காசுமீர் மாநிலத் தலைநகர் சிறீநகருக்குத் தென்கிழக்கே 111 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் உருவாகும் பனிலிங்கத்தைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக, 39.88 ஹெக்டேர் வனப்பகுதி நிலத்தை, சிறீஅமர்நாத் ஆலய வாரியத்திற்குச் சில நிபந்தனைகளுடன் கடந்த மே மாத இறுதியில் கை மாற்றிக் கொடுத்தது, காங்கிரசுக் கூட்டணி அரசு.
பல்டால்தோமெயில் வனப்பகுதியில் உள்ள இந்த நிலத்தை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பக்தர்கள் யாரும் முன்வைக்கவில்லை. அம்மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், சிறீ அமர்நாத் ஆலய வாரியத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.கே.சின்ஹாதான் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். ஆளுநருக்கு, பக்தர்கள் மீது அப்படியென்ன கரிசனம் என்று கேட்கிறீர்களா? முன்னாள் உயர் இராணுவ அதிகாரியான எஸ்.கே.சின்ஹாவின் மனமும், மூளையும் ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களால் நிறைந்தது என்பதுதான் இதற்கான காரணம்.
மாநில ஆளுநரே முன்வைத்தபோதும், இந்தக் கோரிக்கை மாநில அரசின் ஒப்புதலைப் பெற முடியாமல், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தூசிப் படிந்து கிடந்தது. எஸ்.கே.சின்ஹாவின் பதவிக் காலம் முடியும் தருணத்தில்தான், அவரின் ஆசை நிறைவேறியது. இந்த ஒப்புதலை அளித்ததன் மூலம் அக்.2008இல் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், ஜம்முவில் உள்ள இந்துக்களின் வாக்குகளை அள்ளிவிட முடியும் எனக் கணக்குப் போட்டது, காங்கிரசுக் கட்சி. ஆளுநர் எஸ்.கே.சின்ஹா மனநிறைவோடு, ஜூன் மாத இறுதியில் காசுமீரை விட்டு வெளியேறிப் போக, காசுமீர் பள்ளத்தாக்கில் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்கள், 1990களில் காசுமீரின் சுயநிர்ணய உரிமைக்காக நடந்த போராட்டங்களுக்கு இணையாக இருந்ததாகத் "தேசிய'ப் பத்திரிகைகள் அரண்டு போய் எழுதியிருந்தன.
இந்திய அரசுக்கு எதிரான காசுமீர் மக்களின் உணர்வை, 2002இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்களாக அறுவடை செய்து கொண்ட மக்கள் ஜனநாயகக் கட்சி, அத்தேர்தல் முடிந்தவுடன் காங்கிரசோடு சந்தர்ப்பவாதக் கூட்டணி வைத்துக் கொண்டு, ஆட்சியில் அமர்ந்தது. அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்தான், சீறிஅமர்நாத் ஆலய நிர்வாகத்திற்கு 39.88 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கிக் கொடுக்க ஒப்புதலும் கொடுத்தார். ஆனால், இந்த ஒதுக்கீடுக்கு எதிராக காசுமீர் முசுலீம்களின் போராட்டம் வீச்சாக எழுந்தவுடன் தேர்தல் பயத்தால் இக்கட்சி பிளேட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டியது.
மக்கள் ஜனநாயகக் கட்சி, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியதோடு நில்லாமல், கூட்டணி ஆட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டது. காங்கிரசுக் கட்சி சட்டசபையில் பெரும்பான்மையை இழந்துவிட்ட நிலையில், நில ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்ததோடு, ஆட்சியையும் பறி கொடுத்தது.
நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை, இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகப் பிரச்சாரம் செய்தது பா.ஜ.க. ''ஒரு 40 ஹெக்டேர் நிலத்தைப் பெறும் உரிமைகூட இந்துக்களுக்கு இல்லையா?'' என்ற கேள்வியைப் போட்டு, "இந்துக்களை' உருவேற்ற முயன்றது, அக்கட்சி. நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, ஜூலை 3 அன்று ''பாரத் பந்தை'' அறிவித்து, நிலப்பிரச்சினையைத் "தேசிய'ப் பிரச்சினையாக்க முயன்றது.
அமர்நாத் பனிலிங்கத்தைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஒரு 40 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு, காசுமீர் முசுலீம்கள் மத அடிப்படைவாதத்தில் மூழ்கிப் போய்விட்டதாகத் தேசியப் பத்திரிகைகள் இப்போராட்டத்தைச் சாடி எழுதியிருந்தன. சமகால காசுமீரின் வரலாற்றை அறிந்திராத சாதாரண வாசகன்கூட, இந்தக் கேள்வியை எழுப்பக் கூடும். பா.ஜ.க.வும், தேசியப் பத்திரிகைகளும் எழுப்பிய இக்கேள்வியில் நியாயம் இருப்பதாகக் கருதக்கூடும். ஆனால், அமர்நாத் பனிலிங்க வரலாறு வேறானது.
···
அமர்நாத் யாத்திரை என்பது ஆண்டாண்டு காலமாக நடந்து வருவது அல்ல; மேல்சாதி இந்துக்கள் தங்களின் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் காசிஇராமேசுவரத்திற்குச் சென்று வருவது போன்ற "புனிதமானதும்' அல்ல. காணாமல் போன தனது கால்நடைகளைத் தேடிப் பனிக் காடுகளில் அலைந்து திரிந்த ஒரு முசுலீம்தான், அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனிக்குன்றை முதலில் பார்த்தார். அந்த முசுலீம் வந்து சொல்லித்தான் இந்துக்கள் இந்த அதிசயத்தைத் தெரிந்து கொண்டனர். அந்தப் பனிகுன்றுக்குப் பனிலிங்கம் எனப் பெயரிட்டு, அதற்கு ஏதோ மகிமை இருப்பதாகக் கருதி, ஆண் டுதோறும் யாத்திரை போய் தரிசித்து வரத் தொடங்கினர்.
இந்தப் பனிலிங்கம் மற்றும் அதைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுக்கும் பொறுப்பு, பேடாகுந்த் பகுதியில் வசிக்கும் முசுலீம் குடும்பங்களிடம் தான் இருந்து வந்தது. 1990களில் காசுமீரில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் வெடித்த பிறகு, அதற்கு எதிரான ஆயுதமாக, இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வாய்ப்பாக, இந்த யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டதோடு, அரசே ஏற்பாடு செய்து நடத்தும் யாத்திரையாக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். கும்பலோ, ஹஜ் யாத்திரையைப் போன்று, அமர்நாத் யாத்திரையை புனிதப்படுத்தும் தில்லு முல்லைச் செய்தது; செய்தும் வருகிறது. பார்ப்பனர்கள் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை, முசுலீம்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டிவிடும் விநாயகர் ஊர்வலமாக மாற்றப்பட்டதைப் போல, அமர்நாத் யாத்திரை, காசுமீர் முசுலீம்களுக்கு எதிரானதாக உருமாற்றப்பட்டது. பக்தி, இந்து பாசிசமாகியது.
கரசேவைக்குத் தொண்டர்களைத் திரட்டி அனுப்புவதைப் போல, ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் யாத்திரைக்கும் "இந்துக்களை'த் திரட்டி அனுப்புவதை ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகவே செய்து வருகிறது. இதனால் பனிலிங்கத்தை வணங்க வரும் "பக்தர்களின்' எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிக் கொண்டே செல்லத் தொடங்கியது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பைக் காரணமாகக் காட்டி, இரண்டு வாரமே நடந்து வந்த அமர்நாத் யாத்திரையின் காலஅளவு, ஒரு மாத காலமாக நீட்டிக்கப்பட்டது. யாத்திரையை நிர்வகிப்பது என்ற பெயரில் தனியாக வாரியம் அமைக்கப்பட்டது. இந்த வாரியத்தின் தலைவராக ஜம்முகாசுமீர் மாநில ஆளுநர் இருப்பார் என்றும்; அதே சமயம் ஆளுநர் இந்துவாக இருந்தால் மட்டுமே வாரியத்தின் தலைவராக முடியும் என்றும் விதிகள் உருவாக்கப்பட்டன. முசுலீம்களின் மேற்பார்வையிலும்; உதவியோடும் நடந்து வந்த அமர்நாத் யாத்திரையை அவர்களிடமிருந்து பறித்து, இந்துமயமாக்கும் சதிகள் 1990க்குப் பிறகு ஒவ்வொன்றாக அரங்கேற்றப்பட்டன.
எஸ்.கே.சின்ஹா, ஜம்முகாசுமீர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, இந்த இந்துமயமாக்கம் மேலும் தீவிரமடைந்தது. ''அமர்நாத் யாத்திரையின் கால அளவை ஒரு மாதத்தில் இருந்து இரண்டு மாதமாக அதிகரிக்க வேண்டும்; பகல்காமிலிருந்து அமர்நாத் செல்லும் பாதையிலும்; பால்தாலில் இருந்து அமர்நாத் செல்லும் பாதையிலும் உள்ள வனப்பகுதி நிலங்களை அமர்நாத் வாரியத்திற்கு ஒதுக்க வேண்டும்; அமர்நாத் வாரியம் அரசின் தலையீடின்றி, சுதந்திரமாக இயங்க வேண்டும்'' என மாநில அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து வந்தார், அவர். அமர்நாத் வாரியத்திற்கு திடீரென 39.88 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக வாரியத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் பதில் அளிக்க வேண்டும் எனச் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிய பொழுது, ''ஆளுநர் சட்டமன்றத்துக்கு கட்டுப்படத் தேவையில்லை'' எனத் திமிராகப் பதில் அளித்தார், எஸ்.கே.சின்ஹா.
ஜம்முகாசுமீர் மாநிலத்தை இந்திய ஒன்றியத்துடன் கட்டாயமாக இணைத்துக் கொண்டபொழுது, ''காசுமீரைச் சேராதவர்கள் அம்மாநிலத்தில் ஒரு துண்டு நிலம் வாங்குதற்குக் கூட அனுமதி கிடையாது'' என்ற உரிமை அளிக்கப்பட்டது. இந்திய இராணுவம் பாசறைகளை அமைப்பது என்ற பெயரில், ஏராளமான நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, இந்த உரிமையை மீறி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், காசுமீர் பள்ளத்தாக்கு மக்களின் பங்கின்றி உருவாக்கப்பட்டுள்ள அமர்நாத் வாரியத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதை, காசுமீரி முசுலீம்கள் இன உரிமை மீறலாகவும், ஆக்கிரமிப்பாகவும் பார்த்தார்கள். பாக். தீவிரவாதிகளை ஒழிப்பது என்ற பெயரில் காசுமீரி முசுலீம்களை வேட்டையாடிவரும் இந்திய இராணுவத்தின் அக்கிரமங்களுக்கு எதிராக காசுமீரி முசுலீம்களிடம் கனன்று கொண்டிருந்த கோபம், இந்த நில மாற்ற உத்தரவால் பற்றி எரியத் தொடங்கியது.
அரசு வெளியிட்ட நில மாற்றம் தொடர்பான உத்தரவில், ''அமர்நாத் வாரியம் அந்நிலத்தில் யாத்திரை வரும் பக்தர்கள் தங்கிச் செல்ல வசதியாகத் தற்காலிகக் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ளலாம்'' என்ற சலுகையை வழங்கியிருந்தது. காசுமீரி முசுலீம்கள் அச்சலுகையை, ஜம்முகாசுமீரில் இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சதித்தனம் நிறைந்ததாகவே பார்த்தார்கள். ''இந்துக்கள் இரண்டு மாதம் மட்டுமே தங்கிச் செல்லுவதால், மக்கள் தொகையில் எப்படி மாற்றம் வரும்?'' என்ற கேள்வியை எழுப்பிய பா.ஜ.க.வும், தேசியப் பத்திரிகைகளும், காசுமீரி முசுலீம்களின் சந்தேகம் ஊதிப் பெருக்கப்படுவதாகக் குற்றஞ்சுமத்தினர்.
இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து சிறுபான்மையினர் ஆகிவிடும் அபாயம் இருப்பதாகப் புளுகிவரும் பா.ஜ.க; காசுமீர் முசுலீம்களின் சந்தேகத்தைக் குற்றஞ்சுமத்துவது வேடிக்கையானது. இதுவொருபுறமிருக்க, காசுமீர் பிரச்சினையைத் தீர்க்க, முசுலீம்கள் நிறைந்த காசுமீர் பள்ளத்தாக்கையும்; இந்துக்கள் நிறைந்த ஜம்முவையும் மற்றும் லடாக் பகுதியையும் தனித்தனியாகப் பிரித்து, காசுமீரைக் கூறு போட்டுவிடலாம் என்ற திட்டம் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த பொழுது பரிசீலிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்ம், அமெரிக்காவும் இணைந்து உருவாக்கிய இத்திட்டத்தின் அடிப்படையில் பார்த்தால், காசுமீர் முசுலீம்களின் சந்தேகத்தைத் தேவையற்ற அச்சம் என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
அமர்நாத் வாரியத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி காசுமீரி முசுலீம்கள் போராடிக் கொண்டிருந்த பொழுதுதான், இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரையும் தொடங்கியது. இப்போராட்டத்தை ஒடுக்க போலீசும், துணை இராணுவப் படைகளும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு காசுமீரி முசுலீம்கள் கொல்லப்பட்டனர். எனினும், இப்போராட்டத்தால் அமர்நாத் யாத்திரைக்கோ, அதில் கலந்து கொண்ட "இந்துக்களுக்கோ', முசுலீம்களாலோ, முசுலீம் அமைப்புகளாலோ சிறு இடையூறும் ஏற்படவில்ல. வழக்கம்போலவே, மலைமேல் ஏற முடியாத பக்தர்களைப் பல்லக்கில் தூக்கிச் செல்வது தொடங்கி, "இந்து' பக்தர்களுக்கு உணவு, தங்குமிடம் அளிப்பது உள்ளிட்டு எல்லாவிதமான உதவிகளையும் காசுமீரி முசுலீம்கள் செய்துகொடுத்தனர். காசுமீரி முசுலீம்கள் நடத்திய போராட்டம் மதவெறியின் அடிப்படையில் நடைபெறவில்லை என்பதை அமைதியாக நடந்த அமர்நாத் யாத்திரையே நிரூபித்து விட்டது.
ஆனால், காசுமீர் மக்களின் போராட்டத்திற்கு எதிராக ''பாரத் பந்த்'' நடத்திய பா.ஜ.க. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜம்முகாசுமீர் கலைக்கூடத்தை அடித்து நொறுக்கியது; மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள இந்தூர் நகரில், ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் முசுலீம்களின் குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்தூர் முசுலீம்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முயன்றபொழுது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் இறந்துபோனார்கள்.
சிறீ அமர்நாத் ஆலய வாரியத்திற்கு அளிக்கப்பட்ட நிலம் ரத்து செய்யப்பட்டதை, காசுமீரி முசுலீம்கள் இந்துக்களின் மீதான வெற்றியாகப் பார்க்கவில்லை. சுயநிர்ணய உரிமையை மறுத்து வரும் இந்திய அரசின் மீதான வெற்றியாகவே கருதுகிறார்கள். அமர்நாத் யாத்திரை பக்தியின் அடிப்படையில் நடைபெறுவதாகக் கருதும் "இந்துக்கள்', யாத்திரையில் ஆர்.எஸ்.எஸ். தலையீடு செய்வதை எதிர்க்க வேண்டும்; பேடாகுந்த் முசுலீம்களின் உரிமையை மறுத்து அமைக்கப்பட்டுள்ள வாரியத்தைக் கலைக்கக் கோர வேண்டும். இது அவர்களின் "கடமை' மட்டுமல்ல; இரு நூற்றாண்டுகளாக அமர்நாத் யாத்திரை எவ்விதத் தடங்கலும் இன்றி நடைபெறுவதற்கு பொறுப்போடு உதவி வரும் காசுமீரி முசுலீம்களுக்குச் செலுத்தும் நன்றிக் கடனும் ஆகும்.
· செல்வம்