08192022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

"முகம்" படம் ஒரு அகதியின் முகம் அல்ல

 பாரிஸில் உள்ள பலர் அண்மைக் காலமாக பல திரைப்படங்களை தயாரித்து வருவது அதிகரித்துச் செல்கிறது. இப்படத் தயாரிப்புகளில் 12.5.96 இல் வெளியாகிய அருந்ததியின் முகம் திரைப்படம் பலத்த பரபரப்பையும்,

 எல்லோரினது கவணத்தையும் ஈர்த்துள்ளது. இப்படம் இந்தியத் திரைப்பட மசாலாக் குப்பைத் தனத்தை மீறி, பாரிஸில் வெளியான குப்பைகளை மீறி, வெளிவந்த இப்படம் ஒரு வெற்றிகரமாக படமாகவும் பாரீசில் உள்ளது.

 

இலங்கைத் தமிழர் சினிமா வரலாற்றில் புலிகளின் திரைப்படங்களுக்குப் பின் வெளிவந்த முகம் படம் குறிப்பிடத்தக்க சாதனையாகும். தமிழ் சினிமாவின் குப்பைகளை கைவிடத்தயார் அற்று பலர் படம் எடுக்கும் இன்றைய நிலையில், அவைகளை மீறி இப்படம் வெளிவந்துள்ளது.

 

பல்வேறு தளத்தில் இன்று கலை இலக்கிய வடிவங்கள் மக்களின் உணர்வில் இருந்து தனித்துவம் கொண்டவை எனவும், யதார்த்தப் படைப்புகள் அதிகார வர்க்கம் சார்ந்தது எனவும், மக்களின் வாழ்வு சொல்லாத யதார்த்தத்தில் கலை சார்ந்தது என்று கூக்குரல்களையும் மீறி இப்படம் ஒரு சாதனையைப் படைத்துள்ளது.

 

இப்படம் மத்தியதரவர்க்கத்தின் யதார்த்தத்தையும், அப்பாத்திரத்தின் ஆளமான அழகியலையும் பொருளாதாரத் தளத்தில் மனித முகத்தை வெளிக் கொண்டு வந்ததும் இப்படத்தின் வெற்றிக்கான ஒரு அடிப்படையாகும். ஒளி அமைப்பு, படம் தொய்வின்றி நகருதல், தேவைக்கு மீறிய வசனம் அமையாமை என படத்தில் உள்வட்டத்தில் சிறு சிறு குறைபாடுகள் இருந்த போதும் விமர்சனம் இன்றி ஏற்கக் கூடிய அளவுக்கு அவர்களின் முதல்படம் பாராட்டுக்குரியவையே.

 

இந்தளவுக்கு பல சரியான அம்சங்களையும் இப்படம் கொண்டிருந்த போதும், மறுபுறத்தில் இப்படத்தின் கருத்துத் தளம் பலத்த விமர்சனத்துக்கு உரியதாக அமைந்துள்ளது. இவ்விமர்சனத்தை செய்ய முன்பு படம் பார்க்காத வாசகர்களுக்கு இப்படத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தைத் தரமுயல்கின்றேன்.

 

ஒரு அகதி எப்படி பாரிசுக்கு வந்தடைகிறான், அங்கு அவன் சந்திக்கும் பிரச்சனைகள், என ஒரு தொகுப்பே இப்படம். அவன் எப்படி தனது முகத்தை இழக்கிறான் என காட்டுவதே இப்படம். இப்படம் பற்றி அருந்ததி குறிப்பிடும் போது 1985களில் தனது மனப்பதிவுகளை படமாக்குவதாகவும், இதில் ஒரு கதையோ, தீர்வையோ தான் வைக்கவில்லை என படம் தொடங்க முன் திரையில் அறிவிக்கிறார்.

 

அருந்ததி அதை அறிவித்த போதும் படம் ஒரு கதையை, ஒரு தீர்வை நகர்த்தி உள்ளது. இப்படத்தை விமர்சன ரீதியாக ஆராய்வோமாயின் இப்படம் ஒரு அகதி தொடர்பான டொக்கிமன்ரி அல்ல. இப்படம் ஒரு அகதியின் படமும் அல்ல. இப்படம் பற்றி பெருமளவில் சில கருத்துக்களை இட்டுச் சென்றுள்ளது.

 

1) இப்படம் சொந்த முரன்பாட்டை உள்ளடக்கி உள்ளது.
2) இப்படம் அகதியினுடைய பிரச்சனையை உள்ளடக்கவில்லை.
3) இப்படம் சில சமரசத்தை சொல்ல வந்து பின் செல்லாமல் சென்றுள்ளது.
4) இப்படம் எம்மவர்களின் கணிப்பில் லும்பன் (சரியான அரசியல் அர்த்தத்தில்) தனத்தை அங்கீகரித்துள்ளது.
5) இப்படம் பாரீஸ் பற்றிய ஒரு பொய்யான பிரம்மையைக் கொடுத்துள்ளது.
6) இப்படம் பாரீஸ் தவிர்ந்த பிரஞ்சுச் சமூகம் முன்பும், மற்றைய ஐரோப்பிய நாட்டிலும், இலங்கையிலும் அகதிக்கான கோணத்தில் இருந்து வெற்றிபெற முடியாது.

 

இப்படி பல சிறு உள்ளடக்கத்துடன் விமர்சனத்துக்குரிய விடையத்தை விமர்சிப்பதே எனது நோக்கமாகும். இந்த நோக்கம் என்பது திரைப்படத் துரையில் குறிப்பிடத் தக்க இம்முயற்சி ஐரோப்பிய சஞ்சிகைகளின் ஒரு கால வரலாறும், அதின் அதிகரித்த எண்ணிக்கையும், இத் திரைப்படத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய படம் அதிகரித்து வரும் வாய்பை ஏற்படுத்தும். அது சஞ்சிகைகள் விட்ட தவறை நிவர்த்தி செய்யும் வகையில் திரைப்படம் அமைய வேண்டும் என்ற அவாவின் அடிப்படையில் அமைந்ததே எனது விமர்சனமாகும்.

 

முகம் படம் ஒரு அகதியின் முகம் என்பதை முழுக்க முழுக்க இப்படம் கொண்டிருக்க இல்லை. அகதியின் முகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எனக்காட்டும் முன்னைய நண்பர்களின் வேண்டா வெறுப்பான கதைகள், புறக்கணிப்புகள், சேர்ந்து வாழும் அறையில் மனிதர்களின் சோகங்கள், இலங்கையில் இருந்து வரும் செய்திகள், வேலை, நிதி, ......... எனப் படம் காட்டும் பிரச்சனைகள் ஒரு அகதியின் முகமாக சித்தரித்ததென்பது அகதியின் முகத்துக்குரிய உண்மையான நிலையை படம் மறுதலித்துள்ளது.

 

இவ்வளவு பிரச்சனையையும் இலங்கையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதே மிக முக்கியமானதாகும். ஒரே ஒரு வேறுபாடு பாரிஸில் திடீர் பாச்சல் இருந்தது. இதை விரிவாக ஆராய்வோமாயின் இரண்டு நண்பர்கள் எம்மண்ணில் ஒன்றாக வாழும் வாழ்க்கை, அவர்களின் தொழிலை நோக்கி நகரும் போது எற்படும் பொருளாதாரத் தன்மையுடன் சிதறும் தன்மை உண்டு. ஒருவன் ஒரு டாக்டராகவும், மற்றவன் விவசாயியாகவும் மாறின் அங்கு ஏற்படும் ஏற்றத் தாழ்வு, அல்லது இரு டாக்டர்கள் நண்பர்களாயின் ஒருவன் பணவசதி கொண்டவனாகவும் மற்றவன் ஏழையாகவும் மாறின் அங்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், வேண்டா வெறுப்பாக கதைப்பதும், புறக்கணிப்புகளும் நிகழும். இது படிப்படியாக ஏற்படுவதால் கீழ் நிலையில் உள்ள நண்பர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுவதில்லை. அது இயல்பாக பழக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் புலம்பெயாந்த நாட்டில் நீண்ட இடைவெளி கொண்ட சந்திப்பு, பொருளாதார ஏற்றத் தாழ்வு ஏற்படும் புறக்கணிப்புகள் திடீர் அதிர்ச்சி கொடுப்பது படத்தில் சோகத்துடன் கூடிய வெறியாக அமைகிறது. இரண்டு இடத்திலும் உள்ள பிரச்சனைகள் ஒன்றே. அதில் சிலமாற்றங்கள் காலத்தில் மட்டும் ஏற்படுகின்றது. இது இடமாற்றத்தில் அல்ல. இப்படத்தில் உள்ள விடையங்களும் எம்மண்ணில் உள்ளன. அதன் தொடர்ச்சி இங்கு பிரதிபலித்துள்ளது அவ்வளவே. ஆகவே இப்படம் ஒரு அகதியின் முகமல்ல. மாறாக ஒரு யாழ்பாணத்தின் முகம் எனக் குறிப்பிடுவது மட்டுமே மிகச் சரியாகப் பொருந்தும். இப்பிரச்சனை எம் தமிழ் சமூகத்தின் சமூகப்பிரச்சனையே ஒழிய, ஒரு அன்னிய நாட்டுக்கு வந்தால் ஏற்படும் அகதியின் பிரச்சனை அல்ல.

 

படத்தின் கதாநாயகனுக்கு வரும் ஆனந்தன் பாரிஸ் விமான நிலையத்தில் இருந்து வாடகைக் காரில் எறி, முன்னைய நண்பரின் விட்டை நோக்கிச் செல்கிறார். அப்போது வீட்டு நினைவுடன் சோகத்தில் உள்ள நேரம், கார் ஓட்டுனரான பிரஞ்சுக்காரர் விலாசம் மற்றும் இடம் தெரியுமா என பிரஞ்சில் கேட்கிறார். பிரஞ்சு தெரியாத ஆனந்தன் விளங்காது ஆங்கிலம் தெரியுமா? என கேட்க, அவன் இது பிரஞ்சு நாடு இங்கு பிரஞ்சில் தான் கதைக்க வேண்டும் எனக் கூறும் காட்சி ஒரு இனவாத அடையாளமாகக் காட்டப்படுகிறது. இங்கு படம் வலிந்து இனவாதக் கூற்றை காட்டியது காணமுடிகிறது. ஏன் எனில் பாரிசில் சர்வதேச விமான நிலையத்தில் எல்லா மொழி பேசும் மக்களும் வருவர். அவர்களுக்கு மொழி தெரியாது என்பது மட்டுமின்றி, சர்வதேச விமான நிலையத்தில் ஏறிய போதே மொழி தெரியாது இருந்தும் ஒரு பயணியிடம் இப்படிக் கோருவது எனக் காட்டுவது பாரிஸ் சமூகத்தின் சரியான பக்கத்தை மறுத்து ஒரு பொய்யான ஒரு பரிமானத்தை ஏற்படுத்துவதேயாகும். இப்படி நடந்தது என இவர்கள் வாதிடின் உண்மையில் இது ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்குமே ஒழிய, பாரிஸில் வாழும் 50 ஆயிரம் தமிழ் மக்களின் 99 வீதமானவர்களின் அபிப்பிராயம் அல்ல.

 

ஆனந்தன் வந்து இறங்கியவுடன் ஒரு தொலைபேசி இலக்க மூலம் யோகேஸ்சைத் தேடித் தொடர்பு கொள்கிறார். அங்கு அவர் இல்லாததுடன் அவரின் நண்பரும், இவரின் நண்பருமான நபருடன் கதைக்கிறார். அவ் நண்பர் அக்காட்சியில் ஆனந்தன் வருவது விரும்பாதும், தன்னை விட்டு எப்படிக் கழற்றுவது என எண்ணிய படி முகத்தைச் சுழித்து நேரடியாகப் பதில் அளிக்க முன், கதைக்கும் பகுதியைக் கையில் பொத்திய படி மனைவியிடம் கூறுகின்றார். மனைவி அவரை அழைப்பதற்கு எதிராக எரிச்சல் ஊட்டி பேசுகிறார். பின் தற்காலிகமாக வரவழைக்கிறார். இக்காட்சியில் அவரின் நண்பரே விரும்பாமல் நிற்கும் போது, அதை பெண்ணின் வாய்மூலம் கூற வைத்து மறைமுகமாக பெண் தான் காரணம் எனக் காட்ட முயலும் காட்சி பெண்களை சிறுமைப்படுத்தும் நோக்கில் ஆனாதிக்கம் சார்ந்த கருத்தாகும். முதலில் ஆண்தான் விரும்பவில்லை. அவர் விரும்பி இருப்பின் உடன் வரக் கூறி பின் மனைவிக்கு விளக்கம் கொடுத்து இருக்கமுடியும். மறுதலையாக பெண்னெதிர்ப்பைக் காட்டுவதாக படம் ஓடுவது பெண்களை சிறுமைப்படுத்துவதேயாகும்.

 

ஒரு காட்சியில் ஆனந்தனுக்கும் அங்கு அறையில் இருந்த இன்னேருவருக்கும் ஏற்படும் பிணக்கில், அவர் திருமணத்தை விரும்பி தனது உடல் இச்சையை செக்ஸ் புத்தகம் வாயிலாக தீர்ப்பதைக் காட்டும் காட்சியில், அவர் தனது பிரச்சனைகளை முன்வைக்கிறார். தனது நான்கு சகோதரிகளுக்காக உழைப்பதாகவும், அதனால் திருமணம் செய்ய முடியவில்லை என்பதையும் தனது உடல் இச்சை தீர்க்க வழியில்லை என ஆனந்தனிடம் கூறும் போது, ஆனந்தன் சீதனப் பிரச்சனையால் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் தான் பாதிக்கப் படுகின்றனர் என, ஆண்களும் அடிமைகளே பெண்களால் என மறைமுகமாகக் கூறுகின்றார். அதாவது பெண் அடிமைத் தனத்தையும், ஆண் அடிமைத் தனத்தையும் சமப்படுத்தும் போக்க இதன் மூலம், பெண் அடிமைத் தனத்தை நியாயப்படுத்தும் போக்கு படத்தில் பிரதிபலித்துள்ளது.

 

அந்த நண்பருக்கு திருமனம் செய்து வைத்த ஆனந்தன், அத்திருமணம் யாரை என்பதைக் காட்டவில்லை. எம்மவர்கள் வெள்ளைக்காரப் பெண் என்றால் வேசை என நினைக்கும் கண்ணோட்டத்தில் உள்ளவரை, எம்மவர்கள் வெள்ளைக்காரப் பெண்னைத் திருமணம் செய்ய மறுப்பவர்கள். அத்துடன் வெள்ளைக்காரனை விட எம்மவர்களிடம் காணப்படும் நாசித்தன்மை அதை அனுமதிக்காது. ஆனந்தன் அவரின் தகப்பன் மூலம் தொடர்பு கொண்டே இத்திருமண முயற்சியில் இடுபட்டதாகவும் சீதனம், தாலி என எல்லாம் பெண்ணடிமைத் தனத்துடன் செய்ததை இப்படம் காட்டதவறியுள்ளது.

 

ஆனந்தன் பிரான்ஸ் வந்த பின்பு வேலை செய்து தனது லீவு வரை காட்சி சென்று விடுகின்றது. அந்த வகையில் அதற்குட்பட்ட எல்லா முக்கிய காட்சிகளும் காட்டப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் காட்டப்படாது இருட்டடிப்பு செய்ததுடன் நடிகர்களுடன் சமரசம் செய்யவும், சொந்த வாழ்வில் முரண்பாட்டை கொண்டு ஏற்படும் பிரச்சனையால் நசுக்கிவிட்டுள்ளனர். அந்தவகையில் விடுபட்டுப்போன பிரச்சனைகள்

 

1) ஏஜன்சி மூலம் வரும் பிரச்சனைகளும், அதிகளவிலான சுரண்டலும்.
2) கேஸ் எழுதுவதும் அதற்கான பணமும்.
3) மொழி பெயர்ப்பும் அதற்கான பணமும்.
4) விசாரனை மற்றும் பல்வேறு தேவைக்கான மொழிபெயர்ப்புகளும் அதற்கான பணமும்.
5) நிராகரிக்கப்படின், மிள் விசாரனைக்கு செல்லும் போது மொழி பெயர்பாளர்களும் அதற்கு தேவையான பணமும்.

 

இவை இங்கு வரும் அகதியின் முதல் பிரச்சனையாக இவர்களின் பட எல்லைக்குள் உள்ளது. இதை தெளிவாக கொண்டவர்களின் நியாயமான கூலிக்குப் பதில் 50 சதவீகித வட்டிகாரர்களாக உள்ளனர். இவர்கள் பாரிசில் ஒரு வசதியான வாழ்க்கை கொண்டவர்கள். ஒரு புதிய அகதிக்கும், இந்த வசதியாக வாழும் பிரிவிற்கும் இடையில் உள்ள பிரச்சனைகள் அபிப்பிராயங்களை இப்படம் சமரசத்துடன் திட்டமிட்டு மறைத்துள்ளது.

 

ஆனந்தன் ஏன் பாரிசிற்கு வருகின்றான் எனின் இராணுவப் பிரச்சனை என படத்தில் கூறுகின்றனர். அவர் தம்பி வருவது தொடர்பாக தம்பியின் விருப்பையும், இங்குள்ள எம்மவர்களின் பிரச்சனையை மட்டும் காட்டி தம்பிக்கு எழுதுகின்றார். இதனால் தம்பி மணி தான் அகதியாகச் சென்று, ~முக|த்தை இழக்கத் தயார் இல்லை என தனது பாஸ்போட்டை கிழித்து எறிகின்றான். இது மிகைத் தன்மையாக இருந்த போதும், இக்காட்சி படம் முழுவதும் ஒரு சுய முரண்பாட்டை ஏற்படுத்துகிறது. ஆனந்தனுக்கு இருந்த இராணுவப் பிரச்சனை ஏவ்வாறு தம்பி மணிக்கு திடீர் என இல்லாமல் போனது. தம்பி போராட போராட்டத்தில் கூட இணையவில்லை. இது இப்படத்தில் முரண்பாட்டை கொண்டது ஆகும். மற்றது 1985 இல் அகதியாக இங்கு வந்தவர்கள் ஆனந்தன் உட்பட ரவல்ச் செக்குடன் வந்ததுடன், சிறு வீகிதத்தினர் மட்டுமே உண்மையான இராணுவப் பிரச்சனையால் நாட்டைவிட்டு வெளியேறியவர்கள். மிகுதிப்பேர் பொருளாதாரக் காரணத்துக்காகவே வந்தவர்காளாவர். ஆனந்தனின் தம்பி மணிக்கு பொருளாதாரக் காரணம் என்பது படம் செல்லாமல் முடிவு செய்கிறது. ஆனந்தன் தாயை நினைத்து தாயைப் பார்க்கத் துடிக்கும் எக்காட்சியிலும், இரானுவப் பிரச்சனை தான் தாயைப் பார்க்க முடியாததுக்கு காரணம் என கூறவில்லை. எனவே ஆனந்தனும் பொருளாதார காரணத்துடன் வந்ததாக கருதவேண்டிய நிலை உள்ளது.

 

படத்தில் பொருளாதாரக் காரணத்துக்காக வந்த பல நண்பர்கள் கஸ்டப்படும் காட்சிகள், அது நியாயப்படுத்தப்படுகின்றது. இப்போக்கு என்பது பொருளாதார நெருக்கடிக்கான காரணத்துக்கான அடிப்படையை ஆராய மறுப்பதும், அதில் இருந்து தப்பி ஓடும் போக்கும் நியாயப்படுத்தப் படுகின்றது. அதில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவை மறுதலிக்கப்படுகின்றது. ஒரு சமூகத்தில் உள்ள பிரச்சனைக்கான காரணத்தை அகதியாக வருபவன் முன் தெளிவாக முன்வைத்திருக்க வேண்டும். அதை செய்யாது அவனின் சோகத்தை படத்தில் காட்டுவதன் மூலம், மறைமுகமாக அவனின் புலம்பெயர்வு நியாயப்படுத்தப்படுகின்றது. எம் மக்களில் 90 சதவீதமானவர்களுக்கு உள்ள பிரச்சனையை அகதியாக வருவதன் மூலம் தீர்க்க முடியுமா? இதுதான் தீர்வா?

 

யோகேஸ் தொடர்ச்சியாக வேலை செய்யாது உள்ள நிலையை ஒட்டி பல்வேறு தளத்தில் வரும் விமர்சனம் தவறானது எனக்காட்ட முயல்வது விமர்சனத்துக்குரியது. வேலை செய்யாமை என்பது ஒரு சரியான விமர்சனம் மட்டுமல்ல, எம்மவர்களில் சிலர் லும்பன் தன்மைகள் மீதான விமர்சனமே. இவ்விமர்சனத்தை செய்பவர்களின் தவறான பக்கம் மட்டும் விமர்சனத்தை பொய்யாக்கி விடுமா? ஒரு முதலாளிக்கும் ஒரு தொழிலாளிக்கும் இடையில் உள்ள பிரச்சனைகள் எப்போதும் இந்த வர்க்க சமுதாயத்தில் உள்ளவையாகும். இதை எதிர்கொள்வது முதலில் இங்குள்ள தொழில் சட்ட எல்லைக்குள்ளும், பின் பல்வேறு போராட்ட வழிகளிலுமேயாகும். இதை மறுதலிக்கும் இப்படம் மாறாக வேலைவிட்டு தீடிர் என ஒடும் லும்பன் போக்கை நியாயப்படுத்தி உள்ளது. ஏன்எனின் யோகேசுக்கும் முதலாளிக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனையில், கழுவாத கோப்பையை சுட்டிக்காட்டும் முதலாளிக்கு எதிராக தான். நான் நாய் இல்லை என கூறும் தன்மை, வலிந்து காட்டிய செய்தி. வேலை முடிந்த நேரத்தையே சுட்டிக்காட்டி வாதாட வேண்டிய பிரச்சனையில் சம்மந்தம் இல்லாமல், நான் நாய் இல்லை எனக் கூறும் கூற்று, அந்த வேலை மீது வெறுப்பை காட்டுவதாக உள்ளது. வேலையை மதிக்காமை புலப்படுகிறது.

 

முதலாளி உன்னை விட எனது நாய் மேலானது என கூறும் போது, இது விட்டுவிட்டு ஓடும் ஒரு உணர்ச்சிக்குரிய பிரச்சனை அல்ல. ஏன் எனில் அனைத்து முதலாளிகளும் தனது தொழிலாளியை விட தனது நாயை மேலானதாகவே, தொழிலாளியின் சம்பளத்தை விட நாய்க்கு கூடுதலாகவே செலவும் செய்வான் என்பதை சமூகம் பற்றி விமர்சன நோக்கம் கொண்டவர்க்களுக்கு புரியாமல் போனது ஆச்சரியமானது. தொழிலாளியை விட நாய் முதலாளிக்கு மேலானது என்ற இக்கூற்றை சரியாகப் புரிந்து கொண்டவர்கள், 1917 இல் சோவியத்தில் ஜார் மன்னனின் நாயை சுட்டுக் கொன்ற வரலாறு தெளிவாக எடுத்துரைக்கும்.

 

ஒரு முதலாளிக்கு எதிராக எல்லாவித ஒடுக்குமுறைக்கும் வசைகளுக்கும் எதிராக எதிர்த்து நின்று போராடுவது மட்டுமே ஒரு சரியான வழியாகும். அதைவிடுத்து விட்டுவிட்டு ஓடுவதென்பது உணர்ச்சி வசப்படும் ஒரு லும்பன் தன்மையாகும். இதில் இன்னுமொரு பக்கம் உண்டு. யோகேஸ் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பதை ஒரு காட்சி தெளிவாக்குகிறது. அப்படிப் பார்த்தால் பல்கலைக்கழகத்தனத்துக்கே உள்ள கீழ்மட்ட வேலைகளை செய்யாத அதிருப்தி உணர்வு வேலையை விட்டு ஒடச்செய்கிறது. அதுதான் நான் நாய் இல்லை என்ற சம்பந்தம் இல்லாத இடத்தில் வந்த கூற்று காட்டுகிறது. சமூகம் பற்றிய விமர்சனம் உள்ளவன், பல்கலைக்கழகத்தில் படித்தவனாக காட்சி காட்டியது. இது யாழ் சமூகத்தில் உள்ள ஒரு சமூக கற்பனையின் ப+ர்சுவா வர்க்க கண்ணோட்டமேயாகும்.

 

ஆனந்தன் அறையில் இருந்த 18 வயதை அடையாத இளைஞன் வேலை இன்றி உள்ள நேரம், உறவினரால் வேலை செய்யக் கோரி அல்லற்படுகிறான். இதனால் அவன் வேலை தேடிச் சென்று முதல் நாளே வேலையில் மரணிக்கிறான். இக்காட்சியில் முன் அவ்விளைஞன் வேலை இன்றி உள்ள நேரம் யோகேஸ் வேலையை விட்டு வந்த உடன், ஆனந்தன் அவரின் நண்பர் இடம் இருந்த வேலையை உடன் யோகேசுக்கு கொடுக்கிறார். இங்கு இவ்விளைஞன் புறக்கணிக்கப்படுவதும் சொந்த மனிதாபிமானக் கண்ணோட்டம் கூட போலியானதாக சிதைந்து போகின்றது. இது படத்தில் இன்னுமொரு சுயமுரன்பாடேயாகும். இப்படத்தில் அவருக்கு விசா இல்லை என்றோ, 18 வயது ஆகவில்லை என்றோ, அதனால் தான் என நியாயப்படுத்த முன்வந்தால் அது தவறேயாகும். ஏன்னெனில் இவ்வேலை கூட சட்டவிரோதமாக செய்யக்கூடியதாக இருந்திருக்கலாம் அல்லவா? காட்சி எதையும் கூறாமல் போனது உண்மை. பிரான்சின் தொழில் சட்டத்தில் எதுவும் இல்லாத ஒரு காட்டுமிராண்டி சமூகமாகக் காட்டும் வகையில், படம் தொழில் தொடர்பான பிரச்சனைகளைக் காட்டுவது வெட்கக்கேடானது. இது மிக மோசமாக பிரஞ்சுத் தொழிலாளியை அவமதிப்பதாகும்.

 

பிரான்சைப் பற்றி ஒரு பொய்மை படத்தை, மிதமிஞ்சிய அரசியலைக் காட்டும் படம். நாட்டை விட்டு வருபவர்களை ஊக்குவிக்கும், பிரமையை ஏற்படுத்தி உள்ளது. இது படத்தின் நோக்கத்துக்கும் விளைவுக்குமிடையில் சுயமுரண்பாட்டைக் கொண்டுள்ளது. பாரிஸ் பற்றி உயர் மாடிக்கட்டிடங்களையும், அதன் அழகியலையும் வெளிக் கொண்டு வருகின்றது. பாரிஸ் சேரிப்புறம் நிராகரிக்கப்படும் போக்கு, இந்திய சினிமாத் தனத்தின் ஒரு தொடர்ச்சியாகும்.

 

1985 இல் பாரிஸ் வாழ்கை என்பது மிக மோசமான வீடுகளிலும், ஒரு அறையிலே சமைத்தல் வாழ்தல், 10, 15 பேர் கொண்ட அறை வாழ்கையாகும். அங்கு குளித்தல் என்பது அதிகமாக சாத்தியம் இல்லை. ஆனால் படம் வசதியான வீடு, வசதியான வாழ்கை என அனைத்தையும் கொண்டு இருந்தது. படத்தில் சுயமுரன்பாட்டையும், போலி அழகியலையும் வெளிப்படுத்துகின்றது.

 

ஆனந்தனுக்கும் அறையில் இருந்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரன்பாட்டால், வீட்டைவிட்டு இறங்கும் படி உரிமையாளர் கூறுகின்றார். ஆனந்தனும் மற்றவரும் அறையை விட்டு இறங்குகின்றனர். இக்காட்சி வேலையை விட்டு யோகேஸ் வந்தது போல், ஒரு லும்பன் தனம் சார்ந்ததே. ஏன் எனில் வாடகை கட்டி இருந்த நபரை விட்டை விட்டு இறங்கக் கோரும் போது, அதற்கு எதிராக போராட வேண்டும் என்ற நிலை மறுக்கப்படுகின்றது. அதாவது ஒரு விட்டை விட்டு ஒரு வீட்டுச் சொந்தகாரன் விட்டில் உள்ளவரை வெளியேற்றுவது எனில், அதற்கு என சட்ட ஒழுங்குகள் உண்டு. இதேநிலை அறையில் இருக்கும் நபர்களுக்கும் உண்டு. குறைந்த பட்சம் சட்ட ஒழுங்குகளுக்குக் கூட போராட வேண்டும் என்ற உணர்வைக் கூட மறுக்கும் தன்மை, லும்பன் தனத்துடன் படம் நியாயப்படுத்துகின்றது. இதன் மூலம் எம்மவர்கள் முதலாளிக்கு சேவகம் செய்யும் போக்கு நியாயப்படுத்தப்படுகிறது.

 

கறண்டியால் சப்பிடுவதை கௌரவமாகக் காட்டும் போலித் தனத்தை தோலுரிக்கும் படம், அதன் எதிரேலியாகக் காட்டும் எமது நிலையில் உள்ள பிற்போக்குத் தனத்தை காட்டாமல் விட்டு சமரசம் செய்வதன் மூலம் நியாயப்படுத்தப்படுகின்றது. இதை நாம் வேறு ஒரு காட்சியில் ஆனந்தன் அறையில் இருந்த இளைஞன் கொல்லப்பட்ட நிகழ்வு, அதன் சோகத்தை மறைக்க யோகேசுடன் அருள் வீடு செல்லும் ஆனந்தன், அங்கு தொலைக் காட்சியில் சினிமாப்பாட்டு கேட்பதை என்ன என்பது.

 

இப்படிப் பல இன்னமும் சுட்டிக்காட்ட முடியும். அதே நேரம் இனப்பிரச்சனையில் தாய் உறவினர் இடையில் உள்ள பிரிவு பாரிசுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல. மாறாக வடக்குக்கும் வன்னிக்கும், தீவுக்கும் வடக்குக்கும், வடக்கும் கொழும்புக்கும், கிழக்கில் ஒரு கிராமத்துக்கும் இன்னோரு கிராமத்துக்கும் என யுத்தம் காலாகாலமாக ஏற்படுத்தியுள்ளது.

 

தொகுப்பாக நண்பரின் புறக்கணிப்பு, அறையில் ஏற்படும் பிரச்சனைகள், வேலை இன்மை, வேலையில் இறப்புகள், மற்றவர்கள் பற்றிய கருத்துகள், தாய் தந்தை உறவினர் பிரிவுகள் எல்லாம் எம்மண்ணில் உண்டு. இது புலம்பெயர்ந்த நாட்டில் ஏற்படும் ஒரு அகதியின் முகமாக மாறிவிட மாட்டாது. இது எம்மண்ணின் தொடர்ச்சி. இது எம்மண்ணிலும் உண்டு.

 

இப்படத்தை ஒரு பிரஞ்சுக்காரன் பார்ப்பான் ஆயின் என்ன முடிவு எடுப்பான் எனின், தமிழனால் தமிழனுக்கு பிரச்சனை அவ்வளவே படம். அகதியாக வந்தால் அல்ல என்பது, அவனின் முடிவாகும். இதை புலம் பெயர்ந்த வேறு நாடுகளில் இது ஒரு பிரச்சனையாக இருக்காது. ஏன் எனில் அரசே வீடு, நிதி வழங்குவது போன்று சில உதவிகளைச் செய்வதால் இவை பிரச்சனையாகவே அமையாது. அடுத்து தம்பி அண்ணனிடம் வரும் போது இப்பிரச்சனைகள் மாறிவிடும் அல்லவா. அங்கு பிரச்சனைகள் தெளிய வாய்ப்பில்லாது போய்விடுகின்றது.

 

அகதி முகம் இழத்தல் என்பது எதில் என சிலவற்றை குறிப்பிட்டுக் காட்ட முனைகிறேன்.1) நாட்டை விட்டு வெளியேற முனையும் ஒருவன் ஒரு தரகன் மூலம் அனுபவிக்கும் வெறுப்பான அருவெறுப்பான நிலைமைகள்.
2) அகதியாக வருபவன் தங்குமிடம் கேட்டு அகதி உதவி அமைப்பிடம் செல்லும் போது ஏற்படும் மொழிப்பிரச்சனைகள்.
3) அகதியாக வருபவன் இங்கு கேஸ், விசாரனைக்கு என வழங்கும் ஆவணங்களை மொழிபெயர்க்க, அதனால் ஏற்படும் மிக மோசமான சுரண்டலும், இதனால் ஏற்படும் அவமானமும். அதாவது மொழி தெரியாமல் ஏற்படும் அவலம் சார்ந்த சுரண்டல்.
4) இங்கு அரசின் கொடுரமான தன்மை, பொலிஸ் மற்றும் அகதி விசாரனைக் கூடத்தில் கிடைக்கும் நாய்களிலும் கீழான வரவேற்பு.
5) அகதியாக இருப்பதாலும், மொழி தெரியாமல் இருப்பதாலும் முதலாளியால் கையாளப்படும் ஒடுக்குமுறை.
6) மொழி தெரியாததால் எதுவும் தொரியாத செக்கு மாடாக இயங்கம் போக்குடன் கூடிய அவலமான மண்ணின் நினைவுகள்.
7) எமது நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தின் பிடிப்பும், ஏகாதிபத்திய காலாச்சார பிடிப்பின் இடையில் சிக்கித்தவிக்கும் அவலம்.
8) எமது நாட்டுப்பற்றை இழந்து, மண்ணின் பிடிப்பை இழந்து தவிக்கும் நிலை.
9) இங்கு உள்ள இயந்திரதனமான வாழ்வும், எம்மண்ணின் இயல்பான வாழ்விற்கும் இடையில் உள்ள முரண்பாடு. அதாவது இயங்கியல் வாழ்விற்கும் இடையிலான முரண்பாடு.
10) இங்குள்ள அரசின் இனவெறித்தனத்தினால் குடும்பத்தை இனைக்க முடியாமை, மற்றும் திருமணம் செய்ய முடியாமையில் உள்ள நெருக்கடிகள்.
11) வெள்ளை இனவெறியர்களால் சந்திக்கும் பிரச்சனைகள், அதன் சோகங்களும் கோபங்களும்.

 

என பலவற்றை எடுத்துச் சொல்ல முடியும். அகதியின் முகம் இழத்தல் என்பது எப்போதும் மண்பற்றுடன் கூடிய, அதன் கலாச்சார தள இழப்புடன் இனைந்ததேயாகும். இங்குள்ள சமுதாயத்திற்கும், அங்குள்ள சமுதாயத்திற்கும் இடையில் உள்ள முரன்பாடுகளே ஆகும் முகம் படம் அதில் ஒரு அங்குலத்தைக் கூட தன்னுள் கொண்டு வர முடியவில்லை. இது ஏன்? கொண்டு வந்த பகுதிக்குள் ஏன் சமரசம்? பிரஞ்சு பற்றிய பிரமையை ஏன் முன்தள்ளினர். என பல கேள்விகளைக் கேட்க முடியும். இவ்விமர்சனம் நியாயமானது அல்லவா? கேள்விகள் கேளுங்கள். அப்போதே அடுத்த படத்தை சிறப்பானதாகத் தரமுயல்வார்கள். உங்கள் பிரச்சனைகளை நெருக்கடிகளை சரியாகத் தரும்படி, உங்கள் பணத்தை செலவு செய்து நீங்கள் பார்க்கும் போது கோருவது நியாயம் அல்லவா? கேளுங்கள் கேள்விகளை. 


பி.இரயாகரன் - சமர்