03242023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

சிரிப்பு—சிறந்த மருந்தா

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் எந்பார்கள். தில்லியில் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஜப்பானியப் பூங்காவில் காலையில் நடைபயிலச் செல்லும் போது மக்கள் ஆங்காங்கே குழுவாக பிரிந்து நின்று, அலை அலையாகச் சிரிப்பதை கண்டிருக்கிறேன். பெய்ச்சிங்கில் கூட, காலை நடைபயிலும் மக்கள் ஓ வென்று வாய்விட்டு கத்துவதையும் இது ஒரு அஞ்சல் ஓட்டம் போல ஒவ்வொரு பகுதியில் இருந்து எழுவதையும் கண்டிருக்கிறேன்.

 

சிரிப்பு ஒரு சிறந்த மருந்தா என்பது இதுவரை நிரூபிக்கப்பட வில்லை. ஆனால் நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஜப்பானிய விஞ்ஞானி ஒருவர்.

 

எழுப்பது வயதான மரபணு விஞ்ஞானி காஷுவோ முரக்காமி, சிரிப்பதன் மூலம், மனிதனின் மரபணுக்களைத் தூண்டிவிட முடியும் என்கிறார். தமது இந்த ஆராய்ச்சியில் அவருக்கு உறுதுணையாக இருப்பது நகைச்சுவை நடிகர்கள்.

 

மரபணுக்கள்-அதாவது ஜீன்கல் பொதுவாகப் பிரிக்க முடியாதவை. ஆனால், தொன்னூறு விழுக்காட்டுக்கும் அதிகமான மரபணுக்கள் மனித உடம்பில் முடங்கிப் போய், புரதங்களை உற்பத்தி செய்வதில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதில்லை. இத்தகைய மரபணுக்களை உசுப்பிவிட்டால் நோய் தீர்க்கும் புரதங்கள் உடம்பில் உற்பத்தியாகும் என்கிறார் முரக்காமி மரபணுக்களை உசுப்பி விடுவது எப்படி?

 

சிரிக்க வைத்தால், ஒரு மனிதனின் டி என் ஏ மரபணு வரிசையில் சக்தியைத் தூண்டி விட்டு நோயைக் குணப்படுத்தலாம் என்பது, ஜப்பானிய விஞ்ஞானியின் நம்பிக்கை. சிரிப்பின் மூலம் ஜீன்களை இயங்கச் செய்யவும் உறங்க வைக்கவும் முடியுமானால், அது இந்த நூற்றாண்டின் நோபல் பரிசுக்குரிய கண்டுபிடிப்பாக இருக்கும் என்கிறார்.

 

இதற்கான முயற்சியை மூன்றாண்டுகளுக்கு முன்பே, யோஷிமோட்டோ கோக்யோ என்னும் கேளிக்கை நிறுவனத்துடந் சேர்ந்து முரக்காமி தொடங்கிவிட்டார். முதலில், சர்க்கரை நோய் கண்ட நோயாளிகளை இரண்டு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவை நகைச்சுவை காட்சியைக் காணவும், இன்னொரு குழுவை அலுப்பூட்டும் ஒரு விரிவுரையாளரின் வகுப்பறைக்கும் அனுப்பினார். இரண்டு நாட்கள் இந்தப் பரிசோதனை நடந்த பிறகு, நகைச்சுவை நிகழ்ச்சிக்குச் சென்ற சர்க்கரை நோயாளிகளின் குளுக்கோஸ் அளவு, வகுப்பறையில் உட்கார்ந்திருந்தவர்களின் குளுக்கோஸ் அளவை விடக் குறைந்திருந்தது.

 

இப்போது, உசுப்பிவிடக்கூடிய 23 மரபணுக்கள் எவை எவை என்பதைக் கண்டுபிடித்துள்ளார் முரக்காமி. இவற்றில் 18 மரபணுக்கள் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கி, சமிக்ஞைகளை அனுப்பி, செல் சுழற்சியைத் தூண்டுபவை. எஞ்சிய 5 மரபணுக்களின் பணி என்ன என்பது, இன்னமும் உறுதிப்படுத்தப்பட வில்லை.

 

இந்த ஆராய்ச்சி வெற்றி பெறுமானால், எப்போதாவது ஒரு நாள் டாக்டர் மருந்துச் சீட்டில், மருந்துக்கு பதிலாக, நகைச்சுவைப்படம் பார்க்க பரிந்துரைக்கக் கூடும். அப்படியானால், நம்ம வடிவேலு, விஜேக், சார்பி போன்ற நடிகர்களின் காட்டில் மழைதான்.

 

ஒரு விஷயம் தெரியுமா?நான் சிறுவனாக இருந்த போது, நல்ல தம்பி என்றொரு சினிமா வந்தது. அதில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சதிகாரர்களின் சாகசச்சிரிப்பு, சங்கீதச் சிரிப்பு என்று பல வகை சிரிப்புக்களை பாட்டாகப் பாடிக் காட்டியிருக்கிறார்.

 

இனி என்ன?சிரியுங்கள். சிரியுங்கள். சிரித்துக் கொண்டே இருங்கள்.

 

http://tamil.cri.cn/1/2006/04/10/இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.