இளங்குயிலே! இளங்குயிலே!
இளம்காலை வாராயோ!-

உன்இன்பமணிக் குரலெடுத்து
ஏழிசையைப் பாடாயோ!

கவிக்குயிலே! கவிக்குயிலே!
கவிச்சோலை வாராயோ!-
உன்கனி அமுதக் குரலெடுத்து
காதலினைப் பாடாயோ!

கருங்குயிலே! கருங்குயிலே!
கருக்கலிலே வாராயோ!-
என்காதினிலே தேன்பாய்ச்ச
காவியங்கள் பாடாயோ!

மாங்குயிலே! மாங்குயிலே!
மாலையிலே வாராயோ!-
உன்மகரயாழ்க் குரலெடுத்து
மனம்குளிரப் பாடாயோ!

பூங்குயிலே! பூங்குயிலே!
பூஞ்சோலை வாராயோ!-
உன்பொங்குமெழில் குரலெடுத்துப்
பூபாளம் பாடாயோ!

தேன்குயிலே! தேன்குயிலே!
தேரேறி வாராயோ!-
உன்தித்திக்கும் குரலெடுத்து
தெம்மாங்குப் பாடாயோ!

-தெ.சாந்தகுமார்.

http://siruvarpaadal.blogspot.com/2006/01/3.html