03_2005.jpgதிருச்சி நகரில் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயணச் சீட்டு பெயரளவில் வழங்கப்பட்டுள்ளதே தவிர, அதைப் பயன்படுத்தும் வகையில் பள்ளி நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. பள்ளி நேரங்களில் வரும் பேருந்துகளெல்லாம் அளவுக்கு மீறிய பயணிகளோடு திணறிக் கொண்டு வருவதும், மாணவர்களை ஏற்றாமல் செல்வதும் தொடர்கிறது. இதனால் மாணவர்கள் ஜன்னல் கம்பியையும் ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக் கொண்டு படிகளில் தொங்கியபடியும் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்கின்றனர். கிராமப்புற பேருந்துகளில் மாணவர்கள் மேற்கூரையில்தான் பயணம் செய்ய முடிகிறது. நெரிசலில் முட்டி மோதி உள்ளே ஏறும் மாணவர்களை சில ஓட்டுநர்களும் நடத்துனர்களும் கொச்சையான வார்த்தைகளால் வசைபாடுவதும் தொடர்கிறது. சில

 மாணவர்கள் காசு கொடுத்து தனியார் பேருந்துகளில் செல்வதும், காசில்லாத ஏழை மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத அவலமும் தொடர்கிறது. கடந்த ஜனவரி 27ஆம் தேதியன்று 8ஆம் வகுப்பு பயிலும் மாணவன் கார்த்திக், கூட்ட நெரிசலில் பேருந்தில் ஏற முடியாமல் கீழே விழுந்து பேருந்து சக்கரத்தில் கால் நசுங்கி விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். பார்ப்பன பாசிச ஜெயா அரசு, பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே உலக வங்கி உத்திரவுப்படி இலவச பஸ் பாஸ் சலுகையை ரத்து செய்தது. இதற்கெதிராக மாணவர்களும் உழைக்கும் மக்களும் போராடியதன் விளைவாக, மீண்டும் அச்சலுகையை வழங்குவதாக அறிவித்தது. ஆனால், தேவைக்கேற்ப பள்ளி நேரங்களில் கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்படாததால், பாஸ் இருந்தும் மாணவர்களால் அதைப் பயன்படுத்த முடிவதில்லை.

 

அன்று 'சூத்திரன் படிக்கக் கூடாது" என்ற பார்ப்பன மனுதர்மம் சட்டமாக இருந்தது. இன்றோ, 'காசில்லையேல் கல்வியில்லை" என்ற பன்னாட்டுக் கம்பெனிகளின் சட்டம் பறைசாற்றுகிறது. ஏழைகளுக்குக் கல்வி மறுக்கப்பட்டு அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. அரசு சலுகைகளுடன் தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசலாய்ப் பெருகுகின்றன. ஏழை மாணவர்களின் இலவசப் பேருந்துப் பயணம் கூட கேள்விக்குறியாகி வருகிறது. எனவே, மாணவர்களின் இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கல்வி உரிமைக்காகவும், நாடே பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக மாற்றப்படுவதற்கு எதிராகப் போராட வேண்டிய அவசியத்தை விளக்கியும் பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரியும், வட்டப் பேருந்தில் (இ1, இ2) மாணவர் பஸ் பாஸ் செல்லும் என அறிவிக்கக் கோரியும், பிப்ரவரி 2ஆம் தேதியன்று புத்தூர் நால்ரோடு அருகே பு.மா.இ.மு. வீச்சான பிரச்சாரத்துடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பள்ளி கல்லூரி மாணவர்களும் பெற்றோரும் திரளாகப் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம், திருச்சி நகர மாணவர்கள் பெற்றோரின் குரலை எதிரொலிப்பதாய் அமைந்தது. பெரும்பாலான நாளேடுகள் இந்த ஆர்ப்பாட்டச் செய்தியை வெளியிட்டன.

 

அதைத் தொடர்ந்து, அரசு போக்குவரத்துக் கழக (திருச்சி) பொதுமேலாளர், வட்டப் பேருந்துகளில் (இ1, இ2) மாணவர்களை ஏற்றிச் செல்ல அனுமதித்துள்ளதாகவும், இதர கோரிக்கைகளைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகவும் பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டுள்ளார். பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டமும், அதில் கிடைத்த முதற்கட்ட வெற்றியும் திருச்சி நகர மாணவர்கள் பெற்றோர்களிடம் பு.மா.இ.மு. மீது புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

 

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திருச்சி.