Language Selection

"எனது கவிதைகளின் உள்ளடக்கம் இன்றைய ஈழத் தமிழ்ச் சமூகத்தின் இருப்பையும் தவிப்பையும் அதன் விடுதலைக்கான தேவையையும் பாதையையுமே கவனத்திற்குட்படுத்துகிறது."

என்ற கவிஞர் சி.சிவசேகரத்தின் முன்னுரை வரிகளோடு வெளிவருகின்ற "கல்லெறி தூரம்" கவிதைத் தொகுதி ஈழத்துக் கவிதையுலகின் தரத்தையும் செழுமையையும் இனங்காட்டி நிற்கின்ற புதிய வரவு.

ஈழத்தின் மிக முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான சி. சிவசேகரம் அவர்களது புதிய கவிதைத் தொகுதி "கல்லெறி தூரம்". இது இவரது எட்டாவது கவிதைத் தொகுதி. ஈழத்து கவிதை உலகின் தவிர்க்கவியலாத அம்சங்களில் ஒன்றாக இவரது கவிதைகள் இருக்கின்றன. உண்மைகளை நெஞ்சுரத்தோடு நிமிர்ந்து சொல்லக் கூடியவர் கவிஞர் சிவசேகரம். இவரது கவிதைகளும் அப்படியே. இவரது "கல்லெறி தூரம்" என்ற புதிய கவிதைத் தொகுதியில் மொத்தமாக 27 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன.

 


இக்கவிதைகளில் பெரும்பாலானவை இன்றைய காலச் சூழலை பிரதிபலிப்பன. இன்றைய காலச் சூழலில் மக்களின் வாழ் நிலையை அவலத்தை, அது சார் அரசியலை, அதன் பின்புலத்தை என எல்லாவற்றையும் தொட்டு நிற்கின்றன இவரது கவிதைகள். இக்கவிதைகள் ஒரே சொல்லல் முறையில் அல்லாமல் பல்வேறு வடிவங்களில் பல்வேறு வெளிப்பாட்டு முறைகளில் சொல்லப்பட்டிருப்பது இக்கவிதைகளின் சிறப்பு. பாடல்களாக, அங்கதச் சுவையுடைய செய்திகளாக, தற்குறிப்பேற்றமாக உவமையாக என எல்லாமாகவும் எல்லாவற்றைப் பற்றியும் இவரது "கல்லெறி தூரம்" தொகுதியிலுள்ள கவிதைகள் பேசுகின்றன. ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரது கவிதைத் தொகுதியொன்று வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது. அதற்கான காரணத்தை தனது முன்னுரையிலேயே சொல்கிறார் கவிஞர்:

"கடந்த பத்தாண்டுகளில் என் கவிதை முயற்சிகள் பெருமளவுந்; தமிழாக்கங்களாகவே இருந்தன. அதற்குச் சிறப்பான நோக்கமெதுவுமோ தூண்டுதலோ இருந்ததாக என்னாற் கூற இயலாது. எனினும் ஈழத்துத் தமிழ்க் கவிதைத் துறையில் நீண்டகாலமாக இருந்து வருந்தேக்கத்தை உடைக்கத் தமிழாக்கங்களின் வருகை உதவுமென்பது என் நம்பிக்கை."


இந்தக் கவிதைகளை வாசிக்கின்ற போது ஏற்படுகின்ற வாசிப்பு அனுபவம் அலாதியானது. வாசிக்க வாசிக்க மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் மொழி நடையும் அங்கதமும் தரும் வாசிப்பு அனுபவம் உண்மையிலேயே அருமை. இந்த வாசிப்பு அனுபவத்தை அனுபவிப்பதற்காகவே கல்லெறி தூரத்தை வாசிக்கலாம். ஒவ்வொரு தடவையும் வாசிக்கும் போதும் மனதில் எழும் எண்ண அலைகளும் கவிதைகளை வாசித்து முடித்த பின்னர் மனதில் எஞ்சும் கனமும் அதோடு எழுச்சி பெறுகின்ற எண்ண வெளிப்பாடுகளும் இக்கவிதைகளின் வெற்றியின் சான்று.


இக்கவிதைகளின் வெற்றிக்கான முழுமுதற் காரணம் இக்கவிதையின் மொழிநடையே. மிகவும் இலகுவான மொழிநடையில் எல்லோருக்கும் வாசித்தவுடனேயே விளங்கக் கூடிய சொற் பயன்பாடும் அதனூடு சொல்லப்படுகின்ற கனதியான செய்தியும் கவிஞர் சிவசேகரத்திற்கே உரிய பாணி. அது அவரது கவிதைகளின் வெற்றியும் கூட. எளிமையும் அதேநேரம் தெளிவும் கட்டுக்கோப்பும் ஒருங்கே அமைந்த கவிதைகள் இத்தொகுதியெங்கும் நிறைந்து கிடக்கின்றன. "கவிதையை சிலருக்கு மட்டுமே புரியக்கூடிய அற்பமான வழிபாட்டுப் பொருளாக மாற்றிவிட்டால் இலையும் சேறும் மேகமுமாய் குழம்பிய சதுப்பு நிலத்தில் நமது கால்கள் அமிழ்ந்து போகும். கருத்துத் தொடர்பு சாத்தியமாகாமல் மூச்சுத்திணற நேரும்" என்பார் பப்லோ நெருடா. அவ்வகையில் எல்லோருக்கும் புரியக் கூடிய மொழியில் மக்களை முன்னிறுத்தி தனது கவிதைகளைப் படைத்திருக்கிறார் இத் தொகுதியின் ஆசிரியர்.


"இதிலுள்ள கவிதைகளது அழுத்தம் சமகால ஈழத் தமிழர் நிலையின் மீதானது. எனினும் இத் தொகுதியிலுஞ் சில கவிதைகள் தமிழ்ச் சமூக எல்லைக்கு வெளியே சென்று தமிழ்ச் சமூக நிலைமைகளைப் புறவுலகுடன் தொடர்பு படுத்துகின்றன. இக் கவிதைகள் சில வடிவில் மரபு சார்ந்தும் பிற மாற்று வடிவுகளிலும் அமைந்தாலும் எல்லாவிடத்துஞ் சிந்தனை புதியது. தமிழ் மக்களது பிரச்சனைகள் பற்றிப் பேசவேண்டிய ஒவ்வொன்றையும் அவற்றைப் பேசவேண்டிய இடத்து மனத்தடையின்றியும் பிற சமுதாயங்களின் மீது பகையின்றியும் பேசுவது உலகளாவிய ஒரு சிந்தனை மரபுக்குரியது. இத் தொகுதியும் அச் சிந்தனை மரபை அடையாளப்படுத்துகிறது."

என்று பதிப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கவிதையின் வழி ஒரு செய்தியை சொல்ல முனைகின்றபோது கவிதையின் வடிவத்தை தெரிவது மிக முக்கியமானது. வெளிநாடு செல்வோரின் அவலம் குறித்த 'கடலின் அக்கரை போனோரே' என்ற கவிதையாகட்டும் சுனாமி குறித்த 'வேண்டுதல்' என்ற கவிதையாகட்டும் பாராளுமன்ற அரசியல் பற்றிப் பேசும் 'பல வண்ணக் காடு' என்ற கவிதையாகட்டும் தான் சொல்ல வந்த செய்தியை தெளிவாகவும் இலகுவாகவும் சொல்வதற்கு பொருத்தமான வடிவங்களையும் முறைகளையும் தெரிந்ததோடு அல்லாமல் அதனூடு மக்களுக்கான செய்திகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லக்கூடிய ஆற்றல் கவிஞர் சிவசேகரத்திற்கு வாய்த்திருக்கிறது.

இக்கவிதைகளில் சொல்லப்படுகின்ற சமூக உணர்வு, இக்கவிதைகள் மக்களிடையே வேண்டி நிற்கின்ற கூட்டுச் செயற்பாடு, நாட்டில் நடப்பவை குறித்த அரசியல் சிந்தனைத் தெளிவு என்பன உண்மையிலேயே நெஞ்சுரமுள்ள ஒரு கவிஞனாலேயே சொல்லப்படக் கூடியவை. அதிலும் குறிப்பாக எல்லோருக்கும் விளங்கக் கூடிய வகையில் எழுதும் ஈழத்துக் கவிஞர்களில் சிவசேகரம் முக்கிய இடம்பெறுகிறார்.

தனது முன்னுரையில் சிவசேகரம் சொல்லும் ஒரு செய்தி உண்மையில் கவனத்திற்குரியது.

"எல்லாவற்றைப் பற்றியும் ஒருவர் எழுத இயலாது. எழுதினாலும் எழுதிய எல்லாமே பரந்தளவில் வாசிக்கப்பட மாட்டா. எனவே எழுத்தின் கவனங் கட்டாயம்; பேசப்பட வேண்டியவற்றின் மீது, குறிப்பாகப்; பலரது கவனத்கை ஈர்க்காதவாறு தடுக்கவும் தவிர்க்கவும் படுகின்றவற்றின் மீது, குவிய வேண்டியுள்ளது. கவனமானத் தெரிவு செய்யப்பட்ட சில விடயங்களைப் பற்றிப் பேசுகிற போது பல வேறு விடயங்களைப் பேர் குறிப்பிடாமலே அடையாளங் காட்ட இயலும்."

இது ஒரு படைப்பாளியைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியமானது. கவனங் குவிய வேண்டிய விடயங்களை இனங்கண்டு அவங்றைப் படைக்க வேண்டியது காலத்தின் தேவை. இந்த அவதானிப்பும் கவனமும் படைப்பாளிகளிடம் மிகக் குறைவாகவே உள்ளது.

'பயங்கரவாதியாக இருத்தல் பற்றிய ஒரு சிந்தனை' என்ற கவிதையின் சில வரிகள் மிக எளிமையாக ஒரு செய்தியைச் சொல்கின்றன. இவற்றை நாம் வாசிப்பதில இருக்கின்ற தெளிவே இக்கவிதையை எமக்கு உணர்த்தும்.

பொலிஸ் படையின் முன்னோ
ராணுவத்தின் முன்னோ
எதிர்ப்படுகிற எவரும் பால், வயது வேறுபாடின்றிப்
பயங்கரவாதியாகக் கருதப்படலாமெனின்
பயங்கரவாதியாகக் கருதப்படக் கூடிய எவரும்
பால், வயது வேறுபாடின்றிப்
பயங்கரவாதியாகவே இருப்பது
சற்றுப் பாதுகாப்பானது

இந்தக் கவிதையை வாசித்த போது எனக்கு இரண்டு விடயங்கள் ஞாபகத்திற்கு வந்தன. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் "அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையும் எதிர்ப்பவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகளே" என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ். இந்தோனேசியாவின் பாலித் (Bali) தீவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள இந்தோனேசியாவின் முன்னணி மதத் தலைவர்களின் ஒருவரான அபூ பக்கர் பச்சீர் "பாலித் குண்டுவெடிப்பைச் செய்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள். உலகின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செய்யும் பயங்கரவாதத்தைத் தடுக்கும் முகமாக அவர்கள் எதிர்ப்பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்" என்கிறார். பயங்கரவாதியாக இருப்பது பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் இக் கவிதைக்கு எவ்வாறு விளங்கிக் கொள்வது என்ற கேள்வி வருகின்றது. ஒரு பாரசீகக் கவிஞன் சொல்கிறான்.

"உனக்குக் கேட்பதோ
கதவு அடித்துச் சாத்தப்படும் சத்தம் - ஆனால்
எனக்குக் கேட்பதோ
அடித்துத் திறக்கப்படும் கதவின் சத்தம்"

ஒரு பண்பாட்டின் மனச்சாட்சியாக அமைவது கலையும் இலக்கியமுமே அவ்வகையில் இன்றைய காலச்சூழலில் ஒடுக்கு முறைக்கு எதிரான குரலாக, நியாயத்திற்கான குரலாக, போருக்கு எதிரான குரலாக "கல்லெறி தூரம்" தொகுதியிலுள்ள கவிதைகளை நோக்க முடியும். இவரது கவிதைகளில் இருக்கின்ற இன்னுமொரு முக்கியமான அம்சம் இவரது உலகப் பார்வை. இலங்கை பற்றிப் பேசுகின்ற இவரது கவிதைகளில் உலகையும் அதுசார்நிகழ்வுகளையும் தரிசிக்கக் கூடிய அதேவேளை உலகம் பற்றிப் பேசுகின்ற இவரது கவிதைகளில் இலங்கையைத் தரிசிக்க முடியும். பேராசிரியர் கைலாசபதி அவர்கள் வலியுறுத்தி நின்ற உலகப் பார்வையை இவரது கவிதைகளில் பார்க்க முடியும்.

எழுத்து என்பது ஒரு சக்தி மிக்க ஆயுதம், அதுவும் குறிப்பாக கவிதைகள் என்பவை மிகவும் சக்தி மிக்க ஆயுதம் என்பதை நாம் பலஸ்தீனக் கவிதைகளில் இருந்தும் வேறும் பல போராட்ட இலக்கியக் கவிதைகளில் இருந்தும் உணர்ந்துள்ளோம். அதே போல ஈழத்துக் கவிதையுலகை உலகத் தரத்திற்கும் உலக அரங்கிற்கும் கொண்டு சென்றதில் அளப்பரிய பங்கு கவிஞர் சிவசேகரத்தைச் சாரும். இவரது கவிதைகள் வெறும் அரசியல் கோஷங்களோ, கானல் நீர்க் கனவுகளோ, அல்ல நாம் வாழும் தருணங்களை மிகுந்த சமூகப் பொறுப்புணர்வுடன் பதிவு செய்பவர் கவிஞர் சிவசேகரம்.

சிவசேகரம் என்ற மனிதனுக்குள் இருக்கின்ற நகைச்சுவை உணர்வும் கிண்டலும் இக்கவிதைத் தொகுதியின் ஆங்காங்கே வெளிப்படுவதை அவதானிக்க முடிகிறது. அந்த கிண்டல் தொனியில் தெரிகின்ற அழகுணர்ச்சி கவிஞனுக்கே உரிய சிறப்பு.

அவரது 'தாயுள்ளம்' என்ற கவிதை ஈழத்தில் பரிதவித்துக் கொண்டிருக்கும் எத்தனையோ ஆயிரம் தாய்மாரின் உள்ளக் குமுறலை, பதட்டத்தை, பயத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அக்கவிதை இப்படித் தொடங்கும்.

குழந்தையின் காலில் முள் பட்டால்
தனது கண்ணில் முள் பட்டது போலவும்
குழந்தை பசியால் அழுதால்தான் முழுநாளும் பட்டினி கிடந்தது போலவும்
தவிப்பதற்கு ஒரு தாய்க்கு மட்டுமே இயலும்.
சேய் வளர்ந்து வயதேறிப் போனாலும்
வேற்றூர் போய் வெகுதொலைவில் வாழ்ந்தாலும்
மனதினுள் என்றென்றும்
தன் குழந்தையாய் வைத்துப் பேண
ஒரு தாய்க்கு மட்டுமே இயலும்.

இவ்வாறு தாய் பற்றியும் தாய் தனது சேய் மீது வைத்திருக்கும் அளவுகடந்த பாசம் குறித்தும் பேசும் இக்கவிதை முடியும்.

தன் தாய் பட்டிருக்கக் கூடிய தவிப்பைக்
கருத்திற் கொண்டிருந்தால்
இம் மண்ணில்
ஏன் இத்தனை வீண் இறப்புக்கள்?

இன்று இங்குள்ள எத்தனையோ தாய்மார் கேட்கும் அதே கேள்வியை, யாருக்குமே விடையோ அல்லது விடைக்கான காரணமோ தெரியாத கேள்வியது. தாயுள்ளம் பற்றிப் பேசத் தொடங்கி உள்ளம் கனக்கும் செய்திகளை சொல்லி இப்படி ஒரு கேள்வியுடன் கவிதை முடியும் போது மனம் விக்கித்து நிற்கிறது.

சிவசேகரத்தின் கவிதைமொழி தனித்துவமானது வாசகனோடு தான் சொல்ல வந்த செய்தியை எவ்வாறு சொல்ல வேண்டும், எவ்வாறு சொன்னால் கவிதை வாசகனை சென்றடையும், வாசகனின் மனத்தை தொடும் என்பதை தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறார் கவிஞர் சிவசேகரம்.

அமைதி பற்றியும் அமைதியின் தேவை பற்றியும் எல்லோரும் பேசும் இத்தருணத்தில் 'அமைதி வரும் போது' என்ற கவிதையில் இப்படிச் சொல்கிறார் சிவசேகரம்.

"அவர்கள் வழங்கவுள்ள அமைதி வரும் போது கட்டாந் தரைகளும் முள்ளிக் காடுகளும் தாங்கள் வயல்களாக இருந்த ஒரு காலத்தை மற்ந்திருக்கக் கூடும்.உக்கிச் சரிந்த நீண்ட மரத் துண்டுகளுக்குத் தமது நீண்ட கடற் பயணங்களின் மங்கிய நினைவுகள் மிஞ்சியிருக்கக் கூடும்."

வழமையான கவிதை வடிவங்கட்கு அப்பாற்பட்டு பந்தி வடிவிலான கவிதையாக இக் கவிதை அமைந்துள்ளது. இது ஒரு வித்தியாசமான முயற்சி. இவ்வாறு பந்தியாக கவிதை எழுதுபவர்கள் மிக சிலரே. வாசிப்பதற்கு இலகுவாக இருந்தாலும் பந்தியாக எழுதும் போது கவிஞன் நிச்சயம் சவால்களை எதிர் நோக்குவான். அவ்வாறு எழுதக் கூடிய இலாவகம் கவிஞர் சிவசேகரத்திடம் நிறையவே உண்டு. இதேபோன்ற பந்தி வடிவிலான ஒரு கவிதை இவரது முன்னைய தொகுதியான 'இன்னொன்றைப் பற்றி'யில் இடம் பெற்றிருக்கிறது. இவ்வாறு தமிழில் வித்தியாசமான அதேவேளை பயனுள்ள புதிய முறைகள் தமிழுக்கு அறிமுகமாக வேண்டிய தேவை உள்ளது.

இவரது கவிதைகளை பப்லோ நெருடாவினுடைய (Pablo Neruda) கவிதைகளுடன் ஒப்பிட முடியும். இருபதாம் நூற்றாண்டில் முக்கிய நிகழ்வுகள் எல்லாவற்றுக்கும் நெருடாவின் கவிதைகள் சாட்சியாக இருப்பதுபோல கடந்த முப்பது ஆண்டுகளில் இலங்கையின் முக்கிய நிகழ்வுகளின் சாட்சியாக சிவசேகரத்தின் கவிதைகள் இருந்திருக்கின்றன இன்றும் இருக்கின்றன. அதன் ஒரு அம்சமாகவே கல்லெறி தூரத்தைக் காணமுடியும். அதேவேளை சமகால சரித்திரத்தின் மூன்றாம் உலகக் குரலாக சிவசேகரத்தின் கவிதைகளை காணும் அதேவேளை உலக நிகழ்வுகள் பற்றி மூன்றாம் உலகுக்குச் சொல்லும் குரலாகவும் இவர் இருக்கிறார்.

நெருடாவின் கவிதையின் உள்ளாந்த கூறுகளில் ஒன்று அரசியல். தனது கவிதையில் இருந்து அரசியலைப் பிரிக்க விரும்புகிறவர்கள் உண்மையில் கவிதையின் எதிரிகள் என்று நெருடா சொன்னார். அக்கூற்று சிவசேகரத்தின் கவிதைகளுக்கும் பொருத்தமானது. மக்களுக்காக பாடியதால் நெருடா பிரச்சாரக் கவிஞன் என்று தூற்றுதலுக்கு உள்ளானான். தான் மக்கள் கவிஞன் என்பதை தொடர்ந்து எழுதுவதன் மூலமே நிரூபித்து தன்னை மக்கள் கவிஞனாக நிறுத்தியவன் நெருடா இது சிவசேகரத்திற்கும் பொருந்தும். எட்டுக் கவிதைத் தொகுதிகள் நான்கு மொழிபெயர்ப்புக் கவிதைத்தொகுதிகள் ஒரு ஆங்கிலக் கவிதைத் தொகுதி என மக்களுக்காக சிவசேகரம் ஏராளமான கவிதைகளைப் படைத்திருக்கிறார். ரி. எஸ். எலியட் பெருங்கவிஞனின் இயல்புகளாக மூன்று அம்சங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று வித்தியாசம் இரண்டாவது சீரான படைப்புத்திறன் மூன்றாவது எண்ணிக்கைப் பெருக்கம். சிவசேகரத்தின் கவிதைகள் எலியட் வேண்டி நிற்கின்ற அம்சங்களை பூர்த்தி செய்கிறது என்பதும் இங்கு நோக்கற்பாலாது.

கவிதைக் கலையின் எல்லாவிதமான கூறுகளாலும் நிறைவு செய்யப்பட்ட படைப்பு மனம் சிவசேகரத்துடையது.

இத் தொகுதியிலுள்ள 'பேரம்' என்ற கவிதையில் இப்படி வரும்

இந்த நிலைமை மாறவேண்டும் என்று
வற்புறுத்திக் கூறினோம்.
"போராட வேண்டாம், பேசியே வெல்லுவோம்".
என்று சொல்லிப் போனார்கள்.

அதேபோல 'நாமென்ன செய்கின்றோம்?' என்ற கவிதை தொடங்கும்.

ஆண்டாண்டு கால அடக்கு முறைக்கெதிராக
மூண்டெழுந்த போராட்டம் முடிவின்றித் தொடர்கிறது
நாமென்ன செய்கின்றோம்?
நாமெங்கே செல்கின்றோம்?

இவ்விரு கவிதைகளும் எனக்கு ஃபெய்ஸ் அஹ்மத் ஃபெய்ஸ்சின் (Faiz Ahamed Faiz) ஒரு கவிதையை நினைவூட்டியது.

இதுவல்ல!
கரை படிந்த வெளிச்சம்
இரவு குதறித் துப்பிய விடியல்
இதுவல்ல
எனது தோழர்கள் தாகங்கொண்டு தேடியலைந்த
தெளிந்த விடியல்
இதுவல்ல

இருள் பிரிந்துவிட்டது
தூய ஒளி வந்துவிட்டது
இலக்கை அடைந்துவிட்டோம்.
சொல்கின்றார் சிலர்.
இலக்கு இதுவல்ல
நெடிய பயணம் தொடரட்டும்

'கல்லெறி தூரம்' கவிதையின் இறுதி வரிகள் இந்தக் கவிதைத் தொகுதி சொல்ல நினைக்கின்ற செய்திக்கான முத்தாய்ப்பாய் அமைந்துவிடுகின்றன.

தனது மண்ணைக் குறிவைக்கும்
ஆயுதமேந்திய அயலவன்மீது கல்லெறிகிறான்
ஒரு பலஸ்தீனச் சிறுவன்
விடுதலை
கூப்பிடு தொலைவில், கல்லெறி தொலைவில்
என்கிறேன் நான்

இந்த இடத்தில் தனது நோபல் பரிசு உரையில் கவிஞர் நெருடா சொன்ன வரிகள் தான் ஞாபகம் வருகின்றன.

"நமது உண்மையான வழிகாட்டும் நட்சத்திரங்கள் போராட்டமும் நம்பிக்கையும் தான். இந்தப் போராட்டத்தில் கவிஞனும் கைகோர்க்க வேண்டும். அவனது செயற்பாடும் மென்மையும் சகல மனிதர்களின் சகல நடவடிக்கைகளிலும் பரவ வேண்டும். வியர்வையில், அன்றாட உணவில், மனித முழுக் கனவில் கவிதையும் கவிஞனும் பங்காளியாக வேண்டும். சாதாரண மக்களுடன் தவிர்க்க முடியாத வகையில் கொள்ளும் தொடர்புகளால் மட்டுமே ஒவ்வொரு காலத்திலும் சிறிது சிறிதாய் கவிதை இழந்து வரும் மகத்துவத்தை திருப்பிய அளிக்கமுடியும்."

இக்கவிதைத் தொகுதியை வாசித்து முடித்த பின்னர் மனதில் ஏராளமான கேள்விகளும், சிந்தனைகளும் வெளிக்கிளம்பின. பதில்களைத் தேடியபடி. ஓரு கவிஞன் வேண்டிநிற்பதும் தனது கவிதைகளின் வெற்றிகளின் அளவுகோலாகக் அவனால் கொள்ளப்படுவதும் இதுதான்.

உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் அறியேல் டோர்Fமன் கேட்பது போல…

"எவ்வாறு சித்திரவதைக்கு உள்ளானவர்களும் சித்திரவதையாளர்களும் ஒரே இடத்தில் சமாதானம் ஆகி வாழ முடியும்? ஒடுக்குமுறையால் பீதியூட்டப்பட்ட ஒரு நாட்டில் வெளிப்படையாகப் பேசுவது பற்றிய ஒரு பயம் இன்றளவும் எங்கெங்கும் நிறைந்திருக்கும் ஒரு நாட்டில் எவ்வாறு அந்த நாட்டை வேதனையிலிருந்து மீட்க முடியும்? பொய்யே வழமையாகிவிட்ட போது உண்மையை எப்படித்தான் எட்டுவது? வரலாற்றின் கைதிகளாக நாம் ஆகாமல் எப்படிக் கடந்த காலத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வது? வரும் காலத்திலும் இவை நேரலாம் என்று கருதாமல்; எவ்வாறு அதை முற்றிலும் மறுத்தல் முடியும்? சமாதானத்தை நிச்சயப்படுத்துவதற்காக உண்மைகளைத் தியாகம் செய்யத்தான் வேண்டுமா? கடந்த காலத்தை நாம் மறுத்துவிடும் போதும் நிராகரிக்கும் போதும் உண்மை நம்மிடம் வந்து முணுமுணுக்கும் போதும் கதறும் வேளையிலும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? எல்லாவற்றை விடவும் மிக் பெரிய மனத்துயரம் யாதெனில் தேசத்தின் ஜனநாயக நிலையை உருவாக்கும் மனோநிலையை அழித்துவிடாமல் இவ்விடயங்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது?"

இக் கேள்விகளுக்கான பதிலை "கல்லெறி தூரம்" கவிதைத் தொகுப்பில் தேடினேன். 'நாமென்ன செய்கின்றோம்' என்ற கவிதையின் இறுதி வரிகள் இவ்வாறு இருந்தன.

மக்கள் விடுதலையை மற்றெவரும் தரமாட்டார்
போராட்டம் இல்லாமல் விடுதலைக்கு வழியில்லை
மக்கள் அணிதிரண்டு ஒன்றுபட்டுப் போராடின்
மக்கள் வரலாற்றை மக்கள் எழுதிடுவர்
நண்பர் எவர் என்றும் பகைவர் எவர் என்றும்
நாம் முதலில் ஆராய்வோம்.
எங்கட்குப் பகைவர் சிலர், உலகெங்கும் நண்பர் உளர்
என்றாலும் எங்களது விடுதலையை நாம் வெல்ல
எங்களது கால்களிலே நிற்போம்
நிலைப்போம்.
போராடி நாம் வெல்வோம்
புதுவுலகு ஒன்றைக்
காணப் புறப்படுவோம்!