06_2005.jpg இசுலாமிய மகளிர் அமைப்புகள், முசுலீம் தனிநபர் சட்டத்தில் சீர்திருத்தங்களைக் கோரும் சில அறிவுஜீவிகள் ஆகியோர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததற்கு இணங்க, அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்ட வாரியம், ""நிக்காஹ்நாமா'' என்றழைக்கப்படும் திருமண ஒப்பந்தமொன்றைப் புதிதாகத் தயாரித்து, கடந்த மே 1 அன்று வெளியிட்டு இருக்கிறது. திருமணத்தை நடத்தி வைக்கவும்; மணவிலக்கு உள்ளிட்டு கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும் இப்புதிய திருமண ஒப்பந்தத்தையே மாதிரியாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி, அவ்வாரியம் முசுலீம் மதத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரையும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

 

""தலாக், தலாக் எனத் தொடர்ச்சியாக மூன்று முறை சொல்லி முசுலீம் பெண்களை விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை நிராகரிக்க வேண்டும்; முசுலீம் மதத்தில் நடக்கும் குழந்தைத் திருமணத்தைத் தடை செய்ய வேண்டும்; பலதார மணத்தைத் தடை செய்ய வேண்டும்; முசுலீம் பெண்களுக்கு விவகாரத்துக் கோரும் உரிமை அளிக்கப்பட வேண்டும்'' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, முசுலீம் மகளிர் அமைப்புகள் முசுலீம் தனிநபர் சட்ட வாரியத்திடம் கோரியிருந்தன. குரானில் பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளதோ, அந்த உரிமைகள் தங்களுக்கு மீண்டும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் முசுலீம் மகளிர் அமைப்புகளின் எதிர்பார்ப்பாக இருந்தது.

 

ஆனால், முசுலீம் தனிநபர் சட்டவாரியம் தயாரித்துத் தந்துள்ள ""மாதிரி திருமண ஒப்பந்தமோ'' புதிய மொந்தை பழைய கள்ளு என்பது தவிர வேறில்லை. ""கணவனின் அனுமதியின்றி மனைவி, தனது பெற்றோர்களைக் கூடப் பார்க்கச் செல்லக் கூடாது'' என்ற விதியின் மூலம் மனைவியை கணவனின் கொத்தடிமையாக்குகிறது, இப்புதிய திருமண ஒப்பந்தம்.

 

முசுலீம் தனிநபர் சட்டத்தில் திருமணத்திற்கு ஏற்ற பருவ வயது 15 முதல் 18க்குள் இருக்கலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ""இதில் இந்த ஊசலாட்டம் தேவையில்லை; திருமண பருவ வயதை 15 எனக் கறாராக வரையறுத்து விடலாம்'' என முசுலீம் தனிநபர் சட்ட வாரியத்தில் மத குருமார்கள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். அதேசமயம், 15 வயதிற்குக் கீழான சிறுமிகள், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொடுக்கப்படுவதையும் இவ்வாரியம் தடை செய்யவில்லை.

 

முத்தலாக் விவகாரத்தைப் பொருத்தவரை, முசுலீம் தனிநபர் சட்ட வாரியம் பெண்களுக்கு மாபெரும் "சலுகை'யொன்றை அளித்திருக்கிறது. இதன்படி, ""மனைவியை மணவிலக்கு செய்ய எண்ணும் கணவன், ""தலாக்'' என மூன்று முறை அடுத்தடுத்துத் தொடர்ச்சியாகச் சொல்லி விவாகரத்து செய்வது செல்லத்தக்கது ஆகாது. இதற்கு மாறாக, புனிதமான குரான்படி ஒவ்வொரு ""தலாக்''கிற்கும் ஒரு மாத இடைவெளிவிட்டு, மூன்று முறை (தலாக்) சொல்லி, மனைவியை விவகாரத்து செய்துவிடலாம்'' என ஆலோசனை வழங்கியிருக்கிறது. இந்த ஆலோசனையையும் கூட, முசுலீம் மதத்தைச் சேர்ந்த ஆண்கள் கண்டிப்பாகக் கடைப்பிடித்தாக வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது.

 

முசுலீம் தனிநபர் சட்டத்தின்படி ""கணவனை நான்கு ஆண்டுகளாகக் காணவில்லை; தன்னைப் பராமரிப்பதில்லை; ஆண்மையின்மை; மனநிலை பிறழ்வு; கொடுமைப்படுத்துதல்'' ஆகிய காரணங்களின் அடிப்படையில் முசுலீம் பெண், கணவனிடமிருந்து மணவிலக்குப் பெற முடியும். முசுலீம் மகளிர் அமைப்புகள் இவற்றுக்கும் மேலாக, முசுலீம் பெண்கள் தங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் மணவிலக்குப் பெறும் ""குல்ஆ'' என்ற உரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தன.

 

""உள்ளூர் காசி (மதத் தலைவர்) அனுமதியின்றி முசுலீம் பெண்கள் மணவிலக்குப் பெற முடியாது'' என நிபந்தனை விதித்து மகளிர் அமைப்புகளின் கோரிக்கையை உதறித் தள்ளிவிட்ட சட்ட வாரியம், ""பெண்கள் வேலைக்குப் போய் சம்பாதித்து, குடும்ப பாரத்தைச் சுமக்கிறார்களா என்ன, ஆண்களைப் போல உரிமைகளைக் கொடுப்பதற்கு?'' எனத் திமிரோடு கேட்டிருக்கிறது.

 

""இரண்டு குடும்பங்களைப் பராமரிக்கும் தகுதி ஒருவருக்கு இருக்கிறது'' என உள்ளூர் மதத் தலைவர் முடிவுக்கு வரும் பட்சத்தில், ஒரு முசுலீம் ஆண், முதல் மனைவி இருக்கும் பொழுதே இரண்டாம் திருமணம் செய்து கொள்ளத் தடையில்லை'' எனப் புதிய திருமண ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ""எனக்கு தெம்பு இருக்கு; நான் இன்னொருத்தியைக் கட்டிக்கிட்டேன்'' என ஆண்கள் திமிரோடு கொச்சையாகப் பேசுவதை, நாகரீகமாக மாற்றி விதியாக்கி விட்டது முசுலீம் தனிநபர் சட்டவாரியம்.

 

இந்திய அரசு, முசுலீம் தனிநபர் சட்டத்தில் எந்தவிதமான சீர்திருத்தத்தையும் கொண்டு வந்து விடாமல் கண்காணிப்பதற்காக முசுலீம் மதப் பழமைவாதிகளாலும், மதகுருமார்களாலும் 1970களில் உருவாக்கப்பட்ட அமைப்புதான் அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்ட வாரியம். இவ்வமைப்பைச் சேர்ந்த 400 உறுப்பினர்களுள் ஒருவர்கூட முசுலீம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது கிடையாது. ஷாரியத் சட்டத்தைக் காப்பதுதான் இதன் தலையாய குறிக்கோள். நேரிடையாக அரசிடம் கோரிக்கை வைக்காமல், இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான அமைப்பிடம் முசுலீம் மதச் சட்டத்தை திருத்தக் கோரிக்கை வைப்பதை, மூட நம்பிக்கை என்றுதான் சொல்ல முடியும்.

 

பெரும்பாலான முசுலீம் பெண்கள் அமைப்புகளே இப்புதிய திருமண ஒப்பந்தத்தைக் காறி உமிழ்ந்த பிறகும், "மார்க்சிஸ்டு' கட்சியை சேர்ந்த ஜனநாயக மாதர் சங்கம், ""எவ்வளவுதான் குறைபாடுகள் இருந்தாலும் கூட, இப்புதிய திருமண ஒப்பந்தம் ஒரு அடி முன்னே எடுத்து வைப்பதாகும்'' எனப் பாராட்டி இருக்கிறது. மதவெறி பிடித்த பா.ஜ.க.வை விட காங்கிரசு முற்போக்கானது; ""சாதா'' தாராளமயத்தைவிட, மனித முகம் கொண்ட தாராளமயம் நல்லது; இந்துத்துவாவை விட இந்துயிசம் உயர்வானது என்ற அக்கட்சியின் சந்தர்ப்பவாத அரசியல் அளவுகோல்தான், முசுலீம் தனிநபர் சட்ட வாரியம் "முன்னோக்கி எடுத்து வைத்திருக்கும் அடியையும்' அளக்கப் பயன்பட்டிருக்கும் போலும்.

 

ஷரியத்தில் (முசுலீம் தனிநபர் சட்டத்தின்படி) நிவாரணம் கிடைக்காது என்பதை உணர்ந்து, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நிவாரணம் கோரி ஆயிரக்கணக்கான விவாகரத்து செய்யப்பட்ட முசுலீம் பெண்கள் நீதிமன்றத்தை அணுகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு மனுவும் ஷரியத்தின் ஆணாதிக்கத்திற்கும் அநீதிக்கும் எதிரான பிரகடனங்கள்தான்.

 

இப்படிப்பட்ட நிலையில், குடும்பம், திருமணம், மணவிலக்கு, சொத்துரிமை, தத்தெடுத்தல் உள்ளிட்ட சிவில் வாழ்க்கையில் பிற்போக்கான மதச் சட்ட்ஙகள் அதிகாரம் செலுத்துவதைத் தூக்கியெறிந்து விட்டு, அதனிடத்தில் மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கோருவதுதான் காலப் பொருத்தமாக இருக்க முடியும்.

 

ஆனால், "மார்க்சிஸ்டு'களோ ""ஒவ்வொரு மதத்தின் தனிநபர் சட்டமும், ஜனநாயகம், சமூக நீதி, ஆண்பெண் சமத்துவம் போன்ற நவீனக் கொள்கைகளுக்கு எதிராகப் பெண்களின் உரிமையில் எந்த அளவுக்குக் குறுக்கிடுகிறதோ, அந்த அளவுக்கு அந்தந்த மதத் தனிநபர் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்'' எனக் கோரி, மத அதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை வெட்டிக் குறுக்கி விடுகிறார்கள். ""மதத் தனிநபர் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களையே'' மதச் சார்பின்மையை நோக்கிய வளர்ச்சியாகப் பிதற்றுகிறது, சி.பி.எம்.

 

19ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டிலும் நடைபெற்றுள்ள சமூகப் புரட்சிகளும், மாற்றங்களும் பெண்களுக்குப் பல ஜனநாயக சிவில் உரிமைகளை வழங்கியிருக்கின்றன. இவற்றை ஆதாரமாகக் கொண்டு போராடுவதற்குப் பதிலாக, முசுலீம் பெண்கள் அமைப்புகளும், சீர்திருத்தவாதிகளும், ""ஒருதார மணமுறைக்கு ஆதரவாகவும், முத்தலாக்கிற்கு எதிராகவும் பல ஆதாரங்களை குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் வழங்கிய தீர்ப்புகளில் இருந்து எடுத்துக் காட்டி, அதற்கு ஏற்ப முசுலீம் தனிநபர் சட்டத்தைச் சீர்திருத்த வேண்டும்'' எனக் கோருகிறார்கள்.

 

அதேநூல்களில் இருந்து வேறு ஆதாரங்களைக் காட்டியோ, அல்லது ஒரு சொல்லுக்கு வேறு விதமாகப் பொருள் கூறியோ இவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள் இசுலாமியப் பழமைவாதிகள். தொடர்ந்து இவர்களுக்கு இடையே நடக்கின்ற அடுத்தடுத்த சுற்று விவாதங்கள், மதநூல்களின் பொருள் ஆய்வாக வீழ்ச்சி அடைகின்றனவேயன்றி, பிரச்சினை குறித்த அறிவுபூர்வமான விவாதமாக வளர்ச்சி அடைவதில்லை.

 

நவீன யுகத்தின் தேவைகளுக்கு 1000 ஆண்டுக்கு முற்பட்ட குர்ஆனில் இருந்து மேற்கோள் காட்டுவது, முசுலீம் மதத்திற்கு முற்போக்கு முலாம் பூசுவதற்குப் பயன்படுமேயொழிய, முசுலீம் பெண்களின் சிவில் உரிமை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பயன்படவில்லை. இன்று சர்வாதிகார நிறுவனங்களாக மாறிவிட்ட மதத்தை, அதன் தோற்ற காலத்தில் சொல்லப்பட்ட நல்ல விசயத்தைக் காட்டி திருத்த முயலுவது நடைமுறையில் கேலிக் கூத்தாகவே முடியும்.

 

பாகிஸ்தான் உள்ளிட்டு, இசுலாமிய நாடுகளாகத் தங்களை அறிவித்துக் கொண்டுள்ள பல்வேறு நாடுகளில், தலாக் சட்டம் ஷரியத்தின் படி பின்பற்றப்படுவதில்லை. அந்நாடுகளில் ஷரியத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது, ""இசுலாமிய நாடுகளிலேயே ஷரியத் சட்டம் திருத்தப்படும்

 

பொழுது, "மதச்சார்பற்ற' இந்தியாவில் காலாவதியாகிப் போன அச்சட்டத்தை இன்றும் ஏன் தூக்கிப் போடாமல் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்?'' என்ற கேள்வியை எழுப்புவதற்கான அடிப்படையைக் கொடுத்த பின்னும், முசுலீம் பெண்கள் அமைப்புகள் இந்தக் கேள்வியை எழுப்ப மறுக்கின்றன. மாறாக, அந்நாடுகளைப் போல இந்தியாவிலும் சீர்திருத்தம் வேண்டும் என்றுதான் கோருகின்றன.

 

சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முற்போக்கான சக்திகளின் போராட்டங்கள் ஆகியவற்றின் தாக்குதலால் நிலைகுலைந்து வரும் மதம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் சீர்திருத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கிறது.

 

இசுலாமியக் குடியரசான பாகிஸ்தானில் முத்தலாக் மணவிலக்கு முறை தடை செய்யப்பட்டிருக்கிறதென்றால், அது முசுலீம் பெண்களின் உரிமை பற்றிய அக்கறையைக் காட்டவில்லை. மாறாக, மதச்சார்பற்ற அரசாக மாறிவிடாமல் தடுப்பதற்கு அவர்கள் கொண்டிருக்கும் எச்சரிக்கை உணர்வைத்தான் காட்டுகிறது.

 

இசுலாமிய மக்கள் மீதான தாக்குதலும், மதக் கலவரங்களும் மிகுந்துள்ள சூழலில் தனது சமூகம் என்ற அடிப்படையில் இசுலாமியச் சமூகத்துடன் அப்பெண்கள் தம்மை நெருக்கமாக இணைத்துக் கொள்வதும், மதப் பழமைவாதிகளுடன் சமரசம் செய்து கொள்வதும் வியப்புக்குரிய விசயங்கள் அல்ல் ஆனால், இதைக் காட்டியே, ""மதச் சார்பற்ற சிவில் சட்டத்தை இசுலாமிய பெண்களே ஆதரிக்க மாட்டார்கள்'' எனச் சீர்திருத்தவாதிகள் பயமுறுத்துகிறார்கள்.

 

இவர்களின் இந்த வாதத்தைக் கொஞ்சம் பச்சையாகச் சொன்னால், ""சிறுபான்மை மதத்தினர் இந்து மதவெறி பாசிசத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால், சிறுபான்மை மதத்தில் நிலவும் ஆணாதிக்கத்தை எதிர்க்கக் கூடாது'' என்பதுதான்.

 

சிவில் வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்தைப் பிடுங்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறியபோது, மதப் பகைமைகளை மறந்து இந்து சனாதனிகளும், இசுலாமியப் பழமைவாதிகளும் அம்பேத்கருக்கு எதிராக ஒன்று திரண்டதை இங்கு நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

 

மதப் பழமைவாதிகளோடு அனுசரணையாக நடந்து கொள்ளாமல், மதச் சார்பற்ற சனநாயக சக்திகளோடு இணைந்து போராடும் பொழுது மட்டுமே, முசுலீம் பெண்கள், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மத அதிகாரத்தையும், ஆணாதிக்கத்தையும் வீழ்த்த முடியும் என்பதுதான் இந்த வரலாற்று உண்மையில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

 

மேலும், அரசு விவகாரங்களில் இருந்தும், அரசியலில் இருந்தும் மதத்தை அறுத்து எறிகின்ற மதச் சார்பின்மைக்காகவும், அதன் அடிப்படையிலான சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான போராட்டமும்தான் முசுலீம்களுக்கு, குறிப்பாக முசுலீம் பெண்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்ற இந்து மதவெறி பாசிசத்தையும் வீழ்த்தும்!

 

· செல்வம்