Language Selection

புதிய ஜனநாயகம் 2005

05_2005.jpgமரணமடைந்த போப் இரண்டாவது ஜான்பால் மற்றும் அவரிடத்துக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள போப் பதினாறாம் பெணடிக்ட் ஆகிய இருவரின் துதிபாடும் வேலையில் உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ ஏகாதிபத்திய செய்தி ஊடகங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன.

 

உண்மையில் இவர்கள் இருவருமே கத்தோலிக்கத் திருச்சபையில் சின்னஞ்சிறிய சீர்திருத்தத்தைக் கூடக் கடுமையாக எதிர்த்த மத அடிப்படைவாத, பழங்கோட்பாட்டுவாதிகள், மதவெறியர்கள், எதிர்ப் புரட்சியாளர்கள்,

 கம்யூனிச எதிர்ப்பாளர்கள், பாசிஸ்டுகள். உலகின் பல்வேறு நாட்டு இராணுவ பாசிச சர்வாதிகாரிகளை குறிப்பாக இட்லர்முசோலினி ஆகிய நாஜி பாசிசக் கொடுங்கோலர்கள் முதல் ஏகாதிபத்திய போர் வெறியர்களான அமெரிக்க அதிபர்கள் ரீகன், மூத்த இளைய புஷ்கள் வரை ஆதரித்தவர்கள்.

 

போப் இரண்டாம் ஜான் பால் கருணையில் கர்த்தருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்; மனித நேயத்தில் அன்னை தெரசாவுக்கும் மேலானவர்; மனித உரிமைப் போராளி என்றெல்லாம் செய்தி ஊடகங்கள் கதையளக்கின்றன. ஆனால், உலகம் முழுவதுமுள்ள நூறு கோடிக்கும் மேலான கத்தோலிக்கர்களுக்கு ஆசி வழங்கிய அவரது கரங்கள் இரத்தக் கறை படிந்தவை என்றே வரலாறு காட்டுகிறது.

 

சோவியத் ஒன்றியம் உட்பட கிழக்கு ஐரோப்பாவில் ""கம்யூனிச சர்வாதிகாரம்'' என்றழைக்கப்பட்ட போலி சோசலிசத்தின் கீழ் மனித உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி, அந்த ஆட்சிகளை வீழ்த்துவதற்குக் கடும் முயற்சிகளை மேற்கொண்ட இரண்டாவது ஜான்பால் தனது ஆட்சியின் கீழிருந்த திருச்சபையில் மாற்றுக் கருத்துக்கான உரிமைகளை நசுக்கியவர்.

 

போப் இரண்டாம் ஜான் பால் என்றறியப்பட்ட கரோல் ஜோசப் வூஜ்தியா, தனது 58வது வயதில் போப்பரசராக, அதாவது 1978 அக்டோபரில் தெரிவு செய்யப்பட்ட, முதலாவது கிழக்கு ஐரோப்பியராவார். 455 ஆண்டுகளுக்குப் பிறகு போப்பாகிய இத்தாலியரல்லாதவர். போலந்து நாட்டவர். போலந்தின் கிராக்சௌ நகருக்கு அருகிலுள்ள வாடோனவஸ் என்ற சிறு நகரத்தவர்.

 

இரண்டாம் உலகப் போரின் போது, போலந்து நாட்டை இட்லரின் நாஜிக்கள் ஆக்கிரமித்தபோது, சுரங்கவேலை செய்து கொண்டே, இரகசியமாக இயங்கிவந்த கிறித்துவப் பாதிரியாருக்கான பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஏற்பட்ட ""கம்யூனிச ஆட்சி''க்கு எதிராக அவர் ஆற்றி வந்த இரகசிய மற்றும் நாசவேலைகளுக்குப் பரிசாகக் கிட்டியதுதான் போப்பரசர் பதவி.

 

இத்தாலியர் அல்லாத, கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு போலந்து நாட்டுத் தலைமை மதகுரு புதிய போப்பரசராக தெரிவு செய்யப்பட்டது, உலகம் முழுவதும் வியப்போடும் பரப்பரப்பாகவும் அப்போது பேசப்பட்டது. ஆனால், அதற்குக் காரணமாக அமைந்தது.

 

போப்பரசரைத் தெரிவு செய்யும் ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்கப் பிரதிநிதிக் குழுவின் பங்கு அமைந்தது பலருக்கும் தெரியாது.

 

""போப் பதவிக்காக இத்தாலிய வேட்பாளர்களுக்கிடையில் ஏற்பட்ட போட்டி நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு போலந்து கார்டினலை அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு முன்மொழிந்தது'' என்று அப்போதைய ""அமெரிக்கன் போஸ்ட்'' நாளிதழ் எழுதியது. போலந்து நாட்டு கரோல் வூஜ்தியாதான் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று போலந்து குறித்த நிபுணரும், அமெரிக்காவின் ஹார்வர்டு இறையியல் பள்ளியின் தலைவருமான ஜார்ஜ் வில்லியம்ஸ் முன்கூட்டி அறிவித்தார். இவர் வாடிகன் உள் விவகாரங்களை நன்கு அறிந்தவர். 1978 போப் தேர்தலில் அமெரிக்காவின் பங்கு இருந்ததை பிரெஞ்சு கார்டினல் ஜீன் குயோட்துலூஸ் உறுதி செய்தார்.

 

போப் பதவிக்கு இத்தாலியரையே தெரிவு செய்யும் நூற்றாண்டுக்கணக்கான மரபு மீறப்பட்டது, ஆக்கப்பூர்வமான, புதுமையான முயற்சி காரணமாக அல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கம்யூனிச எதிர்ப்பு, எதிர்ப்புரட்சி, போர்வெறிக்கு ஊழியஞ் செய்வதற்கு மிகவும் தகுதியானவர் என்று தீர்மானிக்கப்பட்டு, அமெரிக்க நிதி மூலதனத்தின் நிர்பந்தம் காரணமாகவே கரோல் வூஜ்தியா போப்பாக்கப்பட்டார்.

 

இதை வாடிகனின் மிகப்பெரிய மேதமைமிக்க செயல் என்று மேற்குலகின், குறிப்பாக அமெரிக்காவின் செய்தி ஊடகங்கள் வானளாவப் போற்றின. கிழக்கு ஐரோப்பாவில் நிறுவப்பட்டிருந்த ""கம்யூனிச ஆட்சி''களைக் கலைப்பதில் புதிய போப் சிறப்பாக பங்காற்றுவார் என்று அப்போதே முதலாளித்துவ செய்தி ஊடகங்கள் மதிப்பீடுகளை எழுதின.

 

அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகிய இரு மேல்நிலை வல்லரசுகளும் உலக மேலாதிக்கத்துக்கான கடும்போட்டியில் இறங்கி, ஐரோப்பாவில் கழுத்துவரை அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துக் கொண்டு, மூன்றாம் உலகப் போருக்குள் உலகை ஆழ்த்தும் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சமயத்தில் இரண்டாம் ஜான்பால் போப்பரசராகியிருந்தார்.

 

""சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகனுடன் நெருக்கமான கூட்டணி அமைத்துக் கொண்ட போப் இரண்டாம் ஜான்பால், மேற்கு ஐரோப்பாவில் அணு ஆயுதங்களைக் குவிப்பதை ஆதரித்து ஆசி வழங்கினார்; இறுதியில் கம்யூனிசத்தை வீழ்த்துவதற்கு ரீகனுடன் சேர்ந்து வேலை செய்தார்'' என்று வாடிகனுக்கான அமெரிக்கத் தூதர் ஜிம் நிகல்சன் கூறினார்.

 

""சோவியத்துக்கள் எவ்வாறு மேலும் மேலும் மேற்கு நோக்கி அணு ஆயுதங்களைக் குவிக்கின்றன என்று காட்டும் நேரடி விண்கோள் புகைப்படங்களைப் போப்புக்குக் காட்டுவதற்கு அமெரிக்க இராணுவ தளபதி ஜெனரல் வெர்னோன் வால்டர்சை அனுப்புவதை ரீகன் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது சோவியத்துக்களுக்கு எதிராக அமெரிக்காவின் குருயிசு ஏவுகணைகளைக் குவிப்பதை போப் ஆதரித்தார் என்ற முக்கியமான விசயம் ஒரு சிலருக்கே தெரியும்'' என்று அமெரிக்க தூதர் கூறியுள்ளார்.

 

""அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து வாடிகனுக்குப் போய் விளக்குவதை போலிஷ் மொழி பேசும் தளபதி வால்டர்ஸ் வழக்கமாகக் கொண்டிருந்தார். அணு ஆயுதந்தாங்கிய குருயிசு ஏவுகணைகளை மேற்கு ஐரோப்பாவில் குவிப்பது குறித்து அந்நாடுகளின் தலைவர்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தபோது போப்பின் ஆதரவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது'' என்கிறார் நிக்கல்சன்.

 

பனிப்போர் நடவடிக்கைகளில் மட்டுமல்ல, எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில், குறிப்பாக கத்தோலிக்கப் பழமைவாதத்துக்கு எதிராகத் தோன்றிய ""விடுதலை இறையியல்'' என்ற பெயரில் நடந்த தென் அமெரிக்க எழுச்சியை ஒடுக்குவதில் போப் இரண்டாம் ஜான் பாலும் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகனும் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்பட்டனர்.

 

தென் அமெரிக்காவில் கியூபன் புரட்சியின் எதிரொலியாகவும் வியத்நாம் லாவோஸ் கம்போடியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அடைந்த படுதோல்வி மற்றும் தேசிய விடுதலைப் புரட்சியின் வெற்றி காரணமாகவும், பல்வேறு நாடுகளில் அமெரிக்க ஆதரவு இராணுவபாசிச சர்வாதிகாரிகளுக்கு எதிரான எழுச்சிகள் வெடித்தன. தென் அமெரிக்காவின் பல நாடுகளிலும் உழைக்கும் மக்கள் புரட்சிப் போராட்டங்களில் குதித்தனர். கத்தோலிக்கத் தொழிலாளிகள்விவசாயிகளோடு, திருச்சபையின் கீழ்நிலைப் பாதிரியார்களும் பிஷப்புகளும் கூட இந்த எழுச்சியில் பங்கேற்றனர். கத்தோலிக்க மதச் செல்வாக்கில் இருந்து விலகிச் செல்லும் உழைக்கும் மக்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கு மதச் சீர்திருத்தம் அவசியமாயிருந்தது.

 

ஐரோப்பாவில் நடந்த புராட்டஸ்டண்ட் புரட்சிகளுக்குப் பிறகு, தென் அமெரிக்காவில் கத்தோலிக்க மதம் கண்ட இந்த எழுச்சியின் விளைவுதான் ""விடுதலை இறையியல்''. ரொனால்டு ரீகனுடைய அதிபர் தேர்தலில் பணியாற்றிய அதே கும்பல் சாந்தா டீ என்ற நகரில் 1980ஆம் ஆண்டு ஒரு மாநாட்டில் கூடி பின்வரும் அறிக்கையை வெளியிட்டது: ""விடுதலை இறையிய''லுக்கு எதிர் வினையாற்றுவதாக மட்டும் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை இருந்துவிடக் கூடாது. அதனுடன் மோதுவதைத் தொடங்கிவிட வேண்டும். தனியார் சொத்துடைமைக்கும் முதலாளிய உற்பத்தி முறைக்கும் எதிரான அரசியல் ஆயுதமாக திருச்சபையை மார்க்சிஸ்டு லெனினிஸ்டு சக்திகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கிறித்துவத்தைவிட அதிக அளவில் கம்யூனிசக் கருத்துக்களால் கத்தோலிக்க மத சமூகத்துக்குள் அவர்கள் ஊடுருவுகிறார்கள்.''

 

இம்மாநாட்டுக்குப் பிறகு உடனடியாகவே விடுதலை இறையியலுக்கு எதிராக அதிபர் ரீகன், போப் இரண்டாம் ஜான் பாலுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார். போப் விடுதலை இறையியலோடு பழைமைவாதக் கத்தோலிக்க கோட்பாடுகளாலும் வாடிகனின் மத அதிகாரத்தாலும் சண்டையிட்டார் என்றால், ரீகன் நிர்வாகமும் அதன் இலத்தீன் அமெரிக்கக் கூட்டாளிகளும் விடுதலை இறையியலாளர்களைப் படுகொலை செய்தனர்.

 

போப் இரண்டாம் ஜான் பால் ரீகன் கூட்டணியின் சதியால் பழிவாங்கப்பட்டவர்களில் முக்கியமானவர் எல் சால்வடோர் நாட்டு ஆர்ச் பிஷப் ஆஸ்கார் ரொமேரோ. இவர் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தபோதே, அந்நாட்டு வலதுசாரி மதவெறி கும்பலின் கொலைக் குழுவால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலைக் குழுக்களின் சட்டபூர்வ அரசியல் இயக்கமான அரேனா கட்சி, படுகொலைக்கு ஒரு சில வாரங்கள் முன்பாகத்தான் வாடிகனுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி, ரொமேரோ ஏழைஎளிய மக்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் கண்டித்து போப்பிடம் புகார் செய்தனர். இதிலிருந்து, விடுதலை இறையியல் போராளி ரொமேரோ, போப்பின் ஆசியுடனே படுகொலை செய்யப்பட்டார் என்று தெரிகிறது.

 

கொல்லப்பட்ட ரொமேரோவை ஒரு புனிதத் துறவி என்று எல்சால்வடோர் நாட்டு மக்கள் போற்றும் அதேசமயம், அடுத்த 50 ஆண்டுகளுக்கு அவரைப் புனிதராக அறிவிக்கும் பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு போப் ஜான்பால் தடை விதித்தார். சால்வடோர் மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு அத்தடையை 25 ஆண்டுகளாகக் குறைத்தார்.

 

முற்போக்குப் பாதிரியரான ரொமேராவை படுகொலை செய்வதற்கு ஆசி வழங்கிய போப் ஜான் பால், ஸ்பெயின் நாட்டு பாசிச பாதிரியான ஜோஸ்மரியா எஸ்கிரிவாவை அனைவரும் பின்பற்றவேண்டிய முன்மாதிரியாகப் போற்றினார். இவர் கத்தோலிக்க மதவெறி பாசிச இரகசிய அமைப்பான ஓபஸ் டை (கடவுளின் பணிகள்)யை நிறுவியர். முற்போக்காளர்களுக்கு எதிரான ஆயுதமாக இந்த ஓபஸ் டை மற்றும் பிற இரகசியக் குழுக்களை போப் பயன்படுத்தினார்.

 

வாடிகனின் பழைமைவாதத்துக்கு உடன்பட்டுச் செயல்பட மறுத்த பிரேசில்அமெரிக்க நாடுகளின் பிஷப்புகளுக்குப் பதிலாக இந்த பாசிச ஓபஸ் டை அமைப்பின் உறுப்பினர்களை போப் நியமித்தார். தனது சொந்த நாடான போலந்தில் ""கம்யூனிச'' ஆட்சியை வீழ்த்துவதற்காக அங்கு பிஷப்பாகவும் கார்டினலாகவும் இருந்தபோது கூட அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கரோல் வூஜ்தியா, போப்பரசரான பிறகு விடுதலை இறையியல் நோக்கில் பாதிரியார்கள் அரசியலில் ஈடுபடுவதைக் கடுமையாக எதிர்த்தார். நிகாரகுவோவில் சாண்டினிஸ்டா புரட்சியாளர்களோடு சேர்ந்து அமைச்சராகப் பதவியேற்றுப் பணியாற்றிய பாதிரியார் எனஸ்டோ கார்டினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

 

கத்தோலிக்கப் பாதிரியார்களின் பாலியல் குற்றங்களை விசாரிக்க மறுத்து, போப் ஜான்பால் மூடிமறைத்தார். குறிப்பாக, சிறுவர்களிடம் ஓரினச் சேர்க்கை பாலியல் வன்முறை குற்றம் புரிந்த பாதிரியார்களைப் பாதுகாத்தார். அதேசமயம் பாதிரியார்கள் மணம் புரிந்து கொண்டு இயல்பான பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கான உரிமைகளை மறுத்தார். பெண்கள் கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்துவதையும் கருக்கலைப்பு உரிமையையும் கடுமையாக எதிர்த்தார்.

 

கத்தோலிக்கப் பாதிரியார்கள் முற்பாக்கு அரசியலில் ஈடுபடுவதைக் கடுமையாக எதிர்த்த போப் ஜான்பால், கிறித்துவ ஜனநாயக் கட்சிகள் மூலம் ஐரோப்பாவின் பல நாடுகளில் அரசியல் தலையீடு செய்தார். அக்கட்சிகளுக்கு ஏகாதிபத்தியங்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவிகளை பெற்றுத் தந்தார். இரகசிய பாசிசக் குழுக்கள் மூலமாகவும் பல நாடுகளில் அரசியல் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்வதற்கு ஆசி வழங்கினார். லெபனானின் பிளங்கிஸ் கட்சி அத்தகையவைகளில் ஒன்றாகும். கத்தோலிக்கக் கிறித்தவக் கட்சியான இதன் கொரில்லாக் குழுக்களுக்கு ஐரோப்பாவில் பயிற்சியளிப்பதற்கு வாடிகன் உதவி புரிந்தது.

 

இராணுவத்துடனான உறவுகளைக் கவனித்துக் கொள்ளும் பிஷப்புகளை விகார்கள் என்பார்கள். லெபனானில் கிறித்துவப் பிளங்கிஸ்டு கட்சியின் இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக அமெரிக்க இராணுவத்துக்கான விகாரை போப் அனுப்பி வைத்தார்.

 

அர்ஜென்டினா நாட்டின் 1976 ஆட்சிக் கவிழ்ப்பின்போது இராணுவ சர்வாதிகாரிகளுடன் இராணுவ விகார்களும் கலந்தாலோசனைகளில் பங்கு பெற்றனர். இராணுவ ஆட்சியை எதிர்த்த கத்தோலிக்கப் பாதிரிகள் உட்பட பல போராளிகளை இரகசிய சித்திரவதைகள், படுகொலைகள் புரிந்து கொன்றது இராணுவ ஆட்சி. இந்தப் பாசிசக் கொடுங்கோலாட்சியைப் பகிரங்கமாகவே ஆர்ச் பிஷப் அல்டாப்போ டோர்டோலே ஆதரித்தார். இராணுவப் படுகொலைகளை நியாயப்படுத்தினார்கள் பாதிரிமார்கள். பிஷப் ஜோஸ் மெதினாவை விகாராக நியமித்தார் போப் ஜான்பால். 1980இல் அர்ஜென்டினா பயணம் சென்ற போப் மனித உரிமை அமைப்பினரை சந்திக்க மறுத்ததோடு, ""நம்பிக்கை வையுங்கள், அமைதி பொறுமையோடு காத்திருங்கள்'' என்று தன்னைக் காண வந்த தாய்மார்கள் குழுவிடம் உபதேசித்தார்.

 

போப் இரண்டாம் ஜான்பாலின் தூதராகப் பணியாற்றிய ஆர்ச் பிஷப் பியோ லாகி, அர்ஜென்டினா இராணுவ சர்வாதிகாரிகளை இராணுவ முகாமுக்குச் சென்று சந்தித்து ஆசி வழங்கினார். அர்ஜென்டினாவில் நடந்த சித்திரவதைகள், படுகொலைகள், ஆள் கடத்தல்களில் இந்த கார்டினல் லாகி உடந்தையாக இருந்தார். அர்ஜென்டினா, நிகாரகுவா, பாலஸ்தீனத்தில் போப்பின் தூதராகப் பணியாற்றிய பிறகு, அவர் அமெரிக்காவின் ரீகன் நிர்வாகத்துக்கு தூதராக அனுப்பப்பட்டார். அங்கு சி.ஐ.ஏ. இயக்குனரான வில்லியம் கேசே உட்பட பல பழைமைவாத கத்தோலிக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றினார்.

 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பழைய நாஜி அதிகாரிகள் பலரும் தென் அமெரிக்காவில் தஞ்சம் அடைவதற்கு அங்குள்ள கத்தோலிக்கத் தொடர்புகளை சி.ஐ.ஏ. பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க நிர்வாகத்தில் கத்தோலிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கு நிர்பந்தித்தது. அமெரிக்காவின் அந்நிய உதவிகள் அனைத்தும் கத்தோலிக்க அமைப்புகள் மூலமாக ஒழுங்குபடுத்தும்படி பார்த்துக் கொண்டது. ஒரு நூற்றாண்டு எதிர்ப்பையும் மீறி ரீகன் நிர்வாகம் வாடிகனுடன் முழு அளவிலான தூதரக உறவை நிறுவியது.

 

இராணுவ பாசிச சர்வாதிகாரிகளின் மனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாக இருந்து ஆசி வழங்கிய போப் இரண்டாம் ஜான்பால், ""கம்யூனிச ஆட்சி'' என்று தான் கருதிய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் குறித்து பெருங்கூச்சல் போட்டார். போலந்தில் பிஷப்பாக இருந்தபோதே பல இரகசியக் கூட்டங்கள் நடத்தி ஆட்சிக் கவிழ்ப்புக்கான பிரச்சாரங்கள் நடத்தினார்.

 

போலந்தில் ஆட்சிக் கவிழ்ப்புப் போராட்டங்களுக்குத் தலைமையேற்ற ""சாலிடாரிட்டி தொழிற்சங்கத்'' தலைவர் லே வலேசாவுடன் கத்தோலிக்க திருச்சபை கூட்டணி அமைத்துக் கொண்டது. சாலிடாரிடி இயக்கத்திற்கு 50 மில்லியன் டாலர் வாடிகன் வங்கி மூலமாகவே நன்கொடை கொடுத்து தூண்டிவிட்டது.

 

கம்யூனிச எதிர்ப்பில் அதிதீவிரவாதம் காட்டியவரும் ஒவ்வொரு தொழுகைக் கூட்டங்களிலும் ஆட்சிக் கவிழ்ப்புக்காக பிரச்சாரம் செய்தவருமான பாதிரி ஜெர்சி பொப்பியூஸ்கோ 1984இல் போலந்து இராணுவத்தால் கொலை செய்யப்பட்டார். இது ""கம்யூனிச எதிர்ப்பாள'' ருக்கு வசதியாகப் போய் விட்டது.

 

""உண்மையைப் போதனை செய்யுங்கள், பகுத்தறிவு மற்றும் மனித உண்மைகளை அல்ல. கடவுள் அளித்த உண்மைகளை போதியுங்கள்'' என்று கூறி அரசியல் தலையீடுகளை எதிர்த்த போப், போலந்தில் மதவாத அரசியலுக்காக மடிந்த பாதிரி ஜெர்சியின் கல்லறையின் முன்பு முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தார். கம்யூனிச எதிர்ப்பையே வாழ்வின் இலட்சியமாகக் கொண்டிருந்த போல் இரண்டாம் ஜான்பால் இறுதியில் போலி கம்யூனிசத்தை வீழ்த்துவதில் வெற்றியும் கண்டார்.

 

போப் இரண்டாம் ஜான்பாலைப் போலவே கம்யூனிச எதிர்ப்பு, மதவெறி பழங்கோட்பாட்டுவாதம், எதிர்ப்புரட்சி ஆகியவற்றில் ஊறியவரும், இட்லரின் நாஜி இளைஞர் அணியில் பணியாற்றியவரும் வாடிகன் நிர்வாகத்தை நடத்தும் நால்வர் கும்பலில் ஒருவருமான ஜெர்மன் கார்டினால் ராத்சிங்கர் புதிய போப்பாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இது கத்தோலிக்கத் திருச்சபை மேலும் மேலும் பழைமைவாதச் சேற்றில் மூழ்கிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது.

 

·ஆர்.கே.