Language Selection

புதிய ஜனநாயகம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

06_2005.jpgநிலத்தடி நீர் வளமிக்க கேரளத்தின் பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுகா, பிளாச்சிமடா கிராமத்தின் நீர் வளத்தை இரண்டே ஆண்டுகளில் சூறையாடி யதோடு, விளைநிலங்களையும் தனது கழிவு நீரால் நாசமாக்கியிருக்கிறது கொக்கோ கோலா ஆலை. குறிப்பிட்ட வரம்புக்கு மேல் நீரை உறிஞ்சக் கூடாதென்று கேரள உயர்நீதி மன்றத்தின் நீதிபதி பாலகிருஷ்ணன் நாயர் டிசம்பர் 13, 2003 அன்று விதித்திருந்த தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்த கொக்கோ கோலா நிறுவனம், கடந்த ஏப்ரல் 7ம் தேதியன்று தனக்குச் சாதகமான தீர்ப்பை வாங்கி விட்டது.

 

நீதிபதிகள் இராமச்சந்திரன், பாலச்சந்திரன் ஆகியோரடங்கிய கேரள உயர்நீதி மன்ற பெஞ்சு வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு, இந்தியாவின் ஜனநாயகம், உள்ளூர் நீர் ஆதாரங்களின் மீது பஞ்சாயத்துகளுக்கும் அதன் வழி மக்களுக்கும் உள்ள உரிமை ஆகியவை பற்றி இதுகாறும் பரப்பப்பட்டு வந்த பிரமைகள் அனைத்தையும் தகர்த்திருப்பதுடன், உலக வர்த்தகக் கழகத்தின் கிளையாகவே ஒரு உயர்நீதி மன்றம் இயங்க முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறது.

 

""நிலத்தடி நீரை உறிஞ்சுவது சட்ட விரோதம் என்ற (முந்தைய) தீர்ப்பை அங்கீகரிக்க எந்தவிதமான நியாயமும் இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை. தண்ணீர் எடுப்பதென்பது புதையல் எடுப்பதா என்ன? இந்த (தண்ணீர்) "செல்வத்தை' எடுக்க கொக்கோ கோலாவிற்கு சட்டப்படி உரிமையில்லை என்ற தீர்ப்பை நாங்கள் ஆதரிக்க முடியாது. சட்டபூர்வமான பொருளில் நிலவும் கொக்கோ கோலா என்ற நபருக்கு இந்த கைய கட்டுப்பாட்டு விதிக்கப்படுமானால், மற்றெல்லா குடிமக்களுக்கும் இதே போன்று கட்டுப்பாடு விதிக்க வேண்டியிருக்கும்.''

 

""தனியொரு சட்டத்தால் தடை விதிக்கப்படாத வரை, தன்னுடைய சொந்த நிலத்திலிருந்து தண்ணீர் எடுக்க எந்தவொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.''

 

""பெரும் மூலதனமிட்டு தண்ணீரை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த ஆலை, மற்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் "தன்னுடைய தாகத்தைத் தணித்துக் கொள்ள' உரிமை உண்டு.''

 

மேற்படி தீர்ப்பை வழங்கியிருக்கும் நீதிபதிகள் செவ்வாய் கிரகத்திலிருந்து பூமியில் வந்து இறங்கியவர்களோ, பத்து வருடம் "கோமா'வில் கிடந்து திடீரென்று விழித்து எழுந்தவர்களோ அல்ல. நீர்வளமிக்க பிளாச்சிமடா கிராமத்தின் மக்கள் தங்களது தாகத்தைத் தீர்த்துக் கொள்வதற்கே லாரித் தண்ணீரை எதிர்பார்த்துக் காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதன் விளைவாகத்தான் அந்தப் போராட்டத்தில் இறங்கினர். பிறந்து வளர்ந்த ஊரில் தங்கள் சொந்த நிலம் தரிசாவதையும், அந்நியன் தண்ணீரைக் கொள்ளை கொண்டு போவதையும் மானமுள்ள எந்த மனிதனாலும் சகித்துக் கொள்ள முடியாது.

 

அந்த வகையில் பிளாச்சிமடா மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை நாடே அறியும். நீதிபதிகளும் அறிவார்கள். தெரிந்தே வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பின் "நியாயத்தை'ப் புரிந்து கொள்ள பிளாச்சிமடாவின் கதையை வாசகர்கள் நினைவுபடுத்திக் கொள்வது அவசியம்.

 

கேரள மாநிலத்தின் நெற்களஞ்சியம் பாலக்காடு மாவட்டம். அம்மாவட்டத்தைச் சேர்ந்த சித்தூர் தாலுகா ""நெற்களஞ்சியத்தின் நெற்களஞ்சியம்'' என்று பெயர் பெற்றது. கேரளத்தின் முக்கிய ஆறான பாரதப் புழா, அதன் கிளை ஆறுகளான காயத்ரிப் புழா, சித்தூர்ப் புழா, கல்பாதிப் புழா, தொடு புழா போன்ற ஆறுகளும் பாயும் இந்த மாவட்டத்தில் விளையாதது எதுவுமில்லை எனலாம்.

 

நெல், தென்னை, கடலை, பருத்தி, கரும்பு, வாழை, மிளகு, கேழ்வரகு, மா, ஆரஞ்சு, ஏலக்காய், ரப்பர் மற்றும் காய்கனிகள் அனைத்தும் விளையும் இந்த மண்ணில் மார்ச் 2000இல் காலடி வைத்தது கொக்கோ கோலா.

 

முப்போகம் விளைந்து கொண்டிருந்த 34 ஏக்கர் நிலத்தை, ஒரு பண்ணையாரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி, இந்தியாவிலேயே பெரிய ஆலையை பிளாச்சிமடாவில் அமைத்தது. இரண்டே ஆண்டுகளில் பிளாச்சிமடா சுடுகாடாகத் தொடங்கியது.

 

ஒரு நாளைக்கு 5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதாக கோக் நிறுவனம் கூறியபோதிலும் அதைச் சோதித்தறிய எந்த ஏற்பாடும் இல்லை. குறைந்தது 15 லட்சம் லிட்டர் நீர் உறிஞ்சப்படுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் உள்ளூர் மக்கள்.

 

ஆலைக்கு நிலத்தை விற்ற பண்ணையாரிடம் 1962 முதல் கூலி வேலை செய்து வரும் பழனி, ஒரே வரியில் நிலைமையை விளக்குகிறார். ""அன்று ஒரு ரூபாய் சம்பளம். சோற்றுக்கும் பஞ்சமில்லை. நல்ல தண்ணீருக்கும் அன்று பஞ்சமில்லை. இன்று பண்ணையார் கொடுத்த 5 சென்டு நிலமிருக்கிறது; ஆனால், கிணற்றில் தண்ணீர் இல்லை.''

 

ஆலைக்கு அருகில் 4 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஷாகுல் ஹமீது ""கடந்த 3 வருடமாக விவசாயமே செய்ய முடியவில்லை. 2001இல் கூட என்னுடைய பம்புசெட் தொடர்ந்து 16 மணி நேரம் ஓடும். இன்று ஒரு மணி நேரம் கூட ஓட்ட முடியவில்லை. நான் 20 பேருக்கு வேலை கொடுத்தேன். இன்று மாடுகளைக் கூட விற்றுவிட்டேன்; மகனுடைய சம்பளத்தில்தான் நானே வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிறேன்'' என்று பொருமுகிறார்.

 

மக்களுடைய எதிர்ப்பின் காரணமாக 2003ஆம் ஆண்டு கோக் நிறுவனத்தின் உரிமத்தைப் புதுப்பிக்க பிளாச்சிமடா பஞ்சாயத்து மறுத்துவிட்டது. ஆனால், பண பலமும் அதிகார பலமும் கொண்ட கோக், மாநில அரசின் மூலம் பஞ்சாயத்தின் உத்தரவை முடக்கியது. பஞ்சாயத்து முடிவுக்கெதிராக கேரள அரசு தனியாகவே ஒரு அரசாணை பிறப்பித்து, வழக்கம் போல தண்ணீர் எடுக்க கோக்கிற்கு அனுமதி வழங்கியது.

 

பாசன நீர் இல்லாமல் நிலங்கள் தரிசாய் கிடக்க, குடிநீருக்காக பிளாச்சிமடா மக்கள் 6 கிலோ மீட்டர் நடக்க, லாரி லாரியாக கோக்கின் குளிர்பானங்கள் ஆலையிலிருந்து ஆணவமாக வெளியேறிக் கொண்டிருந்தன.

 

மாநில அரசின் இந்தக் கைக்கூலித்தனத்தை எதிர்த்து ஏப்ரல் 2003இல் கேரள உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது பிளாச்சிமடா பஞ்சாயத்து. டிசம்பர் 13, 2003 அன்று அந்த மனுவின் மீது தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

""நிலத்தடி நீர் என்பது பொதுச் சொத்து; அரசு அதன் அறங்காவலர்; மக்கள் நலனுக்கு எதிராக அதனைத் தனியார் சூறையாடுவதற்கு அனுமதி வழங்கும் உரிமை அரசுக்குக் கிடையாது... 34 ஏக்கரில் விவசாயம் செய்தால் எவ்வளவு தண்ணீர் தேவைப்படுமோ அந்த அளவிற்கு மட்டுமே கோக் நிறுவனம் நிலத்தடி நீரை எடுக்கலாம். அதற்கு மேல் தேவைப்படும் நீரைத் தனது சொந்தப் பொறுப்பில் கோக் நிறுவனம் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் இந்த ஆலை இயங்குவதை பஞ்சாயத்துத் தடுக்கக் கூடாது'' என்று கூறியது அந்தத் தீர்ப்பு.

 

இந்தத் தீர்ப்புக்கு கோக் கட்டுப்படவில்லை. உடனே மேல்முறையீடு செய்து இடைக்காலத் தடை வாங்கியது. தற்போது ஏப்ரல் 7, 2005 அன்று தனக்குச் சாதகமான தீர்ப்பையும் வாங்கிவிட்டது.

 

தமது கிராமத்தின் நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர்வளத்தின் மீது, அந்த கிராமத்து மக்களுக்கோ, பஞ்சாயத்துக்கோ எந்த அதிகாரமும் கிடையாது என்பதை இத்தீர்ப்பு தெளிவுபட அறிவித்துவிட்டது.

 

அது மட்டுமல்ல, மாநிலமே வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாலும் கோக், பெப்சி போன்ற தண்ணீர்க் கொள்ளையர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதைத் தடுக்க முடியாதென்பதையும் இத்தீர்ப்பு உறுதி செய்கிறது.

இந்த வழக்கு விசாரணையின் பொருட்டு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட "நிபுணர்' குழு ""பிளாச்சிமடாவின் தண்ணீர்ப் பஞ்சத்துக்குப் பிரதான காரணம் கோக் அல்ல் பருவமழையின் அளவு குறைந்ததுதான்'' என்று கூறியது.

 

பிளாச்சிமடா மக்களுக்கு எதிராக இந்த வாதத்தைப் பயன்படுத்திக் கொண்ட நீதிமன்றம், ""ஒரு மாவட்டமே வறட்சியால் குடிநீருமில்லாமல் பரிதவிக்கும் போது, அங்கே குளிர்பான ஆலை நிலத்தடி நீரைச் சுரண்டலாமா?'' என்ற கேள்வியை மட்டும் எழுப்பவில்லை.

 

பாலக்காடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொடர்ந்து பருவமழை பொய்த்து, 3 ஆண்டுகளாக வறட்சி தாண்டவமாடுகிறது; மத்திய அரசுக்குழு அவற்றை "வறட்சி பாதித்த மாவட்டங்கள்' என்று அறிவித்தும் இருக்கிறது.

 

முன்னெப்போதும் கண்டிராத அளவு வறட்சி நிலவுவதால் பாரதப் புழா ஆற்றிலிருந்து நீர் வழங்கும் 30 குடிநீர்த் திட்டங்கள் மூடப்படும் என்று ஏப்ரல் 2004இல் மாநில நீர்வளத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீரில்லாமல் தவித்துக் கொண்டிருந்த அந்தச் சூழலிலும் கோக் உற்பத்தி நிறுத்தப்படவில்லை.

 

65 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்கள், விவசாயத்தைச் சார்ந்து வாழும் பாலக்காடு மாவட்டத்தின் விவசாயிகள், மூன்று பருவங்களாகத் தொடர்ந்து நீடித்த வறட்சியினால் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகியிருப்பார்கள் என்பதை விளக்கத் தேவையில்லை.

 

ஆனால் மேற்படி நீதிபதிகள், தங்களது தீர்ப்பில் விளக்கம் கேட்கிறார்கள். தொழிலைக் (கோக்) காட்டிலும் விவசாயத்திற்கு ஏன் முன்னுரிமை தரவேண்டுமென்பதை பிளாச்சிமடா பஞ்சாயத்து தெளிவுபடுத்தவில்லையாம்!

 

""சமூகத்தின் பொதுச் சொத்தாகிய தண்ணீரை ஒரு தனியார் நிறுவனம் தன்னிஷ்டம் போல சூறையாட முடியாது'' என்று குறிப்பிடும் முந்தைய தீர்ப்பை ஏளனம் செய்கிறார்கள் இந்த நீதிபதிகள்.

 

""சூக்குமமான கொள்கைகளின் அடிப்படையில், ஒரு நீதிமன்றம் அடிப்படை உரிமைகளை நிராகரிக்க முடியாது'' என்று கூறுகிறார்கள்.

 

தண்ணீர் பொதுச் சொத்து என்பது சூக்குமமான கொள்கையாம்! ஊரின் நீர்வளம் அனைத்தையும் ஆழ்துளைக் கிணறு போட்டு உறிஞ்சிக் கொள்ளும் உரிமை அடிப்படை உரிமையாம்!

 

அதாவது, பொதுச் சொத்து என்பது சூக்குமமானது; தனிச்சொத்தே பருண்மையானது. தாகத்தால் தவிக்கும் மக்களின் உயிர் வாழும் உரிமையைக் காட்டிலும், இலாபத்துக்காகத் தண்ணீர் உறிஞ்சும் கொக்கோ கோலாவின் சொத்துரிமை நீதிமன்றத்தின் பார்வையில் புனிதமானது.

 

புனிதமான அந்த அடிப்படை உரிமையில் லேசாகக் கை வைப்பதாக இருந்தாலும் அரசாங்கம் அதற்காகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டுமாம். இல்லையேல் நீதிமன்றம் தானாகத் தலையிடவே முடியாதாம்!

 

குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதில்தான் நீதிமன்றத்துக்கு எவ்வளவு அக்கறை! சொத்துரிமை விசயத்தில் மிகவும் "ஜனநாயகமாக' நடந்து கொள்ளும் நீதிமன்றம், மற்ற அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, வேலை நிறுத்த உரிமை போன்ற சொற்களைக் கேட்டாலே குமுறி எழுகிறது.

 

பொது நலனை முன்னிட்டு வேலை நிறுத்தத் தடை, ஊர்வலத்துக்குத் தடை, பொதுக் கூட்டங்களுக்குத் தடை விதிக்காத நீதிமன்றங்கள் உண்டா?

 

பொதுநலனை முன்னிட்டு கொக்கோ கோலாவின் தண்ணீர்க் கொள்ளைக்குத் தடை கோரினால், அது மட்டும் முடியாதாம்! ""நாம் அவர்களை அன்புடன் வரவேற்று கணிசமாக முதலீடும் போடச் சொல்லியிருக்கிறோம். அவர்கள் இயங்குவதற்கான சுதந்திரத்தை நாம் உத்திரவாதம் செய்ய வேண்டும்'' என்று தங்களது தீர்ப்பில் பச்சையாகவே சொல்கிறார்கள் நீதிபதிகள்.

 

நாட்டின் நீர்வளம் அனைத்தையும் அபகரிப்பதற்காகவே காட்ஸ் (எஅகூகு) எனும் ஒப்பந்தத்தைத் தயாரித்திருக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். அத்தகைய ஒப்பந்தங்கள் எதுவும் இல்லாமலேயே "வேலையை'ச் சுளுவாக முடித்துத்தர நமது நீதித்துறை தயாராக இருக்கிறது.

 

"கோக்' சமீபத்திய தீர்ப்பு. இதற்கு முன் பால்கோ விற்பனை, ரிலையன்சுக்கு எண்ணெய்க் கிணறுகள் விற்பனை, தொலைபேசி தனியார்மயம், என்ரான் கொள்ளை, யூனியன் கார்பைடு நடத்திய படுகொலை, நகர்ப்புற நிலத்திருட்டு... ஆகிய அனைத்திலும் நீதித்துறை ஆற்றிய பாத்திரம் இதுதான்.

 

அதிகாரமிருந்தால் ஒரே தீர்ப்பில் இந்தியாவை "அடிமை நாடு' என்று அறிவிக்கவும் தயங்கமாட்டார்கள் நம் நீதிபதிகள். அப்போதும் அதனை அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் செய்வார்கள் என்பதை மட்டும் நாம் மறுக்கவியலாது.


· சூரியன்