குழந்தைகள் ஒரு பெற்றோருடன் வாழ்வதைப் பார்ப்போம்.11


அட்டவணை: 3


நாடுகள் சதவீதம்
இங்கிலாந்து 23%
பின்லாந்து 17%
பிரான்ஸ் 15%
ஜெர்மனி 13%
போர்ச்சுக்கல் 12%
கொலான்ட் 11%
இத்தாலி 11%
ஸ்பெயின் 8%
கிரீஸ் 7%


பிரான்சில் இருபது இலட்சம் குழந்தைகள் சொந்த தாய் தந்தையுடன் வாழவில்லை. மாறாகத் தனித்து ஒரு பெற்றோருடன் (தாய் அல்லது தந்தை) வாழ்கின்றனர். பிரான்சில் மூன்றில் ஒரு திருமணம் விவாகரத்துக்கு உள்ளாகின்றது. இதில் பாரிசில் மூன்றில் இரண்டு விவாகரத்துக்கு உள்ளாகின்றது.
20 சதவீதமான குழந்தைகளின் பெற்றோர் எட்டு வருடத்தில் விவாகரத்தைச் செய்கின்றனர். 17.2 சதவீதமான குழந்தைகள் பெற்றோர்களின் விவாகரத்தை எதிர் கொள்கின்றனர். 15-17 வயதுக்கிடைப்பட்ட குழந்தைகளில் நாலில் ஒரு குழந்தையின் பெற்றோர் விவாகரத்தைப் பெற்றுள்ளனர். இந்த விவாகரத்துக்குட்பட்ட குழந்தைகளில் 85 சதவீதமான குழந்தைகள் தந்தையை விவாகரத்துக்குப் பின் சந்திப்பதில்லை. நாலில் ஒரு குழந்தை பெற்றோர் இன்றி வாழ்கின்றனர். 62 சதவீதமான விவாகரத்து பெற்ற தந்தையர்கள் தனியாக வாழ்வதுடன், இவர்கள் தமது குழந்தைகளை மாதத்தில் பலமுறை சந்திக்கின்றனர். 32 சதவீதமான விவாகரத்தைப் பெற்ற தந்தையர்கள் மீள திருமணம் செய்து குழந்தைகள் உடன் வாழ்கின்றனர். (1.4.1999)12


ஐரோப்பாவில் 70 இலட்சம் குழந்தைகள் விவாகரத்தால் பெற்றோரை இழந்து உள்ளனர். இது மொத்தக் குடும்பத்தில் 16 சதவீதமாகும். பிரான்சில் ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு விவாகரத்து நடக்கின்றது. (12.12.1998)7 அமெரிக்காவில் கி.பி. 1985-இல், 25 சதவீதமான 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஒரு பெற்றோரை விவாகரத்து மூலம் இழந்திருந்தனர். அதே நேரம் கி.பி. 1984-இக்குப் பின் பிறந்த 60 சதவீதமான குழந்தைகள் ஒரு பெற்றோரை இழந்து வாழ்வர் என்று ஆய்வுகள் சுட்டி நின்றது.2


குழந்தைகள் இயற்கைக்கு மாறாக வாழ்வதைப் புள்ளிவிபரம் காட்டுகின்றது. மனிதக் குழந்தைகள் இயற்கையாகவே தாயின் அரவணைப்பில் உயிர் வாழும் உயிராற்றலை, இன்றைய சுரண்டும் ஜனநாயகம் சிதறடிக்கின்றது. ஐரோப்பாவில் 70 இலட்சம் குழந்தைகள் தாய் அல்லது தந்தையின்றி வாழும் போக்கு குழந்தையின் உளவியலைச் சிதைத்து, புதிய பண்பாட்டை உருவாக்குகின்றது. இது இந்த ஜனநாயக அமைப்பின் வீங்கிவெடிக்கும் அவலத்தைக் காட்டுகின்றது.


விவாகரத்து என்பது தவிர்க்க முடியாத நிலையில் கையாள்வதற்குப் பதில் குறுகிய நோக்கில் கையாள்வது அதிகரிக்கின்றது. குழந்தைகளைச் சமூகம் பொறுப்பேற்கும் சமூகக் கண்ணோட்டம் அற்ற இன்றைய நிலையில், இந்தச் சமூகச் சிதைவுகள் குழந்தைகளை விகாரமாக்குகின்றது. ஒவ்வொரு மனிதனும் தனது சொந்தத் தனிமனித நலனை முதன்மைப்படுத்தி வாழ்வது மேலும் மேலும் சுயநலத்துக்கான சமூகச் சீரழிவைத் தூண்டுவதுடன் அதுவே பண்பாடாகின்றது.


உலகளவில் சுயநலம் சொத்துரிமை குவிப்பில் கோரத்தாண்டவம் ஆடும் இன்றைய நிலையில், இதை நியாயப்படுத்தும் பண்பாட்டுக் கலாச்சாரத்தை வெகுஜன தொடர்பு அமைப்புகள் தீவிரமாக்குகின்றன. இதைச் சொத்தைப் பறிகொடுத்தவன் தனது பண்பாடாக, கலாச்சாரமாக ஏற்றுக் கொள்கின்ற போது, விவாகரத்து அதன் உடனடி விளைவாகின்றது. குழந்தையின் உளவியல் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றது. தனிமனிதச் சுதந்திரம் அடுத்தவன் சுதந்திரத்தைவிட முக்கியமானதாக மாறுகின்றது.


சமூகச் சுதந்திரம் என்பதல்ல தனிமனிதச் சுதந்திரமே அடிப்படையானது என்ற உலகமயமாதல் கோட்பாடு குழந்தைகளைத் தனிமையை நோக்கி கழுத்தைப் பிடித்து தள்ளுகின்றது. இவை ஏழை நாட்டைச் சுரண்டி பணக்கார நாட்டில் வசதியாக வாழும் போது ஏழை நாட்டைக் கொச்சைப்படுத்தும் வாதம் போல் இந்த விவாகரத்துகள் வெடிப்பு காண்கின்றது. பிளவுகள் ஏற்றத்தாழ்வான பல்துறை சார்ந்து குடும்பத்தைத் தனிமனித வாதத்துக்குள் சிதைக்கின்றது. கூட்டுவாழ்வின் தேர்வுக்குள் வாழ முயற்சித்து வெற்றி பெற முயல்வது புறக்கணிக்கப்படுகின்றது. தீர்வு உடனடியாகவே இரண்டில் ஒன்றாக முடிவாகின்றது. இது தனிமனித அராஜகவாதத்தின், வறட்டுத்தனத்தின் வெளிப்பாடாகும். உலகமயமாதல் பண்பாட்டைப் புரிந்து அதற்கு எதிரான கோட்பாட்டில் குடும்பத்தை உயர்ந்தபட்ச எல்லைக்குள் விட்டுக் கொடுத்து வாழ போராடும் போது இவை சீரழிவதற்குப் பதில் ஆரோக்கியமான சமூக வாழ்க்கை வளர்ச்சி பெறும்.


இதை மறுத்து, விவாகரத்து குழந்தைகளை இயற்கைக்குப் புறம்பாகச் சமூகத்திடம் இருந்து அன்னியப்படுத்தும் தனிமை உலகம் ஒருபுறம் உருவாகின்றது. மறுபுறம் இந்தியா எங்கும் 14 வயதுக்கு உட்பட்ட 3 கோடியே 81 இலட்சம் சிறுவர் சிறுமிகள் அநாதைகளாக உள்ளனர். இதில் ஒரு கோடியே 20 இலட்சம் பேர் வறுமையில் சீரழிபவர்கள். (21.3.1991)13 வீதிக்கு வரும் சிறுவர் சிறுமிகளின் எண்ணிக்கை இது.


வாழ்க்கையில் மேட்டுக்கும், பள்ளத்துக்கும் இடையில் ஏற்படும் பிளவு அதிகரித்துச் செல்ல குழந்தைகள் வறுமைக்குள் சிக்கி வீதிக்கு வருகின்றனர். குழந்தை உழைப்பைத் தடுக்க ஏகாதிபத்தியம் ஒற்றைக் காலில் நிற்க, குழந்தைகள் மேலும் வறுமையில் மடிவது அதிகரிக்கும். ஏகாதிபத்தியங்கள் மக்கள் அநாதையாவதைத் தடுக்க, வறுமையை நீக்க, சுரண்டுவதை நிறுத்தப் போவதில்லை. மாறாக மேலும் ஒட்டச் சுரண்டுவதைத் தீவிரமாக்குகின்றது. இதை ஜனநாயகத்தின் குரலாகச் சர்வாதிகாரத்துக்கு எதிராக முன் நிறுத்துகின்றனர். சுரண்டும் சர்வாதிகாரத்தை ஜனநாயகமாக வேஷம் போட்டு ஆடும் ஆட்டம் வறுமையால் நிர்வாணமாகின்றது.


செல்வச் செழிப்பில் மேட்டுக்குடி குழந்தைகள் ஆடம்பரமாக நுகர்ந்து சிதைக்க, அடிமட்டக் குழந்தைகள் அதற்காகத் தம்மைத் தியாகம் செய்கின்றனர். இந்தத் தியாகத்தைக் கட்டாயமாக்கும் ஜனநாயக உரிமையில் சுரண்டிப் பெறுவதைக் கேள்விக்குள்ளாக்குவது சர்வாதிகாரத்தின் கூறு என்று பிரகடனம் செய்த பின்பு அடக்கி ஒடுக்கியே இதைச் சாதிக்கின்றனர். சப்பித் துப்பும் எச்சில் கிடைப்பதே ஜனநாயகத்தின் பண்பாக இந்த அமைப்பு கருதும் வரை இந்த அநாதைகள் இந்த உலகில் நீடிப்பதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது.