book _5.jpgஆணாதிக்கத்துக்கு எதிராக மார்க்சியம் போராடவில்லை அல்லது கவனமெடுக்கவில்லை என்று கூறும் மார்க்சியம் அல்லாத பெண்ணியவாதிகளின் பெண்ணியத்தையும், மார்க்சியத்தின் போராட்ட வரலாற்றையும் இந்த நூல் ஆய்வு செய்கின்றது. மார்க்சியம் பெண்களின் பிரச்சனையை ஒட்டி கவனம் எடுக்கவில்லை, ஆய்வு செய்யவில்லை என்பதைத் தகர்ப்பதிலும், பெண்ணியத்தின் பின், அரங்கேறும் ஆணாதிக்கச் சலுகைகளையும் இந்த நூல் அம்பலப்படுத்துகின்றது. இதேபோல் தேசியம், மதம், நிறம், காலனித்துவம் போன்றவற்றிலும் அதாவது நேரடி வர்க்கப் போராட்டம் தவிர்ந்தவற்றில் மார்க்சியம் கவனம் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எப்படி வெறும் அபத்தங்களோ, அதேபோலத்தான் பெண்ணியமும். வர்க்கப் போராட்டம் என்பது சமூக இயக்கத்தின் அனைத்துத் துறையிலும் உள்ளடங்கியது என்பதை மார்க்சியம் உட்கிரகித்தமையால்தான் அது வெல்ல முடியாத மக்களின் போராட்டத் தத்துவமாகவுள்ளது.

 

உலகளாவிய ரீதியிலும், புரட்சி நடந்த நாடுகளிலும் மார்க்சியக் கோட்பாடு மீது திரிபுவாதத்தைப் புகுத்தி முதலாளித்துவ அமைப்பாக மாற்றியதைத் தொடர்ந்து, உலகளாவிய அனைத்துப் போராட்டங்களும் வீழ்ச்சி அடைந்தன. மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்கள், இருந்த அமைப்புகள் சார்ந்த போராட்டங்கள் எல்லாம் இந்தத் திரிபு மார்க்சியத்தின் போக்கால் சிதைந்து போகின்றது. சுரண்டும் வர்க்கம் மிகப் பெரும் பலத்துடன் முன்னெப்போதையும் விட மிகக் கொடூரமாகவே மக்கள் பெற்ற உரிமைகளைப் பறிப்பதிலும், ஒடுக்குவதிலும் உலகமயமாதலை நோக்கி வேகநடை போடுகின்றது.


இந்தப் போக்கில் ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தன்னளவில் சிதையத் தொடங்கியது. அதேநேரம் பெண்ணின் உரிமையை மழுங்கடிக்க பல்வேறு கோட்பாடுகளைச் சுரண்டும் வர்க்கமே, பெண்கள் மீது திணித்தது. அதாவது போராட்டத்துக்குப் பதில் தன்னார்வக் குழுக்கள் எதை முன்வைக்கின்றனரோ, அதையே பெண்ணியவாதிகளும் பல வடிவில் முன்வைக்கின்றனர்.


உலகமயமாதல் தீவிரமாகிய நிலையில் ஏகாதிபத்தியம் எல்லை கடந்த சூறையாடலைச் செய்கின்றபோது, உழைக்கும் மனிதர்களின் இடைவெளிகளை இவை மேல் இருந்து தகர்க்கின்றது. இது பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள இடைவெளியைக் கடப்பதை நிபந்தனையாக்குகின்றது. இந்த இடைவெளி கடத்தல் என்பது எல்லை கடந்த மொழி, பண்பாடு, கலாச்சாரம், நிறம், சாதி எனப் பல தளத்தில் சூறையாடும் போக்கில் மனித அடிமைத்தனத்தைப் பொதுமைப்படுத்துகின்றது. இதனால் சமுதாயங்கள் தமக்குள் இணைகின்றன. வர்க்க ஐக்கியங்கள் முரண்பாட்டைக் கடந்து வேகம் பெறுகின்றது. இது எல்லாவிதமான பால், இன, நிற, சாதி, மொழி, கலாச்சாரம், மதம் போன்றவற்றைப் பின் தள்ளி சொந்த எதிரியை அடையாளம் காண்பதும், போராடுவதும் எதார்த்தமாக்கி வருகின்றது. அதேநேரம் உழைக்கும் மக்களுக்கும் சுரண்டும் வர்க்கத்துக்குமிடையில் இடைவெளி ஆழமாகின்றது. இது பொருளாதாரம், பண்பாடு, கலாச்சாரம், ஆணாதிக்கம் என அனைத்திலும் தீவிரமான பிளவை நிரந்தரமாக்குகின்றது. இதைக் கடக்க பாட்டாளி வர்க்கம் தன்னை ஆயுதபாணியாக்குகின்றது. அதை நோக்கிய இந்நூல் ஆணாதிக்கத்துக்கு எதிரான தத்துவத்தை ஒழுங்கமைக்கின்றது.


இன்று உலகமயமாதலில் ஆணாதிக்கச் சுரண்டலை நியாயப்படுத்த வழக்கம்போல் பெண்ணைப் பயன்படுத்தப்படுவது அவசியமாகின்றது. தேசங்களின் தேசிய எல்லையை மீறும் உரிமையை ஜனநாயகப்படுத்த, அதாவது தேசம் என்ற தாயைக் கற்பழிப்பது அல்லது விபச்சாரம் செய்யும் நிலைக்குத் தரம் தாழ்த்துவது என்ற தேர்வுக்கு, உலகமயமாதல் விபச்சாரத்தைப் பண்பாடாக்கியது.


இதில் பெண்ணின் ஒருதார மணத்திலான சொந்தக் காதலையும் அன்பையும் தகர்ப்பதன் மூலம், ஆணாதிக்க ஆண்களுக்கு விட்டுக் கொடுக்கும் இயல்பை விபச்சாரமாக்குவது உலகமயமாதலுக்கு நிபந்தனையாக்குகின்றது. ஆண் தனது பலதார மணத்தை மேலும் விபச்சார நிலைக்கு இட்டுச் செல்வதன் மூலம், உலகளாவிய சூறையாடலை வேகப்படுத்த முடிந்தது.


மனித வரலாறு வர்க்கங்களின் யுத்தங்களால் ஆனவை. அனைத்து யுத்தத்திலும் அடக்குமுறைக்கு எதிராகப் போராடியதே மனித வரலாறு என்பதும், ஆளும் வர்க்கங்கள் தமது வர்க்க நலனில் இந்த யுத்தத்தை நியாயப்படுத்துவதில் பின்நின்றதில்லை. இதற்காகப் பலவகை வண்ணக் கோட்பாடுகளை உற்பத்தியாக்குவதும், இட்டு நிரப்பித் தள்ளுவதுமாக வரலாறு நகர்ந்துள்ளது. இது முடிந்துவிடவில்லை, தொடருகின்றது.


மனித வரலாறு முழுவதும் அண்ணளவாக 14,500 யுத்தங்கள்1 நிகழ்ந்துள்ளன. இந்த யுத்தத்தில் 360 கோடி1 மக்கள் கொல்லப்பட்டனர். யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்பு பூமியின் மத்திய கோட்டைச் சுற்றி 10 கி.மீ அகலமும் 8 கி.மீ1 கனமும் கொண்ட தங்கத்தின் பெறுமதிக்குச் சமமானது. இந்த வகையில் ஆளும் வர்க்க நலன்களினால் உருவான யுத்தங்கள் மனிதக் குலத்தை வேட்டையாடி, சமூகச் சொத்தை அழித்ததன் மூலம், தனது சொத்தைக் குவித்து தனது வர்க்க ஆட்சியை நிலை நிறுத்தியுள்ளது. இந்த வர்க்க ஆட்சியில் உருவான தனிச் சொத்துரிமை, பரந்துபட்ட மக்களின் சொத்தை அழித்து, சொத்துக் குவிப்பை மையப்படுத்தி, அதைப் பாதுகாத்து, அதை நீடிப்பதற்கு அவசியமான ஆணாதிக்கத்தை, பெண்களின் மீது கையாளுகின்றது.


ஆணாதிக்கத்தைத் தனிச்சொத்துரிமையில் பாதுகாக்க, பண்பாட்டுக் கலாச்சாரத் தளத்தை அதி உச்ச நிலையில், வரலாறு முழுக்க சுரண்டும் வர்க்கம் பயன்படுத்தி வருகின்றது. இந்த வகையில் உலகமெங்கும் 25,0001 வானொலி நிலையங்களையும், 200 கோடிக்கு2 மேற்பட்ட வானொலிப் பெட்டிகளையும் (ரேடியோ), 100 கோடி2 தொலைக்காட்சிப் பெட்டிகளையும், இலட்சக்கணக்கான செய்தித் தாள்களையும், வெளியீடுகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட செய்தி வழங்கும் நிறுவனங்களையும் கொண்டே உலகத்தின் ஆணாதிக்க வர்க்க ஆட்சி பாதுகாக்கப்படுகின்றது. அதேநேரம் 96.5 கோடி மக்கள்2 எழுதப் படிக்கத் தெரியாதவராக உள்ளனர். அதேநேரம் 10 கோடி குழந்தைகள்2 பாடசாலை செல்லாமல் உள்ளனர். இந்த வகையில் உள்ள மக்களில் பெண்களின் பங்கே அதிகமானது. ஆணாதிக்கத்தின் எல்லைக்குள் சிக்கி பெண்ணின் கல்வி என்பது தகாத செயலாகப் பண்பாட்டுக் கலாச்சாரங்கள் கருதியதன் விளைவே இது. பெண் பிள்ளை பெறவும், வீட்டு வேலை செய்யவும், கணவனின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யவும், காதலுடன் கூடிய அன்பாக, ஒருதார மணத்தில் சேவகம் செய்யவும், கணவனின் பலதாரமணம் சார்ந்த பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யவும் கோரும், பண்பாட்டுக் கலாச்சார இடைவெளியில், குறிப்பாக இவை அதிகம் பாதிக்கின்றது.


ஒருபுறம் பல்வேறு செய்தி அமைப்புகள் பெருகியுள்ள நிலையில் அதில் மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் எந்த விதமான நிகழ்ச்சிகளையும் மறுத்து, பகற் கனவுகளில் புகுந்து, கற்பனைத் தனத்தில் திளைக்கக் கோரும் போதையின் தரத்தில், இந்தச் செய்தி ஊடகங்கள் ஆணாதிக்க வர்க்கச் சமூகத்தை அதன் அச்சில் நிலைநிறுத்தி பாதுகாக்கின்றன. இங்கு நாட்டுக்கு நாடு, பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபட்ட வகையில், ஒரே விடயத்தை வெளிப்படுத்தும் இந்தச் செய்தி ஊடகங்கள் பெண்ணைக் கீழ் நிலையில், ஆணின் அடிமையாக்கியே அனைத்தையும் அரங்கேற்றுகின்றன. இந்தக் கீழ்நிலைப் பாத்திரம்தான் இந்தச் சமூக அமைப்பின் இரசனைக்குரிய விடயமாகவும், கவர்ச்சிக்குரிய பண்பாடாகவும், அழகுக்குரிய கலையாகவும், கலைக்குரிய இலக்கியமாகவும், இலக்கியத்துக்குரிய சமூக மறுப்பாகவும் இந்த ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையின் எல்லைக்குள், மனித மூளைகளை வெதும்பப் பண்ணி, விகாரமாக்கப்படுகின்றன.


பெண்ணின் ஒழுக்கம், கட்டுப்பாடுகள் ஒருதார மணத்தில் ஒரு குடும்பத்துக்குள் எப்படிப் பாதுகாக்கப்படுகின்றதோ அதுபோல், ஒரு தேசத்தின் எல்லைக்குள் பொருளாதாரம் பாதுகாக்கப்படுவதை, எல்லை கடந்த ஏகாதிபத்திய உலகமயமாதல் சீற்றத்துடன் எதிர் கொண்டது, கொள்கின்றது.


குடும்பத்தில் நீடித்த சோரம் போதல், கள்ளக் காதல், விபச்சாரம் போன்றன இந்த ஒருதார மணத்துக்கேயுரிய பண்பாக இருந்தாலும், தேசத்தின் பொருளாதாரத்தைக் கூவி விற்கும் விபச்சாரத் தரகர்களாக அரசுகளும், அதன் எடுபிடிகளும் இருந்தாலும், இந்தத் தேசச் சமூகங்கள் பெயரளவில் தேசங்களாக இருந்தன. இந்தப் பெயரளவிலான தேசம், தேவையற்றது என்கின்ற நிலையை உலகமயமாதல் கோரியபோது, கள்ளக் காதல், சோரம் போதல்..... என்பவையும் அவசியமற்றதாகின்றது. இது திறந்த விபச்சார உலகில் புகுந்த நிலையில், பெண்கள் அதை எப்படி எதிர் கொண்டு பழையதை மறுத்தபடி, ஏகாதிபத்திய உலகமயமாதலை ஏற்கும் எதார்த்தமே இச்சமூகத்துக்குள்ளான பெண்ணியக் கோட்பாடாகியது.


இந்தப் பெண்ணியம் மார்க்சியம் மீதான தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு போராட்டமாக்குகின்றது. ஆனால், மார்க்சியம், பெண்ணின் விடுதலையை அதன் தனிச் சொத்துரிமையின் வழியிலும், பெண்ணின் மீதான ஆணின் ஒடுக்குமுறையை, முதல் வர்க்க ஒடுக்குமுறையாக இனம் காட்டியும் போராடுகின்றது. ஏகாதிபத்தியச் சூறையாடலை அதன் களத்திலேயே அழிக்கப் போராடுகின்றது. இந்தப் பெண்ணியம் அனைத்து சமூகக் கொடுமைகளையும் முடிவுக்குக் கொண்டுவர போராடுகின்றது.


அனைத்து சமூகக் கொடுமைகளையும் எதிர்த்துப் போராடுவதை மறுக்கும் பெண்ணியக் கோட்பாடுகள், எல்லைப்படுத்தப்பட்ட இச்சமூகத்துக்குள்ளான பெண்ணியக் கோட்பாட்டுக்குள் ஆணாதிக்கமயமாகி, இதன் மூலம் உலகமயமாதலின் அங்கமாகின்றன. பெண்ணின் சுயநிர்ணயத்தை முன்வைப்பதற்குப் பதில் கட்டற்ற புணர்ச்சியை முன்வைக்கின்றன. இருப்பதைக் கட்டுடைப்பதாகப் பிரகடனம் செய்யாத படி, ஆணாதிக்கத்தைத் தமக்குரியதாக மறுக்கின்றன. இருப்பதைக் கட்டுடைத்து, இருக்கும் சமுதாயத்துக்குப் பதில்; சுரண்டலற்ற முதல் வர்க்கப் பகையை ஒழிக்க கோருவதற்;குப் பதில், ஆணாதிக்கப் பெண்ணியம் மார்க்சியப் பெண்ணியத்தை ஆணாதிக்கமாக இட்டுக் காட்டுகின்றது. மார்க்சியத் திரிபால் நடந்த அனைத்துப் போராட்டச் சிதைவுகளையும் பயன்படுத்தி, இந்த ஆணாதிக்க ஏகாதிபத்தியப் பெண்ணியக் கோட்பாடுகள் மார்க்சியத்துக்கு எதிராக எங்கும் இயங்கியல் அடிப்படையின்றி பிதற்றிக் கொண்டும், சீரழிவுப் பாதையில் வேகநடை போடும் நிலையில், தமிழில் இந்த நூல் மார்க்சியத்துக்கு வளம் சேர்க்கவும், அதன் போராட்டப் பாதையை மீட்டு எடுக்கவும், பங்காற்றும் என்பதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.


பல்வேறு தரவுகளைத் தொகுப்பதில் தமிழ் மொழியைத் தவிர, வேறு மொழி எதுவும் எனக்குத் தெரியாத நிலையில், ஏங்கெல்சுக்குப் பின்னான மனிதனின் கண்டுபிடிப்புகளை ஆணாதிக்கத்துக்கு எதிராகத் தொகுத்து, பாட்டாளி வர்க்கத் தத்துவத்தை மேலும் வளர்த்தெடுக்க முடியாமல் போய்விடுகின்றது. ஓர் அடிமட்ட உடலுழைப்புத் தொழிலாளியாக வாழ்ந்தபடி, உழைப்புக்கு முந்திய பிந்திய பல நீண்ட கால இடைவெளியூடாக (ஒரு வருடத்துக்கு மேலாக) எழுதியதால் இந்த நூலில், ஏற்படும் தொடர்ச்சியான கருத்து ஒருமிப்பு சிதைவுகளை இயன்ற வரை திருத்தியுள்ளேன்;. முதலாளித்துவப் புள்ளிவிபரத் தரவுகளில் உள்ள குறைபாடுகள்;, இயல்பாகச் சிறு தவறுகளை ஏற்படுத்தியிருப்பின், அதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டின், அடுத்த பதிப்பில் திருத்த முடியும். அதேநேரம் மேலும் தரவுகளைத் தந்து உதவுவதன் மூலம் மேலும் இணைக்கவும் முடியும்.


எனது கருத்துகளுக்குப் பதிலளிக்க முடியாத அரசியல் சூனியங்கள், தம்மைச் சார்ந்தது என்று முத்திரை குத்தி தப்பிச் செல்வது பொதுப்பண்பாகவுள்ளது. பாட்டாளி வர்க்க இலக்கியம் பிரச்சாரத் தன்மை வாய்ந்தது என்று முத்திரை குத்துவதுடன், அது கலை, அழகியல் அற்ற வறட்டுத்தனம் கொண்டது என்கிற அவதூறுகள் மூலம், தமது வக்கற்ற அரசியல் பிழைப்பை இந்த அமைப்பில் நடத்துவது போல், என் எழுத்துக்குப் பதிலளிக்க முடியாதவர்கள் ''தனிநபர் தாக்குதல்" கொண்டது என்ற வதந்தி மூலம், அரசியலில் பிழைக்க முயலுகின்றனர். என் எழுத்தை எடுத்து, அதை நிறுவ வக்கற்ற அரசியல் சூனியங்களின் பிழைப்பை, பலமுறை நான் கோரியும், நிறுவமுடியாது பிழைப்பு அரசியல் செய்வது மட்டும் தொடருகின்றது.


எனது கட்டுரைகளின் மொழி தொடர்பாக வைக்கப்படும் விமர்சனங்களை மொழியியல் துறையில் கவனத்தில் கொள்கின்றேன். அதேநேரம் எனது கருத்துகள் மீது பதிலளிக்க முடியாதவர்கள் மொழியியலால் தம்மை மூடிப் பாதுகாக்க முயல்கின்றனர். இதில் இருந்து என் கருத்துக்கு அனைத்து வகையான அவதூறுகளையும், தடைகளையும் கூட தமது வர்க்க நோக்கில் இருந்து கையாளுகின்றனர். எனது ஆரம்பக் கல்வியில் ஏற்பட்ட குறைபாடுகள், மொழியியலில் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றது. அதுவும் தத்துவத் துறையிலும், தத்துவ விமர்சனத்திலும் இவை மேலும் கடினமாகின்றது.


மலையகத்தில் பிறந்த நான் ஆரம்ப அடிப்படைக் கல்வியைத் ''தோட்டக் காட்டு" (இதை இப்படித்தான் அழைப்பார்கள்) பாடசாலைகளில் தொடங்கியதாலும், சிறுவயதிலேயே பாடசாலைக்கு முந்திய, பிந்திய நேரத்தை, உடல் உழைப்பில் ஈடுபடுத்த நிர்பந்தித்த ஏழ்மையுடன் கூடிய வாழ்க்கையாலும், கல்வியில் குறைபாட்டை ஏற்படுத்த, அதனால் மொழியில் இலக்கணத் தவறுகள் ஏற்படுகின்றது. ''தோட்டக் காட்டு" பாடசாலைகளைப் பற்றிய குறிப்பு ஒன்றும் கூறவேண்டும். இலங்கையில் மிக மோசமாக இனம், வர்க்கம், சாதி, தேசிய ஒதுக்கலைக் கொண்ட இப்பாடசாலைகள், கல்வித் தரத்தைப் பேணுவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய பாடசாலைகள் கூட இலங்கையில் கல்வித் தரத்தைப் பேணுபவை. ஆனால் தோட்டப் பாடசாலைகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் கட்டாய ஆசிரியர்களின் வேண்டாவெறுப்பான புறக்கணிப்பூடாகவும், மேலும் இயல்பான புறக்கணிப்புடனும் கல்வியைச் சிதைத்தது. அதனுடன் யாழ் மேலாதிக்கக் கண்ணோட்டம் மலையக மக்கள் பற்றிய இனப் புறக்கணிப்பை நியாயப்படுத்தி ஒதுக்கியது. இதன் மொத்த விளைவையும் எனது மொழி சந்திக்கின்றது.


அடுத்து, எனது முந்திய நூலான ''தேசியம் எப்பொழுதும் எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்கக் கோரிக்கையல்ல" என்ற நூல் தொடர்பான விமர்சனங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. பலர் பதில் எழுதுவதாகப் பீற்றியவர்கள் பதிலளிக்க முடியவில்லை. மாறாக அவதூறுகளை வாய் மூலம் பரப்பினர். எனது பெயர் தொடர்பான விமர்சனம் ஒன்றைச் சந்தித்தேன். மொழியியல் ரீதியில் "ற" வில் தொடங்குவது தவறானது என்ற விமர்சனம் சரியானது.


தமிழில் இலக்கண அறிவற்ற ஏழைப் பெற்றோரும், எமது நடைமுறை வாழ்க்கையிலும், எம்மையறியாது பயன்படுத்தும் ஆயிரம் விலகல்களைச் சரி செய்ய வர்க்கப் புரட்சியினூடான மொழிப் புரட்சி அவசியமாகின்றது. இதை வறட்டுத்தனமாக அணுகுவதும் தவறு. ஆனால் திருத்தக் கூடிய எல்லா நிலையிலும் திருத்தவும் வேண்டும்;. இந்தத் திருத்தம் பொருளை மறுத்தல்ல. பொருளைச் சமூக நிலையில் மாற்றி, மாற்றத்திற்குள்ளாகும் சமூக நிலையில் மட்டுமே செய்யமுடியும். அந்த வகையில் எனது பெயரை ''றயாகரன்" என்றதில் இருந்து "இரயாகரன்" என்று மாற்றியுள்ளேன்.


இந்தப் புத்தகத்தில் எடுத்துக் கொண்ட பல்வேறு தலைப்புகளிலான விடயங்களை மிகச் சுருக்கமாகவே, புத்தகத்தின் சுருக்கம் கருதி செய்துள்ளேன. சில கட்டுரைகள் மட்டும் விதிவிலக்காகும். இதேபோல் புத்தகத்தின் சுருக்கம் கருதி பல முக்கிய விடயங்கள் விடுபட்டுள்ளது. உதாரணமாகத் தாலி கட்டுவது, சடங்குகள், சினிமா பாடல்கள், சினிமா, தொலைக்காட்சி, விளம்பரம்... எனப் பலவும் விடுபட்டுள்ளது. இவைகளை நாம் பிறிதோர் கட்டுரையூடாகக் கொண்டு வரவேண்டியுள்ளது. பலதரவுகளைத் தொகுப்பதில், நூல்கள் இன்மை, மற்றும் நேரமின்மையும் கூட புத்தகத்தின் பூரணத் தன்மையை முழுமையாக்க இயலாமற் செய்து விட்டது.


என்னுடைய சமூகப் பங்களிப்பில் பங்கு கொள்ளாத நிலையில், உதவியவர்களைப் பற்றிக் குறிப்பிடுவது அவசியமாகி விடுகின்றது. இந்தப் புத்தகத்தை எழுதியதற்;கு அப்பால், இதில் ஒத்துழைத்தவர்களின் பங்களிப்பு மதிப்புக்குரியதாக உள்ளது. புலம் பெயர்ந்த இறுக்கமான, மந்தமான, சூனியமான, பூர்சுவா வாழ்க்கையில் சமுதாய நலன்களுக்கு எதிரான, மிகவும் மோசமான ஜனநாயக விரோதப்போக்கு காணப்படும் சூழலில், எழுத்துப் பிழையைத் திருத்துவதற்குக் கூட, ஒத்துழைப்பைப் பெறுவது மிகச் சிரமமான பணியாக இருந்தது. இந்த நிலையில் சாதாரண வாழ்க்கையில் ஒத்துழைத்தவர்களையும், இந்த நூலைச் சிறப்பாகக் கொண்டுவர ஏதோ ஒருவகையில் பங்களித்தவர்களாகவே காண்கின்றேன்.


இந்த நிலையில் எனது பூர்சுவா குடும்பச் சூழலில், நடைமுறையற்ற அரசியல் வாழ்வில், கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளியை அகற்றி வாழ்வது கடுமையான போராட்டமாகவே இருந்தது, இருக்கின்றது. சமூகப் பங்களிப்பை உழைப்பாகக் கருதாத குடும்ப உறவுகளில், குடும்பக் கடமையையே உழைப்பாகக் கருதும் வாழ்வில், கடுமையான முரண்பாடுகள், போராட்டங்கள், ஐக்கியங்களுக்கு ஊடாகவே இப்புத்தகத்தை எழுத முடிந்தது. எனது சமூக அக்கறை காரணமாக, என் மனைவி தவிர்க்க முடியாமல் ஈடுபடும் நிர்ப்பந்தத்துடன் கூடிய வாழ்க்கைப் போராட்டத்தில், தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக் கொள்ளும் பல்வேறு விடயங்கள், சமூக நடைமுறை வாழ்வியலில் மறுக்கும்போது, கடுமையான முரண்பாடுகள் ஊடாகவே எனக்கு ஒத்துழைப்பை நல்கினார். இந்த நூலில் பயன்படுத்திய பிரெஞ்சுப் பத்திரிக்கை சார்ந்த தரவுகளை, கழுவித் துடைக்க தொழிலாளியாகச் செல்லும் இடங்களில் இருந்து, பொறுக்கியெடுத்து கொண்டு வந்து தருவதன் மூலம், தனது வீட்டு வேலைகளில் என்னைவிட அதிகச் சுமைகளைச் சுமந்தும், எனக்கு முரண்பாடுகளுடன்; ஒத்துழைத்தது மட்டுமின்றி, உதவிகளையும் செய்தார். என் சிறு குழந்தைகள், மிக குறுகிய நேரமே தந்தை பாசத்தை அனுபவித்ததன் ஊடாகவும், தமது சிறு பிராய அன்பைத் தியாகம் செய்ய வேண்டி நிர்ப்பந்தத்தில் இருந்தே, இந்த நூல் உருவாகின்றது. சமூகத்தில் மனைவி உட்பட குழந்தைகள் ஓர் அங்கம் என்ற வகையில், சமூகப் பங்களிப்பே, எனது குடும்பம் உட்பட சமூகத்தை மீட்டெடுக்கும். அந்த வகையில் இந்த நூல் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்தின்; மீதும் உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனத்தை எதிர்பார்க்கின்றேன்.


பி.இரயாகரன்