அடித்துத் துவைத்து, பிய்ந்து போன வெளக்குமாறு போல ஆகிவிட்ட நம்ம போலி ஜனநாயகத்தை, சற்றே துலக்கி, அதற்கு 'ஜனநாயகம்' என்ற பட்டுக் குஞ்சலங்களை அணிவித்து மக்களை ஏமாற்றி வளையவருகிறது, காங்கிரஸ் முதல் நம்ம 'காமரேடு'கம்பெனிவரை.

 


அப்பேர்ப்பட்ட 'ஜனநாயக'த்த போற்றிப் பாதுகாக்கிற நிறுவனங்களில் தலையாய நிறுவனம்தான் நம்ம நீதித்துறை. இது யாருக்கான ஜனநாயகம் என்பதும், இந்த உச்சநீதிமன்றத்தின் தலைமையில் உள்ள நீதிநிறுவனம் யாருடைய பிரதிநிதி என்பதையும் நாம் புதிதாக எதுவும் விளக்கிச் சொல்

 லத் தேவையில்லை.

இப்படி ஆளும் வர்க்க சுரண்டல் வாதிகளுக்கு அடியாள் வேலைகளை மட்டும் செவ்வனே செய்துவரும் இந்நிறுவனத்தால் கவனிக்கப் படாமல் நிலுவையில் கிடக்கும் வழக்குகள் மட்டும் சுமார் மூன்று கோடிகளுக்கும் மேலான வழக்குகளாம்! சரி இதனை என்ன செய்வது, எவ்வளவு விரைவாக இவ்வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து அறிய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெகந்நாத்ராவ் தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டது.

அக்குழு அனைத்து நீதிமன்றங்களுக்கும் நேரில் சென்று ஆராய்ந்து ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறதாம். அவ்வறிக்கையில், புதிதாக அமைக்கப் படவேண்டிய நீதிமன்றங்கள் குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றனவாம். அதேபோல நீதிபதிகளைத் தேர்தெடுத்து நிரப்பும் பொறுப்பை அரசு செய்வதைவிட இப்போது இருக்கிற உயர்/உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே கொடுக்க வேண்டும். அரசின் தலையீடு அதில் இருக்கக் கூடாது என்று பரிந்துரைத்திருக்கிறதாம்.

அதாவது திருடனின் கையிலேயே சாவியையும் கொடுத்துவைக்கச் சொல்லி அரசையும் அதன் மூலமாக மக்களையும் நிர்பந்திக்கிறது ஜெகந்நாதராவ் கமிட்டி.

வெறும் நாற்பதாயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு, யாருக்கு வாரண்ட் கையெழுத்திடுகிறோம் என்ற சுயநினைவே இல்லாமல், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கே வாரண்ட் கொடுத்தார், அஹமதாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர். இச்செய்தி அப்போது அனைத்து பத்திரிக்கைகளிலும் வந்து சந்தி சிரித்திருக்கிறது. ஏற்கெனவே 'நீதி'யரசர்கள், 'நிதி'யரசர்களின் கைப்பாவையாக அம்பலப்பட்டு விசாரனைகள் ஏதுமின்றி கவுரவமாக சுற்றி வருகிறார்கள்.

போதாக் குறைக்கு இப்போது நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் வேறு இவர்களுக்கு வேண்டுமாம். என்ன செய்யப் போகிறார்கள் நமது மதிப்பிற்குரிய ஓட்டுப் பொறுக்கிகள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சென்ற மாதம் மத்திய அரசின் நீதித்துறை அமைச்சகம் ஒரு பெருமை மிக்க!! தகவல் ஒன்றை வெளியிட்டது. அது என்ன வென்றால், 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' (Right to Information Act) மூலமாக சென்ற ஆண்டு சுமார் ஐம்பதாயிரம் வழக்குகளுக்குப் பதிலளிக்கப்பட்டிருக்கிறதாம். அதுதான் அப்பெருமை மிக்க அறிவிப்பு.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நம்மைப் போன்ற யாரோ ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக நீதிபதிகள் சிலரின் சொத்துக்கள் பற்றி தகவல் கோரினாராம். த.அ.உ.சட்டம் குறித்து புளகாங்கிதமடைந்திருந்த நீதி அமைச்சகத்துக்கு இது சோதனையையும் வேதனையையும் அளித்தது போலும். உடனே, "நீதிபதிகள் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பில் இருப்பவர்கள், எனவே, யாரொருவர் 'இந்திய அரசியல் சாசன சட்டத்தினை நிறைவேற்றும் பொறுப்பில்' இருக்கிறார்களோ அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் மேற்கண்ட சட்டத்தின் மூலமாகப் பெறமுடியாது" என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டதாம்.

எப்படியிருக்குது நம்ம 'நீதிநிறுவன'மும் 'ஜனநாயக'மும்????????


தோழமையுடன்,
ஏகலைவன்.


http://yekalaivan.blogspot.com/2008/06/blog-post_19.html