கிழக்கு சம்பவத்துக்கு கண்டனம் கொலைக்கு கண்டணம் வாக்குறுதிகள் அறிக்கைகள் சமாதான மாநாடுகள் என்று கிழக்கு பாசிட்டுகள் 'ஜனநாயக" வித்தை காட்டிக்கொண்டு அடுத்தடுத்து நாலு முஸ்லீம்களை கடத்தி சென்றுள்ளனர். இப்படி 'அனைத்து இன மக்களுக்கும் பொறுப்புக்கூறும் விதத்தில்" முஸ்லீம் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து கிழக்கு பாசிட்டுகள் பேரம் பேசுகின்றனர்.
புலியின் அதே அரசியல் அதே நடத்தைகள். 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்"கள் இந்தா விடுகின்றோம் இந்தா கண்டுபிடிக்கின்றோம் மக்களே அமைதி பேணுங்கள் வதந்தியை நம்பாதீர்கள் என்று என்ன தான் குத்தி முனகினாலும் பாசிசத்தைத்தான் பிள்ளையாகப் பெறமுடியும்.
புலம்பெயர் 'ஜனநாயக" கிழக்கு பாசிட்டுகளான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் குமாரதுரை முதல் தலித் முன்னணியை சேர்ந்த பிள்ளையான் குழுவின் அரசியல் ஆலோசருமான ஞானம் வரை பாசிசத்துக்கு 'ஜனநாயக" நாமத்தையிட்டாலும் பாசிசம் என்ற நாய்வாலை நிமிர்த்த முடியாது.
புலிப் பாசிசத்தில் இருந்து தனிப்பட்ட முரண்பாட்டில் கிழக்கு பாசிட்டுகள் பிரிந்தவர்கள். புலியின் சுயநல நடைமுறைகளையும் அந்த அரசியலையும் அவர்கள் துறந்தது கிடையாது. அதாவது அரசியல் ரீதியாக சுயவிமர்சனம் செய்தது கிடையாது. மாறாக கிழக்கு புலிகளாக தம்மை பிரகடனப்படுத்தியவர்கள். வடக்குக்கு எதிராக கிழக்கை நிறுத்தி கிழக்கு அரசியல் அச்சில் கிழக்கு பாசிட்டுகளாகவே உருவானார்கள். தமக்கு அரசியல் உள்ளதாக காட்ட அரசின் தேவையை பூர்த்தி செய்யவும் சுயநலத்தடன் கிழக்கு பிரிவினையை வைத்தவர்கள். அரச பாசிட்டுகளுடன் இணைந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.
தமது இந்த சட்டவிரோத பாசிச குண்டர்களுக்கு சட்டபூர்வ அந்தஸ்து பெற்றுக்கொடுக்க அரசு நடத்திய நாடகம் 'ஐனநாயக" தேர்தல்.
இந்த அரச கூலிக்குண்டர்களுக்கு இந்த அரசின் தேவைகளுக்கு வெளியில் மாற்று அரசியல் எதுவும் கிடையாது. தம்மை அரசியல் ரீதியாக நிலைநிறுத்த குறுகிய கிழக்கு தமிழ் வாதத்தை முன்னுக்கு வைத்தனர். இதனடிப்படையில் தான் கிழக்கு முஸ்லீம்களை தமிழர் பெயரில் கிழக்கு பாசிட்டுகள் கடத்துகின்றனர். இதன் மூலம் முஸ்லீம் மக்களை கிழக்கு தமிழ் மக்களுக்கு எதிராக முன்நிறுத்துகின்றனர். அரச கூலிப்படையின் கிழக்கு பாசிட்டுகளின் தலைவன் இதைப் பற்றி கூறுகின்றான் 'அசாதாரண சம்பவங்களுக்கு வதந்திகளே மூலகாரணம்" என்கின்றான். மூளைபிசகிய பாசிச குண்டர்கள் இப்படி கூறியபடி தான் முஸ்லீம் மக்களையே 'ஜனநாயக"மாக வேட்டையாடுகின்றனர்.
முஸ்லீம் மக்களைக் கடத்துவதன் மூலம் படுகொலை செய்வதன் மூலம் கிழக்கு தமிழ்மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டமுனைகின்றான். இதைத்தான் புலிப் பாசிட்டுகளும் செய்தனர். கிழக்கு பாசிட்டுகளின் ஆலோசகர்கள் இதற்கு 'ஜனநாயக" மூகமுடிபோட்டுக் கொண்டு அதை தமது சொந்த தலையில் பொருத்திக் கொண்டு ஆடுகின்றனர்.
பி.இரயாகரன்
25.05.2008