Language Selection

புதிய ஜனநாயகம் 2008

 அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல், உலகெங்கிலும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் நடத்திவரும் ஈராக் போருக்கு எதிரான அமெரிக்க மக்களின் கருத்தை இத்தேர்தல் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, அமெரிக்காவின் வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்கக் கருப்பினத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா என்பவர், ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படவிருப்பதும், அதிபர் தேர்தலின் முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கிறது. 


 அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக், ஆப்கான் மீது நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரினாலும்; உள்நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மக்கள், ஒரு மாற்றத்தை விரும்புவதாகவும்; அம்மாற்றத்தைப் பிரதிபலிப்பவராக ஒபாமா இருப்பதாகவும் பெரும்பாலான முதலாளித்துவப் பத்திரிகைகள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மேலும், அமெரிக்காவில் வெள்ளை இனவெறி முன்னைப்போல கோலோச்சவில்லை என்பதற்கு பாரக் ஒபாமாவின் தேர்வு எடுப்பான சான்று என்றும் கூறப்படுகிறது.


 ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள பாரக் ஒபாமாவை எதிர்த்து, ஜான் மெக்கெய்ன் என்ற வெள்ளை இன கிழட்டு நரியைக் குடியரசுக் கட்சி களத்தில் இறக்கிவிட்டுள்ளது. நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேல்தலில், ஒபாமா தோற்று, ஜான் மெக்கெய்ன் வெற்றி பெற்றால், அது ஜார்ஜ் புஷ் மூன்றாம் முறையாக பதவியேற்பதற்குச் சமமானதாகும். ஏனென்றால், உலகெங்கிலும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை விரிவுபடுத்த, ஜார்ஜ் புஷ் எட்டடி பாய்ந்தால், ஜான் மெக்கெய்னோ பதினாறு அடி பாயக் கூடியவர்.


 கிழடு தட்டிப்போன, போர்வெறிபிடித்த, ஊழல் பேர்வழியான ஜான் மெக்கெய்னோடு ஒப்பிடும் பொழுது, இளமையான, வசீகரமாகப் பேசத் தெரிந்த, ஊழல் கறையேதும் படியாத பாரக் ஒபாமாவின் தேர்வு இன்னும் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.


···


 ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு நடந்த முதல்கட்டத் தேல்தல்களில் பாரக் ஒபாமாவும்; முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும் அக்கட்சியினுள் போட்டியிட்டனர். ஹிலாரி, இத்தேர்தல்களின் தொடக்கக் கட்டத்தில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தேவையான தகுதியும், அனுபவமும் தனக்கே இருப்பதாகப் பிரச்சாரம் செய்து, ஒபாமாவைத் தோற்கடிக்க முயன்றார். ஆனால், ஹிலாரியின் இந்தப் பிரச்சாரம் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் எடுபடாமல் போகவே, ஹிலாரியின் ஆதரவாளர்கள் ஒபாமாவுக்கு எதிராக வெள்ளை இனப் பெருமையைக் கையில் எடுத்துக் கொண்டனர்.


 தெற்கு கரோலினா மாநிலத்தில் நடந்த முதல் கட்டத் தேல்தலில் ஒபாமா வெற்றி பெற்ற பொழுது,ஹிலாரியின் கணவர் பில்கிளிண்டன், ""தெற்கு கரோலினா கருப்பர்கள் நிறைந்த மாநிலம்'' எனக் கூறி, ஒபாமாவின் தோலின் நிறத்தை மறைமுகமாகச் சுட்டிக் காட்டினார். இதன் பொருள்,வெள்ளையர்கள் நிறைந்த பகுதிகளில் ஒபாமா வெற்றி பெற முடியாது என்பதாகும்.


 பில் கிளிண்டன் மறைமுகமாகச் சொன்னதை, பென்சில்வேனியா தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது, ""இங்கிருக்கும் சில வெள்ளையர்கள், ஒபாமா கருப்பர் என்பதால், அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள்'' என அம்மாநில கவர்னர் எட்ரெண்டல் பச்சையாகப் பேசினார். பில்கிளிண்டன் வெள்ளையர்கள் நிறைந்த கூட்டங்களில், ""ஒபாமா உங்களின் பிரதிநிதி அல்ல'' என நிறவெறியைக் கக்கிப் பிரச்சாரம் செய்தார்.


 வடக்கு கரோலினா மாநிலத்தில் நடந்த தேர்தலில் தோற்றுப் போன ஹிலாரி, இந்தியானா மாநிலத்தில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசிய ஹிலாரி கிளிண்டன், ""உழைக்கும், கடினமாக உழைக்கும் அமெரிக்கர்களின், வெள்ளை இன அமெரிக்கர்களின் ஆதரவை ஒபாமா பெற முடியாது'' என வெள்ளை இனத் திமிரைக் கக்கினார்.


 ""அந்நியப் பெயரைக் கொண்ட ஒரு கருப்பு மனிதனை நம்பி, இந்த நாட்டின் பாதுகாப்பை ஒப்படைக்க முடியுமா?'' என ஹிலாரியின் ஆதரவாளர்கள் விளம்பரம் செய்தனர்.


 ஒபாமா, கிறித்துவின் ஐக்கிய தேவாலயம் என்ற கிறித்துவ மதப் பிரிவைச் சேர்ந்தவர். இப்பிரிவின் மத குருவான ரைட், அமெரிக்கா, கருப்பின மக்களுக்கு இழைத்த கொடுமைகளைக் குறிப்பிட்டு, ""இறைவன் அமெரிக்காவை ஆசிர்வதிக்கத் தேவையில்லை; சபிக்கட்டும்'' எனப் பல ஆராதனைக் கூட்டங்களில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். ஹிலாரியின் ஆதரவாளர்கள் இப்பேச்சுக்களைத் தோண்டியெடுத்து வெளியிட்டு, அதன் மூலம், ஒபாமாவை அமெரிக்காவிற்கு எதிரானவராக  தேச பக்தி அற்றவராகச் சித்தரித்தனர்.


 இத்துணை அவதூறுகளுக்குப் பிறகும், ஒபாமாவின் வெற்றியை ஹிலாரியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ""அமெரிக்க மக்கள் மாற்றத்தை விரும்புகின்ற வேளையில், ஹிலாரி "தகுதி', "திறமை' என்ற பழைய பஞ்சாயத்தைப் பாடிக் கொண்டிருந்தது அமெரிக்க மக்களிடம் எடுபடவில்லை; ஒபாமா, கருப்பின மக்களை மட்டுமின்றி, முதன்முதலாக ஓட்டுப் போடப் போகும் இளைஞர்களையும் தன் பக்கம் கவர்ந்து இழுத்து விட்டõர்'' என ஒபாமாவின் வெற்றிக்குக் காரணங்கள் கூறப்படுகின்றன.


···


 ஜார்ஜ் புஷ், ஹிலாரி கிளிண்டன் போல ஒபாமா பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த கென்ய நாட்டைச் சேர்ந்த கருப்பருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளை இனப் பெண்மணிக்கும் மகனாகப் பிறந்தவர் ஒபாமா. அவர் சிறுவனாக இருந்த பொழுதே, தாயும், தந்தையும் பிரிந்துவிட்டனர். பிறகு, ஒபாமாவின் தாய் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்ட போதும், ஒபாமாவை அவர்தான் வளர்த்தார். ஒபாமா, தனது ஆரம்பக் கல்வியை ஏழை நாடான இந்தோனேஷியாவில் தான் முடித்தார். ஒபாமா திறமையான வழக்குரைஞர் என்ற போதும், தனது கல்வித் தகுதியைப் பயன்படுத்திக் கொண்டு, உயர் பதவிகளைப் பிடிக்க அலையவில்லை. மாறாக, கருப்பர் இன மக்கள் மத்தியில் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றினார்.


    அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகள் அமெரிக்க மக்கள் மத்தியில் எதிர்காலம் பற்றிய பீதியை உருவாக்கி இருக்கிறது; ஒபாமாவோ, ""இதனை நம்மால் மாற்ற முடியும்'' என்ற நம்பிக்கையை அமெரிக்க மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாகச் செயல்படுகிறார். எனவே, இப்படிப்பட்ட பின்னணி கொண்ட பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவில் ஒரு மாற்றம் ஏற்படும் என்றவாறு எதிர்பார்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.


 ஒபாமாவின் ஆளுமை குறித்து உருவாக்கப்படும் இந்த ஒளிவட்டங்கள், நம்பிக்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவரின் சமூகஅரசியல் கருத்துக்களைக் கீறிப் பார்ப்போம். அமெரிக்காவைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற டோனி மோரிசன் என்ற கருப்பினப் பெண் எழுத்தாளர், ""அமெரிக்கக் கருப்பின மக்களின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளாமல், வெள்ளை நிற அமெரிக்கர்கள், ஒரு ஆதர்சனக் கருப்பின அதிபர் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறார்களோ, அந்த விருப்பத்தை ஈடுசெய்யும் வண்ணம் இருக்கும் கருப்பு அமெரிக்கனை, அமெரிக்கா அதிபராகத் தேர்வுசெய்யக்கூடும்'' எனக் குறிப்பிட்டுள்ளார். ஒபாமா, அப்படிப்பட்ட ஆதர்சனக் கருப்பின அதிபராக இருப்பேன் எனக் காட்டிக் கொள்வதில் மும்முரமாக இருக்கிறார்.


 ஒபாமைவைப் பொறுத்தவரை, இனப்பாகுபாடு அரசியல் பிரச்சினையல்ல; வெறும் பொருளாதாரப் பிரச்சினை. ""கருப்பின மக்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் கிடைக்கவில்லை; தொழில். வேலைவாய்ப்பு போன்ற அவர்களின் ஜீவாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை; கருப்பினக் குடியிருப்புகளில் குழந்தைகள் விளையாட பூங்காக்கள் இல்லை; அப்பகுதியில் இருந்து குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு முறையான ஏற்பாடுகள் இல்லை. இவை போன்ற பற்றாக்குறைகள்தான் வன்முறை உருவாக உதவுகின்றன. கருப்பின மக்கள் இரண்டாம்தர குடி மக்களாக நடத்தப்படுவதற்கு இவைதான் காரணங்கள்'' என்கிறார் ஒபாமா. தீண்டாமைக்கும் இந்து மதத்திற்கும் தொடர்பில்லை என் ஆர்.எஸ்.எஸ். பித்தலாட்டம் செய்வது போல, நிறவெறிக்கும் வெள்ளையர்க்கும் தொடர்பில்லை எனக் காட்ட முயலுகிறார், ஒபாமா.


 கிறித்தவ மதகுரு ரைட், ""கடவுள் அமெரிக்காவைச் சபிக்கட்டும்'' எனப் பேசி வருவதை, மனசாட்சியுள்ள எந்தவொரு கருப்பின அமெரிக்கனும் ஆதரிக்கவே செய்வான். ஆனால், ஒபாமாவோ வெள்ளை நிறக் கனவான்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற சுயநலத்திற்காக, அம்மதகுருவின் பேச்சுக்களை இப்பொழுது கண்டித்துள்ளார். தீண்டாமைக்காக இந்து மதத்தை வெறுக்கக் கூடாது என்பது போல, வெள்ளை நிறவெறிக்காக அமெரிக்காவைக் குற்றம் சொல்லக் கூடாது என்கிறார்,ஒபாமா.


 இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது போல, அமெரிக்க அரசு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கருப்பின மக்களுக்குச் சட்டபூர்வ சலுகைகளை வழங்கி வருகிறது.வெள்ளை நிறவெறியர்கள் இச்சலுகைகளை அடியோடு ரத்து செய்ய வேண்டும் எனக் கோருகிறார்கள். ஒபாமா இப்பிரச்சினையில் கழுவுற மீனில் நழுவுற மீனாக நடந்து கொள்கிறார். இது போன்ற சலுகையை பல்கலைக் கழகங்கள் வழங்கும் பொழுது, இன அடிப்படையைவிட, பொருளாதார வரையறையை அளவு கோலாகக் கொள்ளலாம் என ஆலோசனை கூறுகிறார். இப்படிபட்ட ஒபாமாவை, வெள்ளைக்காரர்களுக்கு மட்டுமல்ல, நம்நாட்டுப் பார்ப்பனர்களுக்கும் பிடிக்கும்.


 கருப்பின ஒபாமாவின் இந்தச் சறுக்கல்களுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அவரது நடுத்தர வர்க்கத்துப் பின்னணி. ஒபாமாவின் தந்தை கருப்பராக இருந்தாலும்கூட, வெள்ளை நிறத் தாயும், பாட்டியும்தான் அவரை வளர்த்தனர். ஒபாமா, தனது ஆரம்பக் கல்வியை இந்தோனேஷியாவில் உள்ள மேட்டுக்குடி பள்ளிக்கூடத்திலும்; சட்டப்படிப்பை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும் முடித்தார். இருபது வருடத்திற்கு மேலாகத் தவறாது தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்யும் வழக்கமுடையவர். கிறித்தவ மதக் கோட்பாட்டிற்கு ஏற்ப மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் என்ற கட்டுக்கோப்பான குடும்ப வாழ்க்கையை நடத்தி வருபவர். அவரது நடை, உடை, பாவனை, ரசனை, பேச்சு, பொழுதுபோக்கு என்ற அனைத்தும் கனவான்களுக்கேயுரிய கண்ணியமிக்கது. அரசியலில் பெரிய பதவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே பொது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர், ஒபாமா.


 வடக்கு கரோலினாவைச் சேர்ந்த ஸ்டீவ் ரெஹ்மர் என்ற வெள்ளை இன சிறு வியாபாரி,  ஒபாமா தன்னை அச்சமூட்டுவதாகக் கூறுகிறார். இது, நடுத்தர வர்க்கத்து வெள்ளை இனத்தவரின் மனோபாவத்தைப் பிரதிபலிக்கும் கருத்து. எனினும், ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியில் அதிருப்தியடைந்துள்ள ஸ்டீவ் ரெஹ்மர் போன்ற கட்சிசாராத வெள்ளையர்களின் வாக்குகளைப் பெற்றால்தான், ஒபாமாவால் அதிபர் தேர்தலில் வெற்றி அடைய முடியும். அதனால், வெள்ளையர்களைக் கோபமடையச் செய்யும் எந்தவொரு சர்ச்சைக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்வதில் ஒபாமா குறியாக இருக்கிறார். பெரும்பான்மையான வெள்ளை இனத்தவரின் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதற்காகவே, தன்னை நிறப் பாகுபாடுகளைக் கடந்தவராகக் காட்டிக் கொள்ள முயலுகிறார், ஒபாமா.


···


 ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போரை, ஒபாமா அப்போரின் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒபாமைவை அதிபர் வேட்பாளராக அறிகவிக்கவுள்ள ஜனநாயகக் கட்சியோ, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்த பொழுதும், ஈராக் போருக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிபர் ஜார்ஜ் புஷ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வைத்த பொழுது, அதனை எதிர்த்து வாக்களிக்க மறுத்துவிட்டது. இக்கட்சியைச் சேர்ந்த பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த பொழுது. ஈராக் மீது ஒரு தாழ்நிலை ஆக்கிரமிப்புப் போரை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமாவை, தவறான கட்சியில் இருக்கும் சரியான நபராகப் பார்க்க முடியுமா?


 ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவது மட்டும் பிரச்சினையல்ல. மேற்காசியாவில் அமெரிக்காவின் மேலாதிக்கமும், இசுரேலின் அடாவடித்தனங்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையாகும். ஆனால், ஒபாமாவோ, அமெரிக்காவிலுள்ள யூதவெறியர்களிடம், அமெரிக்காவுக்கும், இசுரேலுக்கும் இடையேயுள்ள தனிச் சிறப்பான உறவு தொடரும்; பிற அரபு நாடுகளுடன் இசுரேல் கொண்டுள்ள உறவிலும், இசுரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் பகுதிகளிலும், இசுரேலுக்குச் சாதகமாகவே நடந்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்து, வாக்குக் கேட்டுள்ளார்.


 மேலும், பாகிஸ்தானில் உள்ள முசுலீம் தீவிரவாதிகளின் முகாம்களை பாக். அதிபர் முஷாரப் தாக்கத் தயங்கினால், நாம் குண்டு போட்டுத் தாக்குவோம்; ஆப்கானிஸ்தானுக்குக் கூடுதலாகப் படைப் பிரிவுகளை அனுப்ப வேண்டும் என்றும் கூறி, அமெரிக்கா வின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை களுக்குத் தான் தடையாக இருக்க மாட்டேன் என ஒபாமா உறுதியளித்து வருகிறார்.


 எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவால் பாதுகாக்கப்படும் கியூபா நாட்டு அகதிகளிடம் வாக்குச் சேகரிக்கும் பொழுது, கியூபாவில் சுதந்திரத்தைக் கொண்டு வருவதற்காக, கியூப அமெரிக்க தேசிய அமைப்போடு கைகோர்த்துக் கொள்வேன் எனக் கூறி, தனது கம்யூனிச எதிர்ப்பையும் பதிவு செய்துவிட்டார், ஒபாமா.


 கியூபா, ஆப்கான், அரபு நாடுகளின் இறையாண்மைக்கு எதிரான ஒபாமாவின் பேச்சுக்களை, வாக்குகளைப் பெறுவதற்காகச் செய்து கொள்ளப்பட்ட சமரசம் என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அமெரிக்கா நடத்தி வரும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பது, ஜார்ஜ் புஷ் என்ற முட்டாள் அதிபரின் சொந்த விருப்பம் அல்ல. அது, நாடாளுமன்றம் என்ற திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு, அமெரிக்காவை ஆண்டு வரும் நிதி ஆதிக்கக் கும்பல்களின் விருப்பம்; அமெரிக்காவின் தேசங்கடந்த எண்ணெய் கழகங்களின், ஆயுதத் தளவாட நிறுவனங்களின் விருப்பம்; கிறித்தவ மத வெறியர்கள், யூத மதவெறியர்களின் விருப்பம். இந்த விருப்பத்திற்கு எதிரான யாரும், அவர் வெள்ளையராக இருந்தாலும் கூட அமெரிக்க அதிபராகிவிட முடியாது.


 அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்தியக் கொள்கைதான், கருப்பின மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகி றது; எதிர்காலம் பற்றிய பீதியை அமெரிக்க மக்களிடம் உருவாக்கி இருக்கிறது. முதலாளித்துவ நாடாளுமன்றத்திற்கு நடத்தப்படும் தேர்தல்கள் மூலம், அடிப்படையான எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது என்பதற்கு பல நாடுகளின் அனுபவங்கள் சான்றாக உள்ளன. அமெரிக்க ஜனநாயகம் பற்றிய வீண்பெருமையில் மூழ்கிக் கிடக்கும் அமெரிக்க மக்களுக்கு இந்த அனுபவங்கள் கண்ணில் படாது, அமெரிக்க மக்கள் பட்டுத்தான் புரிந்து கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டுமானால், பாரக் ஒபாமாவின் தேர்வு பயன்படக்கூடும்.