கொலைக் கலாச்சாரம் தான் எமது தேசியம். நாங்கள் நேபாள மாவோயிஸ்ட்டுகள் போல், ஜனநாயகம் பேச முடியாது. யார் இதற்கு எதிராக எதைச் சொன்னாலும், எப்படி விமர்சித்தாலும் நாம் சுயவிமர்சனம் செய்ய முடியாது. நாங்கள் இதற்கும் மரணதண்டனையைத் தான் வழங்குவோம். இதையே தான் வலதுசாரிய மக்கள் விரோத புலிகள், மீண்டும் சொல்ல முனைகின்றனர்.
அண்மையில் தமிழ் நாட்டு சட்டசபையில் கருணாநிதி புலிக்கு எதிரான ஒரு விமர்சனத்தில் நேபாளத்தை சுட்டிக்காட்டி புலிகளை விமர்சித்திருந்தார். இதை ஒட்டிய தொடர்ச்சியான விமர்சனத்தை அடுத்து, புலிகள் தமது சொந்த பாசிசத்தை நியாயப்படுத்த முனைகின்றனர்.
'நேபாள மாவோயிஸ்டுகளும் ஈழப் புலிகளும்" என்ற தலைப்பில், புலிகளின் பினாமி இணையத்தளமான புதினம், தமது பாசிசத்தை நியாயப்படுத்துகின்றது. நாங்கள் என்றும் மாறாத, மாற முடியாத கொலைவெறி பிடித்த பாசிட்டுகள் தான், என்கின்றனர்.
புலிகள் இதை எப்படி சொல்ல முனைகின்றனர்? பொதுவான விமர்சனத்தின் உள்ளடக்கத்தை திரிக்கின்றனர். அதை கண்டும் காணாமல் விட்டுவிடவும் முனைகின்றனர்.
கருணாநிதி சொல்ல முனைந்தது என்ன? சகோதாரப் படுகொலைகளை சுட்டிக் காட்டியதுடன், ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை புலிகள் முன்னனெடுக்கத் தவறியதையுமே, சுட்டிக் காட்டுகின்றார்.
இதனால் தான் இன்று புலிப் போராட்டம் குறுங்குழுவாதமாகியது. புலியின் நலனை உயர்த்தும், வெறும் புலித்தேசியமாகியது. இதனால் அது பாசிசத்தையும், மாபியாத்தனத்தையும், தனது சொந்த அரசியல் நடைமுறையாக்கியது.
மொத்தத்தில் தமிழ் மக்களின் தேசியத்தையே அது மறுத்தது. தமிழ் இனம் புலியுடன் சேர்ந்து தனது சொந்த மண்ணில் வாழமுடியாத வகையில், புலிகள் அதை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டனர். சுயமுள்ள எந்த மனிதர்களும், அங்கு வாழமுடியாத ஒரு சுடுகாடாக்கினர். அடிமைகள் மட்டும் தம்முடைய புலித்தேசியத்தில் தம்முடன் வாழ முடியும், என்பதை நடைமுறையில் உருவாக்கினர். மக்களை திறந்த வெளிச் சிறைக் கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
புலித்தேசியம் இதுவானதால், பல இலட்சம் தமிழ் மக்கள் நிரந்தரமாகவே மண்ணை விட்டு புலம் பெயர்ந்து விட்டனர். இதன் அடுத்த தலைமுறை, பாரம்பரியமான சந்ததிவழியான தமிழின சமூக அடிப்படையைக் கூட இழந்துவிட்டது. இப்படி ஒரு இனத்தை அழித்த பெருமை, புலியைச் சேரும்.
இப்படி இருக்க, இதை நியாயப்படுத்துகின்றனர். நாங்கள் இப்படித்தான் இருக்கமுடியும் என்கின்றனர்.
இதனடிப்படையில் அண்மையில் கருணாநிதி கூறியது என்ன? 'ஒரு குழுவாக அவர்கள் (ஈழத் தமிழர்கள்) இருந்து போராடியிருந்தால் நேபாளம் போல வெற்றி பெற்று இருப்பார்கள். வேறு பல நாடுகளைப் போன்று விடுதலை பெற்றிருப்பார்கள். போராளிக் குழுக்களுக்குள்ளேயே நடந்த மோதல் காரணமாகத்தான் இந்த போராட்டம் பலவீனமாகி விட்டது. இன்று அவர்களுக்குப் பரிந்துரை செய்து பேச வேண்டி இருக்கின்றது. இலங்கையில் விடுதலை பெற சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்று போராளிகளுக்கு வேண்டுகோள் விடும் நிலைமை ஏற்பட்டது" என்று கருணாநிதி கூறினார். புலி, தனது பினாமிகள் மூலம் புதின இணையத்தில் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. தாங்கள் வந்த பாசிசப் பாதையே சரியென்கின்றது. அதையே தொடர்வோம் என்கின்றது.
எப்படியும் சகோதரப் படுகொலைகள் அவசியம் என்பதையும், ஐக்கியம் அவசியமற்றது என்பதையும் புலியால் சொல்ல முடிவதில்லை. புலிகள் என்ன செய்கின்றனர் என்றால், கா கா என்று கதை சொல்லுகின்றனர். அவர்கள் சொல்லும் கதையைப் பாருங்கள் 'ஏறத்தாழ 60 ஆண்டு காலத்துக்கும் மேலாக பாரிய இன ஒடுக்குமுறைகளுக்குள்ளாகியிருந்த தமிழீழத் தேசிய இனத்தினது அவலத்தை தமிழீழ மக்களின் இராணுவ அமைப்பாகவும் தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகவும் இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணி வெற்றிகளே இந்த அனைத்துலக அரங்கத்துக்கு வெளிப்படுத்தி நிற்கின்றது. இன்று அவலத்தை துடைக்கும் சாதகமான ஒரு சூழலை நோக்கியும் பயணிக்கின்றது" இது தான் அவர்கள் வைத்த எதிர்த் தர்க்கம்.
சகோதாரப் படுகொலைகளுக்கும், ஐக்கியத்துக்கும் எதிராக, புலியிசம் உறுமுவது இப்படித்தான். 'ஏகப் பிரதிநிதிகளாகவும் இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகள்" என்கின்றனர். மொத்த தமிழ் மக்களையும் அது பிரதிநிதித்துவப்படுத்துகின்றதா? இல்லை. இதனால் எத்தனை ஆயிரம் படுகொலைகள். எந்தனை ஆயிரம் பிளவுகள். கொல்லவேண்டியவர் பட்டியலில் எத்தனை ஆயிரம் தமிழர்கள். இப்படி தமிழ் இனத்தை பிளந்தும், கொன்றும், கொல்ல அலையும் புலிகள், தம்மை 'ஏகப் பிரதிநிதிகளாக" கூறிக் கொள்வது தான் புலியின் அரசியல். இதை தேசியம் என்பது, புலியிசமாகும். உள்ளடகத்தில் பிரபானிசம். இப்படி விதைத்த, விதைக்கின்ற இந்த பிளவில் தான், எதிரி எதிர் நீச்சல் அடித்து அழிக்கின்றான்.
இப்படி பாசிசத்தை தமிழ் இனத்துக்கு எதிராக புலிகள் தமது சொந்த மடியில் கட்டிவைத்துக்கொண்டு கூறுகின்றனர். 'இலங்கைத் தீவின் நிலைமைகளும் நேபாளத்தின் நிலைமைகளும் எந்த வகையிலுமே தொடர்பற்ற முற்றிலும் முரணானவை" என்று. கருணநிதியும் மற்றவர்களும் கூறியதற்கு, புலிகள் அளித்த பதில் இது தான். சகோதரப் படுகொலையும், ஐக்கியத்தை மறுப்பதும் தமிழீழத்துக்கு அவசியம், ஆனால் நேபாளத்துக்கு அவசியமற்றது என்பது தான் புலியின் சொந்த அரசியல் வாதமாக உள்ளது. அதை திசைதிருப்ப, விடையத்தை திரிக்கின்றனர்.
அவர்களுக்கே உரிய பாணியில், கதை சொல்லுகின்றனர்.
'நேபாளம் - நேபாளத்தில் நடைபெற்று வந்த இந்து உயர் சாதிய மன்னர் ஆட்சியை மார்க்சிய-லெனினிய-மாவோயிச வழிப்பட்டதான ஆயுதப் போராட்டத்தின் ஊடே அகற்ற நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) போராடியது. மன்னர் ஆட்சியை புரட்சியின் மூலம் அது அகற்றிவிடாத நிலையிலும் அனைத்துலக அரசியல் நிலைமைகளுக்கு ஒத்திசைந்து அரசாங்க அதிகாரத்தை அக்கட்சி இப்போது கைப்பற்றியுள்ளது. இது சரியான பாதைதானா? என்று அனைத்துலக கொம்யூனிச அரங்கங்களும் இது கம்யூனிசத்தை அடைவதற்கு 'நேபாளம் பின்பற்றும்" ஒரு தந்திரோபாயமே (மார்க்சிய மொழியில் செயல் உத்தி) என்று நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியும் கூறி வருகின்றன. பல் தேசிய இனப் பண்பாடு கொண்ட நேபாளத்தில் ஆள்வது மன்னரா? மக்களா? என்ற நெடிய போராட்டத்தின் இறுதியில் 'மக்களாட்சி" மலர்கின்றது. 'நேபாளத்தின் புதிய அரசியல் சாசனம் நேபாளத்தை ஒரு குடியரசு நாடாக நிலை நிறுத்தும்" என்றுதான் நேபாள மாவோயிச கட்சியின் தலைவர் பிரசந்தா பிரகடனப்படுத்தியிருக்கின்றார்.
இலங்கை - இலங்கைத் தீவிலோ வரலாற்றுக் காலம் தொட்டே தமிழர்களுக்கு என்று தனியரசு இருந்து கோலோச்சியிருந்தனர். பிரித்தானியர்களும் போர்த்துக்கேயர்களும் ஒல்லாந்தர்களும் என அந்நியர் உள்நுழைந்த காலத்தே தமிழர்களின் இறைமை பெற்ற தனியரசுகள் அழித்தொழிக்கப்பட்டு தென்னிலங்கைச் சிங்களத்தோடு இணைந்ததொரு ஒரு நிர்வாக முறைமை உருவாக்கப்பட்டது. காலனியாதிக்க முடிவில் தமது இறைமை கொண்ட தமிழ்த் தனியரசை மீட்பதில் போதுமான முனைப்பை நமது முன்னைய தலைமுறை வெளிப்படுத்தாதால் பிரித்தானியர்கள் - சிங்களவர்களோடு இணைந்த நிர்வாக முறையை அப்படியே விட்டுவிட்டு வெளியேறிவிட்டனர். வெறிபிடித்த சிங்களமோ வரலாற்று வன்மத்தை வெளிப்படுத்தி இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனத்தை பூண்டோடு கருவறுக்க முனைந்தது. அகிம்சைப் போராட்டங்கள் பயனற்றுப் போய் தனிநாட்டுக் கோரிக்களுக்கு செவி சாய்ப்பார் ஏதுமில்லாமல் போய் ஆயுதமேந்த வேண்டிய நிலைக்கு தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டது. விரிவாதிக்க கோட்பாட்டுடன் உள்நுழைந்த வல்லாதிக்க இந்தியாவோ, 'தமிழீழ தாயக" கோட்பாட்டையே சிதைக்க முனைந்தது."
இந்த புலிக் கதை எப்படித் தான் சகோதரப் படுகொலையை நியாயப்படுத்த உதவும். தமிழ் பேசும் மக்களின் ஐக்கியத்தை சிதைக்க உதவும். ஒரு பிரதான முரண்பாடு எதுவாக இருந்தாலும், பெரும்பாலான மக்களின் பிரச்சனைகள் பொதுவானவை. ஒரு மனிதனுக்கு எதிராக, மற்றைய மனிதன் செயல்படுவதை ஒரு விடுதலைப் போராட்டம் எப்படி அங்கீகரிக்க முடியும். அதை எப்படி ஒரு விடுதலை இயக்கம், தனது கொள்கையாக கொள்ள முடியும்.
விடுதலைக்கான போராட்டம் எந்த வடிவில் எந்த கோசத்தில் இருந்தாலும், மக்கள் மேலான சகல ஒடுக்குமுறைகளையும் களைவது தான் விடுதலைப் போராட்டம். தமிழீழத்திலும் சரி, நேபாளத்திலும் சரி, இது எப்போதும் ஒன்றுதான். இதையே புலிகள் பிரதான முரண்பாட்டில் உள்ள வேறுபாட்டைக் காட்டி மறுக்கின்றனர். 'மக்களாட்சி" என்று, அதை தமக்கு சம்மந்தமில்லாத ஒன்றாகவே காட்டுகின்றனர்.
மக்களின் உரிமைகள், விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானது என்கின்றனர். அதனால் மக்களின் உரிமையை மறுத்து, அதைப் புலிப் போராட்டமாக்கினர். இதனால் சகோதரப் படுகொலை நடத்தினர், நடத்துகின்றனர். மனிதர்களின் ஐக்கியத்துக்கு எதிராக வேட்டு வைத்தனர், வைக்கின்றனர்.
இதைச் செய்வது தவறு என்றால், ஐயோ 'இலங்கைத் தீவின் நிலைமைகளும் நேபாளத்தின் நிலைமைகளும் எந்த வகையிலுமே தொடர்பற்ற முற்றிலும் முரணானவை" என்கின்றனர். இப்படிப் பாசிசம் காட்டும் வேறுபாடு நகைப்புக்குரியது. அவர்கள் பேசும் மொழி வேறு, நிறம் வேறு, வாழ்விடம் வேறு, ஆசியாவில் கல்வி அறிவு குறைந்தவர்கள், சாதியால் குறைந்தவர்களுக்காக அவர்கள் போராடுகின்றனர் என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.
நேபாள மாவோயிஸ்ட்டுகள் மன்னரையும், உயர் சாதி பார்ப்பனியத்தையும் மட்டும் ஒழிக்க போராடவில்லை. அவர்கள் சாதியை, ஆணாதிக்கத்தை, சுரண்டலை ஒழிக்க போராடுகின்றனர். இன வேறுபாடுகளையும் இன ஒடுக்குமுறைகளையும் ஒழிக்கப் போராடுகின்றனர். நிலபிரபுத்துவ தரகு முதலாளித்துவ அதிகாரமுறைக்கு எதிராக போராடுகின்றனர். ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடுகின்றனர். தேசிய முதலாளிகளுக்காக போராடுகின்றனர். இப்படிப் பல.
புலிகள் 25 வருடத்துக்கு முன்னால் விட்ட அறிக்கை, (இங்கே காண்க) இதைத்தான் தேசிய விடுதலைப்போராட்டம் என்றது. இப்படி இருக்க, இன்றைய புலிகளின் தேசியம் இதை மறுக்கின்றது. நேபாளத்தை வேறுபட்டது என்கின்றது. நேபாள மாவோயிஸ்ட்டுகள் போல் போராடுவதற்கு பதில், மனிதனுக்கு எதிரான ஒடுக்குமுறையை பாதுகாத்து நிற்கின்றனர். இதுவே படுகொலை அரசியலாக, பாசிசமாக மாறி நிற்கின்றது.
தமது பாசிச கொலைகார அரசியலை நியாயப்படுத்த 'நேபாளத்தில் நேபாள மாவோயிஸ்ட் அமைப்பு 1996 பெப்ரவரி 13-இல் தான் உதயமானது. திடீர் உதயமும் அல்ல அது. ஏலவே இருந்த நேபாள கொம்யூனிச இயக்கத்தினரை வலதுசாரிகள் என்றும் திரிபுவாதிகள் என்றும் விமர்சனம் செய்துவிட்டுத்தான் ஆயுதப் பாதைக்குத் திரும்பினார்கள். அங்கும் 10 ஆண்டுகாலமாக 'சகோதர கட்சிக"ளுடன் "கருத்து" மோதல்களை மாவோயிஸ்ட் கட்சி மேற்கொள்ளாமல் இல்லை." என்கின்றனர். இங்கு 'சகோதர கட்சிக"ளுடன் என்று திரிக்கின்றனர். மறுபக்கத்தில் அவர்கள் உங்களைப் போல், படுகொலை செய்யவில்லையே. ஐக்கியத்தை சிதைக்கவில்லை. அனைத்து கட்சியின் பின் இருந்த மக்களை, அரசியல் ரீதியாக வென்று எடுத்தனர். துரோகியை அம்பலப்படுத்தி, மக்களை துரோகிகளுக்கு எதிராக அணி திரட்டினர். மக்களின் விடுதலை தான், அவர்கள் முன் முதன்மையான ஒன்றாக இருந்தது. மக்களை விழிப்புற வைத்து, அவர்களை அணி திரட்டினர். இதற்கு முற்றிலும் முரணானதே புலியின் அரசியல்.
புலியின் இந்த படுகொலை அரசியலை நியாயப்படுத்த கூறுவதைப் பாருங்கள். 'ஈழத்திலும் இந்திய றோ தலையிடாத வரை - இந்தியப் பேரரசு தனது வல்லாதிக்க விரிவாதிக்க கனவை நடைமுறைப்படுத்த முனையாத வரை எத்தனையோ குழுக்கள் சுதந்திரமாக நடமாடிய வரலாறும் - புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் ஒரு கட்டத்தில் ஐக்கியமாக நிற்க முயன்ற வரலாறும் இந்த மண்ணிலும் நிகழாமல் இல்லை" என்கின்றனர். தமது பாசித்துக்கு காரணம் றோ என்கின்றனர். மக்களுக்காக போராடுவதை, எப்படித்தான் றோ தடுக்க முடியும்! மக்களுக்கு எதிராக புலியை வழிநடத்தியது றோவா?
றோவைப்பற்றி ஒரு தலைப்பட்சமாக பேசும் நீங்கள், தமிழ் மக்களுக்கு பலவற்றை மூடிமறைக்க முனைகின்றீர்கள். நேபாளத்திலும் தான் றோ மாவோயிஸ்டுகளுக்கு எதிராக செயல்பட்டது. அங்கு சிஐஏ முதல் சகல உளவு அமைப்புகளும் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இயங்கினர், இயங்குகின்றனர்.
அப்படியிருக்க புலிப்பாசிசத்தின் சகோதாரப் படுகொலைகளையும், ஐக்கியத்துக்கு எதிரான செயலையும், இது எப்படி நியாயப்படுத்த உதவும். அவர்கள் அதைத் தூண்டினால், அதை செய்வதா புலியிசம். அதை முறியடிப்பது தான் மக்கள் அரசியல்.
'இலங்கையில் உள்ள தமிழ் குழுக்களிடையே பிளவை ஏற்படுத்தியமைக்கும் அதேபோல் இந்திய மத்திய மற்றும் இந்திய மாநில அரசுகளிடையே பிணக்கை உருவாக்கியதற்கும் இந்திய றோ தான் காரணம்" என்று கருணாநிதி சொன்னதாக கூறும் நீங்கள், இதற்கு எப்படி எடுபடமுடியும். அவர்கள் உருவாக்கியது என்பது ஒருபுறம், செய்தது நீங்களல்லவா. றோ என்பது இதை செய்வதற்காக இயங்குகின்ற மக்கள் விரோத அமைப்பு வடிவம். அது அப்படித் தான் செய்யும். இது கூட தெரியாமல், றோவைச் சொல்லி புலிப் பாசிசத்தை நியாயப்படுத்துவது எப்படி சரியாகும்! றோவின் சதி போல் தான், நாங்களும் இயங்குவோம் என்பது, என்ன தான் இதில் தர்க்க நியாயம் உண்டு?
'..புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் ஒரு கட்டத்தில் ஐக்கியமாக நிற்க முயன்ற வரலாறும் இந்த மண்ணிலும் நிகழாமல் இல்லை.." இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்கமாயில்லை. இது தவிர்க்க முடியாமல் நீடித்த ஒரு காலகட்டத்தின் கதை. சகோதரப் படுகொலையை 1983க்கு முன்னமே புலிகள் தொடங்கி வைக்க, புளாட்டும் பதிலளித்தது. இங்கு எங்கே றோ வந்தது. இதற்கு அப்பால், றோவுக்கு எதிரான எத்தனை சிறிய குழுக்கள், முழுப் படுகொலைகள் மூலம் புலிகளால் அழிக்கப்பட்டனர். எத்தனை ஆயிரம் தனிநபர்களை புலிகள் கொன்றனர். மாற்று இயக்கத்தில் இருந்த அடிமட்ட உறுப்பினர்கள், வேட்டையாடப்பட்ட விதம் தேசியத்துக்கும் விடுதலைக்கும் முற்றிலும் எதிரானது.
தமிழ் மக்கள் எப்படிப்பட்ட நிலையில் புலிகளுடன் வாழ்கின்றனர். தந்தைக்குரிய பரிவும், தாய்க்குரிய கருணையையும் பெற்ற ஒரு தலைமையின் கீழா வாழ்கின்றனர். இப்படியா புலிகள் மக்களை அணுகுகின்றனர். இல்லை. உரிமைகள் இழந்த அடிமைகளாக, வாழ்விழந்த நடைப் பிணங்களாக, வாய்கள் கட்டப்பட்டு ஊமைகளாக, பிரமை பிடித்த பொம்மைகளாக உலவுகின்றனர்.
புலிகள் தம்மை நியாயப்படுத்த வைக்கின்ற எந்த தர்க்கமும், பாசிசத்தை நியாயப்படுத்த முடியாதவை. மக்களுக்கு எதிராக இருந்து கொண்டு, புலியிசத்தை நியாயப்படுத்த முடியாது. ஒரு நாளும் முடியாது.
பி.இரயாகரன்
18.05.2008