08_2005.jpgஏகாதிபத்திய வல்லரசுகளால் நசுக்கப்பட்டு, மூலவளங்கள் சூறையாடப்பட்டு வரும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. கூடவே, ஏழை நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களும் வலுப்பெற்று வருவதற்கு பொலிவியா நல்ல உதாரணம். பொலிவிய மக்களின் அரசியல் விழிப்புணர்வும் போர்க்குணமும் என்றும் போற்றத்தக்கது. மனித உரிமை என்ற பெயரில் ஏகாதிபத்தியங்களுக்குக் கைக்கூலி வேலை செய்யும் மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மை முகத்தைத் திரைகிழித்துக் காட்டியது சிறப்பு.

நிர்மலா, திருச்சி.

என்னங்க இது வம்பா இருக்குது? ராஜஸ்தான்ல குடிதண்ணீர் கேட்ட விவசாயிகள பா.ஜ.க. அரசு சுட்டுக் கொல்லுதா? பாவங்க பா.ஜ.க.; ஓசோன் வாயு மண்டலத்தையே ஓட்டை போட்டு அமெரிக்காகாரன் வருண பகவான விரட்டிப்புட்டான். லோக ஷேமத்துக்காக வாட்டர் சப்ளை பண்ற அமெரிக்க பகவானுக்காக விவசாயிங்க வருண ஜெபம் பண்ணியிருந்தா பா.ஜ.க. அரசாங்கம் பாராட்டியிருக்கும். விவரம் புரியாம விவசாயிங்க போராடுனா பா.ஜ.க.காரன் சும்மாவா இருப்பான். குஜராத்தையே கொளுத்துனவங்க கிட்ட மோதலாமா?
இராசா இராவணன், பழனி.

 

பயங்கரவாதிகள் என்போர் ஆட்சியாளர்கள் சித்தரிப்பதுபோல, வெடிகுண்டுகளுடன் திரிபவர்கள் அல்ல் ஏற்றுமதிக் கொள்ளைக்காக சொந்த மண்ணையும் மக்களையும் நாசமாக்கும் தரகுப் பெருமுதலாளிகள்தான் என்பதை அட்டைப்படக் கட்டுரை எடுப்பாக உணர்த்தியது. பொலிவிய பஞ்சைப் பராரிகளின் பேரெழுச்சி, தண்ணீர் தனியார்மயத்துக்கு எதிராகப் போராடிவரும் நம்நாட்டு மக்களுக்கு நிச்சயம் உணர்வூட்டும்.
கணேசன், சாத்தூர்.

 

அடக்குமுறைக்குள்ளான உழைக்கும் மக்கள்தான் இனி உலகை ஆளப்போகிறார்கள் என்பதற்கான தொடக்கம்தான், பொலிவியா உள்ளிட்டு உலகெங்கும் நடந்துவரும் மக்கள் பேரெழுச்சிகள். திருமா மற்றும் மாயாவதியின் பார்ப்பன சேவையை அவர்களது வாக்குமூலங்களிலிருந்தே அம்பலப்படுத்திக் காட்டியிருப்பது அருமை.
வாசகர் வட்டம், சென்னை.

 

தண்ணீரைக் கொண்டு ஒரு நாட்டை எவ்வாறு அடிமைப்படுத்த முடியும் என்பதையும், இதற்கான தரகு ஆதிக்க நிறுவனங்களாக உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும், சர்வதேச நிதி நிறுவனங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை பு.ஜ. எடுப்பாக விளக்குகிறது.
ஜீவா, சென்னை.

 

கல்விக் கடவுள்(?) கலைமகளே இச்சூழலில் கல்வி கற்க வந்தால்கூட, வீணையை விற்றுத்தான் கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நுழைவுத் தேர்வு குறித்த தலையங்கக் கட்டுரை உணர்த்தியது.
ஓஷோதாசன், மாப்பிள்ளை குப்பம்

 

அட்டைப்படத்தில் கோரமாக உள்ள சிறுமியைப் பார்த்த பிறகு, இதற்குக் காரணமான முதலாளிகள் மீது வெஞ்சினம் பீறிட்டு எழுகிறது. ஒரத்துப் பாளையம் மட்டுமல்ல் சேலம் மாவட்டம் மேட்டூரில் மால்கோ, கெம்பிளாஸ்ட் முதலான நாசகர இரசாயன ஆலைக் கழிவுகளால் இப்பகுதியிலுள்ள பெண்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தைகள் ஆணா, பெண்ணா என்று பாலினம் கண்டறிய முடியாதபடி பிறக்கின்றன. மனித இனத்தின் கருவறைக்குள்ளேயே புகுந்து நாசப்படுத்தும் முதலாளித்துவத்தின் கோரமுகத்தை இன்னும் விரிவாக அம்பலப்படுத்த வேண்டும்.
புரட்சித்தூயன், தர்மபுரி.

 

நுழைவுத் தேர்வு பற்றிய தலையங்கக் கட்டுரையில், 1970களில் நுழைவுத் தேர்வு முறையைப் புகுத்த கருணாநிதி முயற்சி செய்த போது, தந்தை பெரியார் அதை எதிர்த்தார் என்ற வரலாற்றுக் குறிப்பு மிக அவசியமானது. திராவிட பிழைப்புவாதக் கட்சிகளின் துரோகத்தைப் புரிந்து கொள்வதற்கு இது மிக முக்கியமானது. எம்.ஜி.ஆர். காலத்தில் உருவான சுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளைக்கு வித்திட்ட இந்நுழைவுத் தேர்வுமுறை, ஜெயலலிதா ராமதாசு வைகோ ஆகியோரின் கட்சிகள் மைய அரசில் பங்கேற்றபோதுதான் சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவர்கள் நுழைவுத் தேர்வை எதிர்ப்பதாக நாடகமாடுவது, கடைந்தெடுத்த மோசடியேயாகும்.
செம்மலர் மா. நடராசன், அறந்தாங்கி.

 

ஏகாதிபத்தியக் கொள்ளையர்களுக்கு ஏழை நாடுகளின் உழைக்கும் மக்கள்தான் சாவுமணி அடிக்க முடியும் என்பதை பொலிவிய மக்களின் வீரம் நிரூபித்துக் காட்டுகிறது. அமெரிக்காவின் எச்சில் காசை வைத்து மனித உரிமை நாடகமாடும் மக்கள் கண்காணிப்பகம், அதனுடன் கூட்டு சேரும் சி.பி.எம். இவர்களை உழைக்கும் மக்கள் இனம் கண்டு விரட்டியடிக்க வேண்டும்.
சாருவாகன், திருச்சி.