book _1.jpgல ண்டன் ஜெயதேவன் விவகாரம், புலிகளின் வழமையான அவர்களின் அரசியல் வக்கிரத்தை மீண்டும் சந்திக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டதுடன் கூடவே துணைக்கு நோர்வேயும் தலையிட்டது. இதனால் தனிப்பட்ட அவர் புலிகளின் படுகொலையில் இருந்து தப்பிப் பிழைத்து பிரிட்டிசுக்குத் திரும்ப முடிந்தது. தொடர்ந்து புலிகளுக்கு எதிராகத் தனது சுயவிமர்சனத்தை அல்ல, பிரச்சாரத்தை ரி.பி.சி. வானொலியூடாகச் செய்ததுடன், அதைச் சர்வதேச ரீதியாக எடுத்துச் செல்லுகின்றார். சர்வதேசத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விடயமாக இது உள்ளது. தம்மைத் தாம் அப்பாவிகளாகக் காட்டியபடி நடுநிலையாளராக தமது வேஷத்தைப் போட்டு, சூடு சுரணையற்ற வகையில் புலிகளுடன் கூலிக் குலாவுபவர்கள் கனவுகளையே, இப்புலியெதிர்ப்பு பேட்டி அதிரவைத்துள்ளது. மனித நம்பிக்கைகள் எல்லாம் சிதறிக்கப்பட்ட நிலையில், புலியெதிர்ப்பு அரசியலில் குளிர் காய்வதில் ஈடுபடும் புலியெதிர்ப்பு பிரிவினர், ஜெயதேவன் விவகாரத்தைப் போட்டிபோட்டு செய்தியாக முன்னிலைப்படுத்தி வெளியிடுகின்றனர்.

 

புலிகள் அமைப்பு ஒரு ஜனநாயகப்பூர்வமான ஒரு இயக்கமல்ல. புலிக் கட்டமைப்பானது சொந்த அமைப்பின் மீதும் முழு மக்கள் மீதும் அப்பட்டமான வக்கிரத்துடன் கூடிய ஒரு சர்வாதிகாரத்தை ஜனநாயக விரோதக் கட்டமைப்பைத் திணிக்கின்றது. ஆயுத முனையில் மரணத்தை நெற்றிப் பொட்டில் வரைந்தபடிதான், தமிழ் மக்களின் எல்லாவிதமான வாழ்வியல் அடிப்படைகளையும் எப்படியும் எந்தவிதத்திலும் சிதைக்கும் அதிகாரத்தைக் கட்டமைத்துள்ளனர். உண்மையில் புலிகள் நிலவும் சமூக அமைப்பின், பொதுவான அடக்குமுறையின் எல்லாக் கூறுகளையும் தனதாக்கியுள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டே வக்கிரமான சர்வாதிகாரத்தைப் புகுத்தியுள்ளனர். இது இனம், பிரதேசம், சாதி, ஆணாதிக்கம், சுரண்டல் என்று தமிழ்ச் சமூகம் எதையெல்லாம் தனது சீதனமாகக் கொண்ட, ஒரு சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுக் கலாச்சாரத்தைக் கொண்டதாக உள்ளதோ, அதன் ஏகபிரதிநிதிகளாகப் புலிகள் உள்ளனர். இங்கு புலிகள் இதைச் சர்வாதிகார வடிவத்தில் தமிழ் மக்கள் மேல் திணிக்கின்றனர். இதையே தேசியம் என்கின்றனர். இதில் எந்தக் கூறும் சுயாதீனமாக முரண்பட்டு மூச்சு விடுவதைக் கூட புலிகள் அனுமதிப்பதில்லை.


சாதாரணமாகச் சமூகத்தின் இயல்பான போக்கில் உருவாகும் பொது அமைப்புகளைக் கூட உயிர் வாழ புலிகள் அனுமதிப்பதில்லை. இவற்றைப் பினாமி அமைப்புகளாகவே சீரழிய வைக்கின்றனர். அத்துடன் தனிப்பட்ட சொத்துரிமைகளைக் கூட தமதாக்கும் எல்லாவிதமான சதிகளையும், நரித்தனங்களையும் கையாண்டு அபகரிப்பதே புலிகளின் தமிழ்த் தேசியமாக மாறிவிட்டது. சொத்துரிமைகளை அபகரிப்பது, திருடுவது ஆகியவை அமைதியின் உயர்ந்தபட்ச தேசிய இலட்சியமாகி விட்டது. இதில் கோயில்கள் முதன்மை பெறுகின்றன. எந்த உழைப்புமின்றி பணத்தைத் திரட்டவல்ல கோயில்களைக் கைப்பற்றுவது முதல், சுயாதீனமாக இலாபமற்ற வகையில் கருத்துகளை உருவாக்கவல்ல பொது அமைப்புகளையும் கூட கைப்பற்றுவது புலிகளின் அன்றாட செயலாக மாறி, இதுவே நவீன தேசியமாகக் காட்டப்படுகின்றது.


இதை வெற்றிகரமாகச் சாதிக்க "துரோகி' என்ற ஒரு அடைமொழி போதுமானது. புலிகள் இயக்கத்தில் தாங்களாகவே இணைந்து ஒரு போராளியாக இயங்கிய நடைமுறை என்பது தகர்ந்து, பினாமிகள் இயக்கமாகப் புலிகள் இயக்கம் மாறிவருகின்றது. பொதுவான தியாக உணர்வுடன் இணைந்த போக்கு சரிந்து செல்ல, இடையில் தட்டிப்பறித்து சூறையாடி வாழ்ந்த ""வாழத்தெரிந்தவர்கள்'' இயக்கமாகப் புலிகள் இயக்கம் மாறிவிட்டது. பினாமியம் இதில் முதன்மை பெறுகின்றது. மறுபக்கத்தில் சுயமாக இணைந்து இயக்கத்தை உருவாக்கிய தியாக உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு சார்ந்த போக்கு முடிவுக்கு வர, கட்டாய ஆள்சேர்ப்பு ஊடாகவே இயக்கம் தன்னைத் தக்கவைக்கின்றது. பொதுவான இயல்பான ஆதரவு என்ற நிலை சிதைய, இயக்கத்தைப் பயன்படுத்தி வாழவிரும்பும் புல்லுருவிக் கும்பல்களின் இயக்கமாக மாறிவிட்டது. இறப்பர் முத்திரை இயக்கமாக மாறிவரும் பினாமியம், பல போலிகளே தமது சொந்த நலன் சார்ந்து இயக்கத்தின் பொது திசையை வழிகாட்டுகின்றனர். நாளைப் புலிகள் இயக்கம் சிதையும்போது, இந்தப் புல்லுருவிப் போலிகளே முதலில் புலிகளின் முதுகில் குத்துவர். புலிகள் சிதையும் நிலைமைக்கேற்ப நக்கிப் பிழைக்கும் வக்கிரமான அரசியல் பிழைப்பை நடத்துபவர்கள், நிச்சயமாக இன்றைய புலிப் பினாமிகளாகவே இருப்பர். புலிகளை முதலில் தூற்றுபவர்களாகவும் மிக இழிந்த எல்லாவிதமான மனித விரோதக் காரியத்தையும் முந்திக் கொண்டு செய்பவர்களாக இன்றைய புலிப் பினாமிகளே இருப்பர். இதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் தேவையற்றது.


உண்மையில் புலிகள் இயக்கத்தில் இயல்பான தியாக மனப்பான்மை கொண்ட செயல்பாடு சரிந்து செல்ல, புலிகள் வியாபாரப் புலிகளாக மாறி வருகின்றனர். இந்த வியாபாரத்தில் ஏற்படும் சூதாட்டம், பல முரண்பாடுகளை ""வாழத் தெரிந்தவர்கள்'' உள்ளேயே தொடங்கி வைக்கின்றது. மக்களின் உழைப்பை ஆதாரமாக கொண்ட செல்வத்தைக் கைப்பற்றும் பேராட்டமாகவே, புலிகளின் தேசியப் போராட்டம் இன்று மாறிவிட்டது. மக்களை ஏமாற்றியும், மிரட்டியும் பணம் பறிக்கும் புலிகள் இயக்கம், இதை ஒரு பொதுவான அரசியல் செயல்பாடாகவே மாற்றிவிட்டது. இந்த இலாபங்களைப் பகிர்வதில் ஏற்படும் முரண்பாடுகள், இயக்கத்தினுள் அதாவது ""வாழத் தெரிந்தவர்களினுள்'' ஒரு இழுபறியான போராட்டமாக மாறிவிட்டது. ஒருவரையொருவர் முதுகுக்குப் பின்னால் குத்தி காரியம் சாதிக்கும் முயற்சிகளே, பிரதானமாக உள்கட்டமைப்பின் உயிர்நாடியாக மாறிவிட்டது. உள்இயக்கத்தில் ஒருவரையொருவர் நெருக்கமாகக் கண்காணிப்பதுடன், ஒருவரையொருவர் முதுகுக்குப் பின்னால் குற்றம் சாட்டி முதுகில் குத்தி சரிப்பதுஅன்றாட நிகழ்வாகிவிட்டது.


இப்படி பல ஆயிரம் சம்பவங்களில் ஒன்று தான் லண்டன் ஜெயதேவன் விவகாரம், அவரை வன்னியில் சிறைவைத்தபடி, அவரைச் சேர்ந்த குழுவினரிடம் இருந்த ஒரு கோயில் நிர்வாகத்தை, புலிகளில் இருந்த ஒருவர் தனது சொந்த உறவினரிடம் லண்டனிலேயே கைமாற்றியது போன்ற நிகழ்வுகள் வரலாற்றில் முதல்முறையாக நடந்தவையல்ல. இது இலங்கையிலும், புலம் பெயர் நாட்டிலும் பல சொத்துரிமைகளுக்கு நடந்துள்ளது. ஏன் ஜெயதேவன் தொடங்கி பல பொது அமைப்புகளுக்கு நடந்துள்ளது. அப்போது எல்லாம் ஜெயதேவன் புலிகளின் பினாமியாக நக்கித் திரிந்தவர்தான். தற்போதைய விவகாரம் உயிர் உத்தரவாதத்தை இழந்த நிலையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தலையிட்டவுடன் முரண்பாடு முன்னிலைப்பட்டு ஒரு பிரச்சாரம் வெளிவருகின்றது. முன்பும் புலிகள் இவர் தொடங்கிய பல பொது அமைப்புகளைக் கைப்பற்றியது பற்றிய மௌனமான இருட்டடிப்பும், ஏன் அப்போது இவர் கொதித்து எழவில்லை என்ற கேள்விகளுக்குப் பதிலிறுக்காத சுயவிமர்சனமுமற்ற ஒரு புதைச்சேற்றில் தமிழ்மக்களை மீண்டும் ஆழப் புதைக்க முனைகின்றனர். மறுபக்கத்தில் இந்த விவகாரத்தில் பிரித்தானிய அரசாங்கம் புலிகளை மிரட்டும் அளவுக்குச் சென்றது. லண்டன் உயர் நீதிமன்றம் புலிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு தீர்ப்பை வழங்கும் அளவுக்குச் சென்றது. பிரிட்டிஷ் உளவு மற்றும் பொலிஸ்துறை கடுமையான கண்காணிப்புக்குப் புலிகளை உள்ளாக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் புலிகள் தமது முதுகில் மண்படவில்லை என்ற வகையில் இருட்டிப்பு மூலம் அதே புதைச்சேற்றில் இருந்து சேறையள்ளி தமக்குத்தாமே தெளிக்கின்றனர்.
இந்த ஜெயதேவன் யார், அவர் எதைக் கடந்த காலத்தில் செய்தார்? எதிர்காலத்தில் எதைத் தான் செய்ய முனைகின்றார்? போன்ற அடிப்படையான கேள்விகளைத் தன்னை நோக்கி எழுப்பாத வகையில், புலியெதிர்ப்பு அரசியலில் நாடகமாடுகின்றார். மறுபக்கம் புலிகள் வழமை போல் முத்திரை குத்தி தூற்றுவதன் மூலம் தமது சொந்த வக்கிரத்தை மூடிமறைக்கின்றனர்.


தன்னைப் படித்த அறிவுஜீவியாகவும், நேர்மையான ஜனநாயகவாதியாகவும் காட்டிக் கொள்ளும் இந்த ஜெயதேவன், முன்னாள் புலிப் பினாமியாக இருந்தவர், புலிகளின் எல்லாவிதமான மனித விரோதச் செயல்பாட்டுக்கும் கொள்கை ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் கம்பளம் விரித்து வரவேற்று செங்கோல் நாட்டியவர். புலிகள் செய்த பல ஆயிரம் கொலைகள் முதல் சித்திரவதைகள் வரையான அனைத்து மனிதவிரோதச் செயல்பாட்டையும் விசுவாசமாகப் புலிக்காக வாலாட்டி ஆதரித்தவர். இன்றும் அதைக் கண்டிக்காத அவர், தனது சொந்தப் பேட்டிகளின் போது கூட தனது கடந்தகால மனிதவிரோதச் செயல்பாட்டைச் சுயவிமர்சனம் செய்யவில்லை. கடந்தகால நடத்தைகளைச் சரியானவை என்று தம்பட்டம் அடிக்கின்றார். தான் எதுவும் தெரியாத அப்பாவி என்று, தனக்குத்தானே பூசிமெழுகி காட்டுகின்றார். தான் ஒரு நேர்மையான தூய்மையான ஜனநாயகவாதி என்றும், நேர்மையான தமிழ்த் தேசியவாதி என்றும் சொல்கின்றார். தான் ஒரு அப்பாவி என்கின்றார். இப்படித் தான் அவரின் பேட்டி மக்களின் காதைக் குத்தி செவிடாக்குகின்றது.


உண்மையில் அவரின் தனிப்பட்ட பிரச்சினையை முதன்மைப்படுத்தி, அது சரிசெய்யப்பட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கின்றார். அந்த அடிப்படையில் தான் பெருமளவு நிதியுடன் வன்னி சென்றார். புலிகள் அவரைச் சிறை வைத்து கட்டாயக் கையெழுத்துக்களை வாங்கிய நிலையிலும் கூட, இதைப் புலிகளில் உள்ள சில தனிநபர்களின் பிரச்சினையாகவே காட்டுகின்றார். உண்மையில் பரந்துபட்ட மக்களின் அடிப்படையான வாழ்வியல் இப்படி ஒட்டு மொத்தமாகவே சிதைந்துள்ளதை, நீங்கள் நம்பும் தேசியம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு தேசியம் என்பது மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினையுடன் தொடர்புடையது என்பதைப் புலிகளைப் போல், அப்படியே மீண்டும் மறுப்பதில் இருந்தே அனைத்தையும் கூற முனைகின்றார். மாறாக சிங்களவனுக்குப் பதில் தமிழன் ஆட்சி ஏற்பட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறும் அவரின் அரசியல், தமிழ் மக்களின் முதுகின் மேல் சவாரி செய்வதையே அடிப்படையாகக் கொண்டது.


புலிகளின் அரசியலை விமர்சிக்கவில்லை. புலிகளின் பிரச்சினையைப் புலிகளில் உள்ள சிலரின் பிரச்சினையாகவே காட்டுகின்றார். தலைவர் (பிரபாகரன்) தலையிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று தன்னிலை நியாய விளக்கம் கொடுக்கின்றார். யாழ் உயர்சாதிய வக்கிரம்தான், இதன் அடிப்படையாகவும் சித்தாந்தமாகவும் உள்ளது. எல்லாக் குற்றங்களையும் கீழ் உள்ளவர்கள் சிலர் மீது போடுவது, வழமையான பொதுவான இழிவான பண்பாடாகும். யாழ் மனப்பாங்கு எப்போதும் குற்றங்களை இயக்கத்தில் சேர்ந்துள்ள சாதி குறைந்தவர்களின் பண்பாட்டுக் குறைவால் இது ஏற்படுகின்றது என்று விளக்கும். இதுவே உயர் சாதிய தடிப்பின் விளக்க உரையாகி விடுகின்றது.


தனிநபர்கள் மீது குற்றம் சாட்டுவதன் மூலம், ஒரு இயக்கத்தின் சமூகப் பொருளாதார அரசியலைப் பாதுகாப்பதும், அதற்காகத் தொடர்ந்து வக்காலத்து வாங்குவதும் ஜெயதேவன் போன்றவர்களின் குறிப்பான நடைமுறையாகும். இதையே அவரின் சொந்தச் சகோதரர் நரேந்திரன் எழுதிய கட்டுரைகளும் செய்ய முனைகின்றது. தலைவர் (பிரபாகரன்) இவர்களுக்காக ஏதாவது சாதகமான நிலைப்பாட்டை எடுத்தால், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளத்தின் கதையாகிவிடும். புலிகளுடன் முரண்படும் முனபு, ரி.பி.சி. கூட தமிழ்ச்செல்வனிடம் சொந்தப் பினாமியத்தை அங்கீகரிக்கும் வேண்டுகோளுடன் தான் விண்ணப்பங்களை தமிழ்செல்வனுக்கு அனுப்பினர். தமிழ்ச்செல்வனும் வழமைபோல் விளம்பரத்துக்கு நடிக்கும் அழகி போல், முகம் காட்டி முதுகில் திடீரென குத்தும் வரை புலிப் பினாமியாகும் கனவுடன்தான் ரி.பி.சி. ராம்ராஜ் வாலையாட்டிச் செயல்பட்டவர். புலிகளின் பினாமி ஊடான மோதலை, புலிகளிடம் முறையிட்டுச் சாதகமான நிலைமைக்காக ஏங்கித் தவித்தவர். புலிகளுடன் முரண்பட தொடங்க முன்பும், தொடங்கிய போதும் எடுத்த நிலைப்பாடு இதுதான். புலிகள் வழமை போல் பவ்வியம்காட்டி திட்டமிட்டு முதுகில் குத்தி எதிர்நிலைக்கு ரி.பி.சி.யை தள்ளி, ஐ.பி.சி.யை முன்னிலைப்படுத்திய போதுதான், ஜனநாயகம் பற்றியும் புலிகளின் பாசிசம் பற்றியும் ரி.பி.சி. திடீர் ஞானம் பெற்றார்கள். அன்றில் இருந்து புலிகளின் மனித உரிமை பற்றி திடீரென பேசத் தொடங்கியவர்கள். இப்படித்தான் ரி.பி.சி. வழியில் ஜெயதேவன், நரேந்திரன் திடீர் ஜனநாயக உணர்வு பெற்று நிற்கின்றனர். ஆனால் புலிகளின் அரசியலை விமர்சித்து மாற்று அரசியலை இவர்கள் யாரும் முன்வைக்கவில்லை. ஒரே குட்டையில் ஊறிய அரசியல், அதிகாரம் இழந்ததால் அணுகுமுறையில் மட்டும் முரண்பாடு.


இவர்கள் அனைவரும் உண்மையில் அரசியல் ரீதியாக மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் வாழ்வியல் உரிமையில் இருந்து ஒரு துளியளவும் கூட புலிகளுடன் முரண்படவில்லை. இன்று அந்த நிலைப்பாட்டை இவர்கள் எவருமே எடுக்கவில்லை. மக்களின் அடிப்படையான தேசியக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தவில்லை. இதையேதான் ஜெயதேவனும் அவருடன் இணைந்தவர்களும் செய்கின்றனர். மக்களின் அடிப்படையான சமூகப் பொருளாதார வாழ்வியல் உரிமையில் இருந்து குரல் கொடுக்கவில்லை. புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிக்கவில்லை. மாறாகத் தம்மைப் போன்றவர்களை அங்கீகரிக்கக் கோருகின்றனர். இதன் மூலம் எல்லாம் சரியாகிவிடும் என்கின்றனர். உதாரணமாகத் தொடர்ந்து புலிக்குப் பணம் கொடுப்பது தொடர்பாக, ரி.பி.சி.யும் சரி, ஜெயதேவனும் சரி கணக்கு வழக்கை வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்கின்றனர். இவை எல்லாம் வண்ணப்பூச்சாகும். மக்களின் உழைப்பினால் வழங்கப்படும் நிதிக்கு கணக்கு வழக்கு வைக்கப்படுவது அவசியம் என்பது வேறு. ஆனால் கணக்கு வழக்கு வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என்பது வேறு. நிச்சயமாக சரியாக விடாது.


மாறாக நிதிகள் மக்களின் விடுதலைக்காக மக்களின் உழைப்பில் இருந்து திரட்டப்பட்டவை என்ற வகையில், அப்பணம் மக்களுக்கு எப்படி, எந்த வகையில், எந்தச் சமூகப் பொருளாதாரத் துறைகளில் செலவு செய்யப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்ட, ஒரு கண்காணிக்கும் உரிமையை மக்கள் கொண்டிருக்க வேண்டும். அதாவது தேசியப் பொருளாதாரம் முதல் அந்த தேசியத்தைப் பலப்படுத்தும் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, நிதிகள் செலவு செய்வதைக் கண்காணிக்கும் உரிமை மக்களுக்கு வேண்டும். மக்களே தமக்குச் செலவு செய்த நிதியை சரிபார்க்கும் உரிமை அவசியமானது. இவை இல்லாத கணக்கு வழக்கு எதுவும் அர்த்தமற்றவை.


ஜெயதேவன் போன்றவர்கள் மக்களின் வாழ்வியல் நலன்களில் இருந்து தம்மை ஒரு நாளும் வெளிப்படுத்தவில்லை. சுரண்டல், சாதியம், ஆணாதிக்கம், பிரதேசவாத மற்றும் இனவாத போக்கை விமர்சித்து, தமது சொந்த அரசியல் நிலைப்பாட்டைப் புலிகளுக்கு எதிராக முன்வைக்கவில்லை. அவரிடம் இருந்து புலிகள் கைப்பற்றிய கோயில் மீண்டும் பிரிட்டிஷ் அரசின் துணையுடன் அவர் கைகளுக்கு வந்தபோதும், அவர் தொடர்ந்து செய்யப் போவது என்ன? மக்களைக் கடவுளின் பெயரால் ஏமாற்றி பணம் திரட்டுவதுதான். கடவுளின் பெயரில் மக்களின் உழைப்பில் இருந்து திரட்டப்படும் பணம், ஒருநாளுமே இல்லாத அந்தக் கற்பனை கடவுள் நுகர்வதில்லை. மாறாக மனிதர்களின் சிலர் அபகரிக்கின்றனர். உண்மையில் மக்களின் வாழ்வியல் துன்பங்களைச் சொல்லிப் புலம்ப மனிதன் கண்டுபிடித்ததே கடவுள். இல்லாத இந்தக் கடவுள் ஒன்றின் மீது நம்பிக்கைக் கொள்ளும் மக்களின் அறியாமை சார்ந்த உணர்வுகளை, பக்தியாக்கி அதில் பணம் கறப்பவர்கள் தான் இவர்கள். இவர்கள்தான் இந்தப் பூமியில் மக்களின் உழைப்பில் ""வாழத் தெரிந்தவர்கள்''. இவர்கள் அழகாகக் கூறலாம் அப்பணத்தைப் பொதுச் சேவைக்குச் செலவு செய்வோம் என்று. இவ்வளவு காலமும் அப்படி கொடுத்த நிதி, புலிகளின் ஊடாக மக்கள் மேலான அடக்குமுறைக்கே பயன்பட்டது அல்லவா? இதுதான் நாளைய பொது அமைப்புக்கு வழங்கும் நிதிக்கும் நடக்கும்.


மக்களின் அறியாமையைப் பக்தியாக்கி பணம் கறக்கும் வழிமுறையும் சரி, பொதுச் சேவைக்கு அதைப் பயன்படுத்துவதாகக் கூறுவதும் சரி, அனைத்தும் மக்களின் அறியாமையைத் தொடர்ந்து தக்கவைக்கும் அடிப்படையில் இருந்து எழுகின்றது. இதில் புலிகளின் நிலைக்கும், கோயில்களின் நிலைக்கும் எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. ஜெயதேவன் போன்றவர்கள் துறவம் கொண்டு பொருள் ஆசை இழந்து வாழ்பவர்கள் அல்ல. மாறாக இந்தப் பூமியின் நுகர்வின் உச்சத்தைத் தமதாக்கி வாழ்பவர்கள் தான். அப்படி வாழ்பவர்கள் கோயில்கள் மூலம் பல கோடி பணத்தை மக்களின் உழைப்பில் இருந்து கறப்பதை அன்றும் இன்றும் தொழிலாகக் கொண்டிருப்பதையா சமூகச் சேவை என்பது? இதுவா தமிழ் தேசியம்?


இவர்கள் தேசியத்தை அழித்தொழிக்கும் உலகமயமாதல் போக்கை எதிர்த்துத் தன்னைப் பிரகடனம் செய்து சுயவிமர்சனம் செய்யவில்லை. பின் எப்படித்தான் தூய்மையான, நேர்மையான ஒரு தேசியவாதியாகத் திகழமுடியும்? தேசியத்தை அழிக்கும் ஏகாதிபத்தியம் கட்டமைத்துள்ள உலகமயமாதலுடன் கூடிக்குலாவும் ஒருவர், ஒருநாளுமே நேர்மையான தேசியவாதியாக இருக்க முடியாது. இங்கு அடிப்படையில் எந்த நேர்மையையும் சொல்லில் கூட காட்ட முடியாது.


அவரை ஆதரிக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பற்றிய நிலைப்பாட்டில் அவர் ஒன்றுபட்டு நிற்கின்றார். பிரிட்டிஷ் அரசைச் சிறந்த தோழனாகக் கருதும் போக்கு, தமிழ் மக்களின் சொந்தத் தேசியத்துக்கே எதிரானது. இவர் புலிகளுடன் முரண்படும் முன்பு இந்த நிலைப்பாட்டிற்கு ஏற்ப, புலிகளுக்கு அதை வளைத்துக் காட்டிவயர். தற்போது அதைப் புலிகளுக்கு எதிராகவே வளைத்துக் காட்டுகின்றார். குறிப்பாகப் புலிகளைப் பயங்கரவாத இயக்கமாக பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்தபோது, அதைத் தவறானது என்று கூறி, அதற்கு எதிராகத் தனது செல்வாக்கைப் பயன்படுத்தியவர். இன்று பயங்கரவாத இயக்கம் என்ற நிலைப்பாடு சரியானது என்ற நிலைக்குச் சரிந்து சென்றுவிட்டார். உண்மையில் தமது சொந்த நிலைமையை அடிப்படையாகக் கொண்டு சமூக நிலைப்பாட்டை எடுக்கும் இவர்கள், மக்களின் நிலையில் நின்று அனைத்தையும் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கவில்லை.


பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எடுத்த புலிகள் பயங்கரவாத இயக்கம் என்ற நிலைப்பாடு தமது உலகளாவிய ஏகாதிபத்திய நலனுடன் மட்டும் தொடர்புடைய ஒன்று. இதற்கு விசேட விதிவிலக்கு எதுவும் கிடையாது. இன்றைய உலகமயமாதலில் தமது நலனுக்குத் தடையான அனைத்தையும், பயங்கரவாதமாகக் கருதுபவர்கள்தான் இவர்கள். எங்கெல்லாம் தமது சொந்த விடுதலைக்காக மக்கள் போராடுகின்றனரோ, அங்கெல்லாம் போராடும் மக்களைப் பயங்கரவாதிகளாகவே இவர்களின் ஜனநாயகப்பூர்வமான பாராளுமன்றம் உலகுக்குப் பிரகடனம் செய்கின்றது. இதில் புலிகள் போன்ற மக்கள் நலன்களை முன்வைக்காத குழுக்களும் அடங்கும். அடிப்படையில் பொதுவாக ஒரு நாட்டின் தமக்கு சாதகமான நிலையை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தீர்மானங்கள் உருவாகுகின்றது. இதை எல்லாம் ஜெயதேவன் குழுவினர் விமர்சிக்கவில்லை. அதன்மீது பற்றுறுதி கொண்ட நிலைப்பாட்டையே எடுக்கின்றனர்.


ஈராக் ஆக்கிரமிப்பை இவர்கள் எதிர்ப்பதில்லை. இன்று ஆட்சியில் உள்ள தொழிற்கட்சி ஈராக் ஆக்கிரமிப்பை நடத்தியதுடன் விரிந்த தொடர் படுகொலைகளை மட்டுமின்றி அந்தத் தேசத்தையும் கொள்ளை அடிக்கின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் ஆளும் வர்க்கமாக உள்ள தொழிற்கட்சியின் ஒரு உறுப்பினராக ஜெயதேவன் இருக்கின்றார். அதன் சார்பில் பிரிட்டிஷ் தேர்தல்களில் நின்று தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளையும் பெற்றவர்தான். இதன் துணையுடன் புலிகளுக்குப் பல சலுகைகளைப் பெற்றுக் கொடுத்தார் என்றால், இந்த அரசியல் பின்னணி தான் என்ன? மக்கள் பற்றி நேர்மையாகச் செயல்படுபவன், அரசியல் ஞானம் பெற்று புலிகளை விமர்சிக்கும் முன்பு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆளும் வர்க்க கட்சியில் இருந்தே வெளியேற வேண்டும். ஈராக் மக்கள் பற்றி ஒரு நிலைப்பாட்டையும், புலிகளின் ஆட்சியில் உள்ள தமிழ் மக்களைப் பற்றி வேறு ஒரு நிலைப்பாட்டையும் ஒருநாளும் எடுக்க முடியாது. புலிகளின் ஏற்படும் தனிப்பட்ட பாதிப்பைக் கொண்டு தூற்றுவது என்பது, முன்பு புலிப் பினாமியாக நக்கித் திரிந்த நிலைப்பாட்டுக்கு எந்த விதத்திலும் வேறுபட்டதல்ல.


ஜெயதேவன் மீட்சிக்கு உதவியது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆளும் தொழிற்கட்சிதான். லண்டன் திரும்பியவுடன் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் அவருடன் கொண்டிருந்த உறவுகள் எதுவும், சாதாரண மக்கள் பற்றிய நிலைப்பாட்டில் இருந்தல்ல. மாறாக, பிரிட்டிஷ் அரசு பற்றிய ஜெயதேவனின் நல்லெண்ண உறவுகளிலும், விசுவாசமான பிரிட்டிஷ் ஏகாதிபத்திய பிரதிநிதி என்ற அடிப்படையிலும் இருந்து முன்வைக்கப்பட்டவையே. ஜெயதேவன் குழுவினர் இந்த விசுவாசத்துடன் நின்று தான் புலிகளைப் பற்றி குலைக்கின்றனர். அடிப்படையில் எந்தவிதமான சுயவிமர்சனத்தயும் மக்கள் நலனில் இருந்து அவர்கள் செய்யவில்லை.


புலியெதிர்ப்பு பிரிவினர் கூட ஜெயதேவனை முன்னிலைப்படுத்தி கட்டமைக்கும் பிரச்சாரத்தில் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு செய்யவில்லை. புலிகளைத் தனிமைப்படுத்துவதே புலியெதிர்ப்புக் குழுவினரின் ஒரேயொரு குறிக்கோள். இதனையே முதன்மைப் பண்பாக கொண்டு, மக்களுடைய முதுகுகளின் மேல் அரசியல் பிழைப்பை நடத்துகின்றனர். புலிகள் நடத்தும் ஒவ்வொரு மனித உரிமை மீறலும் மக்களுக்கு எதிரானது தான். ஆனால் அதை எதிர்க்கும் போது மக்கள் நலனை முதன்மைப்படுத்தாத எதிர்வினைச் செயல்பாடுகள் அனைத்தும், மக்களுக்கு எதிரானதே. இதுவே இன்றைய சமூகப் பொருளாதார அமைப்பை ஏற்றுக் கொள்ளும் அனைவரினதும், ஏன் உலகெங்குமே பொதுவான நிலையாக உள்ளது. மக்களின் வாழ்வுரிமையை அழிப்பதில் ஒருவரை ஒருவர் விசுவாசமான நம்பிக்கையுடன், தமக்குள் முரண்படுகின்றனர் அவ்வளவே.

 

22.4.2005