12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

வியாபாரத்திற்கு அழகு தேசியம்

தேசியம் என்னும் சமஸ்கிருத மொழிச் சொல்லக்கு தமிழில் மிகச் சரியான விளக்கம் இருக்கிறதா என்னும் என் கேள்விக்கு நன்னில ஞானமுள்ள நான்குபேர் இல்லை என்கின்றனர். சரியானதும் நூறு வீதம் உண்மையானது என்றும், தேசியம் என்னும் சொல்லுக்கு விளக்கம் இருப்பின் அது பம்மாத்து என்றும் சொல்கின்றனர். ஓரளவுக்கு விளக்கம் சொல்வதாயின் இறைமையுள்ள நாட்டினது, அல்லது தேசத்தினது கலை, பண்பாடு, சட்டம், சமூகவியல் கோட்பாடுகள்.. மொழி, கலாச்சாரரம் போன்றவற்றை கட்டமைத்தலும், இவற்றிற்கு ஒப்புரவ ஒழுகுதலும், வாழ்தலும் எனலாம்.

தேசியம், தேசம் என்னும் கதையாடலும் கட்டமைப்பும் கூட ஐரோப்பிய வழித்தோன்றல்கள்தான். தேசக்கட்டமைப்பென்பதே கிழைத்தேசங்களில் மிக அண்மைக்கால வரவுதான். திணை சார்ந்த அரசுகளை கொண்ட தமிழர்களிடம் ஒழுங்கும் நேர்த்தியுமாக கட்டமைக்கப்பட்ட திணையிசம் கூட இருந்ததில்லை என்பதை அறிய முடிகிறது, தமிழர்களின் பண்பாட்டசைவுகள் என்னும் ஆய்வு நூலினூடாக.


ஜனநாக முறைப்படி பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஸ்டீபன் காப்பர் கனடா தேசத்தின் தலைவர். நான் விரும்பியோ விரும்பாமலோ இன்னும் சில ஆண்டுகளுக்கு அவர்தான் எனது தலைவரும் ஆகின்றார். நான் கனேடிய அரசின் தேசிய சட்டங்களுக்கு மதிப்பளிக்கின்றேன், அதற்க்கு ஒப்புரவ வாழ்கின்றேன். விக்டோறியா தினம் முதல், காதலர் தினம், நன்றி செலுத்தும் தினம் என்று அனைத்தையும் கொண்டாடுகின்றேன். தேசிய ராணுவத்திற்கு செலவு செய்யவும், நாட்டை மேலும் அபிவிருத்தி செய்யவும் எனது வரிப்பணமும் பயன் படுகின்றது என்பதை அறிய முடிகின்றது.

இத்தேசத்தினது தேசிய கீதமான 'ஓ கனடா' என தொடங்கும் பாடல் பாடப்படும் போது எழுந்து நின்று கனேடிய தேசத்துக்கு உண்மையாக அக வணக்கம் செலுத்துகின்றேன். எனது தலைவனை தெரிவு செய்யும் உரிமை எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. நான் ஒரு கனேடிய குடியுரிமையுள்ளவன். நான் கனேடிய தேசியன். கனேடிய தேசியனாகிய நான், இன்னோர் நாட்டினது தேசியவாதியாக இருக்க முடியுமா? என்னும் தேசியக் கேள்வி என்னுள் எழ முன்பே, இருக்கலாமே என்கின்றனர் தமிழ்தேசிய வியாபாரிகள். விதேசிக்கும், பரதேசிக்கும், தேசியம் என்பது கிடையாதென்பதை நான் புரியவைக்க நெடுங்காலம் ஆகலாம்.

சொர்ணலிங்கம் அவர்களால் நடத்தப்படும் இசைக்கு ஏது எல்லை நிகழ்வுக்கான விளம்பரம் ஒன்றில் தேசியப்பாடகன் என்னும் சொல்லை முதன் முதலாக பார்க்க நேர்ந்தது. ஏற்கனவே தேசியம் என்னும் சொல்லை தமிழர்கள் சொன்னாலே எனக்கு ஒவ்வாமை ஏற்பட்டு விடும். தேசியம் என்னும் சொல்லின் பொருள் உணர்ந்துதான் சொல்கின்றார்களா? அல்லது 'வியாபாரத்திற்கு அழகு தேசியம்' என்று தெரிந்து வைத்திருக்கின்றார்களா தெரியவில்லை.

சோத்துக்கடைக்காரர்களில் இருந்து ரேடியோக்காரன், பேப்பர் காரன் என்று எல்லோரும் தமிழ் தேசியம்.. தமிழ் தேசியம் என்று இடைவிடாது இயம்பிக்கொண்டே இருக்கின்றார்கள். இந்த தேசியவாதிகளின் துன்பம் தாங்க முடியல்லடா சாமி என்று புலம் பிக்கொண்டிருக்கும் காலத்தில் தான் 'தேசியப்பாடகன்' வர்ண ராமேஸ்வரன் என்னும் விளம்பரமும் என் கண்ணில் பட்டு தொலைக்கின்றது.

ஆப்கானிஸ்தானில் உள்ள கனேடிய தேசிய ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தவும், சோர்வு நீக்கவும் யுத்தபூமிக்கே சென்று பாடல் பாடுபவரா இந்த தேசியப்பாடகன்? அல்லது கனேடிய தேசிய கீதத்தை தமிழில் பாடியவரா என்றெல்லாம் நாம் யோசிக்க வேண்டிய தேவையே இல்லை. புலிகளின் இயக்கத்தை சேர்ந்த முக்கிய தளபதி அல்லது, உப தலைவர்கள் யாராவது இறந்தால் மூன்றாவது மணி நேரத்தில், இறந்தவரை பற்றி அண்ணா.. அண்;ண.. எங்கள் அண்ணா.. அண்ணா.. என்று பாடல் ஒன்றை பாடி வெளியிட்டு விடுவார். ஆதலினால் அவர் தேசியப்பாடகனாம். (என்ன கொடுமடா சாமி.) எவ்வகை ஆசையின் நிமிர்த்தமோ புலிகளின் தலைவர் தானே தனக்கு தமிழ் தேசியத்தலைவர் என்று புனை பெயர் சூட்டிக்கொண்டதன் காலப்பயன் இப்படியெல்லாம் வந்து நிற்கிறது.

விடுதலைப்புலிகளின் தலைவர்களின் ஒருவரான பால்ராஜ் அவர்களின் மரணச்செய்தியை இங்குள்ள வானொலிகள் 'இன்று செவ்வாய்க்கிழமை (20.05.08) பிற்பகல் 2:00 மணியளவில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் மாரடைப்பால் சாவடைந்துள்ளார் என்பதனை தமிழ் மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். 21ம் 22ம் 23ம் 05.2008 ஆகிய 3 நாட்களும் தேசிய துயர நாட்களாக கடைப்பிடிக்கப்படும் என்று விடுதலைப்புலிகள் தெரிவிக்கின்றார்கள்' என ஏக காலத்தில் ஒலிபரப்பு செய்தன.

 


புலிகளின் தேசிய துக்க தினத்தை ரொரண்டோவில் எப்படி எந்த வகையறாவில் கொண்டாடுவது? புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட வன்னிக் குறு நிலப் பிராந்தியத்தில் துக்கம் எப்படி கொண்டாடப்பட்டிருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ள முடியும். புலிகளின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்திருக்கும். வாசல்கள் தோறும் வாழைமரம் கட்ட மக்கள் நிர்ப்பந்திக்ப்பட்டிருப்பார்கள். கேளிக்கை விழாக்கள் தடை செய்யப்பட்டிருக்கும். பாடசாலை மாணவர்கள் கறுப்பு பட்டியணிந்து பாடசாலை செல்ல பணிக்கப்பட்டிருப்பார்கள். அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து மற்றய தேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்...சரி, ரொண்டோவிலோ அல்லது இன்ன பிற ஐரோப்பிய நகரங்களிலோ புலிகளின் தேசிய துக்க தினத்தை எப்படித்தான் கொண்டாடுவதாம்.


தேசிய துக்கதினம் கொண்டாடும் கனேடிய தமிழ் வானொலிகளாவது ரொராண்டோ தமிழர்கள் இப்படித்தான் தேசிய துக்கத்தை கொண்டாடுவது போன்ற விபரங்களை விளம்பரமாவது செய்திருக்கலாம். ஏசியன் ரெக்ஸ்ரைலில் 'தேசிய துக்க தின சேலைகள்' கழிவு விலையில் விற்கப்படுகின்றது. தேசிய துக்கச் சேலை வாங்குபவர்களுக்கு தேசியப்பாடல் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படும் என்று வானொலிக்காரர்கள் போட்டா போட்டி போட்டிருக்கலாம். புடவைக்கடைக்காரர்களும் தேசிய துக்கத்துக்கு அணிவதற்கென்று புதியரக கறுப்பு, மஞ்சள், சிவப்பு நிறங்களில் நெய்யப்பட்ட சேலைகளை சந்தைப்படுத்தலாம்.


தேசிய துக்கத்தை எப்படி கொண்டாடுவது என்று தெரியாததால் தமிழ் திரையரங்குகளில் வழக்கம்போல்தான் நான்கு காட்சிகள் திரையிடப்பட்டன. சாமத்திய வீடும், கல்யாண வீடும் கொண்டாடத்தான் பட்டன. தமிழ்க்கடைகள் ஒற்றைத்தட்டி என்றில்லாமல், முழுவதுமாக திறந்துதான் வியாபாரம் களை கட்டியது. 'சந்தை' இல்லாத தென்னிந்திய நடிகையுடன் இரவு உணவு(?) உண்ண இருநூற்றைம்பது டொலர்கள் என்னும் ஜிகினா விளம்பரமும் ரெண்டும் கெட்டான் தமிழர்களிடம் பரப்பவும் பட்டது.


இவைகளையெல்லாம் அவதானிக்கும் போதுதான் நான் ஒரு தமிழ் தேசியவாதியாக இல்லாது இருப்பதும், துரோகிப் பட்டியலில் எமது பெயரும் இருப்பதுவும் எவ்வளவு பெருமை கொள்ளத்தக்கது என்று.

நன்றி: 'வைகறை'

http://www.kariththundu.com/sakku04.html


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்