Language Selection

புதிய ஜனநாயகம் 2005

03_2005.jpgசுனாமி பேரலை ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஏழை நாடுகளைத் தாக்கிய பொழுது, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 1600 ஏக்கர் பரப்பளவு கொண்ட தனது பண்ணையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். உலகையே உலுக்கிப் போட்ட இந்தத் துயரமான சம்பவத்தைக் கேள்விப்பட்ட பிறகும்கூட, புஷ் தனது ஓய்வை ரத்து செய்யவில்லை. மூன்று நாட்கள் கழித்துதான் இரங்கல் செய்தியொன்றை வாசித்துவிட்டு, ஒன்றரை கோடி அமெரிக்க டாலரை (ஏறத்தாழ 75 கோடி ரூபாய்) நிவாரண நிதியாகக் கொடுப்பதாக அறிவித்தார், புஷ்.

 

அமெரிக்க அரசின் இந்த உதவியை, ஐ.நா. சபை கஞ்சத்தனமானது என விமர்சித்தது. ""ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்க சிப்பாய்களின் காலைச் சாப்பாட்டுக்கே தினந்தோறும் 175 கோடி ரூபாய் செலவு செய்யும் அமெரிக்கா, நிவாரணத்திற்குப் பிச்சைப் போடுகிறதா?'' என உலகெங்கிலும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன.

 

உழைக்கும் மக்கள் தார்மீகக் கோபத்தோடு ஜார்ஜ் புஷ்ஷின் 'கல் மனதை"த் திட்டித் தீர்த்தபொழுது, முதலாளித்துவ பத்திரிகைகள் புஷ்ஷசுக்குப் புரியும் மொழியில் அறிவுரை சொன்னார்கள். 'ஐயா, புஷ் அவர்களே, சுனாமி பேரலை தென்கிழக்கு ஆசியாவின் சுற்றுலாத் தொழிலைத் தாக்கி அழித்து விட்டது. சுற்றுலா இல்லையென்றால் ஹோட்டல் தொழில் படுத்துவிடும்; சுற்றுலா இல்லையென்றால் அமெரிக்க விமான கம்பெனிகளின் இலாபம் படுத்துவிடும். எனவே, நீங்கள் இதை நிவாரண உதவியாகப் பார்க்காதீர்கள்; வியாபாரமாகப் பாருங்கள்" என நிவாரணத்தின் நோக்கத்தைப் பச்சையாகப் புட்டு வைத்தார்கள். இந்தப் புத்திமதிக்குப் பின்னர்தான் புஷ்ஷûக்கு விசயம் புரிந்ததோ என்னவோ? நிவாரண உதவித் தொகையை 75 கோடி ரூபாயில் இருந்து 175 கோடி ரூபாயாக்கி, அதற்குப் பிறகு 1750 கோடி ரூபாய் நிவாரண உதவி அளிப்பதாக அறிவித்தார்.

 

ஈராக் போரைத் தொடர்ந்து நடத்துவதற்காக இதுநாள் வரை அமெரிக்கா 7,40,000 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறது; பிரிட்டனின் ஈராக் போர் செலவு 57,500 கோடி ரூபாய். ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உடனடி நிவாரணம் அளிப்பதற்கு ஐ.நா. சபை ஏகாதிபத்திய நாடுகளிடம் கேட்ட உதவியோ வெறும் 4,885 கோடி ரூபாய் தான்.

 

ஈராக் போர் செலவோடு, அமெரிக்கா அறிவித்துள்ள உதவித் தொகையை ஒப்பிட்டால், அது வெறும் சுண்டைக்காய்தான். அமெரிக்காவிடம் குவிந்திருக்கும் பணம், வானத்தில் இருந்து குண்டுகளை வீசி மக்களைக் கொல்வதற்குத்தான் பயன்படுமேயொழிய, மக்களை வாழ வைக்கப் பயன்படாது எனப் புரிய வைத்ததற்காக வள்ளல் புஷ்ஷசுக்கு நாம் நன்றி சொல்லலாம்!

 

இந்தோனேஷியாவும், தாய்லாந்தும் அமெரிக்காவின் ஹவாய் தீவில் செயல்பட்டு வரும் பசிபிக் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையத்தில் உறுப்பு நாடுகளாக உள்ளன. எனினும், இந்த நாடுகளை டிச. 26 அன்று சுனாமி தாக்கிய சமயத்தில், அத்தாக்குதல் பற்றி அமெரிக்காவோ, சுனாமி எச்சரிக்கை மையமோ முன்கூட்டியே தகவல் கொடுத்து எச்சரிக்கத் தவறி விட்டன. இலட்சக்கணக்கான மக்கள் சாவதைக் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்த அமெரிக்கா, இப்பொழுது 'நிவாரணப் பணிகளை"ச் செய்ய இலங்கையிலும், இந்தோனேஷியாவிலும், தாய்லாந்திலும் நுழைந்திருக்கிறது.

 

'அமெரிக்காவின் நோக்கங்களுக்குப் பலன் அளிக்காத நாடுகளுக்கு உதவுவதற்கு, அமெரிக்கா தர்ம சத்திரம் நடத்தவில்லை" என அமெரிக்க அதிகாரிகள் சுனாமி நிவாரண உதவி பற்றிய கேள்விகளுக்குப் பச்சையாகப் பதில் கூறியிருக்கிறார்கள். அப்படியென்றால், இந்த நாடுகளில் எல்லாம் பிணத்தைத் தூக்கிப் போடும் வேலையை மட்டும் செய்துவிட்டுப் போவதற்காக அமெரிக்கா வரவில்லை என அடித்துச் சொல்லலாம்!

 

'இனி இந்த நாடுகள் பழைய மாதிரி வாழ முடியாது. நவீனமயத்திற்குள் புகுந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தை, இந்த சுனாமி இவர்களுக்கு ஏற்படுத்தி விட்டது" என்கிறார், தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பங்குச் சந்தை தரகர். பிணங்களின் மீதும், இடிபாடுகளின் மீதும் ஏறி நின்று கொண்டு, ""ரியல் எஸ்டேட் தரகர்கள், கட்டுமான நிறுவனங்கள், இரும்பு, சிமெண்ட், ஆலை முதலாளிகளுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது'' என இலாபக் கணக்குப் போடுகிறார்கள், பொருளாதார நிபுணர்கள்.

 

இலங்கைக்கும், இந்தோனேஷியாவிற்கும், தாய்லாந்திற்கும் நிவாரண உதவி வழங்குவதில் அக்கறை காட்டிய அமெரிக்கா, சுனாமியால் பாதிக்கப்பட்ட சோமாலியாவைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ""அந்த நாடுகளைப் போல எங்கள் நாடு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது; அதனால் உதவி கிடைக்கவில்லை'' என்கிறார் சோமாலியா நாட்டின் அதிபர். ஆதாயம் இல்லாமல் அமெரிக்கா ஆற்றில் இறங்காது என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

 

இந்த வர்த்தக நோக்கத்தோடு மட்டும் அமெரிக்காவின் ஆசை அடங்கிவிடவில்லை. இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவது; அட்லாண்டிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஐரோப்பிய நாடுகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள ""நேடோ'' அமைப்பு போன்று, இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் ஒரு இராணுவக் கூட்டணியை அமைப்பது என்ற திட்டத்தோடு அமெரிக்கா காய்களை நகர்த்தியது.

 

சுனாமி தாக்குதல் போன்று இயற்கைப் பேரிடர் ஏற்படும்பொழுது, ஐ.நா. சபையின் தலைமையில்தான் நிவாரணப் பணிகள் நடைபெறும். ஆனால், அமெரிக்காவோ, ஐ.நா. மன்றத்தை ஓரங்கட்டிவிட்டு, நிவாரணப் பணிகளைத் தனது தலைமையில் நடத்தத் தீவிரமாக முயன்றது.

 

ஐ.நா.விற்கு மாற்றாக, தனது தலைமையில் நான்கு உறுப்பு நாடுகளைக் கொண்ட குழுவொன்றைத் தனியாக அமைத்தது அமெரிக்கா. இந்தக் குழுவில் சுனாமி தாக்குதலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தோனேஷியாவும், தாய்லாந்தும் சேர்க்கப்படவில்லை. மாறாக, அமெரிக்காவின் இராணுவக் கூட்டாளிகளான ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டன. நான்காவது உறுப்பு நாடாக இந்தியா இணைக்கப்பட்டதற்குக் கூட, சுனாமி தாக்குதல் காரணமல்ல. இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுவரும் இராணுவ உறவுகள்தான் காரணம்.

 

'நேடோ"வுக்கு இணையான வெள்ளோட்டமாக இந்தக் குழு உருவாக்கப்பட்டது. ஆனாலும், நிவாரணப் பணிகளில் ஐ.நா.வை ஓரங்கட்டும் விதமாக இந்தக் குழு அமைக்கப்பட்டதற்கு உலகெங்கிலும் எழுந்த கண்டனங்களையடுத்து, அமெரிக்கா இந்தக் குழுவை உடனடியாகக் கலைத்துவிட்டது. எனினும், ஐ.நா.வின் ஒப்புதலுடன், அமெரிக்க இராணுவத்தை இந்தியப் பெருங்கடல் பகுதியில் இறக்கிவிடுவதில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டது.

 

13,000 இராணுவச் சிப்பாய்கள், 21 போர்க் கப்பல்கள், 75 போர் விமானங்களை அனுப்பி, நிவாரணப் பணிகளை முழுவதும் இராணுவமயமாக்கியது, அமெரிக்கா. ஈராக் போரின் பொழுது அமெரிக்க கப்பற் படையை வழிநடத்திய ரஸ்டி பிளாக்மேன் என்ற தளபதியிடம்தான் "நிவாரணப் பணி'களை நடத்தும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது. ஈராக்கில் ஏற்பட்ட இரத்தக் கறைகளை இந்தியப் பெருங்கடலில் கழுவப் பார்க்கிறார்கள் போலும்!

 

இந்த நிவாரணப் படையின் ஒரு பகுதி இலங்கையின் காலி, திருகோணமலை, ஹம்பண்டோடா ஆகிய துறைமுக நகரங்களிலும்; இந்தோனேஷியாவின் எண்ணெய் வளம் நிறைந்த அகே தீவிலும் முகாமிட்டுள்ளது. 'எங்களின் பணி முடிந்தவுடனேயே வெளியேறி விடுவோம்" என அமெரிக்க அரசு கூறினாலும், 'நிவாரணப் பணி" எப்பொழுது முடியும் என்பது புஷ்ஷீக்கு மட்டுமே தெரிந்த மர்மமாக உள்ளது.

 

'இலங்கையின் வான்பரப்பைச் சுதந்திரமாகப் பயன்படுத்தும் ஒப்பந்தமொன்றை ஏற்கெனவே அமெரிக்கா இலங்கையுடன் செய்து கொண்டுள்ளது. மேலும், இலங்கையின் மிகவும் உயரமான மலையான பீதுறுதாலகாலாவில் கண்காணிப்புக் கோபுரம் ஒன்றை அமைக்கவும் அமெரிக்கா முயன்று வருகிறது. இப்படிபட்ட நிலையில் தான் 'நிவாரணப் பணிகளுக்காக" அமெரிக்கா இராணுவத்தை அனுப்பும்படி சந்திரிகா அரசே புஷ்ஷைக் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

 

மேற்காசியாவில் அமைந்துள்ள பாரசீக வளைகுடாவில் இருந்து தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள மலாக்கா வளைகுடா வரை தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பாக சுனாமி பேரழிவைப் பயன்படுத்த பார்க்கிறது, அமெரிக்கா. குறிப்பாக, மலாக்கா வளைகுடா வழியாகச் செல்லும் அமெரிக்க எண்ணெய்க் கப்பல்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டம் அமெரிக்காவின் நிவாரண உதவியின் பின்னால் மறைந்திருக்கிறது.

 

மலாக்கா வளைகுடாவுக்கு அருகே அமைந்துள்ள அகே தீவில் முசுலீம் மத அடிப்படைவாத அமைப்புகள் நடத்திவரும் 'பிரிவினைவாத"ப் போராட்டங்களைக் காட்டி, அத்தீவுப் பகுதிகளில் அந்நியர்கள் நுழைவதற்குக் கூட இந்தோனேஷிய அரசு தடை விதித்திருந்தது. ஆனால், அமெரிக்காவோ, நிவாரண உதவி வேண்டும் என்றால் இத்தடையை நீக்க வேண்டும் எனப் பேரம் நடத்தி, தனது கப்பற்படையையே அகே தீவில் நிறுத்திவிட்டது. மேலும், இந்தோனேஷியாவுடன் இராணுவ உறவு கொள்வதில்லை என கிளிண்டன் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட முடிவையும் ரத்து செய்து விட்டது, புஷ் நிர்வாகம். மலாக்கா வளைகுடா பாதுகாப்புக்காக பிராந்திய ஒப்பந்தமொன்று போட்டுக் கொள்ளும் அமெரிக்காவின் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்து வந்த இந்தோனேஷியாவையும், மலேசியாவையும் சம்மதிக்க வைக்கவும் சுனாமி பேரழிவு அமெரிக்காவுக்குப் பயன்படுகிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேறும் வரை இலங்கையையும், இந்தோனேஷியாவையும் அதிகாரபூர்வமற்ற, தற்காலிக இராணுவத் தளங்களாக அமெரிக்கா பயன்படுத்தக் கூடும்.

 

அமெரிக்காவின் இந்த இராணுவ நோக்கங்களுக்கும், நிவாரணத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? பத்தாண்டுகளுக்கு முன்பு பஞ்ச நிவாரண உதவி என்ற பெயரில் சோமாலியா நாட்டிற்குள் நுழைந்த அமெரிக்கப் படையை, அந்நாட்டு மக்களே துரத்தியடித்தனர். காரணம், ரொட்டித் துண்டுகளின் பின்னே மறைந்திருந்த அதனின் ஆதிக்கக் கனவு. பஞ்சம், பூகம்பம், வெள்ளம், வறட்சி இவை மக்களுக்குத்தான் துயரங்கள்; ஆனால் ஏகாதிபத்திய நாடுகளுக்கோ தங்களின் ஆதிக்கத்தை விரிவாக்குவதற்கான வாய்ப்புகள்!

 

ரஹீம்