Language Selection

புதிய ஜனநாயகம் 2005

04_2005.jpgவிரக்தி வேதனை துயரம்; தற்கொலை! ஒருவரல்ல இருவரல்ல; 40க்கும் மேற்பட்டோர் வேலையிழந்து வாழ்விழந்து துயரம் தாளாமல் கடந்த ஈராண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த டிசம்பரில் திண்டிவனத்தைச் சேர்ந்த ஆறுமுகம் உடலெங்கும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கொண்டு மாண்டு போனார். நான்கு குழந்தைகளுடன் அவரது குடும்பம் பரிதவிக்கிறது. ஆறுமுகம் குடும்பத்தைப் போலவே 10இ000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவலத்தில் உழல்கின்றன.

 

 

கடந்த 2002ஆம் ஆண்டில் பாசிச ஜெயா அரசு 10இ000 சாலைப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்து வீதியில் வீசியெறிந்தது. மீண்டும் வேலை கேட்டு உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் மறியல் எனப் போராடி ஓய்ந்த தொழிலாளர்கள் உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார்கள்.

 

"சாலைப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்தது தவறு; அவர்களுக்கு 6 மாதச் சம்பளத்தைக் கொடுப்பதுடன் 3 மாதங்களுக்குள் மீண்டும் வேலை கொடுக்க வேண்டும்' என்று தீர்ப்பாயமும் உயர்நீதி மன்றமும் தீர்ப்பளித்தன. இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்துக்குச் சென்று "தடை' கேட்டது ஜெயா அரசு. அதைத் தள்ளுபடி செய்துவிட்டது உச்சநீதி மன்றம்.

 

ஆனாலும் சாலைப் பணியாளர்களுக்கு இன்றுவரை சம்பளம் கொடுக்கப்படவில்லை; வேலையும் கொடுக்கப்படவில்லை. வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளர் குடும்பங்கள் உருக்குலைந்து பட்டினியால் பரிதவிக்கின்றன. விரக்தியடைந்த தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்; பலர் மனநோயாளிகளாகி விட்டார்கள்.

 

கடந்த பிப்ரவரியில் தூத்துக்குடி மாவட்டம் நசரேத் அருகிலுள்ள எழுவரைமுக்கி கிராமத்தைச் சேர்ந்த வேலையிழந்த சாலைப் பணியாளரான ஆனந்த்ராஜ் பசியும் பட்டினியுமாக ஒருவார காலம் நடந்தே மதுரைக்கு வந்து வேலை தேடி அலைந்து விட்டு எம்.ஜி.ஆர். சிலை பீடத்தின் மீது இரவில் படுத்துறங்கியுள்ளார். நள்ளிரவில் வந்த போலீசார் அவரை அடிக்க கீழே விழுந்து கால் முறிந்து அலறிய அவரை தரதரவென இழுத்துச் சென்று வதைத்ததால் எலும்பு முறிவினால் அவரது கால் பெரிதும் சேதமாகி சீழ்பிடித்து சிகிச்சைக்குப் பின் மாவுக் கட்டோடு தவிக்கிறார்.

 

"ஐயோ பாவம்' என்று அனுதாபப்பட்டு ஒதுங்கிவிடக் கூடிய விவகாரங்களா இவை? இல்லை. இவையனைத்தும் ஜெயாவின் பாசிசத் திமிரை நிரூபித்துக் காட்டும் சாட்சியங்கள். நீதிமன்றத்தை அமவதித்த குற்றத்துக்காக பாசிச ஜெயாவுக்குத் தண்டனையில்லை. 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் சாவுக்குக் காரணமான கொலைக் குற்றவாளி பாசிச ஜெயாவுக்குத் தண்டனையில்லை. ஆனால் சாலைப் பணியாளர்கள் குடும்பத்தோடு கேள்விமுறையின்றித் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த அநீதிக்கும் அவமானத்துக்கும் பாசிசத்திமிருக்கும் நாம் பழி தீர்ப்பது எப்போது?