07_2005.jpgதிருச்சி, சிறீரங்கம் வட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம், உத்தமர் சீலி. கடந்த 18.5.05 தேதியன்று இரவு 9 மணி அளவில் திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து, கல்லணைக்குப் போகும் தனியார் பேருந்தில் உத்தமர் சீலி கிராமத்தைச் சேர்ந்த முத்தரையர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலரும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இருவரும் வந்தனர். இந்த இளைஞர்கள் அவர்களுடைய "அரிசன தெரு பஸ் ஸ்டாப்'பில் இறங்கத் தயாரான போது, முத்தரையர் சாதியினர் வேண்டுமென்றே படியில் நின்று கொண்டு வழியை மறித்தனர். அப்போது தாழ்த்தப்பட்ட இளைஞர் கையிலிருந்த "பிளம்பர்' தொழில் செய்யும் கருவி முத்தரையர் மீது உரசியது. "பள்ளப்பயலுக்கு என்னடா இவ்வளவு திமிரு' என்று

 ராஜபிரபு என்ற தழ்த்தப்பட்ட இளைஞரை முத்தரையர் சாதிவெறியர்கள் குரூரமாகத் தாக்கினர். அது மட்டுமின்றி, ஊருக்குள் சென்று "பள்ளர்கள் தங்களைத் தாக்கிவிட்டதாக'ப் புரளி கிளப்பி, சாதிவெறியர்களைத் திரட்டிக் கொண்டு தாழ்த்தப்பட்டவர்களின் குடியிருப்பு தெருவில் நுழைந்து கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாகத் தாக்கினார்கள். ""பிரச்சினை வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்'' என்று கூறிய சுப்பிரமணி என்பவரைக் கட்டையில் அடித்து அரிவாளால் தாக்கினார்கள். தடுக்க வந்த தாழ்த்தப்பட்ட பெண்களையும் கீழ்த்தரமாக ஏசி, பிரபாகரன் என்பவரின் காதைக் கிழித்தனர்.

 

தாக்குதலுக்கு ஆளான தாழ்த்தப்பட்ட மக்களின் நிர்பந்தத்தால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசு, மேல்சாதி வெறியர்களின் கிரிமினல் குற்ற ஆதாரங்களை மறைக்கும் முயற்சியில் இறங்கியது. அடிபட்ட தாழ்த்தப்பட்ட மக்களை மருத்துவமனைக்கு அனுப்பி, இரத்தக் காயங்களைப் பதிவு செய்யாமல் அவர்களுக்கு மருத்துவம் பார்க்காமல், போலீசு நிலையம் செல்லுமாறு கூறிவிட்டு, மேல்சாதியினரிடம் தனியாக "சமாதானம்' பேசியது.

 

"சமாதானம்' என்ற பெயரில் போலீசின் கட்டப் பஞ்சாயத்துக்கு உடன்பட மறுத்த தாக்குதலுக்கு ஆளான தாழ்த்தப்பட்ட மக்கள், சாதிவெறியர்கள் மீது கிரிமினல் குற்றவழக்குகள் பதிவு செய்யுமாறு போராடினர். அதன் பிறகு போலீசு, ஒப்புக்கு 8 பேரை மட்டுமே கைது செய்தது. அவர்களின் மீது கடுமையற்ற குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது; முதலாளித்துவப் பத்திரிக்கைகளும் மேல்சாதி வெறியை மறைத்து ""கோஷ்டி மோதல்'' என்று திரித்து எழுதின.

 

இதனால் இன்னமும் கூடுதலாக கொழுப்பெடுத்து திரிகின்றனர், முத்தரையர் சாதிவெறியர்கள். ""எங்களை நம்பித்தான் அவனுங்க (தாழ்த்தப்பட்டவர்கள்) பொழைக்கிறானுங்க, எங்க சாதிக்காரங்க வாழைத் தோட்டத்தில் இலை அறுத்துதான் பொழைக்கிறாங்க. இதுக்கு வேட்டு வைச்சாதான் இவனுங்க அடங்குவானுங்க. திருச்சியில் நடக்கிற எங்க (சாதி) மாநாடு முடிஞ்ச கையோட, அடுத்ததா இந்த பிரச்சினையை என்ன செய்யறதுன்னு முடிவு செய்வோம்'' என்று பகிரங்கமாக அறிவிக்கின்றனர். தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அடுத்த கட்ட தாக்குதலுக்கு இப்போதே தோள் தட்டுகின்றனர்.

 

ஏற்கெனவே, "95 மற்றும் 99ஆம் ஆண்டுகளில் தாக்குதல் தொடுத்த முத்தரையர் சாதிவெறியர்களுக்கு எதிராகத், தாழ்த்தப்பட்ட மக்கள் திரண்டபோது, ""இப்படிப்பட்ட சம்பவங்கள் இனிமேல் நடக்காது'' என்று முத்தரையர் சாதியின் 8 பட்டயதார்கள் சேர்ந்து எழுதிக் கொடுத்தனர். இதன்மூலம் தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்து தங்கள் தோலை அப்போது பாதுகாத்துக் கொண்டனர். இப்போது இந்த சாதிய ஓநாய்கள் மீண்டும் தாழ்த்தப்பட்டோர் மீது பாய்கின்றன. காரணம், உயர்சாதி வெறிகொண்ட போலீசும் அதிகார வர்க்கமும் சாதிவெறியர்களுக்குக் கேடயமாக, முழுப் பாதுகாப்பு அளிக்கின்றன.

 

உத்தமர் சிலி கிராமத்தில் இருக்கும் சி.பி.எம் கட்சியின் நீலமேகம் என்பவர், ""இது சாதிவெறி தாக்குதல் அல்ல. வேலைக்குப் போற பசங்களுக்குள்ள ஏற்பட்ட பிரச்சினை'' என்று தொழிலாளி வர்க்கத்திற்குள் நடக்கும் வீண்தகராறு போல புளுகுகிறார். ""இந்த தாக்குதல் நடந்தபோது நீங்கள் ஏன் தலையிடவில்லை?'' என்ற கேள்விக்கு, ""நான் முத்தரையர் சாதிக்காரன். நான் தலையிட்டால் பிரச்சினை பெரிதாகும்'' என்றார். தான் ஒரு கம்யூனிஸ்டு என்று அடையாளத்தைவிட தன்னுடைய உயர்சாதி அடையாளத்தைத்தான் அவர் மக்களிடம் பதிய வைத்திருக்கிறார்.

 

அரசு எந்திரம், அதிகார வர்க்கம், போலீசு மற்றும் ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகள் இவர்களின் கள்ளக்கூட்டோடு திரியும் முத்தரையர் சாதிவெறியர்களைப் பகிரங்கமாக தண்டிப்பதன் மூலம்தான் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி கிடைக்கும். இதற்கு குறுக்கு வழி ஏதும் இல்லை. சமரசமற்ற போராட்டத் தலைமையும் ஜனநாயக சக்திகளின் ஆதரவும் தான் இதற்கு முன்தேவை.

 

பு.ஜ. செய்தியாளர், திருச்சி