வ றுமையில் சிக்கித் தவிக்கும் நாடுகளின் அடிப்படைச் சுகாதாரத்தை உறுதி செய்யத் தேவையான பணம் 1,300 கோடி அமெரிக்க டொலராகும். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பியர் வீட்டில் வளர்க்கும் செல்ல மிருகங்களுக்கான வருடாந்திரச் செலவு 1,700 கோடி அமெரிக்க டொலராக இருக்கின்றது. வறிய நாடுகளின் அடிப்படை மகப்பேற்றுக்காக 1,200 கோடி அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது. இது கிடைப்பதில்லை. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பியரின் மணம் வீசும் வாசனைத் திரவியத்துக்காக இத்தொகையைச் செலவு செய்கின்றனர். வறிய நாடுகளின் குடிநீர் தேவைக்கும், கழிவு அகற்றலுக்கும் வருடம் 1,100 கோடி அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது. ஆனால் இப்பணத்தை ஐரோப்பியர்கள் ஐஸ்கிரீம் உண்ணுவதற்காகப் பயன்படுத்துகின்றனர். (14.5.2000)10

 


வாசனைத் திரவியத்துக்காக வருடா வருடம் ஒரு நபர் பயன்படுத்தும் தொகையைப் பிரான்ஸ் நாணயமான பிராங்க் மதிப்பில் கீழ்க்கண்ட அட்டவணை:38-இல் இருந்து காணலாம். (3.6.1999)37
அட்டவணை: 38


நாடுகள்                          பிராங்கில் செலவு
பிரான்ஸ்                                    188
ஸ்பெயின்                                 126
அமெரிக்கா                              129
இங்கிலாந்து                            109
ஜெர்மனி                                   102
இத்தாலி                                      78
ஜப்பான்                                       18


உபரி மூலதனத்தற்காக மனிதர்களிடம் சந்தை அழகியல் நுகர்வு ஊக்குவிக்கப்படுகின்றது. இது பெண்ணின் சிறப்பான (உண்மையில் கேவலகரமான) பண்பாடாக்கப்படுகின்றது. பெண் அழகின் பிம்பமாகவும், அழகுபடுத்துவது அவளின் பெண்ணிய நாகரிகமாகவும் காட்டப்படுகின்றது. இந்த அழகை எதற்காக? யாருக்காகச் செய்கின்றனர்? ஆண்களைக் கவருவதற்காக, தமது அந்தஸ்தை நாகரிகப்படுத்துவதற்காக இவை உருவாக்கப்படுகின்றது.


முன்பு அழகு என்பது சொந்தக் கணவனுக்கு என்ற உறவுமுறை சிதைந்து, பின்பு அனைத்து ஆண்களுக்கும் என்று பெண்ணின் நிலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது பொருளாதார மாற்றத்தில் இருந்து தொடங்கப்பட்டது. சுயப்பொருளாதாரம் தேசியப் பொருளாதாரமாக இருந்த கட்டமைப்பானது திறந்த ஏகாதிபத்தியப் போட்டி சுதந்திரமாக மாற்றப்பட்டதன் விளைவு, குடும்பம் என்பது தேசிய எல்லை கடந்தது போல் அனைவருக்கும் என்ற போக்கை நோக்கி மாற்றம் கண்டது. இது அழகுபடுத்துவதில் அதிகமாக அனைத்து ஆண்களையும் கவரப்பண்ணும் பண்பாட்டு விபச்சாரத் தளத்தை அடிப்படையாகக் கொண்டது.


மேல் குறிப்பிட்ட பட்டியலில் உள்ள நாடுகளின் வருடாந்திர அழகு சார்ந்த வாசனைகளுக்கு மட்டுமான செலவு 7,365 கோடி பிராங்கை விட அதிகமாகும். இது உலகளவில் அழகுபடுத்த பயன்படுத்தும் வாசனைத் திரவியத்துக்கான செலவு மிகப் பிரமாண்டமானவை மட்டுமின்றி, பெண்களின் பிரசவ மரணத்தைத் தடுத்து நிறுத்தக் கூடிய அளவுக்கும் மேலாக வீணடிக்கப்படுகின்றது. இதைவிட இன்று பல்வேறு வகையில் அழகுபடுத்த பயன்படும் பணத்தின் பெறுமதியைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.


இன்று பெண்களை நிறுத்தி நடத்தும் அழகு ராணிப் போட்டிகள் எல்லாம் மேலும் உலகளவில் பெண்ணை அழகுபடுத்த கோருகின்றது. இது அழகு சாதனச் சந்தையை மேலும் நவீனப்படுத்துகின்றது. பெண்ணின் இயல்பான அழகுணர்ச்சியைச் சிதைத்து போலியான, செயற்கையான அழகை நிலை நாட்டக் கோருகின்றது. இந்த செயற்கையான அழகுக்குப் பின்னால் இயற்கையான பாலியல் உணர்வுகள் மலினப்படுகின்றன. போலியான நட்பு, போலியான சிரிப்பு, போலியான பண்பாடு என்று போலியான அழகுணர்ச்சியின் பின் நுகர்வாக்கப்படுகின்றது. மனிதனின் இயற்கையான இயல்பான நட்பு, இன்ப-துன்ப நாட்டங்கள், உழைப்பின் பண்பாடுகள் நாகரிகமற்ற செயலாகக் காட்டப்படுகின்றன.


பெண்ணை அழகு சாதனக் கட்டமைப்புக்குள் நிறுத்திவிட்டால், பெண்ணின் சிந்தனைத் தளத்தைச் சிதைக்கமுடியும் என்பதை இந்த ஜனநாயக உலகம் கண்டு கொண்டே, பெண் மீது தனது அழகு சாதனப் பெட்டியுடன் அழகுபடுத்தி பண்பாடாக்குகின்றது. பெண்ணின் அறிவான சமையல் கலையில் இருந்து அழகுக் கலைக்குள் ஏகாதிபத்தியம் நகர்த்தி மாற்றீடு செய்கின்றது. பெண்ணைக் கொண்டு குழந்தை முதல் கணவன் வரை அழகுபடுத்தி, அவளையே பார்க்கத் தூண்டப்படுகின்றது. அழகுக் கலை குடும்பத்திலும், வெளியிலும் பெண்ணின் கடமையாக்கப்படுகின்றது. இதுவே பெண்ணின் இயல்பான, இயற்கையான பண்பாகக் கட்டமைக்கப்படுகின்றது.


ஒரு மனிதன் சுத்தமாக, சுகாதாரத்துடன் வாழ்வதுக்குப் பதில் நாகரிகமான, செயற்கையான அழகுபடுத்தலை நாட வைக்கப்படுகின்றது. வீதிக்கு வீதி கடைகளும் விளம்பரங்களும் பெண்ணை ஈர்க்கின்றது. தொடர்பு சாதனங்கள் விதவிதமாக அழகுபடுத்த ஊக்குவிக்கின்றன. நிறம் முதல் அனைத்திற்கும் அழகுக் குறிப்புகள் பல்வேறு வடிவங்களில் காட்டப்படுகின்றது. ஆனால் இன்னுமொரு உலகத்தில், மாற்ற உடுப்பின்றி மக்கள் கூட்டம் அழுகின்றது. பெண்கள் சுத்தமாக இருப்பதற்காகக் குளித்து விட்டுப் புடவையின் (சேலையில்) ஒரு பகுதி தலைப்பை (முந்தனையை) மரத்தில் கட்டியபடியே மாற்றி உடுத்தி மறுபகுதியை வெயிலில் உலர்த்தி வாழும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் தான் இடத்துக்கு, நேரத்துக்கு, காலத்துக்கு, நிறத்துக்கு என்றெல்லாம் போலித்தனமான அழகு காட்டி ஆணாதிக்க ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றது. இதை மறுத்து போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுபட்டுச் சமூகத்தைச் சுத்தம், சுகாதாரத்தைப் பேணும் உன்னதமான வாழ்க்கைக்கு மாற்றியமைக்கப் போராடவேண்டியது இன்றைய கடமையாகும்.


பெண்கள் இந்தப் போலித்தனமான வாழ்க்கையை விடுத்து மாற்று உடுப்பற்ற மக்கள் கூட்டத்தின் அவல வாழ்வைப் போக்க, அப்பெண்கள் இந்த ஆணாதிக்க அமைப்பில் இருந்து மீள போராட வேண்டிய வரலாற்றுக் கடமையே அவர்களுக்கு முன்னுள்ளது. இதைச் செய்யாத பெண்ணியவாதிகள் ஏகாதிபத்திய ஆணாதிக்க நுகர்வு அழகியல் சந்தைக்கு மறைமுகமாகக் கம்பளம் விரிப்பவர்களாக இருக்கின்றனர். இந்தப் போலியான அழகியலைப் பெண்ணின் உரிமை சார்ந்ததாகப் பெண்ணியம் பிரகடனம் செய்த எல்லா சந்தர்ப்பங்களிலும் இது அப்பட்டமான ஆணாதிக்கச் சந்தை விபச்சாரமாக இருந்தது, இருக்கின்றது.


குடிக்கத் தண்ணீரே அற்ற நிலையில் கழிவுகளைக் குடித்து வாழும் மனிதர்கள் மேல் சொகுசாக, வாய்க்கு ருசியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு, வறியநாட்டு மக்களைச் சுரண்டி கொன்றுவரும் மேற்கத்திய நாகரிகமும், பண்பாடும், ஜனநாயகமும் பற்றி கம்யூனிஸ்டுகளைத் தவிர யாரும் பேசுவதில்லை. பெண்களின் மகப்பேறு நோய்கள், இறப்புகள் என்ற துன்பத்தின் சுமைகளைப் போக்க தேவையான பணம், ஐரோப்பிய - அமெரிக்க நாய்களும், பூனைகளும் சொகுசாக வாழ்வதற்குப் பயன்படுகின்றது. இந்த மிருகங்கள் ஆணாதிக்கக் குடும்பச் சிதைவை ஈடுகட்டும் புதிய வக்கிரமான வடிவமாகி (விலங்குடன் உடலுறவு) விடுகின்றது. மார்க்சியமல்லாத எந்தப் பெண்ணியமும் பெண்ணின் மகப்பேற்றுக்கான பணத்தை மேற்கின் நாய்களும், பூனைகளும் வக்கிரமாகப் பயன்படுத்தி, மனிதனைச் சூறையாடி வாழ்வதையிட்டு குறைந்த பட்சம் புலம்புவது கூட இல்லையே ஏன்? எல்லாம் சொத்துடைய வர்க்கத்தின் நலன்களின் பின்னால் தம்மைப் பாதுகாக்கின்றனர்.


அட்லாண்டிக் என்ற பெருங்கடலில் பகாமா என்ற இடத்தில் கோடீஸ்வரர்களின் சொர்க்க உலகம் ஒன்று ஏழைகள் நெருங்க முடியாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 3,500 படுக்கை அறைகள் கொண்டு, அதை உள்ளடக்கிய கண்ணாடியிலான நீர்த் தடாகத்தில் 25,000 மீன்களாலும் உள்ளடக்கிய, உலகில் இருந்து பல ஆயிரம் தாவரங்களையும் அழகுபடுத்தி, நவீன வசதிகளுடன், காசினோ உள்ளிட்ட சொர்க்கப் புரியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விதவிதமான அழகிகள், அழகர்கள் சுற்றுலாப் பயணிகளின் கால்-கை பிடித்துச் சேவைசெய்து, விபச்சாரம் பண்ணி பரிமாறுகின்றனர். செல்வச் சீமான்கள், சீமாட்டிகள், நடிப்புக் கலையில் விபச்சாரம் செய்யும் நடிகர்-நடிகைகள், புகழ்பெற்ற இலக்கிய மற்றும் அரசியல் ஜனநாயகவாதிகள் ஆகியோர் உலக மக்களைச் சூறையாடிய செல்வத்தை இங்கே கொண்டு வந்து, "ஜனநாயக"மாகச் செலவு செய்து உல்லாசமாக வாழ்கிறார்கள். பூமியில் உருவான இந்தச் சொர்க்கப்புரியையிட்டு, ஏழைகள் ஜனநாயகமாக, சுதந்திரமாக அதற்குச் சென்று வரமுடியும் என்பதுபோல கண்டும் காணாததுபோல் மௌனம் சாதிக்க முற்போக்கு வேடமிடும் கோட்பாடுகள், இலக்கியங்கள், பெண்ணியங்கள் என்று எல்லையற்ற உலகமிது. இங்கு செல்வதும் செல்லாததும் தனிப்பட்ட தனிமனித விடயமாகக் காட்டும் எல்லாவிதமான விளக்கங்களும், ஆணாதிக்கத் தன்மை கொண்ட தனிமனிதவாதம் கொண்டவை. எதிரியை ஒழிக்கும் பாதையில் இதை வேர் அறுக்காமல் மக்கள் விடுதலை என்பது கற்பனையானது.


"உதிரிப்பூக்கள்" என்ற கட்டுரையில் இந்தியாடுடே நகரங்களில் குடும்பத்தில் தனிவாழ்க்கை, தனியறை, தனித்தீவாக உள்ள குடும்பங்களில் சந்தைக்கு இப்போது முக்கியத்துவம் அதிகரிக்கின்றது எனக் குறிப்பிட்டு "தனிக்குடித்தனத்துக்குள்ளேயே தனிக்குடித்தனங்கள் இருக்கின்றது" என எழுதுகின்றது. (31.12.1997)13 "ஒரு புதிய காதல் கதை" என்ற கட்டுரையில் இந்தியாடுடே காதல் என்பது சந்தைப் பொருளாக மாறியுள்ளது. பாலுறவு வாங்கும் பொருளாக நுகர்வுப் பண்டமாகியுள்ளது (17.2.1999)13 என்றும் எழுதுகின்றது.


மேட்டுக்குடிகளின் போலியான வாழ்க்கை காதலை நுகர்வுப் பாலியல் வடிவமாகக் காண்கின்றது. தனிமையான வாழ்க்கை இறுக்கமான மன அழுத்தத்தைக் கொடுக்கின்றது. இங்கு போலியான வாழ்க்கை முறைகள் உருவாகின்றன. இந்தப் போலித்தனம் மேட்டுக்குடிகளின் நாகரிகமான பண்பாடாகின்றது. அனைத்தையும் சுயநல நோக்குடன் காண்பதும், பயன்படுத்துவதும் மனிதனின் இயற்கையான உயிரியல் செயல்பாட்டுக்கு எதிரானதாகும். இது சமுதாயத்தில் இருந்து வேகமாக அன்னியப்பட்டுத் தனிமனித வக்கிரத்தில் சிக்கிச் சிதைகின்றது. இந்த அன்னியப்பட்ட வக்கிரம் புதிய வாழ்வு முறைகளைத் தோற்றுவிக்கின்றது. இது இயற்கைக்குப் புறம்பான பாலியல் நுகர்வு, செயற்கை அழகு, பழக்க வழக்கங்கள், பண்பாடுகளை உற்பத்தி செய்கின்றது. மனிதனுக்குள் எஞ்சிக் கிடந்த குடும்பத்திலான அனைத்து உறவுகளையும் இயந்திரத்தனமாகக் காண்பது அன்னியமாதலின் உச்சமாகும். இது வசதியான பிரிவில் இருந்து அடிமட்டப்பிரிவுவரை பொதுப் போக்கில் தொற்றுகின்றது.


இந்த அன்னியப்பட்ட மனித உறவுகள் இயந்திரமான போலித்தனத்தில் நீடிக்கும் வரை இந்தச் சமூக அமைப்பின் அச்சாணியை அசைவின்றி பாதுகாக்க முடியும் என்பதால், இந்தப் பண்பாடு ஊக்குவிக்கப்படுகின்றது. இதில் பெண்ணியம் ஆணுக்கு வெளியில் பெண்ணைத் தனித்து வாழ ஊக்குவிக்கும் கோட்பாடும் சரி, இயற்கைக்குப் புறம்பான பாலியல் உறவை முன்வைக்கும் அனைத்தும் சரி மனித உறவுகளின் இயங்கியலை மறுத்து இயந்திரமயமான, அன்னியப்படுத்திய சமூக அமைப்பைக் கோருவதாகும்.


ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் இயற்கையான மனிதக் கூட்டு வாழ்க்கையை முன் நிறுத்தி போராடவேண்டும். இயற்கையின் வரலாற்றை மறுத்த போராட்டம், மனித வரலாற்றை மறுப்பதில் தொடங்குகின்றது. இது பின்னால் மனிதனையே மறுக்கின்றது. மார்க்ஸ் ஒவ்வொரு பிரச்சினையையும் ஆராயும் போது அதை இயற்கையின் ஆரம்ப நிலையில் இருந்தே ஆராய்ந்ததுடன், அதை அடிப்படையாகக் கொண்டே சமூகத்தை மாற்றியமைக்கக் கோரினார். இதை மார்க்சின் "அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு என்ற நூலுக்கு" முன்னுரையாக அவரின் தோழர் எழுதியதை மீள மார்க்ஸ் மூலதனத்தில் தனது கருத்தாக வைப்பதைப் பார்ப்போம்.


"மார்க்சுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது யாதென்றால், தாம் ஆராய முற்பட்டுள்ள புலப்பாடுகளின் விதியைக் கண்டுபிடிப்பதே. குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்திற்குள் திட்டவட்டமான வடிவத்தையும் பரஸ்பரத் தொடர்பையும் கொண்டுள்ள இப்புலப்பாடுகளை ஆளுகிற விதி மட்டுமன்று அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அவை திரிந்து மாறுபடுவது பற்றிய, வளர்ச்சியடைவது பற்றிய அதாவது ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கு அதாவது தொடர்புகளின் ஒரு வரிசையிலிருந்து வேறொரு வரிசைக்கு மாறிச் செல்வது பற்றிய விதி அவருக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த விதியைக் கண்டுபிடித்தவுடனேயே, அது சமூக வாழ்வில் வெளிக்காட்டுகிற விளைவுகளை அவர் நுணுக்கமாக ஆராய்கிறார். ஆதலால் மார்க்ஸ் ஒன்றைப் பற்றி மட்டுமே கவலை கொள்கின்றார். சமூக நிலைமைகளின் நிர்ணயமான அமைப்புகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர வேண்டிய அவசியத்தை விட, கண்டிப்பான விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் உணர்த்துவதைப் பற்றியும், அடிப்படைத் தொடக்க ஆதாரங்களாக அவருக்குப் பயன்படுகிற உண்மைகளை முடிந்த வரை பாரபட்சமின்றி நிலைநாட்டுவதைப் பற்றியும் கவலை கொள்கிறார். இன்றுள்ள அமைப்பின் அவசியம், இவ்வமைப்பு தவிர்க்க முடியாமலே மறைந்து அதனிடத்துக்கு வர வேண்டிய இன்னொரு அமைப்பின் அவசியம் ஆகிய இரு அவசியங்களையும், மனிதர்கள் நம்பினாலும் நம்பா விட்டாலும், உணர்ந்திருந்தாலும் உணராதிருந்தாலும் இப்படித்தான் நிகழுமென்பதையும் அவர் ஒருங்கே நிரூபித்து விட்டதே இதற்குப் போதுமானது.


மார்க்ஸ் சமுதாயத்தின் இயக்கத்தை இயற்கை வரலாற்று நிகழ்முறையாக அணுகுகிறார்.... நாகரிகத்தின் வரலாற்றில் உணர்வு அம்சம் இவ்வளவு கீழ்நிலைப் பாத்திரத்தை வகிக்கிறதென்றால், நாகரிகத்தைக் கருப்பொருளாகக் கொண்ட ஒரு விமர்சன ஆராய்ச்சி உணர்வின் எந்த வடிவத்தையும் அல்லது எந்தப் பயனையும் அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது என்பது கூறாமல் விளங்கும். இப்படிச் சொல்வதன் பொருள் அதன் தொடக்க ஆதாரமாகப் பயன்படக் கூடியது கருத்தன்று. பொருளாதாரப் புலப்பாடே என்பதாகும். இப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒரு நிகழ்வைக் கருத்துக்களோடு அல்லாமல், இன்னொரு நிகழ்வோடு மோத விட்டும், ஒப்பிட்டும் பார்ப்பதுடன் நின்று கொள்ளும். முடிந்தவரை சரிநுட்பமாக இரு நிகழ்வுகளையும் ஆராய்வதும், ஒன்றோடொன்று தொடர்புபடுத்தினால் உண்மையிலேயே ஒரு பரிணாமத்தின் வௌவேறு அம்சங்களாக அவை அமைவதும் இவ்வாராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆனால் அனைத்திலும் மிக முக்கியமானது இப்படியொரு பரிணாமத்தின் வௌவேறு கட்டங்கள் வெளிப்படுத்துகிற அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின் தொடரை, வரிசைக் கிரமங்கள் மற்றும் சங்கிலித் தொடர்களை விடாக் கண்டிப்புடன் பகுத்தாய்வதாகும்."


ஒவ்வொரு பிரச்சினையையும் மார்க்ஸ் வழியில் ஆராயவும் பதில் அளிக்கவும் போராடவும் கற்றுக் கொள்ளாதவரை அப்பெண்ணியம் ஆணாதிக்க வரையறைக்குள் சிக்கிச் சிதைகின்றது.