07012022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

இந்திய ஆர்வத்தின் அடிப்பொடிகள்.

லங்கையின் அரசியல் வரலாற்றில் உலகச் சதியென்பது பண்டுதொட்டு நிகழும் ஒரு அரசியல்.இதற்கான பெரும் முன்னெடுப்புகள் எப்பவும்"அபிவிருத்தி,ஒத்துழைப்பு-உதவி"என்ற போர்வையில் இலங்கையை ஆளும் கட்சிகளோடான உடன்பாட்டோடு எம்மை இவை அண்மிக்கின்ற ஒரு சதி.இந்தச் சதிகள் எப்போதும் இலங்கையை ஆளும் கட்சிகளின் எஜமானர்களான ஆளும் வர்கத்துக்கு மிக உடன்பாடாகவே இருக்கின்றன.நிலவுகின்ற இலங்கையின் வர்க்க முரண்பாடுகள் இலங்கைச் சமுதாயத்தில் இனங்களைக் கடந்து மிகவும் கூர்மையடையும் ஒரு நிலை இருந்து வருகிறது.இது இலங்கைத் தொழிலாள வர்க்கத்தின் மிக ஸ்த்தூலமானவொரு அரசியல் அமைப்பை-கட்சியைப் புரட்சிகரமானவொரு பாத்திரத்தை ஏற்படுத்தும் காலவர்த்தமானத்தைக் கொண்டிருப்பது மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

 


இலங்கையின் வர்க்க முரண்பாடுகளை இனவாதக் கருத்துக்களுக்கூடாகச் சிதைக்க முனைந்துகொண்ட இந்திய மற்றும் அமெரிக்க-ஐரோப்பிய அரசியல் சூழ்ச்சிகளை மிகவும் பொறுப்பாகக் கடமையுணர்வோடு நிறைவேற்றிய இலங்கை ஊடகங்களும், அவைகொண்டிருந்த அறிவு ஜீவிகள் வட்டமும் இத்தகைய செய்கைக்கு என்றும் உடந்தையாகவே இருந்திருக்கிறார்கள்.இலங்கைக்குள் நிலவும் இந்தியச் செல்வாக்கு மற்றும் இந்தியப் பொருளாதார நோக்குகள் எமது வாழ்வை அடியோடு மாற்றியமைத்த வரலாறு"ஈழப் போராட்டமாக"மாறியது.இந்த ஈழம் என்ற கோசம் எங்ஙனம் எம் மக்கள் மத்தியல் கருத்தியல் ரீதியாகவும்,உளவியல் ரீதியாவும் ஒரு உறுதியான அரசியல் உந்து சக்தியாக மாறியதென்பதற்குச் சிங்களத் தரப்பிலிருந்து முன் தள்ளப்பட்ட இந்தியச் செல்வாக்கு நலன்கள் உடந்தையாக இருந்திருக்கிறது.இது எப்போதும் இலங்கைத் தொழிலாள வர்க்கத்தைக் கூறுபோடும் அரசியல் அபிலாசையை இலங்கை ஆளும் வர்க்கத்துக்குள் ஏற்படுத்தியிருந்தது.இதற்கானவொரு மன உந்துதலையும்,எதிர்பார்ப்பையும் இலங்கையில் ஏற்பட்ட ஜே.வி.பி.யின் சிறுபிள்ளைத்தனமான 1971 ஆண்டின் எதிர்ப்புரட்சிகர நடவடிக்கையே காரணமாக இருந்திருக்கிறது.இந்த நிகழ்வின் பின்பான இலங்கை ஆளும் வர்கத்தின் புரிதல்கள் யாவும் மேற்குலக மற்றும் இந்தியப் பொருளாதார ஆர்வங்களுக்கு மிகவும் அனுகூலமாகவே இருந்திருக்கிறது.இங்கே வர்க்க நலன்கள் இலங்கைப் பாட்டாளிய வர்க்கத்தைக் கொத்தடிமையாக்கவும்,அவர்களை இயற்கையாக அமைந்த இன அடையாளங்களுக்குள் தள்ளிப் புதைப்பதிலும் வெற்றிபெற்றன.

இதற்கான மூலாதாரமான செயல்களை இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்குள் தோற்றம் பெற்ற கட்சிகளால் மிக உறுதியாக உற்பத்தி செய்யத்தக்க அரசியல் முன்னெடுப்புகளை இத்தகைய கட்சிகளுக்கு நிதியிட்டு வளர்த்த அந்நியச் சக்திகள் ஏற்படுத்திக் கொடுத்தன.காலனித்துவத்துக்குப் பின்பான இலங்கைப் பொருளாதார முன்னெடுப்புகளை அந்நியச் சக்திகள் இனம் சார்ந்த பார்வைகளோடு வளர்க்க முனைந்த அரசியலானது தற்செயல் நிகழ்வல்ல.

இதற்கு உடந்தையாகக் குரல் கொடுத்த தமிழ்க் கட்சிகள்(தமிழர் மகாசபை அதன் பின் தமிழரசுக் கட்சி,தமிழ்க் காங்கிரசு,தமிழர் கூட்டணியென விரிந்தவை.)தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை மறுத்தபடியேதாம் தமது கட்சிகளை அந்நிய நலன்களுக்காக வளர்தார்கள்.எந்தவொரு வோட்டுக் கட்சித் தலைவனும் தமது எஜமானர்களாக நம்பிய அந்நிய அரசுகளையும் அவர்களின் நலனையும் முதன்மைப்படுத்தியே தமது நலன்களை மக்களுக்கான நலனாகக் காட்டிக் கொண்டார்கள்.இதன் தொடர்ச்சியானது இலங்கையில் வாழ்ந்து,தத்தமது தொழில்களைத் தாமே தீர்மானிக்கும் இலங்கையின் இறமைசார்ந்த அனைத்து நகர்வுகளும் மிகக் கவனமாக அழித்து வரப்பட்டது.இதன் உள்நோக்கமே "ஈழமம்-தமிழீழம்"எனும் அரசியற் கருத்தாக்கமாக விரிந்தது.எதையும் அந்நியச் சக்திகளின் தயவில் ஆற்றி வந்த ஓட்டுக் கட்சிகளுக்கு இந்த ஈழக்கோசமானது மிக அவசியமான இருப்பைத் தமிழ்ச் சமுதாயத்துள் நிலைப்படுத்தியது.அத்தகைய அரசியற்றேவைகள் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியின் முரண்பாடுகளுக்குத் தீனீபோடும் அரசியற் கருத்து நிலையாகவும்,தந்துரோபாயமாகவும் இருந்தது. இவைமிக அவசியமானவொரு இந்தியப் பாத்திரத்தை இலங்கைக்குள் தொடர்ந்து நிலைப்படுத்தும் இந்திய நோக்கங்களின் பிறப்பே தவிரத் தமிழ்பேசும் மக்களின் கோசங்களாகவோ அன்றி உரிமையின் வெளிப்பாடாகவோ இருக்கவில்லை.

இன்றுவரை தொடரும் தான்தோன்றித்தனமான அரசியல் மற்றும் போராட்ட முறைமைகளுக்கு, இத்தகைய நலன்களை வெவ்வேறு அமைப்புகள் தத்தமது எஜமான விசுவாசத்துக்குச் சார்பாக ஆற்றும்போது இவை மக்களின் உரிமைகளுக்காக் குரல் கொடுப்பதாகவும், அவர்களின் அடிப்படை வாழ்வாதாரங்களைச் செமமை;யுற வைப்பதற்காகவுமெனத் திட்டமிடப்பட்ட ஏமாற்றும் அரசியலாக விரிகிறது.இன்றைய இலங்கையின் அரசியல் மற்றும் போராட்ட வியூகங்கள் யாவும் ஏதோவொரு அந்நியச் சேவகத்துக்காக ஆற்றப்படும் தந்திரத்தோடு சம்பந்தப்பட்டதெனினும் அந்த வியூகத்துள் இலங்கையை ஆளும் கட்சிகளின் உயிர்த்திருப்போடும் மிகவும் பிணைந்த நலன்களைக் கொண்டிருக்கிதென்ற உண்மை மிகக் கறாராக விளங்கத் தக்கதாகும்.

மூன்றாம் உலகக் கட்சிகள் மட்டுமல்லை வளர்ச்சியடைந்த உலகங்களின் கட்சிகளும் இன்றையப் பொருளாதார உலகப் பங்கீடுகளுக்கும் பாரிய தொழிற் கழகங்களுக்குமான சேவகர்களாகவே தொடரமுடியும்.ஏனெனில் இத்தகைய கட்சிகளே இன்றைய உலகத்தில் மிகப் பெரும் தொழில் துறைகளைக் கொண்டு இயக்குகின்றன.இந்தக் கட்சிகளே முதலீட்டாளர்களாக இருக்கும் போது அவைகளின் வர்க்க நலனானது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மிகப் பழையபாணியிலான பூர்ச்சுவாத் தன்மைகளைக்கடந்து புதிய பாணியிலானவொரு முக மூடியை"அமைதி,சமாதானம்,திறந்த பொருளாதாரச் சுதந்திரம்,மக்கள் நலன்"போன்ற வார்த்தைகளுக்கூடாகக் காரியப் படுத்தும் நிறுவனங்களாக இருக்கிறன.

இலங்கைக்குள் நிலவும் பாரிய பொருளாதாரச் சமமின்மையானது நிலவுகின்ற ஆட்சியைத் தூக்கியெறியும் வர்க்கவுணர்வாக ஏற்றுமுற்றிருக்கும் தரணங்களில் இந்தக் கட்சிகளால் இனவாதம் திட்டமிடப்பட்டு மிகக் கவனமாக மக்களரங்கு வருகிறது.அங்கே மக்களின் அடிப்படை முரண்பாடு வெறும் இனவாதத் தந்திரத்தால் மழுங்கடிக்கப்பட்டு அதைப் பின் தள்ளி இனவாதம் உளவியற் தளத்தில் கூர்மையடைகிறது.

புலிகளின் இருப்புக்கும் தொடர்ந்து வன்முறைவடிவிலான பாசிச அடக்கு முறைக்கும் சொல்லப்படும் தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்கான போராட்டம் எனும் மிகக் கொடுமையான பொய்மை தமிழ்ச் சமுதாயத்தில் நிலவுகின்ற மக்களின் வளங்களைக் கையகப்படுத்தும் தந்திரத்தையும் கூடவே அந்தப் பொருளாதாரச் சுகங்களைத் தாமே அநுபவிக்கத் துடிக்கும் அரசியல் உரிமைகளுக்குமான ஒரு அமைப்பின் அதீத நடவடிக்கைக்காக இனவாதம் தமிழ்ச் சமுதாயத்துள் மிகவும் மலினப்படுத்தப்படுகிறது.இவ்வண்ணமே சிங்கள ஆளும் வர்க்கம் தமது எடுபிடிகளின் (ஆட்சி,அதிகாரம்,கட்சிகள்) தொடர்ந்துவரும் இராணுவத் தன்மையுடைய அரசவடிவத்துள் அத்தகைய நிலைமையே தம்மைக்கடந்த இன்னொரு புதிய முறைமையைக் கொண்டிருக்கும் "கட்சியின் ஆதிக்கம்" பொருளாதாரத்துள் நிலைப்படுத்தும் பாரிய ஆதிக்கமாகவும், இராணவப் பொருளாதாரமாகவும் விரியும் போது சகக்கமுடியாது அதன் பின் சென்று தம்மைக் காப்பதற்காக இயக்கம் பெறுகிறது.இங்கேதாம் அந்நியச் சக்திகள் அதுவும் இந்தியப் பொருளாதாரத் தந்திரோபாயங்கள் இலங்கையில் பாரிய தந்திரங்கோளோடு தமது நலனைப் மையப் படுத்திய குழுக்களை இயங்க வைக்கிறது.இலங்கையின் ஆளும் கட்சிகள் மட்டுமல்ல புதிய புதிய முறைமைகளில் தோன்றும்-தோற்முற்ற கட்சிகள்-இயக்கங்கள் யாவும் இத்தகைய அந்நியச் சக்திகளின் தயவில் வளர்பவையும்,மக்களைக் கூறுபோடுவதில் அந்நியர்களுக்கு உடந்தையாக இருந்து எலும்பைச் சுவைக்கின்றவைகளாகவும் இருக்கின்றன.இந்த முறைமையோடு இன்றைய இலங்கை நிலையைப் பார்க்கும் போது சமீப காலமாகத் தொடருகின்ற கருத்தியல் பரப்புரைகளும் அதுசார்ந்த இயக்கத் தோற்றங்களும் என்னவென்று பார்ப்பது அவசியமானதாகும்.

வடக்கு என்ன கிழக்கு என்ன, வளமிழந்து கிடப்பது அனைத்துத் தமிழ்ப் பிரதேசங்களுமே:

தொடர்ந்து திசைக்கொரு புறம் தோற்றம் பெறும் கட்சிகள்-இயக்கங்கள் மற்றும் பழைய அராஜகக் குழுக்கள் யாவும் மிகவும் அரசியல் முனைப்புடையவையாகவும்,போராட்டத்தையும் குருதிதோய்ந்த வரலாற்றையும் மறுப்பைவையாகவும், தாம் மக்களின் நலனில் அக்கறையுடையவையாகவும் காட்டிக் கொண்டிருக்கின்றன.மக்களின் துன்பங்கள் யாவும் புலிகளால் மட்டுமே தோற்றம் பெற்றதாகவும் அது இன்றைய தரணத்தில் பிரதேச ரீதியாக மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் மக்களை நம்பவைக்கப் பிரயத்தனஞ் செய்கின்றன.இங்கேதாம் நமது கேள்விகளும்,சந்தேகங்களும் வலுப் பெறுகின்றன.தமிழ் பேசும் மக்களைக் கூறுபோடுவதும் அவர்களின் கடந்த கால் நூற்றாண்டான போராட்டவுணர்வைக் குழிதோண்டிப் புதைப்பதும் அவசியமானவொரு அரசியற் தேவையாகும்.இந்தத் தேவை இலங்கையின் பொருளாதாரச் சந்தையையும்,கேந்திர அரசியற் தேவைகளையும் ஒருங்கே நோக்கி அதை அடைய முனையும் இந்திய நலனின் அதீத வெளிப்பாடாகவே இருக்கிறது.காலாகாலமாகத் தமிழ் பேசும் மக்களுக்குள் நிலவும் உள் முரண்பாடுகள் யாவும் இப்போது மிகவும் கூர்மையாக்கி அவையே பிரதான முரண்பாடாக்கப் படுகின்றன.இலங்கையில் இனவாத ஒடுக்கு முறையைச் செய்து தமது ஆட்சியை நிலைப் படுத்தும் சிங்களக் கட்சிகளின் அதே கொடுமை இன்னும் தொடரும்போது இன்னொரு வகையான இந்தக்கூத்து இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் அனைத் உரிமைகளையும் மறுக்கும் அரசியல் நடவடிக்கையாக இப்போது மக்களின் "ஜனநாயக உரிமை"என்று மக்கள் விரோத அரசியலாக மாற்றமுறுகிறது.

கடந்த காலத்துள் நிலவிய இயக்க மோதல்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பலி கொண்ட அதே பாணியிலான இன்னொரு பலியெடுப்புக்கு இப்போது பிரதேச ரீதியான பகை முரண்பாடாக மாற்றி இவையூடாகப் பழம் பறிக்க முனையும் இந்திய அந்நியச் சதி, பிரேதச ரீதியாக மக்கள் ஏற்ற தாழ்வுகளைக் கொண்டிருப்பதற்கு இன்னொரு பிரதேசத்தின் ஆதிக்கமே காரணமென்று காதில் பூச்சுற்றி நிரந்தரமாக மக்களைப் பிரித்து மோதவிடுவதில் ஈராக் பாணியிலானவொரு நகர்வை நோக்கியே பயணிக்கின்றன.

இதற்கு எப்போதும் களமமைத்துக்கொடுக்கும் இயக்கவாத மாயைகள் இன்னும் பழைய பகைமையிலெழுந்த இயக்கப் பகையாக விரிகிறது.இது பழிவாங்கும் அரசியலோடு தாம் சார்ந்த பிரதேச வளங்களை அந்நியத் தயவோடு அபகரிக்கும் அரசியலைக் கொண்டிருக்கிறது.புலிகளின் படுகேவலமான அராஜகத்தால் அதீத ஜனநாயக மறுப்புத் தமிழ்ப்பிரதேசங்களில் நிலவுகின்றது.இந்த இழி நிலையால் ஊக்கம் பெற்ற "மண்ணின்மைந்தர்கள்"தத்தமது தேவைக்கேற்பப் பிரரேதேசவாதத்தூடாகப் பரப்பரைகள் செய்தாலும் மக்களென்னவோ பிரதேச வேறுபாடின்றி வளமிழந்து,வாழ்விழந்து வதைபடுகிறார்கள்.அது வடக்கால் இருந்தாலென்ன இல்லை கிழக்காலிருந்தாலென்ன அழிபடுபவர்கள் தமிழ்பேசும் மக்களே!அவர்களிடத்திலிருந்து போராட்ட வலுவையும்,போராளிகளையும் பெற்றுத் தத்தமது வளங்களைக் காப்பாற்ற முனைதல் மிகவும் கொடுமையானது.

இன்றைய இலங்கை நிலவரப்படி இந்தியாவென்ற தென்னாசியப் பிராந்தியப் பொலிஸ்காரன் தனது நலனுக்காக இலங்கையைக் குட்டிச் சுவாராக்கி இன்னொரு பெரும் துயரச் சுமையை மக்களுக்குள் ஏற்படுத்தச் சிறு குழுக்களை உருவாக்கி அவற்றை மக்களின் உரிமை மீட்பர்களாகக் காட்டி வருவது எல்லாம் தன் தேவையைப் பலப்படுத்தவே.

மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களது எதிர்காலம் இருள் சூழ்ந்து ஒளிமங்கிக் கிடக்கிறது.பிராந்திய நலனுக்கும் பொருட் சந்தைக்கும் நடக்கும் போராட்டத்தில் அந்நியச் சக்திகளே முதன்மையான பாத்திரத்தை இலங்கையில் கொண்டிருக்கும்போது நமக்கான விடுதலை,சுதந்திரம்,சுயநிர்ணயமென்பதெல்லாம் பகற்கனவாகும்.இங்கே இலங்கை மக்களின் உரிமைகளென்பவை அந்நியச் சக்திகளின் தயவில் பெறும் விடையமல்ல.மாறாக இலங்கை மக்களே தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு அரசியற் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கானவொரு மக்கள் எழிச்சியை செய்து இத்தகைய புறச் சக்திகளைத் தோற்கடிப்பதற்கானவொரு அரசியல் வியூகத்தைக் கட்டியமைக்க வேண்டும்.

இது தவிர்ந்த எந்த மாற்றுப் பாதையும் இலங்கைத் தேசத்துள் நிலவும் மோசமான சூழலை மாற்றிப் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படத்த முடியாது.மக்கள் தமது விடுதலையை இனங்களுக்கிடையிலான முரண்பாடாக வளர்த்துச் சிதைக்க முடியாது.அத்தகைய சூழலில் அந்நிய நோக்கங்களே வெற்றியடைகின்றன.இது மாற்றத்துக்குள்ளாகும்போது இந்தியாவைத் துதிபாடும் ஒற்றர்கள்-ஓடுகாலிகள் கால்களையிழந்த நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.அத்தகையவொரு நிலைமை ஏற்படாதவரை மக்களின் உண்மையான விடுதலை கானல் நீராகவே இருக்கும்.ஏனெனில் மக்களுக்குள் நிலவும் கூர்மையான இனவாதத் தன்மைகள் திட்டமிடப்பட்டு வளர்க்கப்படுவதால் அது மக்களைச் சிதைத்து அவர்களை அடிமைப்படுத்தும் அரசியலையே அநுமதிக்கும்.

இந்தியாவுக்கு இலங்கை மக்கள்மீதோ அல்லது இந்திய மக்கள்மீதோ கரிசனை கிடையாது.மாறாக அவர்களின் பொருளாதார நலன்களில்மட்டுமே அவர்களுக்குக் குறிப்பான கரிசனை நிலவுகிறது.இந்தச் சூழ்ச்சியே நம்மைப் படுகுழிக்குள்தள்ளி இதுவரை பற்பல குழுக்களைத் தோற்றமுறவைத்துத் தமிழ் பேசும் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து அவர்களின் சமூக சீவியதை;ச் சிதறடித்து அந்நிய தேசங்களில் அகதிகளாக அலையவிட்டது.இந்தச் சூழலில் நாம் ஆற்றும் பணியென்பது இலங்கை மக்களுக்கு வெளியுள் எந்த முன்னேற்றத்தையும் செய்வதற்கில்லை.

அநியச் சமரசங்கள்,சமாதானங்கள் யாவும் சூழ்ச்சிகள் நிறைந்தவை.இத்தகைய அந்நியச் சக்திகள்,ஏகாதிபத்தியம்,உலகக் கட்சிகள்,அரசுகள்,ஆளும் வர்க்கங்கள் போன்றவை தொடர்பாக நாம் வெறும் அப்பாவித்தனமான கண்ணோட்டங்களோடு இருக்கிறோம்.இத்தகைய அந்நிக் கொடுமையாளர்களை மக்களின் நட்பு சக்திகளாகக் காட்டி நீட்டும் ரீ.பீ.சீ.வானொலிக் கயவர்கள் மீண்டும் எமது வாழ்வைச் சிதைப்பதற்கும் அதனு}டாகத் தமது எஜமானர்களின் நோக்கங்களை இலங்கையில் வெற்றிபெறச் செய்து தமது கூலியைப் பெறுவதற்கே எமது இன்றைய இழி நிலையை-அராஜகச் சூழலை வெளிப்படுத்துவதும்,நமக்கான உரிமைக்காகக் குரல் கொடுப்பதாக கருத்திடுகிறார்கள்.இந்த ரீ.பீ.சீ.வானொலியின் பின்னே கூத்தாடும் "அரசியல் ஆய்வாளர்கள்"அலம்புவது அப்பட்டமான அந்நியச் சக்திகளின் நலன்களையே.

உண்மையில் முதலாளித்துவப் பத்திரிகை,வானொலி,தொலைக்காட்சி ஊடகங்கள் உண்மையான மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்க முடியாது.இவர்களிடமிருக்கும் சமூகக் கண்ணோட்டமானது முதலாளித்துவ உற்பத்திப் பொறி முறைக்கு எதிரிகளற்ற சூழலையும், உழைப்பாளிகளை அடிமைப்படுத்தி ஒட்டச் சுரண்டும் பார்வையே, ஜனநாயகத்தின் பெயரால் நிலவமுடியும்.

மக்கள் செய்யத் தக்க நடவடிக்கைகள் சமாதனம்,சம வாழ்வு என்ற பொய்மைக் கோசங்களுக்கு முகம் கொடுக்காமால் தத்தமது சூழலுக்கேற்ற முறைமைகளில் வெகுஜன எழிச்சிகளை செய்து,வாழ்வாதாரப் பிரச்சனைகளை முடிவுக்கு கொணரும் பொருட்டுத் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கானவொரு மக்கள் மன்றங்களைச் சுயமாக அமைப்பதும,; அனைத்து இயக்க-கட்சி மாயைகளையும் அம்பலப்படுத்திச் சிங்கள் உழைக்கும் மக்களோடு ஐக்கியம் பெறும் முன் நிபந்தனைகளைச் செய்தாக வேண்டும்.இத்தகைய ஒரு நகர்வு ஆளும் சிங்கள-தமிழ் வர்க்கங்களை அதிரத்தக்க முற்போக்கான போராட்டத்தை முற்முழுதாகத் தமது வளத்தோடு செய்து, இலங்கையில் நிலவும் கொடூராமான அராஜக அரசியற் சூழலை நிறைவுக்குக்கொணர்ந்து ஜனநாயகத்தைப் புதிய பாணியில் படைப்பதற்காவொரு கட்சியைத் தோற்றமுற வைக்கும். அங்ஙனம் தோன்றும்போது போராட்டமே வாழ்வுக்காவும்,சுதந்திரத்துக்காவும்,விடுதலைக்காகவும் நடைபெற்றாகவேண்டும்.இவைகளற்ற அனைத்து அர்ப்பணிப்பும் அந்நியர்களுக்கானதே,எமக்கல்ல.

ப.வி.ஸ்ரீரங்கன்
20.05.2007


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்