03_2005.jpg'சைக்கிள் பாகங்களின் பெயர்கள் எல்லாம் தமிழா?" 'ஹாண்டில் பார், செயின், ரிம், டயர், டியூப்" என்பதெல்லாம் தமிழா? அது தமிழா? இது தமிழா? என்று எகிறுகிறார் ஜெயா. தமிழ் மொழியைத் துச்சமாக மதிக்கும் அவரின் திமிரைப் புதிதாக விளக்க வேண்டியதில்லை. ஆனால், இராமதாசின் தமிழ்ப் பற்றோ மலிவான நகைச்சுவை நாடகம் போல நடக்கிறது.

 

இப்போது தைலாபுரத்தில் (ராமதாசின் பண்ணை வீட்டில்) சுத்தத் தமிழ் வாசனைதான் வீசுகிறது. 'எனது வீட்டில் ராஜா என்று ஒரு பையன் இருக்கிறான். அவனை இப்போது 'ராசா" என்றுதான் அழைக்கிறேன். அதுபோல்

 சோப்பு எடுத்து வா என்று சொல்ல மாட்டேன், 'வழலைக்கட்டி" எடுத்துவா என்றுதான் சொல்வேன்" என்று கூறி தன்னுடைய கூட்டத்தையே பெரும் சிரிப்பலையில் ஆழ்த்தி ரசிக்கிறார், இராமதாசு. தன்னுடைய மகள் கவிதாவை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைத்து, பட்டம் சூட்டிவிட்டு மேடையில் தமிழுக்கு நடிக்கிறார். மேடையில் மகள் ஆங்கில வார்த்தைகளைக் கலந்து பேசும் போது குறுக்கிட்டு ஒவ்வொரு வார்த்தைக்கும் 100 ரூபாய் அபராதம் விதித்து, அரங்கில் பலத்த கரவொலி சிரிப்பொலியை ஏற்படுத்துகிறார்.

 

'செம்மொழிச் செம்மல்" தொல். திருமாவளவனின் தூய தமிழ் நாட்டமும், ராமதாசுக்கு சளைத்ததல்ல!

 

திடீரென ஒருநாள், சென்னை உதயம் திரையரங்கில் 50 பேருடன் வரிசையில் நின்றார், திருமாவளவன். 'தமிழ் பெயர் சூட்டும் படங்களை ஆதரிப்பதற்காகவும், தமிழ் படத் தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் தமிழ் பெயர் சூட்டும் படங்களைப் பார்க்க தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்துள்ளோம்'' என்றார். முதல் கட்டமாக, 'உள்ளக் கடத்தல்" என்ற தூய தமிழ் தலைப்புள்ள படத்தை பார்த்தார். ஆக, 'ஒரிஜினல்" தமிழ் சினிமாவை விஞ்சும் அளவுக்கு இப்போது 'தமிழ் பாதுகாப்பு இயக்கம்" தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது.

 

சென்ற ஆண்டு, ஆகஸ்டு மாதம் தம் கட்சியின் 'தாய்மண்" ஏட்டில் இராமதாசைப் பற்றி திருமாவளவன் சொன்னது இது: 'இராமதாசு தமிழகத்தின் நலனுக்காக நடிகர்களை எதிர்ப்பதாகத் தெரியவில்லை. தனது மகன் (அன்புமணி) கொல்லைப்புறமாக பதவியைப் பிடித்ததாக நடிகர் விஜயகாந்த் சுட்டிக் காட்டியதால்தான் அவர் கொதித்தெழுந்தார். ரஜினிகாந்த், விஜயகாந்த் இருவரையும் எதிர்த்த இராமதாசு உடனேயே சமரமாகிவிட்டதாக அறிக்கை விடுகிறார். அப்படியென்றால், அவர்கள் இருவரும் ராமதாசின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்களா என்ன? இதன் பின்னணியை தமிழ் மக்கள் உணர வேண்டும். ஆக இராமதாசின் எதிர்ப்பு சுயநலமானது!" என்று நீண்ட பிரசங்கம் நடத்தியவர், இப்போது இராமதாசின் பின்னால் பூனையைப் போல பதுங்கிக் கொள்வதை சுகமாக உணர்கிறார். ஆனால், வசனம் மட்டும் வீரபாண்டிய கட்டபொம்மன், விருமாண்டி, திருப்பாச்சி அளவுக்கு பட்டையை கிளப்புகிறார்.

 

ஆனால், இந்த எரிமலைகள் பக்கத்திலேயே 'கேமிரா"வை வைத்து, 'பி.எப்." படப்பிடிப்பு நடத்தியதை கதாநாயகன் எஸ்.ஜே. சூர்யா தினத்தந்தி நிருபரிடம் எந்த பதற்றமும் இல்லாமல் கூறியிருப்பதை கேளுங்கள்.

 

""நேற்று நான் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்த போது (15.2.05) விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தை சேர்ந்த சிலர் கும்பலாக வந்து, படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று கூறினார்கள். இதுபற்றி(!?) தங்கள் தலைவர் திருமாவளவனுடன் பேசும்படி கூறினார்கள்.

 

நான் அவருக்கு போன் செய்தேன். லைன் கிடைக்கவில்லை. (லைன் கிடைத்தால், கிளைமாக்ஸ் தெரிந்து விடுமே!) அதைத் தொடர்ந்து அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மாலையில் வருவதாகக் கூறிச் சென்று விட்டார்கள்'' என்றார்.

 

என்ன அதிசயம் இது! எரிமலைகள் "ஐஸ்கிரீம்'களாக உருகிச் சென்றுள்ளதே! "பி.எப்.' கதை உண்மையிலேயே அவர்களை "பெஸ்ட் பிரண்ட்'டுகளாக்கி விட்டதா?