Language Selection

புதிய ஜனநாயகம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

05_2005.jpgஎஸ்.பி. பட்டடினத்தில் பொது நிலத்தை ஆக்கிரமிக்க சதி செய்யும் ஆர்.எஸ்.எல்.ஐ எதிர்த்து நிற்கும் புரட்சிகர அமைப்புகள் மீது மதக் கலவரத்தைத் துண்டியதாகப் பொய் வழக்கு.

 

இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை நகரான தொண்டியை அடுத்து அமைந்துள்ள சிற்×ர்தான் எஸ்.பி.பட்டினம். தாழ்த்தப்பட்டோர், முசுலீம்கள், கிறித்தவர்கள், மேல்சாதி இந்துக்கள் எனப் பல்வேறு சமூக மக்களும் கலந்து வாழும் பகுதி அது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு எஸ்.பி.பட்டினத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் பின்புறமுள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை சோழகன் பேட்டையைச் சேர்ந்த எம்.முனியசாமி, எ.கணேசன் ஆசாரி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து கொண்டு ஆக்கிரமித்துக் கொள்ள முயன்றனர். எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாதி, மத பேதமின்றி ஒன்றாகத் திரண்டு, அந்தக் கும்பலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு முயற்சியை முளையிலேயே கிள்ளியெறிந்தனர்.

 

ஆனாலும், அக்கும்பல் ""கோயில் பாதுகாப்பு'' என்ற பெயரில் இந்து மதவெறியைத் தூண்டி, சோழகன் பேட்டையைச் சுற்றியுள்ள கிராம மக்களை ""இந்து'' மத அடிப்படையில் திரட்டிக் கொண்டு நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்ளச் சதி செய்தது.

அப்பகுதியில் இயங்கி வரும் ம.க.இ.க. தோழர் ஜான் பிரிட்டோ, ""இந்து மதவெறியர்களின் சுயநலத் திட்டத்திற்குப் பலியாக வேண்டாம்; மதரீதியாகப் பிளவுபடாமல், உழைக்கும் மக்களாய் ஒன்று திரள்வோம்'' எனப் பிரச்சாரம் செய்து, இந்து மதவெறியர்களின் சதித் திட்டத்தை அம்பலப்படுத்தினார். உடனே, இந்து மதவெறி பிடித்த சுயநலக் கும்பல், தனது சதி திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள போலீசின் உதவியை நாடியது. அக்கும்பல், தோழர் ஜான் பிரிட்டோ மீது கொடுத்த புகார் மீது விசாரணை கூட நடத்தாமல், எஸ்.பி.பட்டினம் துணை ஆய்வாளர் சண்முகம், தோழர் ஜான் பிரிட்டோவை போலீசு நிலையத்திற்கு இழுத்துப் போய் மிருகத்தனமாகத் தாக்கியதோடு, ""ஊரைவிட்டு ஓடிவிடு'' என மிரட்டினார்.

 

ஆர்.எஸ்.எஸ்.காரன் போல நடந்து கொண்ட துணை ஆய்வாளர் சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இராமநாதபுரம் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரிடம் ம.க.இ.க. வி.வி.மு. சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், ""அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் இந்து மதவெறியர்களை விரட்டியடிப்போம்'' என்ற துண்டு பிரசுரத்தையும் பகுதி மக்கள் மத்தியில் விநியோகித்து, ஆர்.எஸ்.எஸ். போலீசு கூட்டணியை தோழர்கள் அம்பலப்படுத்தினர்.

 

அம்பலப்பட்டு போன ஆத்திரத்தில் அறிவிழந்த போலீசு, தனது அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்தியது. ம.க.இ.க. வி.வி.மு. சார்பில் வெளியிடப்பட்ட பிரசுரத்தில், மதக் கலவரத்தைத் தூண்டும்படியான வாசகங்கள் இருப்பதாக ஒரு பொய்ப் புகாரை இந்து மதவெறிக் கும்பலின் உதவியோடு தயாரித்த துணை ஆய்வாளர் சண்முகம், எஸ்.பி.பட்டினம், நம்புதாளை பகுதியைச் சேர்ந்த ஐந்து தோழர்களைப் பிணையில் வெளிவராத வழக்குகளின் கீழ் கைது செய்தார்.

 

அப்பிரசுரத்தை ஒருமுறை படித்துப் பார்த்தாலே, அதில் மதக் கலவரத்தைத் தூண்டும்படியான ஒரு வார்த்தைக் கூட கிடையாது என்பதையும்; இந்து மதவெறிக் கும்பலின் சதித்திட்டத்தையும், அதற்குத் துணைபோகும் போலீசையும்தான் அப்பிரசுரம் அம்பலப்படுத்தியிருக்கிறது என்பதையும் எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தவர்கள் கூடப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், மகாகனம் பொருந்திய உள்ளூர் நீதிபதியோ கருப்பு அங்கிக்குப் பதில் காவி அங்கியை அணிந்து கொண்டிருக்கிறார் போலும். பிரசுரம் வெளியான மறுநாளே 8.4.05 அன்று கைது செய்யப்பட்ட தோழர்களுக்கு, இச்செய்தி அச்சேறும் நாள்வரை பிணை வழங்க நீதிமன்றம் மறுத்து வருகிறது.

 

எஸ்.பி.பட்டினம் போலீசின் பழிவாங்கும் நடவடிக்கை இதோடு முடிந்து விடவில்லை. மதுரையில் எஸ்.எஸ்.காலனி பகுதியில் அமைந்துள்ள உதயம் அச்சகம் மீதும் போலீசு பாய்ந்தது.

 

அந்தப் பிரசுரம் மதுரை உதயம் அச்சகத்தில்தான் அச்சடிக்கப்பட்டதென்றும், அந்த உண்மையைக் கைது செய்யப்பட்ட தோழர் சாதிக் ஒப்புக் கொண்டு விட்டார் என்றும் ஒரு பொய்யான வாக்குமூலத்தைத் தயாரித்துக் கொண்டு, தொண்டி போலீசு நிலைய ஆய்வாளர் ராஜா தலைமையில் ஒரு பெரும் போலீசு பட்டாளம், 8.4.05 அன்று உதயம் அச்சகத்தில் சட்டவிரோத சோதனை வேட்டையை நடத்தியது.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளையில் இயங்கி வரும் தோழர் லயோனல் அந்தோணிராஜ்தான் இப்பிரசுரத்தைத் தயாரித்து, தனது உதயம் அச்சகத்தில் அச்சடித்துக் கொடுத்ததாகப் பொய் குற்றச்சாட்டை போலீசார் சுமத்தினர். அச்சகத்தில் அந்தோணிராஜ் இல்லை எனத் தெரிந்ததும், அவரது மனைவியிடம், ""இப்பிரசுரத்தால் தொண்டியில் மிகப் பெரிய மதக் கலவரம் ஏற்பட்டு, கொலைவரை போய்விட்டது'' எனப் புளுகிப் பீதியூட்டினர்.

 

அச்சகத்தின் உரிமத்தை மிரட்டி வாங்கிப் பார்த்து, அச்சகத்தின் உரிமையாளர் அந்தோணிராஜின் மனைவி லில்லி அம்மணிதான் எனத் தெரிந்து கொண்ட போலீசார், ""உன் புருசனோடு உன்னையும் கைது செய்வோம்'' என அவரை மிரட்டினர். அச்சகத்துக்கு வருவோரைக் காட்டி, ""இவன்தான் உன் புருசனா?'' எனக் கொச்சையாகக் கேட்டு அவமானப்படுத்தினர்;

 

அன்று காலை தொடங்கி இரவு வரை, லில்லி அம்மணியை இருக்கையை விட்டுக்கூட எழுந்திருக்க விடாமல் மிரட்டியும் அச்சுறுத்தியும் வந்த போலீசார், இரவு 8 மணி அளவில் லில்லி அம்மணியைக் கைது செய்யப் போவதாகக் கூறினார்கள். போலீசின் விசாரணையாலும் உடல்நலக் குறைவாலும் ஏற்கெனவே சோர்ந்து போயிருந்த அவர், போலீசின் கைது மிரட்டலால் அதிர்ச்சியடைந்து மயக்கமடைந்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை, அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் தூக்கிக் கொண்டு போய் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

மறுநாள் அத்தனியார் மருத்துவமனைக்கு வந்த ஆய்வாளர் ராஜா, லில்லி அம்மணியைக் கைது செய்யும் நோக்கத்தோடு, அவரை உடனே விடுவிக்குமாறு மருத்துவர்களை மிரட்டினார். இம்மிரட்டலுக்கு அம்மருத்துவர்கள் மசியாது போகவே, மதுரை நீதிமன்ற நடுவர் 1 அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து, கைது செய்து கொண்டு போக முயன்றார். ஆனால், லில்லி அம்மணியின் நிலையை நேரில் பார்த்த அந்நீதிபதி 15.04.05 வரை, அவரை மருத்துவமனையிலேயே வைத்திருந்து சிகிச்சையளிக்க அனுமதியளித்தார். அதன்பின் திருவாடனை நீதிமன்றம், மருத்துவர்கள் அளித்த சான்றிதழின் அடிப்படையில் லில்லி அம்மணிக்குப் பிணை வழங்கி உத்திரவிட்டது.

 

உதயம் அச்சகத்தை மீண்டும் சோதனையிட, நீதிமன்ற உத்திரவோடு 15.04.05 அன்று அச்சகத்திற்கு தனது படை பட்டாளத்தோடு ஆய்வாளர் ராஜா வந்தார். தோழர் லயோனல் அந்தோணிராஜுக்கு ஆதரவாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களும், புதிய ஜனநாயகத்தின் மதுரை பகுதி நிருபர் வீடியோ கேமிராவோடும் நிற்பதை பார்த்து அரண்டு போன அவர், ""சோதனையை ஒளிப்பதிவு செய்ய விடமாட்டேன்'' என அதிகாரம் கொப்பளிக்க கூறினார். ""ஒளிப்பதிவு செய்வது எங்கள் உரிமை; முடிந்தால் தடுத்துப் பாருங்கள்'' என வழக்குரைஞர்கள் எதிர்த்து நின்றவுடன், அதிரடிப் படையை அழைத்து வருவதாக மிரட்டிவிட்டுச் சென்றார்.

 

பிறகு உள்ளூர் போலீசை அழைத்து வந்த ஆய்வாளர் ராஜா, சோதனையை ஒளிப்பதிவு செய்ய சம்மதித்தார். இதன்பிறகுதான் அவரை அச்சகத்துக்குள் நுழைய மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் அனுமதித்தனர். இரண்டு மணி நேரம் சோதனை நடத்திய போலீசு பட்டாளம், வெறுங்கையோடு திரும்பிப் போகக் கூடாது என்பதற்காகச் சில பிரசுரங்களை அள்ளிக் கொண்டு போனது. சோதனை ஒளிப்பதிவு செய்யப்பட்டதால், போலீசு கும்பலால் அச்சகத்திற்குள் ""எதையும்'' வைக்கவும் முடியவில்லை.

 

தோழர் அந்தோணிராஜையும், அவரது மனைவி லில்லி அம்மணியையும் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பகுதி மக்களிடம் பீதியூட்டி, தனிமைப்படுத்த போலீசு எடுத்துக் கொண்ட முயற்சிகள் படுதோல்வியில் முடிந்தன. போலீசு சோதனைக்கு அத்தாட்சி கையெழுத்திட அப்பகுதி மக்களில் ஒருவர் கூட முன் வரவில்லை. உள்ளூர் போலீசார்தான் இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை தாஜா செய்து கையெழுத்திட வைத்தனர்.

 

""இந்து'' என்றால் அதற்குத் திருடன் என்ற பொருளும் உண்டு என தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒருமுறை சுட்டிக் காட்டினார். உடனே, இந்துமதவெறி அமைப்புகள் அனைத்தும் அவர் மீது எகிறிப் பாய்ந்தன. ஆனால், இப்பொழுது இவர்கள் எஸ்.பி.பட்டிணத்தில் என்ன செய்கிறார்கள்? உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் மீறி, பொது நிலத்தை இந்து மதவெறி கொண்ட சுயநல கும்பல் திருடிக் கொள்ளத் துடிக்கிறது. அதை எதிர்த்து உறுதியோடு நிற்கிறார்கள் என்பதற்காகவே, போலீசின் துணையோடு புரட்சிகர அமைப்புகள் மீது அடக்குமுறை ஏவிவிடப்படுகிறது.

 

மேலும், இராமநாதபுரம் மாவட்டம் கணிசமாக முசுலீம்கள் வாழும் பகுதியாகும். எனவே, எப்படியாவது இப்பகுதியில் இந்து மதவெறிக் கலவரத்தைத் தூண்டிவிட்டு நடத்தி, அதன் மூலம் காலூன்றத் திட்டம் போடுகிறது, ஆர்.எஸ்.எஸ். கும்பல். இதற்காகவே, தாழ்த்தப்பட்டவர்களைத் தனது அடியாட்களாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு அணிதிரட்டி வருகிறது. ம.க.இ.க., வி.வி.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகள் இப்பகுதியில் செயல்படும் வரை, ஆர்.எஸ்.எஸ்.இன் இந்த நயவஞ்சகக் கனவு பலிக்காது. அதனால்தான் இவ்வமைப்புகள் மீது பொய் வழக்கு போட்டு, இப்பகுதிவாழ் மக்களிடமிருந்து அப்புறப்படுத்த முயலுகிறது. இதற்காகவே, காரைக்குடி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. உறுப்பினர் ஹெச். ராஜாவின் உறவினராகக் கூறப்படும் போலீசு ஆய்வாளர் ராஜா தொண்டிக்கு மாற்றப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

 

கைது, பொய்வழக்கு, சித்திரவதைகளை எதிர்கொள்வது புரட்சியாளர்களுக்குப் புதியதல்ல. அவர்கள் இராமநாதபுரம் மாவட்ட மக்களின் துணையோடு, ஆர்.எஸ்.எஸ். தமிழக போலீசின் சதித்திட்டத்தை முறியடிக்கும் நாளும் வெகு தொலைவில் இல்லை!

 

தகவல்:
ம.க.இ.க. வி.வி.மு.,
இராமநாதபுரம் மாவட்டம்.