Language Selection

புதிய ஜனநாயகம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

05_2005.jpg"நீதிமன்ற அக்கிரமம்; ஏழைகள் மீதான போர்'' என்ற கட்டுரையானது, மண்ணின் மைந்தர்களை நகர்ப்புறங்களிலிருந்து பிடுங்கியெறிந்து நகருக்கு வெளியே துரத்தும் கொடுஞ்செயலை உணர்வோடு எடுத்துரைத்தது. ஏகாதிபத்தியங்களின் மேட்டுக்குடியினரின் அடியாளாக ஆட்சியாளர்கள் செயல்படுவதை உண்மை விவரங்களிலிருந்து கூறி, போராட அறைகூவுவதாக அமைந்துள்ளது.
இந்துமதி, திருச்சி.

 

போலி கம்யூனிஸ்டுகளான சி.பி.எம்இன் சித்தாந்தம், ஆளும் வர்க்க சித்தாந்தத்துடன் சங்கமித்து விட்டதை சி.பி.எம். முதலாளித்துவ கம்பெனியா? என்ற கட்டுரை எடுப்பாக உணர்த்தியது. மேடைக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு; பிழைப்புக்கு அந்நிய முதலீடுகளுக்கு வரவேற்பு என்று சந்தர்ப்பவாத சகதியில் புரளும் சி.பி.எம். கட்சியை அம்பலப்படுத்தி எளிய நடையில் கட்டுரை அமைந்திருப்பது சிறப்பு. ஜீவா, சென்னை.

 

மதுரையில் நீதிமன்ற உத்தரவுப்படி, சாலையோரமாக ஆக்கிரமிப்புக் கோயில்கள் அகற்றப்பட்டது பற்றி செய்தி ஊடகங்கள் பெரிதாக அழுது தீர்த்தன. ஆனால், பல ஆயிரம் உழைக்கும் மக்கள் வீடிழந்து வாழ்விழந்தது பற்றியும் உலக வங்கி உத்திரவுப்படி செயல்படும் அரசின் அடக்குமுறை பற்றியும் பு.ஜ. மட்டுமே எடுத்துரைத்தது. அரசியல் பலம்தான் மக்கள் பலத்தையும் ஆயுத பலத்தையும் தரும் என்ற எதிர்மறை படிப்பினையை உணர்த்துவதாக ஆந்திர புரட்சியாளர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை பற்றிய கட்டுரை உரிய தருணத்தில் வெளியாகியுள்ளது.
புரட்சித்தூயன், தருமபுரி.

 

ஏற்கெனவே செய்தி வெளிவந்துள்ள போதிலும், ""சக்கிலியனாப் பொறந்தா பீ திங்கணுமா?'' என்ற தலைப்பில் அச்சிறுவன் நேரில் பேசுவதுபோல அமைந்த கட்டுரை, எமது நெஞ்சைக் கொதிக்க வைத்தது. ஆளுங்கட்சியானாலும் எதிர்க்கட்சியானாலும் அடக்குமுறைக் கருவியான பயங்கரவாத போலீசுக்குப் போட்டி போட்டுக் கொண்டு சேவை செய்வதை தலையங்கக் கட்டுரை சிறப்பாக விளக்குகிறது. சிவகாசியில் உழைக்கும் மக்கள் மீதான "ஆக்கிரமிப்பு'ப் போரினால் வீடிழந்த மக்கள், அங்கு 26ஆவது வார்டு தேர்தலைப் புறக்கணிப்பதாக தட்டி கட்டி வைத்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இரா. கணேசன், சாத்தூர்.

 

மறுகாலனியாதிக்கக் கொள்கையானது பன்னாட்டு ஏகபோக முதலாளிகளையும் இந்தியத் தரகு முதலாளிகளையும் கொழுக்க வைப்பதோடு நின்று விடவில்லை; சி.பி.எம். கட்சித் தலைவர்களை கூட்டுறவு முதலாளிகளாக மாற்றி விட்டது. "மார்க்சிஸ்டுகள்' மறுகாலனியாக்கத்தை எதிர்க்காமல், அதன் இடிதாங்கியாகவே இருக்கப் போகிறார்கள் என்பதை பு.ஜ. கட்டுரை நிரூபித்துக் காட்டுகிறது.
கதிரவன், சென்னை.

 

கால்நடை வளர்ப்பிலும் கூட அன்னிய ஏகபோக நிறுவனங்கள் தலையீடு செய்வதையும், பெருமளவில் பால் பொருட்கள் இறக்குமதியாவதையும் பற்றிய கட்டுரையானது, மறுகாலனியாதிக்கம் நெருங்கிவிட்டதை அதிர்ச்சி தரும் உண்மைகளோடு உரைக்கிறது. மோடி விவகாரத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தைத் தருவதாக ""பயங்கரவாத மோடி'' கட்டுரை அமைந்தது. அநீதிமன்றங்களின் யோக்கியதையை மீண்டும் நிரூபித்துக் காட்டியதும் காங்கிரசுக்கு வால் பிடித்துச் செல்லும் போலி கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தியிருப்பதும் வாசகர்களிடம் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்றது.
வாசகர் வட்டம், திருச்சி.