யூன் 15-16 திகதி நடைபெறவுள்ள இந்த இலக்கியச் சந்திப்பில், தேசிய இனப்பிரச்சனை தீர்வு  தொடர்பாக உரையாடும்படி இலக்கிய குழுவைச் சார்ந்த ஒருவர் கோரினார். இதை நாம் திட்டவட்டமாக நிராகரித்தோம். நாம் இதில் கலந்து கொள்வதாக இருந்தால், மக்கள் நலன்சார்ந்த ஒரு அறிவித்தலையும், கூட்டத்தில் கருத்து ஜனநாயகம் பேணப்படும் வகையிலான ஒரு ஜனநாயக வடிவத்தையும் கோரினோம்.

 

 மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையாக நாம் வைத்தது என்ன? இலங்கையில் இன்று மக்களுக்கு எதிரான இரண்டு பாசிசங்களும் உண்டு என்பதை அறிவித்து, மக்களின் நலனின் அடிப்படையில் கூட்ட அழைப்பை விடக் கோரினோம்.

 

மக்களுக்கு எதிரான பாசிசமாக, இலங்கையில் புலி மற்றும் அரசும், அரசு சார்ந்த குழுக்களும் உள்ளது என்பதை அறிவிக்கக் கோரினோம். இதையே இந்த இலக்கியச் சந்திப்புக் குழு மறுத்தது. உண்மையில் தமிழ் மக்கள் மேல் உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால், இதை அறிவிக்குமாறு கோரினோம். இதுவோ மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களின் பொதுவான கோரிக்கை.

 

தனிப்பட்ட எமது உரையாடலில் அதை ஏற்றுக்கொண்ட அவர், இலக்கிய குழு சார்பாக அறிவிக்க தயங்கினார். மற்றவர்களுடன் தொடர்பு கொண்ட பின் தொடர்பு கொள்வதாக கூறியவர், பின் தொடர்பு கொள்ளாமலே அறிவித்தல் வெளியாகியுள்;ளது.  

 

இரண்டாவதாக ஜனநாயகத்தை உறுதிப்படுத்த, நாம் வைத்த கோரிக்கை என்ன?  நபர்களுக்கு கருத்துச் சுதந்திரமல்ல. கருத்துக்கு கருத்துச்சுதந்திரத்தையே நாம் கோரினோம். 

 

இவை இரண்டையும் நிராகரித்த வடிவில்தான், இந்த இலக்கியச் சந்திப்பு இன்று  அரங்கேறுகின்றது. மக்கள் நலனை விடவும், பாசிசத்தின் நலனை உயர்ந்ததாக, அதை பிரதிநிதித்துவப்படுத்தும் தனிப்பட்ட நபர்கள் முக்கியமானவர்களாகவும் உள்ளனர். அவர்களை திருத்திப்படுத்தும் இலக்கியச் சந்திப்பாக, அவர்களே இதை நடத்துகின்ற ஒரு சந்திப்பாக இது சீரழிந்து கிடக்கின்றது.

 

'ஒருவனுடைய அறிவு அல்லது கோட்பாடு எத்துணை உண்மை என்பதைத் தீர்மானிப்பதற்கு அவன் அது பற்றி எவ்வாறு அகவயமாக உணர்கிறான் என்பதில் தங்கியிருக்க முடியாது. ஆனால் சமூக நடைமுறையில் புறவயமான அதன் விளைவு என்ன என்பதிலேயே தங்கியிருக்க வேண்டும்;. நடைமுறை ரீதியான கண்ணோட்டம் தர்க்கவியல் பொருள் முதல் வாதத்தின் முதன்மையானதும் அடிப்படையானதுமான கண்ணோட்டமாகும்" என்றார் லெனின்.

 

லெனினின் இந்தக் கூற்று மிகமிக துல்லியமாக, இங்கு இதை அம்பலமாக்குகின்றது. நல்லவர், நேர்மையானவர், வல்லவர், இளையவர் என யாராக இருந்தாலும், பாசிச சேற்றில் இறங்கினால் சேறு இன்றி யாரும் வெளிவர முடியாது. மக்களின் இன்றைய நிலை, அவர்கள் சந்திக்கின்ற அவலங்கள், அவர்களின் எதிரிகள் பற்றிய அக்கறையற்ற, சீரழிவான செயல்பாடுகள் அனைத்தும் வெறுக்கத்தக்கனவே.

 

எம் மண்ணில் உள்ளியக்கப் படுகொலைகள், இயக்க அழிப்பு படுகொலைகளைத் தொடர்ந்து, மக்கள் மேல் அக்கறையுள்ளவர்களினது புலம்பெயர்வும் நடந்தது. இவர்களில் பலர் சமூக அக்கறையுடன் சஞ்சிகைகளை கொண்டு வர முனைந்ததும், மக்கள் கருத்துகளையும் முன்வைத்தனர். இந்த சமுதாய தேவையை வளர்ப்பதை அடிப்படையாகக் கொண்டு தான், இலக்கியச் சந்திப்பு தோன்றியது. ஆனால் அது படிப்படியாக மக்களுக்கு எதிரான அரசியலுடன் சீரழிந்தது. சமூக அக்கறையுடன் இதை உருவாக்கியவர்கள், சீரழிவை சகிக்க முடியாது ஒதுங்கினர். இப்படி முற்றாக சீரழிவாளர்களின் ஒரு சந்திப்பாக மாறியது.

 

இதன் விளைவாக அரசியல் பேசா இலக்கிய சந்திப்பாக சீரழிந்தது. இது பொழுதுபோக்கு மடமாக, வம்பளக்கும் வக்கிர கூடாரமாக, குடித்து பொழுதுபோக்கும் சந்திப்பாக, ஒரு சுற்றுலாவாக சீரழிந்தது. புலியல்லாத பொதுத்தளம், இப்படி இதற்குள் தான் வக்கிரமடைந்தது. புலியல்லாத தளத்தில் மக்களை வழிகாட்ட வேண்டியவர்கள், தாம் சீரழிந்தன் மூலம் அரசியலை வம்பளந்தனர். 

 

நாம் மட்டும் இதற்கு எதிரான போராட்டத்தையும், இதைத் தனித்தே எதிர்த்து நிற்;க வேண்டியும் ஏற்பட்டது. பொது அரசியல் சீரழிவால் தனிமைப்படுத்தப்பட்ட எம்மீதான அவதூறுகள் மூலம், இந்தத் தளம் கொசித்தது. எமது கருத்துக்கு எதிராக, கருத்தால் அவர்களால் அரசியல் செய்ய முடியவில்லை. 

 

தமது சொந்த சீரழிவை நியாயப்படுத்த, அதற்கே உரிய வகையில் பின்நவீனத்துவம், "தலித்தியம்" என்று பற்பல கோட்பாட்டை இறக்குமதி செய்தனர். இதைக் கொண்டு தமது அரசியல் சீரழிவை மூடிமறைக்க முடியவில்லை. தமது அரசியல் சீரழிவு, தனிநபர் சீரழிவாக, அது நக்கிப் பிழைக்கும் கூட்டத்தையும் உருவாக்கியது.

 

இலக்கியச் சந்திப்பு, இப்படித்தான் மக்கள் போராட்டத்தை தனது சீரழிவூடாக எள்ளி நகையாடியது. இந்த சீரழிவுக்கு ஏற்ற அரசியல் பொதுத்தளம் வழிகாட்டியது. தமிழ் தேசிய போராட்டம் புலியிசமாக சீரழிந்து விட, புலம்பெயர் மாற்றுக் கருத்துத் தளம் இந்தப் போக்கில் மேலும் தன்னை நாறடித்தது.

 

இந்தப் போக்கு முற்றாக மக்களுக்கு எதிராக மற்றொரு பண்பு மாற்றத்தைப் அண்மைக் காலத்தில் பெற்றது. இலங்கையில் அமைதி சமாதானம் என்ற அரசியல் நாடகத்தை அரசும்-புலியும் அரங்கேற்ற, அது புலம் பெயர் மாற்று அரசியலை துரோக அரசியலாக்கியது. புலிகளின் அரசியல் சிதைவும், இராணுவ சிதைவும் வேகம் பெற, புலியல்லாத மாற்று துரோகமாக முதன்மை பெற்றது. இந்திய - இலங்கை அரசு ஆதரவு துரோகக் குழுக்களின் துரோக அரசியல், புலம் பெயர் புலியல்லாததோரின் அரசியலாகியது. இங்கும் இதற்கு எதிராக நாம் மட்டும் போராடுகின்ற வரலாறு.  

 

இப்படி அரசு ஆதரவு பாசிசக் குழுக்கள், புலம்பெயர் நாட்டில் புழுக்கத் தொடங்கியுள்ளது. இலக்கிய சந்திப்பு சேர்த்த அரட்டை பேர்வழிகளின் மடியில் தான், இந்தப் புழுக்கள் ஊர்ந்து வளாந்தன. பெரும்பாலான இலக்கிய சந்திப்பு அரட்டை ஜம்பவான்கள், இந்த அரசு ஆதரவு குழுக்களுக்குள் கரையத் தொடங்கினர். பலர் இதன் தூணாகவும் ஆகினர். இதை பல வேஷத்தில் அரங்கேற்றினர், அரங்கேற்றுகின்றனர். நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த அரசு ஆதரவுக் குழுக்களுடன் தமது அரசியல் உறவுகளை வைத்துக் கொண்டே, இந்த பன்றித்தனத்தை அவர்கள் செய்தனர், செய்கின்றனர்.

 

பேரினவாத அரசின் வேலைதிட்டத்துக்கு ஏற்ப ஆடினர், பாடினர். தமிழ் மக்களையும், ஊர் உலகத்தையும் ஏமாற்ற, அரசு இந்த தீர்வு என்ற குழையைக் கட்டியது. இந்த தீர்வுத் திட்டத்தை, தூக்கிக் கொண்டு அரசு ஆதரவு புலியெதிர்ப்புக் கும்பல், தனத சொந்த சவ ஊர்வலத்தை புலம்பெயர் நாடு எங்கும் நடத்தினர், நடத்துகின்றனர். இப்படி அரசுக்கு ஆள்பிடிக்க உருவான பாசிச அறிவுத்துறையினரின் வழகாட்டலில் தான், துரோகக் குழுக்கள் புலம்பெயர் நாட்டில் குடிபுகுந்துள்ளனர். 

 

இன்று புலியல்லாத அரசியல், இந்திய-இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்குவதாகிவிட்டது. இதையே தமிழ் மக்களின் மாற்று என்று கூறுமளவுக்கு, புலம்பெயர் மாற்று அரசியல் சீரழிந்துவிட்டது. புலம்பெயர் அரசியல் - இலக்கியம் என்பது, இவர்கள் இல்லாத சந்திப்பு என்பதை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அரச பாசிசமாக புலம்பெயர் இலக்கியம் மாறிவிட்டது. இதுவே இன்று ஜனநாயகம் முற்போக்கு என, எல்லாமாகிவிட்டது.

 

இவர்களுடன்  நல்லவர், நேர்மையானவர், வல்லவர், இளையவர் எல்லாம் கூடி வம்பளப்பதே, இன்றைய பின்நவீனத்துவ "தலித்திய" மாற்றுக்கருத்தாகிவிட்டது. இதனால் தான், பாசிசத்துக்கு எதிரான சந்திப்பாக நடத்த விடுத்த எமது அழைப்பை அது மறுக்கின்றது. அரச பாசிட்டுகள் இல்லாத மாற்றுக் கருத்தை, அது வெறுக்கின்றது.

 

இலக்கிய சந்திப்பு இப்படி இதற்குள் தான் செல்லும் என்பது, அதன் சொந்த அரசியல் விதியாகும்;. புலிப் பாசிசத்தை புலியெதிர்ப்புடன் முனகும் இவர்கள், இலங்கை அரசினதும் அது சார்ந்த துரோகக் குழுக்களினதும் பாசிசத்தை எதிர்த்து குரல் கொடுக்க மறுக்கின்றனர். 

 

இது பற்றி சாடைமாடையாகவும், பக்கச் சார்பாக உள்நோக்குடன் பேச முனைகின்றது. இதை புதிதாக முளைத்த கிழக்கு பாசிசத்துக்கு எதிராக, புலியெதிர்ப்பு யாழ் மேலாதிக்க பாசிசத்தை அரங்கேற்ற முனைகின்றது. இந்த இலக்கியச் சந்திப்பும், இதையே முன்னிறுத்த முனைகின்றது.

 

புலி எதிர்ப்பை வைத்துக் கொண்டு, ஈ.பி.டி.பியையும், ஈ.என்.டி.எல்.எப்யையும், புளட்டையும், ஈ.பி.ஆர்.எல்.எப்யும், ஈரோசையும் கூட்டிவைத்துக் கொண்டு, பாசிசம் பற்றி பேசமுனைகின்றது. இப்படி கிழக்கு பாசிசம் பற்றி அரட்டை அடிக்க விரும்புகின்றது. பேரினவாத அரசே பாசிட். இதனுடன் சேர்ந்து இயங்கும் அனைத்துக் குழுக்களும், அரசை ஆதரிக்கின்ற அனைத்து அரசியலும் பாசிசம் தான். இதில் இயங்கும் கிழக்கு பாசிசத்துக்கு எதிராக மட்டும் பொங்கி எழுவது, வெளிப்படையான யாழ் மேலாதிக்க பாசிசம் தான். புலிபாசிசத்தைப் போல், இது அரச ஆதரவுடன் எழுகின்ற பாசிசம்.

 

இந்த கும்பலுடன் சேர்ந்து நடத்துகின்ற இலக்கியச் சந்திப்பு, யாழ் மேலாதிக்கமாக கிழக்கு மேலாதிகத்துக்கு எதிரான பாசிச உள் முரண்பாடாகும். இலங்கை - இந்திய பாசிச அரசுடன் சேர்ந்து நிற்பதையே எதார்த்த அரசியலாக நியாயப்படுத்தும் இவர்கள், அந்த பாசிச அரசுகளின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்பவே கூடுகின்றனர். இவர்கள் யாரும் மக்களுக்காக கூடுவது கிடையாது. இவர்கள் இந்த இலக்கியச் சந்திப்பில் யாழ் மேலாதிக்க அரச பாசிட்டுகளைப் பற்றி பேசாது, அரச சார்பு கிழக்கு மேலாதிக்க பாசிட்டுகளைப் பற்றி பேச முனைகின்றனர்.

 

இதைத் தான் இந்த இலக்கிய அட்டைகள் தமது கொசிப்பைக் கடந்து, இந்த இலக்கியச் சந்திப்பில் நிறைவேற்றத் துடிக்கின்றனர். 

 

பி.இரயாகரன்
05.06.2008