நீங்கள் நினைப்பதை என்னால் அறிந்துகொள்ள முடியும் என்று உங்களை பார்த்து யாராவது சொன்னால் முதலில் நீங்கள் அட ஏதோ வேடிக்கை வித்தை விளையாட்டு என்று நினைப்பீர்கள். இல்லையென்றால், அட இதென்ன வம்பா போச்சு, ஏடாகூடமாக எதையாச்சும் அந்த நபர் சொல்லித் தொலைக்க, நமக்கு எதுக்கு தொல்லை என்று நினைத்து, அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீங்க வந்த வழிய பார்த்து போங்க என்று அவரை அனுப்பி வைப்பீர்கள். பொதுவாக இதைத்தான் நம்மில் பலர் செய்வோம். ஆனால் இப்படி ஒருவர் நினைப்பதை மற்றவர் சொல்லிவிட முடியும் என்பதில் நமக்கும் ஒரு சந்தேகம் கலந்த நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. சந்தேகம் கலந்த நம்பிக்கை, இரண்டு முரண்பட்ட வார்த்தைகள் ஒன்றாய் பொருந்திய சொற்றொடர். இறை சக்தி இருக்கிறதா இல்லையா என்பதில் தொடங்கி, மனிதர்களிடையே பல விடயங்களில் இப்படித்தான் சந்தேகம் கலந்த நம்பிக்கை இருக்கிறது. இக்கரையிலும் இல்லாமல் அக்கரையிலும் இல்லாமல் எக்கரையும் எமக்கு அக்கறையில்லை என்பதாக இருப்போரும், காற்று வீசும் பக்கமாக சாய்கின்றதாக இருப்போரும்தான் உலகில் அதிகம். தத்துவம் பேச இப்போது நேரமில்லை எனவே நீங்கள் நினைப்பதை ஒருவரால் சொல்ல முடியுமா என்ற பிரச்சனைக்கு வருவோம்.

 

நினைப்பதை சொல்வது எனும்போது...நீங்கள் ஒரு எண்ணை நினைக்க அதை இரண்டால் பெருக்கி, உடன் 50 சேர்த்து என்ற ரீதியிலான கணக்கு வித்தை முதற்கொண்டு பையா...ஐயா...கருப்புச் சட்டை போட்டிருப்பவர் சட்டைப்பையில் என்ன இருக்கு...எலுமிச்சம் பழமிருக்கு என்பதாக அமையும் மோடி மஸ்தான் வித்தை வரை நமக்கு நினைவுக்கு வரும். அதெல்லாம் வேடிக்கையான வித்தைகள். விவகாரமான வித்தையைத்தான் இன்றைக்கு நாம் அறிய இருக்கிறோம். நீங்கள் அடுத்த வாரம் உங்கள் மனைவிக்குத் தெரியாமல் நண்பர்களோடு ஒரு மகிழ் உலாவுக்கு திட்டம் போடுகிறீர்கள், அந்தத் திட்டம் பற்றி நீங்கள் வாய் திறந்து உங்கள் நண்பர்களிடம் தெரிவிப்பதற்கு முன் உங்கள் மனைவி, என்ன ராசா, என்ன சங்கதி என்று விளக்கமாக உங்கள் எண்ணங்களை புட்டு புட்டு வைத்தால் எப்படியிருக்கும் ஏய்யா எங்க நிம்மதியை கெடுக்கத்தான் இந்த நிகழ்ச்சியோ என்ற குரல் எங்கிருந்தோ கேட்கிறது.

 

ஆனால் இத்தகைய நினைப்பதை அப்படியே அச்சரம் பிசகாமல் சொல்வது என்பது சாத்தியமே என்கிறார்கள். குறி சொல்லுதல் அல்லது இறைவாக்கு உரைத்தல் என்பதாக உங்கள் சிந்தனை அலை மோதவேண்டாம். அறிவியல் ரீதியாக இப்படி ஒருவர் நினைப்பதை, இதைச் செய்யவேண்டும் என்று மனதளவில் எண்ணுவதைக்கூட சொல்வது சாத்தியம் என்கின்றனர் நரம்பியல் அறிவியலாளர்கள்.

 
உலக அளவில் முன்னணி நரம்பியல் அறிவியலாளர்கள் சிலர் இணைந்து இப்படி ஒரு மனிதரின் மூளைக்குள்ளாக நுழைந்து அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்துகொள்ளக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்களாம். ஒரு மனிதர் ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாகவே அச்செயல் பற்றிய அவரது எண்ணத்தை அறியக்கூடிய இந்த ஆய்வு மனிதர்களின் மனதை அல்லது எண்ணங்களை அறியும் அறிவியல் ரீதியான முயற்சிகளில் ஒரு முக்கிய முன்னேற்றம், ஒரு பிரச்சனைக்குரிய முன்னேற்றம் என்று கூறுகின்றனர். எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் எப்படியான பயன்பாட்ட்ற்கு உதவப்போகிறது என்பதில் சில நன்னெறி சார், தார்மீக சிக்கல்கள் எழுகின்றன. ஒருவரது எண்ணத்தை மற்றவர் அறிந்துகொள்வது எந்த விதத்தில் அவரது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் என்பதும், இப்படியான தொழில்நுட்பம் அடிப்படை தனிமனிதச் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் என்பதுதான் இந்த நன்னெறிசார் குழப்பம்.


மனிதர்கள் சிந்திக்கும் போது எத்தகைய மாற்றங்கள் மூளையில் ஏற்படுகின்றன என்பதை அறிய உயர் நிலை வரிவியை ஆங்கிலத்தில் ஸ்கேனர் என்று சொல்வார்களே, அக்கருவியை பயன்படுத்தினர். அர்த்தமுள்ள ஒரு சிந்தனையாக மாற்றம்பெறுவதற்குள் மனிதர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள், செயல்பாடுகளின் பாங்கை கண்டறிந்து, அதன் மூலம் இப்படியான மூளை செயல்பாடுகளின் பாங்கு அம்மனிதரின் இவ்வாறான நடவடிக்கை அல்லது செயலோடு தொடர்புடையது என்பதை அறிவியலர்கள் கண்டறிய முடிகிறது.

 

இருட்டில் ஒரு சுவற்றில் எழுதப்பட்ட வார்த்தைகளை மின்பந்தம் கொண்டு வாசிப்பது போல், மூளையைச் சுற்றித் வரிவியைக் கொண்டு அதாவது ஸ்கேனரைக் கொண்டு தேடி, கண்டுபிடிப்பதை போன்றது இந்த தொழில்நுட்பம் என்கிறார் இந்த ஆய்வினை முன்னின்று நடத்திய ஜெர்மன் நாட்டு மேக்ஸ் பிளாங்க் மனித எண்ணங்கள் மற்றும் மூளை அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஜான் டைலன் ஹெய்ன்ஸ். லண்டனின் பல்கலைக்கழகக் கல்லூரி, ஆக்ஸ்ஃப்ர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நரம்பியல் அறிவியலாளர்களுடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டார் ஜான் டைலன் ஹெய்ன்ஸ்.


ஜான் டைலன் ஹெய்ன்ஸ் குழுவினர் மேற்கொண்ட இந்த ஆய்வு, பொய் சொல்வது, வன்முறைச் செயல், இனவாத சிந்தனை உள்ளிட்ட ஒரு மனிதனின் செயலுக்கு முன்பான சிந்தனையை உணர்த்தும், முன்னறிவிக்கும் அம்சமாக மாறிய மூளை வரைபட நுட்பத்தின் மேலதிக ஆய்வாகவே அமைந்தது. இந்த அண்மைக்கால ஆய்வு நரம்பியல் சார் அறிவியலின் வேகமான முன்னேற்றைத்தை கோடிட்டுக் காட்டுவதோடு, இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படும் என்ற ஆர்வத்தினால் எழும் தார்மீக குரலுக்கு விளக்கமும், பதிலும் தர அறிவியல் உலகை நிர்பந்தித்துள்ளது.

 

இந்த மூளை வரைபட நுட்பம், அதாவது மூளையின் அதிர்வுகள் மாற்றங்களைக் கொண்டு ஒரு மனிதரின் சிந்தனையை அறிந்துகொள்ளும் தொழில்நுட்பம் ஒழுங்கமைவோடு, நெறிப்படுத்தப்பட்டால் அது குற்றவாளிகளை விசாரிக்கவும், சில குற்றங்கள் நிகழாமல் தவிர்க்கவும் உதவும். ஆங்கில திரைப்படங்கள் இதுபோன்ற தொழில்நுட்பங்களை உட்புகுத்திய கதைகளை ஏற்கனவே திரையில் காட்சிகளாக்கியுள்ளன. ஆனால் இவையெல்லாம் சாத்தியமா நடைமுறையில் சாத்தியமா என்பதுதான் கேள்வி. இந்த தொழில்நுட்பங்கள் எல்லாம் புதிது புதிதாக தோன்றியவண்ணம் உள்ளன. இந்த வேளையில் இவை தொடர்பான தார்மீக, நெறிமுறைகள் சார்ந்த விவாதங்களும், ஆலோசனைகளும் அவசியம். இல்லையென்றால் என்றாவது ஒரு நாள் இந்த தொழில்நுட்பங்கள் நடைமுறைக்கு வந்து ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த நாம் கைகளை பிசைந்தபடி நிற்க வேண்டியிருக்கும் என்கிறார் பேராசிரியர் ஜான் டைலன் ஹெய்ன்ஸ்.

 

http://tamil.cri.cn/1/2007/02/26/64@49282_2.htm