Language Selection

புதிய ஜனநாயகம் 2005

05_2005.jpg"இந்த தமிழ்ப் புத்தாண்டில், 14 வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்த "சந்திரமுகி' படமும் கமல் நடித்த "மும்பை எக்ஸ்பிரஸ்' படமும் நேரடியாகக் களத்தில் மோதுவதால்(?) ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. இந்த போட்டியில் விஜய் நடித்த "சச்சின்' படமும் கலந்து கொள்வதால் மும்முனைப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது'' என்று வானொலி, வானொளி மற்றும் சந்தை ஏடுகள் அடங்கிய செய்தி ஊடகக் கும்பல் தமிழ் சினிமா கழிசடைகளுக்குப் பரிவட்டம் கட்டும் வேலையில் மும்முரமாக இறங்கி விட்டன.

 

"தியேட்டர்களில் திருவிழாக் கோலம். அலைமோதும் ரசிகர்கள் கூட்டம், கட்அவுட், பேனர், அலங்கார வளைவு, பாலபிஷேகம், தேங்காய் உடைப்பு, பட்டாசு வெடிப்பு, அதிகாலை 4 மணி காட்சியில் ரஜினி ரசிகர்களின் ஆர்வத்தால் ரகளை கல்வீச்சு'' என்று தமிழகத்தையே தங்களின் திறந்தவெளி கழிப்பிடமாக்கி நாறடித்தது, தமிழ் சினிமா ரசிகர்கள் என்ற பொறுக்கிகள் கூட்டம்.

 

மலத்தை தடவிவிட்டு பணத்தை பறித்து ஓடும் வழிப்பறி திருடர்கள் போல், பதற்றத்தை உருவாக்கி, படத்தை "ரிலீஸ்' செய்து பணத்தைச் சுருட்டியது தமிழ் சினிமாவின் படைப்பாளிகள், முதலாளிகள் கூட்டம்.

 

"தமிழ் புத்தாண்டு ரிலீஸ்' என்று 30 ரூபாய் டிக்கெட்டை 50 ரூபாய் ஆக உயர்த்தியதோடு, அதையும் 500 ரூபாய் வரை "பிளாக்' டிக்கெட்டாக விற்று, ஒரு காட்சியில் ஒரு லட்சம் ரூபாய் வரை சுருட்டி, வரலாறு காணாத வசூல் மழையில் நனைந்தனர். ரஜினி, கமல், விஜய் என்று மூன்று நடிகர்களின் படத்திற்கு மொத்தம் 600 "பிரிண்ட்டு'களுக்கு மேல் போட்டு ஒவ்வொரு பிரிண்ட்டுக்கும் நாளொன்றுக்கு 5 காட்சிகள் வீதம் மொத்தமாக ஒரே நாளில் 30 கோடி ரூபாய் கொள்ளையடித்தனர்.

 

இந்த பகற்கொள்ளைக் கார சினிமா கும்பலுக்குப் பூரண அரசு மரியாதை அளித்து கௌரவிக்கிறார், பார்ப்பன பாசிச ஜெயலலிதா. சினிமா படப்பிடிப்புக் கட்டணம், கேளிக்கை வரி மற்றும் திருட்டு வி.சி.டி. இவற்றின் "மரணப் பிடி'யிலிருந்து தமிழ் சினிமாவை மீட்ட ஜெயலலிதா, மேலும் அன்புக்கரம் நீட்டி அதை அரசு மடியில் ஏந்திக் கொண்டார். விழா, விருது மற்றும் பலகோடி ரூபாய் மானியம் என்று தமிழ் சினிமாவை ஊட்டி வளர்க்கிறார்.

 

மறுபுறம், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டங்களை ஈவிரக்கமின்றி ஒடுக்கும் பாசிச ஜெயலலிதா, "இப்போராட்டங்கள் தமிழகத்தின் ஒட்டு மொத்த சமுதாய நலன்களுக்கு எதிரானது' என்று கொச்சையாக தாக்குகிறார். ஆனால், அரை நிர்வாண, ஆபாச, பிற்போக்கு, இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பி வழியும் கழிசடை தமிழ் சினிமாவிற்கு சூடு சொரணை இல்லாமல் போலீசு பாதுகாப்பு கொடுக்கிறார்.

 

தமிழ் புத்தாண்டு அன்று வெளியான தமிழ் திரைப்படங்களின் யோக்கியதைகளை சந்தை செய்தி ஏடுகள் எச்சில் ஒழுக வர்ணிப்பதை கேளுங்கள்,

 

மும்பை எக்ஸ்பிரஸ், ""நாசரின் சின்ன வீடாக இருந்து கமலஹாசனிடம் தாவுகிற "ஜில்ஜில்' மனிஷா கொய்ராலா சூப்பர் ஜிகிடி'', ரஜினியின் சந்திரமுகி பற்றி, ""வடிவேலுவின் அதிரடி (ஆபாசம்) "காமெடி' கூடுதல் அம்சம். இவர் (வடிவேலு) மனைவியையும் ரஜினியையும் இணைத்து சந்தேகப்படும் காட்சிக ளில் (நண்பன் மனைவியோடு ரஜினி, ஒரே போர்வையில் புகுந்து லூட்டி அடிப்பது) தியேட்டர் அதிர்கிறது.

 

விஜய்யின் "சச்சின்' படம் பற்றி, ""இளமைக்கு ஹரிணி, கவர்ச்சிக்கு மும்பை வரவான பிபாஷாபாசு'' என்று, இரட்டை கதாநாயகிகளுடன் ஆபாச கூத்து!

 

இப்படி திரைவிமர்சனங்களிலேயே ஆபாசம் சொட்டுகிறது! தமிழ் புத்தாண்டு அன்று தமிழ் சினிமா கழிசடைகள் தமிழர்களுக்கு கொடுத்திருக்கும் புதிய சிந்தனை, "நண்பனின் மனைவியிடம் "கடலைபோடு' அதாவது "ஜொள்ளு விடு'! இதற்குதான், விடியற்காலை 4 மணிக்கே சென்று வரிசையில் நிற்கிறார்களா தமிழ் சினிமா ரசிகர்கள்? போதாக்குறைக்கு போலீசு உதையும் புத்தாண்டு பரிசாக அவர்களுக்குக் கிடைத்தது.

 

சினிமா நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் சினிமா முதலாளிகளான தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்ற கூட்டு களவாணி கும்பல் சினிமா ரசிகர்கள் என்ற இலவச குதிரைகள் மீது ஏறி திரைப்படங்கள் மூலம் சீரழிவு, ஆபாசம், பிற்போக்கு, மூடத்தனங்களை தமிழகம் முழுக்க விதைத்து, அமோக விளைச்சலை அறுவடை செய்கிறது. வரலாறு காணாத வசூல் மழையில் திளைக்கிறது.

 

இதில், சகல ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின் பிரபல தலைவர்கள் பலர் கூட்டு! போலீசு அதிகாரிகள், அரசு உயர்மட்ட அதிகாரிகள் சகலரும் தங்கள் பினாமிகள் மூலம் "பிரபல' நடிகர்களின் திரைப்பட விநியோக உரிமைகளை வளைத்துப் போடுகிறார்கள்.

 

காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த திருச்சி அடைக்கலராஜ், தி.மு.க. கட்சியின் தற்போதைய மத்திய மந்திரி ரகுபதி, அ.தி.மு.க.வின் சசிகலா நடராசன் ஆகியோர் தமிழ் சினிமாவை இயக்கும் ரகசிய "தாதா'க்கள்! இவர்கள், தமிழ் சினிமாவில் கொட்டை போட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட "ஏவிஎம்' நிறுவனத்தையே மிரட்டும் வல்லமை படைத்தவர்கள்.

 

பிரபல நடிகர்களின் படங்களுக்கு "பைனான்ஸ்' வழங்குவது, அந்நடிகர்களின் "கால்ஷீட்'களை மொத்தமாக கையில் வைத்திருப்பது, பினாமிகள் மூலம் தமிழகம் முழுக்க திரையரங்குகளை நடத்துவது வரை இவர்களது "சினிமா சாம்ராஜ்ஜியம்' பரந்து விரிந்திருக்கிறது.

 

உள்ளூர் ரவுடி கும்பலும் போலீசு அதிகார வர்க்க கும்பல்களும் இந்த "தாதா'க்களின் திரையரங்குகளில் உள்ள "கேன்டீன்', "பார்க்கிங்' உரிமங்களைப் பினாமிகள் பெயர்களில் குத்தகைக்கு எடுக்கின்றனர். இந்த உரிமைக்காக போலீசு அதிகார வர்க்கத் துறைகளில் பெரும் போட்டியே நடக்கிறது.

 

நடிகர்கள் வெற்றியின் உச்சத்தில் இருக்கும் சமயங்களில் பினாமி பெயர்களில் தங்கள் படங்களின் தயாரிப்பு விநியோக உரிமையை தாங்களே சுவைக்கத் துடிப்பார்கள். நடிகர் கமலஹாசன் கேரளா ஏரியாவுக்கும், நடிகர் விஜய் சென்னை நகரத்திற்கும், விஜயகாந்த் மதுரை ஏரியாவிற்கும், நடிகர் சரத்குமார் திருநெல்வேலிகன்யாகுமரி ஏரியாவிற்கும் பினாமிகளை வைத்திருக்கிறார்கள். இதனால் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களுக்கிடையே பெரும் கலகங்களும் வெடிக்கும். "பழம் தின்பதற்கு பினாமிகள்; கொட்டையைப் பொறுக்குவதற்கு மட்டும் நாங்களா?' என்று விநியோகஸ்தர்கள் கொதிப்பார்கள்.

 

இந்த கொள்ளைக் கூட்டம்தான் சினிமா படைப்பாளிகள், முதலாளிகள் என்ற பெயரில் தமிழகத்தின் பண்பாட்டையும் பகுத்தறிவு பாரம்பரியத்தையும் சீரழிக்கிறது.

 

தமிழர்களின் பண்பாடு, நாகரீகம் அதன் தொன்மை பற்றி பேசும் திராவிடக் கட்சிகள்தான் சினிமா கழிசடைகளின் விசுவாசமான பாதுகாவலனாகத் திகழ்கின்றன. மறத் தமிழரான வைகோவின் ம.தி.மு.க. கட்சியின் முக்கிய தூண், தாணு. மிகப் பெரும் சினிமா தயாரிப்பாளர். கழிசடை சினிமாக்களை தமிழில் பிரம்மாண்டமாக எடுப்பதிலும் விளம்பரம் செய்வதிலும் "புகழ்' பெற்றவர்.

 

அனைத்திற்கும் மேலாக, இதுநாள் வரையில் திரையரங்குக்குள்ளே செல்லும் ரசிகர்களுக்கு மட்டுமே காட்டப்பட்ட தமிழ் சினிமா, இன்று மின்னணு ஊடகங்கள் மூலம் தமிழகத்தையே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.

 

தனியார்மயம், தாராளமயத்தின் கீழ் சந்தை வெறி பிடித்து அலையும் ஏகாதிபத்திய நிறுவனங்கள், சினிமாவைவிட வேகமாக நடிகர்கள் நடிகைகளை மக்களிடம் விற்கின்றன. சினிமா விளம்பரம் என்ற பெயரில் ஆபாச சீரழிவுகளை மக்களிடம் கொண்டு சென்று நுகர்வுவெறியைப் பரப்பி சந்தைகளை ஆக்கிரமிக்கின்றன.

 

ரஜினியின் "சந்திரமுகி' திரைப்படம், கமலஹாசனின் "மும்பை எக்ஸ்பிரஸ்', விஜய்யின் "சச்சின்' ஆகிய படங்களுக்காக, முறையே "டாட்டா இண்டிகாம்', "த்ரீ ரோசஸ்' மற்றும் "ரிலையன்ஸ் இன்போகாம்' ஆகிய நிறுவனங்கள் சுமார் 2 லட்சம் சதுர அடிக்கும் அதிகமாக மின்னணு நவீன விளம்பரப் பலகைகளைத் தமிழகம் முழுக்க வைத்துள்ளன.

 

இதன்மூலம், நடிகர்களை தமிழர்களின் படுக்கையறைக்கு அழைத்துவரும் வேலையை பன்னாட்டு நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களின் நுகர்பொருட்களை தமிழர்களின் சமையல் அறையில் விற்கும் வேலையை நடிகர்களும் செய்கின்றனர். ஊடகங்களில் ஏற்றி இவர்களை சுமந்து வரும் முக்கிய வேலையை கருணாநிதியின் குடும்ப நிறுவனங்கள் செய்கின்றன.

 

தமிழ்ப் புத்தாண்டில், தங்களது ரசிகர்களுக்கு, சினிமா கழிசடைகளின் "பன்சிங் டயலாக்கு' இதுதான்! "சொந்த மனைவியை கூட்டிக் கொடுங்கள்! சொந்த நாட்டை காட்டிக் கொடுங்கள்!' இதற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

 

· பச்சையப்பன்