'ஜனநாயகம்" என்பது மக்களின் அடிப்படை உரிமையல்ல, என்று மறுப்பவன், எப்படி கிழக்கில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக நேர்மையாக போராடுவான்? கிழக்கில் நடைபெறும் எந்த பாலியல் குற்றம், நீதி விசாரணைக்கு வந்தது? யாரும் தண்டிக்கப் பெறுவதில்லை. குற்றவாளிகளும், சமூக விரோதிகளும் 'ஜனநாயகத்தின்" காவலராக இருக்கும் வரை, மக்களின் அவலத்தை யாரும் பேசம் பொருளாகக் கூட எடுப்பதில்லை.

 

இந்த அரசியல் உண்மை ஒருபுறம். மறுபக்கத்தில் புலியொழிப்பு என்பது, அரசை பாதுகாப்பது தான் என்றான பின்பாக, எப்படித் தான் மக்களின் அவலத்தை கண்டு கொள்வார்கள். மக்களுக்காக போராடாதவரை, மனித அவலமே அங்கு இல்லையென்பதும், அதை மூடிமறைப்பதும் தான் இவர்களின் 'மக்கள்" அரசியலாகின்றது.

 

புலியொழிப்புத் தான் அனைத்து அரசியல் நிகழ்ச்சியென்றான பின்பு, அதை ஒழிப்பதாக கூறிக்கொள்பவனின் குற்றங்களை பாதுகாக்கின்ற பாசிச அரசியலே இன்று 'ஜனநாயகத்தின்" பெயரில் கொக்கரிக்கின்றது. 

   
       
இப்படி கிரிமினல்களின் நடத்தைகளை, புலியொழிப்பின் பெயரில் நியாயப்படுத்துவது அரசியலாகின்றது. இந்த கிரிமினல் அரசியலை 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்" என்று புகழ்ந்து எழுதிய ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்; தான், கிழக்கில் கற்பழிப்பு நடைபெறுவதில்லை என்கின்றார். இதை சொல்லும் அரசியல் அருகதை, பேரினவாத அரசுக்காவும் அரச கூலிக் கும்பலுக்காகவும் மாரடிக்கும் ஒருவருக்கு என்றுமே கிடையாது. 

கடத்தல், கற்பழிப்பு, கப்பம், கொள்ளையை புலிகள் மட்டும் செய்வதாக கூறும் இந்த கிழக்கு பாசிட்டுகள், ஆசிய மனித உரிமை அமைப்பு வெளியிட்ட செய்தியை மறுப்பது இயல்பானது. இது தொலைபேசி மூலம் தீர விசாரித்து கண்டறிந்த ஒரு உண்மையாம்!

 

இது வடக்கு கிழக்கு மக்கள் எப்படி, எந்த நிலையில் வாழ்கின்றனர் என்ற அடிப்படை உண்மையைக் கூட நிராகரிக்கின்ற ஒரு பாசிச வக்கிரம். எப்படி வன்னி, யாழ் உள்ளதோ, அப்படித் தான் கிழக்கும் உள்ளது.

 

அருகில் இருக்கின்ற வீட்டில் என்ன நடக்கின்றது என்பதைக் கூட தெரிந்து கொள்ளமுடியாத மனித அவலம் அங்கு உண்டு. சொந்த வீட்டில் கூட சுதந்திரமாக கதைக்க பயப்படுகின்ற குடும்ப சூழல். இப்படி நிலைமை இருக்க, தொலைபேசி மூலம் விசாரித்து மறுக்கின்ற பாசிச நாடகங்கள். சரி இவர்கள் ஏன் மறுக்கின்றனர்? இதில் என்ன சமுதாய அக்கறை உண்டு?

 

இவர்கள் விசாரித்தவர்கள் எல்லாம் யார்? இவர்கள் முன்னணி பின்னணி அரசியல் என்ன? இவர்கள் வேறு எப்போது எல்லாம், மக்களுக்காக குரல் கொடுத்தனர்?

        

இப்படித்தான் இருக்கின்றது விசாரணைகளும், உண்மைகளும்;. இங்கு மனித அவலத்தை பேசுகின்ற அரசியல் நடத்தைகள் எங்கே உள்ளது. ஏதோ உண்மைக்காக குத்தி முனகும் இவர்கள், மக்களுக்காக என்ன அரசியலை வைக்கின்றனர்! எதைக் கோருகின்றனர்? எல்லாம் கடைந்தெடுத்த புலுடாப் பேர்வழிகள்.  

 

'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்" என்று எழுதும் ராஜேஸ்வரி, அந்த பூமியில் நடந்த நடைபெறுகின்ற குற்றங்களை, நீங்கள் விசாரித்தவர்கள் எப்போது எங்கே நீதியின் முன் கொண்டுவந்தனர். நீங்கள் புனைந்து கூறுகின்ற ';ஆனாலும் அப்படியான வன்முறைகள் நடந்தால் அந்த நிகழ்ச்சிகளை முன்னெடுத்து, அந்தக் கொடுமைகளைச் செய்தவர்களுக்குத் தண்டனையும், அப்படியான அநீதிகள் இனியும் நடக்காமல் அப்பகுதிக் கிராமத்து மக்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதால், பாலியற் கொடுமை செய்த  'அதிரடிக்கூட்டத்தினர்" கண்டுபிடிக்கப்பட்டார்கள். அவர்கள் உடனடியாக பங்குனி மாத முற்பகுதியில் வேறு இடம் மாற்றப்பட்டார்கள்." என்கிறார். யாரை ஏமாற்றுகின்றீர்கள்;? இந்த கண்டுபிடிப்பு நகைப்புக்குரியது. 

  

சரி புனைவுக்கு நீங்கள் வழங்கிய தண்டனை இடமாற்றம். இதுவே குற்றம் இளைத்தவனை தண்டித்ததாக கூறுகின்ற துணிச்சல், பாசிச வகைப்பட்டது. அந்த குற்றவாளிகள் எங்கே? வடக்கு பெண்களை கற்பழிக்க, கிழக்கு பாசிட்டுகளாகிய நீங்கள் தண்டித்து அனுப்பிவைத்தீர்களோ!!

 

குற்றத்தின் மூலத்தை, அதன் அரசியல் அடிப்படையை பாதுகாக்க விரும்புகின்ற கிழக்கு பாசிச எடுபிடித்தனம் தான் இவை. 

 

கிழக்கில் ஒவ்வொரு இளம் பெண்ணும் அச்சம், பீதிக்குள்ளாகி உளவியல் சிக்கலுக்குள் சிதைக்கின்றனர். தாய் தந்தைமார் தமது குழந்தையின் 'கற்பை" இட்டு தவிர்க்கின்றனர். படைத் தேவைக்கு குழந்தைகளை கடத்துவது என்பதுக்கு அப்பால், பாலியல் தேவைக்கு பெண் குழந்தைகளை கடத்துவது கிழக்கில் புதிய அத்தியாயம். இது கணிசமாக வவுனியாவிலும் உள்ளது.  

 

இப்படி இருக்க புலிகள் தமது நடத்தைகளை பூசிமெழுகுவது போல், புலியெதிர்ப்புக் கும்பல்களும் தமது கூலித்தனத்துடன் தமது சொந்த அணிகளின் வக்கிரங்களை மூடிமறைக்க வாதிடுகின்றனர். 

 
  
கிழக்கு பாசிட்டுகள் தமது கட்டுரையில் 'பங்குனி மாத நடுப் பகுதிவரை அம்பாறைப் பகுதியில் சில ஏழைத்தமிழ்ப் பெண்கள் இலங்கை இராணுவத்தினரின் அதிரடிப்படையால் பாலியல் வன்முறைக்காளக்கப் பட்டதாகப் பல வதந்திகள் வந்தன." என்கின்றார். இதே கட்டுரை தான,; இந்தக் குற்றத்துக்காக சிலர் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறுகின்றது. எப்படிப்பட்ட மோசடி. இதையும் 'வதந்தி" என்பதும், ஆசியா மனிதவுரிமை அமைப்பின் செய்தியை பொய் என்பதும் இப்படித் தான்.

 

இந்த பாசிட் இதே கட்டுரையில் 'அப்படியான விடயங்களைத் தாங்களும் கேள்விப்படுவதாகவும், ஆனால் தங்களுக்குத் தெரிந்த பகுதிகளில் உள்ள பகுதிகளில் ஏதும் நடந்ததாகவோ நடப்பதாகவோத் தெரியாது என்றார்கள்" இப்படி எழுதும் இவரின் சுத்துமாத்து, இதே சமூக நலன்விரும்பிகளுக்கும் ஆசிய மனிதவுரிமை சங்கம் வெளியிட்ட விடையம் தெரியாது இருப்பதை, தனக்கு ஆதாhரமாக வைக்கின்றார். அம்பாறை சம்பவத்தை தண்டித்ததாக புனைந்து எழுதும் இவர், அவை நடக்கவில்லை என்பது இவரின் 'சமுகநலவாதிகள்" முடிவாகும்;. இதையே தான் ஆசிய மனித உரிமை அமைப்பு வெளியிட்ட சம்பவத்திலும் அவர்கள் கூறுகின்றனர். இங்கு 'சமுகநலவாதிகள்" என்பது புனைவு தான். கட்டுரைக்கு வலுச்சேர்க்க சேர்த்துக்கொண்ட மற்றொரு ஊறுகாய் துண்டு தான்.


  
இப்படி புனைந்து புலம்பிய நீங்கள் 'ஊரிலிருந்து சரியான விடயங்களை அறிய முடியாததால்" என்று கூறிப் புலம்பும் அதே நேரம், பொலிசாரின் வாக்குமூலத்தில் சரணடைகின்றாய் ஏன்? இவை எல்லாம் எதற்காக. கிழக்கில் அரசியல் ரீதியான பாலியல் வன்முறை நடைபெறுவதில்லை என்று நிறுவும் முயற்சி தான். 'கிழக்கில் உதித்தது ஜனநாயக சூரியன்" தான் என்று, மீண்டும் மீண்டும் சொல்லத் தான். இந்த பாசிசத்தை நியாயப்படுத்துவதை விட வேறு அரசியல் நோக்கம் எதுவும்

கிடையாது.   

பி.இரயாகரன்
30.05.2008