விவசாய பூச்சிநாசினிகள் காரணமாக மூளையில் கட்டி ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வீட்டுத் தோட்ட செய்கைக்காக பூச்சி நாசினிகளை பயன்படுத்துபவர்களிடையே மூளை கட்டி தோன்றும் அபாயம் அதிகமாகவுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

பூச்சி நாசினிகளைப் பயன்படுத்தும் அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் மூளையில் கட்டி ஏற்படும் அபாயம் உள்ள அதே சமயம் உயர் மட்டத்தில் பூச்சி நாசினிகளை பயன்படுத்துபவர்களிடையே இந்த அபாயம் இரு மடங்காகவுள்ளதாக தொழில் மற்றும் சுற்றுச் சூழல் மருத்துவ குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூறுகிறது.

இத்தகையவர்களிடையே மூளையின் மைய நரம்பு தொகுதியில் மூளைக்கட்டி ஏற்படுவதாகவும் இவர்களுக்கு மூளைக்கட்டி ஏற்படுவதற்கான சாத்தியம் சாதாரண மக்களை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய மூளைக்கட்டியானது ஆண்களிலும் பெண்களிலும் பொதுவாக ஏற்படுகின்ற போதும், ஆண்களில் தோன்றும் மூளைக்கட்டியிற்கும் பூச்சிநாசினிகளின் தாக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பிரான்சு பொது சுகாதார நோய்த்தடுப்பு அபிவிருத்தி நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மூளைக்கட்டி பாதிப்பு ஏற்பட்ட 221 நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டார்கள்.

இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிநாசினிகளில் 80 சதவீதமானவை பங்கசு நாசினிகளாகும்.

இந்த ஆய்வு குறித்து இங்கிலாந்து புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞான தகவல் அதிகாரி ஜொஸெப்பின் குயரிடோ கருத்துத் தெரிவிக்கையில், இந்த ஆய்வின் அவதானங்களை உறுதிப்படுத்த மேலதிக ஆராய்ச்சியும் பரிசோதனைகளும் தேவையாகவுள்ளது என்று தெரிவித்தார்.

""மூளை கட்டிகள் தோன்றுவது அரிதான விடயமாகும். உயர் மட்ட அளவுகளில் பூச்சி நாசினிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு வேறு வகை புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயமும் அவதானிக்கப்பட்டுள்ளது'' என ஜொஸெப்பின் குயரிடோ தெரிவித்தார்.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1181134859&archive=&start_from=&ucat=2&