04_2005.jpgகடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தின் மக்களுடைய போக்குவரத்துக்கு இதயமாக இருந்த மணிமுத்தாறு பாலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பெய்த பெரும் மழையின் வெள்ளப் பெருக்கில் சிதைந்து தன்னுடைய 125 ஆண்டுகாலச் சேவையை முடித்துக் கொண்டது. அது முதல் இந்நகர மக்கள் போக்குவரத்துக்குப் படும் அவதி சொல்லி மாளாது!

 

"அவசரத்திற்கு' என்று இரு சக்கர வாகனங்களில்கூடச் செல்ல முடியாத மரப்பாலம் ஒன்றைக் கட்டிய ஆளும் கும்பல் "செலவு 7 லட்சம் ரூபாய்'

 என்று கணக்கு காட்டியது. நிரந்தர மாற்று தரைப்பாலம் வேண்டி நகரின் அனைத்துக் கட்சிகள் மற்றும் சங்கங்கள் ஒன்று சேர்ந்து "நகர் வளர்ச்சிக் குழு' என்ற அமைப்பின் கீழ் பாலத்தின் தெற்கு மேற்கு இரு பகுதிகளிலும் உண்ணாவிரதம் இருந்தனர். அரசு 4 மாதம் கழித்து பாதையின் இரு முனைகளிலும் ஆக்கிரமித்துள்ள ஆளுங்கட்சி தலைவர்களின் கட்டிடங்களுக்குத் தீங்கு நேராமல் பாம்புபோல் வளைந்து நெளிந்து தரைப்பாலம் ஒன்றைக் கட்டியது.

 

பயணம் செய்பவர்களின் உயிருக்கு எமனாக ""உயிர் குடிக்கும் தரைப்பாலமாக'' அது உருவாகியது. அதற்குக் காரணமான ""ஆக்கிரமிப்புகளை அகற்றி தரைப்பாலத்தை நேராக்கு'' என்ற கோரிக்கையின் கீழ் ""மனித உரிமை பாதுகாப்பு மையம்'' களத்தில் இறங்கியது. குமுறிக் கொண்டிருந்த மக்கள் இந்த அறைகூவலைப் பேரார்வத்துடன் வரவேற்று அணிதிரண்டனர். நகரின் அனைத்துக் கட்சிகளும் சங்கங்களும் இக்கோரிக்கையின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டு போராட்டக் குழு நிறுவப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி 21.2.05 அன்று கண்டன ஆர்ப்பாட்டமும் 25.2.05 அன்று விருத்தாசலம் நகரப் பேருந்து நிலைய வாயிலில் மறியலும் நடத்தப்பட்டது. அடுத்து 28.2.05 அன்று மக்களோடு இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் போராட்டத் திட்டத்தை அறிவித்து போராட்டக் குழு பிரச்சாரம் செய்தது. இதன் நடுவில் சமரசக் கூட்டம் என்ற பெயரில் கோட்டாச்சியர் சாலை ஆக்கிரமிப்பாளரான அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் வாசு. சுந்தரேசன் மற்றும் போராட்டத்திற்கு சம்பந்தமில்லாத பலரை அழைத்து ஆக்கிரமிப்பு நிலம் ""பட்டா நிலம்'' தான் என்று தன்னிலை விளக்கம் அளித்தார். கும்பலோடு "கோவிந்தா' போட்டு பிரச்சினையைக் கை கழுவ எத்தணித்த சமரசக் கூட்டத்தைத் தோலுரித்து வெளியேறியது போராட்டக் குழு. 28.2.05 அன்று ஆக்கிரமிப்பு அகற்றும் போராட்டத்தை உறுதி செய்து பகிரங்கமாக அறிவித்தது.

 

பீதியடைந்த அரசு நிர்வாகம் ஒருபுறம் போலீசு மூலம் மிரட்டல் கைது ஊர்வலம் மற்றும் கூட்டம் நடத்துவதற்குத் தடை என்று அடக்குமுறையை ஏவியது. மறுபுறம் அவசரமாக 27.2.05 அன்று நள்ளிரவில் அ.தி.மு.க. கட்சியினர் ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தின் சிறு பகுதியை மட்டும் இடித்து பாலத்தை நேராக்கும் முயற்சியில் இறங்கியது.

 

எனவே போராட்டக் குழு ஆக்கிரமிப்பு அகற்றும் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைக்க முடிவு செய்தது. இம்முதற்கட்ட வெற்றியைத் தொடர்ந்து ஆறு அம்சக் கோரிக்கை மனுவை வருவாய்துறை ஆணையரிடம் அளித்து உடனடியாக நிரந்தர தீர்வை உருவாக்கும்படி வலியுறுத்தியது.

 

தகவல்:
மனித உரிமை பாதுகாப்பு மையம் விருத்தாசலம்;
மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி
விருதை வட்டம்.