(புலி-தமிழ்மக்கள் எதிர்ப்புக் கும்பலான ரீ.பீ.சீ வானொலியின வரம்புமீறிய அவதூறுக்கு எதிராகவும், அதன் "சிங்கள அரசு-இந்திய மேலாதிக்கங்களுக்கான எடுபிடிக்"கைக்கூலி"த் தனத்தை" அம்பலப்படுத்தும் ஒரு நோக்கு!)

"அனைத்து உலகத்தாலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளபட்ட ஜனநாயகத்தில் "மனிதர்கள் தம்மைத் தாமே சுயநிர்ணயஞ் செய்வதற்கும், சமூகத்தில் தனது கருத்தை வெளிப்படையாகக் கூறுவதற்குமான உரிமைகளை" குறிப்பிட்டவொரு "அரச"வடிவம்
மட்டுப்படுத்த முடியாதென்பதாகும். ஜனநாயகமானது இன்று "புதிய ஜனநாயகமாக"அபிவிருத்திக்குட்பட்டாக வேண்டும்! அவசர அவசியமாக இது நடைமுறைக்கான வழிவகைகளைக் கண்டடைய வேண்டும். மிக அண்மைய 250 வருடங்களுக்குப் பின்பான மனித நடத்தைகளின் சமூகப் பொருளியல் நகர்வுக்கு ஒத்தாசையாகவும் பின்பு அதையே மனிதப் பலாத்தாகரத்துக்குமான ஆயுதமாகவும் பயன்படுத்தப்படும் கால வர்த்தமானத்தில் நாம் வாழ்வதாலும், இதன் தாத்பரியம் உணர்வு பூர்வமாகப் புரியப்படவில்லை. சுதந்திரம்-தனித் தேர்வு,சுய வெளிப்பாடு-சுயதேர்வு ஆகிய மனித நடத்தையின் சுய நிர்ணயத்துக்கு இந்த ஜனநாயக விழுமியம் மிக அவசியமானது".

"மனிதரின் வாழ்க்கையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல, சமூக வாழ்க்கையே மனிதரின் உணர்வை நிர்ணயிக்கிறது"-கார்ல் மார்க்ஸ்.

எந்த வகைகளில் நாம் இன்றெமது நாட்டின் அரசியல் போக்குக் குறித்துப் பேசமுடியும்? நாட்டில் நிகழ்கின்ற இருவேறு அரச ஜந்திரக்களுக்குள் நிலவும் மனித விரோதப் போக்குகளின் வாயிலாகத் தினமும் மனிதப் படுகொலைகளும், மனித வருத்தல்களும் நடைபெறும்போது, ஜனநாயகச் சூழலுக்குள் வாழ்ந்த இலங்கையர்கள் எங்ஙனம் இந்த இருள் சூழ்ந்த நிலைமைக்குள் மௌனித்தார்கள்? நாம் பாகிஸ்தானிலோ அல்லது அவ்கானிஸ்தானிலோ வாழவில்லை! எனினும் எமது நாடுகள் இத்தைகய இராணுவச் சர்வதிகாரத்துக்கு(பாக்-அவ்கான்) நிகராகப் பாரிய வன் கொடுமை அரசுகளாக விரிவடைந்துள்ளன.

இலங்கையின் இன்றைய அரச நிர்வாகச் சூழல் ஒற்றையரச வடிவத்துள் நிலைபெற்றுப் பரிபாலனம் செய்யப்படவில்லை. இலங்கையில் நாம் ஏற்க மறுத்தாலுஞ்சரி அல்லது ஏற்றாலுஞ்சரி இருவேறு அரச ஜந்திரங்கள் நிலை பெற்றுவிட்டன! இந்த இருவேறு அரச ஜந்திரங்களினதும் குறிக்கோள் ஒன்றுதாம். எனினும் தத்தமது மக்களின் நல் வாழ்வு குறித்த கரிசனையில் சிங்கள வன் கொடுமையரசானது ஒருபடி மேலே சாதகமாகச் செயற்படுகிறது. எமது தரப்பிடம் பாரிய உற்பத்திவலுவற்றதால் இந்த ஜனநாயகத் தன்மை மிக அபிவிருத்தி பெறவில்லை. -இதுவுண்மையான ஒரு மனித அவலம்.ஜனநாயகத்தின் அபிவிருத்தியானது அடிப்படை அரசியற் கட்டுமானத்தின் மூலமும், வளர்வுறத்தக்க இயல்பு நிலையைப் பொருள் உற்பத்தியுடன் எட்ட முடியுமென்பது என் தாழ்மையான கருத்து. எமது நாடுகளின் இருவேறு அரச ஜந்திரங்களையும்,வௌ;வேறான தனித்துவ இயக்கமாக நிறுவுவதில் முனைப்புறும் எமது கருத்துருவத்துக்கு வலுச்சேர்ப்பதல்ல எமது தலையாய நோக்கு!


இன்றெமது அடிப்படைப் பிரச்சனைகளுக்கு மூல காரணம், அரச வடிவமானது ஜனநாயகத்தின்பாலான மனித மதிப்புகளுக்குத் தலை சாய்க்காது படுபிற்போக்கான முறைமையில் மக்கள்-இனங்களின் சொத்தைக் கொள்ளைகொள்ளும் ஓட்டுக் கட்சி ஆதிக்கமாகும். முதலாளித்துவத்தில் இது விட்டொழிக்க முடியாதவொரு பெரும் ஊழ்வினை. இத்தகைய அனுகூலமற்றவொரு அரச நிர்வாகக்கட்டமைப்பில் இனங்களுக்கிடையிலான பொருள்வய விருப்புறுதி மிக அண்மையக் காலத்தின் இன முரண்பாடாக வெடித்தபோது நமக்கு இருவேறு நிர்வாக அலகுகளின் ஆதிக்கம் தவிர்க்க முடியாது வந்து சேர்ந்தன.

இந்த முறைமைக்குள் ஜனநாயகப் பண்பில் பாரிய பண்பு மாற்றம் நிகழ்வதற்கான ஊக்கம் இயல்பாக நடைபெற்றபோது, அந்த வகையானவொரு சமூக வாழ்வு தற்செயலாக நம்மைத் தடுத்தாட் கொண்டது. இங்கே ஜனநாயத்தின் உயிர் ஊசாலாடிக் கொண்டது!

புதியதாகப் படைத்தல். புதிய ஜனநாயகப் புரட்சியின் அவசியத்தோடுதாம் நமது நாடுகளின் சமூக வளர்ச்சி ஸ்த்தம்பித்திருக்கிறது. பொருளாதாரத் திட்டமிடல்-தகவமைத்தல், பொறிமுறையைப் புரட்டிப்போட்டுப் புதிய பாணியில் புதுமைப்படுத்துதல் போன்றுதாமிந்த ஜனநாயகப்படுத்தலும் மிக அவசியமாகும். மேற் சொன்ன வகையில் பொருளாதாரப் பொறிமுறையைப் புரட்டிப் போடும்வேளைகளில் அதன் கட்டமைப்பில் பாரிய மாற்றம் தவிர்க்கமுடியாது ஏற்படும். அங்ஙனம் செய்வது-ஏற்படுத்துவதுபோன்று இன்றைய ஜனநாயகத்துக்கான மாற்றீடாகப் புதிய ஜனநாயகப் புரட்சி "ஜனநாயகக் கட்டமைப்பை"21ஆம் நூற்றாண்டுக்கான தகமையுடன் அதை நிறுவிக்கொள்ளவேண்டும். இது வெறும் மன விருப்பல்ல. இதற்கான தெளிந்த திட்டவரைவுகள்-போராட்டப்பாதைகள், நண்பர் யார்-எதிரியார்?என்று வரையறை செய்யப்பட்டும், எவர் இப் போராட்டத்தில் முன்னணியாளர்கள் என்றும் பாரிய"பொதுக் கொள்கை"(Concept)திட்டமிடப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் இத்தகைய பொதுக்கொள்கைகள் பற்பல காலத்தில் உருவாக்கப்பட்டுப் பின்னது இருந்த இடந்தெரியாது புதைக்கப்பட்டதும் புரட்சிகரக் கட்சிகளுக்குப் புதியதல்ல. மக்கள் ஆதிக்கம் பெறுவதுதாம் இதன் தெளிந்த நோக்கு.


கட்சி அரசியலும், அதன் ஆதிக்கமும்:

கட்சி அரசியலின் ஆர்வங்கள் மக்கள்சார்ந்த அபிவிருத்திகளை மட்டுப்படுத்தித் தமது நிர்வாகத் திறமைகளை அந்நிய தேசங்களின் ஆர்வங்களுக்குத் தரகு வேலைபார்ப்பதில் செலவாக்கியபோது தேசம் மனிதச் சிறைக் கூடமாக மாற்றமுறும் புறச் சூழல் மிக வலுவாக முகிழ்த்துக் கொண்டது. இந்தச் சூழலை இனங்கண்ட இலங்கைத் தேசிய வாதமானது தனித்துவத்தைச் சிங்கள மக்கள் சமுதாயத்தின் பெரும் சொத்தாகவும், சிங்கள மக்களே இலங்கையின் பூர்வீகக் குடிகளாகவும் சமூக உளவியலைத் தயாரித்தது. இத் தயாரிப்பானது மக்கள் வெளிக்குள் ஒரு பெரும் இனத்துவ அடையாளத்தை வற்புறித்திக் கொண்டது! இங்கேதாம் சிங்கள இன அதிகார வர்கத்தின் அத்துமீறிய இனவொதுக்கல், அரச சட்டவாக்கங்கள்-வரைவுகள் தமிழினத்துக்கு விரோதமான-ஜனநாயக மறுப்பாக முகிழ்த்து முழு இலங்கையையும் சுடுகாடாக்கும் அரச வன்முறையாக ஆதிக்கம் பெற்றது.

கட்சியரசியலானது தனது ஆர்வங்களைத் தனித்துவமாக்கிக் கொண்டு ஆளும் வர்க்கத்தின் தயவிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தானே நேரடியான ஜனநாயகத் தன்மையினது தடுத்தாட்கொண்ட செல்லப் பிள்ளையாக மலர விரும்பிய போது, இக் கட்சிகளின் ஆதிக்கமானது அதிகார வர்க்கத்தின் கடைக்கோடிய அரசியல் முகிழ்ப்புக்கும, இராணுவச் சர்வதிகாரத்துக்கும் அடி பணியும் பாராளுமன்ற ஒட்டுக்கட்சிகளின் அற்பத்தனங்களின் கனவில் மண்ணையள்ளிப் போட்டபோது, அதுவே தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறையாகத் தோற்றம் பெற்றது- இலங்கைக் குறுந் தேசிய வெறி தமிழ் மக்களின் பரம விரோதியாகியது.

இத்தகைய நிலையில் ஜனநாயத்துக்கான கட்டமைப்பு புதிதாகக் கட்டியமைப்பதுமட்டுமல்ல புதிய முறையிலாக ஜனநாயகத்தைப் படைப்பதும் வளர்த்தெடுப்பதற்கான வழி முறைகளைக் கண்டடைய வேண்டிய தேவையை இந்த ஓட்டுக்கட்சிப் பாராளுமன்றமும், சிங்கள இராணுவச் சர்வதிகாரமும் நமக்கு இன்று முன்வைத்திருக்கிறது. பாராளுமன்றச் சட்டத் திருத்தங்களும்,நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையும் இலங்கையில் கட்சிகளின் மேலாதிக்கதை மிக இலகுவாக அறிவதற்கானவொரு அளவு கோலாகும். நிலவுகின்ற அதிகார வர்க்கத்தின் கொடுமைகளையும், அத்தோடு கட்சிகளின் அதிகாரத்துவத்தையும் இலங்கை அரச அமைப்பு வடிவத்துக்குள் உள்வாங்கியபின், நேரடியாக அவை மக்கள்மீது செல்வாக்குச் செலுத்தும் காட்டாட்சி நிலையை ஏற்படுத்தியது வரலாறு. எமது கல்வியாளரிடம் கட்சிகளினது வல்லாதிக்கம் பற்றிய பாரிய புரிதல் சமூக விஞ்ஞானத் தளத்தில் அன்றிருக்கவில்லை. எனினும் காலஞ் சென்ற தோழர் சண்முகதாசன் அவர்கள் 23.12.1989 இல் வீரகேசரியில் ஒரு கட்டுரையில்(கொர்பச் சேவ் வீழ்ச்சி கண்டுவிடக்கூடும் என்று மேற்குலகம் அச்சம் கொள்வதன் காரண மென்ன?) இந்தக் கட்சிகுறித்த பார்வையை சோசலிசக் கட்சிக்குள் இனம் கண்டு, அதன் மத்தியத்துவ கொள்கைக்குள் முரண்பட்ட நிலைமைகளை ஜனநாயகத்தோடு பொருத்த முற்பட்டும் அதைப் பெரிதாக வளர்த்தெடுக்க முடியாது குறிக்கியிருந்தார். நாம் அக்கட்டுரையை விரிவாக விளங்குவதும் அவசியமானது இன்று.

மக்கள் நலக் கல்வியாளர்களின் பற்றாக் குறையானது இன்றுங்கூட நமது மக்களுக்காகப் போராட வெளிக்கிட்ட தமிழர்களை சிங்கள ஆளும் வர்க்கத்தின் எலும்புத் துண்டுக்காக வாலாட்டும் சூழலுக்குள் குப்பறத் தள்ளிவிட்டது.

கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒழிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி, ஆயுட்காலத் தலைமை, வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில், சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது. இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும், ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட நமது தேசங்களின் கட்சி ஆதிகத்துள் நிலவுவதில்லை. இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும்,செய்திய+டகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும், பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள். இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன. இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது. ஜனநாயகத்துக்கு எதிரானது. மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இவற்றின் இயக்குனர்கள்.

இத்தகைய கட்சிகளின் ஆசியில் நலம்பெற்று, இன்னும் பதவி-பணம்பெற விரும்பும் இன்னுமொரு சமூகவிரோதக் கும்பல் மக்களின் உரிமைகளைத் தமது வரும்படிக்காகத் திட்டமிட்டுச் சிதைக்கிறர்கள். இவர்கள் மக்களுக்குள் ஒழிந்திருந்தபடி அந்த மக்களையே கொலைசெய்து அவர்களின் குருதியில் தமது குடும்ப நலத்தைத் தக்க வைக்கிறார்கள். இத்தகைய மனித விரோதக் கும்பலில் ஒன்றுதாம் ரீ.பீ.சீ.வானொலி மற்றும்"தேனீ-ஆனந்தசங்கரி" இணையத்தளம். இது குறித்துக் கட்டுரையில் பின் பகுதியில் பார்ப்போம்.

இத்தகைய கட்சியாதிக்கத்தின் காட்டாட்சியை நாம் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள தமிழ்நாட்டைக் கொஞ்சம் உற்று நோக்கினால் மிகவும் பொருத்தமாகவிருக்கும்.இது குறித்து விளக்கம் தேவையில்லை.

இந்தப்பண்புகளின் வெளிப்பாடே புரட்சிகர இயகங்களின்மீதும் பாரிய செல்வாக்குச் செலுத்தியது. இலங்கையில் தோன்றிய சகல இயக்கங்களும் ஏதோவொரு வகையில் சிங்களவரசின் ஆதிக்கத்துக்கெதிராகவே தோற்றும் பெற்றன. எனினும் அவற்றைத் திசை திருப்பிய அந்நிய ஆதிக்கம் பற்றிய புரிதலைவிட்டு, இயக்கவாத மாயை எங்ஙனம் நமது கட்சி ஆதிக்கத்தோடு தொடர்புடையதென நாம் பார்த்தோமானால் இன்றையு இந்த உண்மை முகத்தில் ஓங்கியடிக்கும்.

தனிநபர் வழிபாடு,
இயக்கவாதம்,
தனித்த இயக்கம்,
மாற்றுக்கருத்து முடக்கம்
எதிர்கட்சிக்குத் தடை
மக்கள் சுய வெழிச்சியின்மை போன்ற அனைத்தும் இந்தப் பண்பின் குட்டிகளாகும்!

ஓட்டுக்கட்சிகளின் ஆதிகத்தின் வாயிலாக மக்களால் தேர்ந்தெடுத்த(பெயரளவில்)உறுப்பினர் தேர்ந்தெடுத்த மக்களைக்கு நன்றியுள்ளவளா(னா)க இருப்பதில்லை. மாறாகக் கட்சியினால் வழங்கப்பட்ட சீட்டுக்கும், கட்சியே தனது வெற்றிக்குமான தெய்வமாக இருப்பதால் கட்சித்தலைவரின் காலில் விழுந்து நக்கும் இழிபிறவியாகமாறிவிடும் இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்ஏ-எம்.பீ.

புலி எதிர்பாளர்களும், இலங்கைச் சிங்களப் பேரினவாதக் கைக்கூலிகளும்:

இன்றைய இலங்கைத் தரகு முதலாளிய அரச அமைப்பில் ஓட்டுக்கட்சிகளின் அதீத அதிகாரத்தைச் சற்றுப்பார்த்திருக்கிறோம்.
இந்தமைப்பில் ஆளும் வர்க்கம் தம்மை மிக மிகத் தந்திரமாகத் தக்க வைத்துக்கொண்ட வரலாறு மிகவும் கொடியது. இது கடந்த காலத்தில் சிங்களப் தரப்பில் 40.000. அப்பாவி இளைஞர்களையும், தமிழ்த் தரப்பில் சுமார் 80.000. அப்பாவி மக்களையும் கொன்று தள்ளியுள்ளது. இன்றுவரையும் இழுபட்டுப்போகும் இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்களின் அத்துமீறிய போரினால் மனிதவுரிமைகள் துளியளவும் இல்லாது போய்விட்டது. இந்த இலட்சணத்தில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலமானது வெறும் இருண்ட வெளிக்குள் நகர்கிறது. உலகம் 21 ஆம் நூற்றாண்டில் புதிய உத்வேகத்தோடு தத்தமது இனங்களின்-தேசங்களின் நலன்களைத் தூக்கிப் பிடிக்கின்றபோது தமிழர்களாகிய நாமோ வெறும் புலி எதிர்ப்புக் கவசத்தோடு உலாவுவதற்குப் புலிகளின் விடாப்பிடியான ஜனநாயக மறுப்பே முதற்காரணமாகும்.

நண்பர்கள் யார்,எதிரிகள் யார்? என்ற குறைந்தபட்ச மதிப்பீடுகூடக் கிடையாத புலியரசியலால் தமிழ் ஆளும் வர்க்கம் தன் இருப்பைத் தக்க வைக்க முனைகிறது. ஆனால் இந்தப் பார்வையில் இடிவிழும்போதுதாம் மக்களைப்பற்றிக்கொள்ளும் ஞானம் புலிகளுக்கு வந்து தொலைகிறது! இந்த இழிநிலையில் நமது மக்களின் ஜனநாயக பூர்வமான கோரிக்கைகளான "சுயநிர்ணயம்,சுதந்திர தன்னாட்சி" போன்ற அபிலாசைகள் யாவும் நீற்றுப்போகும் நிலையையெய்திவிடுகிறது. கடந்தகால நமது(புரட்சிக்கட்சியின்) வரலாற்றுத் தவறிலிருந்து புலிகளின் வருகை தொடர்கிறது. புலிகளின் வருகை தமிழ் மக்களின் புதிய ஆளும் வர்க்கத்தின் வருகையைக் கட்டியங் கூறுகிறது. இது மக்களின் சகல உரிமைகளையும் தமது இருப்புக்கும், பேரத்துக்கும் தக்கபடி தகவமைத்துப் போராடிக்கொண்டபோது தமிழ் மக்கள் அதைத் தமது வாழ்வு மேம்பாட்டுக்கானதென எண்ணிக் கொண்டதும் உண்மை. இலங்கைச் சிங்களப் பேரினவாதம் ஒருபுறம் தமிழ் மக்களைக் கருவறுக்கும்போது புலிகள் மக்களின் மீட்பர்களாகக் கணிக்கப்பட்டார்கள். ஆனால் புலிகளின் வர்க்க நலனானது மக்களின் நலனோடு நேரடியாக மோதியபோது அது தமிழ் மக்களின் கணிசமான பகுதியைத் துரோகிகளாக்கிப் போட்டுத் தள்ளியதும், எதிர் நிலைக்குள் தள்ளியதும் தற்செயல் நிகழ்வல்ல. இத்தகைய தரணத்தில்தாம் நமது எதிரியான சிங்களச் சியோனிஸ்டுக்கள் தம்மை எமது மக்களின் மீட்பர்களாக்கிக் கொண்டுள்ளார்கள். இத்தகைய அரசியல் சூழ்ச்சிக்கு உடந்தையான ஒருபிரிவு புலிகளின் காட்டாட்சியால் உருவாக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் நமது இளைஞர்கள் நமது மக்களின் விடிவுக்காகவே இன்னும் உயிர் நீத்துவருகிறார்கள். இவர்களது மகத்தான தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட விடுதலைத் தீயை அணைத்துவிட முனையும் கைங்காரியங்கள் இன்று உலக அரங்கில் மிகக் காட்டமாக நடந்தேறி வருகிறது.

இந்த நிலையில் நமது நிலைப்பாடென்ன?

புலிகளுக்கான சர்வதேசத் தடைகள் தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தையும், விடுதலையையும் கொணர்ந்து, சிங்கள இனவாதத்திடமிருந்து சகல மிருகத்தனங்களையும் இல்லாதாக்கி விடுமா?, காலாகாலமாக மெல்ல இடம்பெறும் சிங்களக்காடையர்களின் குடியேற்றம் இல்லாதுபோய் தமிழர்களின் பிரதேசம் தமிழ்மக்களின் வாழ்விடங்களாக மீண்டுவிடுமா? தமிழ்பேசும் மக்களின் ஜீவாதாரவுரிமைகளை இத்துணை காலமாகக் காத்துவராத இலங்கைப் பாசிச அரசு இன்றுமட்டும் தமிழர்களின் மீட்பர்களாக உருவாவதாக வெளியுலகஞ் சொன்னால் சரியாகிவிடுமா?

இன்றைய புலி எதிப்புக் கும்பல்களிடம் என்ன இலக்கு இருக்கிறது?


அந்த இலக்கு மக்களின் நல்வாழ்வுக்கான அத்திவாரமாகுமா?

தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயகத்தையும் அவர்களின் வாழ்வுரிமையையும் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து விடுவித்துக் கொடுத்திடுமா?

நேற்றைய(26.05.2006)ரீ.பீ.சீ.வானொலியின் செய்தி மொழியானது மிகவும் உள்நோக்கமுடையதும், இலங்கைப் பாசிசச் சிங்களச் சியோனிசத்தின் மிகத் தந்திரமான திட்டமிட்ட கருத்தாக்கமாகும். இத்தகைய மொழிவழி நமது மக்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்துவது சிங்கள அதிகார வர்க்கத்தின் மிகத் திட்டமிட்ட பரப்புரையாகும். ஆளும் வர்க்கங்களின் அத்துமீறிய பரப்புரைகள் போராடும் மக்களினங்களை-தொழிலாள வர்க்கத்தைத் திட்டமிட்டுச் சிதைப்பதற்கான கருத்தியலாக இவற்றைச் செயற்படுத்துவது வழமையாக இருக்கும்போது இந்த வானொலி எந்த மக்கள் நலத்திலிருந்து இத்தகைய இழி மொழிகளைக் காவி வருகிறது?

இன்றுவரையும் தமிழர்கள்மீது அத்துமீறிய அடக்குமுறைகளைச் செய்து வரும் சிங்கள இராணுவம், எமது பெண்களின் பிறப்புறுப்புக்குள் குண்டுவைத்து வெடித்துச் சிதறடித்த காட்டுமிராண்டிச் சிங்கள இராணுவத்தான் "படைவீரர்"எனும் வார்த்தையால் மொழியப்படும் அதேவேளை நமது சின்னஞ்சிறு தேசபக்த போராளிகள் வன்முறையாளர்கள்-பயங்கரவாதிகளென மொழியப்பட்டுத் தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை இல்லாதாக்கும் சிங்கள-இந்திய நோக்கத்துக்கு உடந்தையாக இருப்பது ஜனநாயகத்துக்கான கோரிக்கையோ அல்லது போராட்டமோ அல்ல! இது திட்டமிட்ட இலங்கை-இந்திய நலன்களோடு பின்னப்பட்ட கருத்தியல் யுத்தம். இந்த யுத்தத்தைச் செவ்வனவே செய்துவரும் ரீ.பீ.சி-தேனீ இணையத்தளம் மிக நெருங்கிய முறைகளில் தமிழ் மக்களின் எதிரிகளுடன் கூட்டுவைத்துத் தமது நலன்களை அடைவதற்காக திடங்கொண்டு போராட முனைகிறார்கள்.இவர்களனைவரும் ஏதோவொரு வகையில் அதிகார வர்க்கத்தின் துணையோடு தமிழ் மக்களின் உரிமைகளுக்கெதிரான மனோவியல் யுத்தத்தில் தயாரிக்கப்பட்டவர்கள்! இவர்கள் தூக்கி நிறுத்தும் இலங்கையரசானது ஸ்த்தூலமான ஒடுக்குமுறையரசாகும். இது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனநாயகபூர்வமான அரசுகிடையாது. இதுகாறும் தமிழர்களின் பிரதான எதிரியான சிங்களப் பேரினவாதமானது இனியும் பிரதான எதிரியாக இனம் காணப்படவேண்டிய சூழலில் தமிழ்ச் சமுதாயம் தள்ளப்பட்டுள்ள நிலையில் இத்தகைய சதிகாரக் கும்பல் தமது அற்ப பதவி-பண ஆசைக்காக முழுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈனஞ் செய்வது மிகவும் வருந்தத் தக்கது.

ஓடுகாலிகளான மார்க்சிய விரோதிகள் தம்மைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக முன் நிறுத்தும் இன்றைய காலக்கட்டத்தில் நாம் அவர்களை அம்பலப்படுத்தியாக வேண்டும். ரீ.பீ.சீ. வானொலியின் பிரதான அரசியல் ஆய்வாளரான சிவலிங்கம் குறித்துரைக்கும் "ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுத்த அரசு" என்ற மொழிய+டாக எதைக் கூற முனைகிறார்? இலங்கையரசு மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைத்து ஒடுக்குமுறை அரசுகளும் போலித்தனமான பித்தலாட்ட பாராளுமன்ற ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தாம். கிட்லரையும்,முசோலினியையும் ஏன் இன்றைய புஷ்-பிளேயர் கொடுங்கோன்மையாளரையும் இதே மக்கள்தாம் தேர்ந்தெடுத்தார்கள். அதற்காக இவர்களெல்லோருமே மக்களின் நலத்தில் அக்கறையுடையவர்களும்,மனிதவுரிமைவாதிகளுமாக மாறிடமுடியுமா?

இத்தகைய மொழிகளினூடாக ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராகக் கருத்தாடும் சிவலிங்கம் எந்தவகை மார்க்சியத்தையும், எந்தவகைப் போராட்டத்தையும் முதலாளியத்துக்கெதிராகக் கொண்டுள்ளார்?

மக்களின் நல்வாழ்வைத் துவசம் செய்யும் கொடிய வல்லரசுகள் இவர்களிடம் ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுத்த அரசுகளாகவும், ஒடுக்கப்படும் தேசியயினங்கள் செய்யும் போராட்டங்கள்,கட்டும் இயக்கங்கள் வன்முறைக் கும்பலாகவும் விளக்கமுறும்போது நாம் இவர்களையின்னும் நம்ப முடியுமா? இத்தகைய ஓடுகாலிகளினால் மக்களின் நியாயமான உரிமைகள் இல்லாதாக்கப்படும்போது இவர்களும் புலிகளது தலைமைபோன்று இன்னொரு வடிவமென்பதைத்தவிர வேறெதை நாம் காணமுடியும்?

இன்றைய சூழலில் சர்வதேசங்கள் புலிகளைத் தடை செய்வதென்பது தமிழர்களுக்கு எதிரானது. தமிழ் மக்களின் சுயநிர்ணயப்போராட்டத்துக்கு எதிரானது. இது புலிகளின் காட்டுமிராண்டித்தனமான ஜனநாயக மறுப்புக்குக்கிடைத்த பரிசு என்று கூறுபவர் உண்மையில் உள் நோக்கமுடையவர்கள். புலிகளைவிட ஆயிரம் மடங்கு கொடிய பாசிசச் சக்திகளை அமெரிக்கா-ஐரோப்பா உலகம் பூராகவும் வளர்த்துவருகிறது. கொடிய அரசுகள் இன்னும் ஜனநாயக முகமூடியோடு மக்களைக் கொல்லும்போது அத்தகைய அரசுகளையின்னும் தோழமை அரசுகளாக இந்த ஐரோப்பிய-அமெரிக்கு வல்லூறுகள் கட்டிப்பிடித்தபடி புலிகளைத் தடைபண்ணுவது தமது நலன்களை இலங்கைப்பாசிச அரசினூடாகவும் புலியினூடாகவும் பெறுவதற்கன்றி வேறெதற்கு?

ஏலவே பற்பல தில்லுமுல்லுகளில் ஈடுபட்ட இந்திய வல்லாதிக்கமானது இன்று இலங்கைமண்ணில் தனது உளவுப்படையோடு பாரிய சதிப்போரில் ஈடுபடும்போது நமது மக்களின் நியாயமான கோரிக்கைகள் எவரெவருக்கு ஏற்புடையதல்ல என்பதைச் சாதரண மக்களே புரிந்துள்ளார்கள்.

மக்களின் நலனை முன்னெடுக்காத புலி எதிப்புக் கும்பலான ரீ.பீ.சீ.வானொலி-தேனீக் கும்பல் உண்மையில் புலிகளின் இன்னொரு வடிவமென்பதை நாம் மிக வலுவாக அறிவது அவசியமாகும். இவர்களிடம் அதிகாரத்தைச் சுவைக்கும் அவசரமும், பதவி வெறியும் தடம்புரண்டோடுவதை நாம் இவர்களின் பரப்புரைகளிலிருந்து தினமும் அறியக்கூடியதாக இருக்கிறது. மற்றும்படி மக்கள் நலன், ஜனநாயகம் என்பதெல்லாம் புஷ் பாணியிலான முகமூடிகளே! இவர்களின் மிருகத்தனமான வெறி பதவிகளைப் பங்குபோடுவதும், பணங்களைச் சுருட்டுவதுமே. புலிகள் இவர்களை அணைத்துப் பதவிகளில் பங்குபோடும் தறுவாயில் புலிகளே இவர்களது வாயால் மிகப்பெரும் ஜனநாயக்காவலாராகவும் மாறிவிடுவார்கள்.

சிங்கள-இந்தியக் கொடிய அரசுகள் தமிழ்மக்களின் ஜீவாதாரப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கான முகாந்திரத்தைப் பாசிசப் புலிகளே ஏற்படுத்தியவர்கள். எனினும் புலித்தலைமையின் கீழ் அணிதிரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான தேசபக்த இளைஞர்கள் தமது தாயகத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரைத் தியாகஞ் செய்வது உண்மை! அவர்கள் தமது தாயகத்தைக் காப்பதற்கும், விடுதலையடைவதற்குமென்றே மரணித்துப் போகிறார்கள். அவர்களது உயிர்த்தியாகத்தைத் தமிழ் ஆளும் வர்க்கம் தனக்கிசைவாகக் கையாளும்போது தவிர்க்கமுடியாது முட்டுச்சந்தியில் தனது அரசியலோடு கையாலாகாத பிராணியாக நிற்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் விரோதிகளான சிங்கள ஆளும் வர்க்கமும், இந்திய ஆளும் வாக்கமும் மிகத் தெளிவாக நம்மை ஒடுக்குவதற்கு நமக்குள்ளேயே தமது அடிவருடிகளைத் தயார் செய்கிறது. இதிலொரு குழுவே இந்த ரீ.பீ.சீ.வானொலியும்-தேனீயும், ஆனந்த சங்கரியும்-டக்கிளசும்!

இத்தகைய பிராணிகளை வைத்தும், சிங்களத் தரப்பில் இனவாதிகளை வைத்தும் எமது கோரிக்கைகளுக்கு அற்ப சலுகைகளைத் தந்து எமது வலுவைக் குன்றவைத்து ஒடுங்கச் செய்வதே இவர்களது முக்கிய நோக்கமாகும். இதை இலங்கையரசோடு இந்தியா 29.07.1987 இல் இருந்தே ஒப்பந்தங்கள் மூலமும், உளவுபடைப் போராட்டங்கள் மூலமும் செய்து வருகிறது.

"The official language of Sri Lanka shall be Sinhalla.Tamil and English will also be official languages."-2.18.Indo.Sri Lanka Agreement of 29.July 1987.

சாதரணமாக ஒரு மொழியினது அந்தஸ்த்தையே ஏற்கமுடியாதவொரு கூட்டம்தாம் நமது மக்களின் தன்னாட்சியை ஏற்பார்கள்! இருக்கலாம்-எடுக்கலாம், படுக்கலாமென்பதெல்லாம் என்னதாம் கோதாரியோ!" சிங்களம் இலங்கையின் அரச கரும மொழியாக இருக்கும். தமிழும் ஆங்கிலமும் அரச மொழிகளாக இருக்கும்"என்றால் எங்கே இலங்கையிலா அல்லது இந்தியாவிலா? இதுதாம் இந்தியாவினதும், இலங்கையினதும் பரந்த மனது. "The official languages of Sri Lanka shall be Sinhalla and Tamil languages.English will also be official language." ஏன் இப்படி எழுத முடிவதில்லை? இங்கேதாம் இலங்கையும் சிங்களமும் தனித்துவமானது. இது தமிழருக்கு உரியதில்லை. சிங்களமானது அந்த நாட்டின் பூர்வீகக் குடிகளினது. தமிழ் வந்தேறி மொழி என்று சொல்வதுதானே இந்தப் பதங்கள்?

இன்று நமது மக்களுக்கு ஜனநாயகம் கற்பிக்கும் "புலி.தமிழ் மக்கள் எதிர்ப்புக் கும்பலான" ரீ.பீ.சீ.-தேனீக் கும்பலுக்கு எலும்புத் துண்டுகள்தாம் முக்கியம். நமக்கோ மக்களின் ஜீவாதார உரிமைகளைப் பெறுவதும், மக்கள் சகல உரிமைகளுடனும் தமது தாயகத்தில் சுதந்திரமாக வாழ்வதுமே மிக முக்கியமாகும்.

புலிகள் இனியென்ன செய்தாக வேண்டும்?:

முதலில் நமது மக்களின் எதிரிகள் யார் என்பதைத் தெளிவாக வரையறுத்தாகணும்.

1:சிங்கள-தமிழ் நிலப்பிரபுகள்,(தமிழ்த் தரப்பில் புதிய ஆளும் வர்க்கம் உருவாகியுள்ளது.அவைகள்யாது?: புலி உயர் அதிகாரிகள், அவர்களைச் சுற்றிய படிப்பாளிகள், புலியினது பெரும் வர்த்தகர்கள்,பல்வகை முதலீடுகளைச் செய்திருப்பவர்கள், புலிப் பெரும் நிலவுடமையாளர்கள், ஏகாதிபத்தியத்தோட நேரடியாகத் தொடர்பு வைத்து வர்த்தகம், போர் எனப் பேரங்கள் நடாத்தும் உற்பத்தியாளர்கள், உடமையாளர்கள்)

2:சிங்கள-தமிழ்(புலி) தரகு முதலாளிகள்,

3:ஏகாதிபத்தியம்.-இவர்கள அனைவரும் தமிழ்-சிங்கள-இஸ்லாமிய மக்களின் எதிரிகள்

நண்பர்கள் யார்?

1: தொழிலாளிகள்-தேசிய முதலாளிய வர்க்கம்.
2:விவசாயிகள்
3:சிறு உற்பத்தியாளர்கள்

தலைவர்கள்?
தொழிலாள வர்க்கமே!


பிரதானசக்தி-செயற்பாட்டு வர்க்கம் நிச்சியமாக

விவசாயிகள்தாம்.

புரட்சி?

புதிய ஜனநாயகப் புரட்சி!

இதுவே 21 ஆம் நூற்றாண்டுக்கான தகமையுடைய போராட்ட இலக்கு.


ஜனநாயத்தைப் புதிய முறையில் தகவமைத்துக் கொள்வதற்கான புதிய சிந்தனை இங்கேதாம் தோற்றமுறும்.


இதன் கீழ் போராடுவதற்கேற்றவாறு புலிகளின் கீழ் அணிதிரண்டிருக்கும் போராளிகளும் மக்களும் சுய எழிச்சி பெற்றாக வேண்டும்.


மக்களின் சுய எழிச்சிகளை மக்கள் மன்றங்களின் மூலம் வழிகாட்டி புரட்சிகரச் சக்திகளாக்கவேண்டும்.

இந்திய மேலாதிகத்தையும், அமெரிக்க-ஐரோப்பிய ஏகதிபத்தியத்தையும் தெட்டத் தெளிவாக இனங்காட்டி எதிர்ப்பது. இவர்களே நமது தேசத்தின் எதிரிகள் என்பதை விடாப்பிடியாக நிறுவுவது.

இத்தகைய அரசுகளிடம் தண்டமிட்டுப் பேச்சுவார்த்தை-சமாதானத் தூது என்ற பித்தலாட்டத்தை நிராகரித்து மக்களின் நிழலில் நிற்பது.

நமது தேசத்தின் தேசிய முதலாளியத்தைக் காப்பதற்காக அனைத்து அந்நிய மூலதனத்தையும் தேசச் சொத்தாக்குவது. தேசிய முதலாளியத்தை ஊக்குவித்து மக்களின் அனைத்து தேவைகளையும் அவர்கள் மூலமாக உற்பத்தி செய்து நிறைவேற்றும் தகுதியை பெறும் தேசிய அலகாக அதை வளர்தெடுப்பதும் பின் அத்தகைய முதலாளிய வளர்ச்சியில் தேசியத் தன்மைகளின் அனைத்துப் பிரிணாமங்களையும் பாதுகாப்பதற்கான வகையில் மக்கள் மன்றங்களே அவற்றைப் பராமரிக்கும் அந்தஸ்த்தை உயர்த்துவதும் மிக அவசியமான பணி.

வரலாறு வெற்றிடங்களை விடுவதில்லை.

காலம் தகவமைக்கும் இன்றைய சூழலானது தமிழ் மக்களின்மூலம் இலங்கையில் புதிய ஜனநாயகப் புரட்சி பற்றிப்படர்வதற்கான நிலைமை உருவாகிறது. அந்நிய தேசங்களின் தடையானது தமிழ் மக்களின் சுயவெழிச்சியோடு தமது தேசத்தைக்காக்கும் புதிய ஜனநாயகப் போராக வெடித்தாகவேண்டும்.

இதற்கு முழுக்க முழுக்க இன்றைய புலி அரசியலும்,அதன் தலைமையுமே முட்டுக்கட்டையாகும்!


"உன் துப்பாக்கிக் குண்டுகள்
எங்களது உடல்களைக் துளைக்கலாம்
உயிரைக் குடிக்கலாம்
எனினும் உயிரிலும் மேலான சுதந்திரவுணர்வை
அவை என்ன செய்ய முடியும்?"-பிடேல் காஸ்ரோ.


இதை ஒவ்வொரு தேச பக்தப் போராளியும் இனம் கண்டு அத்தகைய தடைகளைக் களைந்து தமிழ் மக்களின் விலங்கை ஒடிக்க முடியும். இதற்காகச் சிங்கள-இஸ்லாமிய மக்களின் மிகப் பெரும் பங்களிப்பை அவர்களோடு தோள் சேரும்போது மட்டுமே பெறமுடியும். முழு இலங்கையும் புதிய ஜனநாயகப் புரட்சியின் வாயிலாக எழுந்து நிற்பதற்கான காலம் நெருங்கி வருகிறது.

இந்தத் தரணத்தில் செய்ய வேண்டியது இத்தகைய வேலைத்திட்டமே தவிரக் குண்டு வெடிப்பதல்ல. அப்படி வெடிக்குந் தறுவாயில் புலிகள் தாமும் அழிந்து மக்களையும் அடிமையாக்கிச் செல்வர்.

ப.வி.ஸ்ரீரங்கன்
27.05.2006