Language Selection

புதிய ஜனநாயகம் 2005

05_2005.jpgஏகாதிபத்திய நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கும் சூறையாடலுக்கும் கதவை அகலத் திறந்துவிட்டுள்ள ஆட்சியாளர்கள், இதுவும் போதாதென்று கிராமப்புற நுண்கடன் திட்டங்கள் மூலம் கோடிகோடியாய்க் கொள்ளையடிக்க புதிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 1997இல் ஐ.நா மன்றத்தின் முன்னிலையில் நடந்த நுண்கடன் கருத்தரங்கில் 2005ஆம் ஆண்டை நுண்கடன் ஆண்டாக அறிவித்துக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஐ.நாவின் மேற்பார்வை மற்றும் நிதியுதவியோடு பல ஏழை நாடுகளில் தேசிய அளவில் பல கருத்தரங்குகளும் ஆய்வரங்குகளும் நடந்த வண்ணம் உள்ளன. பல ஏழை நாடுகளின் அரசுகள், பல்வேறு நுண்கடன் திட்டங்களை அறிவித்தும் நுண்கடனை ஊக்குவிப்பதாகவும் உறுதியளித்துள்ளன. இந்தியாவில், நிதியமைச்சர் சிதம்பரம்

 இவ்வாண்டு பட்ஜெட்டில் நுண்நிதி வளர்ச்சிக்காக ரூ. 100 கோடி ஒதுக்கியுள்ளார். இந்நுண்நிதி வளர்ச்சிக்காக, நுண்நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களைக் கொண்ட கமிட்டி கட்டியமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

 

நுண்நிதி நுண்கடன் நுண்தொழில் என்றால் என்ன?

தேசிய ஊரக மற்றும் விவசாய வளர்ச்சி வங்கியின் கூற்றுப்படி, ""நுண்நிதி என்பது கிராமப்புற நகர்ப்புற ஏழை மக்களுக்குச் சிறு அளவில் சேமிப்பு, கடன் மற்றும் இதர நிதிச் சேவைகளை வங்கிகள் நிதி நிறுவனங்கள் மூலம் அளித்து, அவர்களின் வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதாகும். நுண்நிதிச் சேவைகளான சேமிப்பு, கடன் மற்றும் இதர நிதிச் சேவைகளைச் சுய உதவிக் குழுக்களுக்கு நுண்நிதி நிறுவனங்கள் மூலம் வங்கிகள் அளிக்கும்.''

 

இந்தியாவிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுண்நிதி நிறுவனங்களில் ஆகப் பெரும்பாலானவை தன்னார்வக் குழுக்களால் நடத்தப்படுகின்றன. செக்யூரிட்டியாக கணிசமான சேமிப்பைப் பெற்றிருக்கும் சுய உதவிக் குழுக்களை அடையாளம் கண்டு, அக்குழுக்களுக்கு நுண்நிதிச் சேவைகளை இத்தன்னார்வக் குழுக்கள் வங்கிகளிடமிருந்து பெற்றுத் தருகின்றன. மேலும், வங்கிகளுக்கும் சுயஉதவிக் குழுக்களுக்குமிடையிலான கொடுக்கல் வாங்கல் விவகாரங்களைக் கண்காணித்து ஒருங்கிணைக்கும் வேலைகளைச் செய்கின்றன.

 

இந்நுண் நிதிச் சேவையில் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியின் மூலம் கிடைக்கும் கடனுதவியை நுண்கடன் என்றழைக்கின்றனர். சுய உதவிக் குழுக்கள் வங்கிகளிலிருந்து பெறும் கடனை ஊறுகாய், அப்பளம், மசாலா பொடி, சோப்பு, கைவினைப் பொருட்கள், வீட்டைச் சுத்தம் செய்வதற்கான கிருமி நாசினிகள், ஊதுபத்தி மெழுகுவர்த்தி தயாரித்தல் முதலானவற்றில் குழுவாக முதலீடு செய்கின்றனர். இத்தகைய தொழில்களே நுண்தொழில் என்றழைக்கப்படுகிறது. இன்னொருபுறம், இத்தகைய நுண்கடன்களைத் தனிப்பட்ட சிலர் பெற்று விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களில் முதலீடு செய்வதாகவும் கூறப்படுகிறது.

 

""இத்தகைய நுண்கடன் நுண்தொழில்கள் மூலம் சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள ஏழை எளிய மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் கணிசமாகச் சம்பாதித்து, சொந்தக் காலில் நிற்பதன் மூலமாக ஏழ்மை, கல்லாமை, பெண்ணடிமை, சாதிய ஒடுக்குமுறை முதலான சமூக பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுகின்றனர்; மேலும் தன்னம்பிக்கை, தொழில்முனைப்பு, குழு மனப்பான்மை, நிர்வாகத் திறன், கூட்டுறவு மற்றும் சமூக உணர்வுகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன'' என்று முதலாளித்துவ அறிவுஜீவிகளும் தன்னார்வக் குழுக்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், உண்மையோ வேறானது.

 

1992இல் ஊரக மற்றும் விவசாய வளர்ச்சி வங்கி துணையுடன் 225 சுய உதவிக் குழுக்களுடன் தொடங்கப்பட்ட நுண்கடன் நுண்தொழில் திட்டம், இன்று பூதாகரமாக விரிவடைந்துள்ளது. ஏறத்தாழ ரூ. 45,000 கோடி புரளும் இந்திய நுண்நிதிச் சந்தையில், மார்ச் 2004 கணக்குப்படி, 48 வணிக வங்கிகள், 196 கிராம வங்கிகள், 360 கூட்டுறவு வங்கிகள் நுண்நிதி நிறுவனங்களின் உதவியுடன் 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் மூலம், ஒரு கோடியே 67 இலட்சம் குடும்பங்களுக்கு நுண்கடன் சேவைகளை அளித்து வருகின்றன. வரும் 2008ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடியே 80 இலட்சம் பெண்களுக்கு (குடும்பங்களுக்கு) இச்சேவை கிடைக்க வேண்டுமென இலக்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்படி அளிக்கப்படும் கடனில் 97வீதத்துக்கும் மேலாகப் பெறும் நுண்நிறுவனங்கள், கணிசமான வட்டியுடன் அவற்றை சுய உதவிக் குழுக்களுக்குத் தருகின்றன.

 

வங்கிகள், நுண்கடனை நுண்நிதி நிறுவனங்களுக்கு 8.5 முதல் 15 சதவீத வட்டியில் கொடுக்கின்றன. நுண்நிதி நிறுவனங்களோ, 3 முதல் 5 சதவீத இலாபம் வைத்து சுய உதவிக் குழுக்களுக்குக் கொடுக்கின்றன. சுய உதவிக் குழுக்களோ, மேலும் கணிசமான இலாபம் வைத்து, தமது உறுப்பினர்களுக்கோ வெளியாருக்கோ 28 முதல் 30 சதவீத வட்டிக்குக் (இரண்டே காலிலிருந்து இரண்டரை வட்டிக்கு) கொடுக்கின்றன. அண்மைக் காலமாக, நுண்நிதி நிறுவனங்களே 36 சதவீத வட்டியை (மூன்று வட்டியை) சுய உதவிக் குழுக்களுக்கு விதிப்பதாக ""பிசினஸ் லைன்'' ஏடு (மார்ச்15, 2005) கூறுகிறது.

 

சுய உதவிக் குழுக்களுக்குக் கிடைக்கும் நுண்கடனின் பெரும்பகுதி அன்றாடச் செலவுகளுக்குத்தான் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக உணவு, உடை, கல்வி, மருத்துவம் மற்றும் திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்குத்தான் செலவிடப்படுகிறது. மாறாக, நுண்தொழில்களிலோ அல்லது இதர தனிப்பட்ட தொழில்களிலோ முதலீடு செய்யப்படுவது மிகவும் குறைவாகவே உள்ளது. ஒருசில சுய உதவிக் குழுக்கள் நுண்தொழில்களில் முதலீடு செய்து உற்பத்தி செய்தாலும், இன்றைய தாராளமய உலகமயச் சூழலில் ஒரு அடி கூட முன்னேற முடியாமல், அவை விரைவிலேயே நசிந்து முடமாகி விடுகின்றன.

 

மூச்சுத் திணறும் நுண்தொழில்கள்

அனைத்து வகையான நுகர்பொருட்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்து இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இப்போது விற்பனை செய்து வருகின்றன. அண்மைக் காலமாக மேட்டுக்குடி சந்தையின் தேக்கத்தாலும், மிதமிஞ்சிய உற்பத்தியாலும், இப்பன்னாட்டு நிறுவனங்கள் சாலையோ, மின்சாரமோ, கல்வியோ எட்டிப் பார்க்காத குக்கிராமங்களுக்குக் கூட தமது பொருட்களைக் கொண்டு சென்று விற்கத் தொடங்கி விட்டன. இப்படி கிராமங்கள் வரை சென்று விற்பதுதான், பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலாபத்தை மேலும் பெருக்குவதற்கான வழிமுறையாக உள்ளது. இன்று ""ஃபேர் அண்டு லவ்லி'' சிவப்பழகு கிரீம் பற்றி அறிந்திராத பெண்களே இல்லை எனுமளவுக்கு அது மூலை முடுக்கெல்லாம் விளம்பரப்படுத்தப்படுகிறது. பல கோடி ரூபாய்க்கு கவர்ச்சியான விளம்பரங்களினால் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களைப் பயன்படுத்துவதுதான் தரமானது, சமூக மதிப்பைக் கொடுக்கிறது என்ற அபிப்பிராயத்தையும் தோற்றுவித்திருக்கிறது. மேலும், தாராளமயத்தால் ஏகாதிபத்திய நாடுகளின் மலிவான நுகர்பொருட்களே இன்று சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

 

""கேர்'' என்ற தன்னார்வக் குழுவின் ஊழியரான லேப் என்பவர், ""பன்னாட்டு நிறுவனங்கள் சந்தையைத் தமது ஏகபோகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால், நுண்தொழில்களும் நுண்உற்பத்திப் பொருட்களும் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட முடியவில்லை'' என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். சுய உதவிக் குழுக்கள் நுண்தொழில் உற்பத்தி மூலம் உருவாக்கப்பட்ட குளியல் சோப்பை விற்கப் போனால், நுகர்வோர்கள் "நேர்மை' சோப் ஹமாம்தான் வேண்டும் என்கிறார்கள். வீட்டுக் கிருமி நாசினியை விற்கப் போனால், இந்துஸ்தான் லீவரின் "டோமக்ஷ்' தான் சிறந்தது என்கிறார்கள். வேறு வழியின்றி, அரசாங்க விழாக்களிலோ, கண்காட்சியிலோ கடைவிரித்து, சுய உதவிக் குழுக்களிடம் கரிசனம் காட்டுபவர்களிடம் இக்குழு உறுப்பினர்கள் விற்க முயற்சிக்கிறார்கள். அதுவும் இப்போது தோல்வியடைந்து, பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களையே பல சுய உதவிக் குழுக்கள் விற்பனை செய்து வருகின்றன.

 

தாராளமயமாக்கலின் விளைவாக, பல லட்சம் முதலீடு செய்து நடத்தப்படும் சிறு தொழில்களே நசிந்து முடமாக்கப்படும் நிலையில், சில ஆயிரம் ரூபாய்களை முதலீடு செய்து நடத்தப்படும் நுண் தொழில்கள் முன்னேறவோ, தாக்குப் பிடிக்கவோ அடிப்படையே இல்லை. ஆனாலும், தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கத் தாக்குதலால் ஏற்படும் சமூக கொந்தளிப்புகளுக்கு வடிகால் வெட்டி, சாந்தப்படுத்தும் நோக்கத்துடன் ஆட்சியாளர்கள் நுண்கடன், நுண்தொழில் பற்றி ஆரவாரம் செய்கின்றனர். மறுகாலனிய தாக்குதலுக்கு எதிராக உழைக்கும் மக்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற உணர்வை மழுங்கடித்து, நுண்தொழில் மூலம் நாம் எப்படியாவது முன்னேறி விடலாம் என்ற குறுகிய சுயநல சிந்தனையை ஊட்டி வளர்க்கின்றனர்.

 

பண உறவு பண உணர்வு

தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கப் புதிய பொருளாதாரக் கொள்கையாலும், தொடர் வறட்சியின் விளைவாலும் கிராமப்புற விவசாயமும் கைத்தொழில் குடிசைத்தொழில், கால்நடை வளர்ப்பு முதலானவையும் நலிவடைந்து, கிராமப்புற மக்கள் வறுமைப் படுகுழியில் பரிதவிக்கின்றனர். இத்தகைய சூழலில் 1020 பேர்களாகத் திரட்டப்படும் சுய உதவிக் குழுக்கள், முதற்கட்டமாக செக்யூரிடி தொகைக்காக மாதந்தோறும் கணிசமான தொகையைச் சேமிக்க வேண்டியுள்ளது.

 

செக்யூரிடி தொகையுடன் உத்திரவாதமுள்ள சுய உதவிக் குழுக்களுக்குத்தான் நுண்நிதி நிறுவனங்கள் மூலம் நுண்கடன் கிடைக்கும். எனவே சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் வறுமையின் நடுவே அத்தியாவசியத் தேவைகளுக்கான செலவை மேலும் குறைக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று ""நிரந்தர்'' என்ற மகளிர் அமைப்பு கூறுகிறது. சுய உதவிக் குழுக்களால் பெறப்படும் நுண் கடன்கள் 36 சதவீதம் வரை (3 வட்டிக்கு) உறுப்பினர்களிடம் கடனாக வட்டிக்கு விடப்படுகிறது. மேலும் புதிய கடன்களைப் பெற வேண்டுமானால், வாங்கிய கடனை சுய உதவிக் குழுக்கள் முறையாக திருப்பி அடைக்க வேண்டும். இதனால் கடன் வாங்கிய உறுப்பினர்களைக் கண்காணிப்பவர்களாகவும், கடன் தவணையை வட்டியுடன் முறையாகச் செலுத்த நிர்பந்திப்பவர்களாகவும் குழுவின் இதர உறுப்பினர்கள் மாறி விடுகிறார்கள். சில இடங்களில், கடனை அடைக்கத் தவறிய உறுப்பினர்கள் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்வதும் நடக்கிறது.

 

பணமே வாழ்க்கையாகிவிட்ட இன்றைய நிலையில், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கிடையே கூட்டுறவோ, கூட்டுத்துவ சிந்தனையோ இருப்பதில்லை. வெறும் பண உறவுதான் நீடிக்கிறது. அதுவும் கந்து வட்டிக்காரனுக்கும் கடன்காரனுக்குமிடையிலான உறவாகவே உள்ளது. குழு மனப்பான்மை என்பது சுரண்டுவதில்தான் இருக்கிறது. குழு உறுப்பினர்களின் அடிப்படைத் தேவைகளை மேலும் குறைக்க நிர்பந்திப்பதன் விளைவாக, ஏழ்மை மேலும் தீவிரமாகிறது. அதன் காரணமாக, கல்லாமை, பெண்ணடிமைத்தனம் முதலான சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் தொடரவே செய்கிறது.

 

இதுவொருபுறமிருக்க, பெரும்பாலான சுய உதவிக் குழுக்கள் சாதி வரியாகவே கட்டியமைக்கப்படுகின்றன என்பதை ஆய்வுகள் நிரூபித்துக் காட்டுகின்றன. மேலும் சாதிய கட்டுமானத்தையும் சாதிய உணர்வையும் தக்க வைப்பதாகவே சுய உதவிக் குழுக்களும் அவற்றுக்கான நுண் கடன் ஏற்பாடுகளும் அமைந்துள்ளன. இதுமட்டுமின்றி தெலுங்குதேசம், அ.தி.மு.க. போன்ற ஓட்டுக் கட்சிகளின் ஓட்டு வேட்டைக்கான பகடைக் காய்களாக சுய உதவிக் குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 

விரியும் வஞ்சகவலை கொழிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்

உள்ளூர் அளவில் ஆதிக்கம் செலுத்தும் கந்துவட்டிக்காரர்கள், நிலப்பிரபுக்களைப் போலவே, அதே தன்மையுடன் புதிய வடிவில் ஏழை எளிய மக்களைச் சுரண்டும் கொள்ளைக் கூட்டமாக வங்கிகளும், நுண்நிதி நிறுவனங்களும், தன்னார்வக் குழுக்களும் புதிய பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளன. நுண்நிதிச் சேவையில் ஈடுபடும் வங்கிகளும் நுண்நிதி நிறுவனங்களும் அண்மைக் காலமாக கொழுத்த இலாபத்தை ஈட்டி வருகின்றன. இவ்வங்கிகளின் ஒட்டு மொத்த இலாபத்தில் 10 சதவீதத்துக்கும் மேலான தொகை நுண்நிதிச் சேவையிலிருந்து கிடைப்பதாகப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஆந்திர மாநிலத்தில் செயல்படும் ""காகேதிய கிராமின் வங்கி''யின் இரண்டு கிளைகள், 1,90,000 ரூபாயாக இருந்த இலாபத்தை, நுண்நிதிச் சேவையில் இறங்கி ரூ. 15 லட்சத்துக்கு உயர்த்தியுள்ளன. இதர கிராமப்புற கடன் நிதிச் சேவைகளை ஒப்பிடும் போது, நுண்கடன் நுண்நிதிச் சேவைகளே வங்கிகளுக்கு கூடுதலாக இலாபத்தைக் கொடுக்கின்றன என்று ஆய்வாளர்கள் அறுதியிடுகின்றனர்.

 

பல்லாயிரம் கோடிகள் புரளும் இந்திய நுண்நிதிச் சந்தையில், அரசு வங்கிகள் கிராமப்புற ஏழைகளைச் சுரண்டி கோடி கோடியாய் இலாபத்தைக் குவிக்கும்போது, பன்னாட்டு ஏகபோக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சும்மாவா இருக்கும்? தாராளமயமாக்கலைத் தொடர்ந்து டாய்ஷே, ரேபே வங்கி, ஒககோ கிரடிட், சிட்டிகுரூப், ஐ.என்.ஜி., விசா, ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எப்.சி., ஏ.பி.என். அம்ரோ முதலான பன்னாட்டு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் களத்தில் குதித்துள்ளன. சன் மைக்ரோ சிஸ்டத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கோசலா, இத்தகைய நுண்நிதிச் சந்தையில் முதலீடு செய்து இலாபம் பெறும் வழிமுறைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். இன்னொருபுறம், மான்சாண்டோ விதைக் கம்பெனி, நுண்நிதி மாநாடுகள் கருத்தரங்குகளுக்கு நிதியுதவி செய்து தன்னார்வக் குழுக்களை ஊக்குவித்து வருகிறது.

 

ஆந்திராவில் தொடங்கி படிப்படியாகத் தென்னிந்திய மாநிலங்களில் விரிவாக்கப்பட்ட நுண்கடன் நுண்நிதிச் சேவைகள் இப்போது நாடு முழுவதும் பற்றிப் படர்ந்து வருகிறது. அதற்கேற்ப கைக்கூலிகளான தன்னார்வக் குழுக்களும் பார்த்தீனியச் செடி போல வேகமாகப் பரவி வருகின்றன. அமெரிக்காவின் கருப்பினச் சேரிகளில் பாயும் நுண்நிதிச் சேவைகளைப் போலவே, இந்தியாவிலும் எங்கெல்லாம் ஏழைகள் குமுறிக் கொண்டிருக்கிறார்களோ, அங்கெல்லாம் நுண்நிதி நிறுவனங்களும் தன்னார்வக் குழுக்களும் வேகமாக நுழைந்து வருகின்றன. பிச்சை எடுத்தாராம் பெருமாளு, அதைப் பிடுங்கித் தின்றாராம் அனுமாரு என்ற கதையாக, ஏற்கெனவே வறுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களை மயக்கி, நுண்கடன் வலையில் சிக்க வைத்து, எஞ்சியிருப்பதையும் நூதனமுறையில் பறித்துக் கொள்ள பன்னாட்டு நிறுவனங்கள் கிளம்பிவிட்டன.

 

1960ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உலக வருமானத்தில் 70 சதவீதத்தைப் பெற்றிருந்த, மக்கள் தொகையில் 20 சதவீதமான பணக்காரர்கள், 2000வது ஆண்டில் சுருட்டிய வருமானம் 83 சதவீதமாக அதிகரித்துள்ளது. மறுபுறம் இதே காலத்தில் மொத்த வருமானத்தில் 2.3 சதவீதத்தைப் பெற்றிருந்த 20 சதவீத ஏழைகளிலும் ஏழைகளானவர்கள் 2000வது ஆண்டில் வெறும் 1.3 சதவீத வருமானத்தைத்தான் பெற்று மேலும் ஏழைகளாகியுள்ளனர் என்கிறது ஐ.நா. மன்ற அறிக்கை. மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியாக விரிவடைந்து கொண்டே போகும் இந்த ஏற்றத்தாழ்வை மேலும் விரைவுபடுத்தவும் அதிகப்படுத்தவும் நுண்நிதி நிறுவனங்களும் தன்னார்வக் குழுக்களும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. வஞ்சக வலை விரிக்கும் தன்னார்வக் குழுக்களையும் நுண்கடன் நுண்தொழில் முதலான பசப்பல்களையும் உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தி முறியடிக்க புரட்சிகர ஜனநாயக சக்திகள் இன்னும் விரைவாகச் செயலாற்ற வேண்டியுள்ளது.

 

· செஞ்சுடர்