23/07/08 அன்று சென்னை, பெரம்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

நிகழ்ச்சியல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, கே.பி. சுந்தராம்பாளுக்கும் இதுவே நூற்றாண்டாக இருப்பதனால் அவர்களுக்கும் விழா எடுக்கவிருப்பதாக அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் அறிவித்தார். இவர்களோடு கே.பி. சுந்தராம்பாள்? எங்கோ இடிக்கிறதே.

 

இவர்கள் காந்தியையும் பகத்சிங்கையும் கொண்டாடுவது போல, பாரதியையும் பெரியாரையும் உயர்த்திப்பிடிப்பதுபோல, எம்.ஆர். ராதாவையும், கே.பி. சுந்தராம்பா ளையும் இணைத்து விழா எடுக்கிறார்களோ என்னவோ?

-கலைவேந்தன்.

கே.பி. சுந்தராம்பாள் தன் காலம் முழுவதும் பார்ப்பன சேவகத்திலேயே முடித்துவிட்டார். அவருடைய ‘பார்ப்பன சேவை’ ஒரு சாதரண இந்து பக்தரை போன்ற அறியாமையால் அமைந்ததல்ல. அது மிக சரியாக திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக நடந்தது. அதிலும் குறிப்பாக நீதிக் கட்சி எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கம் மற்றும் பெரியார் எதிர்ப்பு இவைகளுக்காகத்தான் அவருடைய திறமை பயன்பட்டது.

 

சத்தியமுர்த்தி அய்யர் என்கிற ஒரு ஜாதி வெறி பார்ப்பனரின் ஊதுகுழலாக செயல்பட்டவர்தான் சுந்தராம்பாள். கிட்டப்பா என்கிற பார்ப்பனருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டு அவருடன் இணைந்து தமிழகம் முழுவதும் தேசப்பக்தி பாடல்கள் என்ற போர்வையில் நீதிக்கட்சி எதிர்ப்புப் பாடல்களை பாடினார்.

 

தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் கிட்டப்பாவின் முதல் குடும்பத்தாரிடம் இழந்தார். வறுமையில் சிக்கினார். மீண்டும் பார்ப்பன சேவையில் ஈடுபட்டு வசதியான நிலைக்கு உயர்ந்தார்.

 

அவ்வையார் திரைப்படத்தில் நடிப்பதற்கு, ஜெமினி எஸ்.எஸ். வாசன் கே.பி. சுந்தராம்பாளுக்கு அதுவரை தமிழ் சினிமாவில் யாருக்கும் தராத ரூ. 1 லட்சம் தந்தார். அந்த தொகை கே.பி. சுந்தராம்பாள் அவர்களின் திறமைக்குத் தரப்பட்டத் தொகை அல்ல. அவரின் பெரியார் எதிர்ப்புக்கு தரப்பட்டத் தொகை. ஆனாலும் அதே எஸ்.எஸ். வாசனின் ‘ஆனந்த விகடன்’ ஒருமுறை கே.பி.எஸ் அவர்களை ஜாதி பெயர் சொல்லி கேவலப்படுத்தி திட்டியபோது, பெரியார் ஒருவர்தான் ஆனந்த விகடனை கண்டித்து, சுந்தராம்பாளை ஆதரித்தார்.

 

நடிகவேள் எம்.ஆர். ராதா பெரியாரின் போர்வாளாக தமிழக மேடைகளில் சுழன்று கொண்டிருந்தபோது, அவருடைய நாடகத்தை எதிர்த்து தனி சட்டம் கொண்டு வந்து, தடை செய்த கும்பல் கே.பி. சுந்தராம்பாளை ஆதரித்த கும்பல்.

 

ஆனாலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ‘சுந்தராம்பாள் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்’, எந்த அரசியல் காரணங்களும் அற்று ‘பிரபலமான கலைஞர்’ என்கிற முறையில் கொண்டாடக் கூடியதாக இருக்கும் என்று உணர்கிறேன்.

 

இது போன்ற தேவஷங்களை அல்லது திதிகளை ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் போன்ற `மனமகிழ்` மன்றகங்கள்தான் கொண்டாடும். அது போல் ஒரு மன்றமாகத்தான் இருக்கிறது முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

 

ஏற்கனவே இந்த மனமகிழ்மன்றத்தார், ஒரு இந்து தீவிரவாதி எடுத்த ‘பம்பாய்’ என்கிற ஒரு தேச விரோத படத்துக்கு பாராட்டு விழா நடத்தியிருக்கிறார்கள்.

 

தலைவர் ஸ்டாலினை மிக கேவலமாக எழுதிய ஆபாச எழுத்தாளன் ‘மதன்’ என்பவருக்கு பாராட்டு விழா நடத்தியிருக்கறார்கள்.

 

ஆக, இவர்கள் கே.பி. சுந்தராம்பாளுக்கு விழா கொண்டாடுவது தவறில்லை.

 

நடிகவேளுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதுதான் தவறு.

 

ஆர்.எஸ்.எஸ்.காரன் அம்பேத்கர் விழா கொண்டாடுவது போல.

 

http://mathimaran.wordpress.com/2008/08/04/article104/