காது (உடனடியாக) வென்று எடுத்தீர்கள். அங்கு எதுவும் வென்று எடுக்கவே இல்லை. ஏனெனின் வென்றெடுக்க ஓர் உலகம் இல்லையல்லவா!


நாங்கள் என்ன செய்வது? என, எமது தீர்வை நிராகரித்தபடி புலம்பும் நீங்கள், அதைச் செய்ய முடியும், இதைச் செய்ய முடியும் என்றல்லவா முன்வைத்திருக்க வேண்டும். எமது தீர்வு தவறு என்றால் அது எப்படித் தவறு என்றெல்லவா முன் வைத்திருக்க வேண்டும். எப்படி தீர்க்கப்பட வேண்டும், எப்படி தீர்க்க முடியும் என ஆணித்தரமாக அல்லது மாற்றாக அல்லவா முன் வைத்திருக்க வேண்டும். இது அல்லவா அழகு. இது இல்லாமல் ஒப்பாரி வைத்து புலம்புவது ஏன்?


சமூக முறை ஒழிக்கப்படும் வரை எதுவும் மாற்றமுடியாது என்று எங்கேயும் சொன்னேனா? இல்லையே. இது இயங்கியலுக்கு முரண் அல்லவா! இது அராஜகவாதத்தின் அற்பத்தனமாகும். மார்க்சியத்தை உங்கள் அராஜக வழியில் புரிந்து கொண்டால் இப்படித்தான் புலம்புவது நிகழும். அராஜகவாதம் தான் எல்லாவற்றையும் திடீர் என மாற்றிவிடக் கனவைக் காண்கின்றது. இதில் இருந்துதான் புரட்சிக்குப் பின் ஒரேயடியாக எல்லாவற்றையும் ஒழிக்கக் கோருகின்றது. புரட்சிக்கு முன் அதை ஒழித்துவிட்டதாகத் தனக்குள் கனவு காண்கின்றது. உங்கள் கூட்டு வாழ்வு முகாம் கோரிக்கை இதையே கோருகின்றது.
பாட்டாளி வர்க்கப் புரட்சி திடீர் என ஒரே நாளில் நடப்பதில்லை. அப்படி நடக்கவும் முடியாது. மாறாகப் பல்வேறு மக்கள் போராட்ட வழிகளின் ஊடாக, நெளிவுசுழிவான பாதைகளின் ஊடாக, பல்வேறு பகுதிக் கோரிக்கைகளின் ஊடாகவே மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டுப் புரட்சியை வந்தடைகின்றனர். இதில் பாட்டாளி வர்க்கப் பெண்ணின் கோரிக்கை உட்பட பூர்சுவா பெண்ணின் ஜனநாயகக் கோரிக்கை உள்ளிட்ட அனைத்தும் நடைமுறைப் போராட்டம் ஊடாகவே, இந்தச் சமூக அமைப்பு படிமுறை வளர்ச்சி ஊடாகவே ஒழிக்கப்படுகின்றது. இந்த படிமுறை மாற்றத்தில் திடீர் பாய்ச்சல்கள் நிகழ்கின்றன. ஆனால் அது முழுமையில் மனித அவலத்தை அப்பாய்ச்சல் ஒழித்துவிடுவதில்லை. இது புரட்சிக்குப் பின்பும் கூட நீடித்த வழிகளில் நிகழ்கின்றது. பெண்கள் பெற்ற உரிமைகள் எல்லாம் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தினாலேயே ஆண் - பெண்ணுக்குச் சலுகையாகக் கிடைத்தனவே ஒழிய விடுதலையாக அல்ல.


விடுதலை என்பது வர்க்கப் போராட்டத்தின் தொடர்ச்சியாக உள்ளது. வர்க்கப் போராட்டத்தின் கூர்மைதான் எப்படிப்பட்ட ஆட்சி அமைப்பு, என்ன ஆட்சியமைப்பு என்பதைத் தீர்மானிக்கின்றது. அதுபோல் ஆளும் வர்க்கங்கள் வர்க்கப் போராட்டத்தைத் தனித்து (குளிர்வித்து) ஆட்சியமைப்பை நீடிக்க வர்க்கச் சலுகைகளையும் வழங்குகின்றது. இன்று கிடைத்த உரிமைகள் எல்லாம் பாட்டாளிவர்க்கத்தின் போராட்டத்தினால் கிடைத்த சலுகையாகவே உள்ளது. இதில் பூர்சுவா வர்க்கம் எல்லா வரலாற்றுக் காலக்கட்டத்திலும் கிடைத்த சலுகையின் போது துரோகம் இழைத்தது. இது பெண்களின் உரிமையாக இருந்து சலுகையாகிய போது, பூர்சுவா பெண்ணியம் பாட்டாளி பெண்ணியத்தை எட்டி உதைத்துத் துரோகம் செய்தவை வரலாறு முழுக்க நீடித்துப் போயுள்ளது. இது பல்வேறு போராட்டத்துக்கும் பொருந்தும். தொடர்ந்து அவதூறுகளை ஆராய்வோம்.


"சமத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றை ஐரோப்பாவில் நடைமுறைப்படுத்துவதற்காக, சங்கங்கள் அமைப்பதன் மூலம் பெண்கள் மேற்கொண்ட முயற்சிகளை நீங்கள் கூறாததால் பாலினம், மரபினம், பிறப்பு, சாதி, செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் அனைத்தையும் ஒழித்துக் கட்டும் இலட்சியங்களைப் பின்னடையச் செய்துள்ளீர்கள்."46 ஏதோ மார்க்ஸ் இது பற்றி கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் குறிப்பிடாததால்தான், சமூகத்தில் ஆணாதிக்கம் நீடிப்பதாகக் கூறுவது அடிமுட்டாள்த்தனமாகும்.


ஆணாதிக்கம் நீடிப்பதற்கான அடிப்படைக் காரணம் தனிச் சொத்துரிமை என்பதை மறுக்கும் நீங்கள், அதைக் கண்டு கொள்ள மறுத்து சமத்துவத்தை, ஜனநாயகத்தைப் பெற சங்கம் அமைப்பதன் மூலம் தீர்வுகாண பிரகடனம் செய்வதன் மூலம் எம்மில் இருந்து திட்டவட்டமாக வேறுபடுகின்றீர்கள். பிரெஞ்சு முதலாளித்துவப் புரட்சியின் சமத்துவம், ஜனநாயகம் பற்றிய பிரமைகளைப் பாட்டாளி வாக்கம் என்றோ கலைந்து அதை எதிர்த்துப் போராடுகின்றது. சமத்துவம், ஜனநாயகம் என்பது வர்க்கச் சமுதாயத்தில் ஒரு வர்க்கத்தின் கோரிக்கையாகவே என்றும் இருக்கும். எல்லோருக்கும் சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும் வர்க்கச் சமுதாயத்தில் பெறும் கனவுகள் சுரண்டல் அமைப்பின் அடிமைத்தனத்தை சுதந்திரமான ஜனநாயகப்படுத்துவதுதான்.


மார்க்ஸ் அறிக்கையில் குறிப்பிடாமையால் இது பின்தள்ளிவிட்டதாகக் கூறுவது அபத்தமாகும். சமூக இயக்கம் என்பது ஒரு தனிமனிதனின் கையில் இருப்பதில்லை. உங்கள் கோரிக்கையுடன் கூடிய செயல்களுக்கு வரலாற்றில் என்ன நடந்தது? சமத்துவம், ஜனநாயகம் என்பது, மக்கள் செல்வங்களை இழந்து போவதைத் துரிதப்படுத்தியுள்ளதை, மூலதனத்தின் திரட்சியூடாகக் காணமுடியும். தேர்தல் மூலம் இன்று ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் நீடிக்க வைத்து பாதுகாக்கப்படும் அமைப்பில், பாட்டாளி வர்க்கம் பெற்ற உரிமைதான் என்ன என்று திரும்பிப் பார்க்கக் கூடியதாக இருந்தும் 15 வருடங்களுக்குப் பின், இப்படி எழுதும் போது, இந்த ஏகாதிபத்திய அமைப்பைப் பாதுகாக்க சபதம் மூலம் பிரகடனம் செய்கின்றனர். இதைச் சாதிக்க வைக்கும் வாதத்தைப் பார்ப்போம்.


"நமது பாட்டாளி வர்க்கச் சகோதரர்களும் கூட பெண்கள் விஷயத்தில் அநீதியாகவும் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையிலும் நடக்கக் கூடும். அரசியல் துறையில் நாங்கள் கேட்கும் சம உரிமைகளைத் தர அவர்கள் மறுக்கவில்லையா?" என்று குற்றம் சாட்டுகின்றார். இதற்கு மேலே விரிவாகப் பதிலளித்துள்ளேன். இருந்தபோதும் சில குறிப்புகளைப் பார்ப்போம்.


அரசியல் துறையில் அதாவது கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமை முதல் அணிகள் வரை பெண் பிரதிநிதித்துவம், சாதி பிரதிநிதித்துவம், இனப் பிரதிநிதித்துவம், நிறப் பிரதிநிதித்துவம், பின்தங்கிய பிரதிநிதித்துவம் என பிரித்துக் கொடுப்பதே ஜனநாயகம் என்றும், இதுவே புரட்சி என்றுமல்லவா இது கோருகின்றது.


லெனினும் சரி, மாவோவும் சரி சொந்தக் கட்சியில் இப்படி பிரித்து கொடுத்திருந்தால் புரட்சி நடந்திருக்குமா? இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஏன்? கட்சி என்பது தலைமை முதல் உறுப்பு வரை உருக்குப் போன்ற பாட்டாளி வர்க்கத் தத்துவத்தால் கட்டமைக்கப்படுகின்றது. இது நீண்ட போராட்டத்தின் ஊடாக, தியாகங்கள் ஊடாக உறுதிப்படுகின்றது. இதைப் பங்குச் சந்தை மாதிரி பிரித்து கொடுத்தால் ஏகாதிபத்திய அமைப்பு நீடிப்பதை உறுதி செய்யும்.


பாட்டாளி வர்க்கம், பெண்களைப் பெண்கள் என்பதால் விலக்கிவிடுவதில்லை. மாறாகப் பெண்களின் வர்க்கப் போராட்டத்தினூடாகக் கட்சிக்குள் வரக் கோருகின்றது. அங்கு எண்ணிக்கையில் சமத்துவத்தை மீறி பெரும்பான்மையாக இருந்தாலும், அதை உற்சாகமாகப் பாட்டாளி வர்க்கக் கோட்பாடு வரவேற்கின்றது. அதேநேரம் ஒரு சதவீதம் பெண்ணாக இருந்தாலும், 99 சதவீதம் பெண்ணாக இருந்தாலும் ஆண்-பெண் வேறுபாட்டைக் காட்டுவதில்லை. எண்ணிக்கையில் இதை நீக்கக் கோரும் அபத்தங்களைத்தான் புரட்சிக்கு விரோதமான அதீத ஜனநாயகப் பிதற்றல்களை மறுக்கின்றது.


உதாரணமாக ஒரு நோய்க் கூறு தொடர்பான மருத்துவத்தில் ஆண்-பெண் சமத்துவத்தைக் கோரி விஞ்ஞானிகள் பங்குபெறின் மக்கள்தான் இறப்பார்கள். யார் சிறந்த மருத்துவ விஞ்ஞானியாக இருக்கின்றனரோ அவர்கள்தான் (இங்கு ஆண் அல்லது பெண் பெரும்பான்மையாக இருக்கலாம்) மருத்துவம் செய்யமுடியும். சமூக நோயைத் தீர்க்க நோய்க்கான காரணத்தைத் தெரிந்து அதை நடைமுறையில் தீர்க்கப் போராடாத அறிவற்ற அரைவேக்காட்டுக்காரர்களை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நிராகரிக்கின்றது. ஏன் சமத்துவம், ஜனநாயகம் பற்றிய பூர்சுவா கோரிக்கையுடைய உங்களுக்கு, அதற்கு எதிரான கோட்பாட்டு அடிப்படையைக் கொண்ட எம் அமைப்பில் இடம் இல்லை.


சமமான பங்குபற்றல் (பங்கு பெறல்) என்ற அதீத ஜனநாயகக் கோரிக்கை அராஜகவாதத்தின் பிதற்றலாகும். முதலாளித்துவ ஜனநாயகம் பற்றிய பிரமைகளை உள்ளடக்கிய எவருக்கும் எமது கட்சியில் இடம் இருக்காது. இதற்கு எதிரான எமது வர்க்கப் போராட்டம் உங்களையும் இதுபோன்ற கோரிக்கை உடைய அமைப்புகளையும், தகர்த்தபடிதான் ஆணாதிக்கத்தை ஒழித்து முன்னேறுகின்றது. மேலும் அக்கடிதம் வாதிடுவதைப் பார்ப்போம்.


"சமூக உறவுகளைப் பெண்கள் புரிந்து, வெளிப்படுத்தும் முறை, அவற்றை ஆண்கள் புரிந்து, வெளிப்படுத்துவதிலிருந்து வேறுபடுகிறது"46 என்ற விவாதம் இயங்கியல் தன்மையை மறுக்கின்றது. கருத்துமுதல்வாதத்தின் பிதற்றலாகவானது வெளிவருகின்றது. புலன் உணர்வுவானது பருப்பொருட்கள் உட்பட்டுத்தான் சிந்தனையாகப் பிறக்கின்றது. அனுபவவாதம் எப்போதும் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டியதில்லை. பெண்களே ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தமுடியும். ஒடுக்கப்பட்ட சாதி பிரிவே உயர் சாதிக்காக இயங்க முடியும். இது சகலத் துறைகளிலும் சகலவிதமான செயல்பாடுகளிலும் அனுபவவாத யதார்த்தத்தை மீறி மாற்றியமைக்கின்றது. மனிதன் சமூகத்தைப் புரிந்து கொள்ளும் வடிவத்தில்தான் சார்ந்துள்ளதே ஒழிய, எங்கிருந்து வந்தனர் என்பது பருப்பொருளைப் புரியும் வடிவத்தைக் கருத்துமுதல்வாதம் அனுபவவாதம் ஊடாக மறுப்பதாகும்.


அடக்கப்பட்ட பிரிவுகள் பொதுவாக அனுபவிக்கும் அடிமைத்தனத்தைக் கட்டாயமாக வெளிப்படுத்த வேண்டியதில்லை. எதிர்த்தரப்பில் இணைந்து கொள்வதை அடிக்கடி யதார்த்தத்தில் காண்கின்றோம். பெண்ணே பெண்ணுக்கு எதிரான கோட்பாட்டில் இயங்குவதும், ஆணாதிக்கத்தின் பிரதிநிதியாக இருப்பதையும் காண்கின்றோம். இது பல்வேறு பிரிவுகளில் காணமுடியும்.


ஆட்சியில் ஏறிய சிறிமா பண்டார நாயகா, இந்திரா காந்தி முதல் ஜரோப்பியப் பெண்கள் வரை, அப்பெண்கள் புரிந்து வெளிப்படுத்தியது என்ன? இங்கு புரிந்து வெளிப்படுத்தும் அனுபவவாதம் பொதுவாகவே ஆணாதிக்கம் சார்பாக உள்ளது. ஆணாதிக்கச் சமூக வடிவத்தையே பெண் தன் அனுபவமாகப் பெறுகின்றனர். இவை பொதுவான பண்பாடாக, கலாச்சாரமாக, மரபாக, ஜனநாயகமாக, சுதந்திரமாகப் பெறுவதே அனுபவவாதப் புரிதலாகவும் வெளிபாடாகவும் உள்ளது. இதை மறுக்கின்ற போதே எப்போதும் ஆணாதிக்கத்துக்கு எதிரான சிந்தனை வெளிப்படுகின்றது. யதார்த்தமான வாழ்க்கையைக் கண்டு சகிக்காமல் அதில் இருந்து சிந்தனை வெளிப்படும் போது, ஆண் பெண் வேறுபாடு இன்றி வெளிப்படுத்தமுடியும. பெண்ணைவிட அதிகமான ஆண்கள் பெண்களின் பிரச்சினையை வெளிப்படுத்துவது இதனால்தான். பிரசவ வேதனையைப் பெண் புரிந்த மாதிரி ஆண் புரிய முடியுமா என்ற கேள்வியில், பிள்ளை பெறாத பெண்ணால் புரிய முடியுமா? ஆம் புரிய முடியும்.


பொருள் முதல் வாதம் அனுபவவாதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அனுபவவாதம் எப்போதும் சரியான வகையில் முன்வைக்கப்படுவதில்லை. அது கறைபடிந்த கருத்துமுதல்வாதமாக நீடிக்கின்றது. அனுபவவாதப் புரிதலாகக் கறைபடிந்து போயுள்ளது. பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் புரிந்து கொள்வதைச் சிக்கலாக்கி வேறுபடுத்துகின்றது. இயல்பாக, இயற்கையாகப் புரிந்து கொள்வது முற்றுமுழுதாக இயற்கை சார்ந்து சுதந்திரமாகச் சிந்திப்பதுதான்.


காதல் உணர்வையும், பாலியல் இன்ப உணர்வையும் இன்றைய செய்தி ஊடகம் விவரித்த படி மக்கள் புரிந்து கொள்கின்றனர். அதில் திளைக்கின்றனர். ஆனால் யதார்த்தம் இதற்கு எதிர்மாறாக உள்ளது. இது ஆண் - பெண்ணுக்கு விதிவிலக்கல்ல. இதுபோல்தான் அனுபவவாதம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றது. ஆனால் பொது சாராம்சம் பொதுவானதாக உள்ளதால் அதைப் புரிந்து கொள்ள எல்லாப் பெண்களாலும் முடியும். இதுபோல் அதை ஆணும் புரிந்து கொள்ளமுடியும்.


வறுமை, உழைப்பின் கடுமை போன்றவற்றைத் தொழிலாளி அல்லாத மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் புரிந்து கொண்டு எழுதிய அளவுக்கு அனுபவவாதத் தொழிலாளியால் முடியவில்லை. ஏங்கெல்ஸ் பெண்ணியம் தொடர்பாகப் புரிந்து எழுதியளவுக்கு, எந்த நூலும் வரலாற்றில் இதுவரை வெளிவரவில்லை. பெண்ணின் புரிதல் சார்ந்து, பாட்டாளி பெண்ணைப் பூர்சுவா பெண்ணால் வெளிப்படுத்த முடியாது. வெளிப்பாடுகள் எப்போதும் சமூகத்தின் மனிதச் சமூகச் சாரத்தில் இருந்து, இயற்கையின் தேர்வில் இருந்து புரிந்து கொள்ளப்படுவதில்லை. மாறாக இடைச் செருகல்கள் மூலம் புரிந்து கொள்ளப்படும் போது உங்களைப் போன்று பலர் முன்வைக்கின்றனர்.


மனிதச் சமூகச் சாரம் மற்றும் இயற்கை சார்ந்து புரிகின்ற போது மார்க்ஸ் ஏங்கெல்ஸ் உங்களில் இருந்து திட்டவட்டமாக வேறுபட்டுப் புரிந்து கொள்ளமுடிகின்றது. பிரசவ வேதனை கூட மாறுபட்ட சமூக அமைப்புக்கு ஏற்ப மாறுபடுகின்றது. எனவே, ஒரு பெண்ணின் அனுபவம் பொதுமையானது அல்ல. மாறாகப் பொதுவான சாராம்சத்தைப் புரிந்து கொள்ளும் வடிவில் பெண்கள் உள்ள போது, அதை ஆணும் புரிந்து கொள்ளமுடியும். இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். இதை மறுத்து வைக்கும் வாதத்தைப் பார்ப்போம்.


"மனிதகுலத்தின் எந்தவொரு பிரிவும் மற்றொரு பிரிவின் பொருட்டு முடிவுகள் எடுக்கும் உரிமையை.... யார் யாருக்கு எந்தெந்தத் துறை பொருத்தமானது என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை மறுக்கின்றோம்... நாங்கள் பெண்கள் என்ற முறையில் ஒன்றிணைந்து, ஆண்களின் கட்டுப்பாட்டிலிருந்து சுயாதீனமாகச் செயல்பட்டாக வேண்டும்"46 என்ற வாதம் பரஸ்பர இயங்கியல் விதியை மறுக்கின்றது. பெண்கள் சமுதாயத்தில் இருந்து சுயாதீனமாக வாழமுடியும் என்ற எடுகோள் தான் இப்படி புலம்ப வைக்கின்றது.


சமுதாய முரண்பாடுகள் எதிர்த் தன்மையில் தான் உயிர் வாழ்கின்றன. ஆண்-பெண் என்ற பிளவும் சரி, மேடு - பள்ளம் என்றாலும் சரி, நேர் மின்னேற்றம் - எதிர் மின்னேற்றம் என்றாலும் சரி, அதன் உயிர் வாழ்தலின் எல்லை என்பது முரண்பாடு நீடிக்கும் வரைதான் அவை நீடிக்கின்றன. முரண்பாடு நீங்கும் போது இரண்டுமே அகன்று விடுகின்றன. பள்ளம் அற்று போகின்ற போது மேடு அற்ற சமதளமாகின்றது. நேர் மின்னேற்றம் அகலும் போது எதிர் மின்னேற்றமும் முடிவுக்கு வருகின்றது. ஆணாதிக்கம் அகற்றப்படும் போது பெண்ணியம் அற்றுப் போகின்றது.


முரண்பாட்டின் விதி போராட்டத் திசை வழியை எமக்கு வழிகாட்டுகின்றது. ஆணாதிக்கம் ஒழிக்கப்பட வேண்டுமாயின் பெண் ஒடுக்குமுறை அகற்றப்படவேண்டும். ஒன்றில் இருந்து ஒன்று விலகி நின்று ஆணாதிக்கத்தை ஒழிக்கமுடியாது. இரண்டிலும் இருந்து புதிய வடிவம் ஆணாதிக்கமும் அல்லாத பெண்ஒடுக்குமுறையும் பெண்ணாதிக்கமும் அல்லாத பாதைதான் ஆணாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும். இதை மறுத்து ஆணாதிக்கத்துக்கு மாற்றாக, பெண்ணாதிக்கத்தை வைப்பின் ஆணாதிக்கம் நீடிக்கக் கோருவதை மறைமுகமாக ஊக்குவிக்கின்றது. பெண்ணின் விடுதலை என்பது ஆண் இன்றி சாத்தியமில்லை. அதேபோல் ஆண் விடுதலை பெண் இன்றி சாத்தியமில்லை. சமூகத்தில் ஆண் இன்றி பெண்விடுதலை சாத்தியம் என்ற கோட்பாடுகள், இயக்கத்தின் இயங்கியல் விதிகளை மறுக்கின்றது. பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்தே இயக்கமும், உயிர் வாழ்தலும் நீடிக்கின்றது என்ற விதி மறுக்கப்படும் போது அது கருத்துமுதல்வாதமாகின்றது.


பொருள்முதல்வாதம் ஆண் - பெண் பரஸ்பர விதிக்குள் உயிர்வாழும் நிகழ்ச்சிப் போக்கை ஆதாரமாகக் கொள்கின்றது. பெண் என்பவள் ஆண் அற்ற சுயேட்சையான, சுயாதீனமான இயக்கத்தில் வாழமுடியாது. இது போல் ஆண் என்பவன் பெண் அற்ற சுயேட்சையான, சுயாதீனமான இயக்கத்தில் வாழமுடியாது. இது மனித வாழ்வின் அடிப்படையான இயங்கியல் ஆகும். இதை மறுத்தே ஆண் எதிர்ப்பு வைக்கப்படுகின்றது. பெண் எதிர்ப்பு எவ்வளவு கேவலமான மனித விரோதத் தன்மை கொண்டதோ அந்தளவுக்கு ஆண் எதிர்ப்பும் கேவலமானது.

 
மனிதக் குலத்தின் எந்தவொரு பிரிவும் மற்ற பிரிவு மீது முடிவு எடுக்கும் உரிமை கிடையாது என்ற வாதம் அடிப்படையில் முரண்பாடு கொண்டவை. ஆணாதிக்கச் சமூகப்பிரிவு மீது மட்டும் பெண்கள் முடிவுகளை எப்படி எடுக்கமுடியும்? சுரண்டும் வர்க்கம் என்ற சமூகப் பிரிவு மீது எப்படி சுரண்டப்படும் வர்க்கம் முடிவு எடுக்கவும் அதிகாரத்தையும் செலுத்தமுடியும்? பார்ப்பனியம் என்ற சமூகப் பிரிவு மீது தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி அதிகாரத்தைப் பிரயோகித்து அடக்கி ஆளமுடியும்? இது முடியாது என்பதன் மூலம், இப் பெண்ணியம் ஏகாதிபத்திய அமைப்பை மட்டுமல்ல, அதன் தொங்கு சதையான ஆணாதிக்கத்தையும் பாதுகாக்கப் பிரயத்தனம் செய்கின்றது.


பாட்டாளி வர்க்கமானது, ஆணாதிக்கம் மீதும், சுரண்டும் வர்க்கம் மீதும், சாதி ஆதிக்கப் பிரிவுகள் மீதும், நிற ஆதிக்கப் பிரிவுகள் மீதும், மத ஆதிக்கப் பிரிவுகள் மீதும், இன ஆதிக்கப் பிரிவுகள் மீதும் தனது சொந்த அதிகாரத்தை, அவர்களின் சுரண்டும் அடிமைப்படுத்தும் உரிமையை மறுத்துப் பொருத்தமான முடிவை வன்முறையூடாகத் திணிக்கின்றது. இது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் புரட்சியாகும். இதை மறுக்கின்ற உங்களைப் போன்ற பிரிவுகள் மீதான எமது விமர்சனம் தெளிவானதும் கடுமையானதுமாகும். உரிமைகள், முடிவுகள் எல்லாம் வர்க்கச் சார்பானவை.


வர்க்கச் சமுதாயத்தில், முரண்பாட்டில் வாழும் பிரிவுகளிடையே உரிமைகளும், கடமைகளும், முடிவுகளும் பொதுவானவையாக இருப்பதில்லை. இவை ஒன்றில் இருந்து ஒன்று எதிர்த்தன்மை கொண்டவையாகவே நீடிக்கின்றது. இதில் ஒன்று மட்டுமே எப்போதும் உயிர்வாழ்கின்றது. மற்றையது போராடுகின்றது. இந்தப் போராட்டத்தில் தனது நிலையை இரண்டும் இழக்கின்ற போது, புதிய தன்மையின் புதிய நிலைமையால் இரண்டும் அழிவது முடிவாகின்றது அல்லது புதிய முரண்பாடு நீடிக்கின்றது.


பெண்ணின் விடுதலை என்பது எப்போதும் ஆணாதிக்கம் மற்றும் பெண் ஒடுக்குமுறை (பெண்ணாதிக்கம்) ஒழிப்பில்தான் சாத்தியம். இதற்குப் பதிலாகப் பெண்ணாதிக்கம் என்பது ஆணாதிக்கத்தைப் பாதுகாக்கும். ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் புதிய நிலைமையால் மாற்றீடு செய்யப்படவேண்டும். இது ஆணாதிக்கத்தை மறுத்து மட்டுமல்ல பெண்ணாதிக்கத்தையும் மறுத்துக் கோரப்படவேண்டும். இந்தப் புதிய வடிவம் என்பது ஆணாதிக்கம் தோன்றிய வரலாற்று இயங்கியலின் அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து ஒழித்துக் கட்டவேண்டும். ஆணாதிக்கம் தனிச் சொத்துரிமையின் விளைவு என்பதால், அதை ஒழிப்பதை முன்னிறுத்தி போராட வேண்டும். இதை மறுக்கின்ற எவையும் ஆணாதிக்க ஒழிப்பைச் செய்வதற்குப் பதில் அதைப் பாதுகாக்கின்றது.


பெண்கள் தமது சொந்தப் பிரச்சினையை ஒட்டி அமைப்பாவது என்பது ஆணை எதிர்த்து அல்ல. மாறாக ஆணாதிக்கச் சமூக அமைப்பை எதிர்த்துதான். இது தவிர்க்கமுடியாமல் தனிச் சொத்துரிமையை எதிர்த்துதான் உருவாக்கப்பட முடியும். ஆணின் கட்டுப்பாட்டை ஒழிப்பதன் பெயரில் தனிப்பட்ட ஆணை எதிர்த்து அல்ல, ஆணாதிக்கச் சமூகக் கட்டுப்பாட்டை எதிர்த்தே அணி திரளவேண்டும். ஆனால் பொதுவாக ஆண்களை எதிர்த்தே இவை தம்மை அணிதிரட்டுகின்றன. ஆண் எதிர்ப்பு என்ற அடிப்படையில் ஆணாதிக்கத்தை எதிர்ப்பதில்லை. தனிப்பட்ட ஆண்களையே எதிரிகளாகக் காண்கின்றது. தனிப்பட்ட ஆண் ஆணாதிக்கச் சமூகத்தின் விளைவு என்பதைப் புரிந்து கொள்ளாத மூடத்தனம் நீடிக்கும் வரை, ஆணாதிக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாத வட்டத்துக்குள் சிக்குகின்றனர்.


அடுத்து நாங்கள் பெண்கள் என்ற ரீதியில் ஒன்று இணைய வேண்டும் என்ற கோஷங்கள் (முழக்கங்கள்) அபத்தமானவை. பெண்கள் என்பது ஆணாதிக்கப் பெண்களையும் உள்ளடக்கும். பூர்சுவா பெண், ஏகாதிபத்தியப் பெண், பாட்டாளிப் பெண் என்று நீடிக்கும் பலரும் எப்படி ஒரே அமைப்பில் நீடிக்கமுடியும்? இங்கு நிறம், வர்க்கம், சாதி, இனம், மதம் கடந்த ஐக்கியம் எப்படி நீடிக்கமுடியும்? இங்குள்ள முரண்பாடு எப்படி தீர்க்கப்படும்? இவை அல்லவா முக்கியமானது? இவையல்லவா மார்க்சுக்கு முன் தெளிவாக விளக்கியிருக்க வேண்டும்? பாட்டாளி வர்க்கம் பாட்டாளி வர்க்கப் பெண்ணை நிறம், மொழி, இனம், சாதி, மதம் கடந்து ஐக்கியப்படக் கோரும் அதேநேரம் ஆணாதிக்கம் கடந்த (ஆணாதிக்கத்துக்கு எதிரான ஆண்கள்) ஆண்களுடனும் ஐக்கியத்தை முன் நிறுத்துகின்றது. இங்கு வர்க்கம் கடந்த ஐக்கியத்தை எந்த நிபந்தனையுமின்றி நிராகரிக்கின்றது. இதில் உங்கள் கோட்பாடுகள் திட்டவட்டமாக மார்க்சியத்தில் இருந்து வேறுபட்டு, மற்ற வர்க்கப் பெண்கள் மீது எதிர்த்துப் போராடாத சலுகையை வழங்கி விடுவதால், மார்க்சியம் மீது திரும்பி நின்று சேறு வீசுகின்றீர்கள்.


அதேநேரம் அரசு அதிகாரம் மீதான நோக்கத்தைக் கொச்சைப்படுத்துகின்றீர்கள். "சமூக அமைப்பு, அதாவது இந்த அடித்தளம் தான் உங்களுடைய அக்கறைக்குரிய விஷயமாக இருக்கவேண்டுமே தவிர அரசியல் அதிகாரம் அல்ல. அரசியல் அதிகாரம் என்பது ஒரு மாயை. ஒருநாள் அது கோலோச்சும். மறுநாள் அது தூக்கி எறியப்படும். மீண்டும் புதிய வடிவத்தில் தோன்றும். மறுபடியும் தூக்கியெறியப்படும்."46


இதன் மூலம் பாட்டாளி வர்க்கத்துக்கு எதைப் புகட்ட முனைகின்றார். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை மறுக்கின்றார். மாறாக இந்தச் சமூக அமைப்பில் ஆணாதிக்கம் நீடித்திருக்க, பெண்களைச் சீர்திருத்தம் செய்யக் கோருகின்றனர். அதாவது பெண்கள் மீது ஆணாதிக்கம் நிறுவிய சுரண்டல் அரசு அதிகார அமைப்பை இட்டு அலட்டிக் கொள்ளாது, அந்த அமைப்புக்குள் சீர்திருத்தத்தை முன்மொழிகின்றனர். இந்த பெண்ணியத்துக்கும் பாட்டாளி வர்க்கப் பெண்ணியத்துக்கும் ஒன்றுபட்ட போராட்ட மார்க்கம் சாத்தியமில்லை.


எதிர்நிலையில் உள்ள இக்கோரிக்கைகளை எதிர்த்து மார்க்சியம் சொந்த வர்க்கப் போராட்டத்தை நடத்துகின்றது. தனிச்சொத்துரிமை ஒழிப்பினூடாக ஆணாதிக்க ஒழிப்பைத் (இதனூடாகவே பெண் மீதான ஆணாதிக்கம் நிறுவப்பட்டது.) தீவிரப்படுத்த, பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், அதில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவுவதும் மார்க்சியத்தின் தலையான அரசியல் போதனையாகும். இதை மறுக்கும் விதண்டா வாதங்கள் மீது, மார்க்சியம் தனது சொந்த வர்க்கப் போராட்டத்தை நடத்துவது தவிர்க்கமுடியாதது.


மேலும் மார்க்ஸ் அக்கறை கொள்ளவில்லை என்று கூறி முன் வைப்பதைப் பார்ப்போம். "நடைமுறையில் சாத்தியமாகக் கூடியது எதுயென்பதில் எப்போதும் அக்கறை கொண்டிருந்த எங்களது நோக்கம், உற்பத்தியாளர்களின் தேவைகள், நுகர்வோரின் தேவைகள் ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, இரண்டுமே பாதிக்கப்படாதபடி, விற்பனைப் பண்டங்களுக்கு நியாயமான விலையை நிர்ணயிக்கும் ஒரு கூட்டமைப்பை உருவாக்குவதுதான். ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யக் கூடிய நிதிநிறுவனங்களை அமைத்து, அவற்றைப் பரஸ்பர நம்பிக்கை, ஜனநாயகம் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்துவது.."46


- என்று கோரி அதில் பங்குபற்ற (பங்கு கொள்ள) மார்க்சை அழைப்பது, அப்பட்டமான விபச்சாரமாகும். இவைகளைக் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை உள்ளடக்கவில்லை எனப் புலம்புவதும் சகிக்க முடியவில்லை. இன்று இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பெண்களுக்கு என்று தன்னார்வக் குழுக்களால் ஊக்குவிக்கப்பட்டு உருவாக்கப்படும் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கோட்பாடுகள் பெண்ணின் விடுதலையை, வர்க்கப் போராட்ட வழியில் தீர்ப்பதைத் திசை திருப்ப எடுக்கும் அப்பட்டமான முயற்சியாகும். இதற்காக இவைகளை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் குறிப்பிடவில்லை என்று கூறுவது அதிக பிரசிங்கித்தனமாகும்.


உற்பத்தியாளனுக்கும் (முதலாளிக்கும் அதாவது சுரண்டுபவனுக்கும்) நுகர்வோனுக்கும் (தொழிலாளிக்கும் அதாவது சுரண்டப்படுபவனுக்கும்) இடையில் இருவரும் பாதிக்கப்படாத (சுரண்டும் ஜனநாயகத்தைப் பகிர்வில் அங்கீகரிக்கக் கோரும் திருத்தத்தை, மார்க்சியத்துக்கு முன்வைக்கின்றனர்.) வகையில் விலையை நிர்ணயிப்பதன் மூலம் ஏழைப் பெண்களுக்கு உதவமுடியும் என்று கூறி, ப+ர்சுவா பெண்ணியம் ஏழைப் பெண்கள் மீது திணிக்கும் தீர்வுகளை, மார்க்சியப் பெண்ணியம் திட்டவட்டமாக எதிர்த்துப் போராடுகின்றது.


சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுபவனுக்கும் இடையில் பாதிக்கப்படாமல் எப்படி விலை நிர்ணயம் செய்யமுடியும்? இந்த இடைத்தரகர் தொழிலைத்தான் அரசுகளும், தரகு முதலாளிகளும் சோரம் போய்ச் செய்கின்றனர். இதை மார்க்சியப் பெண்ணியத்துக்கான திருத்தமாக முன்மொழியும் அல்லது மார்க்சியத்தின் போதனையுடன் இணைக்கப்பட வேண்டியவை என புலம்புவதை நாம் காது கொடுத்து கேட்க வேண்டியதாக உள்ளது. இதன் பின் உள்ள மார்க்சிய எதிர்ப்பின் வெட்கக்கேடான விபச்சாரம் நிர்வாணமாகின்றது. கறையான்கள் போல மார்க்சியத்தை, அதன் வர்க்கக் குணாம்சத்தைச் சிதைக்க விரும்பும் நபர்களால்தான் இக்கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.


"மனித உணர்ச்சிகள் பற்றி பேசுவதை ஐயப்பாட்டுடனேயே நீங்கள் (மார்க்ஸ்) பார்க்கின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் மனித உணர்ச்சிகளுக்குச் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் பங்குண்டு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்..."46


வர்க்கம் கடந்த மனித உணர்ச்சி வெட்கக்கேடான சோரம் போதலாகும். மனித உணர்ச்சி எங்கிருந்து குதித்தெழுகின்றது? மனித உணர்ச்சிகள் புறப்பருப்பொருள் சார்ந்து வெளிப்படுகின்ற போதே, அது வர்க்கக் கறையால் அப்பப்பட்டே (சேர்ந்தே) வெளிவருகின்றது. இவ்வுணர்ச்சிகள் புரட்சி செய்வதில்லை. இன்று 150 கோடி மக்கள் பட்டினியில் நாள்தோறும் வாழ்கின்ற போதும், அவ்வுணர்ச்சி பட்டினிக்கு எதிரான கிளர்ச்சியை நடத்தி விடுவதில்லை. அது பழக்கப்பட்ட செம்மறித்தனமான வகையில் பண்பாடாகி விடுகின்றது. மனிதனின் அவலத்தை மீளவும் கிளறப்பட்டு அவனுக்கு அரசியல் ரீதியாக அணிதிரட்டப்பட வேண்டியுள்ளது. அதாவது மனித உணர்ச்சி என்பது வர்க்க மயப்படுத்தி, அரசியல் மயப்படுத்த வேண்டியுள்ளது. இது இல்லாத உணர்ச்சி என்பது இருக்கும் சமூக அமைப்பின், பூர்சுவா சமூகக் கண்ணோட்டத்தைத் தீர்த்துக் கொள்ளும் வடிகாலாகின்றது.


தொடர்ந்து அடுத்த வரிகளை ஆராய்வோம். "பெண்களின் தனிச் சிறப்பான தேவைகள், விருப்பங்கள், வேட்கைகள் ஆகியன சுதந்திரமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்..."46 என்கின்றனர். ஆணாதிக்கம் பெண்ணின் மீதான அடக்கு முறையில் பெண்ணின் விருப்பத்தை, தெரிவை, தேவையை மறுக்கின்ற வரலாற்றில் நாம் நிற்கின்றோம். இவைகளை ஆணாதிக்கத்தின் ஒழிப்பினூடாகவே இதை மாற்ற முடியும். இது மனிதனின் சிறப்பான அனைத்துச் சலுகைகளையும் ஒழிக்கின்றது. ஆணும் சரி, பெண்ணும் சரி தேவையைப் பெற்றுக் கொள்ளும், ஒரு சுரண்டலற்ற ஆணாதிக்கமற்ற கம்யூனிஸ்டு சமூகமாக இருக்கும். ஆனால் ஆணாதிக்கத்துக்குள் பெண்ணாதிக்கத்தைக் கோரி, தனிச்சிறப்பான சுதந்திரமான கோரிக்கைகளை முன்வைப்பது என்பது அபத்தமாகும். இது தேவையை மீறிய தனிச் சலுகையை முன் நிறுத்துவதாகும். ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி சிறப்பு சலுகையற்ற சமூகத்தைக் கோருவதற்குப் பதில், பெண்ணுக்குச் சிறப்பு சலுகை கோருவது என்பது ஆணாதிக்கத்தின் தொடர்ச்சியாகும்.


ஆணுக்கு என்ன உரிமைகள் உண்டோ அவை பெண்ணுக்கும் உண்டு என்ற ஜனநாயகக் கோரிக்கையை எட்டி உதைத்தபடி, அதைத் தாண்டி உலகமயமாதல் போல் அனைத்தையும் கோருவது எல்லாம் ஆணாதிக்கக் கனவை மீள பெண்ணுக்குச் சலுகையாக்க முயல்வதேயாகும்.

 

ஒரு தேசிய இனம் ஒடுக்கப்படும் போது அந்தத் தேசிய இனத்தின் தனிச்சிறப்பான தேவைகள், விருப்பங்கள், வேட்கைகளைப் பூர்த்தி செய்யக் கோருவது, வலது பாசிசத்தின் பொதுத்தன்மையாகும். அது போலத்தான், ஆணைக் கடந்த சிறப்புத் தகுதிகளை, சலுகைகளைக் கோருகின்ற பெண்ணியத்தின் ஏகாதிபத்தியக் கோரிக்கைகளும் வலது பாசிசம்தான். ஏன் பட்டாளிப் பெண் பூர்சுவா பெண்ணினது வாழ்க்கையைக் கூட வாழ அனுமதிக்காத, ஏற்றுக் கொள்ளாத உலகத்தில் தனிச்சிறப்பாக எதைக் கோருகின்றனர் என்பது நிர்வாணமாகின்றது. இது போல், பல்வேறு ஆணாதிக்கக் கூறுகளை உள்ளடக்கியது உங்கள் கோட்பாடு. அதை மார்க்சியம் உள்ளடக்கவில்லை என்று புலம்புவது வெட்கக்கேடானது. சொந்த வர்க்க நலன்களைப் பாதுகாக்க பாட்டாளி வர்க்கத்துக்குத் திருத்தத்தை முன்வைப்பது வரலாறாக, அவதூறாக உள்ளது. இவைகளில் சில மாதிரிகளை மட்டும் விமர்சனத்துக்கு எடுத்ததன் மூலம், முழுமையை அம்பலப்படுத்தும் தேவையை தேவையற்றதாக்கியுள்ளது.


பாட்டாளி வர்க்கம் மார்க்சின் வழியில் தொடர்ந்து ஆணாதிக்கத்துக்கு எதிராக எப்படி போராடியது என்பதை, லெனின் நடைமுறை ரீதியாக விளக்குவதைப் பார்ப்போம். "பெண்களின் நிலையை எடுத்துக் கொள்வோம். ஆட்சியதிகாரத்துக்கு வந்த முதலாவது ஆண்டிலேயே இந்தத் துறையில் நாம் செய்ததில் நூற்றில் ஒரு பங்கைக்கூட உலகில் எந்த ஜனநாயகக் கட்சியும், மிகவும் முன்னேறிய முதலாளித்துவக் குடியரசிலும்கூட பல பத்தாண்டுகளிலும் செய்ததில்லை. பெண்களை அசமத்துவ நிலையில் இருக்க வைக்கும் இழிவான சட்டங்களை அதாவது திருமண ரத்துகளுக்கு (விவாகரத்து) விலங்குகளிட்டும், அருவருக்கத்தக்க வினைமுறைகளால் அதைச் சுற்றிவளைத்தும், திருமணத்துக்குப் புறம்பாய்ப் பிறந்த குழந்தைகளுக்கு அங்கீகாரம் அளிக்க மறுத்தும், அவற்றின் தகப்பன்களைத் தேடிப் பிடிக்கும்படி விதித்தும் இன்னும் பலவாறாகவும் இழிவு செய்யும் சட்டங்களை மெய்யாகவே நாம் தகர்த்துத் தரை மட்டமாக்கினோம். இச்சட்டங்களின் எண்ணற்ற
மீத மிச்சங்கள் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் வெட்கக் கேடாய் எல்லா நாகரிக நாடுகளிலும் இருக்கக் காணலாம்.


...பெண் விடுதலைச் சட்டங்கள் யாவும் இருந்த போதிலும் தொடர்ந்து அவள் இல்லத்து அடிமையாகவே வாழ்கிறாள். ஏனெனின் அற்பத்தனமான
வீட்டு வேலைகள் அவளை நசுக்கி, நெரித்து, மழுங்க வைத்து இழிவுறச் செய்கின்றது.


அடுப்படியுடனும், குழந்தைத் தொட்டிலுடனும் கட்டுண்டு விடச் செய்கின்றன. உற்பத்தித் திறனில் படுகேவலமான கீழ்நிலைக்கு உரிய அற்ப வேலைகளில், உயிரை வதைக்கும் சிந்தனையை மழுங்கச் செய்யும், நசுக்கி ஒடுக்கும் ஓயாத நச்சரிப்பு வேலைகளில் அவள் தன் உழைப்பைப் பாழாக்குகிறாள். இந்த அற்பத்தனமான வீட்டு வேலை நச்சரிப்பை எதிர்த்து (அரசு ஆட்சியதிகாரம் செலுத்தும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில்) எங்கே, எப்பொழுது முழு முனைப்பான போராட்டம் தொடங்குகிறதோ, அல்லது இன்னும் சரிவரக் கூறுவோமாயின் பெருவீத சோஷலிசப் பொருளாதாரமாய் அதன் முழு அளவிலான மாற்றம் தொடங்குகிறதோ அங்கே தான், அப்பொழுதுதான் மெய்யான பெண் விடுதலை, மெய்யான கம்யூனிசம் தொடங்கும்....


கம்யூனிசத்தின் குருத்துக்கள் இத்துறையில் ஏற்கனவே இருப்பவற்றை நாம் வேண்டிய அளவு பேணிக் காக்கின்றோமா? இல்லை என்றே திரும்பவும் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. பொது உண்டி நிலையங்கள், பிள்ளைப் பராமரிப்பகங்கள், குழந்தைப் பள்ளிகள் - இவைதாம் இந்தக் குருத்துக்களுக்கான உதாரணங்கள். ஆடம்பரமோ, படாபடோபமோ, மினுக்கோ எதுவும் இல்லாத எளிய, அன்றாட சாதனங்களாகிய இவை பெண்கள் மெய்யாகவே விடுவிக்க வல்லவை. சமூகப் பொருளுற்பத்தியிலும் பொது வாழ்விலும் பெண்களின் பாத்திரத்தைப் பொறுத்தவரை ஆடவர்களுக்கு அவர்கள் சரிசமத்துவமாய் இல்லாத நிலையை மெய்யாகவே மட்டுப்படுத்தவும் ஒழிக்கவும் வல்லவை."44


"வீட்டு வேலைகள் முற்றிலும் பெண்களுக்கே உரித்தானவையாக விடப்பட்டு, இதன் விளைவாய்ப் பெண்கள் ஒடுக்கப்பட்டு அடிமை நிலையில் இருத்தப்பட்டது குறித்து யாரும் கவலைப்படவில்லை. இதை எதிர்த்துப் போராடுவது யாருடைய பணி?"44 என்று லெனின் கி.பி. 1920-ஆம் ஆண்டில் எழுப்பிய, இந்த மார்க்சிய ஆணாதிக்க ஒழிப்பை, முதலாளித்துவப் பெண்ணியல்வாதிகள் தமது வர்க்க அடிப்படையில் நின்று, திட்டவட்டமாக மறுக்கின்றனர். பாட்டாளி வர்க்கப் புரட்சியைத் தொடர்ந்து பெண்களுக்கு விவாகரத்துரிமை, கரு அழிப்புரிமை, திருமணத்தில் சுயத் தெரிவு உரிமையைச் சட்டப்படி உலகில் அங்கீகரித்து, நடைமுறைப்படுத்திய முதல் நாடாக, நீண்ட காலம் சோவியத் மட்டும் உலகில் நீடித்தது.


கி.பி. 1926-இல், வெளியாகிய புதிய பெண்களின் உரிமைக்கான சட்டம், ஒரு தபால் அட்டை (அஞ்சல் அட்டை) மூலம் விவாகரத்துரிமையைப் பெறும் அளவுக்கு இலகுபடுத்தப்பட்டது. கி.பி. 1922-இல், விவாகரத்து தொடர்பாகச் சோவியத் ஆட்சியின் பெயரில் பிற்போக்குவாதிகள், புள்ளி விபர ரீதியாக எடுத்து வைத்து கொச்சைப்படுத்தினர். அதாவது லெனின்கிராட்டில் 10,000 திருமணங்களில் 92.2 விவாகரத்துகள் செய்யப்படுகின்றன என்றும், ஒவ்வொரு 100 விவாகரத்துகளிலும் 51.1 விவாகரத்துகள் ஓர் ஆண்டுக்குள் நிகழ்கின்றன. இதில் 11 விவாகரத்துகள் ஒரு மாதத்திற்குள்ளும், 22 விவாகரத்துகள் இரண்டு மாதத்திற்குள்ளும், 41 விவாகரத்துகள் மூன்றில் இருந்து ஆறு மாதத்திற்குள்ளும், 26 விவாகரத்துகள் அதற்கு மேல் நீடித்த நிலையில் விவாகரத்தாகின்றது என்று குறிப்பிட்டுச் சமுதாயம் சீரழிகின்றது என்று ஆணாதிக்கத்துக்கு எதிரான ஆட்சியைக் கொச்சைப்படுத்தினார்கள். அதற்கு லெனின் "...போல்ஷிவிக் புரட்சி ஒன்று மட்டும்தான் திருமணம், திருமண ரத்து, திருமணத்துக்குப் புறத்தே பிறந்த குழந்தைகளின் நிலை போன்ற பிரச்சினைகளில் முரணில்லாத ஜனநாயகப் புரட்சியாய் நடந்தேறியிருக்கிறது. எந்த நாட்டிலும் மக்களில் பாதிக்கு மேற்பட்டோரது நலன்களுடன் மிகவும் நேரடியாய்ச் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை இது. நமது நாட்டிற்கும் பிற நாடுகளுக்குமுள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், நமது சட்டங்கள் கபடத்தையும், பெண்கள், பெண்களின் குழந்தைகள் இழிவு செய்யப்படுவதையும் புனிதமாக்குவதில்லை. அதற்கு மாறாய் எல்லா வகையான கபடத்தின் மீதும், இழிவு செய்தலின் மீதும் பகிரங்கமாகவும் அரசாங்கத்தின் பெயரிலும் முறையான போர்ப் பிரகடனம் செய்கின்றன"44 என்றார்.

கி.பி. 1926-இல், லெனின்கிராட்டில் திருமணத்தின் ஆகக் குறைந்த திருமண கால எல்லை எட்டு மாதமாக இருக்க, தொழிலாளர் குடியிருப்புகளில் நான்கு மாதமாக இருந்தது. இப்பிரதேசத்தில் "70 சதவீதமான"49 விவாகரத்தை ஆண்களே கோரினர். இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் 260 இலட்சம் (2.60 கோடி) பேரை இழந்த நிலையில், "60 சதவீதமான குடும்பத்தில"49 பெண்களே தலைமை தாங்கினர். பழைய தாய் வழிச் சமுதாய அடிப்படையில் தாய்மை போற்றப்பட்டு, தாய் என்பவள் தாய்மை சார்ந்து கௌரவிக்கப்பட்டாள். இந்த நிலைமை ஸ்டாலின் காலம் வரை நீடித்ததை இன்றைய முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் பலர் தவிர்க்க முடியாமல் ஒப்புக் கொள்ளுகின்றனர்.


இதையெல்லாம் மூடிமறைத்தபடிதான், மார்க்சியம் பெண்ணின் மீதான ஒடுக்குமுறையை, கவனத்தில் எடுக்கவில்லை என்று சாப்பாட்டுக்காகக் (ஏகாதிபத்திய எச்சில்தான்) கூப்பாடு போடுகின்றனர். முதலாளித்துவ அமைப்பில் பெண் விடுதலையைச் சாதிக்க முடியும் என்று கூறுவதன் மூலம், சலுகை பெற்று பொறுக்கி வாழ கனவு காண்பதால், பாட்டாளி வர்க்க மார்க்கத்தை எதிர்க்கின்றனர். முதலாளித்துவ எல்லைக்குள் பெண்ணியத்தைக் கோரக் கோரி, மார்க்சியக் கோட்பாடு மீது குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் மார்க்ஸ் வழி காட்டிய பாதையில், ஆணாதிக்கத்தை ஒழிக்க லெனின் போராடிய அதே பாதையில், மார்க்சியம் தன்னை ஆயுதபாணியாக்கி ஆணாதிக்கத்தை ஒழிப்பது, வரலாற்று நியதி என்பதை லெனினின் நீண்ட மேற்கோள் மீண்டும் ஒருமுறை எமக்கு அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கின்றது.