Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை அரசின் விருப்பத்துக்கு மாறாகவே, இந்தியா மீண்டும் நிர்ப்பந்தத்தை அடிப்படையாக கொண்ட ஒரு தலையீட்டைத் தொடங்கியுள்ளது. யூன் 16ம் திகதி இலங்கை வெளிவிவகார  அமைச்சர் ரோஹித போகொல்லாகம இந்திய ஆளும் வர்க்கத்தைச் சந்தித்த பின் அவர் வெளியிட்ட அறிக்கையில் 'இலங்கையின் உள்விவகாரங்களில் இந்திய அரசாங்கம் அநாவசியமாக தலையிடாது" என்ற நம்பிக்கையை பகிரங்கமாக வெளியிட்டார். இதன் மூலம் இலங்கை விரும்பாத ஒரு இந்தியத் தலையீடு இருப்பது, இப்படி வெளிப்பட்டது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு என்பது, பேரினவாத அரசின் துணையுடன் தொடருகின்ற ஒரு நிலையில் தான், இலங்கை விரும்பாத வகையில் ஒரு தலையீடு இருப்பது வெளிப்பட்டது. இதையடுத்து முன் கூட்டியே திட்டமிடாத வகையில், இந்தியாவின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் இலங்கைத் திடீர் வருகையும் அரங்கேறியது. அத்துடன் அவர்களின் சந்திப்புக்கள், கருத்துக்கள், இலங்கையுடனான முரண்பாட்டை வெளிப்படையாக்கியது. மக்களுக்கு எதிரான மிகக் கூர்மையான எதிர்கால மாற்றங்கள், மிக வேகமாக நிகழ்வதற்கான சூழல் காணப்படுகின்றது. 

 

புலிக்கு எதிரான ஒரு அழித்தொழிப்பு யுத்தத்தை, இலங்கை அரசுடன் சேர்ந்து இந்தியா ஓருபுறம் நடத்திக்கொண்டு இருக்கின்றது. மறுபக்கத்தில் இலங்கை அரசுடன் ஓரு நிழல் யுத்தத்தை நடத்தி வந்தது. அது தற்போது உச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் இரண்டும் ஒரு புள்ளியில், ஒரு நோக்கில்தான் இயங்குகின்றது. 

 

ஆனால் நிழல் யுத்தத்ததின் சாரப்பொருள் வெளித்தெரியாத வண்ணம், அது உருத்திரிந்து காணப்படுகின்றது. அது திரிந்து வெளிப்படும் விதமோ, தமிழ் மக்கள் சார்பு வேஷம் போடுகின்றது.

 

1.புலியொழிப்பு யுத்தம் மூலம் இனப்பிரச்சனையை தீர்க்க முடியாது என்றும்

2.தமிழ் மக்களி;ன் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வைக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றது.

 

இப்படித் தான் இந்தியா இலங்கையுடன் முரண்படுவதாக இட்டுக் கட்டப்படுகின்றது. அப்படித் தான் இந்த முரண்பாடு இருப்பதாக இந்தியா தரப்பும், மறுபக்கத்தில் புலி மற்றும் புலியெதிர்ப்பும் கூறிக்கொள்கின்றது. ஆனால் உண்மையான முரண்பாடோ இதுவல்ல.

 

மாறாக

1.யுத்தம் மூலம் புலியொழிப்பு என்பது, இந்தியாவின் பிராந்திய எதிரிகளுடன் அதிகளவில் இலங்கை சார்ந்து செல்வதற்கே வழிவகுக்கின்றது. இதை இந்தியா விரும்பவில்லை. அவர்களை இந்தியாவுக்கு அருகில், இந்தியாவுக்கு எதிராக பலப்படுத்துவதை இந்தியா தடுக்க விரும்புகின்றது. இந்த வகையில் யுத்தம் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பதை எதிர்க்கின்றது.

 

2. தீர்வு வழங்கப்படாத யுத்தம் ஏற்படுத்தும் வெற்றிடத்தில், மக்களைச் சார்ந்த புரட்சிகரப் பிரிவுகளை உருவாக்கும். இப்படி இந்திய நலனுக்கு எதிராக, இலங்கையில் புரட்சிகர  பிரிவுகளின் வளர்ச்சியை தடுக்க விரும்புகின்றது. எந்தக் கூலிக் குழுவும், அரசியலில் நீடித்து நிலைக்கு முடியாது, ஒரு வெற்றிடம் ஏற்படும்;. இதை நிரப்புவது எப்படி என்ற கவலை தீர்வை வைக்கக் கோருகின்றது. அப்போது தான் திரிபு வெற்றிகரமாக வெற்றிடத்தை நிரப்பும்.  

    

இப்படி இந்திய நலன் முதன்மை பெற, மக்கள் தமது கையில் அதிகாரத்தை பெறுவதை தடுக்க, இலங்கையில் ஒரு தலையீட்டை இந்தியா தொடங்கியுள்ளது. இதில் இலங்கை இந்திய முரண்பாட்டிற்கான புள்ளி எது?

 

புலியை அழிப்பதாக இருந்தாலும் இந்தியாவின் அனுசரணையுடன் தான், அதை அழிக்க வேண்டும். இந்தியாவின் நலனுக்கு எதிரான சக்திகளுடன் இலங்கை எந்த வகையில் செல்வதையும், இந்தியா விரும்பவில்லை. இதை தடுக்க விரும்புகின்றது. 

 

முரண்பாடு தொடங்க அடிப்படையாக இருப்பது, அரசு நடத்தும் யுத்தம் தான். முரண்பாடு புலியை அழிப்பதில் அல்ல, புலியை அழிப்பதாக கூறிக்கொண்டு, இலங்கையில் உருவாகும் புதிய சர்வதேச உறவுகள் தான் சர்ச்சைக்குள்ளாகின்றது. யுத்தம் செய்யும் வளங்களை பெற, இந்தியாவின் பிராந்திய எதிரிகளுடன் அரசு கொண்டுள்ள உறவுகளை தடுக்கவே, யுத்தம் மூலம் தீர்வை அடைய முடியாது என்கின்றது.

 

தீர்வை வழங்காத எந்த அழித்தொழிப்பு யுத்தமும், புரட்சிகரப் பிரிவை உருவாக்கும். தீர்வை வழங்கிய யுத்தம், புரட்சிகர பிரிவை உருவாக்காத வண்ணம் ஒரு அரசியல் திரிபைப் புகுத்தமுடியும். இதன் மூலம் இந்தியா விரும்பும் அழித்தொழிப்பு யுத்தத்தை பலப்படுத்தவும், யுத்த செலவை குறைப்பதன் மூலம் பிராந்திய தலையீட்டை தடுக்கவும் முடியும்; என்று கருதுகின்றது. இதன் மூலம் தானே இலங்கை ஊடாக யுத்தத்தை தனித்து நடாத்திவிட முடியும் என்று, இந்தியா கருதுகின்றது.  

 

ஒரு யுத்தத்துடன், அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலம், புலிக்குள் பாரிய பிளவுகளை உருவாக்க முடியும்-  யுத்தத்தில் களைத்துப் போயுள்ள புலிகள், மாற்று வழி தெரியாது தடுமாறுகின்றனர். தீர்வு மூலம் புலியில் ஒரு பிளவையும் ஒரு சீரழிவையும் உருவாக்க முடியும் என்று, மிகச் சரியாகவே இந்தியா கணிப்பிடுகின்றது.

 

மறுபக்கத்தில் தீர்வு ஊடாக புலிகளை சிதைக்காத பட்சத்தில், புலி எதிர்கொள்ளும் யுத்த நெருக்கடி, புலிக்குள்ளேயே புதிய புரட்சிகர தலைமையை உருவாக்கிவிடும் அபாயத்தை உணருகின்றது அல்லது அதை இனம் கண்டிருக்கின்றது. அது ஏற்படின் இந்திய இலங்கை கூட்டு யுத்தத்தையே தோல்வி அடைய வைத்துவிடும் அபாயத்தை, இந்தியா இனம் காண்கின்றது.

 

இலங்கையில் யுத்தத்தை மட்டும் நடத்த பேரினவாத அரசு விரும்புகின்றது. இதன் மூலம் அது அடைய விரும்புவது சிங்களப் பெரும் தேசிய கனவுகளையல்ல. மாறாக யுத்தம் மூலம் ஜனாதிபதியும் அவரைச் சுற்றி உள்ள அதிகார வர்க்கங்களும் பணத்தை சம்பாதிக்க விரும்புகின்றது. திடீர் பணக்கார கும்பல் ஒன்று புலியொழிப்பு யுத்தம் மூலம் தோற்;றம் பெற்றுள்ளது. இதனால் இது மேலும் யுத்தத்தை விரும்புகின்றது. யுத்தத்தில் வெல்வதன் மூலம், நீண்ட காலம் அரசியலில் இருக்கவும், தான் மேலும் சம்பாதிக்கவும் முடியும் என்ற அனுமானம் யுத்தத்தை வெல்லும் வகையில் திவீரமாக இயங்குகின்றது.  

 

இப்படி பணம் சம்பாதிப்பதும், மறுபுறத்தில் அதிகாரத்தில் நீடிக்கவும், இவர்களுக்கு யுத்தம் அவசியமாகின்றது. இந்த யுத்தத்துக்கு தேவையான வளங்களை திரட்டுவதற்காக, இந்தியாவின் எதிரியையும் தனது நன்பனாக்குகின்றது.

 

இதில் தான் இந்தியா முரண்படுகின்றது. தனக்கு எதிராக இது மாறிவருவதை நிறுத்த, யுத்த மூலம் தீர்வு சாத்தியமில்லை, தமிழ் மக்களுக்கு தீர்வு என்ற கோசத்தை வைக்கின்றது. இந்தியா 1983 இலும், பின் 1987 இலும்; எடுத்த அதே நிலையை இன்று கையில் எடுத்துள்ளது.

 

இன்று அரசைக் கட்டுப்படுத்த, புலியைப் பலப்படுத்த முடியாத வகையில் இந்திய புலி முரண்பாடு உள்ளது. வளர்த்த கடா மார்பில் முட்டிய அனுபவம், இந்தியாவின் முன் உள்ளது. இந்தியா தனது நலனுக்காக அரசுக்கு எதிரான புதிய குழுக்களை உருவாக்குகின்ற சூழல் ஒருபுறம். மறுபக்கத்தில் 1987 அனுபவத்தின் அடிப்படையில், இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் அதிரடி அணுகுமுறை.

 

ஒரு தீர்வை வைப்பதன் மூலம் புலியை பிளந்து, புலியை தடுமாற வைத்து யுத்தத்தில் அவர்களை இலகுவாகத் தோற்கடிப்பதன் மூலம், இலங்கையில் தான் அல்லாத அன்னிய தலையீட்டை இல்லாததாக்குவதே, இந்தியாவின் முனைப்பான நோக்கமாக உள்ளது.

 

இதன் மூலம் புலியை இலகுவாக தோற்கடிக்க முடியும். புரட்சிகரப் பிரிவு உருவாகுவதைத் தடுக்க முடியும். அன்னிய தலையீட்டை மட்டுப்படுத்த முடியும்;. இது தான் இந்தியாவில் தலையீட்டை துரிதமாகின்றது.

 

இலங்கை விரும்புவது யுத்தத்தைக் கொண்டு அதிகளவில் சம்பாதிப்பது, தீர்வற்ற வெற்றி மூலம் தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்கு ஏற்ப யுத்தத்தைத் நடத்துவது.
   
இந்தியாவுடன் பிராந்திய முரண்பாடுகள் கொண்ட சக்திகள், இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக தீர்வற்ற யுத்தம் மூலம் யுத்தத்தை வெல்ல வழிகாட்டுகின்றது. இதன் மூலம் தான், இலங்கையில் அதனால் கால் ஊன்ற முடியும் என்ற நிலை. இதனால் தேவையான யுத்தத் தளபாடங்களை, இந்தியாவை மிஞ்சும் வகையில் வாரி வழங்குகின்றது.

 

இந்த நிலையில் இந்தியாவின் திடீர் அழுத்தங்கள், இதற்கெதிரான ஒரு பாய்ச்சல் தான். புலியை ஒழிக்க முழுமூச்சுடன் தன்னை ஈடுபடுத்தும் இந்தியா, மறுபக்கத்தில் அதை எப்படி செய்வது என்பதில் இலங்கையை தன் வழிக்கு கொண்டுவந்து ஒரு பிராந்திய ஆக்கிரமிப்பாளனாக இருக்க முனைகின்றது.

 

இந்திய நலன் சார்ந்த ஒரு மாற்றமும், இதனடிப்படையில் தீர்வு மக்கள் சார்பான வேஷத்துடன் ஒரு அரசியல் திரிபாக வரவுள்ளது. இதை முன் கூட்டியே முறியடிக்கும் வண்ணம், இதை அம்பலப்படுத்தி அரசியல் ரீதியாக போராட வேண்டிய அவசியத்தை நாம் சுட்டிக் காட்டுகின்றோம்.

 

பி.இரயாகரன்
24.06.2008