தமிழ் மக்களின் தேசியமும் அவர்களின் பொருளாதார வாழ்வும் திட்டமிட்டே அழிக்கப்பட்டது. இது ஒரு அரசியல் போக்காக வளர்ச்சி பெற்ற போதெல்லாம், தமிழ் தேசிய போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக அவை புறக்கணிக்கப்பட்டு இரண்டாம் தர விடையங்களாக மாறியது. இவை கோசம் போடும் ஒரு அரசியல் வடிவத்துக்கான ஒரு உத்தியாக, மேலெழுந்தவாரியாக கையாளப்பட்டது. இனவாத சிங்கள அரசு தரப்படுத்தலை இன அடிப்படையில் கல்வியில் கொண்டு வந்த போதே, தமிழ் தேசியவாதம் எழுந்தது தற் செயலானதல்ல. இதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டமும் ஒரு வடிவமாகியது.

 

 

ஆனால் இந்த தரப்படுத்தல் மூலம் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. மாறாக இன அடிப்படைவாதத்தை அரசியலாகக் கொண்ட தமிழரசு கட்சியில் இருந்த அடிமட்ட தொண்டர்களே, இந்த தீவிர தேசியவாத இன அலைக்குள் முதலில் பலியானார்கள். இதற்கு தமிழரசுக் கட்சி மறைமுகமாக ஆதரவு வழங்கியதுடன், தமது அரசியல் எதிரிகளை கொன்றுவிடவும் ஊக்கமும் ஆக்கமும் அளித்தனர். இந்த இளைஞர் அணிகள் ஆயுதம் ஏந்திய போதே, அரசியல் கட்சியான தமிழரசுக் கட்சியுடன் முரண்பாட்டுடன் கூடிய பிளவும் வளர்ச்சி பெற்றது. ஆயுதம் ஏந்திய தனிநபர் பயங்கரவாத இளைஞர்களுக்கு எதிராக, பொலிஸ் நடவடிக்கை தீவிரமான போது தமிழரசுக் கட்சி அவர்களின் தலைமறைவு வாழ்க்கை மற்றும் வாழ்வுக்கான பொருளாதார போராட்டத்தில் கைவிட்டு காட்டிக் கொடுத்தது. மறுதளத்தில் அவர்களின் சிறை வாழ்க்கையில் இருந்து பாதுகாக்க போராடுவதாக நடித்துக் காட்டும் இரட்டை வேடத்தைக் கையாண்டது. இதனால் மக்கள் முன் தேசிய தலைவர்களாக தொடர்ந்தும் தமிழரசு கட்சியே உலா வந்தது. 1975க்கு பின் குறிப்பாக 1977 தமிழர் விடுதலைக் கூட்டணி உருவான போது ஏற்பட்ட தேசிய அலை, கவர்ச்சிகரமான கோச அரசியலாக மாறியது. இளைஞர்கள் இதன் கவர்ச்சியில் கரைந்தும் கரையாத முரண்பாடுகளுடன் குழுவான போது தனிநபர் பயங்கரவாத செயல்கள் கோலோச்சின.

 

ஆனால் திட்டமிட்டு சிங்கள அரசால் நடத்தப்பட்ட இனக் கலவரமே, கூட்டணிக்கும் இளைஞர்களுக்குமிடையிலான பிளவை நிரந்தரமாக்கியது. இந்த இனக் கலவரங்களின் போது மரபான தேசிய கட்சியான கூட்டணி இதை எதிர்கொள்ள திராணியற்ற நிலையில், தன்னியல்பான இளைஞர் அணிகள் இதற்கெதிரான செயல்களில் துணிச்சல் உள்ள பங்களிப்பை வழங்கினர். இந்த தன்னியல்பான செயலூக்கமுள்ள இளைஞர் அணிகளில் இருந்தே சில பத்து இயக்கங்கள் உருவாகின. இளைஞர் அணி முற்று முழுதான ஆயுதப் போராட்டத்தைக் கோரின. கூட்டணி என்ற அரசியல் கட்சியின் துரோகம் அரசியல் மீதான வெறுப்பாகவும், ஆயுதத்தை ஒரு தலைப்பட்சமாக வணங்குவதும் தனிநபர் பயங்கரவாதத்தை நேசிப்பதுமாக மாறியது. இதனால் அரசியலில் முரண்பாடற்ற தனிநபர் முரண்பாடுகளுடனும், ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற நிலையிலும் பல குழுக்கள் உருவாகின. ஆனால் இவை அனைத்தும் இனக்கலவரம் மற்றும் தரப்படுத்தலை முன்வைத்தே, தம்மை நிலைநிறுத்தத் தொடங்கினர். ஆனால் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனையை முன்வைக்கவும், அதை அடையாளம் காணத் தவறிய சாபக்கேடான நிலையில், கூட்டணியின் ஒரு வாலாக உருவான வலது குழுக்களின் அரசியல், கூட்டணியின் வலது கண்ணோட்டத்தையே தனது அரசியலாக்கியது. இந்த வலது பிற்போக்கு அரசியல் இன்று வரை, இடது தன்மை கொண்ட அரசியலாக மாறிவிடவில்லை. அனைத்து ஆயுதம் ஏந்திய இளைஞர் குழுக்களும் தரப்படுத்தலை முதன்மைப்படுத்தியே தமது நிலையை நியாயப்படுத்தினர்.