நிலத்தை உழுது பண்படுத்தி சீராக்கி விதைக்கின்ற விவசாயி பயிரை பேணி வளர்க்க தகுந்த வழிமுறைகளை கையாளுகின்றார். உழுதல், பயிரிடுதல், உரமிடுதல், நீர் பாய்ச்சுதல் போன்ற பல வழிகளில் பயிரை பாதுகாத்து பராமரிக்கிறார். அவர் மேற்கொள்கின்ற இந்த வழிமுறைகளில் ஏதாவது குறைவு ஏற்பட்டால் அது பயிரின் ஒட்டுமொத்த விளைச்சலையும் பாதிக்கும். அதுபோல வியாபாரத்தில் ஈடுபடுகின்ற வணிகர் தன்னுடைய பொருட்கள் சென்றடைய வேண்டிய இலக்கு மக்களை குறிவைத்து விற்க கூடிய வியாபாரா உத்திகளான, தனது வணிக சின்னத்தின் பெயரை மக்கள் மனதில் பதிய செய்வது, சலுகை விலை விற்பனை, விளம்பரங்கள், தவணை முறை கட்டணம் மற்றும் தொடந்த சேவை ஆகியவற்றில் ஈடுபடுகின்றார். இந்த உத்திகளில் காணப்படுகின்ற அல்லது நடைமுறையில் ஏற்படுகின்ற குறைகள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனையை பாதிக்கும்.

 

இவ்வாறு எல்லாவித வளர்ச்சி மற்றும் முன்னேற்ற நிலைகளிலும் இத்தகைய நடைமுறைகளை நாம் பார்க்கின்றோம். இந்த வளர்ச்சி போக்கில் ஏற்படும் நிறைகள் அல்லது குறைகள், வளர்ச்சி நிலைகளில் நிறைகள் அல்லது பாதிப்புகளை உருவாக்கும். பயிர்களை அல்லது வியாபாரத்தை வளப்பதற்கே இப்படிப்பட்ட முறைமைகள் இருக்கும்போது மானிடராகப் பிறத்தல் அரிது என்று போற்றப்படும் மனிதகுலத்தில், குழந்தைகளை வளர்க்க எவ்வளவு அக்கறையும் அறிவும் தேவைப்படும். ஆனால் உண்மையான நிலை என்ன? திருமணமானவர்கள் காலப்போக்கில் கற்றுக்கொள்கின்ற எளிதான முறையாக தான் இன்று வரை குழந்தை வளர்ப்பு இருந்து வருகிறது.

 

உயிர்களின் பிறப்பிடமாக இருக்கும் பெண்ணிடம் கரு உருவாக காரணமாக இருந்த சூழ்நிலைகள் கூட கருவின் வளர்ச்சியை பாதிக்கும் என்று எண்பித்த ஆய்வுகள் நம்மிடம் உண்டு. கரு உருவாகி வளர்ச்சியடைகின்ற காலக்கட்டத்தில் தாய் அடையும் அதிர்ச்சி, சோர்வு, துக்கம், கவலை, மனஅழுத்தம் ஆகியவை கருவின் வளர்ச்சியை பாதிப்பதோடு, குறைமாத பிறப்பையும் உருவாக்கலாம். குழந்தை பிறந்த பி்னனர் தாயின் அலுவலக பணியிலான நிர்பந்தங்கள் பாலூட்டுவது, நன்கு பராமரிப்பது போன்ற குழந்தை வளர்ப்பிலான அடிப்படைகளை கூட கட்டுபடுத்துகின்றன.

 

நலமான குழந்தையை இந்த சமூகத்திற்கு வழங்கும் விதமாக அதனை நல்ல முறையில் பேணுவதற்கு மூன்று மாதமாக இருக்கக்கூடிய மகப்பேறு விடுமுறை போதாது ஆறுமாதமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது. ஒரு குழந்தை தனது ஐந்து வயது வரை கற்றுக் கொள்ளுகின்ற அனைத்தையும் தனது அடிப்படை அறிவாக அல்லது பதிவாக கொள்கிறது. குழந்தையின் இக்காலப்பகுதி பெரும்பாலும் பெற்றோரிடத்தில் செலவிடப்படுவதால் நலமான குழந்தைகளை நலமான பெற்றோர் தான் கொடுக்க முடியும் என்று அனைவரும் எண்ணுகின்றனர். உடல் மற்றும் உள்ள ரீதியில் நலமான பெற்றோர் நிச்சயமாக நலமான குழந்தையை இந்த சமூகத்திற்கு வழங்குவர். அப்படியானால் நலமற்ற பெற்றோர்.........?. அதனை சொல்வதற்கே அவசியமில்லை. அதிலும் மன அழுத்தம் கொண்ட பெற்றோரை கொண்டுள்ள குழந்தைகளின் நிலை மேலும் மோசமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

 

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மனஅழுத்தம் கொண்ட பெற்றோர் தங்களுடைய உடல் நலத்தை கேடுப்பதோடு தங்களின் குழந்தைகளிடமும் உடல்நல சீர்கேட்டை உருவாக்குகின்றார்கள். மனஅழுத்தம் அதிகம் கொண்ட பெற்றோரின் குழந்தைகள் இதர குழந்தைகளை விட அதிகமாக நோய்வாய்படுகிறார்கள் என்று புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. மனஅழுத்தம் ஒருவருடைய உடல் நலத்தை கெடுப்பதோடு மாரடைப்பு போன்ற உடல் நலக்குறைவுகளை ஏற்படுத்துகின்றது. அத்தகைய பெற்றோரின் மனநிலை குழந்தைகளின் உடல் நலத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது என்பது தான் நியுயார்க்கிலுள்ள ரோச்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

 

ஐந்து முதல் பத்து வயது வரையான நலமான 170 குழந்தைகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்த குழந்தைகளின் உடல் நலத்தை மூன்று ஆண்டுகளாக கண்காணிக்க பெற்றோரை ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டனர். குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற உடல்நலக்குறைவின் அறிகுறிகளை ஒவ்வொரு வாரமும் பதிவு செய்யவும், அவர்கள் உடல் நலக்குறைவோடு இருக்கும் போது உடல் வெப்பத்தை குறித்துக் கொள்ளவும் பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். ஆறு திங்கள் காலத்திற்கு ஒரு முறை பெற்றோர்கள் உடல் மற்றும் உளநல ஆய்வுச்சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.