பயங்கரவாதத்தை அரசு பயங்கரவாதத்தால் ஒழித்துவிட முடியாது. ஈராக்கின் ஃபலூஜா மற்றும் பிற நகரங்களின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி அப்பாவிக் குழந்தைகளைக் கொன்றொழித்த அமெரிக்க மேலாதிக்கவாதிகள்தான், உலகின் மிகக் கொடிய பயங்கரவாதிகள்!" இப்படி வெளிப்படையாக அமெரிக்க ஏகாதிபத்திய வாசலிலேயே இடியென முழங்குகிறார், வெனிசுலா நாட்டின் அதிபரான ஹியூகோ சாவெஸ்.
நம் நாட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளைப் போல் வெனிசுலா அதிபர் அமெரிக்காவுக்கு எதிராக வீரவசனம் பேசி வெற்றுச் சவடால் அடிக்கவில்லை. அமெரிக்கா திணித்துவரும் தனியார்மய தாராளமயக் கொள்கைகளை எதிர்த்து நிற்பதோடு, மனிதநேயமிக்க மாற்றுப் பொருளாதாரத் திட்டத்தையும் முன் வைத்து தனது நாட்டில் அவர் செயல்படுத்த விழைகிறார். அமெரிக்காவின் அரசியல் பொருளாதாரத் தலையீடுகளுக்கு எதிராகப் போராடுவதுதான் ஏழை நாடுகளின் தற்காப்புக்கான ஒரேவழி என்று கூறும் அவர், வெனிசுலாவின் தேசிய வருமானத்தில் பெரும்பகுதியை ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவம், உணவு, கல்வி முதலான சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கி ஏழைகளின் அன்புக்குரிய தலைவராக உயர்ந்து நிற்கிறார்.
கடந்த டிசம்பர் 6ஆம் நாளன்று வெனிசுலா தலைநகர் காரகாசில் 'மானிட இனத்தைக் காப்பதற்கான அனைத்துலக அறிவுஜீவிகள் கலைஞர்களின் மன்றம்'' என்ற அமைப்பின் சார்பில் நடந்த விழாவில், புதிதாகப் பள்ளியில் சேர்ந்து எழுதப் படிக்கத் தேறியவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்குமான பாராட்டு விழாவும் இடம் பெற்றது. வெனிசுலாவில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வயது வரம்பு கிடையாது. 50லிருந்து 70 வயதுடைய பெரியவர்களும் தாய்மார்களும் இப்பள்ளிகளில் கற்றுத் தேறி, கைகளில் புத்தகங்களை ஏந்தி, 'எங்களுக்கு இப்போது எழுதப் படிக்கத் தெரியும்" என்று அந்த விழாவில் மகிழ்ச்சியோடு முழங்கினார்கள். அவர்கள் முன் எழுந்து நின்ற அதிபர் சாவெஸ், 'ஏகாதிபத்தியம் இவர்களது கல்விக் கண்ணைக் குத்தி குருடாக்கித் தற்குறிகளாக்கியது; இன்று மக்களாட்சி, அவர்களது அறிவுக் கண்ணைத் திறந்துள்ளதைக் காணுங்கள்!" என்று முழங்கிய போது, பெருந்திரளாக இவ்விழாவில் பங்கேற்ற உழைக்கும் மக்கள் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
முதியோர் கல்வித் திட்டம் மட்டுமல்ல் குழந்தைகளுக்கு இருவேளை உணவுடன் கல்வி அளிக்கும் திட்டமும் அவரது ஆட்சியில் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாவெஸ் பதவிக்கு வருவதற்கு முன்பு வரை வெனிசுலாவில் ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. அரசு மருத்துவமனைகளில் மருந்துகளே இருக்காது. தனியார் மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற முடியும். அங்கு நிலவும் கட்டணக் கொள்ளையில் சிக்கிச் சாவதைவிட நோயினாலேயே செத்து விடலாம் என்று ஏழைகள் வேதனையுடன் குறிப்பிடுமளவுக்கு நிலைமை இருந்தது. இப்போது அதிபர் சாவெஸ் பதவிக்கு வந்தபின், தனது நாட்டிலிருந்து கியூபாவுக்கு பெட்ரோலிய எண்ணெயை ஏற்றுமதி செய்து, அதற்கீடாக கியூபா நாட்டு மருத்துவர்களை தனது நாட்டில் பணி செய்ய அழைத்துள்ளார். இவர்கள் வெனிசுலாவின் சேரிப் பகுதிகளில் மருத்துவசேவை செய்கின்றனர். மருந்துகளும் சிகிச்சையும் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
இதுதவிர துப்புரவு, குடிநீர் வழங்குதல் ஆகிய பணிகளை அரசாங்கம் முறையாகச் செய்து வருகிறது. சேரிப் பகுதிகளிலுள்ள குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் விளையாட்டு உடற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அனைத்து ஏழைகளுக்கும் மானிய விலையில் உணவுப் பொருட்களை அரசே முறையாக விநியோகித்து வருகிறது. தனியார் எஸ்டேட்டுகளின் பயிரிடப்படாத நிலங்களையும், புறம்போக்கு நிலங்களையும் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்கு சாவெஸ் அரசு பகிர்ந்தளித்து வருகிறது. இது தவிர, விவசாயக் கூட்டுறவுகளையும் உருவாக்கி உதவுகிறது. இதற்குமுன் உணவுப் பொருட்களை பெருமளவில் இறக்குமதி செய்துவந்த அந்நாடு, இப்போது சுயசார்பான விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
இந்நடவடிக்கைகளும் மக்கள் நலத் திட்டங்களும் சாவெஸ் என்ற தனிமனிதனின் சிந்தனையில் உருவான மனிதநேயக் கொள்கைகளாக குறுக்கிச் சுருக்கிப் பார்க்க முடியாது. இவை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடிவரும் வெனிசுலா உழைக்கும் மக்களது உணர்வின் பிரதிபலிப்பு!
வெனிசுலா தென்னமெரிக்கக் கண்டத்தின் தலைவாசலில் உள்ள நாடு. உலகின் பெட்ரோலிய ஏற்றுமதியில் 3வது இடத்தை வகிக்கும் நாடு. நாளொன்றுக்கு 26 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியாகும் நாடு. ஆனாலும் ஏழைகளும் பஞ்சைப் பராரிகளும் நிறைந்த நாடு. மொத்த மக்கட் தொகையில் 80 சதவீத மக்கள் வறுமையிலும் பட்டினியிலும் பரிதவிக்க, 20 சதவீத தரகு முதலாளித்துவ மேட்டுக் குடியினரும் அதிகார வர்க்கத்தினரும் மட்டுமே ஆடம்பர சுகபோகங்களில் மூழ்கித் திளைத்தனர்.
1980களில் உலக வங்கியும் ஐ.எம்.எஃப்உம் திணித்த கட்டுமான சீர்திருத்தங்கள், அந்நாட்டை திவாலாக்கியது. அதன்பின்னர் தீவிரப்படுத்தப்பட்ட தனியார்மய தாராளமயக் கொள்கைகள் அந்நாட்டையும் மக்களையும் சூறையாடி ஓட்டாண்டிகளாக்கியது. வேலையிழந்து வாழ்விழந்த மக்கள் நாடோடிகளாக நகரங்களை நோக்கி ஓடினர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் வறுமையும் தீவிரமாகியது. விலைவாசி விண்ணை முட்டியது. மானியங்கள் வெட்டப்பட்டு ரேஷன் கடைகள் மூடப்பட்டன. கல்வி, மருத்துவம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்குப் புறக்கணிக்கப்பட்டு தனியார்மயமாக்கப்பட்டன.
வாழ்விழந்த மக்கள் இத்தனியார்மய தாராளமயத் தாக்குதல்களுக்கு எதிராக தன்னெழுச்சியாகத் திரண்டு போராடினர். கடந்த பத்தாண்டுகளில் ஏதுமற்ற மக்கள் நகர்ப்புற சூப்பர் மார்க்கெட்டுகளைச் சூறையாடுவது பலமுறை நடந்தது. துறைமுகங்களில் இறக்குமதியாகும் உணவுப் பொருட்களைப் பட்டினிப் பட்டாளம் பறித்தெடுப்பதும் தொடர்ந்தது. அன்றைய அமெரிக்கக் கைக்கூலி அதிபர் கார்லோசின் அரசு, நாடெங்கும் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி, இராணுவத்தை ஏவி இப்போராட்டங்களை ஒடுக்கி, பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்றொழித்து பாசிச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது.
இந்தச் சூழ்நிலையில், அதிபர் தேர்தல் வந்தது. அமெரிக்கக் கைக்கூலியான பாசிச அதிபர் கார்லோசை எதிர்த்து, வெனிசுலா இராணுவத்தில் படை அதிகாரியாகப் பணியாற்றிய ஹியூகோ சாவெஸ் போட்டியிட்டார். ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தனியார்மய தாராளமயக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வந்த சூழலில், சாவெஸ் இவற்றை எதிர்த்து மக்கள் நலக் கொள்கைகளை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தார். ஓட்டுக் கட்சிகளின் ஊழல் ஒடுக்குமுறை ஆட்சிகளால் வெறுப்புற்றிருந்த உழைக்கும் மக்கள், தமது உணர்வுகளைப் பிரதிபலித்த சாவெசை ஆதரித்து 2000ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் அவருக்கு ஏறத்தாழ 56சதவீகிதம் வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.
சாவெஸ், அதிபர் பதவிக்கு வந்ததும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பை (ழுPநுஊ) வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். ஈராக் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்த்ததோடு அப்போதைய ஈராக் அதிபரான சதாம் உசேனையும் சந்தித்துப் பேசினார். ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பு போரை வெளிப்படையாக எதிர்த்தார். அமெரிக்க எதிர்ப்பாளரான கியூபா அதிபர் காஸ்ட்ரோவை தனது ஆசான் என்று போற்றி ஆதரித்த அவர், பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள கியூபாவுக்குச் சலுகை விலையில் பெட்ரோலிய எண்ணெய் கொடுத்து உதவினார்.
இது மட்டுமின்றி, எண்ணெய் வருவாயை விழுங்கி ஏப்பம் விட்டு வந்த ஏகாதிபத்திய தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் தமது வருவாயில் குறிப்பிட்ட ஒரு பங்கை மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்குக் கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று சட்டமியற்றினார். ஏகாதிபத்திய எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவுக்குச் செலுத்த வேண்டிய 'ராயல்டி" கட்டணத்தையும் தீர்வைகளையும் உயர்த்தினார். அன்னிய கூட்டுப் பங்கு நிறுவனங்களின் முதலீடுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதித்தார். நிலச்சீர்திருத்தத்தை உடனடியாகச் செயல்படுத்த ஆணையிட்டார்.
இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டு ஆத்திரமடைந்த பன்னாட்டு எண்ணெய் ஏகபோக நிறுவனங்களும் தரகுப் பெருமுதலாளிகளும் நிலப்பிரபுக்களும் அதிபர் சாவெசைப் பதவியிலிருந்து தூக்கியெறிய கூட்டுச் சதியில் இறங்கி கலகங்களைத் தூண்டி விட்டனர். பத்திரிகை முதலாளிகள் சாவெசுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். ஊழல் அதிகாரிகள் அதிபரின் உத்தரவுகளைச் செயல்படுத்த மறுத்து முட்டுக் கட்டை போட்டனர். 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதியன்று அமெரிக்காவின் ஆசியுடன் திடீர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டு, அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டு சாவெஸ் சிறையிடப்பட்டார். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. திட்டமிட்டுக் கொடுத்த இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு, 'ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை" என்ற அமெரிக்க அரசின் துணை அமைப்பு கோடிக்கணக்கான டாலர்களை வாரியிறைத்தது. அமெரிக்கக் கைக்கூலியான எண்ணெய் நிறுவன முதலாளி புதிய அதிபராக்கப்பட்டார்.
ஆனால், ஏகாதிபத்தியவாதிகளின் மகிழ்ச்சியும் ஆரவாரமும் இருநாட்கள் கூட நீடிக்கவில்லை. அதிபர் சாவெசை ஆதரித்து நகர்ப்பற ஏழைகளும் கிராமப்புற விவசாயிகளும் நாடெங்கும் போராடத் தொடங்கினர். சாவெசை ஆதரித்து இராணுவமே பிளவுபட்டது. வெனிசுலாவில் பெருகிய அதிருப்தி கலகத்தாலும், அமெரிக்காவையும் அதன் எடுபிடி கொலம்பியாவையும் தவிர, இதர தென்னமெரிக்கக் கண்டத்து நாடுகள் எவையும் இச்சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரிக்காததாலும் அம்பலப்பட்டுத் தனிமைப்பட்டு போன நிலையில், இத்திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு 28 மணி நேரத்தில் படுதோல்வியடைந்தது. சாவெஸ் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றார். அமெரிக்க வல்லரசின் முகத்தில் கரிபூசப்பட்டது.
சாவெஸ் ஏற்கனவே அதிபராக இருந்தபோது உருவாக்கப்பட்ட புதிய அரசியல் சட்டப்படி, மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், திருப்பியழைக்க கருத்துக் கணிப்பு தேர்தல் நடத்தவும் உரிமையளிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புத் தேர்தலில் ஏறத்தாழ 60சதவீகிதம வாக்குகள் பெற்று அதிபர் சாவெஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த மாநில ஆளுநர் தேர்லில் சாவெஸ் ஆதரவாளர்கள் ஆகப்பெரும்பான்மையான மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இது தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு கிடைத்த தேர்தல் வெற்றி மட்டுமல்ல் தாராளமயத் தாக்குதலுக்கும் அமெரிக்க மேலாதிக்கத்துக்கும் எதிராகப் போராடிவரும் வெனிசுலா உழைக்கும் மக்களுக்குக் கிடைத்த வெற்றி.
இந்த வெற்றிகளையும் போராட்டங்களையும் 'பொலிவாரிய புரட்சிகர இயக்கம்" என்று சாவெஸ் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். (சைமன் பொலிவார் என்பவர் தென்னமெரிக்கக் கண்டத்து புரட்சியின் நாயகனாகப் போற்றப்படுகிறார். அவரது பெயராலே இப்போராட்டப் பாதையை பொலிவாரியப் புரட்சி என்று குறிப்பிடுகின்றனர்). மக்களை, தாங்களாகவே அமைப்பாக்கிக் கொண்டு போராடுமாறு சாவெஸ் அறை கூவி அழைக்கிறார். தென்னமெரிக்கக் கண்டத்தை அடிமையாக்கி மேலாதிக்கம் செய்ய முயற்சிக்கும் அமெரிக்காவின் சுதந்திர வர்த்தகப் பிராந்தியத் திட்டத்துக்கு மாற்றாக, பொலிவாரிய மாற்றுப் பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து மத்திய அமெரிக்க தென்னமெரிக்க நாடுகளை ஐக்கியப்படுமாறு கோருகிறார். அமெரிக்கா தலைமையிலான உலகமயமாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அலுவல் வலைப் பின்னல் மையத்தை வெனிசுலா தலைநகரில் நிறுவவும் தீர்மானித்துள்ளார். 'எமது புரட்சியானது, அமைதி வழியிலானது, அதேசமயம் மக்கள் படையைக் கொண்டு ஆயுத ரீதியிலானது" என்று விளக்குகிறார் அதிபர் சாவெஸ்.
அதிபர் சாவெஸ், தனது வரம்புக்குட்பட்ட அதிகாரத்தைக் கொண்டு சட்டங்கள் விதிகள் கட்டுப்பாடுகளை மேலிருந்து நிறைவேற்றுவதன் மூலம் அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்த்து நின்று வெனிசுலாவின் சுயாதிபத்திய உரிமையைத் தற்காத்துக் கொண்டு, மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறார். அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பு, சுயசார்பு, மக்களின் நல்வாழ்வு, ஒடுக்கப்பட்ட நாடுகள் மக்களுடன் ஒருமைப்பாடு முதலான உயர்ந்த நோக்கங்களைக் கொண்டிருந்தாலும் இதைச் சாதிக்க அவர் மேற்கொண்டுள்ள பாதை சட்டவாததாராளவாத முதலாளித்துவ ஜனநாயக ஆட்சிப் பாதையேயாகும்.
வர்க்கச் சுரண்டலும் ஆதிக்கமும் நிலவும் அதேநேரத்தில், உழைக்கும் மக்களின் அதிருப்திக்கும் போராட்டங்களுக்கும் வடிகாலாக, மக்கள் நல்வாழ்வுக்கான சில திட்டங்களைப் பெயரளவுக்குச் செயல்படுத்துவதை இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலங்களில் ஏகாதிபத்திய உலகம் பின்பற்றியது. இதனை 'சேமநல அரசு" (றநடகயசந ளவயவந) என்று ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதிகள் குறிப்பிடுகின்றனர். தனியார்மய தாராளமயத் தாக்குதலைத் தொடர்ந்து இத்தகைய பெயரளவுக்கான கவர்ச்சிவாதத் திட்டங்களும் கொள்கைகளும் கை கழுவப்பட்டு விட்டன. அதிபர் சாவெஸ், முந்தைய 'சேமநல அரசுகள்" பின்பற்றிய கொள்கைகளையே தனது வரம்புக்குட்பட்ட அதிகாரத்தைக் கொண்டு இப்போது செயல்படுத்தி வருகிறார். இருப்பினும், அதிபர் சாவெஸ் இதை 'பொலிவாரிய புரட்சி" என்று குறிப்பிடுவதை வைத்து, வெனிசுலாவில் புரட்சி முன்னேறுவதாகவும், புரட்சிகரமான அரசு நிறுவப்பட்டுள்ளது போலவும் இங்குள்ள இடது வலது போலி கம்யூனிஸ்டுகளும் குட்டி முதலாளித்துவ அறிவுத்துறையினரும் சிலாகித்து எழுதி வருகின்றனர். அதன் மூலம் அமைதியான சமாதான வழிகளிலேயே அதிகாரத்தைக் கைப்பற்றி விட முடியும்; புரட்சியைச் சாதித்துவிட முடியும் என்கிற பிரமைகளை வளர்த்து, கேடுகெட்ட தமது ஓட்டுச் சீட்டுப் பாதைக்கு முட்டுக் கொடுக்க முயற்சிக்கின்றனர்.
அதிபர் சாவெஸ் மேற்கொண்டுள்ள இச்சீர்திருத்தவாதப் பாதையானது, ஏற்கெனவே தென்னமெரிக்க நாடான சிலியில் கால் நூற்றாண்டுக்கு முன்னரே படுதோல்வியடைந்து இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட பாதையாகும். சிலி நாட்டில் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த போலி சோசலிஸ்டுகள் மற்றும் போலி கம்யூனிஸ்டுகள், தரகுப் பெருமுதலாளிகளுக்கு எதிராகச் சட்டங்களைப் போட்டு, மக்கள் நல்வாழ்வுக்கான திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்த முற்பட்டதும், அமெரிக்கா அந்நாட்டில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி போலி கம்யூனிஸ்டுகளைச் சுட்டுக் கொன்று நரவேட்டையாடி தனது விசுவாச இராணுவ சர்வாதிகாரியைப் பதவியில் அமர்த்தியது. சிலி நாட்டிலாவது ஒரு போலி கம்யூனிச கட்சி இருந்தது. ஆனால் வெனிசுலாவில், அதிபர் சாவெசுக்கு அப்படியொரு கட்சி கூட இல்லை. அவரால் உருவாக்கப்பட்டுள்ள 'ஐந்தாவது குடியரசு இயக்கம்" என்ற கட்சியானது ஆரம்ப நிலையில்தான் உள்ளது. அதுவும் சந்தர்ப்பவாத சட்டவாத சக்திகளைக் கொண்டதாகவே உள்ளது. மறுபுறம், அவர் முன்னாளில் இராணுவ அதிகாரியாக இருந்ததால், இராணுவத்தில் ஒரு பெரும்பகுதி அவருக்கு ஆதரவாக உள்ளது.
அதிபர் சாவெஸ் தேர்தல் மூலம் பதவிக்கு வந்துள்ளாரே தவிர, அந்நாட்டின் ஆளும் வர்க்கங்களான தரகுப் பெருமுதலாளிகளும், நிலப்பிரபுக்களும் வீழ்த்தப்படவில்லை. அவர்களின் சொத்துக்கள் நட்டஈடின்றி பறிமுதல் செய்யப்படவில்லை. இந்த ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் வகையில் பாசிச முறையில் கட்டியமைக்கப்பட்டுள்ள அரசு எந்திரம் அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை, சிறைச்சாலை அடங்கிய ஒட்டுமொத்த அரசு எந்திரம் தூக்கியெறியப்பட்டு புரட்சிகர வர்க்கங்கள் தமது அதிகாரத்தை நிறுவவுமில்லை.
மக்கள் போராட்டங்களால் தற்காலிகமாக ஆளும் வர்க்கங்கள் பின்வாங்கிக் கொண்டுள்ளதே தவிர, அதன் பொருளாதார பலமும் ஆதிக்கமும் வீழ்த்தப்படவில்லை. தேசிய வருமானத்தில் பெரும் பகுதியை ஈட்டித் தரும் அரசு பெட்ரோலியத் துறையை, நிர்வகித்துக் கட்டுப்படுத்தம் அதிகாரம் கொண்டதாகவே மேட்டுக்குடி கும்பல் இன்னும் நீடிக்கிறது. நாடாளுமன்றம், நீதித்துறை, மாநில அரசுகளின் நிர்வாகம் முதலானவற்றில் எதிர்த்தரப்பு பலமிக்கதாகவே உள்ளது. அண்மையில் சாவெசை ஆதரித்த நீதிபதி ஆளும் வர்க்கக் கூலிப் படையினரால் குண்டு வீசிக் கொல்லப்பட்டுள்ளார். பத்திரிகை ஊடகத் துறையில் சாவெஸ் எதிர்ப்பு தரகு முதலாளிகளே ஏகபோகமாக உள்ளனர். வானொலி மட்டுமே சாவெஸ் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பெரும்பான்மை உயர் இராணுவ அதிகாரிகளும், அதிகார வர்க்கமும் சாவெஸ் எதிர்ப்பாளர்களாகவே உள்ளனர். 'எனது கொள்கைகளைச் செயல்படுத்த முடியாமல் பெரும் முட்டுக் கட்டையாக இருப்பது அதிகார வர்க்கம்தான்" என்று சாவெஸ் வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார். அமைப்பாக்கப்படாத கூலித் தொழிலாளர்கள் சாவெஸ் அரசை ஆதரிக்கும் அதேசமயம், அமைப்பு ரீதியிலான மேட்டுக்குடி தொழிலாளர்கள் அரசியல் உணர்வின்றி, ஆளும் வர்க்கங்களுக்கு விலைபோகுமளவுக்கு பிழைப்புவாதத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். ஆளும் வர்க்கச் சதிகளுக்கு இரையாகி, ஈராண்டுகளுக்கு முன்பு சாவெஸ் அரசுக்கு எதிராக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கிராமப்புற விவசாயிகளும் நகர்ப்புற ஏழைகளும் சாவெசுக்கு ஆதரவாக உள்ள போதிலும், அவர்கள் புரட்சிகர வர்க்கப் போராட்ட அமைப்புகளில் திரட்டப்படவில்லை.
இத்தகைய சூழ்நிலையில்தான் அதிபர் சாவெஸ் வரம்புக்குட்பட்ட தனது அதிகாரத்தைக் கொண்டு சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது சீர்திருத்தங்கள் வெற்றி பெறவும், அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் வெனிசுலா உழைக்கும் மக்கள் புரட்சிகர அமைப்புகளில் திரண்டு கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் புரட்சிகரப் போராட்டங்களில் ஈடுபட வேண்டியது, உடனடி அவசியமாக உள்ளது.
மக்கள் நலன், சுயசார்பு, அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பு எனும் உயர்ந்த நோக்கங்களைக் கொண்டுள்ள அதிபர் சாவெசின் வரம்புக்குட்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை வரவேற்று ஆதரிப்பதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகப்பூர்வமான சாவெசின் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்க மேற்கொண்டு வரும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்தி முறியடிப்பதும் உலகெங்குமுள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அதேசமயம், அதிபர் சாவெசின் மக்கள் நலக் கொள்கைகளேயே மாபெரும் புரட்சியாகச் சித்தரித்து மாய்மாலம் செய்துவரும் போலி கம்யூனிஸ்டுகளின் பித்தலாட்டத்தை முறியடிப்பது, அதைவிட முக்கியமான கடமையாகும்.
மனோகரன்