12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

மூதூர் மக்களின் துயரங்களை ஆவணமாக்கும் சிறுமுயற்சி!

இலங்கையில் தொடரும் போரும் இனத்துவ முரண்பாடுகளும் இலங்கை வாழ் மக்களின் வாழ்வை மிக மோசமான அவலத்திற்குள் தள்ளிஉள்ளது. இதன் விளைவால் தினமும் மக்கள் படுகின்ற துயரங்கள் இங்கு "மனித இருப்பை" பெரிதும் கேள்விக்குட்படுத்தி விட்டுள்ளது.

 

"மூதூர் வெளியேற்றம்" தொடர்பான இச் சிறு நூலைத் தொகுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வாகரையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை அண்மித்து நிகழ்ந்த சம்பூர் பிரதேச மக்களின் வெளியேற்றமும், அவர்கள் மீளவும் சம்பூர் பிரதேசத்திற்கு திரும்பிச்செல்ல முடியாமல், தற்போதும் நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்து வருவதும் பெரும் மனித இடப்பெயர்வுத் துயரங்களாகவே உள்ளன.

 

மூதூர் முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியது முஸ்லிம்களின் பாதுகாப்புக் கருதித்தான் எனவும், அதுவொரு தற்செயல் நிகழ்ச்சியெனவும் வாதிடுபவர்களும், வடக்கு கிழக்கு முஸ்லிம்களை அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றுவதில் எந்த தவறும் இல்லையென வாதிடுபவர்களும் இன்னமும் உள்ளனர்.

 

மேற்படி கருத்துக் கொண்டவர்களின் நிலைப்பாடுகளை விட, மனிதர்களை, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, ஆதிக்கத் தரப்புகளின் மீறல்களை துணிந்து கண்டிக்கும், அவற்றை அம்பலப்படுத்தும் குரல்களை அதிகம் கவனத்தில் எடுக்க வேண்டிய தருணமிது! அந்தக் குரல்களின் உறுதியிலும் தீர்க்கத்திலும்தான் உண்மையான நிம்மதியும் மனித வாழ்விற்கான நம்பிக்கைகளும் தங்கி உள்ளன.

 

வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களை வடக்கு கிழக்கு தாயகத்திலிருந்து விரட்டியடிப்பதும் அவர்களைக் கொன்றொழிப்பதுமே விடுதலைப் புலிகளின் சித்தாந்தமும் செயற்பாடுமாகும், இதில் எமக்கு எந்தவித சந்தேகமுமில்லை.

 

1990 இறுதிப் பகுதியில் வடக்கிலிருந்து புலிகளால் திட்டமிட்டு இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டு, துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் 17 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் தமது தாயகத்திற்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. 2002 புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து ஏற்பட்ட அமைதிச் சூழலிலும் அம் மக்களால் வட மாகாணத்திற்கு சென்று வாழ முடியவில்லை, திரும்பிச் செல்ல வடமாகாண முஸ்லிம்கள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் விடுதலைப் புலிகள் தலைமை நேரடியாகவும் மறைமுகமாகவும் தடுத்து நிறுத்தி வந்துள்ளன.

 

1990களின் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்து வெளியேற்றிய அதே காலகட்டத்தில், கிழக்கு மாகாணம் பூராகவும் வாழும் முஸ்லிம்களை தமது மண்ணிலிருந்து வெளியேற்ற விடுதலைப் புலிகள் எடுத்த முயற்சியை, முஸ்லிம்கள் துணிந்து நின்று தமது மண்ணிலேயே காலூண்றி எதிர்த்ததனால்தான் அவர்களால் அங்கு இனச்சுத்திகரிப்புச் செய்யப்படாத வரலாற்றுடன் இன்னமும் வாழ முடிகிறது. இல்லையேல் 1990களில் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் நிகழ்ந்த துயரமும் வாழ்வும்தான் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கும் கிடைத்திருக்கும். இதுதான் யதார்த்தமான நிலவரமுமாகும்.

 

1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம் மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப் பதிவுகளுக்குரிய பேரவலமாகும். பொத்துவில் தொடக்கம், அக்கரைப்பற்று, ஒலுவில், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என புலிகள் முஸ்லிம்கள் மீது மிகப்பெரியளவிலான இராணுவ நெருக்குவாரங்களைத் தொடுத்து அவர்களை வெளியேற்ற தெண்டித்தனர். கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் 4 வருடங்களுக்கு மேலாக, புலிகளின் இராணுவ முற்றுகைக்குள்ளேயே இருந்தன. இறுதியில் புலிகள் கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சியில் பெரிதும் தோல்வியையே சந்தித்தனர்.

 

கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சியை புலிகளினால் சாத்தியப்படுத்த முடியாது போனாலுங்கூட, முஸ்லிம்கள் தொடர்பில் தமது சித்தாந்தத்தையோ, செயற்பாடுகளையோ கைவிடவில்லை. மிக மோசமான இராணுவ, பொருளாதார, அரசியல் அடக்குமுறைகளை காலத்திற்கு காலமும் தருணம் கிடைக்கும் பொழுதுகளிலும் புலித் தலைமை நிறைவேற்றியே வந்திருக்கின்றன. இந்த இனச் சுத்திகரிப்புச் செயற்பாட்டின் ஒரு விளைவாகவே, கடந்த ஆகஸ்ட் 2006 மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றமும் நிகழ்ந்தது.

 

உலகளவில் இன்று மாறிவரும் அரசியல் சூழல்களைக் கருத்திற்கொண்டு, புலிகள் தந்திரோபாய அடிப்படையில் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை திட்டமிட்டு நடத்தினர். இருந்தும், மூதூர் மக்களின் தாயகம் திரும்பும் உறுதியான முடிவும், வாழ்வும், மீண்டும் மூதூர் மக்களை தமது தாயக மண்ணிற்கு கொண்டு சென்று சேர்த்திருக்கிறது. கிளாந்திமுனை மலையடிவாரக் கூட்டுப் படுகொலையில் ஆயிரக்கணக்கானோர் மரித்துப்போக வாய்ப்பிருந்தும், அச் சூழலின் புற நிலைகளின் காரணமாக பெருமளவு உயிர்ப்படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

 

கிளாந்தி முனை மலையடிவாரத்தை மூதூர் முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலைக்கான கொலைக்களமாகவே பார்க்கின்றனர். அந்த நாளின் அனுபவங்களை அச்சத்துடன் இன்றும் இன்னும் நினைவுகூர்கின்றனர் வயது, பால் வேறுபாடின்றி.... நான்கு தினங்கள் நீடித்த மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தின்போது 54 பேர் மரணமடைந்தும் 1176 பேர் காயமடைந்துமுள்ளனர். பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்திழப்புகளும், பெருமளவு மனச்சிதைவுகளும் ஏற்பட்டுள்ளன.

 

மூதூர் முஸ்லிம்களை வெளியேற்றுவதுதான் புலிகளின் நீண்டகாலத் திட்டமென்பதும், பெருமளவு கூட்டுப் படுகொலையை நடாத்துவதே புலிகளின் நோக்கமாக விருந்தது என்பதற்குமான சாட்சியம், அந்த துயர வாழ்வை நேரடியாக எதிர்கொண்ட முப்பத்தெட்டாயிரம் முஸ்லிம் உயிர்களுமாகும். இதற்கு வேறு சாட்சியங்கள் தேடிப் போகவேண்டிய எந்த அவசியமும் இல்லை.

 

முஸ்லிம்கள் தொடர்பான புலிகளின் அணுகுமுறை, வெளி உலகுக்கான பிரச்சார ரீதியான பொய்களைக் கொண்டதாகவும் அகரீதியில் முஸ்லிம்கள் தொடர்பில் சித்தாந்த விரோதமிக்க அடக்குமுறைச் செயற்பாடுகளையும் கொண்டுள்ளதை நாம் அறிவோம். தாகத்திற்கு தண்ணீர் வழங்கும் புலிகளின் பிரச்சாரத் தந்திரத்தை மூதூர் வெளியேற்றத்தின் போது புலிகள் கடைப்பிடித்தனர். இடம்பெயர்ந்து வரும் முஸ்லிம்களுக்கு புலி உறுப்பினர்கள் "தாகசாந்தி" வழங்கியதை புலி ஊடகங்களும், புலி ஆதரவாளர்களும் பெரிய விடயமாக பிரச்சாரப்படுத்திக் கொண்டிருந்தனர்... தமது உண்மை முகத்தை மறைக்க திட்டமிட்ட பிரச்சாரத்தில் செயற்கையாக புலிகள் ஈடுபட்டனர். புலிகளின் இந்தப் பிரச்சாரங்கள் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலும், புலிகளின் முஸ்லிம் விரோதத்தை நன்கு அறிந்தவர்களிடமும் ஏற்றுக்கொள்ளப்படப் போவதில்லை, ஏனெனில் இவர்களுக்குத் தெரியும் புலிகளின் உண்மை முகம்!

 

வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோதோ, காத்தான்குடி, ஏறாவூர், அழிஞ்சிப்பொத்தான படுகொலைகளின் போதோ... அந்தச் சூழலை ஆவணமாக்கும் உடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படாதது பெரும் இழப்பே. அந்த நிகழ்வு மூதூர் வெளியேற்றத்தின் போதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்கிற அக்கறையின் பால் இச்சிறு தொகுப்பு வெளியிடப்படுகிறது. இச்சிறு தொகுப்பில் சொல்லப்பட்டவைகள், மூதூர் மக்கள் அனுபவித்த மிகப்பெரும் துயரின் ஒரு சிறு பக்கமேயாகும்!

 

இச்சிறு தொகுப்பின் கதை சொல்லி, 53 வயதுடைய ஓய்வுபெற்ற ஒரு ஆசிரியராகும்... தனது அனுபவங்களை அவரது வார்த்தையில் இங்கு பதிவு செய்துள்ளோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. மாபெரும் வெளியேற்றத்தின்போது தான் அனுபவித்ததையும் கண்டதையுமே எந்த மிகையுமின்றி தெரியப்படுத்தி உள்ளார். எமது இந்த முயற்சிக்கு தனது அனுபவத்தை வழங்கிய அவருக்கு எமது நன்றிகள்.

 

கந்தளாய்க்கு வந்து சேர்ந்த மூதூர், தோப்பூர் முஸ்லிம்களை இலங்கை அரசு நடாத்திய விதமும், அவர்கள் அகதிவாழ்வில் எதிர்கொண்ட நெருக்கடிகளும், முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கையாலாகாத்தனமும், இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கெதிரான கந்தளாய் சிங்கள மக்களின் எதிர்ப்புணர்வுகளும் பதிவு செய்யப்பட வேண்டிய, இந்த வெளியேற்றத்துடன் தொடர்புபட்ட முக்கியத்துவமான தொடர் நிகழ்வுகளாகும்.. அந்த அனுபவங்களையும் எதிர்காலத்தில் ஒரு சிறு ஆவணமாக பதிவு செய்யவேயுள்ளோம்!

 

இச்சிறு முயற்சியை சாத்தியப்படுத்த உதவிய, புலம்பெயர் நாடுகளில் வதியும் பிரான்ஸ், லண்டனைச் சேர்ந்த நண்பர்களுக்கும், துணை நின்ற தோழர்களுக்கும் எமது நன்றிகள்! உங்கள் கருத்துக்களை எமக்கு தெரியப்படுத்துங்கள்!

 

ஈ-மெயில் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

05 ஜனவரி 2006.

மூதூர் வெளியேற்றம். 01.08.2006

 

கடந்த பல மாதங்களாக, ஏன் பல வருடங்களாகவே...

மூதூர் மீது அச்சம் கவிந்தே நிற்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை.

 

எப்படியும் எங்களை வெளியேற்றி விடுவதில் புலிகள் தீவிரமாக இருப்பதாக எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள்...

 

இன்றா... நேற்றா... 90ம் ஆண்டிலிருந்து வெளியேற்றத்தானே அனைத்தும் நடந்து வருகுது... அப்படித்தான் தெரிகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்ல...

 

இருள் சூழ்கிறது, ஊரே ஒருவித மயான அமைதிக்குள் கால் வைக்கிறது. சனம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வீடுகளுக்குள்...

 

சீ... என்ன வாழ்க்கையிது...

 

மூதூரில், திருக்கோணமலையில் தமிழ் முஸ்லிம் மக்கள்... எவ்வளவு சந்தோசமாக இணைந்து வாழ்ந்தவர்கள்...

 

அந்தக் காலத்தை நினைச்சுப் பார்த்தால்... எனது நண்பர்கள்... அவர்களின் குடும்பங்களுடனான எமது உறவுகள்... கொடுக்கல் வாங்கல்கள்...

 

வ.அ. இராசரத்தினம் மாஸ்டர், அவரின் கதைகள்... பாலகிருஷ்னண் அண்ணன், முத்துத் தம்பி... ஒன்றாய்ப் படிச்ச பெடியன் பெட்டைகள்... இப்போது நினைச்சாலும் மனசு பசுமையாய்க் கிடக்குது...

 

எங்கட அடுத்த தலைமுறைக்கு இந்த வாழ்வு கிடைக்கவில்லை என்பதுடன், எங்கட அந்திம காலத்திலேயும் எங்களுக்கும் இந்த வாழ்வு கிடைக்கவில்லை...

ம்...

 

தமிழ்ச் சனம், முஸ்லிம் சனம் எவ்வளவு கஷ்டப்படுகுது... துறையடிக்கு வந்து கப்பல்ல திருமலைக்கு போறதெண்டா தமிழ்ச் சனத்திற்கு வரமுடியாது, மூதூர் முஸ்லிம் சனத்திற்கு அங்கால போகமுடியாது...

 

காட்டுத் தொழில், விவசாயம், ஆடு மாடு வளர்ப்பு, மீன்பிடித் தொழில் செய்கிற சனம்... பஞ்சம் பட்டினியாய்க் காலத்தை ஓட்டுது... ஏழைச் சனத்தின்ர பாடு திண்டாட்டம்தான்...

 

வர வர நிலைமை மோசமாகிக் கொண்டு வருகுது. மரத்தால விழுந்தவன மாடேறி மிதிச்ச கதைபோல... ம்... ம்...

 

கொட்டியாராக் கடல், பொன் விளையும் பூமி... மானிறைச்சி, முறுகக் காய்ச்சிய பசும்பால், சோத்துக்கு குறைவில்லாச் செல்வம்...

 

மண்ணைக் கொத்தினா, தண்ணியில இறங்கினா... காட்டுக்குள்ள கால்வச்சா... தொழிலுக்கு பஞ்சமில்ல... உடலை வருத்தி உயிர் வாழ்ந்த சனம், ஏழ்மையிலேயும் சந்தோசமாக இருந்த சனம்...

 

இப்ப, பஞ்சமும் பட்டினியும் சனத்த பிடிச்சாட்டுது. இது காணாம உயிர்ப் பயமும் வேற, இயற்கையை நம்பி வாழ்ந்த மக்கள் இப்ப அறுவான்களின்ர துவக்குக்கு பயந்து சாக வேண்டிக் கிடக்கு...

 

வயலுக்குப் போய், காட்டுக்குப் போய், மீன்பிடிக்கப்போய் திரும்பிவராதவர்கள் ஏராளம்... ஆளுக்கு ஆள் எதிரி... உசிர் மசிராகப் போச்சு... அழுகிப்போய் நாற்றமெடுத்து,

 

சீ மனிச வாழ்க்கையும் இப்படி இருக்குமா? யாருக்குத் தெரியும், இப்ப வாழ்க்கை, இப்படித்தானிருக்கிறது.

 

****

 

என்ர தங்கச்சியின் மகன் ஜாபீர் மருமகன்@ இளம் பொடியன்... புலிகளின்ர கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு தொழிலுக்குச் சென்றவர்... மையத்துத்தான் கிடைச்சது... அவரின் மரணச் செய்தி கேட்டவுடன், அவரின்ர உம்மா தன்ர உயிரையே மாய்த்துக் கொண்டா... இப்படி இப்படி எவ்வளவு உயிர்கள்...

 

இரண்டாயிரம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில, கலாசார நிலையத்திற்கு முன்னால் புலிகள் நடாத்திய தற்கொலைத் தாக்குதலில் 24 உசிர்கள் மௌத்தாகிப் போனாங்க... 48 பேர் அங்கவீனமானார்கள்... தங்களின்ர இரு கண்களையும் இத்தாக்குதலில் இழந்த தாஹிரும் சஹாப்தீனும் இப்போதும் இருட்டுக்குள்ள கிடக்காங்க...

 

தொடர்ந்தும் முஸ்லிம்கள குறிவைச்ச கொலைகள்... தாக்குதல்கள்... அச்சுறுத்தல்கள்...

 

மூதூரில முஸ்லிம்கள் வாழ முடியாதா?

 

இரண்டாயிரத்தி மூணுல, பெருமெடுப்பில அழிவு நடந்திச்சி... அரசுக்கும் புலிகளுக்கும் சமாதானம் இருந்த காலமது... அரசோடதான் சமாதானம்... சோனிகளோட இல்ல எண்டு சொன்னாங்க.

 

என்ட வீட்டுக்கு கிழக்கு பக்கத்தால இருக்கிற ஆஸாத் நகர், ஜின்னா நகரில இருந்து மக்களெல்லாம் ஓடி வந்திட்டாங்க...

 

பாலத்தோப்பூர், செல்வா நகர், நடுத்தீவு, ஆணைச்சேனை, பாரதிபுரம் எல்லாம் பத்தி எரிஞ்சது...

 

இப்ப மறுபடியும் தொடங்கிட்டு போலக் கிடக்கு, சைத்தான் வந்திட்டுது... அவர்கள் எங்கள வெளியேற்றமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்ல...

 

தொண்ணூறாம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்கள இப்படித்தானே வெளியேற்றினார்கள்... வேறொரு கரையை அடைய அந்த மக்கள் அழுது கொண்டு ஓட்டமும் நடையுமாய் வரவேண்டியிருந்தது.

 

பதினாறு வருசமாச்சு, அந்த மக்களால தங்கட பிறந்த மண்ணுக்கு திரும்பிப்போக முடியல்ல... இன்னமும் அந்த மக்கள் புத்தளத்து உப்புக் கரைகளில் வாழுது...

 

இப்படித்தான் ஆகிவிடுமா எங்கள் வாழ்க்கையும்...

 

எங்களுக்கு எந்தக் கரையோ எண்ட அல்லாவே, நீதான் காப்பாத்தவேணும்...

 

அந்த தொண்ணூறின் காலப்பகுதியில நானும் மட்டக்களப்பிலதான் நிண்டன், ஏறாவூருக்கு சொந்தக்காரர்களப் பார்க்கப்போன என்ர மகன கூட்டிற்று வரப்போயிருந்தன். அங்காலேயும் போக முடியாது, இஞ்சாலேயும் வர முடியாது.

 

காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த, ஏறாவூரில வீட்டுக்குள் படுத்துக்கிடந்தவர்கள் என நூற்றுக்கணக்கான மையத்துகள்... இஞ்ச மூதூரிலேயும் கிண்ணியாவிலேயும் அப்ப பிரச்சின...

 

அக்கரப்பத்து, சாய்ந்தமருது, பொத்துவில், ஓட்டமாவடி, வாழைச்சேனை என புலிகள் முஸ்லிம்கள தேடித்தேடி வெட்டியும் சுட்டும் கொன்று கொண்டிருந்தார்கள்...

 

தொண்ணூறு மிகப்பெரும் சோதனைக்காலம்... அன்று தொடங்கினதுதான்... இன்னமும் முடியவில்லை...

 

எனக்கு ஒண்டுமே விளங்குது இல்ல... எதற்காக இதெல்லாம் நடக்குது. ஏன் தமிழ் முஸ்லிம் சனங்களிடையே பகைமையுணர்வு வளர்க்கப்படுகிறது? அவங்களத் தவிர இந்த நிலைமைய யாருமே விரும்பவில்ல...

 

தங்களச் சேராத எவரையும் வாழவிடமாட்டினமாம் எண்டு சொல்கினம்... நடக்கிற சங்கதிகளப் பாத்தா அது உண்மையாகத்தான் இருக்கிறது.

 

இஞ்ச மூதூர் இப்ப போர்க்களமாக் கிடக்குது... சனங்கள் எதிரியாகிப் போட்டினம்... குஞ்சி, கிழடுகள் எல்லாம் உயிரக் கையில பிடிச்சுக் கொண்டு... சோறும் இறங்குது இல்ல... நித்திரையும் வருகுது இல்ல... மையத்துப் புட்டி மாதிரி ஊரே மாறிட்டு...

 

புலிகள் செஞ்ச அநியாயத்த வைச்சு அரசியல் கட்சி தொடங்கி அமைச்சரானவங்க, இப்ப கட்டுக் காவலோட ஏ.சி. ரூமில நல்லாத் தூக்கமாக இருப்பாங்க...

 

ஆண்டவா இந்த மனித உயிர்களக் காப்பாத்து...

நீதான் எங்களுக்கு துணையிருக்காய்!

 

 விடிஞ்சிட்டுது... ஊரே அமர்க்களப்படுகுது... இளைய மகன் பரக்கப் பரக்க ஓடி வருகிறான்... என்ன நடந்திருக்கிறதோ நேத்து இரவில...

 

கையில ஒரு நோட்டிசு... என்னிட்ட தாரான்... வாங்கிப் பார்த்தா... புலி போட்ட படம்... பயங்கரமாக் கிடக்கு...

 

'மூதூர் சோனிகள் அனைவரும் 72 மணித்தியாலயத்துக்குள் ஓடிவிட வேண்டும்.

இல்லையேல் இரத்த ஆறு ஓடும்"

 

- தமிழீழ தாயக மீட்புப்படை 29.05.2005.

 

இறுதி எச்சரிக்கைதான் இது...

 

வீட்ட விட்டு வெளியால வந்தன்... கையாலாகாத சனம் கண்ணக் கட்டி இருட்டில விட்ட மாதிரி நிற்குது... கறிக்கு கட்டின ஆடுபோல பெண்கள், குழந்தைகளின் கண்கள்...

 

ஊரே களேபரப்படுகுது... எங்கால போறது...?

 

அமைச்சர்மாருக்கும், கட்சித் தலைவர்களுக்கும் விசயத்த தெரியப்படுத்தியாச்சு...

 

இவங்களுக்கு வோட்டுப் போட்டத விட@ சும்மா இருந்திருக்கலாம். சீ என... ஒரு முதியவர் காறித் துப்புகிறார்...

 

பள்ளியில பீக்கரில் ஏதோ அறிவிக்கிறார்கள்...

 

எண்ட அல்லா என்ன நடக்கப் போகுதோ?...

 

அன்றைய நாள் அரை உயிருடன் கழிந்தது... அடுத்த நாள் விடிய இன்னுமொரு நோட்டிசு... என்ணண்டு பார்த்தா...

 

'மூதூர் முஸ்லிம்களுக்கு இராணுவத்தினராகிய நாம்

தெரிவித்துக் கொள்வதாவது... மூதூரை விட்டு அச்சம் கொண்டு யாரும் வெளியேறத்தேவையில்லை...

 

 

என்றும் போல் உங்களை நாம் பாதுகாப்போம். தற்போது மூதூரில் பாரியளவு ராணுவத்தினர் தேவையான பாதுகாப்பை மேற்கொண்டுள்ளபடியால் அச்சமில்லாமல் இருங்கள்...

 

- இலங்கை இராணுவம் - மூதூர்

 

வலது கையில புலி நோட்டிசு, இடது கையில ஆமி நோட்டிசு... என்ன செய்வது...?

யார கதைய நம்புவது...

 

ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்...

திடீரென பத்தர மணிபோல கரண்டு நிண்டு போய்ச்சு... ஊருக்குள்ள புலி வந்திட்டதாக வேலிக்கு மேலால் வந்த தகவல்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் போனது...

 

ராண்ஸ் போமர குண்டு வைச்சு தகர்த்த சத்தம் கேட்டது... பிள்ளைகள் அழத் தொடங்கிவிட்டினம்... பெண்கள் பதறிக் கொண்டிருந்தார்கள்...

 

உமிறிக்சரச்சை, இறால்குழி, ஆலிம் சேனைக்குள்ளாலதான் புலி, ஆமி நேவி உடுப்போட வந்திருக்கிறது...

 

இரண்டு மணிபோல வெடிச்சத்தம் கேட்கத் தொடங்கிட்டுது...

 

எந்த வழியும் இருக்கல்ல... சனம் ஒடுங்கிப் போய்க் கிடந்திச்சு... ஒதுங்கவும் இடமில்லையே...

 

எங்கே ஒதுங்குவது? எங்கே ஓடுவது...?

 

எங்கட தலையில என்ன எழுதி இருக்குது எண்டு யாருக்குத் தெரியும்?

 

ஊரையே இரண்டாப் புறிச்சி... அங்காலச் சனம் இஞ்சால போகமுடியாதவாறும், இஞ்சாலச் சனம் அங்கால வர முடியாதவாறும் புலிகள் தடுத்துவிட்டனர்...

 

பொழுது புலரத் தொடங்கிவிட்டது...

 

ஆனைச்சேனை, பாலநகர், நெய்தல் நகர், அக்கரைச்சேனை, நடுத்தீவு மக்கள் ஒரு புறமாகவும் மற்றவர்கள் மற்றப்பக்கமாக தடுத்துவைக்கப்பட்டனர்... முஸ்லிம் சனத்த மனிதக் கேடயங்களாக வைத்துக் கொண்டு ஆமிக்கு அடிக்கத் தொடங்கினர் புலிகள்...

 

அவனும் திரும்பி அடிக்கத் தொடங்கினான்...

 

மஜ்லிஸ் அஸ்ஸீறா தலைவர் கரீம் மௌலவியின் வீட்டு டெலிபோன் அடிக்குது...

'ஹலோ யார்?"

 

'நான் எழிலன் பேசுறன்"

'சொல்லுங்க தம்பி"

'நாங்க இராணுவத்துக்கு சரியான அடி அடிக்கப் போறம்... உங்கட மக்கள..."

 

யா அல்லாஹ்... தம்பி தம்பி... ஹலோ... ஹலோ...

 

பூமி வெடித்து வானம் இடிந்து வீழ்ந்தது போல் ஷெல்கள் வந்து விழுந்தன. எனக்கு கையும் ஓடவில்ல காலும் ஓடவில்ல... பெரும்பாலான மக்கள் அழுது, நடுங்கிக்கொண்டுதான் இந்த நேரத்தில இருப்பார்கள்...

 

விடிந்துகொண்டு வந்தது, மெல்ல மெல்ல வந்து ரோட்ட எட்டிப் பார்த்தன். சனங்கள் ஓடிக்கொண்டிருந்தினம்...

 

வீட்ட இருந்தவர்களையும் கிடச்சதை கையில எடுத்துக்கொண்டு வெளிக்கிடச் சொன்னன்... எங்கே போவது... கடைசி மகள் கேட்டாள்...

 

எனக்கும் தெரியாது எங்கு போவது எண்டு... ரோட்டுக்குப் போய் சனம் போகும் பக்கம் போவோம் வா என்று நாங்களும் வெளிக்கிட்டோம்...

 

இரண்டு பக்கமும் ஒரே ஷெல்லடி... சனங்களின் அழுகை... வேறு எதுவுமே கேட்காத ஷெல்லடிச் சத்தமும் மனித ஓலமும் மூதூரை நிறைத்தது...

 

பள்ளிவாசல், மத்ரஸா எண்டு சனங்கள் ஓடிவந்து குவியத் தொடங்கியது.... நாங்களும் ஒரு பள்ளிவாசல் தாழ்வாரத்தில் ஒதுங்கினோம்... நேரம் செல்லச் செல்ல மண் அள்ளி வீசினால், கீழே விழாத அளவிற்கு சன நெருக்கம்... அழுகையொலி... காப்பாற்று.... காப்பாற்று என்று ஆண்டவனை அழைத்த குரல்கள்...

 

புலிகள் மக்களைச் சூழ வந்து நின்று கொண்டனர்... அங்கிருந்து இராணுவத்த நோக்கி ஷெல்லடிக்கத் தொடங்கினர்.... ஆமி அந்த இடத்திற்கு பதிலுக்கு ஷெல் அடிக்கத் தொடங்கியது... சனங்கள் புலிகளிடம் மன்றாடினர்... தள்ளிப்போய் நின்று ஆமியைத் தாக்கச் சொல்லி.... புலிகள் கேட்கவில்லை...

 

புலிகளின் திட்டப்படி ஆமி திருப்பி ஷெல் அடிக்க, ஷெல்கள் மக்களுக்குள் வந்து விழுந்து வெடித்தன...

 

நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டதுபோல் சனங்கள் சிதறி ஓடினர்... பலர் கொத்துக் கொத்தாய் மௌத்தாகிக் கிடந்தனர்... இரத்தம் எங்கும் வழிந்தோடியது....

 

எதற்காக இத்தண்டனை எங்களுக்கு,

 

பிறந்த மண்ணிலேயே வாழ்வோம் என்று நம்பியதாலா?

 

இரத்த வாசம் காற்றில் பரவத் தொடங்கியது, இரத்தம் ஒழுக ஒழுக ஆட்கள தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கி ஓடிப்போனால்... மூதூர் ஆஸ்பத்திரி ஷெல்லடியில் சிதைந்தழிந்து கிடந்தது.

 

திரும்பி, காயப்பட்டவர்களை மாட்டு வண்டியில் கிடக்கவைத்து மாடுகளுக்குப் பதிலாக இளைஞர்கள் இழுத்துக்கொண்டு இறங்கு துறைக்கு ஓடினர்... திருமலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல, மூதூர் துறையடியை நெருங்க முடியவில்லை......

கடற்கரைச் சேனையிலிருந்து இறங்கு துறைக்கு புலிகள் ஷெல்லடித்துக் கொண்டிருந்தனர். அலைச்சலின் பின் மையத்துக்களுடன் மீண்டும் மக்கள் இருந்த இடத்திற்கே வந்தனர்...

 

காப்பாற்றுங்கள் என்ற குரல் காயப்பட்டவர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் எழுந்து கொண்டிருந்தன.

 

ஆகஸ்ட் 01ம் திகதியின் பகல் இருண்டு கொண்டிருந்தது...

 

அடுத்த நாளின் காலை மிகப்பெரும் மனித துயரத்தையே எமக்குத் தரப் புலருமென்று நாம் நினைக்கவேயில்லை.

 

ஒரே மரண அழுகை ஊர் கூடி...

 

இரத்தம் மனித உடல்களிலிருந்து ஓடிக்கொண்டிருந்தது. காயப்பட்டோருக்கு மருந்து கூட இல்லை... கட்டுப்போட இருந்த உடுபுடவையைத் தவிர, பலர் உடுத்திருந்த ஆடைகளைக் கழற்றி காயப்பட்டோருக்கு கட்டுப் போட்டனர்....

 

எழும்பிக் கூட நிற்க முடியாத ஷெல் தாக்குதல். உதவுவோர் தவிர, மற்ற அனைவரும் நிலத்தில் குப்புறப்படுத்துக்கொண்டு.... காயப்பட்டோரின் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள், ஈனஸ்வரக் குரலுக்கு உதவியளிக்க முடியாததால் அனைவரும் அழத் தொடங்கினர்...

 

இவ்வளவுக்கும் மத்தியில்... ஒரு பெண்ணின் அழுகை ஒலி இந்த மனிதத் துயரத்தினுள்... அந்தத் தாய் ஒரு சிசுவை பிரசவித்திருந்தார்....

 

ஏலவே பிறந்து வாழ்ந்து கொண்டிருந்தோர்@ உயிரை இழக்கும் பேரபாயத்தில் சிக்கி உள்ளபோது, இன்னுமொரு உயிர் பிறந்துள்ளதா...

 

தலைக்கு மேலால் விண்ணென்று பறந்து கொண்டிருக்கும் ஷெல்களால் இந்த பிஞ்சுக் குழந்தையும் உயிர் தப்புமா?

 

யார் யார் எங்கே?

யார் யார் உயிருடன் இருக்கிறார்கள்...

 

யார் மூதூர் மக்களைக் காப்பாற்றுவது....

 

மூன்றாவது நாள்...

மனித அவலத்தின் நிதர்சனம் கண் முன்னே...

 

வாழ்க்கை இனிமையானது என யார் சொன்னான்?

 

இடைவிடாத ஷெல் தாக்குதல்கள்... பசி, அழுகை... கண்ணீர்... இரத்தம்... உயிர் வரண்ட கணங்கள்.... மனிதர்களுடன் மனிதர்களாய் மையத்துக்கள்....

 

மரணித்தவர்களை அடக்கத்தானே வேண்டும்! மையத்தை தூக்கி எடுத்துக் கொண்டு ஒரு சிலர் புறப்பட்டனர்...

 

இந்த வயதில் நானும் அவர்களுடன்... ஓட்டமும் நடையுமாய்...

 

ஆனால் புலிகள் மையத்துக்காலையில் நிலைகொண்டு இருந்துகொண்டு எங்களை விரட்டினர்...

மீளவும் மையத்துக்களுடன் நாம் திரும்பினோம்....

 

அப்போதுதான்... மூதூர் வடக்கே புலிகளால் மனிதக் கேடயங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்கள் புலிகளின் முற்றுகையை உடைத்துக்கொண்டு, நாம் தங்கியிருந்த நத்வத்துல் உலமா அரபிக் கல்லூரியை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தனர்....

 

மூன்று தினங்களாக வௌ;வேறு திக்குகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூதூர் முஸ்லிம்கள் ஒருவாறு ஓரிடத்திற்கு வந்து சேர்ந்து விட்டனர்... அரபிக் கல்லூரிப் பூமி மனிதர் நகர்வதற்குக்கூட ஒரு அங்குல இடமின்றி திணறிக்கொண்டிருந்தது.

 

மூன்று தினங்கள் உணவே இல்லை@ பச்சத் தண்ணியைத் தவிர, தண்ணியும் நினைத்த மாதிரி கிடைக்கவில்லை...

 

மனிதர்களின் கால்கள் தடுமாறி நிலத்தில் சோர்ந்தன. குழந்தைகளின், முதியவர்களின், நோயாளிகளின் நிலையை என்னால் சொல்ல முடியவில்லை... இந்த நிலைமை யாருக்கும் வந்துவிடக் கூடாது எண்ட ஆண்டவனே!

 

பசியின் குரல் எங்கும் எழுகின்றன... அரபிக் கல்லூரியில் இருந்ததே கொஞ்சம் அரிசி...

 

அந்த அரிசியை எடுத்து கஞ்சி காய்ச்சி குழந்தைகளுக்கு மட்டும் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.

 

ஒரு மிடறுக் கஞ்சி ஒரு குழந்தைக்கு...

 

திடும் திடுமென அரபிக் கல்லூரிக்குள் புலிகள் தமது பென்னம் பெரிய ஆயுதங்களுடன் நுழைந்தனர். பீரங்கிகளினால் அரபிக் கல்லூரிக்குள் நின்று சுடத் தொடங்கினர் படைகளை நோக்கி...

 

எறிகணை வந்த இலக்கை நோக்கி, பதிலுக்கு இராணுவம் ஷெல்லடிக்கத் தொடங்கியது..

 

அரபிக் கல்லூரிக்குள் வந்து விழுந்த ஷெல்களால் எங்கும் மரண ஓலம் எழத்தொடங்கியது. அவ்விடத்தில் பலர் துடி துடிக்க மரணமடைந்தனர்... கஞ்சி குடித்துக் கொண்டிருந்த குழந்தைகள் சிதறிக் கிடந்தனர். அவர்கள் குடித்துக் கொண்டிருந்த கஞ்சியும்தான்...

 

வானத்திலிருந்து உதவியும் உணவுப் பொருளும் கிடைக்குமென நம்பிக் கொண்டிருந்த மக்களுக்கு ஷெல்களே வந்து விழுந்து கொண்டிருந்தன...

 

மூதூரின் அழுகுரல் வெளியுலகுக்கு இன்னும் கேட்கவில்லையா?

 

புலிகளினால் திட்டமிடப்பட்டு மரணத்தின் குழிக்குள் தள்ளப்பட்டுள்ள நாம், ஷெல் தாக்குதல் மூலமோ.. பட்டினிச் சாவின் மூலமோ அல்லது புலிகளினால் நேரடியாகவோ... கொல்லப்படுவோம் என நம்பத் தொடங்கிவிட்டோம்.

 

காத்தான்குடி, அழிஞ்சிபொத்தான, பள்ளியாகொடல்ல, ஏறாவூர், ஒந்தாச்சிமடம் என புலிகள் முஸ்லிம்களை நூற்றுக்கணக்கில் கொன்றொழித்த நினைவுகள் கண்களுக்குள் கட்டி நின்றது...

 

ஒட்டு மொத்தமாகவோ, சிறுகச் சிறுகவோ மூதூர் முஸ்லிம்களை புலிகள் கொல்லப் போகிறார்கள்..

 

வெளி வாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டுவிட்டது... உதவிக்கு வந்து எம்மை காப்பார் எவருமில்லை....

 

தூ! தூ!

 

முஸ்லிம்களை பாதுகாப்போம் என மேடைக்கு மேடை முழங்கிய அந்த அரசியல்வாதிகள் எங்கே? இவனுகளுடைய ஏமாற்றுத்தனங்கள்... பொய் வாக்குறுதிகள்... பதவி ஆசை... பெண்ணாசை? இவற்றுடன் வீரா வசனம்?

 

தூ! தூ!

 

நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரிக்குள் மூன்று தினங்களாக அடைந்து கிடந்த இளைஞர்கள் ஒரே குரலில் சொன்னார்கள்...

 

புலிகளின் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறியே தீர வேண்டுமென...

 

கரீம் ஹஸ்ரத்தின் முடிவுக்காக இளைஞர்கள் காத்திருந்தனர்.. எந்த வழியுமில்லை ஹஸ்ரத்தும் உடன்பட்டார்...

 

உயிரை மேலும் பணயமாக்கும் ஒரே பயணத்திற்கு இப்போது தயார்படுத்தப்பட்டனர் அரபிக் கல்லூரிக்குள் ஒடுங்கிக் கிடந்த மக்கள்...

 

காயப்பட்டோர், நோயாளிகள், வயோதிபர்கள் அங்கிருந்த சிறு வாகனங்களில் ஏற்றப்பட்டனர்...

 

வெள்ளைக் கொடிகளை ஏந்திய வண்ணம் சிலர் முன்செல்ல, ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மூதூர் தயாக மண்ணைவிட்டு மக்கள் நடக்கத் தொடங்கினர்...

 

வானை இடிக்கும் அழுகை, ஒப்பாரிச் சத்தத்துடன் மக்கள் வெள்ளம் நகர்ந்தது...

 

ஒன்று, இரண்டு மூன்று என சில எட்டுகளை வைத்ததும் பலர் கதறி அழுது கொண்டு நிலத்தில் புரண்டு அழத்தொடங்கினர்...

 

வடக்கிலிருந்து புலிகளால் நேரடியாக விரட்டியடிக்கப்பட்டபோது அம் மக்கள் இப்படித்தானே அழுது புரண்டிருப்பர்...

 

இப்போது இங்கே மூதூரில்..., 16 வருடங்கள் கடந்து....

 

முஸ்லிம் மக்கள் வெளியேறுவது கண்டு, காவலுக்கு நின்ற புலிகள் தமது வாக்கிடோக்கியில் மேலிடத்திற்கு தொடர்பு கொண்டனர்.. அவர்கள் சிரிப்பது எமக்கு விசித்திரமாகவிருந்தது...

 

புலிகள்... அதுவும் போர் முனையில், கொலை வெறியில் சிரிக்கிறார்களா?... அல்லது வடக்கிற்கு அடுத்ததாக மூதூரிலிருந்தும் முஸ்லிம்களை பட்டும் படாமலும் வெளியேற்றி விட்டோம் என சிரிக்கிறார்களா...

 

எங்களுக்கு அந்த புலிச் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை... எங்களுக்கு வலை விரித்துவிட்டே சிரித்து நின்றார்கள் என்பதை அதன்பின்தான் நேரடியாக உணர்ந்தோம்.

 

கால்களில் செருப்பில்லை.... காடும் பத்தையும் கற்களும் நிரம்பிய பாதையால் ஆயிரக் கணக்கான மக்கள் நடந்து கொண்டிருந்தனர் பலரை சுமந்து செல்லவே வேண்டியிருந்தது.

 

மூன்று நாளாய் கொலைப்பட்டினி, சோர்வு, பயம்...

 

எப்படி குழந்தைகள் தொடக்கம் முதியோர் வரை நகர முடிகிறது? ஆம் வாழ்தல்... வாழ்தல்... வாழ வேண்டுமென்ற ஆசை அனைவரையும் உந்தித் தள்ளியது.

 

கொல்லவே துணிந்து நிற்கும் கூட்டத்திடமிருந்து தப்பி ஓடும்போது.. சாவு விதிக்கப்பட்டவர்கள் போக எஞ்சியோர் உயிர் பிழைப்பதற்கான பயணம் அது! அந்த பயணத்தில் மரணம் நிச்சம், மிஞ்சி வாழ்வு கிடைத்தால் அதிஷ்டமானது.

 

ஏ15 வீதியில் மூணாங்கட்டை. முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றிய பயணம் நெருங்கியது. ஜபல் நகரம் போய் வாருங்கள் எனது மக்களே என எமக்கு வழிவிட்டது.

 

எமக்கு முன் ஓங்கிப் பரந்து வளர்ந்து நிற்கும் மலை நெருங்கிவிட்டது. மலை அடிவாரத்தை அண்மித்ததும்தான் தாமதம்,

 

'ஏய், சோனிகளே எல்லோரும் திரும்பி, கிளாந்திமுனை மலையடியைச் சுத்திப் போங்கள்" புலிகளின் குரல்கள் உறுமின.

 

ஆயுதம் தரித்த நூற்றுக்கணக்கான புலிகள்...

 

மலையடி வாரத்திலும் மலையிலும்...

 

சோனிகளே... சோனிகளே... என அதட்டும் புலிகளின் குரல்கள்...

 

மலையடிவாரத்தின் கீழும் அருகிலும், மூதூரிலிருந்து ஓடோடிவரும் முப்பத்தெட்டாயிரம் முஸ்லிம் மக்கள்...

 

இவர்களைக் குறிபார்த்து நூற்றுக்கணக்கான புலித் துப்பாக்கிகள்...

 

'ஏய் - சோனிகளே! சொல்வது புரியவில்லையா?"

 

டமார்.... வெடிச்சத்தம்...

 

சனம் சில்லாங்கொட்டைபோல் சிதறித் திணறிக்கொண்டிருந்தது.

 

வெள்ளைக் கொடியுடன் முன்னே சென்ற குரல்கள்

 

'இல்லை இல்லை, நேரே ஏ15 வீதியால்தான் போகப்போகிறோம்"

 

அவங்கட தலைவர் எண்டு நினைக்கிறேன். ஒரு குரல் வந்தது. 'எங்கள் கட்டளையை மீறினால், முழுச் சோனியையும் ஓட ஓட ஷெல்லடிச்சு கொண்டு போடுவோம்"

 

முப்பத்தெட்டாயிரம் முஸ்லிம்களையும் குறிவைத்து பெருந்தொகை ஆயுதங்கள்... சுடு என்ற கட்டளைக்கு மட்டுமே அவை காத்திருந்தன...

 

இறுதி நாளின், மஃசர் வெளிபோல அந்தக் கணமிருந்தது...

 

வேறு வழியின்றி மக்கள் கிளாந்திமுனை மலையடிவாரப் பாதையை நோக்கி நகரத் தொடங்கினர்...

 

கல்லும் முள்ளும் பள்ளமும் படு குழியும் நிறைந்த கிளாந்திமுனை பாதையில் அத்தனை உயிரும், மரணத்தின் பொறிக்குள் மூச்சடக்கத் தொடங்கியது... அழுதுகொண்டு...

 

இப்போது முற்று முழுதாக புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் முழு மூதூர் முஸ்லிம்களும்... முப்பத்தெட்டாயிரம் மக்கள், பால் வயது வேறுபாடின்றி...

 

மரணத்தைச் சுமந்து கொண்டு பணயக் கைதிகளாய். புலிகள் சொன்ன பாதையில் நடந்து கொண்டிருந்த முஸ்லிம்களை நோக்கி ஒரு தமிழ்த் தாய் ஓடோடி வந்தார்...

அவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. உடல் பதற்றத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவரது குரலில் ஒருவித தீர்க்கமும் அபாயத்தை எச்சரிக்கும் தொனியும் இருந்தது... எங்களால் நம்பவே முடியவில்லை...

 

'ஐயோ! மக்களே... ஏன் நீங்கள் இந்தப் பாதையால் வந்தீர்கள், கிளாந்தி மலையடிக்குப் போகாதீர்கள்... புலிகள் உங்களைக் கொல்லப்போகிறார்கள்... ஐயோ! கடவுளே திரும்பிப் போங்கள்... திரும்பிப் போங்கள்..."

 

அந்தத் தமிழ்த் தாய் அழுது கொண்டே எங்களைத் தடுத்தார். மக்கள் மேலும் பீதியால் நடுங்கினர்.. வந்த வழியால், திரும்பி எல்லோரும் ஓடத் தொடங்கினர்...

 

எங்களுக்கு பின்னால் நகர்ந்து வந்த புலிக்கூட்டம், முன்னே செல்லுங்கள் என எங்களை அச்சுறுத்தியது... எங்களைத் திரும்பிப்போக விடவில்லை.

 

'இப்போது உங்களை, எங்களால் என்னவும் செய்து போட முடியும், நாங்கள் சொல்வது போல் கிளாந்தி முனைக்குப் போங்கள்... உங்களை மனிதாபிமானமாக நடத்துவோம்...

 

ம்... ம்...."

இப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, எமது மக்களின் தலைகளுக்கு மேலால் புலிகளின் துப்பாக்கி ரவைகள் சீறிப் பாய்ந்தன... ஒரே அழுகை... கூக்குரல்... பலர் நிலத்தில் விழுந்து படுத்துக்கொண்டனர்....

 

வேறு எதைத்தான் செய்ய முடியும்? ஓட்டமும் நடையுமாய் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் மலையடிவாரத்தை நோக்கி சென்றோம்...

 

சூரியன் தகித்துக் கொண்டிருந்தது, செந்தணலில் நெய்யூற்றியதுபோல....

 

தாகம், பசி, மரண அலைச்சல், உழல்வு... முப்பத்தெட்டாயிரம் பேரின் குரல்களும் ஒலித்துக்கொண்டேயிருந்தன...

 

அந்த வனாந்தரத்தின் அமைதியை, மரண பயம் சுமந்து வந்த முஸ்லிம்களின் குரல்கள் குலைத்துக் கொண்டிருந்தன...

 

பரந்த வெளி, கிழக்குப் பக்கத்தில் அடர்ந்தகாடு,

 

மேற்கே அண்ணாந்து பார்க்கும் மூணாங்கட்டை மலைச் சிகரங்கள், அச்சிகரங்களிலிருந்து கனரக ஆயுதங்களால் முஸ்லிம்களை குறிபார்த்து இடைக்கிடையே மேலால் சுட்டுக்கொண்டிருக்கின்ற புலிகள்...

 

வடக்கும் தெற்குமாக புலிகள்...

 

நான்கு தினங்களுக்கு முன், மூதூரில் தமது வீடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள்...

 

இன்று தவிதவித்து இந்த பரந்தவெளியில் புலிகளின் கொலைவெறி முற்றுகைக்குள்...

 

கூட்டுக்கொலை நிகழப்போகும் வெளியாகி நின்றது கிளாந்திமுனை மலையடிவாரம்...

 

எண்ட ஆண்டவனே... அழுகைக் குரல்கள் வானை முட்டி மீள மீள தரைக்கு திரும்பிவந்து கொண்டிருந்தன...

 

கைக்குழந்தைகள் பசியால் அலறிக் கொண்டிருந்தன...

 

மூன்று நாட்களுக்கு மேலாய் பட்டினி கிடந்த எந்தத் தாயின் மார்பில் பால் சுரக்கும்?

 

எந்த வழியுமில்லாத தாய் தந்தையர், தமது உமிழ் நீரை தம் பிள்ளைகளின் வாய்களுக்குள் திணிக்கத் தொடங்கினர்... ஆனாலும் அவர்களுக்கு உமிழ் நீரும் சுரக்கவில்லை...

 

உச்சிவெயிலில் அலைந்து புரண்டு நிற்கும் பெரியவர்களின் வாயில் எப்படி உமிழ் நீர் சுரக்கும்?

 

தண்ணீர், தண்ணீர்!

 

எங்களைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்ற குரல்கள் அந்த வனாந்தரத்தையே உதவிக்கு அழைத்தது...

உதவுவார் யாருமே இல்லை... வெறுமை,

 

கைவிடப்பட்ட கைசேதம்... சனம் ஒரு பக்கத்தை நோக்கி கூட்டம் கூட்டமாக ஓடத் தொடங்கியது... என்ன என்ன? எல்லோரும் கேட்டனர்...

 

தண்ணீர்க் குட்டையொன்றை கண்டுவிட்டுத்தான் அதனை நோக்கி மக்கள் ஓடினர்....

சிறு குட்டை, தூசும் தும்பும், கிருமிகளும், ஏன் துர்நாற்றமும் நிறைந்த குட்டையது...

ஆனாலும் மக்கள் முண்டியடித்துக்கொண்டு அத்தண்ணீரை அள்ளி அள்ளிப் பருகினர்.

 

தங்கள் கட்டுப்பாட்டை மீறி மக்கள் ஓடுவதைக் கண்ட புலிகள்... அந்தக் குட்டையருகே துப்பாக்கிகளுடன் ஓடி வந்தனர்...

 

தாகம் தாளாமல், குட்டை நீரை அள்ளிப் பருகிக் கொண்டிருந்த மக்களை, அங்கிருந்த வெள்ளமரக்கிளைகளைப் பிடுங்கி மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கினர்...

'ஓடுங்கள்... போய் வரிசையாக நில்லுங்கள்" என புலிகள் முஸ்லிம்களை தாக்கித் தாக்கி விரட்டத் தொடங்கினர்...

 

குட்டைத் தண்ணீரை குடித்த பாதி குடியாத பாதியாய் மக்கள் விட்டு விட்டு, காயங்களுடன் வரிசையில் நிற்க திரும்பி ஓடினர்....

 

எண்ட அல்லாஹ்வே என்ன சோதனை இது?

 

பரந்த வெற்று வெளியில், வரிசையில் நிற்க முடியாத மக்கள் ஓரக்கரைகளில் ஒதுங்க முற்பட்டபோது புலிகள் அவர்களை சரமாரியாக தாக்கி.. வெயிலின் வெளிக்கு தள்ளினர்....

 

பருகுவதற்குக்கூட, ஒரு சொட்டுத் தண்ணீர் மறுக்கப்படுகின்ற நிலையில், ஒரு சமுதாயம் புலிகளால் சித்திரவதைப் படுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.

 

தண்ணீர் தாகத்தினால் வாய் வரண்டு நின்ற மக்கள் முன், ஒரு புலி உறுப்பினர் பிளாஸ்டிக் வாளி ஒன்றில் தண்ணீரைக் கொண்டுவந்து வைத்தார்...

 

மனிதாபிமானமுள்ள புலி?

தாகத்தினால் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் கொண்டு வருகிறார் என மக்கள் அவர் பக்கம் செல்லத் தொடங்கினர்...

 

ஆனால் அங்கு நின்ற புலிகள், மக்களை அந்த தண்ணீர் வாளியை நெருங்க விடவில்லை...

 

துப்பாக்கிகள் "லோட்" செய்யப்படும் சத்தம் எழத் தொடங்கியது.

 

'ஏய் சோனிகளே தள்ளிப் போங்கள்" என விரட்டினர்...

 

கூட்டத்திலிருந்தோரில் ஒரு வயோதிபர், ஒரு பெண், ஒரு குழந்தை எனத் தேர்ந்தெடுத்த புலிகள், அம்மூவரையும் அத்தண்ணி வாளிக்கு அருகில் அழைத்துச் சென்றனர்.

 

ஒரு பெண் புலி, மிகப் பிரயத்தனப்பட்டு முகத்தில் கருணையையும் தாய்மையையும் வரவழைத்துக் கொண்டு புன்னகை சிந்த, அம் மூவருக்கும் தண்ணீரை பருகக் கொடுத்துக் கொண்டிருந்தார்...

 

இவற்றை புலிகள் வீடியோப் படம் எடுத்துக் கொண்டிருந்தனர் புலிகளின் மனிதாபிமானத்தை வெளியுலகுக்கு காட்ட....

 

வீடியோ படம் எடுத்து முடிந்ததும், அப் பெண் புலி தண்ணீர் வாளியை தூக்கிக்கொண்டு முன் சென்றார்...

 

ஒரு முதியவர், 'புள்ள... புள்ள.. அந்தத் தண்ணியைத் தாம்மா... ஒனக்கு புண்ணியம் கிடைக்கும்" என அழுது கேட்டுக்கொண்டு அப்பெண் புலிக்கு பின்னால் போனார்...

 

உடனே அப்பெண் புலி... தண்ணீரை தரையில் கொட்டியது.

 

அந்த முதியவரை புலிகள் சூழ்ந்து தாக்கத் தொடங்கினர்...

 

இப்படியான கொடுமைகளை வேறு யாரால்தான் செய்ய முடியும்?

 

இப்படியாக காக்க வைக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டிருந்த சூழலில்@ திடீரென பெரிய புலி ஒன்று அங்கு வந்தார்...

 

ஆண்களை ஒரு பக்கமாகவும், பெண்களை ஒரு பக்கமாகவும் நிற்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது...

 

பின்னர், பெண்களை தோப்பூர் பிரதேசத்தை நோக்கி நடக்குமாறு கட்டளையிட்டனர் புலிகள்.

 

ஆண்களை விடாதுவிட்டால் தங்களால் தனியே செல்ல முடியாது என பெண்கள் குரல் எழுப்பத் தொடங்கினர்... ஆண்கள் அனைவரையும் கொல்வதுதான் புலிகளின் திட்டம் என்பது பெண்களுக்கு நன்கு தெரிந்திருந்தது.

 

இதனால் அவர்கள், இதுவரை புலிகளின் கட்டளைகளைக் கேட்டு நடந்தது போல்... இக் கட்டளைப்படி நடக்க முடியாது என உரத்துக் குரல் எழுப்பினர்...

 

அப் பெண்களை புலிகள் தாக்கினர்... தமது பெண்களை புலிகள் தாக்குவதைக் கண்ட முஸ்லிம் ஆண்கள் புலிகளை நோக்கிப் பாய்ந்தனர்...

 

அங்கு இரு தரப்பினரிடையேயும் கைகலப்பு ஏற்படும் நிலை தோன்றியது....

 

உடனே பின்னுக்குச் சென்ற புலிகள்... தங்கள் கால்களால் ஒரு கோட்டைக் கீறிவிட்டு, அக்கோட்டைத் தாண்டி முன்னுக்கு வந்தால் சுட்டுக் கொல்லப்போவதாக எச்சரித்தனர்...

 

ஆனாலும், முஸ்லிம் ஆண்களும் பெண்களும் தனித்தனியே நிற்பதையும், பெண்கள் தனியே செல்வதையும் செய்ய முடியாது என்றனர்...

 

இதனால் ஆத்திரமடைந்த புலிகள்... திடீரென பாய்ந்து முஸ்லிம் இளைஞர்களை தனித்தனியாகப் பிடித்து தூக்கிச் செல்லத் தொடங்கினர்....

 

இவ்வாறு பிடித்துச் சென்ற முஸ்லிம் இளைஞர்களின் கைகளை பின்னால் கட்டி, அவர்களை சுட்டுக் கொல்வதற்கு தயாராகினர்...

 

மனைவி பார்த்திருக்க கணவனையும்... தாய் தந்தை பார்த்திருக்க மகனையும்... பிள்ளைகள், சகோதரர்கள் பார்த்திருக்க, தகப்பன், சகோதரர்களையும்....

 

புலிகளால் இழுத்துச் செல்லப்பட்ட ஒருவர், தனது தோளில் தன் பிள்ளையை அணைத்துக் கொண்டிருந்தார்... அந்தக் குழந்தை வீறிட்டு அழுது கொண்டிருந்தது...

 

கசாப்புக் கடைக்கு கொண்டு செல்லப்படும் மந்தைகள் போல் அவர்கள் நடாத்தப்பட்டனர்... எங்குமே அழுகை ஒலி... இறைவனை வேண்டும் துஆப் பிரார்த்தனைகள்...

 

ஓலம்... ஓலம்... ஆயிரக் கணக்கானோரின் பெரும் மனித ஓலம்..., மரண ஓலம்...

 

ஒரு முஸ்லிம் இளைஞர்... நிலைமையின் வன்மம் தாளாது புலி உறுப்பினர் ஒருவரை எதிர்த்துத் தாக்கத் தொடங்கினார்... அந்த இளைஞரை அவ்விடத்திலேயே ஏனைய புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொன்றனர்...

 

நிலைமை எல்லை மீறிப் போவதை உணர்ந்த கரீம் ஹஸ்ரத் உரத்து பேசத் தொடங்கினார்...

 

'நீங்கள் எப்போதும் கேட்டு வருவதுபோல், இப்போது நாங்கள் மூதூர் மண்ணைவிட்டுப் போகிறோம், எங்களை உயிரோடு பிழைத்துப் போக விடுங்கள்... உங்கள் தலைவர் எழிலனோடு என்னைப் பேச விடுங்கள்"

 

அவர் எவ்வளவு கெஞ்சியும் புலிகள் மசியவில்லை....

 

முஸ்லிம்களுக்கும், அங்கு நின்ற புலிகளுக்குமிடையே கைகலப்புகள் ஏற்படத் தொடங்கின...

 

முஸ்லிம் பெண்கள் புலிகளுக்கு எதிராக ஆவேசம் வந்தவர்களாக கத்திக் கொண்டிருந்தனர்..

 

நிராயுதபாணியான மக்கள்... ஆயுதம் தரித்த புலிகளுக்கு இப்போது அஞ்சும் நிலையில் அங்கில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

 

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த புலிகள்@ தமது தந்திரோபாயத்தை தொடங்கினர்...

 

அதாவது முப்பத்தெட்டாயிரம் முஸ்லிம்களுக்கு மத்தியில் நின்றுகொண்டு... ஐந்து கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள பட்டித்திடல் இராணுவ முகாமை நோக்கி தந்திரோபாய ஷெல்லடித் தாக்குதலைத் தொடங்கினர்.

 

புலிகளின் திட்டம் உடன் பலித்தது...

 

பதிலுக்கு பட்டித்திடல் இராணுவ முகாமிலிருந்து பல ஷெல்கள் வந்து விழுந்தன...

மலையடிவாரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்கள் 'யா அல்லாஹ் எங்களைக் காப்பாற்று" என நிலத்தில் விழுந்து சரிந்தனர்.

 

முஸ்லிம் இளைஞர்களை கொல்ல வடிகட்டி பிடித்து வைத்திருந்த இடத்திலும் ஷெல் வந்து விழுந்ததால்... அங்கு பிடித்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்களும் அவர்களைக் கொல்ல தயாராகிக் கொண்டிருந்த புலிகளும் மரணித்துக் கிடந்தனர்....

 

புலிகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள தற்காப்புக்கு தயாராகிய கணத்தை பயன்படுத்திக்கொண்ட முஸ்லிம் மக்கள், தோப்பூர் பிரதேசத்தை நோக்கி தப்பி ஓடத் தொடங்கினர்...

 

உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடிய ஓட்டம்...

 

காடு, மேடு, பள்ளம், படுகுழி தாண்டி, வீழ்ந்து, எழுந்த ஓட்டம்...

 

முப்பத்தெட்டாயிரம் மக்கள் ஓடிய ஓட்டம்... இடையில் இரு தாய்மார்கள் பிரசவம் கண்டனர்... இரு குழந்தைகளும் இறந்தே பிறந்தன...

 

வழியில் அகப்பட்ட ஒரு பாழ் கிணற்றில் கிடந்த நீரை மக்கள் அள்ளிப்பருகினர்...

 

சொற்ப நேரத்திற்குள் அப்பாழ் கிணறு தீர்ந்து போய்விட்டது என்றால் மக்களின் தாகத்தைப் பாருங்கள்!

 

ஒரு கிணற்றுத் தண்ணீர் ஒரு சமுதாயத்திற்கு போதுமா?

 

களைப்பும், சோர்வும் நிறைந்த நிலையில், உயிரை மட்டுமே சுமந்துகொண்டு பட்டித்திடல் வீதியை மக்கள் நெருங்கினர்...

 

ஒருவாறு இப்போதுதான் மக்களால் தாங்கள் உயிருடன் இருப்பதையே நம்ம முடிந்தது...

 

அங்கு வந்த ஒரு தமிழ் மகன், தனது கடையைக் காட்டி அங்கிருந்த அனைத்து குளிர்பான போத்தல்களையும் குடியுங்கள் என கண்ணீரைச் சிந்திக் கொண்டே, அள்ளி அள்ளி வழங்கினார்...

 

இன்னுமொரு தமிழ் மகன் தனது பிள்ளைகளுடன் இளநீர்க் குலைகளைச் சுமந்து கொண்டு வந்து எமக்குத் தந்தார்... வாங்கிக் குடித்தவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது...

 

தோப்பூர்க் கிராமம் நெருங்கிவிட்டது... கிளாந்தி மலையடிவாரத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்... அவர்களுக்கு என்ன நடந்தது?

 

எங்கள் உம்மாவை கண்டீர்களா?

 

வாப்பாவைக் கண்டீர்களா?

 

எனது பிள்ளைகளைக் கண்டீர்களா?

 

எனது கணவன் எங்கே?

 

எனது மனைவி எங்கே...?

 

உறவுகளைத் தேடும் குரல்கள் எங்குமே ஒலித்தன..

 

அழுகை... ஒப்பாரி.... ஒப்பாரி என தோப்பூர் பிரதேசம் அரண்டு நின்றது.

 

திருமலையிலிருந்து வந்த உதவி வாகனங்களில் ஏறி மக்கள் கந்தளாய் பிரதேசத்தை நோக்கி செல்லத் தொடங்கினர்... முப்பத்தெட்டாயிரம் பேருக்கு ஏது வாகனம்?

 

வாகனங்கள் கிடைக்காதோர் கால் நடையாக எழுபது கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள கந்தளாயை நோக்கி அந்தக் காட்டுப் பாதையின் ஊடாக நடக்கத் தொடங்கினர்...

 

உயிர் பிழைத்துவிட்டோம் என்ற அதீத நம்பிக்கை தெய்வாதீனமாக தப்பி வந்த அவர்களிடம் ஏற்பட்டிருந்தது

 

இரவு கவிந்து கொண்டிருந்தது...

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்