நாரி உழைவு என்பது முதுகுப்புறமாக உள்ள கீழ் நாரிப்பகுதியில் தாங்கமுடியாத நோவு அல்லது அசௌகரியம் ஏற்படுதல். இவ்வகை நோய் திடீரென்று அதிக வேதனையை கொடுப்பதாக உண்டாகி மூன்று மாதங்களிற்கும் மேலாக நீடிக்கக்கூடும். பொதுவாக நாரி உழைவானது பாரம் தூக்கி உடல் உழைப்பை அதிகம் பயன்படுத்தும் இளவயதினருக்கு ஏற்படும். நாரி உழைவு ஏற்படுவதற்கான காரணங்கள்.


பொதுவாக சொல்லப்போனால் இந்நோய் உண்டாவதற்கான சரியான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாக நழுவின முள்ளந்தண்டு தட்டுப்பகுதி உள்ளவர்களுக்கும் (slip disk) சுலபமாக உடையக்கூடிய பலமற்ற என்புப்பகுதியை கொண்டவர்களுக்கும் (osteoporosis) அசாதாரணமாக வளைந்த முள்ளந்தண்டை உடையவர்களுக்கும் (scoliosis) முள்ளந்தண்டில் சதை வளர்ச்சியால் ஏற்பட்ட கட்டியுள்ளவர்களுக்கும் (tumours) நாரி உழைவு ஏற்படும்.

 

இந் நோயின் அறிகுறிகள்


முதுகுப்புற நாரிப்பகுதியில் நோவு உண்டாகி கீழ் பின்புறத்திற்கும் தொடைப்பகுதிக்கும் சில வேளைகளில் தொடையும் இடுப்பும் சேருமிடத்திற்கும் (groin) பரவும்.


முள்ளந்தண்டின் அசைவு கட்டுப்படுத்தப்பட்டுவிடும். அதாவது முன்புறமாக குனியவோ அல்லது பின்பக்கமாக வளையவோ முடியாதிருக்கும்.

 

முள்ளந்தண்டை சுற்றியுள்ள தசைப்பகுதி விறைப்பான அசையமுடியாத முதுகுப்பகுதியை உருவாக்கிவிடும்.

 

தூங்கமுடியாத வேதனை முதுகுப்புறத்தை ஒருபக்கமாக பிடித்து எமது முதுகின் தோரணையே மாற்றிவிடும்.

 

இவ் வேதனை சில வேளைகளில் தொடைப்பகுதியில் அல்லது கால்பகுதியில் அல்லது முதுகுப்பகுதியில் விறைப்பான உணர்வை (tickling sensation) ஏற்படுத்தும்.


இந் நோய் ஆபத்தான நிலையை அடைவதற்கான அறிகுறி


திடீரென்று உங்களால் சிறுநீர் கழிப்பதையோ மலம் கழிப்பதையோ கட்டுப்படுத்த முடியாதிருந்தாலோ அல்லது முதுகுப்பக்க கீழ்பகுதியோ கால்பகுதியோ உணர்வற்று இருந்தாலோ உடனடியாக உங்கள் மருத்துவரையோ அல்லது அவசர சிகிச்சைப் பிரிவையோ நாடுதல் சிறந்ததாகும்.

 

இந் நோயுள்ளவர்கள் வீட்டிலிருக்கும் போது கையாள வேண்டிய வழிவகைகள்
நோவை குறைக்கக்கூடிய குளிசைகள் எடுத்தல்

 

சாதாரணமாக செய்யும் வேலைகளை செய்து சுறுசுறுப்பாக இருக்க முயற்சித்தல்

நீந்துதல் அல்லது வெம்மையான இளஞ் சுட்டு நீருள்ள தடாகத்தில் நீராடுதல்.

 

ஓய்வெடுக்கும் பொழுது அல்லது நித்திரை கொள்ளும் பொழுது உறுதியான சமமட்டமான கட்டிலையோ இயலுமாயின் தரையையோ உபயோகித்தல் வேண்டும்.

 

கதிரையில் இருக்கும் பொழுது முதுகுப்பகுதியை நேராக வைத்து இருத்தல் நன்று. பதிவான ஆசனத்தில் இருத்தலை தவிர்ப்பதுடன் பாரம் தூக்குதலை தவிர்ப்பதும் சிறந்ததாகும்.

 

இறுதியாக நாம் மனதில் கொள்ள வேண்டியது என்னவெனில் நாரி நோவானது மிகவும் அரிதாகவே கடுமையான நிலையை தோற்றுவிக்கும்.


பொதுவாக சில நாட்களில் இந்நோவு குறைவடைந்து விடும்.

 

http://www.tamilhealth.net/index.php?option=com_content&task=view&id=2&Itemid=92